WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

சிறுகதைகள்

அப்பாவும் வீடும்

ஏலையா க.முருகதாசன்

'டேய் ரஜன் அப்பாவைக் காணவில்லையடா, டேய் எழும்படா. துளசி அப்பாவைக் காணவில்லையடி  எழும்படி'

தனக்குப் பக்கத்தில் படுத்திருந்த கணவரைக் காணவில்லையென்ற பதைபதைப்புடன் வீடு முழுக்கத் தேடிய சகுந்தலா மகனின் அறைக்கதவையும் மகளின் அறைக்கதவையும் வேகமாகத் தட்டுகிறாள்.

மகனும் மகளும் அவசரமாக' அப்பாவைக் காணவில்லையா' எனச் சொல்லியவாறு  ஒரே நேரத்தில் கதவைத் திறக்கிறார்கள். தாயின் கண்களிலிருந்து கண்ணீர் புகுபுகுவெனக்  கொட்டுகிறது.

'அம்மா வீடு முழுக்கத்  தேடினீங்களா, துளசி கேட்க, 'எல்லா இடத்திலையும் தேடிப் போட்டன் ஒரு இடத்திலையும் இல்லையடி' இந்த மனுசன் எங்கை போச்சுதோ தெரியேலையே இப்ப நான் என்ன செய்வேன் கடவுளே' சகுந்தலா ; வாய்விட்டு அழுதபடி படியிறங்கி கூடத்துக்கு வர 'அழதையம்மா அப்பா சில நேரம் நடக்கப் போயிருப்பார்' என ரஜன் சொல்ல 'இந்த இரவு பன்னிரண்டு மணியிலோ நீ போய் ஒருக்கா காருக்குள்ளை பார்' என தாய் சொல்ல. போன வேகத்திலேயே திரும்பி வந்து ' அங்கையும்  இல்லை'என்கிறான்.

'அவரை எங்கை போய் தேடுவன்' என அழுதபடியே தாய் இருக்க மகனும் மகளும் தாயின் இரு பக்கத்திலும் போய் இருக்கிறார்கள்;.'எல்லாம் இவனாலைதான் வந்தது' 'இவன் என்னம்மா செய்தவன் டேய் அப்பாவோடை சண்டை போட்டியா' எனத்; துளசி கேட்க'இல்லை' என அவன் சொல்ல,'கொண்ணன் பொய் சொல்கிறான், இவ்வளவு காலத்திலை கொப்பா அழுது பார்த்தது இல்லை. படுத்தபடி கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தார்.அழாதையுங்கோ எனச் சொல்லியும் அழுதாரடி' 'அப்பா அழுமளவுக்கு சண்டை போட்டியா சொல்லடா சொல்லாட்டி அண்ணன் என்றுகூட பார்க்காமல் அடிப்பன் சொல்லடா'துளசி கண்கலங்கிக் கேட்க எதுவுமே சொல்லாது கண்கலங்கியபடி குனிந்த தலை நிமிராது ரஜன் இருந்தான்.

தாய், அன்று மாலை நடந்த சம்பவத்தைத் சொல்லத் தொடங்கினாள்.'கொப்பா கார் திருத்தினாரல்லோ அதாலை  300யூரோ வீட்டுக்குக் கட்ட குறைந்ததாலை இவனிட்டை பயிற்சிக் கல்லூரியில் கொடுக்கும் சம்பளக் காசிலிருந்து 300 யூரோ கடனாகத் தரும்படி கேட்க, உங்களை யார் வீடு வாங்கச் சொன்னது, எங்களை நம்பி ஏன் வீடு வாங்கினனீங்கள். என்னிடம் காசு இல்லை' இவன் சொல்ல, 'எல்லாம் உங்களுக்காகத்தான் வாங்கினாங்கள் ' என்று அவர் சொல்ல,இவன் 'நாங்கள் கேட்டனாங்களே வீடு வாங்கச் சொல்லி எல்லாரும் வீடு வாங்கினம் என்று கௌரவத்திற்குத்தானே வீடு வாங்கினனீங்கள்' என்று இவன் சொல்ல' நன்றி கெட்ட பிள்ளைகள்' அவர் சொல்ல, 'பிள்ளைகளைப் பெறாமல் விட்டிருக்க வேண்டும்' என்று இவன் சொல்ல வாய்த்தர்க்கம் முற்ற இடையிலை நான் வந்து தடுக்க 'கொப்பா இனிச் செத்தாலும் இவனிட்டடை ஒரு சதமும் வாங்கமாட்டன்' என்று சொல்ல  இரண்டு பேரையும் சும்மா இருங்கள் என சமாதானப்படுத்தினன். இதுவரையில் கொப்பா இவனிட்டை ஒரு சதமும் வாங்கினது இல்லை காசு இல்லையென்றால்; இல்லையப்பா என்று ஒற்றைச் சொல்லில் சொல்லியிருக்கலாம்.இவ்வளவு கதை கதைக்க வேண்டிய அவசியமே இல்லை.காசு இல்லையென்று சொல்லியது அவருக்குக் கவலை இல்லை கொண்ணன் கதைத்த விதந்தான் பிழை'தாயார் சொல்லி முடிக்க முந்தி ' ஏண்டா அப்படிக் கதைத்தனி அவர் ஒரு தெய்வமடா, தனக்கென்று இதுவரையில் ஏதாவது வாங்கியிருக்கிறாரா?. போடுறதுக்கு ஒரு நல்ல காற்சட்டை இல்லை. இரண்டு காற்சட்டையும் மூன்று சேர்ட்டுந்தான் வைத்திருக்கிறார். பத்து வருசமாக அதைத்தான் அதைத் தோய்த்துத் தோய்த்து போடுகிறார்.அவரோடு போய் வாய் காட்டியிருக்கியே நீ எனக்கு அண்ணன,; எனக்குப் புத்தி சொல்ல வேண்டியவன் நீ, ஆனால் நான் உனக்கு புத்தி சொல்றன் என்று துளசி பொரிந்து தள்ளினாள்.
'நாங்கள் எங்களுக்கென்றொரு சொந்தமான வீட்டில் சநதோசமாக இருக்க வேண்டுமென்பதற்குத்தான் வீடு வாங்கினார். இந்த வீட்டைப் பார், இது வீடு இல்லை எங்கடை அப்பா, தண்ணியும் சிமெந்தும் கலந்து பூசவில்லை அப்பாவின் வியர்வையைக் கலந்துதான் இந்த வீடு கட்டப்பட்டிருக்கு. வேலைக்குப் போட்டு வந்து ரெஸ்டோறன்றுக்கு ஓடுகிறார். சனி ஞாயிறு வேறு வேலைக்குப் போகிறார். 

