
வலிகாமம் மேற்கு பிரதேச சபையினால் நிர்மானிக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் சந்தை தொகுதிக்கு பால் காய்ச்சும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கடை மற்றும் சந்தை தொகுதிகள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை குத்தகை மூலம் பாவனைக்கு வழங்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவால் இன்று சங்கானை மண்டிகைக்குளம் வைபவ ரீதியாகத் திறக்கப்பட்டது.
இன்று காலை சங்கானை சென்ற முன்னாள் அரச தலைவர் நினைவுக் கல்லைத் திரைநீக்கம் செய்து குளத்தை வைபவரீதியாகத் திறந்தார்.
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் நேற்று முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி. தமக்கு நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் என்னதான் இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது.
பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண் டும். சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி. ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.
என்னவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்பு கொள்கைகளை கைவிட்டு சுயநலன்கள் தான் எமக்கு முக் கியம் என்ற கருத்து ஏற்படும் என்பது தான் என்னுடைய அவதானிப்பாக உள்ளது.
யாழ்.மாநகர சபையின் ஊழலை விசாரணை செய்ய வேண்டும். அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் கடந்த காலங்களில் யாழ்.மாநகர சபையை ஆட்சி செய்தபோது மேற்கொண்ட ஊழல் தொடர்பில் தற்போது ஆட்சிப்பீடம் ஏறியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் உள்ள உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
இது தொடர்பில் வடக்கு மாகாண சபையும் தனது பங்கிற்கு விசாரணைகளை மேற்கொள்ளும். இவ்விடயத்தை விசாரணை செய்ய ஏற்கனவே வடக்கு மாகாண சபையினால் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அக் குழு நடத்திய விசாரணைகளில் ஈ.பி.டி.பி.யினரின் ஆட்சியில் யாழ்.மாநகர சபை நிர்வாகத்தில் ஊழல்கள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
எனவே தற்போது ஆட்சியில் உள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஈ.பி.டி.பி. கடந்த காலத்தில் செய்த ஊழல் தொடர் பில் முறையான விசாரணை செய்ய வேண் டும். அவர்கள் செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாண விஜயத்தைக் கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் கல்லூரி பழையமாணவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்பக்கூட திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி இன்று யாழ். சென்ற நிலையிலேயே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஜனாதிபதியின் யாழ் விஜயத்தை எதிர்த்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தலைமையில் பத்திரிசியார் கல்லூரி சந்தியில் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இறுதி யுத்தத்தின் போது அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே என கோஷங்களை எழுப்பியவாறு அவர்களது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் பத்திரிசியார் சந்தியிலிருந்து புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போதிலும் அவர்களை காவற்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்தத் திறப்பு விழா நிகழ்வில் ஜனாதிபதியுடன் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
புனித பத்திரிசிரியார் கல்லூரி முன்னாள் அதிபர் அருட்தந்தை பிரான்ஸிஸ் தலைமையில் இராணுவத்தினர் இடம் சரணடைந்தோர் தொடர்பில் எந்த தகவலும் இல்லாத நிலையில், அருட்தந்தை அதிபராக இருந்த கால பகுதியில் புனித பத்திரிசிரியார் கல்லூரியில் கல்விகற்ற மாணவர்களும் அருட்தந்தை தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் போது பொலிஸார் போராட்டகார்கள் மூவரை ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்து அருட்தந்தை சக்திவேல் தலைமையில் மூவரை அழைத்து சென்றிருந்தனர்.
அது தொடர்பில் அருட்தந்தை தெரிவிக்கையில்,
ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்துதருவதாக வாக்குறுதி அளித்து பொலிஸார் எங்களில் மூவரை அழைத்து சென்றனர்.
ஜனாதிபதிக்கு நாங்கள் சந்திக்க வந்துள்ளதாக பொலிஸார் எழுத்து மூலமாக ஜனாதிபதிக்கு அறிவித்து இருந்தனர்.
ஆனால் நிகழ்வின் இறுதி வரையில் எங்களை சந்திக்கவில்லை. இங்கே நாங்கள் காணாமல் போனோர் விடயமாக போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
அருட்தந்தை ஜிம்ரோன், அருட்தந்தை பிரான்சீஸ் இவர் இந்த கல்லூரியின் அதிபராக இருந்துள்ளார்.
