WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

Story

ஒரு திருடனும் அவனின் காதலியும்
 (ஏலையா க.முருகதாசன்)

லண்டனில் உள்ள அந்த ஆஸ்பத்திரியில் தனக்குத் தெரிந்த பெண்ணொருவர் நோயுற்றிருப்பதாகவும் பார்க்கப் போகிறேன் வாங்களேன் ' என்றார் மைத்துனி;.இரண்டு பஸ் எடுத்து ஆஸ்பத்திரிக்குப் போய் மைத்துனியின் தோழி இருந்த அறையை நோக்கி போய்க் கொண்டிருந்த போது, பார்வையாளர் கதைப்பதற்க என்று இருந்த கூடத்தில் மைத்துனியின் தோழி இருப்பதை கண்டவுடன் மைத்துனியும் நானும் அங்கிருந்த கதிரைகளில் உட்:கார்ந்தோம்.அங்கிருந்து கோப்பி மிசினில் கோப்பி போட்டுக் கொண்டு வந்து தந்த மைத்துனி 'இவர் எனக்கு அத்தான் முறை என்ரை ஒன்றுவிட்ட அக்காவின் கணவன்,ஜேர்மனியிலை இருக்கினம்,கலியாண வீடொன்றக்கு வந்தவை,எங்கடை வீட்டிலைதான் நிற்கினம், அக்கா வீட்டிலைதான் நிற்கிறா,அத்தானுக்கு உலாத்துறது விருப்பம்.,நான் ஆஸ்பத்திரிக்கு உங்களைப் பார்க்கப் போறன் வாறியளா எனக் கேட்டன் வந்துவிட்டார்' என்று என்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகப்படுத்தினாள் மைத்துனி. நானும்' சொந்தக்காரர்களை, நண்பர்களைத்தான் பார்க்க வேண்டுமென்று இல்லை, யாரையும் பார்க்கலாம் எவருக்காகவும் அவர்கள் சுகம் பெற வேண்டும் என்று கடவுளைக் கும்பிடலாம்' என்று சொல்லியவாறே கோப்பியைக் குடித்துக் கொண்டிருந்தேன். மைத்துனியின் தோழி என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பார்வை எற்கனவே அறிமுகமானவரைப் பார்ப்பது போல இருந்தது. மைத்துனியிடம்'இவர் ராஜேஸ்வரன்தானே'எனக் கேட்க மைத்துனியும் 'ஓமோம் இவரைத் தெரியுமா' எனக் கேட்க, 'தெரியுமாவா....என்னோடு ஒரே வகுப்பில் படிச்சவர்' என்று சொல்லிக் கொண்டே எனக்கருகில் வந்து உட்கார்ந்து  என்ன ராஜேஸ் என்னைத் தெரியவில்லையா நான்தான் சந்திரகௌரி' என அறிமுகப்படுத்தினாள்.
சந்திரகௌரியை நான் லண்டனில் சந்திப்பேனென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு திக்கென்றது. அவளோடு படித்த காலத்தில் அவளுக்கு நான் செய்த ஒரு தவறு அடிக்கடி என் மனதைக் குழப்பிக் கொண்டேயிருந்தது.இன்று அவளை நேரில் கண்டதம் நான் செய்த தவறை அவள்  அறிந்திருப்பாளோ மறந்திருப்பாளோ எனக் குழம்பத் தொடங்கினேன். அன்றைய அவளின் முகத்தை என்னருகில் இருக்கும் அவளின் முகத்தில் தேடத் தொடங்கினேன். ' அப்படி என்ன என்ரை முகத்திலை தேடுகிறாய் 'என்றவளிடம், 'ஒன்றுமில்லை ' என்று சொல்லியவாறு மீண்டும் மீண்டும் அவள் முகத்தைப் பார்த்தேன். உற்றுப் பார்த்த அவளின மூக்கிற்கும் இதழுக்கும் இடையில் தெரிந்தும் தெரியாதமாதிரி மீசை போன்ற பூனைமுடி இருந்தது. அவள் படித்த காலத்தில் அது கொஞ்சம் வெளிர்சாம்பல்  நிறத்தில் இருந்தது.அதுகூட அவளுக்கு அப்பொழுது அழகாகத்தான் இருந்தது. அவளுக்குத் தெரியாமல் சக தோழர்களிடம் அவளைக் கிண்டலடிக்க அதுவே என்னையும் அவளையும் சேர்த்து வைத்து கிசுகிசுவாக பாடசாலையில் பரவியது.
