WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-5

சிறிலங்காவில் இருந்து புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரித்தானியாவின், தென்மேற்கு லண்டனில் உள்ள, மிச்சம் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் மிச்சம் பகுதியில் உள்ள வீதியில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடைய இளைஞன் வெட்டுக்காயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு உயிரைக் காப்பாற்ற காவல்துறையினர் முயற்சித்த போதும், அந்த இடத்திலேயே மரணமானார்.

ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பான தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தக் கொலை தொடர்பாக 44 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தெற்கு லண்டனில் உள்ள காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த ஆடையூர் அம்மன்கோவிலகாடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 55). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வெள்ளையம்மாள்(50) இவர்களுக்கு தமிழரசன்(29). பூபதி(24) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் வெங்கடாசலம். இவர்கள் இருவரும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர்.

இந்த நிலையில் குப்புசாமி தனது வீட்டுக்கு வழித்தடம் மற்றும் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளார். இதை வெங்கடாசலம் தடுத்ததாக தெரிகிறது. பின்னர் வெங்கடாசலம், குப்புசாமி கேட்ட வழித்தட பாதையில் தென்னை மரக்கன்றுகளை நட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த குப்புசாமி தனது மனைவி, 2 மகன்களுடன் சேர்ந்து வீட்டின் முன்பு வைக்கோல்களை பரப்பி அதன் உள்ளே நின்று கொண்டனர். அதன்பிறகு முன்னால் வைக்கப்பட்டு இருந்த வைக்கோலுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இது பற்றி அறிந்த அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு குப்புசாமியை தடுக்க முயன்றனர். தீ பற்றி எரிந்த வைக்கோல் கட்டு மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அப்போது அவரது மகன் பூபதி தனது கையில் வைத்திருந்த கேனை திறந்து பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் பயந்து போன அப்பகுதி மக்கள் பின்வாங்கினார்கள்.

இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் கேசவன், துணை தாசில்தார் கோமதி, பூலாம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், வெங்கடாசலம், எடப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் முனியப்பன் ஆகியோர் விரைந்து சென்று குப்புசாமி குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நாளை(திங்கட்கிழமை) நிலத்தை அளவீடு செய்து தடவழிப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து குப்புசாமி தனது குடும்பத்தினருடன் வைக்கோல் கட்டை விட்டு வெளியே வந்தார்.

அமெரிக்க கடற்படையின் USNS Mercy என்ற பாரிய மிதக்கும் மருத்துவமனைக் கப்பல், நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பசுபிக் ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்  சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

279.49 மீற்றர் நீளமும், 32.2 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் முழுமையான கருவிகளைக் கொண்ட 12 அறுவைச் சிகிச்சைக் கூடங்களும், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை வசதிகளும் உள்ளன.

நவீன மருத்துவ ஆய்வு கூட, பரிசோதனை வசதிகள், மருந்தகம், ஆகியவற்றுடன் இரண்டு பிராண வாயு உற்பத்திக் கூடங்களும் இந்தக் கப்பலில் உள்ளன.

சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் திடீர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பிரித்தானியாவின் நீர்மூழ்கி கப்பல் ஒன்றை ரஷ்யாவின் சக்தி வாய்ந்த போர் கப்பல் ஒன்று வேட்டையாடிய பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் மிகவும் சக்தி வாய்ந்த Black Hole என புனைப்பெயரால் அறியப்படும் போர் கப்பல் ஒன்று பிரித்தானியாவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் HMS Astute போர் கப்பலானது 1000 மைல்கள் தொலைவில் இருந்து தாக்கும் Tomahawk ஏவுகணைகளை சிரியாவுக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

Advertisement

பிரித்தானிய கப்பலின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வந்த ரஷ்ய போர் கப்பல் உடனடியாக நடவடிக்கையில் இறங்கியுள்ளது.


பிரித்தானியாவின் HMS Astute போர் கப்பலானது அளவில் பெரிதானதும் தாக்குதலில் மிகவும் கொடூரமானதும் ஆகும்.

இதை அறிந்தே நீர்மூழ்கி கப்பல்களுக்கு பாதுகாப்பாக செயல்படும் ரஷ்யாவின் விமானம் ஒன்றும் குறித்த வேட்டையில் களமிறங்கியுள்ளது.