ஆனால் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரோ, எதிர்க்கட்சித் தலைவரோ, கல்லூரி நிர்வாகமோ ஜனாதிபதி முன்னிலையில் அது தொடர்பில் பேசவில்லை.
ஜனாதிபதியிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என அரசியல் தலைவர்கள் கல்லூரி நிர்வாகம் கேட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அது தொடர்பில் எவரும் பேசவில்லை. இந்த கூட்டத்தின் இறுதிவரையில் நாங்கள் காத்திருந்தோம் ஜனாதிபதி எங்களை சந்திப்பார் என, ஆனால் இறுதிவரை எங்களை அவர் அழைத்து சந்திக்கவில்லை.
ஜனாதிபதியின் இந்த செயற்பாடு எங்களை அவமானப்படுத்தியதாகவே கருதுகின்றோம். எங்கள் மூவரை அழைத்து அவமானப்படுத்தியதாக நினைக்கவில்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமானப்படுத்தியதகவே கருதுகின்றோம் என தெரிவித்தார்.
k here to edit textஇந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அடையாள அட்டை
வழங்கும் நடவடிக்கையானது அடுத்த மாதத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அடையாள அட்டையைப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஆட்பதிவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டுமெனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றுநிருபங்கள் பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய, 15 வயது பூர்த்தியடைந்த மாணவர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் பாடசாலை மாணவர்களுக்காக 350,000 புதிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட எதிர்பார்த்துளள்தாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனையும், சிவகரனையும் தமிழ் அரசுக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்று தற்போது, வடமாகாணசபையின் அமைச்சராக பதவி வகிக்கும், அனந்தி சசிதரனும், தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி தலைவராகப் பதவி வகித்த சிவகரனையுமே, கட்சியில இருந்து நீக்க தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்துள்ளது.
2015 அதிபர் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி எடுத்த முடிவுக்கு மாறாகச் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், இவர்கள் இருவரும். ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதன்போது, சிவகரனை உடனடியாக நீக்கலாம் என்றும், அனந்தியை நீக்கும் முடிவை பின்னர் எடுக்கலாம் என்றும் ஒரு சாரார் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும், ஒரே காரணத்துக்கான இடைநிறுத்தப்பட்ட இருவர் மீதும் ஒரு நடவடிக்கையே எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதை அடுத்து, இவர்கள இருவரையும் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது.
இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
பள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2012ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும்.
புரோவார்ட் கவுண்டியின் ஷெரீப்பான ஸ்காட் இஸ்ரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மூவர் இறந்ததாகவும் குறிப்பிட்டார்.
பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்படும் மாணவர்கள்இதன்பின்னர் தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர்.
மேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.
''இது ஒரு பேரழிவு சம்பவம். இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று அவர் பின்னர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூஸ் தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கீதம் பாடப்பட்ட போது அங்கிருந்த இந்து, முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் போது பௌத்த பிக்கு ஒருவர் மட்டும் அதற்கு மரியாதை கொடுக்காமல், அவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.
இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.
இதை முன்னிட்டு பல இடங்களிலும், பல மாவட்டங்களிலும் குறித்த நிகழ்வுகள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பௌத்த பிக்கு ஒருவரின் செயற்பாடு அங்கிருந்தவர்களை சற்று முகஞ்சுழிக்க வைத்துள்ளது.
குறித்த நிகழ்வில் இலங்கையின் தேசிய கீதம் பாடப்பட்ட போது அங்கிருந்த இந்து, முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தும் போது பௌத்த பிக்கு ஒருவர் மட்டும் அதற்கு மரியாதை கொடுக்காமல், அவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருக்கின்றார்.
இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவிவருவதுடன், பலரும் அதற்கு விசனம் தெரிவித்து கருத்துக்களை பதிவேற்றியுள்ளனர்.
தேசிய கீதம் என்பது ஒரு நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மதிப்பளிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனுடைய கடமையாகும்.