பழைய நினைவுகளில் மூழ்கியிருந்த எனக்கு' ராஜேஸ் எனக்கு அடுத்த சனிக்கிழமை பிறந்த நாள். வீட்டிலைதான் செய்கிறம்.நான் நாளைக்கு ஆஸ்பத்திரியை விட்டு வீட்டுக்குப் போய்விடுவன். கட்டாயம் வா' என்று சொல்லியவள் ' மைத்துனியின் பக்கம் திரும்பி ராஜேஸை மறக்காமல் கூட்டிக் கொண்டு வாருங்கள்' எனச் சொல்லுகிறாள். அதற்கு மைத்துனியும், 'அதுதான் உங்கடை முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாரே,மனுசியோட வருவார்' கிண்டலடித்தார் மைத்துனி;.சில நிமிடங்கள் சந்திரகௌரியுடன் கதைத்துவிட்டுப் புறப்பட்டோம். அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக அதைத்தான் கொடுக்க வேண்டும். நான் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் அதுதான் எனத் தீர்மானித்தேன்.அவளுக்கு கொடுக்க வேண்டிய பரிசுக்காக கடை கடையாக சளைக்காமல் ஏறி இறங்கினேன். இறுதியில் நான் தேடிய பொருள் கிடைத்தது. அதை அழகான பெட்டியில் வைத்து, வர்ணத்தாளில் சுற்றி  வைத்தேன்.
சந்திரகௌரியின் பிறந்த நாளுக்கான சனிக்கிழமையும் வந்தது.நான்,மனைவி மைத்துனி என மூவரும் சந்திரகௌரியின் வீட்டிலிருந்தோம். அந்த வீட்டின் கூடம் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அங்கு பலர் இருந்தனர். அங்கு நின்ற நடுத்தரவயது ஆண்கள் ஒவ்வொருவரையும் என் கண்கள் நோட்டம் விட்டன' சந்திரகௌரியின் கணவன் இவராக இருக்குமோ, அவராக இருக்குமோ எனக் கண்கள் பதிந்து பதிந்து சென்றன.அங்கிருந்த ஒரு இளம்பெண் 'அன்ரி கேக் வெட்டலாம் வாருங்கோ' என்று சந்திரகௌரியை அழைக்க அவளும் மேசையில் வைக்கப்பட்ட கேக்கின் மேல் இருந்த மெழுகுவர்த்தியை கொழுத்தி பின் அதனை அணைத்து கேக்கை வெட்டினாள்.உறவினர்:கள் நண்பர்கள் அவருக்கு கேக்கை ஊட்ட'ராஜேஸ் எனக்கு கேக்கை ஊட்ட விருப்பமில்லையா' எனக் கேட்க நானும் மனைவியும் எழுந்து சென்று இருவரும் கேக்கை ஊட்டினோம், மைத்துனியும் எம்முடன் சேர்ந்து வந்து கேக்கை ஊட்டினாள்.;.எல்லாரும் பரிசளித்து முடிய நானும், தேடித் தேடி வாங்கிய அந்தப் பரிசைக் கொடுத்தேன். அவள் ஆவலுடன் பரிசைப் பிரித்துப் பார்த்தாள். வெளிப்பக்கம் மடிப்பு மடிப்பாக இருந்த அந்த மஞ்சல்நிற பென்சிலைக் கையில் எடுத்;து.' பென்சிலா' எனக் கேட்டு புருவத்தை உயர்த்தி சந்திரகௌரி என்னைளப் பார்த்தாள்
