WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Ippadi Nadakirthu

இப்படியும் நடக்கிறது!   ஊர்ப்பறவை கூறுகிறது.  9

இப்படியும் நடக்கிறது

தனது எதிர்ப்பையும் மீறி தனது மகள் திருமணம் முடித்துக்கொண்டதால், விரக்தியுற்ற தந்தை, முகநூல் நேரலையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது.

துருக்கியின் கெய்ஸேரி பகுதியைச் சேர்ந்தவர்,   54 வயதுடைய  அய்ஹான் உஸுன்  என்பவராவர்.

இவரது மகள் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். எனினும், குடும்பப் பிரச்சினை காரணமாக உஸுனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

திருமணம் முடிந்த சிறிது நேரத்தின் பின், தங்களுடன் விருந்துண்ண வருமாறு குடும்பத்தினர் தன்னை அழைத்ததாகக் கூறிய இவர், தனது இடத்தில் இருந்து தனது மாமனாரே மகளின் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறியிருக்கிறார்.

மேலும், மகளின் திருமணம் பற்றி தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று தன் மனைவியிடம் கேட்டபோது, அவருக்காக தனிப்பட்ட முறையில் வந்து சொல்லிக்கொண்டிருக்க நேரமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இவை எல்லாவற்றையும்,  உஸுன் வருத்தத்துடன் முகநூல் நேரலையில் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது நேரலையைக் கண்டு அதிர்ச்சியுற்ற குடும்பத்தினர், உடனடியாக வீடு திரும்பினர். ஆனால் அதற்கிடையில் உஸுன் தன் முடிவைத் தேடிக்கொண்டார்.

நேரலையின்போது, தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எவரும் தனது இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

டாக்டர். பாலசுப்ரமணியம் மருத்துவத்துறையின் நிஜ கடவுள்!  இப்படியும் மனிதர்களா    

மனிதம் சாகவில்லை வாழ்கிறது.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம்.

அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். 'ரமணா ' திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது.

இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிருக்கும் உயிர்கள் பல உண்டு.

அப்புறம் பார்த்துக்கலாம்னு... தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். 'மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ' என்பார்கள். நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் கையை பிடித்துக் கொண்டு 'நீங்கதான்யா எங்க தெய்வம்' என்றும் சொல்வார்கள்.

அப்படி மருத்துவத்துறையில் தெய்மாக உலவி வந்த மருத்துவர் ஒருவர் மரணமடைந்து விட, மக்கள் கதறி விட்டனர்.

கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவமனை என்றால் என்னவோ பெரிய கட்டிடத்தில் இயங்கும் என்று நினைத்து விடாதீர்கள். பத்துக்கு பத்து அடி அறைதான் அந்த மருத்துவமனை.

தொடக்கத்தில் சிகிச்சையளிக்க இவர் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளைடைவில் பணத்தின் மதிப்பு குறைய குறைய தனது பீஸ் தொகையை உயர்த்தினார். அப்படி உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டு வந்தார். இதுதான் சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய அதிக பீஸ்.

நாளைடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்றே நிலைத்து விட்டது. பிரமாண்டமான மருத்துவமனைகள் நிறைந்த கோவை நகரில், 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கவும் மக்களுக்கு ஒரு டாக்டர் கிடைத்தார்.

இதனால், சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள, ஏராளமான ஏழை மக்கள் டாக்டர். பாலசுப்பிரமணியத்திடம்தான் சிகிச்சை பெற வருவார்கள்.

சும்மா கையை பிடிச்சு பார்க்குறதுக்கே ரூ.100 வாங்கும் காலக்கட்டத்தில், 20 ரூபாய் வாங்கினால் எதிர்ப்பு கிளம்பாமல் இருக்குமா?. கிளம்பவும் செய்தது. கோவை நகரில் பல மருத்துவர்களும் பாலசுப்பிரமணியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மறைமுக இடையூறுகளையும் ஏற்படுத்தினர்.

ஆனால், டாக்டர் பாலசுப்ரமணியம் மாறவில்லை மசியவில்லை. கடைசி வரை 20 ரூபாய்தான் வாங்கிக் கொண்டு சிகிச்சை அளித்தார். இதனால், இவருக்கு மக்கள் டாக்டர் என்ற பெயரும் உண்டு.

பல சமயங்களில் 'டாக்டர் எங்கிட்ட உங்களுக்கு கொடுக்க 20 ரூபாய் கூட இல்லனு' சொல்ற நோயாளிகளும் உண்டு. அந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளும் டாக்டரே வாங்கிக் கொடுப்பார். டாக்டரின் வெள்ளை மனசு அறிந்த அவரது பல நண்பர்களும் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர்.

மருத்துவமனைக்கு செல்லவில்லையென்றால், தன்னை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகவே ஒரு நாள் கூட டாக்டர் விடுப்பும் எடுத்ததில்லை.

இந்த நிலையில் நேற்று நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, டாக்டர். பாலசுப்ரமணியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். டாக்டர் மரணம் அடைந்தது தெரியாமல், நேற்று மாலை வழக்கம் போல் அவரை நம்பியிருந்த நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்தனர்.

மருத்துவமனை பூட்டிக் கிடந்துள்ளது. ஒரு நாள் கூட வராமல் இருக்க மாட்டாரே... என்னவாச்சுனு தெரியவில்லையேனு விசாரித்துள்ளனர்.

அப்போதுதான் டாக்டர் இறந்து போன விஷயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து பல நோயாளிகள் கதறி அழுதனர். பலர் அவரது உடலை பார்க்க வீட்டுக்கு ஓடினர்.

ஆவாரம்பாளையத்தில் பல இடங்களில் 'ஏழைகளின் தெய்வம் எங்கள் ஐயாவுக்கு இதய அஞ்சலி ' என கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. டாக்டர் மருத்துவம் பார்த்து வந்த பத்துக்குபத்து அறையிலும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

ஏராளமான மக்கள் இப்போதும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

டாக்டர். பாலசுப்ரமணியம் மருத்துவத்துறையின் நிஜ கடவுள்!

அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

– இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம்.

அவள் பெயர் ஷெல்பி லைம்ப். கனடாவில் டோரன்டோ நகரைச் சேர்ந்தவள். இவளுடைய பிறப்பு இயற்கையின் அதிசயங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. இவள், தாய் இறந்து பலமணி நேரம் கழித்து பிறந்தவள். அம்மாவோடு புதைகுழியில் புதைக்கப்பட்ட பிறகு பிறந்தவள்.

இவளது அதிசய பிறப்பை முதலில் இருந்தே பார்ப்போம்!

ஷெல்பியின் தாயார் ஜெனிபர். ஷெல்பி சிசுவாக தாய் வயிற்றில் இருந்தபோதே ஜெனிபர் மிகுந்த கவனத்தோடு சிகிச்சைகளை மேற்கொண்டு வந்தார். அவருக்கு நன்றாக கார் ஓட்டத்தெரியும். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், அன்று வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு தானே காரை ஓட்டிக்கொண்டு சென்றார். சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்தது. கார் தாறுமாறாக ஓடியது.