இறுதியில் ரஷ்ய போர்கப்பலே தனது திசையை மாற்றிக் கொண்டு சென்று விட்டதாகவும், ஆனால் குறித்த நிகழ்வனது சிரியா தாக்குதலுக்கு முந்தைய நாள் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மாகாண சபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபைக்கான தேர்தலில், மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்படமாட்டார் என்று, கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.

இதுகுறித்து, இரா.சம்பந்தனிடம் நேற்று திருகோணமலையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த போதே, அவர் வடக்கு மாகாணசபைக்கான அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று இப்போது தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

”நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான எமது நிலைப்பாடு குறித்து கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடப்பட்டு வருகிறது.

நாளையும், நாளை மறுநாளும் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

நாங்கள் நிலைமைகளை குறித்தும்,  பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிபலிப்புகள் குறித்தும் கலந்துரையாடுவோம்.

அதன் பின்னர், நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பதா – இல்லை அதனை எதிர்ப்பதா என்று முடிவு செய்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

பலப்பிட்டி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையின் போது காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த மற்றும் அசுத்தமான முறையில் செயற்பட்டுவந்த 13 ஹோட்டல்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தில் சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகம் மற்றும் பலப்பிட்டி பொதுமக்கள் சுகாதார சேவை அலுவலகம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே குறித்த ஹோட்டல்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

யாழ் – சாவகச்சேரி கிராம்பு பகுதியில் , பட்டபகலில் இருவர் வர்த்தக நிலையத்தில் 12000 ரூபாய் பணத்தினை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வர்த்தக நிலையமொன்றிற்கு, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தம்மை புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்தியதோடு, வியாபார நிலையத்தினைச் சோதனையிட்டனர்.

பின்னர் வெளியில் செல்ல ஆயத்தமான வேளையில், பெண்ணொருவரிடம் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுக்க முற்பட்டனர். குறித்த பெண் கூக்குரல் எழுப்பிய போது அவ்விருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அவரது மேசையிலிருந்து 12000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதை அறிந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில், சிறிலங்காவில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என்று, சிறிலங்கா அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் இனப்பதற்ற நிலை தீவிரமடைந்ததை அடுத்து, கடந்தவாரம், சமூக வலைத்தளங்களை முடக்கிய  அரசாங்கம், இந்த தற்காலிக தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் என்று கூறியிருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அதிபரின் செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னான்டோ, சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என்று தன்னால் இப்போது கூற முடியாது என்றும், அது நிலைமைகளைப் பொறுத்த விடயம் என்றும் கூறியுள்ளார்.

அதேவேளை, அவசர காலச்சட்டத்தின் கீழேயே, சமூக வலைத்தளங்கள் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரையில் இது தொடரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச்சட்டத்தை 14 நாட்கள் நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா அரசியலில் தமது குடும்பத்தின் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது தொடர்பாக, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிரு்ப்பதாக, கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக, 2020 அதிபர் தேர்தலில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை போட்டியில் நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நியமிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள பங்கேற்றனர் என்றும்  தெரிவிக்கப்படுகிறது.

அடிமேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும் என்பது போல, இலங்கையில் உள்ள சிங்கள தலைமை மீது, லண்டன் தமிழர்கள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று முன் தினம் இந்திக்க பெனாண்டோ இலங்கை சென்றுள்ள நிலையில். அவரது குடும்பம் லண்டனில் தங்கியுள்ளது.

இதனை அறிந்த தமிழ் அமைப்புகள், லண்டனுக்கு அவரது விசாவில் (டிப்பெண்டனாக) வந்த அவரது மனைவி பிள்ளைகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று புதுக் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள்.

பிரித்தானிய வெளியுளவு துறை அமைச்சர், உள் துறை அமைச்சர் என்று பல அமைச்சர்களுக்கு தமிழர் தரப்பில் இருந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிரியங்க பெனாண்டோவின் குடும்பத்தார் அனைவரது விசாவும் ரத்துச் செய்யப்பட்டு , அவர்களையும் நாட்டை விட்டு திருப்பி அனுப்ப, பிரித்தானியா உடனடி நடவடிக்கையில் இறங்கவுள்ளது என மேலும் அறிகிறது.

பிரித்தானியா , அமெரிக்கா , கனடா போன்ற பல வெளி நாடுகளுக்கு இந்திக்க பெனாணோ செல்லாமல் இருக்க உலகில் உள்ள பல நாட்டு தமிழர்கள் தமது நாட்டில் உள்ள தூதரங்களுக்கு அறிவித்து வருகிறார்கள்.