நான் எழுந்து அந்தப் பென்சிலுக்குப் பின்னால் உள்ள கதையைச் சொல்லத் தொடங்கினேன்.'நானும் சந்திரகௌரியும் ஒரே பாடசாலையில் ஒரே வகுப்பில் படித்தவர்கள். எட்டாம் வகுப்பில் படித்த போதுதான் நான் அந்த தவறைச் செய்தேன். அம்மா பென்சில் வாங்கித் தருவதும் தொலைப்பதுமாகவே நான் இருந்தேன். அன்றும் பென்சிலைத் தொலைத்துவிட்டேன். எழுதுவதற்கு பென்சில் இல்லை. இடைவேளை விட்டது. வழமையாக தண்ணீர் குடிப்பதற்குப்  பைப்படிக்குப் போகும் நான் அன்று போகாமல் முழிசியபடியே இருந்தேன். எல்லாரும் போய்விட்டார்கள். மெல்ல எழுந்து சந்திரகௌரி இருந்த மேசைக்கு மேல் வைத்திருந்த கொம்பாஸ் பெட்டியைத் திறந்த போது  அதற்குள் இது போன்ற மஞ்சள் பென்சில் இருந்தது.அது முழுப் பென்சில். அதை எடுத்துக் கொண்டு எனது இடத்திற்கு வந்த நான் அதன் கால்பகுதியை முறித்து முக்கால்பகுதிப் பென்சிலாக்கினேன். பிளேட்டால் சீவினேன். பல இடங்களில் பற்களால் கடித்து நசுக்கினேன்.இடைவேளை முடிந்து மீண்டும் வகுப்பு ஆரம்பமாகியது. தமிழ் புத்தகத்தில் உள்ள ஒரு பந்தியை சுருக்கி எழுதச் சொன்னார தமிழ் அசிரியர்;.நான் சந்திகௌரியைக் கடைக்கண்ணால் பார்த்தேன். கொம்பாஸ் பெட்டியைத் திறந்த அவள் பென்சிலைக் காணாது திகைத்தாள்.அவளின்: கண்கள் கலங்கத் தொடங்கியது.'சேர் பென்சிலைக் காணவில்லை சேர்...' என விம்மினாள்.இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல நான் தலையைக் குனிந்து கொண்டிருந்தேன். நான் பாடசாலையை விட்டுப் பல வருடங்களாகிவிட்டன. பாடசாலையை நினைக்கும் போதும் எட்டாம் வகுப்பை நினைக்கும் போதும் நான் செய்த திருட்டும் சந்திரகௌரியும் அடிக்கடி நினைவில் வரும். சந்திரகௌரியை நான் லண்டனில் சந்திப்பேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இன்று பிராயச்சித்தம் செய்துள்ளேன், கௌரி என்னை மன்னித்துவிடு' என்றேன்.
வேகமாக வந்த சந்திரகௌரி என்னை இறுக்கி அணைத்தாள். அவள் கண்கள் கலங்கியது. நானும் அழுதுவிட்டேன்.மனைவியை திரும்பிப் பார்த்தேன். அவள் மெதுவாகச் சிரித்தபடி இருந்தாள். நனைந்த கைகளில் பொத்திப் பிடித்தபடி இருந்த கடதாசியை எனது சட்:டைப் பைக்குள் வைத்தவாறே 'வீட்டுக்குப் போய் எடுத்துப் பார்' என்று என் காதுக்கு மட்டும் கேட்குமாறு கிசுகிசுத்தாள். வீட்டுக்கு வந்த நான் குளியலறையில் வைத்து அந்த கடதாசியை எடுத்து வாசித்தேன். கடதாசி கசங்கியிருந்தது  ,அதில்' ராஜேஸ் நான் உன்னைக் காதலிக்கிறேன். பலமுறை கடிதங்கள் எழுதி பயத்தில் கிழத்தெறிந்திருக்கிறேன். ஆனால் இதை கிழித்தெறியமாட்டேன். உன்னை இனி எப்ப சந்திப்பேனோ தெரியாது. பல ஆண்டுகளுக்குப் பிறகாவது  எங்கேயாவது சந்தித்தால் இக்கடிதத்தை தருவேன்.சந்திரகௌரி எனக் கையெழுத்திட்டு 6.5.66 எனத் திகதியிட்டிருந்தாள். கடிதத்தை கிழித்து குப்பைக் கூடைக்குள் கவலையுடன் போட்டேன்.