ஒருநாளாவது ஓய்வு எடுத்து இருக்கிறாரா இல்லையே. ஒரு கலியாண வீட்டிலோ வேறை நிகழ்விலோ அரைகுறையாகச் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ஓடுகிற அப்பாவைத்தான் நான் பார்த்து வருகிறன். ஆனால் நீ.........., நாங்களிருவரும் சந்தோசமாய் இருக்க வேண்டும் என்பதுதான் அப்பா அம்மாவின் வாழ்வு, அப்பாவை இந்த நேரத்திலை வெளிக்கிட்டுப் போகுமளவிற்கு செய்துவிட்டியே. உனக்கு அப்பாவைவிட 300யூரோ பெரிசாகப் போயிட்டுது. ஆனால் நான் வேலை செய்கேக்கிலை இப்படிக் கேவலமாக நடக்க மாட்டன் முழுக்காசையும் கொடுப்பன். அவர் எப்படி வாழ்கிறார் என்றது எனக்குப் புரியுது உனக்குப் புரியேலை' துளசி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கார் வந்து நிற்கிறது. 
அதிலிருந்து அப்பாவும் அவரின் நண்பர் தர்மபாலனும் இறங்கி வருகின்றனர். நேரம் இரவு இரண்டு மணி. தகப்பன் வருவதைக் கண்டதும் மூவரும் கதவடிக்கு ஓடுகின்றனர்.

கணவனைக் கண்டதும் சகுந்தலாவிற்கு நின்றிருந்த அழுகை மீண்டும் வர போன உயிர் திரும்பி வந்ததாக உணருகிறாள்.' அப்பா ' என அழுதபடி தந்தையின் கைகளை துளசியும் ரஜனம் பிடிக்கிறார்கள்.

உள்ளே வந்த தர்மபாலனிடம் 'இவரை  எங்கையண்ணை இருந்தவர்;. இவர் சொல்லாமல் இரவு வெளிக்கிட்டுப் போயிட்டார். நாங்கள் பட்ட பாடு கடவுளுக்குத்தான் தெரியும். ஏதாவது மொக்குத்தனமான முடிவெடுத்திட்டாரோ என்று என்னுடைய உயிர் என்னிட்டையே இல்லை. ஏனப்பா இப்படிச் செய்தனீங்கள்' என்று மனைவி கேட்க எதுவுமே பேசாது வந்து அமர்கிறார் துளசி போய் தந்தைக்கு அருகிள் அமர்கிறாள்.

தர்மபாலனை இருக்கச் சொல்லியும் இருக்கவில்லை.'என்ன இன்னும் காணவில்லையென்று மனுசி தேடிக் கொண்டிருக்கும் 'என்றுசொல்லியவாறு கனகராஜாவை எங்கு கண்டனான் என்பதைச் சொல்லத் தொடங்கினார்.

வேலை செய்யிற இடத்திலை மேலதிக நேர வேலை செய்துவிட்டு வேகமாக வந்து கொண்டிருந்தன்.உங்கடை வீட்டிலை இருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்திலை ஒரு பூங்கா இருக்குதே அதைக் கடந்து வந்து கொண்டிருக்கையில் றோட்டோர வாங்கில் ஒரு ஆள் இருப்பதை என் கடைக்கண் கண்டுவிட்டது. அது கனகராஜா மாதிரி இருக்க..ச்சே...அவர் ஏன் இந்த நேரத்திலை இங்கிருக்கிறார் என எண்ணிய நான், ஒருக்கா இவர்தானோ என ஐமிச்சப்பட்டு காரை றிவேர்ஸ் எடுத்துக் கொண்டு போய்ப் பார்த்தால் இவர்தான் இருந்தார் '.

'இந்த நேரத்திலை ஏன் இங்கை இருக்கிறியள் என்று கேட்டன்.'சும்மாதான் இருக்கிறன்'என்றார். நான் எதையும் விபரமாகக் கேட்க விரும்பமில்லை.இரவு ஒன்றரை மணிக்கு ஒருவர் பூங்காவில் வந்து ஊட்கார்ந்திருக்கிறார்,ஏதோ பிரச்சினை இருக்கிறது எனக்குப் புரிந்துது. எழுப்பிக் காரில் கூட்டிக் கொண்டு வரும் போது நடந்ததைச் சொன்னார்'

'என்னதான் இருந்தாலும் கனகராஜ் வீட்டைவிட்டு வெளிக்கிட்டிருக்கக்கூடாது, அங்கை பார் அந்த மூன்று பேரின்ரை முகத்தையும், என்னவெல்லாம் நினைச்சுப் பதறியிருப்பார்கள்'

'அண்ணை இவர் தனியக உழைக்கிறாரே நானும் உதவியாக இரப்பம் என்று நானும் ஏதாவது வேலைக்குப் போகப் போறன் எண்டு சொல்ல அதொன்றும் வேண்டாம், மாடு மாதிரி வீட்டு வேலைகளைச் செய்கிறாய் தாய் வீட்டிலை இருந்தால்தான் பிள்ளைகளுக்கு தாய் தகப்பனிலை பாசம் வரும் பிள்ளைகள் வெளியிலை போட்டு வரும் போது'அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டு வரும் போது தாய் குரல் கொடுத்தால் பிள்ளைகளுக்கு நிம்மதியாக இருக்கும். தாயின்ரை கையாலை சாப்பாடு கொடுத்தால் எவ்வளவு சந்தோசப்படுவார்கள், நீ ஒன்றும் வேலைக்குப் போக வேண்டாம், நான் உனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் எவ்வளவும் கஸடப்படுவன் என்றவர்.அதுதான் ரஜன் அப்படிச் சொன்னதும் அவராலை தாங்க முடியாமல் போய்விட்டுது...'