என்ன செய்வது என்று ஜெனிபர் யோசிப்பதற்குள், கார் மரத்தில் பலமாக மோதிவிட்டது. அவரது தலையில் பலத்த காயம். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை, மருத்துவமனையில் சேர்த்தார்கள். டாக்டர்களின் பெரும் போராட்டத்திற்கு பின் ஜெனிபர் உயிரிழந்தார்.

தாய் இறந்துவிட்டால் வயிற்றில் இருக்கும் குழந்தையும் இறந்துவிடும். அதனால் மருத்துவ நிபுணர்கள் தாயையும், வயிற்று சிசுவையும் பரிசோதித்தார்கள். பலகட்ட சோதனைகளுக்கு பிறகு இருவரும் இறந்துவிட்டதாக சான்றிதழ் அளித்தார்கள்.

ஜெனிபரின் உடல் அன்றே சவக்கிடங்கில் கொண்டு வைக்கப்பட்டது. மறுநாள் உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அப்போதே 24 மணி நேரம் கழிந்துவிட்டது. அதன்பிறகு உறவினர்கள் பார்வையிட்டு மரியாதை செலுத்தினர். முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு சவப்பெட்டியில் உடல் வைக்கப்பட்டது. உறவினர்கள் கலைந்து சென்றனர்.

சவப்பெட்டி அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தயார் நிலையில் இருந்த குழியில் இறக்கப்பட்டது. அப்போது எங்கிருந்தோ ஒரு அழுகுரல் கேட்டது. குழந்தையின் அழுகுரல் என்பதால் எல்லோரும் பதற்றத்தோடு தேட, அது ஜெனிபரின் சவப்பெட்டியில் இருந்து வந்தது தெரியவர, சுற்றி நின்றவர்கள் ஒருவித பீதியில் உறைந்தனர்.

கல்லறைத் தோட்ட மேற்பார்வையாளருக்கு தகவல் பறந்தது. அவர் வந்து விசாரித்தபோது, ‘இப்படி இதுவரை நடந்ததில்லை. பெட்டிக்குள் இருந்து அழுகுரல் வருகிறது’ என்றார்கள். அவர் உடனே சவப்பெட்டியை திறக்க சொல்ல, பெட்டி மேலே தூக்கப்பட்டு, மென்மையாக உடைத்து திறக்கப்பட்டது.

அங்கு அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்தது. இறந்த தாயின் உடலில் இருந்து குழந்தை பிறந்து கிடந்து, அழுதுகொண்டிருந்தது.

உடனடியாக டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் நவீன ஆம்புலன்சில் வந்திறங்கினார்கள். இறந்த தாய் உடலில் இருந்து சேய் பிரிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதை கேள்விப்பட்ட ஜெனிபரின் கணவரும், உறவினர்களும் கொதித்துப் போனார்கள். சரியாக கவனிக்காமல் இந்துவிட்டதாக அறிவித்ததற்காக மருத்துவர்கள் மீது வழக்கு போடப்போவதாக கூறினார்கள். ஆனால் மருத்துவர்கள் எல்லாமே முறைப்படி நடந்ததாக கூறினார்கள்.

தலைமை மருத்துவர் ‘‘நான் 22 வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். இதுபோன்ற அதிசயத்தை கண்டதில்லை. நான் ஜெனிபரையும் வயிற்றில் இருந்த குழந்தையையும் முழுமையாக பரிசோதித்தேன். தாய், சேயின் உடல் முழுமையாக செயலிழந்து, எந்த துடிப்பும் இல்லை என்பதை உறுதியாக தெரிந்துகொண்ட பின்புதான், இருவரும் இறந்து விட்டதாக அறிவித்தேன். மேலும் சில மருத்துவர்களும் பரிசோதித்துப் பார்த்துவிட்டுதான் கையெழுத்திட்டார்கள். இது எங்கள் அறியாமையால் நடந்தது அல்ல, இயற்கையின் அதிசயமாக நடந்திருக்கிறது.

நாங்கள் கவனக்குறைவாக இதை செய்திருந்தால்கூட, இறந்துபோன தாயின் வயிற்றில் குழந்தையால் உயிரோடு இருந்திருக்க முடியாது. இறந்து போன தாயால் குழந்தையை தன் வயிற்றில் இருந்து வெளியேற்றியிருக்கவே முடியாது. பெட்டிக்குள் அடைக்கப்பட்ட குழந்தைக்கு சுவாசமே கிடைத்திருக்கவும் செய்யாது. ஜெனிபர் விஷயத்தில் நடந்தது அனைத்துமே, இயற்கை அதிசயம்’’ என்றார்.

டாக்டர்களை நோக்கி ஜெனிபர் குடும்பத்தினர் கேள்விகள் எழுப்ப, டாக்டர்கள் இயற்கையை நோக்கி கேள்வி எழுப்ப, யாருடைய கேள்விக்கும், எங்கிருந்தும் விடை கிடைக்கவில்லை.

தாயின் மூலமாகத்தான் குழந்தை சுவாசிக்கிறது. தாய் இறந்து பலமணி நேரமாக உடல் சவக் கிடக்கில் இருந்துள்ளது. பின்பு சடங்குகள் நடத்தப்பட்டு, உடல் பெட்டிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. காற்று புகாமல் ஆக்கப்பட்டு, குழிக்குள்ளும் இறக்கப்பட்டிருக்கிறது. இத்தனை மணி நேரம் எப்படி ஒரு குழந்தையால் உயிர்பிழைத்து வாழ்ந்திருக்க முடியும்?

கேள்விகள் கேள்விகளாகவே இருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் ஒரே பதிலாக ஷெல்பி தன் தந்தையோடு வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.

நன்றாக படிக்கிறாள். எதிர்காலத்தில் மருத்துவர் ஆவேன் என்கிறாள். ஆகட்டும், அவளுக்காவது பதில் கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

பார்ப்போரை வியக்க வைக்கும் வகையிலும், திகிலையும் ஏற்படுத்தும் விதமாக யாழ்ப்பாண இளைஞர்கள் இன்றைய தினம் சாகச நிகழ்வுகளை நடத்திகாட்டியுள்ளனர்.

தேசியக் கொள்கைத் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இளைஞர் பாராளுமன்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் விசேட ஆற்றலுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி இன்று காலை 08.30 மணி முதல் மாலை வரை யாழ்ப்பாணத்திலுள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது யாழ். மாவட்ட இளைஞர்கள் பலர் மேடையில் அரங்கேற்றிய திறமைகள் வியக்க வைக்கும் சாகசங்களாக அமைந்திருந்தன.

இந்தப் போட்டிக்கு யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 110 இளைஞர் யுவதிகள் விண்ணப்பித்திருந்த நிலையில், இன்றைய தினம் முதற்கட்டமாக 54 இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.