கூடத்தில் இருந்த மைத்துனியிடம் கேட்டேன்' சந்திரகௌரி கல்யாணம் செய்யவில்லையா'என்று. இல்லை என்றாள் மைத்துனி

ஓடும் ரயிலில் ஒருவன்

ஏலையா க.முருகதாசன்

வீடு போய்ச் சேருவதற்கு இன்னும் மூன்று மணித்தியாலங்களாவது தேவைப்படும்.ரயிலை விட்டு இறங்கி பஸ் எடுத்து போயச் சேர வேண்டும். எப்படி இந்த மூன்று மணித்தியாலங்களும் போகப் போகுதே என யோசித்துக் கொண்டிருந்தேன். சக பயணிகளைப் பார்ப்பதும் கண்ணாடிக்கு வெளியே தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக பொழுது கழிந்து கொண்டிருந்தது. போர் அடிக்கத் தொடங்கியது. அப்பொழுது மின்னலென ஒரு ஞாபகம் வந்தது. எனது நண்பன் பொழுது போவதற்கு வாசி என்று சொல்லி ஒரு புத்தகத்தைத் தந்தான். நண்பனின் மனைவி சுற்றித் தந்த சாண்ட்விச் வைத்த பைக்குள்ளேயே அந்தப் புத்தகத்தை வைத்திருந்ததால,; கையோடு வைத்திருந்த பையிலிருந்து அதை எடுத்தேன். நண்பன் தந்த போது புத்தகத்தின் பெயரைக் கவனிக்கவில்லை. வெளியே எடுத்து புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன்' ஓடும் ரயிலில் ஒருவன்'என்றிருந்து.
எனது பிரயாணத்திற்கும் புத்தகத்தின் தலைப்புக்கும் பொருத்தமாகவே இருந்தது. ஓடும் ரயிலில்; சக பயணிகளுடன் நானும் ஒருவன் என்று  நினைத்து மனதுக்குள் சிரித்துக் கொண்டே வாசிக்கத் தொடங்கினேன். அது ஒரு காதல் கதை போல் இருந்தது. முதல் வரியே, ' அவள் என்னெதிரில் உட்கார்ந்திருந்தாள். அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். நான,;  எனக்கு  எதிரே உள்ள அடுத்தடுத்த இருக்கைகளில் இருப்பவர்களைப் பார்ப்பது போல அவளையும் என் கண் பார்வைக்குள் அகப்படுத்தி அவளின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன்.அவள் கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். எனது  பார்வையை அவள் சந்திக்கவில்லை....' தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.
ரயில் ஒரு தரிப்பிடத்தில் நின்றது. சில விநாடிகளில் 'வணக்கம்' என்று சொல்லியவாறு ஒரு இளைஞன் எனக்கெதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்தான்.வாசித்த பக்கத்தில் விரலை வைத்து புத்தகத்தை மடித்தவாறே புன்னகைத்து அவனுக்கு வணக்கம் சொன்னேன். 'உங்கள் வாசிப்பை நான் குழப்பிவிட்டேனே; போல, நீங்கள் வாசியுஙகள்; ' என்ற அவனுக்கு, இல்லை....இல்லை பரவாயில்லை என்றவாறு புத்தகத்தை மீண்டும் பைக்குள் வைத்தேன்.
