WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS -3

இலங்கையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட சகல பாடசாலைகளுக்கும் நிர்வாக வசதிக்காக பாடசாலை முகாமையாளர்களை (School managers) எதிர்காலத்தில் நியமிக்கப் போவதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருணாகல் மல்லியதேவ ஆண்கள் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் நேற்று கலந்துகொண்டபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் குறிப்பிட்ட அவர்,

“பாடசாலைகளில் தனி ஒரு அதிபரினாலோ அல்லது உப அதிபரினாலோ சகல நிர்வாக நடவடிக்கையினையும் மேற்பார்வை செய்வதென்பது மிகவும் கடினமான காரியமாகும். ஆகவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு முகாமையாளர் ஒருவரையும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு பிரதான முகாமையாளருடன் உதவி முகாமையாளர் ஒருவரும் நியமிக்கப்படுவர். இந்த திட்டத்தினை மிக விரைவில் அமுல்ப்படுத்துவதற்கு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் 

இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பிபிசியுடன் பேசயபோது, இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை இந்த வன்செயல்கள் ஏற்படுத்தியுள்ளன என்று கவலை வெளியிட்டார்.

தற்போது, வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து, பிரதேச செயலர்கள் மட்டத்தில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுவதாக கூறிய அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அனைத்துக்குமான இழப்பீட்டை அரசாங்கமே வழங்க வேண்டும் என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

நாளை கண்டி மாவட்டத்துக்கு வரவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதனை வலியுறுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரியதும், சிறியதுமாக 30 பள்ளிவாசல்கள் வரை அங்கு சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அங்காடி வளாகங்களில் கூட முஸ்லிம்களின் கடைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தாக்குதல்கள் கன கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சில சிங்கள இனவாதக் குழுக்களே இந்த வன்செயல்களுக்கு காரணம் என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பட்டப்பகல் வேளையில் கூட அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

முஸ்லிம்களின் வணிகங்களும், வீடுகளும் வழிபாட்டிடங்களுமாக கோடிக்கணக்கான சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்ற ரவூப் ஹக்கீம், 1983ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன வன்முறைகளைப் போன்று இவையும் வெகுவாக திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் இனவன்செயல்களால் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி, உறவினர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் மக்கள், இயற்கை உபாதை போன்ற விசயங்களுக்காக தமது இருப்பிடங்களுக்கு சென்று திரும்புவதாகவும், அவர்கள் இன்னமும் பதற்றத்துடனும் அச்சத்துடனுமே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அம்பத்தென்ன, அக்குறண, 8ஆம் கட்டையடி, பூஜாப்பிட்டிய, அலவத்துகொட ஆகிய இடங்களில் இன்னமும் பதற்றம் தொடர்வதாகவும், அங்கு சுமார் 2000 போலிஸார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளதாகவும், தானும் அங்கேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருத்த அடி

இந்த வன்செயல்களால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருத்த அடி விழுந்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை, கண்டி வன்செயல்கள் மற்றும் அவசரநிலைப் பிரகடனம் ஆகியவற்றை தொடர்ந்து இலங்கைக்கு வரவிருந்த பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை ரத்துச் செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு முக்கிய சுற்றுலா நிறுவனங்களின் தகவல்களின்படி மட்டும் 80 பேர் இவ்வாறு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும் அவை கூறியுள்ளனர்.

கலவரங்களை அரசாங்கம் அடக்கத் தவறியது குறித்து அரசியல் கட்சிகள் மாத்திரமல்லாது பல பொது அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. இலங்கை பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கான சம்மேளனமும் இதை கண்டித்துள்ளது.

அதேவேளை இலங்கையின் மத்திய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பூரணமான கடையடைப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கண்டி வன்செயல்களுக்கு காரணமான முக்கிய சந்தேக நபர் உட்பட 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் கூறியுள்ளனர்.