போட்டியின் நடுவர்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் டாக்டர் சி. எஸ். யமுனானந்தா, ஓய்வு நிலை அதிபர் செ. சேதுராஜா, யாழ்.கல்வி வலய ஓய்வு நிலை ஆசிரியர் திருமதி- ப. செல்வேந்திரகுமார், சட்டத்தரணி காயத்திரி குமாரவேல், ஆசிரியர் ச. அகிலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் முதலாவது தடவையாக ஏற்பாடு செய்து நடாத்தும் இந்த விசேட ஆற்றலுள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி யாழ்ப்பாணத்து இளைஞர்களின் கலைத்துவ திறமைகளைத் தமக்கே உரிய பாணியில் வெளிப்படுத்துவதற்கு அமைத்துக் கொடுத்துள்ள சிறந்ததொரு களமென்றே கூறலாம்.

13 வயதிற்கும் 29 வயதுக்கும் உட்பட்ட வயதினர்களின் திறமைகள் இனங்காணப்பட்டு அவர்களிடம் ஒழிந்துள்ள விசேட ஆற்றல்களை வெளிக் கொண்டு வருவதற்கான இந்தப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துப் போட்டியாளர்களும் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகத் திறந்து விடப்பட்டிருந்த மாபெரும் மேடையைத் தவறாதும், சரிவரவும் பயன்படுத்த வேண்டுமென்பதில் குறியாகவிருந்தனர் என்பதை காண முடிந்துள்ளது.

இதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் வெளிப்படுத்திய தனித்துவத் திறமைகளே தக்க ஆதாரம்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டிருந்த சுன்னாகம் கந்தரோடை மக்கள் முன்னேற்றக் கழக இளைஞர் கழகத்தின் தலைவரான செல்வராசா விஜிதரன் 300 கிலோ ஐஸ் கட்டியைத் தன்னுடைய வயிற்றில் வைத்து வேறொரு இளைஞர் சுத்தியலால் அதனை ஓங்கி உடைக்க, எந்த விதப் பாதிப்புமின்றி எழுந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து தனது கையால் பல கிலோ எடையுள்ள ஐஸ் கட்டியை உடைத்ததுடன், அவரது முதுகிலும் பல கிலோ எடையுள்ள ஐஸ்கட்டி சக இளைஞர்களால் வைக்கப்பட்டு உடைக்கப்படுகிறது.

இதன் உச்சக்கட்டமாகச் சுமார் ஐந்து கிலோ எடையுள்ள ஐஸ்கட்டியை அவரே தனது தலைமீது வைத்திருக்க வேறொருவரால் ஓங்கி உடைக்கப்படுகிறது.

இந்தக் காட்சியை வைத்த கண் வாங்காமற் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு குறித்த இளைஞனுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ? என்ற எண்ணத்துடன் அந்த இளைஞனை நோக்குகிறார்கள். ஆனால், அவன் சர்வ சாதாரணமாகச் சிரித்துக் கொண்டு வருகிறான்.

குறித்த இளைஞனிடம் இதற்கான முன்னாயத்தப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறீர்களா? என வினவிய போது நான் 50 கிலோ ஐஸ் கட்டியை வைத்துத் தான் பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்றைய இந்த நிகழ்வு மேடையில் நான் 300 கிலோ ஐஸ் கட்டியை எனது வயிற்றில் வைத்து எப்படியாவது உடைக்க வேண்டுமென எண்ணியிருந்தேன் அதனை நிறைவேற்றியும் விட்டேன் என்றார்.

மேலும், மாகாண மட்டப் போட்டிக்குத் தெரிவாகும் நிலை உருவானால் 700 கிலோ ஐஸ் கட்டியை என் வயிற்றில் வைத்து உடைக்க வேண்டும் என்பதே என் இலக்கு என்று குறிப்பிட்ட அவரிடம், உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதா எனக் கேட்ட போது, என்னிடம் இந்தத் திறமை மாத்திரமன்றி வேறு பல திறமைகளையும் வெளிப்படுத்துவதற்கான ஆற்றல்கள் காணப்படுகின்றன.

சிறிய வயதிலேயே என் திறமைகளை வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வம் எனக்கிருந்தது.

ஆனால், கடந்த கால போர்க் காலச் சூழல் காரணமாகவும், குடும்பப் பொருளாதாரம் போதாமை காரணமாகவும் எமது திறமைக்கு உரிய அங்கீகாரத்தை இதுவரை காலமும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றார்.

இதேவேளை இவ்வாறான அசாத்தியமான திறமைகளை வெளிக் கொண்டு வருவதால் ஆபத்துக்கள் ஏதாவது உடலுக்கு ஏற்பட்டு விடும் என அவர்கள் எண்ணிக் கொள்வதால் பெற்றோர்கள் மத்தியில் எதிர்ப்பு மன நிலையே உள்ளது. ஆனால், சக நண்பர்கள் என் திறமைக்கு என்றென்றும் ஊக்குவிப்பாகவும், உறுதுணையாகவுமிருந்து வருகிறார்கள் என்றார்.

எம்மில் பலருக்கும் ஒரு தேங்காயைக் கையால் தேங்காய் உரிப்பதே இயலாத காரியம். ஆனால், 13 நிமிடத்தில் 16 பச்சைத் தேங்காய்களை வேக வேகமாக உரித்துப் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் இளவாலையைச் சேர்ந்த 21 வயதான இராசரத்தினம் பிரசாந்தன்.

நான் வித்தியாசமான திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் கவர வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தேன். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது எண்ணத்தில் உதித்ததே குறைந்த நேரத்தில் அதிக தேங்காய்களை உரிக்க வேண்டும் என்ற எண்ணமாகும்.

எமது கிராமத்தில் பல்வேறு சமூக ரீதியான செயற்பாடுகளை முன்னின்று செயற்படுத்தி வரும் இளைஞர் அமைப்பான இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினரின் ஊக்குவிப்பே என்னை இவ்வாறான திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்துவதற்குத் தூண்டியது என்றார்.

பிறப்பிலேயே இரு கால்களும் குறை விருத்தியுடன் காணப்படுகின்ற பருத்தித்துறையைச் சேர்ந்த 23 வயதான இருதயநாதன் பிரசன்னா மாற்று வலுவுள்ளவராகவிருந்த போதும் அவர் மேடையில் நடனம் ஆடிக் காட்டிய விதம் மக்கள் மனங்களை வெகுவாகக் கட்டிப் போட்டது.

நடனத்தின் இடையிடையே குத்துக் கரணமும் போட்டு அனைவரையும் வியக்க வைத்தார். பருத்தித்துறையில் சைக்கிள் கடையொன்றின் உரிமையாளராகவுள்ள குறித்த இளைஞன் தனது நாளாந்தக் கடமைகளை எவருடைய உதவியுமின்றி தானே நிறைவேற்றுவதாகத் தெரிவிக்கிறார்.

நான் கடந்த-2014 ஆம் ஆண்டு க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய பின்னர் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள குழந்தையொன்றின் முதலாவது பிறந்த நாளில் எனது நடனத் திறமையை முதன் முதலில் வெளிப்படுத்தினேன். அதன் பின்னர் நான் பல நிகழ்வுகளிலும் பங்குபற்றி என்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறேன்.