சில விநாடிகள் இருவரும் மௌனமாவிருந்தோம். அவனே பேச்சைத் தொடக்கினான்' நீங்கள் எங்கை போறியள் என்றான்' கால்ஸ்றூக' என்று ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னேன்.அவன் எங்கே போகிறான் என்பதை நான் கேட்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது என பேசாதிருந்தேன். அவனே பேச்சைத் தொடர்ந்தான்' இப்ப வாசித்தீர்களே அந்தப் புத்தகத்தின் பெயர் என்னவென்றான் 'ஓடும் ரயிலில் ஒருவன் என்றேன்'. மீண்டும் மௌனம் நிலவியது .என்னையே உற்றுப் பார்த்தான். நெற்றியை சுருக்கி கைளால் நெற்றியைத் தேயத்தபடி உங்களை எனக்கத் தெரியுமென்று நினைக்கிறன்' என்றான்.'எப்படி ' என்று கேட்டதற்கு, நீங்கள்தானே சாகித்தியன். உங்களுக்கு பேஸ்புக் இருக்குத்தானே நீங்கள் கதை எழுதுகிறவர்தானே' என அவன் சொலல்' ம்...என்று அவன் அறிந்து கொண்டதை அங்கீகரித்தேன்.
அவன் முகத்தில் முன்பிருந்த உற்சாகம் இல்லை. முகம் கலவரமாகியிருந்தது. அவனிடத்தில் ஒரு தவிப்பு இருந்தது. என்னோடு எதைப்பற்றியோ பேச விரும்புகிறான் எனத் தெரிந்தது. 
'ஏன்  ஒரு மாதிரியாய் இருக்கிறியள்' என்றேன்
'ஒன்றுமில்லை' எனப் பதில் சொன்ன அவன், 'செவ்வாய்' என்ற பெயரில் நீங்கள் எழுதிய கதையை 'சங்கமம்'சஞ்சிகையில் வாசித்தேன் என்றவன,; தொடர்ந்தான், செவ்வாய் தோசம் என்பது இரத்தத்தின் வித்தியாசத்தைச் சொல்வது. எல்லாருக்கும் எல்லா இரத்தமும் பொருந்துவதில்லை. இரத்தப் பொருத்தம் ஆண் பெண் உடலுறவுக்கு முக்கியம் என அந்தக கதையில் வாசித்தேன். அது முக்கியமா' எனக் கேட்டான். 'நான் பலரிடம் விசாரித்தறிந்தலிருந்தும் மருத்துவ ரீதியாகவும் அது உண்மைதான்' என்றேன். அவன் முகம் இறுகத் தொடங்கியது. இருக்கையைவிட்டு எழுந்த அவன் தனக்குப் பின்னால் இருந்த இருக்கைகளையும் முன்னால் இருந்த இருக்கைகளையும் பார்த்துவிட்டு உட்கார்ந்தான.;
'எழும்பி என்ன பார்த்தனீங்கள்' என்று கேட்டேன்.
'ஒன்றுமில்லை.........' என்ற இழுத்தவன், 'தமிழர்கள் யாராவது இருக்கிறார்களா' என்று பார்த்தனான் என்றவன், 'உங்களோடு கதைக்க வேண்டும் இது இரகசியம் போன்றது, நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருக்கிறன். அதற்குக் காரணம் உங்களுடைய 'செவ்வாய்' என்ற கதைதான்.
நான் எழுதிய கதை அவனைக் குழப்பியதாகச் சொன்னதும் நான் அதிர்ந்துவிட்டேன்.'என்னுடைய கதை உங்களைக் குழப்பிவிட்டதா...எப்படி ..' என்று வியப்போடு கேட்டேன் தடுமாறிய குரலில், உங்களுடைய கதையில் செவ்வாய் தோசம் என்பது இரத்தத்தைச் சார்ந்தது. செவ்வாய் தோசம் உள்ளவர்களின் இரத்தம் செவ்வாய் தோசம் உள்ளவர்களின் இரத்தத்துடனேயே பொருந்தும் என்று எழுதியிருக்கிறீர்கள், அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது' என்றவன் ........மௌனமானான் .
நான் அவனை கூர்ந்து பார்த்தேன். ஏதோ சொல்ல நினைக்கிறான,; சொல்லக் கூச்சப்படுகிறான் என்பது அவனது பார்வையில் தெரிந்தது. எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றேன், சொல்லத் தொடங்கினான்.
  நான் இன்னும்   தொடர்பென்றால் உடலுறவுதானே' கேட்டேன்.