'சரி..சரி...இளம்பிள்ளையள் என்றால் அப்படி இப்படி இருக்கத்தான் செய்வினம்.......சரி...இனி அதைப்பற்றி யோசிக்காமல் போய்ப் படுங்கோ என்று சொல்லிவிட்டு தர்மபாலன் போய்விடுகிறார்.

எதுவுமே பேசாது தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாகக் கண்கலங்கி இருந்த ரஜன், ஓடிச் சென்று முழங்காலில் இருந்தபடி தந்தையின் முழுங்காலில் தலை வைத்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதபடி 'அப்பா தயவு செய்து என்னை மன்னியுங்கள்.......தயவு செய்து மன்னியுங்கள் அப்பா.....நான்  உங்களோடை அப்படிக் கதைச்சது பிழைதான்......நீங்கள் எங்களுக்காக எவ்வளவோ கஸ்டப்படுகறீர்கள். நான் அதை உணராமல் சொல்லிப் போட்டன். என்ரை காசிலை இனி ஒவ்வொரு மாதமும் தருவன்' அவன் சொல்ல, அவனை எழுப்பி தனக்கருகில் இருத்தி அவனின் தலையை தனது தோளோடு அணைத்து 'ரஜன் நீ உழைக்கிற காசு உங்களுக்குத்தான், நீங்கள் இளம்பிள்ளைகள் உங்களுக்கும் நிறைய ஆசைகள் இருக்கும். எனக்கு நீங்கள் தரவேண்டாம். எப்பவாவது ஏதாவது காசு தேவையென்றால் உதவி செய் அது போதும். நானும் அவசரப்பட்டு வெளிக்கிட்டுப் போயிட்டன். நீ சொன்னது மனதிலை குத்திப் போட்டுது. சரி.....போய்ப் படுங்கோ....என்று சொல்லியவாறு கனகராஜா எழுகிறார். 

படுக்கையில் கணவனின் தலையை தனது மார்பில் வைத்து அணைத்தபடி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் மனைவி சகுந்தலா.
எதிர்காலத்தில் மனிதன் கற்காமலே அனைத்து மொழிகளையும் பேசுவான்