என் அண்ணா என்னுடைய திறமையை ஊக்குவிப்பதில் மிகுந்த கரிசனையுடன் செயற்படுகிறார். என் திறமையை வெளிப்படுத்துவதற்கான பயிற்சிகளை நானே மேற்கொள்கிறேன் என்றார்.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்களாக மிளிர்வதற்கு அவர்களுக்குப் பொருத்தமான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பது எமது சமூதாயத்தின் கடமை.

இன்றைய இளைஞர்கள் திசை மாறிப் போகிறார்கள் எனக் குற்றச்சாட்டுபவர்கள் அவர்கள் திசை மாறிப் போகாமல் தடுப்பதற்குப் பின்னிற்பது ஏன்? தென்னிந்தியச் சினிமா மாயைக்குள் சிக்குண்டு எம்மை நாமே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இதனால், எம் மண்ணின் கலைகள், கலைஞர்களின் திறமைகளுக்கு நாம் முக்கியதத்துவம் வழங்குவதில்லை. எங்களுக்குத் இளைஞர்கள் அனைவரிடத்திலும் பல விதமான ஆக்க பூர்வமான சிந்தனைகள் உள்ளன.

அந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளை வழிப்படுத்தி அவர்களின் திறமைகளுக்கு உரிய களத்தை அமைத்துக் கொடுக்க சமூகப் பொறுப்புணர்வு உணர்ந்து செயற்படுவோமாக என இங்கு கலந்து கொண்டிருந்த மக்களில் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

லண்டன் நகரில் இயங்கிவரும் கொரிய பல்பொருள் அங்காடியில் உயிருடன் உள்ள நண்டுகளை பிளாஸ்டிக் பைக்குள் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் சுற்றுச்சூழல் அலுவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த அங்காடியின் வாடிக்கையாளர்கள் பலரும், நண்டுகளின் கால்களை ஒன்றாக எலாஸ்டிக்கால் கட்டி வைத்து, பாலியெஸ்ட்ரீன் பைக்குள் அடைத்து விற்பனை செய்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது அந்த நண்டுகளுக்கு ‘ஒரு கொடுமையான சாவாக இருக்கும்’ எனவும் அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

எனினும், வாடிக்கையாளர்களின் புகார்களையேற்று இந்த அங்காடியை சோதனையிட்ட சுற்றுச்சூழல் அலுவலர்கள் குழு அவர்கள் செய்வதில் எதுவும் தவறில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இயங்கிவரும், விலங்குகள் வதைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு, நண்டு தமது பாதுகாப்புக் கீழ் வரும் விலங்குகளின் கணக்கில் இல்லை என்று தெரிவித்தனர். ஆனால், உண்ணப்படும் விலங்கானாலும், இதுபோல வதைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் அது குறிப்பிட்டுள்ளது.
ஜேர்மனி நாட்டில் கொள்ளையடிக்க சென்ற வீட்டிற்குள் எதிர்பாராதவிதமாக சிக்கி கொண்ட திருடன் ஒருவன் உதவிக்கு பொலிசாரை அழைத்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜேர்மனியின் மேற்கு பகுதியில் போன் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள குடியிருப்பில் புகுந்து கொள்ளையடிக்க திருடன் ஒருவன் திட்டம் தீட்டியுள்ளான்.

தகுந்த ஏற்பாடுகளை செய்துகொண்டு அந்த திருடன் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் அந்த வீட்டின் நுழைவு கதவினை உடைக்க முயற்சி செய்துள்ளான்.

நீண்ட நேரம் முயற்சி செய்தும் கதவை உடைக்க முடியாததால், அருகில் இருந்த ஒரு சுவர் வழியாக ஏறி வீட்டிற்குள் குதித்துள்ளான்.

ஒவ்வொரு அறையாக வலம் வந்த திருடன், அங்கிருந்த விலை உயர்ந்த அப்பிள் நோட்புக்(Apple NoteBook) மற்றும் ஒரு கைப்பேசியை எடுத்துக்கொண்டான்.

பின்னர், தனது வீட்டிற்கு திரும்பிச்செல்லும் பயணத்தில் சாப்பிடுவதற்கு சிறிது நொறுக்கு தீணிகளையும் எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டான்.

இருப்பினும், திருடிய பொருட்களால் திருப்தி அடையாத அந்த திருடன், அங்கிருந்த பழைய சாமான்கள் போட்டு வைக்கும் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியுள்ளான்.

அறையில் இருந்த சில பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பிய அந்த திருடனால், அறையின் கதவினை திறக்க முடியவில்லை.

கதவு எதிர்பாராதவிதமாக வெளிப்புறமாக தாழிட்டு திருடனுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட நேரமாக போராடியும் கதவினை திறக்க முடியாததால், வேறு வழியின்றி அந்நகர பொலிசாரை உதவிக்கு அழைத்துள்ளான்.

திருடனின் அழைப்பை பெற்று வீட்டிற்குள் நுழைந்த பொலிசார், திருடனிடம் இருந்த பொருட்களை கைப்பற்றி அவனை கைது செய்துள்ளனர்.

43 வயதுடைய அந்த திருடனிடம் விசாரணை செய்ததில், அவன் ஏற்கனவே பல கொள்ளைகளில் ஈடுபட்டு பொலிசாருக்கு பரிச்சயமானவன் என தெரியவந்துள்ளது.

எனினும், சில நிபந்தனைகளை விதித்து திருடனை விடுதலை செய்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.

நிர்வாணமாக மேடை ஏறிய காமெடி நடிகரின் செயல் பெண் அமைச்சர் உள்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சிறந்த நாடகங்களுக்கான விருது வழங்கும் விழாவில் முழு நிர்வாணமாக மேடை ஏறிய காமெடி நடிகரின் செயல் பெண் அமைச்சர் உள்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நேற்று இரவு நடந்த 27வது சிறந்த நாடகங்களுக்கான விருது வழங்கும் விழாவில் அந்நாட்டின் கலாச்சார அமைச்சரான Fleur Pellerin உள்பட நூற்றுக்கணக்காணோர் கலந்துக்கொண்டனர்.

விருது வழங்கும் விழாவில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு, அந்நாட்டின் சிறந்த காமெடி நாடக கலைஞரான Sébastien Thiéry என்பருக்கு அழைப்பு வந்தது.

ஆனால், மேடை ஏறிய செபாஸ்டினை பார்த்த அமைச்சர் உள்பட அனைவரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.

இதற்கு காரணம் செபாஸ்டின் சிறிதும் தயக்கமின்றி பிறந்த மேனியுடன் மேடை ஏறியது தான்.

அரங்கத்தையே அதிர வைத்த செபாஸ்டினை பார்த்து அமைச்சரான Fleur Pellerin, தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டார்.

சிறிது நேரத்திற்கு பிறகு ஒலிபெருக்கியை வாங்கி பேச ஆரம்பித்த செபாஸ்டின், தான் நிர்வாணமாக மேடை ஏறியதற்கான காரணத்தை அமைச்சரிடம் விளக்கினார்.

பிரான்ஸ் நாட்டில் நாடக துறையில் ஆடை வடிவமைப்பாளர் உட்பட அனைவருக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

ஆனால், அந்த நாடகங்களை இயக்கும் நாடகாசிரியர்களுக்கு மட்டும் போதிய வருமானம் இல்லை.