அவன் தலையை மட்டும் ஆட்டினான்.அவனே தொடர்ந்தான் 'அவர்களின் இரத்தம் என்னுடம்புக்கு பொருந்தாத இரத்தமாகவிருந்தால் எனக்கு ஏதும் வருத்தம் வந்துடுமோ என்று பயப்படுகிறேன்' என்றான்.
'ச்சாச்சா அப்படி ஒன்றும் நடக்காது பயப்படாதையுங்கோ' எனத் தைரியம் கொடுத்தேன். தமது இரகசியங்களை மூடிமறைக்கும் மனிதர்களுக்குள் தனது இரகசியத்தை வெளிப்படையாகச் சொன்ன இளைஞனைப் வியப்புடன் பார்த்தேன். இரத்த வேறுபாட்டின் பிரச்சனைதான் அவன் தன் இரகசியத்தைச் சொல்ல வைத்தது என்றும் நினைத்துக் கொண்டேன். 
அவனின் பயத்தை வைத்து அது தொடர்பான எந்த வியாக்கியானத்தையும் அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்ல நான் விரும்பவில்லை.ஊர் விசயங்களை நோக்கி எங்கள் பேச்சு திரும்பியது.  மூன்றாவது தரிப்பிடத்தில் ரயில் நிற்க அவன் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டான். 
நான் இறங்க வேண்டிய தரிப்பிடம் வரையும் அவன் சொன்னதைப் பற்றியே யோசித்துக கொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்தேன், பக்கங்களைப் புரட்டினேன். வாசிக்க முடியவில்லை. கையில் புத்தகத்தை வைத்தபடி யன்னலுக்கூடாக நிலைகுத்தி வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். இவன் கல்யாணம் செய்யும் போது தனது மனைவிக்கு எனக்குச் சொல்வது போல சொல்வானா.....சொல்ல மாட்டானா' ;...எனக்குள் ஒரு போராட்டம்.
ரயில் கால்ஸ்றூக ரயில் நிலையம் வந்தடைந்தது. இறங்கி பஸ்ஸில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தேன். ஒரு அரை மணித்தியாலத்திற்குப் பிறகு ரயிலில் சந்தித்த இளைஞன் சொன்ன கதையை மனைவிக்குச் சொன்னேன். மனைவி அதிர்ந்து போய் ' அவன் கல்யாணம் செய்யப் போகிற பெண்ணுக்குத் துரோகம் செய்யப் போகிறானே 'என கொஞ்சம் கோபமாகச் சொன்னாள்.
'சரி அதையேன் நாங்கள் மனதில் போட்டு குழப்புவான்' எனச் சொல்லி அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.
இரண்டு மதாங்கள் செல்ல ஒரு நாள்  மனைவி ' என்னோடு படித்த மகிழினியின் மகளுக்கு கல்யாணம் முடிந்துவிட்டதாம். எங்கடை சிற்றிக்கு யாரோ தெரிந்தவையை பார்க்க வாறாளாம், எங்கடை வீட்டுக்கும் புருசனோடு வருகிறாளாம்,; சாப்பாடு குடு;ப்பமா' என்றாள், ' ஓ...அதற்கென்ன குடுப்பம் எப்ப வருகினமாம் ' என்று நான கேட்க 'வாற சனிக்கிழமை' என்றாள் மனைவி.
சனிக்கிமையும் வந்தது,  விருந்து கொடுப்பதற்கு தடபுடலாகச் சமைத்து வைத்துவிட்டு, புதுத்தம்பதிகளின் வருகைக்காக காத்திருந்தோம்.
எமது வீட்டின் கட்டிட வெளிக்கதவு மணிச்சத்தம் கேட்டது. மகிழினியின் மகள்தான் கணவனுடன்  வருகிறாள் என எதிர்பார்ப்புடன், கதவு திறப்பதற்குரிய பட்டனை அமர்த்திவிட்டு வீட்டுக் கதவைத் திறந்தபடி காத்திருந்தோம். படியேறி வந்தவர்களில் முதலில் மகிழினியின் மகளின் முகமே தெரிந்தது. எனது மனைவியைக் கண்டதும் 'அன்ரி' என விரைந்து வந்து அணைத்தாள். அங்கிள் என என்னையும் விளித்து கைலாகு கொடுத்தாள். தொடர்ந்து அவள் பின்னால் வந்து எங்களிருவருக்கும் கைலாகு கொடுத்த இளைஞனைப் பார்த்தேன். ரயிலில் சந்தித்த அதே இளைஞன்தான் அவளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான்.