ஏலையா க.முருகதாசன்

விஞ்ஞானத்தின் விஸ்வரூப வளர்ச்சி தங்குதடையின்றி அனைத்து நிலைகளிலும் விரவிப் பரந்து சென்று கொண்டேயிருக்கின்றது.
நிழல்படியாத இடம் இல்லையென்பது போல காற்றில்லா இடம் இல்லையென்பது போல விஞ்ஞானம் அன்றாட வாழ்வில் கோலோச்சி நிற்கின்றது. அதன் துணையின்றி ஒரு துரும்பையும் நகர்த்த முடியாத தவிர்க்க முடியாத நிலைக்குள் உலகம் தள்ளப்பட்டுவிட்டது.
மனிதனை இயந்திரமாக்கிவிட்ட விஞ்ஞானம், மனிதனை தன்னியல்பு நிலையிலிருந்து சிதைக்கும் காலத்தை நோக்கி நகருகின்றது. 
மனித உடலின் மூளை மனிதனை மட்டும் இயக்கவில்லை, மனிதனைக் கொண்டு உலகத்தையே ஆட்டிப்படைக்கின்றது.
இந்த உலக உருண்டையில் பல நாடுகளும் பல மொழி பேசுபவர்களுமாக கோடிக்கணக்கனக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேற்று மொழிக்காரர்கள் பேசும் மொழியைப் கற்றுக் கொண்டால் மட்டுமே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் புரிந்து கொள்ள முடிகின்றது. அவர்களுடன் உரையாட முடிகின்றது. மொழி ஒரு ஊடகம் மொழி இன்றேல் இன்று உலகம் இந்த வளர்ச்சியடைந்திருக்க முடியாது.
மொழி என்பது உரையாடுதல், வாசித்தல், எழுதுதல் என்ற கட்டமைப்புக்கள் அடங்குகின்றது.பலவாயிரம் மொழிகள் இக்கட்டடைமப்புக்குள் உட்பட்டிருந்தாலும் பல இலட்சம் மொழிகள் இன்னமும் உரையாடும் மொழிகளாகவே இருந்து வருகின்றன. அந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லாமலிருக்கின்றது.
தாய்மொழியைக்கூட குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுத்தால் மட்டுமே அம்மொழி பரிச்சயமான மொழியாகவும் அதன் பரப்பினை அறிந்து கொள்ளக்கூடிய நிலையில் குழந்தையும் வளர மொழி இலகு நிலைக்கும் இயல்பு நிலைக்கும் அந்தக் குழந்தையுடன் இணைந்தே வளர்ந்துவிடும்.
மூளையின் நினைவுச் சேமிப்பு அறைகளில் மொழியின் ஒலி வடிவங்களும், எழுத்து உரு வடிவமும் நிலையாகப் பதிந்து விடும்.
ஆதி மனிதன் தான் காணும் பொருட்களைப் பார்த்த போது அவன் வாயிலிருந்து எழுந்த ஒலியே பொருளின் பெயரானது. ஒலியூடாக அவன் மற்றையவர்களுக்கு உணர்த்த்திய பொருள், பொருளுக்கான பெயராக நிலை நின்றது. சக ஆதி மனிதனும் அந்த ஒலியை பொருளின் பெயராகக் கொண்டு அப்பொருளைக் காணும் பொழுதெல்லாம் அப்பொருளின் பெயராக நினைவில் நிலை நிறுத்திக் கொண்டான். மூளையும்  அதனைப் பதிந்து வைத்துக் கொண்டது.
மனிதனின் நாகரீக வளர்ச்சியினாலும், மொழிகளின் வளர்ச்சியினாலும் பொருட்களுக்கு பெயர்களை வைக்கத் தொடங்கியது மனித குலம்.ஆதி மனிதனுக்கும் நாகரீகமடைந்த மனிதனுக்குமிடையில் பெயர் வைத்தலில் அதைச் சொல்வதில் வேறுபாடு எதுவுமே இல்லை.ஒலியே எல்லாவற்றுக்கும் காரணம்.
இது இன்னது என்று சொல்லுகின்ற ஒலிக்கேற்பவே ஒவ்வொரு மொழியிலும் எழுத்துருவுக்கான வரிவடிவங்கள் உண்டு.
தனது தாய்மொழியைத் தவிர்ந்த மற்றைய மொழிகளைக் கற்க வேண்டுமாயின் , மற்றைய மொழிகளின் ஒலி வடிவத்தையும் வரிவடிவத்தையும் ஊன்றிக் கவனச் சிதைவு இல்லாமல் படித்தல் வேண்டும்.
மற்றைய மொழியின் ஒலியை கவனமாக உள்வாங்கிக் கொள்வதன் மூலமும், எழுத்துருவங்களைக் கண்களால் பார்த்து உள்வாங்கிக் கொள்வதன் மூலம் மட்டுமே மற்றைய மொழியைக் கற்க முடியும். மூளையின் நினைவறைகளில் அவை நிலையாக பதிந்தும் விடுகின்றன.
ஒரு மொழி போல் இன்னொரு மொழி கற்பதற்கு இலகுவாக இருப்பதில்லை. ஆனால் எதிர்கால விஞ்ஞானம் ஒரு மனிதனுக்கு அவன் மற்றைய மொழிகளைக் கற்காமலே அனைத்து மொழிகளையும் அவனால் உரையாடவும் வாசிக்கவும் செய்கின்ற வேதியல் பொருளைக் கண்டுபிடிக்கும். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் போகும் ஒருவன், அந்நாட்டு மனிதனுடன் அவன் மொiழியைக் கறகாமே அவன் மொழியிலேயே உரைiயாடுவான்.
அந்நிய நாட்டு மொழியைக் கற்காமலே இது எப்படிச் சாத்தியம் என்பதை இனிப் பார்ப்போம்.
மொழிகளின் ஒலி வடிவத்தையும் எழுத்துரு வடிவத்தையும் மின்னியலாக்கி அதனை இன்று கணிணியில் எழுதவும், சொற்களின் உச்சரிப்பை கணிணியிலேயே கேட்கவும் முடிகின்ற சாதனையை விஞ்ஞானம் செய்து முடித்துவிட்டது. கணிணியில் இவ்விஞ்ஞானக் கண்டு பிடிப்பை அறிமுகப்படுத்தும் முன்னரே ஒலி வடிவத்தை (பாடல்கள், பேச்சுக்கள்) ஒலி நாடாக்கள் மூலம் கேட்கும் நிலையை விஞ்ஞானம் நிறைவேற்றிவிட்டது.
இந்த இரண்டு விஞ்ஞானப்புரட்சிக்கு அப்பால் விஞ்ஞானம் கண்டு பிடிக்கப் போகும் கண்டுபிடிப்பே மிகவும் முக்கியமானதாகும்.
மின்னியல் பதிவுகளுக்கு முக்கியமாக தேவைபபடுவது மூலகங்களே. இந்த மூலகங்களில் மூன்று பிரிவுகள் உண்டு. உலோகம், திரவகம், வாயு. விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுக்கு இந்த மூன்று பிரிவுகளும் தனித்தும் ஒன்றினந்தும் மாற்றுப் பொருளாக மாறிய நிலையிலும் பயன்படுத்தப்படுகின்றன.மொழியைக் கற்காமலே மூலகங்களின் இரு பிரிவுகளை மனித உடலில் பதிய வைக்கப்படுவதன் மூலம் மூளையின் நினைவுச் சேமிப்பு அறைகளில் சேமிப்பதன் மூலம் இது சாத்தியமாகும்.
ஏதுவான உலோகத்தில் மொழிகளின் ஒலி வடிவத்தையும், எழுத்துரு வடிவத்தையும் மிக மிக சிறிய சிப்ஸாக உருவாக்கி மனித உடலுக்குள் வைத்துவிடுவது. இந்தக் கருவி அனைத்து மொழிகளையும் மூளைக்குள் பதிவு செய்து விடும்.
இன்னொன்று மொழிகளின் ஒலி வடிவத்தையும் எழுத்துரு வடிவத்தையும் மின்காந்த திரவநிலைக்குள்ளாக்கி அதனை மூளையின் நினைவறை மூல நரம்பு மண்டலத்தில் செலுத்தி விடுவது.
மூலகங்களில் சில மின்னியல் தன்மை கொண்டனவாக இருக்கின்றன. இம்மூலகங்களை தனியாகவோ ஒன்றிணைத்து புதிய மின்காந்த திரவத் தொகுப்பு மொழிகளை தன்னிடத்தே உள்வாங்கும் தன்மை கொண்டனவாக மாறும்.
மொழிகளை மின்காந்த திரவ நிலையிலோ அன்றி மின்காந்த உலோக நிலையிலோ தன் உடலில் பெற்றுக் கொள்ளும் ஒருவனுக்கு அந்நியன் ஒருவன் பேசும் மொழியை பரிச்சயமான மொழியாக மூளை உணர வைக்க நரம்புகளின் அதிர்வால்   அவன் குரல் நாண்களில் அதிர்வால் அந்நிய மொழிக்காரனுடன் மொழி  உச்சரிப்பின் ஏற்ற இறக்கத்துடன் இலக்கணச் சுத்தத்துடன் உரையாடுவான். அவனால் அம்மொழியை எழுதவும் வாசிக்கவும் முடியும்.
அதே வேளை தன் மொழி தெரியாதவனை அருகில் வைத்துக் கொண்டே அவனைக் கேலி செய்யவோ அவனைப் பற்றிப் பேசவோ முடியாத நிலை ஏற்படும்.
இக்கண்டு பிடிப்பு சாத்தியமாகும். இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் யாவும் சாத்தரியமாகாது என்று சொல்லப்பட்டவையே.