கண்டி வன்செயல்களில் இதுவரை இருவர் பலியானதுடன், 11 வரை காயம் அடைந்ததாக போலிஸார் கூறியுள்ளனர். பல்லேகல்ல பகுதியில் ஒரு இளைஞர் பலியானதுடன், பூஜாப்பிட்டிய பகுதியில் கலவரக்காரர்கள் மத்தியில் ஒரு கைக்குண்டு வெடித்து அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய சிலர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கோட்டையை வழங்கினால் இராணுவ முகாங்களை அங்கு நகர்த்திவிட்டு மக்களின் காணிகளை விடுக்க முடியும் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் யாழ். செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இராணுவம் மற்றும் பொலிஸார் வசமுள்ள மக்களின் காணிகளை விடுப்பது தொடர்பான கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. இதன்போதே மாவட்டச் செயலர் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

“யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவம் வசமிருக்கும் பல இடங்கள் விடுவிக்கப்படும் என்று அரசால் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. எனினும் அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை.

எனவே அவற்றை விடுவிப்பது பற்றிப் பேசுவதற்கு இராணுவத்துடனான கூட்டம் ஒன்றை மாவட்டச் செயலாளர் ஒழுங்கமைக்கவேண்டும். அதுதொடர்பில் அரசுடனும் நாம் பேச்சு நடத்துவோம்” என்று இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார்.

“மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரின் தலைமையில் அண்மையில் கூட்டம் இடம்பெற்றது. விடுவிப்பதாக அறிவித்த பகுதிகளிலிருந்து இராணு நிலைகளை நகர்த்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

விரைவில் அந்தப் பகுதிகள் படிப்படியாக விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், பருத்தித்துறை – பொன்னாலை வீதியும் படிப்படியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் இராணுவத்தால் கூறப்பட்டது.

மேலும் தொல்பொருள்கள் திணைக்களத்திடமிருக்கும் யாழ்ப்பாணம் கோட்டையை இராணுவத்துக்கு வழங்கப்படுமாயின் அங்கு இராணுவ முகாங்களை மாற்றிவிட்டு, பெரும்பாலான பகுதிகளை விடுவிக்க முடியும் என இராணுவ அதிகாரிகளால் தெரிவிகப்பட்டது.

இதுதொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு நடத்தப்படவேண்டும்” என்று யாழ்.மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் கோட்டையை இராணுவத்தினருக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிகையை தான் முன்னெடுத்துள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார்.
தொல்பொருள் திணைக்களத்தால் தற்போது பராமரிக்கப்படும் யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுலாத் தளமாக உள்ளது. அத்துடன், கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டால் அதற்கு அருகாமையிலுள்ள பண்ணை சுற்றலாக் கடற்கரையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான “FORBES” சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது. அதில் முதலாவதாக யார் இருப்பார்கள் என்று நீங்கள் எல்லோரும் இலகுவாக ஊகித்து விடுவீர்கள்.

நம் எல்லோரினதும் பேச்சில் அடிபட்ட தமிழர் இருவர் இதில் அடங்குகின்றார்கள்.

நீங்கள் ஊகித்தது போல் முதலிடம் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான். அந்த சஞ்சிகையின் படி அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள்.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.

முதலாமிடம் – மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)
இரண்டாமிடம் – அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)
மூன்றாமிடம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)
நான்காமிடம் – ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)
ஐந்தாமிடம் – கருணா (17 லட்சம் டொலர்)
ஆறாமிடம் – ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)
ஏழாமிடம் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)
எட்டாம் இடம் – ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)
ஒன்பதாம் இடம் – ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)
பத்தாம் இடம் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்)
இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் இதில் தகிடுதம் பண்ணும் ஒரு முக்கிய முஸ்லீம் அமைச்சரின் பெயரும், குதிரை பெட் கம்பனி நடாத்தும் சிங்கள அரசியல்வாதியின் பெயரும் இதில் இல்லாமை ஆச்சரியமான விடயம் தான்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில் நமது வடக்கு, கிழக்கு அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் ஏமாளிகள் தான்.