என்னைக் கண்டதும் அவன் முகத்திலிருந்த புன்சிரிப்பு மறைந்து முகம் இருண்டது. அவனை முன்பு சந்திக்காதது போல நான் உள்ளே வாருங்கள் என அழைத்து வந்து உட்காரச் செய்தோம். 
மனைவி சமையல் செய்தவற்றைக் கொண்டு வந்து மேசையில் வைத்துக் கொண்டிருந்தாள். மகிழினியின் மகளிடம் பெயரைக் கெட்டேன். அவள் தன்னுடைய பெயர் ரஜிதா என்றும் புருசனின் பெயர் ஜனகன் என்றும் சொன்னாள். கணவனின் முகத்தைப் பார்த்த அவள் அவன் சோர்ந்திருப்பதைக் கண்டதும்'ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு, தலையிடிக்குதா' எனக் கேட்க' இல்லை ஒன்றுமில்லை' என்றவன் என்னை நேராகப் பார்ப்பதைத் தவிர்த்தான். அவன் தவிப்பை உணர்ந்த நான் இயல்பாகச் சிரித்து அப்பொழுதுதான் அவனைச் சந்திப்பது போல'ஜனகன் எலுமிச்சம் பழம் கரைத்துத் தரவா குடிச்சால் தலையிடி போய்விடும்' என்றேன். அவனோ வேண்டாம் என்ற சொல்லியும் வேகமாகப் போய் எலுமிச்சம் பழத்தைக் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தேன்.
இதற்கிடையில் மனைவி ' சரி சாப்பிட வாங்கோ' என மகிழினி 'என்ன அன்ரி வந்தவுடனே சாப்பிடவா, கொஞ்ச நேரம் கதைச்சிட்டுச் சாப்பிடுவோமே' என சாப்பிட்டுக் கொண்டே கதைக்கலாம்'  என்றாள் மனைவி.
நால்வரும் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். மனைவி ரஜிதாவின் தாயுடன் ஒரே வகுப்பில் படித்த காலத்தை இரசித்து இரசித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பது போல ஜனகன் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நானும் அன்றுதான் அவனைச் சந்திப்பது போல கல்லுளி மங்கனாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தேன்.
நான் கதை எழுதுபவன், கிண்டிக்கிளறிப் பூராயம் புடுங்குவது எனது வேலை. கிடைத்த இடைவெளியி;ல், இரண்டு பேருக்கும் பேசித்தான் கல்யாணம் நடந்ததோ எனக் கேட்க, ' இல்லை அங்கிள், விரும்பி பிளஸ் பேசி என்று உறசாகமாச் சொன்னாள் ரஜிதா.  ' எத்தனை வருசமாக ' என்ற முடிப்பதற்குள் '; மூன்ற வருசமாக விரும்பியிருந்தோம் இல்லையா' என மிகவும் இயல்பாகச் சொன்னாள் ரஜதா'
நான் கதைத்துக் கொண்டிருப்பதை இடைமறித்து மனைவி தனக்கும் தனது தோழிக்குமுள்ள சினேகிதத்தைப் பற்றியே ரஜிதாவுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள். ஜனகனால் எங்கள் உரையாடலுடன் ஒட்டிக் கொள்ள முடியவில்லை. ஒப்புக்குச் சிரித்தான். அதைக் கவனித்த ரஜதா, இவருக்கு என்ன நடந்தது வரும் போது சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டு வந்தாரே...அவள் முடிக்க முந்தி' இந்த வெய்யில் எல்லாரையும் குழப்பிவிடும், அவருக்கு ஒன்றுமில்லை என்று' அவன் நிலையை உணர்ந்து சொன்னேன். சாப்பிட்டு முடிந்ததும் கதைத்துக் கொண்டிருந்தோம்.
