WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 12

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் பட்டப்போட்டித் திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் இந்நிகழ்வு இன்று நடைபெற்றது.

வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தினால் ”பட்டப்போட்டித் திருவிழா 2018” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பட்டப்போட்டித் திருவிழாவைக் கண்டுகளிப்பதற்காக வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

போட்டியில் பல்வேறு வடிவங்களைக் கொண்ட 68 வகையான விசித்திர பட்டங்கள் பறக்க விடப்பட்டன.

வானத்தில் பட்டங்கள் காட்டிய வர்ணஜாலங்கள் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா, இலங்கைக்கு 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினைத் தந்து உதவி செய்துள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கை புதுடில்லியில் இந்திய ஏற்றுமதி வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் றஸ்குன்கா மற்றும் இலங்கை நிதியமைச்சின் திறைசேரியின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அரச உயர் அதிகாரிகளுக்கு மத்தியில் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த நிதியுதவியின் மூலம், காங்கேசன்துறை துறைமுகம் முழு வசதிகளை கொண்ட வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக இந்த துறைமுகம் பிராந்தியத்தின் முக்கிய கடல் எல்லையின் கேந்திர நிலையமாக திகழும் எனவும், இதனை முன்னிட்டு வடக்கில் பாரிய வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்திய அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் என்று இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய ஊடக நிறுவனங்கள் டிடிவி தினகரனின் கட்டுப்பாட்டில் இயங்குவதால், அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் தங்களுக்கென ஒரு நாளிதழும், தொலைக்காட்சியும் தொடங்கவுள்ளனர்.

ஜனவரி 8ம்தேதி தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளதால், அந்த கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களின் பங்கேற்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்று விவரிக்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் விளக்கக்கூட்டம் இன்று (ஜனவரி3) நடத்தப்பட்டது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 104 பேர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கட்சிக்காக நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது என அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் பொன்னையன் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார-

ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்ஜிஆர் நாளிதழின் நிலை என்ன என்றும் புதிதாக ஊடகம் ஒன்றை தொடங்கவேண்டிய தேவை குறித்தும் பிபிசிதமிழிடம் பேசிய பொன்னையன், ''எங்கள் கட்சியின் கருத்துகளை கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் கொண்டு சேர்க்க ஊடகம் தேவைப்படுகிறது.

எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கென ஊடகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். திமுகவில் கூட பிரிவுகள் உள்ளன. சன் தொலைக்காட்சி மற்றும் கலைஞர் டிவியில் அழகிரி காட்டப்படுவதே இல்லை. அதுபோல ஏற்கனவே ஜெயாடிவி மற்றும் நாளிதழ் இருந்தாலும், நாங்களும் தனியாக ஊடக நிறுவனத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம்,'' என்றார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக மாண்புகளை காப்பாற்றும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டது என்றார்.

அடுத்து வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தில், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனின் பங்கேற்பு, அதிமுகவிற்கு சிரமத்தை ஏற்படுத்துமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது ''நாம் ஒருவர் நமக்கு ஒருவர்'' என்ற அளவில்தான் டிடிவி தினகரனின் பங்கேற்பு இருக்கும். அவரால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் கூறினார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் குறைசொல்லும் அளவுக்கு நடந்துகொள்ளக்கூடாது என்றும் தேவையற்ற சர்ச்சை பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது என பெயர் சொல்ல விரும்பாத அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும், அடுத்த வாரம் தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் தினமும் கலந்துகொள்ளவேண்டும் என்றும் தங்களது தொகுதியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து தெளிவாக தெரிந்துவைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்.மாணவனை வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே சந்தித்துள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றிருந்தார்.இந்த நிலையில் குறித்த மாணவனின் வீட்டிற்கு இன்று காலை சென்ற வடக்கு மாகாண ஆளுநர் தனது வாழ்த்துக்கைளை தெரிவித்தார்.அத்துடன் மாணவனின் பெற்றோரையும் சந்தித்துக் கலந்துரையாடினார்.வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையையும் மாணவனுக்கு அன்பளிப்புச் செய்தார்.புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் 3A பெறுபேற்றை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலினை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ்.இராணுவ படைத் தலமையகம் முன்னெடுத்துள்ளது.