அந்த மரத்தடி
ஏலையா க.முருகதாசன்

'இதுக்குத்தான் ஊருக்குப் போக வேண்டாம் என்று சொன்னனான் கேட்டாயா பிடிவாதமாக போய் வந்துட்டு வந்த நாள் தொடக்கம் எப்ப பார்த்தாலும் கவலையாக யோசித்துக் கொண்டிருக்கிறாய், இப்படி இருக்காதை எனக்கும் துளசிக்கும் கவலையாக இருக்கு' என்று  சொல்லியவாறு  மேசை முன் இருந்து கொண்டு கண்ணீர் விட்டவாறு  ஒரு மரத்தை படமாக வரைந்து கொண்டிருந்த தனது மனைவி சுகுணேஸ்வரியின்   தோளில் ஆதரவாக கைவைத்தபடி அவளருகில் வந்து நின்றான் மணிமாறன்
ஊரிலிருந்து வந்த நாள் தொடக்கம் ஒரு மரத்தை வரைவதிலேயே ஈடுபடடுக் கொண்டிருநதாள்; சுகுணேஸ்வரி. மேசை முன் உட்கார்ந்து மரத்தை வரைவதும் பிறகு நினைவில் மூழ்குவதும் கண்ணீர் விடுவதுமாக அவள் இருந்த நிலையைக் கண்ட அவளின் கணவன் மணிமாறனும் மகள் துளசியும் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும்,அந்த ஆறுதல் வார்த்தை அவளை ஆறுதல் படுத்தவில்லை, அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் அந்த நினைவு அவளை ஆக்கிரமித்து நின்றது.
'சுகி நான் சொல்வதைக் கேள், உன்னை இப்படிப் பார்க்க எங்களாலை முடியாமலிருக்குது. இழப்பு என்பது தாங்க முடியாததுதான் ஆனால் தாங்கித்தான் ஆக வேண்டும், போதாதற்கு அந்த மரத்தை படமாக கீறி பிரேம் போட்டு வைக்கப் போகிறன் என்கிறாய், வேண்டாம் விட்டுவிடு'என்ற கணவனின் கைகளை ஆதரவாகப் பிடித்தபடி சுகுணேஸ்வரி 'என்னாலை முடியேலை அந்த மரம் என் நினைவை விட்டு ஒரு நாளுமே  போகாது' என அவள் குரல் தளதளக்கச் சொல்கிறாள்.அவன் எதுவுமே பேசாது அறைக்குள் இருந்த மகள் துளசியிடம்' துளசி நான் வேலைக்குப் போகிறன் அம்மாவைப் பார்த்துக் கொள்' என்றவாறு புறப்பட்டுப் போகிறான்.
'சரி அப்பா' என்றவாறு அவள் அறையைவிட்டு  வந்து தாயருகில் உட்காருகிறாள்.ஊரிலிருந்து வந்த நாள் தொடக்கம் தனது தாய் ஒரு மரத்தின் படத்தை வரைவதிலேயே ஈடுபட்டிருந்ததை அவள் கண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட அந்தப் படம் வரைந்து முடிந்த நிலைக்கு வந்துவிட்டது. 'அம்மா ஏனம்மா இந்தப் படத்தை இப்படி பிடிவாதமாக வரைகிறாய் ,நானும் பார்க்கிறன் நேரம் கிடைக்கிற போதெல்லாம் வரைந்து கொண்டிருக்கிறாய் அப்படி என்னம்மா இந்த மரப் படத்திலை விசேசம் 'என்கிறாள்.
தனது மகளுக்கு எந்தப் பதிலுமே சொல்லாது' எனக்கு ஒரு தேத்தண்ணி போட்டுக் கொண்டு தாறியா' எனக் கேட்க, 'சரியம்மா, ஆனால் இந்த மரத்துக்குப் பின்னால் உள்ள கதையை எனக்குச் சொல்ல வேண்டும்' எனச் சொல்லியவாறு தாயாருக்குத் தேநீர் போடுவதற்காக துளசி எழுந்து போகிறாள்.கண்களைத் துடைத்தவாறு அந்த மரப் படத்தின் பெரிய இரு வேர்களிலும் இரு சிறுமிகளை வரைவதில் ஈடுபடுகிறாள்.
தேநீரைக் கொண்டு வந்து கொடுத்தபடி' அம்மா சொல்லம்மா இந்த மரத்திலை அப்படி என்ன விசேசமிருக்கு' என்கிறாள். தேநீரை ஒரு வாய் குடிக்கிறாள் அந்தப் படத்தையே உற்றுப்பார்த்த சுகுணேஸ்வரியின் கண்களுக்கூடாக அந்த மரமும் அந்த ஒழுங்கையும் மனத்திரையில் விரிகிறது. 'சொல்றன் ' என்றவள் ' துளசி உனக்கு எத்தனை சினேகிதர்கள் இருக்க்கினம்' ' மூன்று பொம்பிளைப் பிள்ளையலும் இரண்டு பொடியங்களும்' ' எங்கை சந்தித்துக் கதைப்பீர்கள்' 'பெரும்பாலும் ரெலிபோனிலை பேஸ் ரைமிலை சில வேளைகளில் கோப்பிக் கடைகளில் அது சரி ஏனம்மா இதையெல்லாம் கேட்கிறாய்' அவள்  அந்த படத்தையே உற்றுப் பார்த்தபடி சொல்லத் தொடங்குகிறாள்'உங்களுக்கு இங்கை சினேகிதர்களைச் சந்திக்க ரெலிபோனும் கோப்பிக் கடைகளும் இருக்கு, ஆனால் அங்கை அப்பொழுது இந்த வேப்ப மரந்தான் எல்லாமே, எனக்கும் மலர்மங்கைக்கும் சந்திப்புக்கான இடம்';அதூன். நினைவில் மூழ்கிப் போய்,மந்திர சக்திக்கு கட்டுப்பட்டவள் போல் சுகுணேஸ்வரி சொல்லிக் கொண்டிருந்தாள்.  
'மலர்மங்கை... அவள் என்னுடைய ஒரேயொரு ஆருயிர்த் தோழி.எனது அயல் வீட்டுக்காரி.யங்கியை மட்டுமே போட்டுக் கொண்டிருந்த சின்னஞ்சிறுசுகளாக இருந்த காலத்திலிருந்தே இந்த வேப்ப மரத்தடியிலைதான் எப்பொழுதும் சந்திப்போம். எங்கள் இருவரையும் காணவில்லையென்றால் மலர்மங்கையின் அம்மாவும் உன்னுடைய அம்மம்மாவும் இந்த மரத்தடிக்கு தேடி வந்துவிடுவார்கள், அடித்து இழுத்துக் கொண்டு போய் விடுவார்கள். 