ஆனால் இந்த நாட்டில் பௌத்த பிக்குகளுக்கு மட்டும் தனிச்சட்டம் உள்ளதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையில் உள்ள அனைத்து பௌத்த பிக்குகளும் இலங்கையின் தேசிய கீதம் பாடப்படும் சந்தர்ப்பங்களில் மரியாதை செலுத்துவது கிடையாது என்பதும் இங்கு குறிப்பிடவேண்டிய ஒன்று.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் ஒருதொகுதி வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களுக்கு விநியோகிக்கவேண்டிய ஒருதொகுதி வாக்குச்சீட்டுக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது…,
குறித்த பகுதியில் தபால் ஊழியர் இல்லாத காரணத்தால் வழக்கமாக கிராம வாசி ஒருவரிடம் கடிதங்களை வழங்கியே மக்களுக்கு விநியோகிப்பதனை வழக்கமாக கொண்டிருந்த தபால் ஊழியரும் குறித்த பகுதிக்கான வாக்காளர் அட்டைகளையும் கிராம வாசி ஒருவரிடம் கொடுத்து மக்களுக்கு வழங்குமாறு கூறியுள்ளார்
இவ்வாறு வழங்கப்பட்ட 288 வாக்காளர் அட்டைகளும் ஒரு வீட்டில் இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் பொலிசார் தேர்தல் அலுவலக அதிகாரிகள் ஆகியோர் குறித்த பகுதிக்கு சென்று வாக்குச்சீட்டுக்களை மீட்டுள்ளதுடம் தபால் ஊழியர் மற்றும் குறித்த கிராம வாசியையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாகாணத்தில் தொடர்ந்தும் நிலை கொண்டிப்பதற்காக ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஈடுபடுத்தப்படுவதன் ஊடாக, இராணுவத்தின் பிரசன்னத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக் வழங்கிய விசேட செவ்வியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த காலங்களில் தமிழ் மக்களை கொடூரமாக கொன்று குவித்தும், கற்பழித்தும் மற்றும் சித்திரவதை செய்தும் அரக்கர்களாக மக்கள் மனதில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் தற்போது, மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் புதிய அவதாரத்தை எடுத்துள்ளதாகவும், இதனால் அவர்கள் நிரந்தரமாக வடமாகாணத்தில் நிலை கொண்டிருப்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் தற்போது, புதிய யோசனைகளுடன் களமிறங்கியுள்ளனர். அதாவது மக்களுக்கு வீடுகள் மற்றும் கழிவறைகள் அமைப்பதற்கு உதவிகளை செய்து கொடுப்பதன் மூலம் நன் மதிப்பை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் இராணுவத்தினர் வெகு சாமர்த்தியமாக காய்களை நகர்த்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. எனினும் தமிழ் மக்களுக்குரிய தேவைகள் முற்று முழுதாக நிறைவேற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 60 ஆயிரம் ஏக்கர்கள் காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய வடமாகாண முதலமைச்சர், இவ்வாறு கையகப்படுத்தியிருக்கும் காணிகளிலிருந்து மரங்கள் வெட்டப்படுவதை தாம் அறிந்து கொண்டுள்ளதாகவும் எனினும் அது யார் தலைமையில் நடைபெறுகிறது என தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினைகள், காணாமல் போனோர் பிரச்சினை மற்றும் அரசியல் கைதிகள் பிரச்சினைகள் போன்றவை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், வடமாகாணத்திற்கு போதியளவு நிதி ஒதக்கப்படவில்லை எனவும், கணிசமான பொறுப்புக்களை வடமாகாண சபை நிறைவேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்படாதமை குறித்து விசனத்தையும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு மட்பாண்டங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் யாழ். குடா நாட்டு மக்களும் தைத்திருநாளுக்காக சிறப்பாக ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால் யாழ். குடா நாட்டில் பானை, கரும்பு, அகப்பை, பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் வியாபாரம் உச்சம் கண்டுள்ளது.
அத்துடன், தைப்பொங்கள் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணம் களைகட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்ணாகம் சபா.குகதாசன் வடமாகாண சபை உறுப்பினராகிறார்.
கடந்ததேர்தலில் போட்டியிட்ட இவர் தகுதிகாண் நிலைப் பட்டியலின்படி உறுப்புரிமை பெற தற்போதய வெற்றிடத்திற்கு தகுதிபெற்றவராக நியமிக்கப்படவுள்ளார்.
இந்தவகையில் பண்ணாகத்திலிருந்து வடமாகாண சபைக்குச் செல்லும் 2வது நபராக இவர் உள்ளார்.