தன்னை போல் ஆடையில்லாமல் கூட ஒரு நாடகத்தை நடத்தி விடலாம். ஆனால், நாடகாசிரியர்கள் இல்லாமல் ஒரு நாடகத்தை இயக்க முடியாது என்பதை உங்களுக்கு நிரூபிக்கவே இவ்வாறு நிர்வாணமாக வந்ததாக செபாஸ்டின் விளக்கமளித்துள்ளார்.

நாடகத்துறையில் இதுபோன்ற பாகுபாடுகள் இருக்க கூடாது. இதற்கு கலாச்சார துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பொது நிகழ்ச்சி ஒன்றில் பிரபல நகைச்சுவை கலைஞர் அமைச்சர் முன்பு நிர்வாணமாக காட்சியளித்தது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


யாழில், இருந்து கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகளின் வழித்தட அனுமதி காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.   
யாழில் இருந்து நேற்று முன்தினம் கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து வீதி வழித்தட அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தால் நடு வீதியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.   இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியொருவர்  கருத்து தெரிவிக்கையில் 
    யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக சாவகச்சேரி நகரில் காத்திருந்த போது தனியார் பேருந்து வந்தது அதில் ஏறி பயணம் செய்த வேளை சங்கத்தானை பகுதியில் வைத்து கொழும்பு செல்வதற்குரிய கட்டணமாக 650 ரூபாவினை அறவிட்டனர்.   அதனைத் தொடர்ந்து கொடிகாமம் பேருந்து நிலையம் வரையில் பயணிகள் ஏறினர் அவர்களிடமும் பணம் அறவிடப்பட்டதை தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றுகொண்டிருந்த போது  மிருசுவில் சந்தியில் கொடிகாமம் போக்குவரத்து பொலிஸார் பேருந்தை வழிமறித்தனர்.   அப்போது நடத்துனர் இறங்கிச்செல்ல, பொலிஸார் உங்களிடம் வந்து கேட்டால் நீங்கள் பேருந்தினை வாடகைக்கு அமர்த்தி சுற்றுலா செல்வதாக கூறுங்கள் என்று கூறிவிட்டு அவரும் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டார்.   நீண்ட நேரமாகியும் பேருந்து புறப்படவில்லை, அப்போது பேருந்தில் ஏறிய பொலிஸ் உத்தியோகத்தர் நீங்கள் எங்கு போகுறியள் என கேட்க சுற்றுலா செல்கிறோமென கூறினோம். அதனை தொடர்ந்து நீங்கள் யார் தலைமையில் செல்கிறீர்கள் என கேட்டார்? அதற்கு நாங்கள் யாரும் வாய்திறந்து பதில் கூறவில்லை. அப்போது சந்தேகம் கொண்ட பொலிஸார் நீங்கள் கொழும்பிற்கு தானே செல்கிறியள் என கேட்டார்.   அப்போது திடீரென சிங்களத்தில் இரு பயணிகள் பொலிஸாரை பார்த்து கேட்டார்கள். என்ன பிரச்சினை ஏன் பேருந்தை மறித்து வைத்துள்ளீர்கள் என கேட்டனர்.    அதற்கு அந்த பொலிஸார் இந்த பேருந்து பயணிகள் போக்குவரத்து வழித்தட அனுமதியின்றி சேவையில் ஈடுபட்டுகின்றது. ஆகையால் தொடந்து நீங்கள் இந்த பேருந்தில் பயணத்தை மேற்கொள்ள முடியாது. இறங்கி வேறு பேருந்தில் பயணிக்குமாறு கூறினார்.   குறித்த பேருந்தில் கிட்டத்தட்ட 45ற்கும் மேற்ப்பட்டோர் இருந்தோம் எல்லோரும் இறங்கி சாரதியை தேடினால். சாரதி அங்கு இல்லை நடத்துனரிடம் சென்று பணத்தை திரும்பித்தருமாறு கேட்ட போது. பணம் இப்போது இல்லை அந்த பணத்திற்கு எரிபொருள் நிரப்பிவிட்டோம் என தெரிவித்தார்.   இதனால் பணத்தையும் இழந்து பயணத்தையும் தொடரமுடியாமல் வீதியில் சிறுவர்கள் மற்றும் வயது  முதிர்ந்தவர்கள் என எல்லோரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தோம்.   இதேவேளை அந்தவழியாக வந்த தனியார் பேருந்துகளில் இடம் இல்லை பயணிகள் நிறைந்திருந்தார்கள். மற்றுமொரு பேருந்து நடத்துனருடம் இடமிருக்கா என கேட்ட போது. இந்த பேருந்தில் மட்டுமல்ல கொழும்பு நோக்கி செல்லும் எந்த பேருந்திலும் இடம் இல்லை என கூறினார்.    நின்றுகொண்டு பயணிப்பது என்றால் வாருங்கள் என்றார். வேறு வழியின்றி எங்களில் சிலர் அந்த பேருந்தில் ஏறி மீண்டும் 600 ரூபா கொடுத்து கொழும்பு வரையில் நின்றவாறு பயணத்தை தொடர ஏனையவர்கள் வேறு பேருந்து வரும் என காத்திருந்தனர்.- என தமக்கு நடந்த சொந்த கதை சோகக்கதையை கூறினார்.     

காரைநகா் பாதையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியாா் பஸ்சின் கொலை வெறித்தனம் நேற்று காலை காரைநகரிலிருந்து சங்கானை ஊடாக சேவையிலீடுபடும் சிற்றூர்தி மக்களை அச்சறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால் மக்கள் பீதியடைந்தனர்.

நேற்று காலை   காரைநகரிலிருந்து சங்கானை ஊடாக சேவையிலீடுபடும் சிற்றூர்தி மக்களை அச்சறுத்தும் வகையில் அதிவேகமாக சென்றதால் மக்கள் பீதியடைந்தனர் காரைநகரிலிருந்து யாழ் நோக்கிச்சென்ற np ND 8542 இலக்கமுடைய Win  என்னும் சிற்றூர்தியே இவ்வாறு அதிவேகமாகச் சென்றது.

ஆமைவேகத்தில் உருண்டுசென்று கொண்டிருந்து விட்டு பின்னர் சண்டிலிப்பாயிலுள்ள நேரக்கண்காணிப்பு நிலையத்தினை குறித்தநேரத்திற்கு அடையவேண்டும் என்பதற்காகவே இவ்வாறான கீழ்த்தரமான செயலினை குறித்த சிற்றுார்தியின் சாரதி மேற்கொண்டுள்ளார். பஸ்ஸினுள் அளவுக்கதிகமான கூட்டம் காணப்பட்டபோதிலும் பேராசையால் முக்கிய சந்திகளைகூட பாராது சாரதி செயற்பட்டுள்ளார்.

நேற்று காலை 9.00 மணியளவில் சித்தன்கேணி சந்தியைக் கடக்கும்போது அளவிற்கதிகமான கூட்டத்துடன் வந்த சிற்றுார்தி சந்தியில்கூட வேகத்தினை குறைக்காமல் கடந்ததால் அருகிலுள்ள உணவகத்திற்குள்கூட புழுதி படையாக பறந்தது.