'அவளும் நானும் இரண்டு நாளைக்கு அவரவர் வீட்டில் அமைதியாக இருப்பம்.மூன்றாம் நாள் வழமை போல இந்த மரத்தடிதான் எங்களின்ரை  மடம். நானும் அவளும் ஒரே வகுப்புத்தான்.பாடசாலைக்கு போய் வந்த மீதி நேரமெல்லாம் இந்த மரத்தடிதான் எங்களின்ரை பொழுது போக்கிடம். இந்த மரத்தின் தோலைக் குத்திவிட்டு அடுத்த நாள் வடிந்து நிற்கும் பிசினை எடுப்பது.விளாங்காயை வறுகி அதில் உப்புப் போட்டு அதைச் சிரட்டையில் போட்டுக் கொண்டு வந்து சாப்பிடுவது, மாங்காயை வெட்டி மிளகாய்த் தூளைப் போட்டுச் சாப்பிடுவது அவரவர் வீட்டில் செய்யப்படும் பலகாரங்களை ஒருவருக்கொருவர் கொடுத்து சாப்பிடுவது,ஏன் தேத்தண்ணியைக்கூட இந்த மரத்தடியிலைதான் கொண்டு வந்து குடிப்பம். இங்கை நீங்கள் கோப்பிக்கடையிலை சந்திக்கிற மாதிரி இந்த மரத்தடிதான் எங்கடை தேத்ண்ணிக் கடை'.
'இந்த மரமும் வளர்ந்தது நாங்களும் வளர்ந்தம்..நானும் அவளும் ஆறு மாத வித்தியாசத்தில் பெரியபிள்ளையானோம். அதற்குப் பிறகு விடுவிடுவென வளர்ந்தம்.மலர்மங்கை என்னைவிட அழகாகவும் கம்பீரமாகவும் இருப்பாள்.எங்களிருவரையும் பியூட்டி குயீன்ஸ் என்று சிலர் அழைக்கவும் தொடங்கினார்கள்.சூதகம் வரும் நாளில்கூட இந்த மரத்தடியிலை சந்தித்து  ' இந்த இரண்டும் சொல்வழி கேட்கிறதாக இல்லை, பொம்பிளைப்பிள்ளையள் என்று ஒரு கூச்ச நாச்சமோ பயபக்தியோ இல்லை.சூதகத்தோடை போய் நிற்குதுகள் பேய் பிசாசு பிடிக்கப் போகுது என இரண்டு பேரின் தாய்மாரும் திட்டுவார்கள். அதற்கு நாங்கள்  வேப்பமரத்தடி பேய் இங்கை வராது எங்களைப் பார்த்தால் பேய் ஓடிவிடும் என்று கேலி செய்வோம்'
'எமக்குள் எழுந்த பருவ மாற்றத்தினால் காதலை முன்னிறுத்தி காமக் கோமோன்கள் தமது வேலையை ஆரம்பித்தன. நான் உன் அப்பாவைக் காதலித்தேன்.மலர்மங்கையும் ஒருவனைக் காதலித்தாள். அவன் பெயர் இராஜகுமாரன். மலர்மங்கையின் அழகை வைத்து இராஜகுமாரிக்கு எற்ற இராஜகுமாரன் கிடைத்திருக்கிறான் எனக் கிண்டல் செய்வென். அவள் வாய்விட்டுச் சிரிப்பாள். அந்த வேப்ப மரத்தடியில் நின்று அவள் சிரித்தாள் ஒழுங்கையே அதிரும். மலர்மங்கையின் அந்தச் சிரிப்பை வைத்தே நாங்கள் வேப்ப மரத்தடியில் நிற்கிறோம் என்பதை அயலவர்கள் ஊகித்துக் கொள்வார்கள். நாங்களிருவரும் அங்கு சந்தித்து இரண்டு பெரிய வேர்களிலும் உட்கார்ந்து கதைப்பதை வேலையாகக் கொண்டிருந்தோம்'
'என்னதான் அவள் எனது தோழியாக இருந்தாலும் தனது காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்வதில் அதற்கொரு எல்லையை அவள் வகுத்துக் கொண்டாள். நாங்கள் இருவரும் தோழிகளாக இருந்தாலும் எமது ஆத்மாக்கள் வேறு வேறானவை. உனது அப்பாவுடன் கொண்ட காதலை அவளிடம் வெளிப்படையாகச் சொல்வதுண்டு. இன்றைக்கு உன்னுடைய மன்மதனைச் சந்திக்கவில்லையா என அவளும் என்னைக் கேலி செய்வாள்'.
'எமது படிப்பும் காதலுமாக காலம் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் இரவு நேரம் பன்னிரண்டு மணியிருக்கும் மலர்மங்கையின் வீட்டிலிருந்து' எடியே பாவி ஏனடி இப்படிச் செய்தாய், ஐயோ நாங்கள் இனி என்ன செய்வோம்' எனக் குளறும் சத்தம் கேட்டது. நித்திரையிலிருந்து திடுக்கிட்டு எழுந்த நாங்கள் அங்கு ஓடினோம். அயலவர்களும் அங்கு கூடிவிட்டார்கள். அவர்களின் கிணற்றடியைச் சுற்றி ஆட்கள் நின்றிருந்தார்கள்.கிணற்றடியில் அவள் பிணமாக வளர்த்தப்பட்டிருந்தாள்.அவளைப் பிணமாகப் பார்ப்பேன் எனக் கனவுகூடக் காணவில்லை. அந்த நிலையில் அவளைப் பார்த்ததும்' 'மங்கை'என நான் வீரிட்டழுததும், மலர்மங்கையின் தாய் என் பக்கம் திரும்பி'சுகி உன் சினேகிதியின் நிலையைப் பார்த்தியா....உனக்குக்கூடச் சொல்லவில்லையா' என்று ஏதோ சொல்ல நினைத்தவள் திடுதிப்பென நிறுத்திவிட்டு'நான் ஒரு சொல்லு சொன்னதற்காக பாவி நீ ஏன்டி இந்த முடிவெடுத்தாய்' என தலையில் அடித்து அழுது கொண்டிருந்தாள். அந்த ' ஒரு சொல்லுத்தான் மலர்மங்கையை கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்ய வைத்ததா'என எல்லோரும் வேறு வேறு கற்பனைகளுடன் கதைக்கத் தொடங்கினார்கள்.
