WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-1

கிளிநொச்சியில் அழகு நிலைய உரிமையாளர் ஒருவரிடமிருந்து 5000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய கரச்சி பிரதேச சபையின் அதிகாரியொருவருக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி ஏ.ஏ ஆனந்த ராஜாவால் 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

அழகு நிலையத்தை நடத்தி செல்ல செலுத்தப்பட வேண்டிய வருட வரிக்கு சலுகை வழங்குவதற்காகவே அவர் இலஞ்சம் பெற்றுள்ளார்.

அழகு நிலைய உரிமையாளர் இது தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு அதிகாரிக்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த அதிகாரி இலஞ்சப்பணத்தை பெற முற்பட்ட சந்தர்பத்தில் கைது செய்யப்பட்டார்.

யாழ். பல்கலைக்கழகத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீட பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைப் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட மாணவர்களுக்கு இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல், மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு கலைப்பீட மாணவர்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது. இதில் மூன்று மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெறும் என பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் ராமசாமி, ரஜினியின் இந்த கருத்து குறித்தும், அவரது முந்தைய செயல்பாடுகள் குறித்தும் தனது முகநூல் பக்கத்தில் சில விமர்சனங்களைதெரிவித்துள்ளார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறுகையில், ''தமிழ்நாட்டுக்கு ஒரு புதுவிதமான அரசியல் தேவை என்றும், குறிப்பாக ஆன்மிக அரசியல் தேவை என்றும் ரஜினி கூறுகிறார்'' என்று பி. ராமசாமி குறிப்பிட்டார்.


நடிகர் ரஜினிகாந்த் அரசியல்வாதியாக தன்னை அறிவித்து, வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தாலும், அவரது ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்றும், கட்சியின் பிற கொள்கைகளை வெளிப்படையாக தெரிவிக்காததால், அரசியல் தலைவர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதிலும், அன்றாட அரசியலில் பங்கேற்கப்போவதில்லை என்பதிலும் ரஜினிகாந்த் தீவிரமாக உள்ளார் என்பதை அவரது அரசியல் அறிவிப்பின்போது நிகழ்த்திய உரை தெளிவுபடுத்தியது.

தனித்துப் போட்டியிடப் போவதாக ரஜினி அறிவித்திருந்தாலும், ரஜினியின் சிந்தனைகளுக்கும் பாஜகவின் சிந்தனைகளுக்கும் ஒற்றுமை உள்ளது என்று கூறி தொடக்கத்திலேயே ரஜினியை சொந்தம் கொண்டாடத் தொடங்கிவிட்டது பாஜக

கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில்தான் முடிவாகும் என்பதில் தங்களது கட்சி உறுதியாக இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''ரஜினியின் ஆன்மிக அரசியலுக்கும், எங்கள் கட்சியின் ஆன்மிக சிந்தனைக்கும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. ரஜினி ஆன்மிகம் என்று சொன்னால் ஒப்புக்கொள்ளும் நபர்கள், நாங்கள் கூறும் கருத்துக்களை மதவாதம் என்கிறார்கள். ஆன்மிக அரசியல் என்பது தர்மத்துடன் நடந்துகொள்வது என்பதுதான்,'' என்று தமிழிசை தெரிவித்தார்.

அவர் மேலும் தமிழகம் ஆன்மிக பூமி என்றும் நாத்திக அரசியலை பின்பற்றுவதாக சூளுரைத்த கட்சியினரின் குடும்பத்தினர் நாத்திகர்களாக மாறமுடியாமல், ஆத்திகர்களகவே இருப்பதே அதற்கு சாட்சி என்றார்.

தமிழன் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற கட்டாயத்தில் அவரது உரைகளில் தமிழ் மக்கள் தன்னை பச்சை தமிழனாக மாற்றிவிட்டார்கள் என்றும் அவரது மூதாதையர்கள் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடிக்கோடிட்டு ரஜினி பேசியுள்ளது கவனிக்கத்தக்கது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சீமான், ரஜினி தமிழனாக இல்லாமல் தமிழகத்தை ஆள நினைப்பது தவறு என்றும் அவர் முதல்வராக தமிழகத்தை ஆட்சி செய்தால், தமிழர்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமம் என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சீமான் சொல்வதுபோல, ரஜினியை இன ரீதியாக தமிழன் இல்லை என்று குற்றம் சாட்டுவது பலவீனமாக அரசியல் என்றும் அதற்கு பதிலாக தான் தமிழன்தான் என்று ரஜினி பேசுவது மோசடி அரசியல் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் கூறியுள்ளார்.

''ரஜினியின் ஆன்மிகம், மதச்சார்பின்மைக்கு எதிரானது என்பதை ராமகிருஷ்ண மடத்தில் அவர் ஆசி பெறச்சென்ற போது நடந்த உரையாடல் தெளிவாக்குகிறது. மதச்சார்பின்மை என்பதை எதிராகப் பார்ப்பதும், விமர்சிப்பதும், அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்தே அந்த சொல்லை நீக்க வேண்டும் என்பதும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியோரின் நிலைப்பாடு ஆகும். ரஜினியின் ஆன்மிகம் இந்தவகையைச் சேர்ந்ததுதான். அது மகாத்மா காந்தி பின்பற்றிய தத்துவ பொருள்கொண்ட சுயபரிசோதனையை வலியுறுத்தும் ஆன்மிகம் அல்ல,'' என்றார் ரவிக்குமார்.

மேலும் ஆர்.ஆர்.எஸ்.க்கு பிடிக்காத காந்தியின் பெயரை ரஜினி தவிர்த்துவருவது கவனத்துக்கு உரியது என்றும் ரவிக்குமார் குறிப்பிட்டார்.

திராவிட கட்சிகள் பகுத்தறிவு கொள்கைகளைக் கொண்டு ஆட்சிக்கு வந்துள்ளனர் என்பதால்தான் ரஜினி எந்த விளக்கமும் கொடுக்காமல், ஆன்மிக அரசியல் என்ற பதத்தை முன்வைத்துள்ளார் என்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன்.

''ரஜினி தனித்து போட்டியிடப்போவதாக தெரிவித்தாலும், பாஜகவின் கொள்கைகளோடு ஒத்துப்போகும் நபர் என்பதையே அவரது நடவடிக்கைகள் காட்டுகின்றன. மோதியின் பிரதிநிதியாக ஒருவர் தமிழத்தில் போட்டியிடவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால், அந்த நபர் ரஜினியாக இருப்பார் என்பதுதான் உண்மை. நேரடியாக பாஜக போட்டியிட்டால், ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்ததுபோல நோட்டாவோடுதான் போட்டிபோடவேண்டும்,'' என்று தெரிவித்தார் பாண்டியன்.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ரஜினியின் ஆன்மீக அரசியலால் தங்களது கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர்.

ரஜினிக்கு வாழ்த்துக்களை கூறிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அவர் முற்றுப்புள்ளிவைத்துள்ளார் என்றும் ரஜினி அரசியலுக்கு வருவதால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழகத்தில் எப்போதும் திராவிடக் கட்சிகள் மட்டுமே ஆட்சி செய்யும் என்றும் ரஜினி அரசியலில் ஆழம் பார்க்க நினைக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

''ரஜினி சிஸ்டம் சரியில்லை என்று கூறுகிறார். என்ன சரியில்லை என்று அவர் தெளிவாக எதையும் சொல்லவில்லை. திராவிட ஆட்சிதான் தமிழகத்தில் நிலைத்து இருக்கும். தமிழகத்தில் வேறு இயக்கங்களுக்கு வேலையில்லை,'' என்றும் தெரிவித்துள்ளார்.