குறித்த நாக விகாரையின் விகாரதிபதி மேகாஜதுரே ஜானரத்ன கடந்த 19ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது உடலினை இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்வதற்கு யாழ்.இராணுவ படைத் தலைமையகம் ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு பின்னால் பொதுவெளியில் இவரது உடலினை தகனம் செய்வதற்கான ஏற்பாடுகளை யாழ். இராணுவ படைத் தலைமையகம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்காக குறித்த பகுதியில் தகனம் செய்வதற்கான கோபுரங்கள் அமைக்கப்பட்டும், அஞ்சலிகள் நடாத்துவதற்கான கொட்டகைகள் அமைக்கப்படும் அப் பகுதி முழுவதும் இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டில் மேற்படி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் குறித்த விகாராதிபதியின் தகன அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ள இலங்கை இராணுவத் தளபதி மகேஸ்சேனநாயக்கவும் அங்கு சென்றுள்ளார்.

இதேவேளை குறித்த பகுதியில் தகனம் செய்யக் கூடாது என பொதுமகன் ஒருவரால் யாழ்.நீதிமன்றில் வழக்குத் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

மேலும் தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையானது குறித்த பகுதியில் தமிழர் ஆராய்ச்சி மாநாட்டின் நினைவுத்தூபி, முனீஸ்வரர் ஆலயம், ஆகிய உள்ள நிலையில் அங்கு தகனம் செய்யக் கூடாதென உத்தரவிட வேண்டும் எனக் கூறி வடமாகாண முதலமைச்சர், யாழ்.மாநகர சபை ஆணையாளர் மற்றும் தொல்பொருளியல் திணைக்கள யாழ்.ஆணையாளர் ஆகியோருக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளது.


தற்போது ஐயப்ப விரதம் ஐயப்ப அடியார்களால் அனுட்டிக்கப்படுகிறது. இதற்காக விரதத்தை அனுஸ்டிப்பவர்கள் கறுப்பு நிறமான ஆடைகளை அணிவதுடன் கறுப்பு நிறமான சால்வையை கழுத்தில் சுற்றி கால்களில் செருப்பின்றி இந்த விரதத்தை அனுஸ்டிக்கின்றனர்.

கடந்த வாரம் இவ்வாறு ஐயப்ப அடியார் ஒருவர் நீதிமன்றுக்கு இந்த கோலத்தில் வந்தபோது அவரை கடுமையாக எச்சரித்த நீதிவான் சி.சதீஸ்தரன் அவரை நீதிமன்றை விட்டு வெளியேறுமாறு பணித்தார். அத்துடன் நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தரை இவ்வாறான நபர்களை நீதிமன்றுக்குள் அனுமதிக்க வேண்டாம் எனவும் கட்டளையிட்டார்.

இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் நீதிமன்றுக்குள் அனுமதிக்கப் படவில்லை.

இதே வேளை யாழில் உள்ள ஐயப்ப பக்தர்களில் பெருமளவானோர் சமூகவிரோதிகளாகவும் நீதிமன்றத்தில் தண்டனைக்கு உட்பட்டவர்களாகவும் காணப்படுவதாகவும் மீதமுள்ள ஐயப்ப பக்தர்கள் மிகுந்த அப்பாவிகளான பணக்காரர்களாகக் காணப்படுவதாகவும் ஐயப்ப பக்தர்கள் தொடர்பாக அனுபவமிக்க ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐயப்ப விரதம் அனுஸ்டிக்கும் நாட்களில் யாழில் பெருமளவான குற்றச் செயல்கள் குறைந்து காணப்படுவது வழமையாகும்.