அரசியல் அறிக்கை விட வேண்டிய அவசியம் எனக்கிருக்கவில்லை. மக்களின் கேள்விகள் என்னை உசுப்பும் போது அவற்றிற்கே பதில் அளித்து வருகின்றேன். எந்த ஒரு கேள்வியும் யாரோ ஒருவர் எழுப்பிய ஐயப்பாட்டின் விளைவே. அந்த ஐயத்தைத் தீர்க்க முயன்று வருகின்றேன். இது கூட நண்பர் துரைராசசிங்கத்திற்கு பதில் அளிக்கும் முகமாக நான் கூறும் கூற்று அல்ல என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்ற வாரம் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரை பதில் தர வைத்துள்ளது. இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
எனது மாணவர் துரைராசசிங்கம் கிறிஸ்மஸ் தினத்தில் நான் ஒரு அரசியல் அறிக்கை விடுத்ததாக கூறியுள்ளார். அவர் வாராவாரம் மக்களின் கேள்விகளுக்கு நான் பத்திரிகைகளில் பதில் அளித்து வருவதை அறியாதுள்ளார் போல் தெரிகிறது.
நண்பரின் கூற்றை நான் இன்றைய பத்திரிகையை பார்த்தே பதில் இறுக்கின்றேன். அதில் கூறியிருப்பனவற்றை கவனத்திற்கு எடுத்து பதில் தருகின்றேன்.
முதலாவதாக நான் தமிழரசுக் கட்சியைப் பிரத்தியேகமாகக் கண்டித்திருந்ததாகக் கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மற்றைய கட்சிகளும் அங்கம் வகிப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார். அப்படி அல்ல.
தமிழரசுக் கட்சியினர் என்னை விமர்சனம் செய்வதாகவே சென்ற வாரக் கேள்வி அமைந்திருந்தது. அதனால் தான் அதற்குப் பதில் தர வேண்டியிருந்தது. அவ்வாறான கேள்வி என் மீது தொடுக்கப்படாதிருந்தால் நான் மௌனமாக இருந்திருப்பேன்.
என்னை விமர்சிப்பவர்கள் தமிழரசுக் கட்சியினரே என்றிருக்கும் போது அந்த விமர்சனங்களுக்குப் பதில் இறுக்காமல் வேறு யாருக்கு நான் பதில் அளிக்க வேண்டும் என்று நண்பர் அவர்கள் எதிர்பார்க்கின்றார்?
மேலும் தேர்தல் வரும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அறிக்கை வெளியிடுவது வழமை என்றும் கூறியுள்ளார். இதுவும் தவறு. என்னைப் பற்றிய பல விமர்சனங்கள் தவணைக்குத் தவணை எழுவதால் தான் நான் பதில் கூற வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவ்வாறான விமர்சனங்கள் தேர்தல்கள் வரும் போது எழுவதை வைத்து நான் வேண்டுமென்றே தேர்தல் காலங்களில் எதிர் அறிக்கைகளை விடுத்து வருகின்றேன் என்று கூறுவது சட்டத்தரணியான நண்பருக்கு அழகல்ல.
ஏதோ காத்திருந்து நான் அறிக்கை விடுவதாக என்னைச் சித்திரித்துள்ளார். அவ்வாறு அறிக்கைகள் விட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றேன். “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” மக்கள் கேளாது தட்டாது இருந்தால் நான் மௌனியாகிவிடுவேன்.
1. வவுனியாவில் என் பெயரை முன்மொழிந்தது தானே என்கின்றார். என் மாணவர் என்ற முறையில் அவ்வாறு செய்திருக்கலாம். அதற்கு நான் நன்றி கூற முடியாது. ஆறு மாதங்கள் அரசியலுக்கு வர முடியாது என்று தொடர்ந்து கூறியும் விட்டபாடில்லாததால் தான் எல்லோரும் சேர்ந்திருந்தழைத்தால் அவர்கள் கோரிக்கையைப் பரிசீலனை செய்வேன் என்று கூறி அவ்வாறு அவர்கள் கோரியதால்த்தான் நான் அரசியலுக்கு வர வேண்டியிருந்தது.
2. பேராசிரியர் சிற்றம்பலம் உண்மையில் வழிப்போக்கர்களைக் கட்சிக்குள் கொண்டுவராதீர்கள் என்று கூறினாரோ தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் அதில் தவறென்ன? கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் அவர். படித்தவர். பண்புள்ளவர். அவரைப் புறந்தள்ளி வழிப்போக்கர்கள் குளிர்காயும் கட்சியாகத் தமிழரசுக் கட்சியை மாற்றியமை அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியிருக்கக்கூடும்.