இதனால் அங்கு நின்ற மக்களும் மாணவர்களும் பீதியடைந்ததை காணக்கூடியதாக இருந்தது.இவ்வாறான அதிவேகத்தினையும் அளவுக்கதிகமாக பயணிகளை ஆடு மாடுகள் போல் அடைப்பதையும் கட்டுப்படுத்துவதற்கு சங்கங்களால் ஊழியர்கள் நியமிக்கப்பட்டபோதும் அவர்களும் இதற்கு உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை சய்டிலிப்பாய் நேரக்கண்காணிப்பு நிலையம் ஊடாக யாழ்நகர் நோக்கி செல்லும் சிற்றுார்திகள் நிலையத்தில் நேரம் பதிவுசெய்தபின் சிறிதுதுாரம் சென்று அருகிலுள்ள மதவிற்கு அண்மையாக 5 நிமிடங்களுக்கு மேல் தரிந்து நின்றுதான் தமது பயணத்தினை மேற்கொள்கின்றது. பின்னர் ஆமைவேகத்தில் ஊரந்து மானிப்பாய் கழிந்ததும் மதங்கொண்ட யானைபோலை ஓடி ஆனைக்கோடடையிலுள்ள நேரக்கணிப்பு நிலையத்தை ஒருசில செக்கண்களுக்கு முன்பதாக அடைந்து தாங்கள் “மொக்குச்“ சாரதிகள் என்பதை நேரக்கணிப்பாளர்களுக்கு நிரூபிக்கிறார்கள்.

இதனால் பயணிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள். இச்சம்மவங்கள் இவர்களைக் கண்காணிக்கும் நேரக்கண்காணிப்பாளர்கள், சிற்றுார்திகளை பரிசோதிக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் தெரிந்தும்கூட அவர்களின் உழைப்பிற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள் இல்லை. பொதுமக்களை மோதி கொலைசெய்துவிட்டும் இலகுவாக இவர்கள் தப்பிவிடுகிறார்கள். எப்போது இவர்கள் திருந்துவார்கள்?

சவ அடக்கத்துக்கான ஜெபத்தின் போது 3 வயது சிறுமி, தலையை அசைத்து, கண் விழித்து, உயிருடன் வந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பயபாஸ் பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமி கடுமையான காய்ச்சலுக்குள்ளானாள். அதே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் கடந்த வெள்ளிக்கிழமை சிக்கிச்சைக்க்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை 9 மணியளவில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த சிறுமியின் பிரேதத்தை கண்ணீருடன் வீட்டுக்கு எடுத்து வந்த பெற்றோர், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். அருகாமையில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் இறந்த சிறுமியின் ஆன்மா சாந்தியடைய ஜெபக் கூட்டம் நடந்த போது, சவ அடக்கம் செய்யும் ஊழியர் ஒருவர், சவப்பெட்டியின் மூடியை திறந்தார்.

அப்போது, அந்த சிறுமியின் தலை லேசாக திரும்பியது. மெதுவாக கண் விழித்து, மீண்டும் கண்களை மூடிக் கொண்டாள். இந்த அதிசயத்தை கண்டு நெகிழ்ந்துப் போன அவர், உடனடியாக சிறுமியின் தந்தையை அழைத்து இந்த நல்ல சேதியை தெரிவித்தார்.

உடனடியாக, அன்பு மகளை சவப்பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, மார்போடு அணைத்தபடி ஆனந்தக் கண்ணீர் வடித்த தந்தை, அருகாமையில் உள்ள வேறொரு நவீன ஆஸ்பத்திரியில் அவளை அனுமதித்தார்.

தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுமி, காய்ச்சலின் வீர்யத்தால் ‘கோமாட்டோஸ்’ என்னும் மயக்க நிலைக்கு சென்று விட்டாதாகவும், இதை புரிந்துக் கொள்ளாத டாக்டர் அவள் இறந்துப் போய் விட்டதாக தெரிவித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மன்மோகன்சிங்குக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக அரை மணி நேரத்துக்கு ஒரு 19 வயது வாலிபர் 'பதவி வகித்தார்' என்றால் யாரும் நம்ப முடியாது.

ஏனெனில் அப்படி ஒன்று நடக்க தேவையுமில்லை, அதுபோன்ற எந்த செய்தியும் வரவுமில்லையே என்று நினைக்க கூடும். ஆனால் பிபிசி செய்தி நிறுவனம் அப்படித்தான் இந்த சம்பவத்தை வர்ணிக்கிறது.

'பிரதமர்' பெயர் கைசர் அலி அந்த அதிருஷ்டசாலி வாலிபர் பெயர் கைசர் அலி. உத்தரபிரதேச மாநிலம் லக்னொவை சேர்ந்த இவர்தான் அரை மணி நேர 'பிரதமர்'. பிரதமர் பதவியிலிருந்தபோது மன்மோகன்சிங் @PMOIndia என்ற பெயரில் டுவிட்டர் அக்கவுண்ட் வைத்திருந்தார். பிரதமர் அலுவலக செய்திகள் அதன் வாயிலாக வெளியிடப்பட்டன. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்க தயாரானதும், பழைய அக்கவுண்டிலிருந்த பாலோவர்களை எல்லாம் வேறு அக்கவுண்டுக்கு மாற்றிவிட்டனர்.

டுவிட்டர் செய்த மாயம் பெயர் மாற்றத்துக்கு பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவே பழையபடி @PMOIndia அக்கவுண்ட், புதிய அரசின் பிரதமருக்கு வழங்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் @PMOIndia முடக்கப்பட்டது. அப்போதுதான் ஒரு விபரீதம் நடந்தது. கைசர் அலி @PMOIndia என்ற பெயரில் எதேச்சையாக அக்கவுண்ட் தொடங்கியுள்ளார். டுவிட்டரும், அதுபோல யாரும் தற்போது அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை என்று கூறி கைசர் அலிக்கு அனுமதி கொடுத்துவிட்டது.

அறியாப்பிள்ளை தெரியாமல் செய்தார் இதன்பிறகு அரை மணி நேரத்தில் கைசர் அலியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. அப்போதுதான், நாட்டின் பிரமதருக்கான டுவிட்டர் அக்கவுண்ட்டை தான் பயன்படுத்தியது கைசர் அலிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது: டுவிட்டரில் நான் 2011ம் ஆண்டில் சேர்ந்தேன். @Iamqaiserali என்ற பெயரில் அக்கவுண்ட் ஆரம்பித்து நான் டுவிட் செய்து வருகிறேன்.

நானே தேர்ந்தெடுத்தேன் தேர்தல் ஜுரம் நாடெங்கும் பரவியுள்ளதால், தேர்தல் சார்ந்த ஒரு யூசர் நேம் வைத்துக்கொள்ள எனக்கும் ஆசை வந்தது. மே 20ம்தேதி, பெயர் மாற்றவேலையை செய்தேன். பிரதமர் பதவி குறித்து மக்களிடையே பரபரப்பாக பேச்சு எழுந்ததால் அதையே யூசர் நேமாக வைக்கலாம் என PMOIndia என்று பெயர் கொடுத்து பார்த்தேன். ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த பெயரை பயன்படுத்த டுவிட்டர் அனுமதித்தது.