உலகில் பல நாடுகளில் வாழும் தமிழர்கள் லண்டன் தமிழர்களோடு கை கோர்த்து நிற்பது. உலகத் தமிழர்களின் ஒற்றுமையை சிங்கள அரசுக்கு உணர்த்தியுள்ளது.

2009க்கு பின்னர் உலகத் தமிழர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி, பிரித்துவிட்டதாகவும். உடைத்து விட்டதாகவும் சிங்களம் நினைத்து பெருமையடைந்தது. ஆனால் அது இறுதிவரை நடக்கவே இல்லை…


2015 அதிபர் தேர்தலின் போது, பெற்றுக் கொண்ட மக்களின் ஆணையை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து,  நேற்றுமுன்தினம் மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை இரா.சம்பந்தன் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இதன்போதே அவர், 2015 அதிபர் தேர்தலின் போது, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியுள்ளார்.

இந்தச் சந்திப்புக் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“2020 வரை, தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர வேண்டும் என்பதே எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தாக இருந்தது.

எனினும், கடந்த அதிபர் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை சிறிலங்கா அதிபருக்கு அவர் நினைவுபடுத்தினார்.

புதிய அரசாங்கம் பதவியேற்றாலும் கூட சிறிலங்கா அதிபர் தனது பதவிக்காலத்தில், மக்களின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.” என்று கூறினார்.

மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவவுக்குப் புறப்பட முன்னர், அதிபரின் வதிவிடத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

நடிகர் கமல்ஹாசன் தனது கட்சியின் பெயரை வரும் 15-ம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நேரம் கேட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நடிகர் கமல்ஹாசனும், ரஜினியும் அரசியலுக்கு வரப்போவதாகவும், விரைவில் கட்சியின் பெயரை அறிவிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். அதன்படி ட்விட்டரில் தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வந்த கமல், பிப்ரவரி 21-ம் தேதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தன்னுடைய அரசியல் பயணத்தை ஆரம்பித்து, அன்றே தன்னுடைய கட்சியின் பெயரையும் அறிவிக்க உள்ளார். மேலும் பயணத்தின் முதல்கட்ட நிறைவாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று, மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது கட்சியின் பெயரை வரும் 15-ம் தேதியன்று தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முன்னதாக நடிகர் கமல், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற கோபாலபுரத்தில் தேதி கேட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் – பரிஸ் நகரில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே உடலின் பல பாகங்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பரிஸ் – 14 Montparnasse பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த குறித்த இளைஞர், உணகவத்தின் நிலகீழ் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று காலை பணிக்காக உணவகத்திற்கு வந்த சக ஊழியல் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த உணவகத்தில் மோதல் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த இளைஞரை கொலை செய்தது அதே உணவகத்தில் பணிப்புரியும் 34 வயதுடைய நபர் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை மற்றும் தற்கொலை செய்துக்கொண்டமைக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றவாளியாக இணங்காணப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமை இல்லாது போகும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இதனை அறிந்துகொள்ளாது நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கருத்து வெளியிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “ஏழு ஆண்டுகளுக்கு குடியுரிமையை இரத்து செய்வது மட்டுமல்ல. இவ்வாறான நபர்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாக்கு கேட்கவும் முடியாது.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்க தகுதி இல்லை என நாடாளுமன்றத்தில் சட்டம் ஏற்படுத்தப்பட வேண்டும். உண்மையாக இது ஆணைக்குழுவின் வலுவான பரிந்துரையாகும்.

இதேவேளை, ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், சுதந்திர கட்சியில் இருந்து விலகி சென்றவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளனர்.

ஊழல்கள் மோசடிகளுக்கு ஜனாதிபதி எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் காரணமாகவே அவர்கள் மறுப்பு வெளியிட்டு வருகின்றனர் என அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், 32 அபேட்சகர்களுடன் 483 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் 32 அபேட்சகர்களுடன்  483 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

இதன்படி 116 தேர்தல் வன்முறை பதிவாகிய வேளையில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த களத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள் 222 பேர் அதில் 20 பேர் தேர்தல் அபேட்சகர்களாவர். 