நான் கட்சிகளின் அரவணைப்பில் வாழ்ந்தவன் அல்ல. என்னை கட்சிகளுக்குள் கட்டுப்பட வைக்க சற்றுக் கடினமாக இருக்கும். காரணம் கட்சி அரசியலே எமது நாட்டைச் சீரழித்துள்ளது என்ற கருத்தைக் கொண்டவன் நான். தம்பி மாவை கூட அண்மையில் கட்சி பேதம் பார்க்காமல் வாக்களியுங்கள் என்று கூறியதாகப் பத்திரிகைச் செய்தியொன்றை வாசித்தேன். கட்சிகளின் போக்கு கவலை தருவதாக அமைந்துள்ளது.
3. என்னைவிட அனந்தி கூடிய வாக்குகள் பெற்றுவிடுவார் என்ற கவலை அவர்களுக்கு இருந்ததாக நண்பர் கூறுகின்றார். அனந்தி கூடிய வாக்குகள் அவ்வாறு பெற்றிருந்தால் தமிழ் மக்கள் பெண்களை எந்தளவு மதிக்கின்றார்கள் என்பது தெரியவந்திருக்கும். அதில் என் மதிப்புக் குறைய எதுவுமே இருக்கவில்லை. ஒரு வேளை ஒரு பெண்ணிற்கு முதல்வர் பதவி கொடுக்கக்கூடாது என்ற பயத்தில் நண்பரும் மற்றவர்களும் காரியத்தில் இறங்கினார்களோ தெரியாது. இன்று மிக முக்கியமான அமைச்சுப் பதவிகளுக்குப் பொறுப்பாக இருந்து அனந்தி தனது கடமைகளைப் பொறுப்புடன் செய்து வருகின்றார்.
4. அடுத்து உயர் மட்டப் பதவியில் இருந்து வந்ததால் மக்களுடன் மக்களாக நான் மாறமுடியாது போய்விடும் என்று யாரோ கூறியதாகக் கூறினார். அந்தக் கூற்று இன்று மெய்யாகிவிட்டது என்றார். அவ்வாறு மெய்யானதால் தானா எனக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி நடவடிக்கைகள் எடுத்த போது, பொது மக்கள் முண்டி அடித்துக் கொண்டு வந்து எனது வாசஸ்தலத்திற்கு முன் நின்று எனக்குச் சார்பாகக் குரல் எழுப்பினார்கள்? நான் எந்த மட்டத்தில் இருந்து வந்தவன் என்பது அவர்களின் கரிசனையாக அமையவில்லை. இவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை அவர்கள் அலசி ஆராய்ந்தே சதிகளில் இருந்து என்னைக் காப்பாற்றினார்கள். நண்பருக்கு ஒன்று கூற விரும்புகின்றேன். நெஞ்சத்தில் அன்பிருந்தால் அதனைப் பொது மக்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியும். கேவலம் பறவைகளும் விலங்கினங்களும் எமது அன்பை அடையாளம் காண்கின்றன. மக்களால் முடியாதா?
5. அடுத்து கொழும்புடன் நல்லுறவைப் பேணவேண்டும் என்கின்றார் நண்பர். கொழும்பில் பிறந்து வளர்ந்தவன் நான். நாட்டின் பெரும்பாலான இடங்களில் நான் ஏதோ விதத்தில் தொடர்பு கொண்டிருந்தவன். நாட்டின் மூன்று மொழிகளுடனும் நான்கு மதங்களுடனும் ஓரளவு பரீட்சயம் பெற்றவன். எனவே தெற்குடன் நடந்துகொள்ள நண்பர் எனக்குச் சொல்லித்தரக்கூடாது.
நண்பர் போன்றவர்கள் தெற்குடன் நல்லெண்ணங்கொள்ள வேண்டும் என்றால் அவர்களுக்குப் பணிந்து போக வேண்டும் என்ற கருத்தை உடையவர்களாகத் தென்படுகின்றார்கள். தெற்கிற்கு அடங்கிப் போகும் ஒருவரை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைத்திருந்தால் நண்பரைப் போன்ற ஒருவரையே முதலமைச்சராக நிறுத்தியிருக்கும்.
புகழ்பாடி, பணிந்து, இரந்து, எவரதும் பெரிய மனதின் பெறுபேறுகளைக் கொண்டு தமிழ் மக்களின் உரித்துக்களைப் பெற வேண்டிய அவசியம் எமக்கில்லை. தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை.