பிரதமரே நாட்டு நிலவரம் எப்படி..? அந்த அக்கவுண்ட்டை ஆரம்பித்ததும், நாடு முழுவதிலுமிருந்து பல மக்கள், பிரதமர் என்று நினைத்து எனக்கு டுவிட் செய்தனர். என்னிடம் தேர்தல் தொடர்பாக கேள்விகளும் கேட்டனர். அப்போதுதான் எனக்கு லேசாக நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது. தெரியாத்தனமாக, பெரிய தவறை செய்துவிட்டதை உணர்ந்த நான், உடனடியாக மன்னிப்பு கேட்டு அதிலேயே டுவிட்டும் செய்தேன். அரை மணி நேரம்தான் இருக்கும், அதற்குள் அந்த கணக்கு முடக்கப்பட்டது.

மன்னித்துக்கொள்ளுங்கள் இதுபற்றி தெரிந்ததும் எனது பெற்றோர் என்னை திட்டினார்கள். ஆனால் நண்பர்கள் என்னை பிரதமராகிய யோகக்காரன் என்று பாராட்டினார்கள். எனக்கோ செய்த தப்புக்காக, சிறையில் போட்டுவிடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டது. நான் தெரிந்து அந்த தவறை செய்யவில்லை. டுவிட்டர் அந்த பெயரை எடுத்துக்கொள்ளுமாறு கூறியதால் நம்பி அக்கவுண்ட் ஆரம்பித்தேன். இதற்காக நாட்டு மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த செய்தியைத்தான் பிபிசி இந்தியாவின் அரை மணி நேர பிரதமர் என வர்ணித்துள்ளது.


-------------------------------------------

உயிருடன் இருக்கும் போதே சமாதி கட்ட, விவசாயி ஒருவர் அடிக்கல் நாட்டினார். அதற்காக அழைப்பிதழ் அச்சடித்து விழா நடத்தினார்.

களக்காடு அருகே நடந்த இந்த வினோத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

களக்காடு விவசாயி

ஒரு சிலர் தனது மரணத்துக்கு முன்பே சமாதி கட்டிவைத்து இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால் சமாதி கட்டுவதற்காக அழைப்பிதழ் அச்சடித்து விழா நடத்தியதாக யாரும் அறிந்து இருக்க வாய்ப்பு குறைவு. அப்படி அறியாதவர்களுக்கு இதோ ஒரு வாய்ப்பு. கீழே படியுங்கள்.

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தவசிக்கனி (54). விவசாயி. இவர் ஒரு அழைப்பிதழ் அச்சடித்து உறவினர், ஊரார்களுக்கு வீடு வீடாக சென்று கொடுத்தார்.

அந்த அழைப்பிதழ் ஒரு புதிய வீடு கட்டி கிரகபிரவேசம் நடத்துவதற்கு அச்சடிப்பது போன்று இருந்தது.

இறப்பை கொண்டாடு

அந்த அழைப்பிதழில், பிறப்பை கொண்டாடுவது போல்... இறப்பையும் கொண்டாடு, எனது சமாதிக்கு அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ் என்று தலைப்பிட்டுள்ளார்.

மேலும் அதில், அன்புடையீர், நிகழும் மங்களகரமான 1189–ம் ஆண்டு மாசி மாதம் 22–ம் நாள் (6–3–2014) வியாழக்கிழமை பரணி நட்சத்திரத்தில் அன்று காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் ராமகிருஷ்ணபுரம் தவசிநாடார் பேரனும், ராசையாநாடார் மகனுமாகிய நான் கட்டவிருக்கும் தவசி சமாதிக்கு அடிக்கல் நாட்டு விழா எனது தோட்டத்தில் நடைபெற இருக்கிறது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து விழாவினை சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம். அன்புடன் ரா.தவசி என்ற தலப்பா தவசி, ராமகிருஷ்ணாபுரம் என்று அச்சிட்டு இருக்கிறார்.

ஏழை எளியவர்களுக்கு அன்னதர்மம், வேட்டி சேலை வழங்கப்படும் என்றும் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

அடிக்கல் நாட்டு விழா

அதன்படி இன்று காலை 10 மணிக்கு அகலிகை சாஸ்தா கோவில் ரோட்டில் உள்ள தவசிக்கனிக்கு சொந்தமான தோட்டத்தில் சமாதிக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

ஒரு கட்டிடம் கட்டுவதற்கு எப்படி அடிக்கல் நாட்டப்படுமோ, அதேபோல் தவசிக்கனியின் தாய், தந்தையை அடக்கம் செய்த இடத்துக்கு அருகில் பூமி பூஜை நடத்தப்பட்டது. விழாவுக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இலவச அரிசி, வேட்டி– சேலை உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் தவசிக்கனி வழங்கினார்.

விழாவுக்கு வந்த மது பிரியர்களுக்கு மதுவுடன் சாப்பாடும் வழங்கப்பட்டது. இதைக்கண்டு விழாவுக்கு வந்த அனைவரும் வியப்படைந்தனர்.

சாவும் முன் சமாதி ஏன்?

தனது சாவுக்கு முன்பே சமாதி கட்டியது ஏன் என்பது குறித்து தவசிக்கனி கூறியதாவது:–

எனக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகனுக்கு திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர். என்னுடைய மனைவி, மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் அவர்களை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். எனக்கும், அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் போய் விட்டது.

நான் இறந்த பிறகு, எனது உடல் புதைக்கப்படுமா? அனாதையாக எங்காவது வீசப்படுமா? என்பது தெரியவில்லை. எனக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது. அதனால் நான் உயிருடன் இருக்கும் போதே, சமாதி கட்ட விரும்பினேன். அதற்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்ய தயாரானேன். அதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாசி மாதம் 22–ந் தேதி (அதாவது இன்று) எனது பிறந்த நாள் அன்று நடத்த திட்டமிட்டேன். அதன்படி அடிக்கல் நாட்டு விழா நடந்த முடிந்து விட்டது. இனி விரைவில் சமாதி கட்டும் பணி தொடங்கும்.

இவ்வாறு விவசாயி தவசிக்கனி கூறினார்.

தனது தாயின் தாடையில் கை முஷ்டியால் குத்தி அவரது பல்லொன்றை உடைத்ததை ஒப்புக்கொண்டுள்ள நபரொருவருக்கு அதே வகையில் அவரது பல்லொன்றை உடைக்க சவூதி அரேபிய நீதிமன்றமொன்று தீர்ப்பளித்தது. 
 