அடுத்த நாள் இறுதிச் சடங்கு நடந்தது.வயிற்றிலை வாங்கிப் போட்டாளாம் என்ற செய்தி மெல்ல மெல்ல பரவத் தொடங்கியது. அவள் இறந்ததைவிட இப்படியான ஒரு சொல்லுக்கு எனது தோழி ஆளாகிவி;ட்டாளே என்ற கவலை அதிகரித்து என்னை அலைக்கழிக்கத் தொடங்கியது. இரண்டு மூன்று மாதங்களாகிவிட்டன.எனது தோழியின் நினைவு என்னை வாட்டி வதைக்க வேப்பமரத்தடிக்குப் போய் மரத்தோடு சாய்ந்திருந்த எனக்கு மரப் பொந்தில் சின்னதாக மடித்து வைத்த தாள் ஒன்று மரப்பட்டை ஒன்றால் மறைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். எடுத்துப் பிரித்து வாசித்தேன்.
என் பிரியமான தோழி சுகி
உன்னைவிட்டுப் போகிறேன்,என்னை மன்னித்துவிடு.நான் செய்து தவறுக்கு நானே பிராயச்சித்தம் செய்கிறேன். ஒரு நாள் இராஜகுமாரன் என்னைச் சந்தித்த போது தான் கொழும்புக்கு போகப் போவதாகவும் திரும்பி வர ஆறுமாதமாகும் என்று சொன்னார். அப்பொழுது வீட்டில் யாருமில்லை. எமது சந்திப்பு எல்லை மீறியது.எல்லை மீறுவது சரியா தப்பா எனச் சிந்திப்பதை எமது உணரச்;ச்pகள் தடுத்துவிட்டன. நான் பயந்தபடியே வரவேண்டிய மாதவிலக்கு வரவில்லை. அம்மா கவனித்துவிட்டு கேள்வி மேல் கேள்வி கேட்டார். எல்லாவற்றையும் அம்மாவிடம் சொன்னேன். அம்மாவின் கோபத்தினால் வீடு இரண்டுபட்டது. அப்பா திக்பிரமை பிடித்தவர் போல இருந்தார். இராஜகுமாரன் கலியாணம் செய்வார் என எவ்வளவோ முறை சொல்லிப் பார்த்தேன்.அம்மா சமாதானப்படவில்லை. கோபத்தின் உச்சத்திற்கே போய் 'ஏண்டி உனக்கு உடம்பு சூடு பிடித்து ஆம்பிளை தேவைப்பட்டுதோ...செத்துத் துலையடி சனியனே எங்கடை குடும்ப மானத்தை குழிதோண்டி புதைக்க வந்தவளே நீ சாவடி ...சாவடி என அடித்துத்  திட்டினார். என்னைப் பெற்ற தாயே இப்படிச் சொல்லும் பொது நான் உயிரோடு இருக்க விரும்பவில்லை...என்னை மறக்காதே...
உன் நினைவோடு இந்த உலகை விட்டுபு; போகும் மங்கை என கையொப்பமிட்டிருந்தாள். அதற்குப் பிறகு எனக்கும் அப்பாவுக்கும் கலியாணம் நடந்தது. இப்ப நான் ஊருக்குப் போன போது வேப்பமரம் இல்லை. அதை தறித்துவிட்டார்கள். மலர்மங்கையின் பெற்றோரைக் கண்டேன். 'அந்தச் சொல்லை சொல்லாமலிருந்தாள் என்ரை பிள்ளை இப்ப உயிரோடு இருந்திருக்கும் எனச் சொல்லி' அவளின் தாய் கண்ணீர் வடித்தாள்.
கதையைச் சொல்லி நிறுத்தியவள் கண்களிலிருந்து அருவியாக கண்ணீர் கொட்டியது. தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டு அவளைத் தோளோடு சாய்த்துக் கொண்டு, தனது  ;கண்ணீரைத் துடைத்தபடி இரண்டு சிறுமிகள் வேரில் ஊட்கார்ந்திருப்பது போல தாயார் வரைந்த  ஒவியத்தில் மிகுதியை வரையத் தொடங்கினாள் துளசி
வேற்றுக் கிரகத்தில் சாமியும் சுந்தரியும் (கிரகப்போர் 8)
எழுதியவர்: காசியரின் பேரன்
யானை முகத்;தைக் கொண்ட மனிதர்களுடன் அந்தப் பெரிய மண்டபத்திலிருந்து கொண்ட அங்கிருந்த பெரிய திரையில் கனடாவிற்குப் போய்க் கொண்டிருக்கும் பிரித்தானியாவின் பிரிட்டிஸ் எயர்வேர்ஸ் விமானத்தில் சுந்தரியின் மாமன் முiறானவர் பயணித்துக் கொண்டிருப்பதை சுந்தரி பார்த்ததும்'மாமா' என தன்னையறியாமல் கத்துகிறாள்.
சாமியும் சுந்தரியும் இருக்கும் கிரகத்திலிருந்து பலவாயிரம் கோடி கிலோ மீற்றர்களுக்கு அப்பாலிருக்கும் பூமியின் மேற்பரப்பில் கனடாவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்த விமானத்தை திரையில் பார்த்தும் அவர்கள் வியப்பின் உச்சகிக்கே சென்று விடுகிறார்கள்.
சுந்தரியின் மாமனார் பிரித்தானியாவில் கிரகங்கள் பற்றி  ஆய்வு செய்யும் பேராசிரியர். அவர் தனது கையிருக்கும் ஐ பாட்டைப் பார்த்தக் கொண்டிருக்கும் போதுதான் சுந்தரி மாமா என்று வியப்புடன் கத்த, அவளின் குரலை தனக்கருகில் கேட்பது போல கேட்கவே அவர் திரும்புகிறார்.அதே நேரம் அவர் ஐ பாட்டில் யானை முகம் கொண்ட மனிதர்களுடன் தனது மருமகள் முறையான சுந்தரியும் இருப்பதைக் கண்டதும் அவரும் திகைக்கிறார்.