நாம் இந்நாட்டின் மூத்த குடிகள். எமது தகைமை உலகறிந்தது. எனினும் அந்த உண்மையைக் கொழும்பு உதாசீனம் செய்து வருகின்றது. கொழும்புடன் முரண்படாது எவ்வாறு எமது உரிமையைப் பெற்றெடுப்பது? 2016ல் தக்க தீர்வைப் பெற்று விடுவோம் என்று முரண்படாது வாழ்ந்து வந்த எம் தலைவர் கூறினாரே! பெற்று விட்டோமா? ஆடுற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடுற மாட்டைப் பாடிக் கறக்க வேண்டும்!
6. என் செயற்பாட்டால் வடமாகாணத்தின் மீது வினாக்குறி எழுந்துள்ளதாகக் கூறுகிறார். அதனால் தான் கட்சித் தலைமைகளைக் கூப்பிடாது எமது வடமாகாண முதல்வரை அழைத்து மலேசியப் பிரதம மந்திரி கருத்துப்பரிமாற்றம் அண்மையில் நடாத்தினாரா? அச்சந்திப்பை நிறுத்த சிலர் முயன்றதன் பின்னணி என்ன? வினாக்குறியா?
7. நான் மாகாண முதலமைச்சர்கள் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று யார் கூறினார்கள்? கலந்து கொண்டது மட்டுமல்லாமல் காத்திரமான கருத்துக்களையும் முன்வைத்ததைக் கூட்டக் குறிப்புக்கள் கூறுவன. ஏதோ ஒரு சில கூட்டங்களுக்குப் போக முடியாமற் போனதை ஒரு பொருட்டாகக் கருதி நண்பர் குற்றஞ் சுமத்துவது சிரிப்புக்கு இடமளிக்கின்றது.
ஆனால் ஒன்று மட்டும் சட்டத்தரணியான நண்பர் கருத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகாரங்களைக் கூட்டித்தர வேண்டும் என்று மற்றைய முதலமைச்சர்கள் கேட்பது ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் உள்ளேயே. அது எமக்கு அப்போதைக்கு ஒரு சில நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தாலும் எமது இனத்தின் நீண்டகால வாழ்க்கைக்கு நன்மை அளிக்காது.
அல்பிரட் துரையப்பாவோ, குமாரசூரியரோ, டக்ளஸ் தேவானந்தாவோ கேட்டார்கள் கொடுத்தோம் என்று தான் இருக்கும். தமிழர்கள் உரித்துடன் கேட்டதை நாம் அள்ளிக் கொடுத்தோம் என்றிருக்காது. இன்று நாம் தெற்கின் தயவிலேயே வாழ்கின்றோம். அதை நண்பர் உணராது உள்ளார். பல்லிளித்துப் பயன் பெறுவதென்றால் எந்தத் தமிழ்த் தலைவரிலும் பார்க்கக் கூடிய சலுகைகளை தெற்கில் இருந்து பெற விக்னேஸ்வரனால் முடியும்.
அவன் தெற்கில் பிறந்து வளர்ந்தவன். ஆனால் அவ்வாறு பல்லிளித்துப் பெற்றால் காலக்கிரமத்தில் எம்மவர் அடிமைகள் ஆகிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள மொழி உள்ளீடல்கள், பௌத்த மதத்தினர் உள்ளீடல்கள் என்று எம்மை 25 வருடங்களில் இருந்த இடந்தெரியாது ஆக்கிவிடுவார்கள்.
நாமும் வெளிநாடுகள் நோக்கித் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்போம். ஜெருஸலத்திற்கு நடந்துள்ளதைப் பாருங்கள். ஆகவே எமது தனித்துவத்தைப் பேணிக் கொண்டு தான் நான் தெற்குடன் உறவாடி வருகின்றேன். பல தெற்கத்தைய அமைச்சர்களுடன் கூடி பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். என்னைப் பொறுத்தவரையில் அவர்கள் எனக்குச் சமமானவர்களே. எனக்கு மேலானவர்கள் அல்ல. கூனிக் குறுகி அவர்களிடம் யாசகம் பெற வேண்டிய அவசியம் எனக்கில்லை. பிரபாகரன் பிறந்த மண்ணில் இவ்வாறு யாசகம் பெற எத்தனிப்போர் வாழ்ந்து வருவது விந்தையே.