அத்துடன் பெயர் வெளியிடப்படாத மேற்படி நபருக்கு 5 வருட சிறைத்தண்டனையை அனுபவிக்கவும் ஒவ்வொரு 10 நாளுக்கும் ஒரு தடவை உள்ளூர் சந்தையொன்றில் வைத்து 40 கசையடி தண்டனையை நிறைவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த நபரின் தாயார் தன்னை தனது மகனிடமிருந்து காப்பாற்ற பொலிஸாருக்கு அழைப்பு விடுத்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
 
அவரது தாயார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
குறிப்பிட்ட நபர் ஸ்திரமான மனநிலையில் உள்ளவர் எனவும் அவர் சம்பவம் இடம்பெற்ற போது போதைவஸ்தையோ அற்ககோலையோ உள்ளெடுத்திருக்கவில்லையென மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
 
இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மத அடிப்படையில் உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்கு பல் எனக்கூறி தீர்ப்பை அளித்துள்ளார்.

திருமண மேடையில் தாலி கட்டிய அடுத்த சில நிமிடங்களில் மணமகனுக்கு வலிப்பு வந்ததால், மணமகள், தாலியைக் கழற்றிக் கொடுத்து விட்டுப் போய் விட்டார்.

இதனால் திருமண மண்டபே அதிர்ச்சியானது. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கும், விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராபாளையம் பகுதியைச் சேர்ந்த ராணி என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. இவர்கள் இருவரின் திருமணத்மையும் கருமலை முருகன் கோவில் என்ற கோவிலில் நடத்த தீர்மானித்து அங்கு நேற்று காலை திருமணமும் நல்லபடியாக முடிந்தது.

முகூர்த்த நேரத்தில், தாலி கட்ட மணமகன் தாலியை எடுத்து மணமகள் கழுத்தை நெருங்கியபோது அவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. இதனால் அவருக்கு வாயில் நுரையும், ரத்தமும் வெளி வந்தது. இருந்தும் அருகில் இருந்த மணமகனின் உறவினர்கள் சேர்ந்து கையைப் பிடித்து தாலி கட்ட உதவியுள்ளனர். மாப்பிள்ளையும் தாலி கட்டி முடித்தார். ஆனால் மணமகள் குடும்பத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

மணமகனுக்கு வலிப்பு நோய் உள்ளதை சொல்லாமல் மறைத்து விட்டதாக சண்டைக்கு வந்தனர். மேலும், மணமகள் கழுத்தில் கட்டப்பட்ட தாலியையும் அவர்களே அவிழ்த்து அதை மணமகன் வீட்டாரிடம் கொடுத்து விட்டனர். இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் மூண்டது. போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மணமகள் வீட்டார் தங்களது முடிவில் உறுதியாக இருந்து விட்டதால் மணமகன் வீட்டார் வாங்கிய சீர்வரிசைகளை அப்டியே திருப்பிக் கொடுத்தனர். மணமகள் வீட்டார் பின்னர் கிளம்பிச் சென்று விட்டனர்.

இந்தியாவில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமணவிழாவில மணமகனுக்கு தாலிக்கட்டும் ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

நீடாமங்கலம் வெண்ணாறு லைன்கரை காட்டுநாயக்கன் தெருவைச் சேர்ந்த துப்புரவுத் தொழி லாளிகளான சோமு-கல்யாணி தம்பதியின் மகள் வசந்திக்கும், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரயில்வே சாலைரோடு பகுதியைச் சேர்ந்த பழனிநாயக்கன் - திலகவதி தம்பதியின் மகன் பி. சதீஸ் என்பவருக்கும் நீடாமங்கலத்தில் திருமணம் நடைபெற்றது.

முதலில் மணமக்கள் இருவரும் மாலையை மாற்றி அணிந்து கொண்டனர். அடுத்து மணமக ன் சதீஸ், மணமகள் வசந்திக் கலுத்தில் தாலிக் கட்டினார். இதையடுத்து சில விநாடிகளிலே யே மணமகள் வசந்தி, மணமகன் சதீஷ் கழுத்தில் தாலிக் கட்டினார்.

இச்சம்பவம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இப்படியும் நடக்கிறது!   ஊர்ப்பறவை கூறுகிறது.  7

அகால மரணமடைந்த இளம் யுவதியின் உடலைப் பார்வையிட்ட அவரது பேர்த்தியார் மயங்கிவிழுந்து பின்னர் மரணமானார். இந்தச் சம்பவம் சங்குவேலி தெற்கு மானிப்பாயில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ரி.திலகவதி (வயது68) என்பவரே மரணமானவர் ஆவார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருகோணமலைக்குச் சென்று திருமணம் முடித்து வாழ்ந்து வந்த பிரஸ்தாப யுவதி, குடும்பத் தகராறு காரணமாக நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்டார் எனக் கூறப்பட்டது.  இந்த நிலையில், குறித்த யுவதியின் உடல் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் மானிப்பாயில் உள்ள அவரது வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. அப்போதே அவரது பூதவுடலைப் பார்த்த பேர்த்தியார் மயங்கி வீழ்ந்தார். அவரை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பபட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டார்.


-- 

இப்படியும் நடக்கிறது!   ஊர்ப்பறவை கூறுகிறது.  6

இப்படியும் நடக்கிறது!   ஊர்ப்பறவை கூறுகிறது.

இப்படி நடக்கிறது  3

இப்படியும் நடக்கிறது!   ஊர்ப்பறவை கூறுகிறது.

கேள்விச் செவியன்  ஊரைக் கெடுத்தான்.

பண்ணாகம் இணையத்தில் சுவீஸ் வாழும் ஒரு  கவிஞன் எழுதிய காணவில்லை என்ற தலைப்பில் கவிதை ஒன்றிக்கான விளம்பரம் பிரசுரிக்கப்பட்டிருந்தது அதில் கவிஞரின் பெயரும் சேர்த்து விளம்பரப்படுத்தி  காணவில்லை என்கிறார் கவிஞா (பெயர்) எனக்குறிப்பிட்டிருந்தது. இதை தவறாக வாசித்து அர்தப்படுத்திய ஒருவர் அந்தக் கவிஞனையே காணவில்லை என ஊரில் உள்ள உறவினருக்கு அறிவித்திருக்கிறார். கவிஞரின் தங்கையோ இணையத்தை பார்க்கும் சந்தப்பம் இல்லாததால் உடனடியாக சுவீஸ்க்கு அழுதழுது தொலைபேசி எடுத்திருக்கிறார்.அப்போது அந்தக்விஞன்தான் தங்கையடன் கதைத்திருக்கிறார்- என்ன உங்களைக் காணவில்லலை என இங்கு சிலர் கதைக்கிறார்கள் என்றாராம் கவிஞருக்கு சிரிப்பே வந்துவிட்டதாம். ஏம்மில் ஒரு சிலரின் அவசர வாசிப்பு எவ்வளவு பிரச்சனையை கிளப்பி விடுகிறது. இதைத்தான் கேள்விச்செவியன் ஊரைக் கெடுத்தான் என்பதோ என கவிஞர் எண்ணிரராம். இதனால் அந்தகவிஞரின் காணவில்லை கவிதையை வழமையை விட பெருந் தொகையான வாசகர்கள் வாசித்ததை இணையத்தில் அறியக்கூடியதாக இருந்ததென இணைய ஆசிரியர் தெரிவித்தார். ஒரு கவிதை உயர்த்தியது அந்த விளம்பரம்.

..................................................................................................................................................................................................... 

இப்படி நடக்கிறது  2