அவர்களிருவரைச் சுற்றியும் யானை முகத்தோடு மனிதர்களுக்கு இருக்கும் கைகால்களோடு இருக்கும் அந்தக் காட்சி அவரின் ஐ பாட்டில் தெளிவாகத்  தெரிகின்றது. பக்தில் இருக்கும் பயணியும் இதைப் பார்த்துத் திகைக்கிறார். சுந்தரியின் மாமன் ஐபாட்: பார்ப்பதையும் அதில் தங்கள் உருவம் தெரிவதையும் சக பயணியும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் பெரிய திரையில் சாமியும் சுந்தரியும் அவர்களுடன் யானை முகம் கொண்ட மனிதர்களும் பார்க்கிறார்கள்.
விமானத்தின் உள்பகுதி முழுவதும் தெளிவாகத் தெரிகின்றது.விமானப் பணிப் பெண்கள் தேநீர் உணவு கொடுத்துக் கொண்டு வருவதும் தெரிகின்றது.
சில நிமிடங்களில் அந்தக் காட்சி மறைகின்றது. மண்டபத்தில் இருந்த யானை முகம் கொண்ட இருவரைத் தவிர அனைவரும் போய்விடுகின்றனர். மண்டபத்தை விட்டு அவர்கள் சாமிiயும் சுந்தரியையும் வெளியே மாடம் போன்ற இடத்திற்கு அழைத்து வருகின்றனர்.
இந்தக் கிரகத்திற்கு வந்த போது வீடுகள் எல்லாம் இளஞ்சிவப்பில் மாதுளம்பழ நிறத்திலிருந்தன இப்பொழுது வெளிர்நீல நிறத்திலிருந்தன. சாமியும் சுந்தரியும் அந்த அதிசயத்தைப் பார்க்கிறார்கள்.
பூமியைவிட்டு சாமியும் சுந்தரியும் வேற்றுக் கிரகங்களுக்கு வந்தவுடன் அந்தந்த கிரகங்களில் வாழும் மனிதர்கள் பேசும் மொழியை அவர்களால் பேச முடிகின்றது. இது அந்தந்த கிரகங்களில் உள்ளவர்களால் இவர்கள் இருவரின் உடல்களிலும் காந்த அலைகளால் அந்தந்த மொழிகளின் அடிப்படைக் கூறுகள் அவரவரின் மூளைகளின் நினைவறைகளில் பதியப்படுகின்றன. அதனால் மாங்கதிர் கிரக வாசிகளின் மொழியையும் இப்பொழுது தங்கி நிற்கும் யானைமுக கிரக வாசிகளின் மொழியை அவர்களால் விளங்கிக் கொள்ளவும் பேசவும் முடிந்தது
தாங்கள் நிற்கும் கிரகத்தின் நிறம் மாறியதற்குக் காரணம் மேலே நட்சத்திரங்கள் போல தெரிகின்ற நீலநிறமான ஐந்து கிரகங்களே அவற்றின் வெளிச்சம் இங்கே விழுகின்றன என யானை முகம் கொண்டவர்கள் விளக்கினார்கள். இப்பொழுது அந்த ஐந்து கிரகங்களிலும் இரவு நேரம் இங்கும் இரவு நேரம் என்றவர்கள் உங்களை மாங்கதிர் கிரகத்திலிருந்து இக்கிரகத்திற்க அழைத்து வந்த போது இங்கும் பகல் அந்த ஐந்து கிரகங்களிலும் பகல் என்றனர். பகலில் இந்தக் கிரகமும் அந்த ஐந்து கிரகங்களும் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரியும் என்றவர்கள், பூமிக்கு வெளிச்சம் கொடுக்க சூரியன் சந்திரன் போன்று இந்த ஆறுகிரகங்களுக்கும் தனி ஒரு சூரியன் இல்லை ஒவ்வொரு கிரகமும் இன்னொரு கிரகத்திற்கு வெளிச்சம் கொடுக்கின்றன.இப்பொழது நாங்கள் இரவு உணவு சாப்பிடுவதற்காக அங்கே தெரிகின்ற கிரகங்களில் ஒரு கிரகத்திற்குத்தான் போகப் போகிறோம், ஆனால் நாங்கள் வழமையாக அங்கு போய்ச் சாப்பிடுவது இல்லை, நீங்கள் எங்கள் விருந்தினர்கள் உங்களை அழைத்துப் போகப் போகிறோம் என்று சொல்லியவர்கள் தங்கள் கைகளில் பொருத்தப்பட்ட ஒரு கருவியை அமத்த அங்கிருந்து சிவப்பு நிற கதிர் ஒரு கிரகத்தைப் போய்த் தொட்டது. தொட்ட கிரகத்தைக் காட்டி அங்குதான் போகப் பேரிறோம் என்றார்கள்.
மண்டப மாடத்தை விட்டு வெளியே அவர்களிருவரையும் அழைத்து வந்தவர்கள் முட்டை வடிவிலான வாகனத்திற்குள் அழைத்துச் சென்று இருக்க வைத்தார்கள்.
அவர்களின் இருக்கைகள் அவர்களிருவரையும் அணைத்தக் கொண்டிருந்தன. யானை முகம் கொண்ட மனிதர்கள் அதனை இயக்கினார்கள். 
அந்த வாகனம் அங்கிருந்து கிளம்பியதற்கான எந்த அசைவையும் சாமியாலும் சுந்தரியாலும் உணர முடியவில்லை.அசைவதை அவர்களால் உணர முடியாவிட்டாலும் அவர்கள் தாங்கள் பிரயாணம் செய்து கொண்டிருப்பதை உணரந்தார்கள்.
பூமியில் இரவில் பிரயாணம் செய்யும் போது தெரியும் தெருவிளக்கு வெளிச்சம் போல இந்த வாகனத்தின் வெளிப்புறத்திலிருந்து வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது.
சில நிமிட பிரயாணத்தின் பின் மெதுவாக அந்த வாகனம் ஒரு விடுதி போல இருந்த கட்டிடத்தின் முன் இறங்கியது. கட்டிடம் நீலநிறக் கண்ணாடிகளால் உருவாக்கப்பட்டிருந்தது. சாமியும் சுந்தரியும் பிரயாணம் செய்த வாகனத்தின் கதவு திறந்ததும் அவர்களை அழைத்துப் போக வந்தவர்களைப் பார்த்து அவர்களிருவரும் திகைத்தனர். அவர்களுக்கு இன்னும் அதிசயங்கள்; காத்திருந்தன.
(தொடரும்)