8. தமிழரசுக் கட்சியின் கூட்டங்களுக்கு எனக்கு அழைப்பு அனுப்பியதாகக் கூறுகின்றார். கூட்டங்களில் நான் கலந்து கொண்டதாகவும் கூறுகின்றார். மதியத்துடன் எழுந்து சென்றுவிடுவார் என்றும் கூறியுள்ளார். கூட்டங்கள் உரியவற்றைப் பரிசீலித்தால், உரியன பற்றிப் பேசினால், உண்மையை உரைத்துப் பார்க்க முன் வந்தால் எவர் தான் பாதியில் எழுந்து போகப் போகின்றார்கள்? ஆனால் ஒன்றை மட்டும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் தொடக்கம் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதை ஏற்றுள்ளார்.
உண்மையில் அதன் பிறகு தான் என்னை வலிந்து அழைத்திருக்க வேண்டும். அப்பொழுது எனது கருத்துக்களை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருப்பேன். தமிழ் மக்கள் பேரவை ஒரு மக்கள் சார் குரல், கட்சி அல்ல என்பதை விளங்கப்படுத்தியிருப்பேன்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப காலத்தில் கொழும்பில் அதற்கான குழுக்கள் கூட்டப்பட்டன. அக் குழு உறுப்பினர்கள் சட்ட ரீதியான சில நன்மைகளை என்னிடம் பெற்றதுண்டு. அது பற்றி அவர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.
என்னிடம் பெற்ற அந்த அடிப்படைத் தரவுகளை வைத்து கட்சி பதிவு செய்யப்பட்டதாகவே நான் எண்ணியிருந்தேன். அரசியலுக்குள் வந்த பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அப்போது தான் TELO, EPRLF, PLOTE நண்பர் ஆனந்தசங்கரியின் கட்சி ஆகியன தமிழரசுக் கட்சியின் சின்னத்திற்குக் கீழேயே தேர்தலில் ஈடுபட்டு வருகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன்.
தமிழரசுக் கட்சியின் சின்னத்தின் கீழ் தான் போட்டியிடப் போகின்றோம் என்று அறிவதற்கு முன் நான் எவ்வாறு அது பற்றி அறிந்திருக்கக்கூடும் என்பதற்கு நண்பர் தான் பதில் தர வேண்டும். என முதலமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பௌதீக விஞ்ஞான பிரிவில் அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.
யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலோலி, புற்றளையைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ள யாழ்.வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி மாணவன் துவாரகனுக்கு மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவிப்பதோடு
மேலும் P.மைக்கல் இயந்திரவியல் தொழினுட்பத் துறையில் அகில இலங்கை ரீதியில் பத்தாம் இடத்தையும், மாவட்ட ரீதியில் இரண்டாம் இடத்தையும், தயாளன் தயாநிதி உயிரியல் விஞ்ஞானத் துறையில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
யாழில் கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த முஸ்லீம் காவாலிகள் துரத்திப் பிடிக்கப்பட்டனர்!!
யாழ்ப்பாணம், சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்று வந்த தொடர் வழிப்பறி கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் இன்றையதினம் கையும் மெய்யுமாக பிடிபட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சங்காணை பகுதியில் இன்று காலை வீதியால் நடந்து சென்ற பெண் ஒருவரின் 1 ½ பவுண் சங்கலியினை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்தெடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது, அவ் விடத்தில் உள்ள கடை ஒன்றில் மென்பானம் அருந்திக்கொண்டிருந்த இரகசிய பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வரைந்து சென்ற பொலிஸார், வழிப்பறியில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களையும் மடக்கி பிடித்தனர்.
அத்துடன் அறுக்கப்பட்ட 1 ½ பவுண் சங்கிலியும் கைபெற்றப்பட்டுள்ளது. கைதான இருவரும் பொம்மைவெளி பகுதியினை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் என பொலிஸார் கூறினர். கடந்த காலங்களில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளைச்சம்பவங்களுக்கும் இவர்களுக்கும் தொடபு உள்ளதாக பொலிஸார் கூறினர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரப்படுகிறது.
மட்டக்களப்பு ஏறாவூரில் நடைபெற்ற திருமண விழாவொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமாகியதால் 50 பேர் சுகவீனமடைந்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நடைபெற்ற குறித்த திருமண விழாவில் கலந்துகொண்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாந்தி, தலைவலி, வயிற்றோட்டம், உடல்வலி போன்ற குணங்குறிகளுடன் நோயாளர்கள் வருகை தந்துள்ளதாக ஏறாவூர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.ஏ.சி.எம் பலீல் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் 20 பேர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் 30 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சம்பவம் தொடர்பில் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.