அதனுடன் தேர்தல் வன்முறை முறைப்பாடுகள் 260 பதவாகியுள்ள நிலையில் 261 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 12 அபேட்சகர்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்த தேர்தல்கால வன்முறைகளில் பாரியளவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் இக்காலத்தில் பொது மக்களுக்கு இடையூறாக பேரணிகள், போராட்டங்கள் மற்றும் ஒலிபெருக்கி பயன்பாடு என்பவை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

நாடளாவிய ரீதியில் தேர்தல் குறித்து அனைத்து தரப்பினருக்கும் பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

வட பகுதி கடற்பரப்பில் பெருந்தொகை தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில், மீன்பிடிப் படகொன்றில் நங்கூரத்திற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

வட கடல் ஊடாக இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்படுவதாக காங்கேசன்துறைகடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட தங்கம் சுமார் 7 கிலோகிராம் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தங்கத்துடன் வடமராட்சியை சேர்ந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தங்கத்தின் பெறுமதி 5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட தங்கம் இன்று யாழ். தெல்லிப்பழையிலுள்ள சுங்கப்பிரிவினரிடம் கையளிக்கப்படுவதுடன் சந்தேகநபர்களையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்துவதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் 2017ஆம் ஆண்டு குழந்தைகள் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2017ஆம் ஆண்டு யாழ்.போதனா மருத்துவமனையில் 5,746 குழந்தைகள் பிறந்துள்ளன.   இது 2016ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 12 வீதம் அதிகமாகும்.

அதேவேளை, 2017ஆம் ஆண்டில் சிசு மரண வீதமும் குறைவடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவ வசதிகள் அதிகரிப்பு, கடந்த சில ஆண்டுகளில் மருத்துவமனைப் பணியாளர்களின் சேவையின் தரத்தில் ஏற்பட்டுள்ள கணிசமான முன்னேற்றங்கள் என்பனவற்றினால், சிசு மரணவீதம் கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவர்கள் உள்ளிட்ட 1700 பேர் பணியாற்றுகின்றனர். இங்கு நாளாந்தம், 900 தொடக்கம் 1600 வரையான நோயாளர்கள் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல்கள், மோசடிகள் போன்ற மோசமான செயல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

பல்வேறு ஊழல், மோசடிகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த 1000 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், எதிர்காலத்தில் எவ்வாறு இத்தகைய மோசடிகளைத் தடுப்பது மற்றும் பெரியளவிலான ஊழல் மோசடிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் தலைவரான மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன  இந்த அறிக்கையை இன்று சிறிலங்கா அதிபரிடம் கையளிப்பார்.

இந்த ஆணைக்குழு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற 34 பிரதான ஊழல், மோசடிகள் குறித்து விசாரணைகளை நடத்தியிருந்தது.

"நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டும்". இவ்வாறு எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கிறிஸ்து நாதரின் பிறப்பினை கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எனது மனங்கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள். சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நிகழ்ந்த கிறிஸ்து நாதரின் பிறப்பானது மக்களுக்கு சமாதானத்தையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தது.

நத்தார் பண்டிகையின் நிகழ்வுகளானது கிறிஸ்து நாதர் வெளிக்காட்டிய தாழ்மை,அன்பு,பிறரை நேசித்தல், மற்றும் தியாகம் போன்ற பண்புகளை எமக்கு மீள ஞாபகமூட்டி நிற்கின்றன. மேலும் அன்பு, மனதுருக்கம், பிறரை நேசித்தல், உண்மை ,சமத்துவம் மற்றும் சமூக நீதி போன்றவை தொடர்பில் கிறிஸ்து நாதரின் போதனைகளானது இன்றும் எமது சமூகங்களுக்கு தொடர்புடையதாக இருப்பதுமன்றி எப்போதும் அவை தொடர்புடையதாகவே காணப்படும். நத்தார் தின ஒளியானது நம்பிக்கை இழந்து வாழும் எமது மக்களின் மனங்களில் நம்பிக்கையையும் சமாதானத்தையும் மீள் உயிர்ப்பிக்கிறதாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதோடு, இந்த நத்தார் பண்டிகை காலங்களை வசதியற்று இயலாமையில் உள்ள எம் சக மக்கள் மீதான எமது கரிசனையை வெளிக்காட்டும் காலங்களாக அனுஷ்டிக்குமாறும் வேண்டிக்கொள்கிறேன். இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்-, இவ்வாறு, எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.