எனது மனைவி சொன்ன' கல்யாணம் செய்யிறவளுக்கு துரோகம் செய்யப் போகிறானே' என்ற சொற்கள் திரும்பத் திரும்ப எனக்குள் மோதிக் கொண்டிருந்தன. என்னைச் சமாளிப்பதே எனக்குப் பிரச்சினையாகவிருந்தது. நடித்துக் கொண்டிருந்தேன். 
மாலைத் தேனீரையும் குடித்துவிட்டு விடைபெற்றக் கொண்டு அவர்கள் போய்விட்டார்கள். நான் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துக் கொண்டிருந்தேன். 
அன்று ரயிலில் சந்தித்த இளைஞன் உனது தோழியின் மருமகன்தான் என எப்படிச் சொல்வேன்.ஆனால் ஒருநாள் சொல்லத்தான் வேண்டும்.

ஊடகவியலாளர் ஜி. நடேசன் எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு 12 வருடங்கள்


ஈழத் தமிழ் மக்களின் நலவாழ்வை வெகுவாக விரும்பிய ஊடகவியலாளர் ஜி. நடேசன் எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன. பிரிவுத் துயரால் துவண்டுபோன அவரது குடும்பத்தினரதும் அவரை மானசீகமாக நேசித்த அவரது நண்பர்களினதும் துயரம் இன்னமும் முடிவிற்கு வரவில்லை. நடேசன் அவர்களின் படுகொலையோடு ஆரம்பமான மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் தற்போதுதான் – 12 வருடங்களின் பின்னர் – ஓரளவு குறையத் தொடங்கியுள்ளது. அதன் விளைவாக முதன்முறையாக அவருக்கான அஞ்சலி நிகழ்வொன்று அவர் பெரிதும் நேசித்த மட்டக்களப்பு மண்ணில் நிகழ்த்தப் பட்டிருக்கிறது.

ஒரு மனிதன் பன்னிரெண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் மறக்கப்படாமல் நினைவுகூரப் படுகிறான் என்றால், அவன் மக்களுக்காக விசுவாசமாகப் பணியாற்றி இருக்கிறான் என்றே அர்த்தப்படும். ஆனால், இந்த நினைவுகூரல் நிகழ்வில் நடேசனின் நண்பர்கள் பலர் – அல்லது அவரது நண்பர்கள் எனத் தம்மைக் கடந்த காலங்களில் காட்டிக் கொண்ட பலர் – கலந்து கொண்டிருக்கவில்லை. நடேசன் அவர்கள் கொல்லப்பட்ட காலத்தில் நிலவிய இருண்ட சூழலும், அதன் பின்னர் தமிழர் அரசியலில் – குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் – ஏற்பட்ட தலைகீழ் மாற்றமும் இதன் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்கக் கூடும்.

எதுவாக இருந்தாலும், நடேசன் அவர்களின் நினைவு நிகழ்வில் உரையாற்றிய வீரகேசரி வாரவெளியீட்டின் முன்னாள் ஆசிரியர் வி.ரி. தேவராஜ் கூறிய பல விடயங்கள் நடேசனின் நண்பர்கள் என வகைப்படுத்தப் படுவோர் கலந்து கொள்ளாமைக்கு வேறு காரணங்களும் உள்ளன எனத் தெளிவுபடுத்துவதாக உள்ளன. நடேசனின் கொள்கைகள் சிலருக்குப் பிடித்தமில்லாமல் இருந்திருக்கக் கூடும். ஆனால், கடந்த காலங்களில் அவர்கள் அதனை வெளிப்படுத்தி இருந்திருக்கவில்லை.

நடேசன் அவர்களின் இலட்சியம் ஒன்றும் யதார்த்தமற்றதோ, அல்லது தனித்துவமானதோ அல்ல. பல தமிழ் ஊடகவியலாளர்களைப் போன்று அவரும் பிரபாகரன் காலத்திலேயே ஈழம் மலர்ந்துவிட வேண்டும் என விரும்பினார். அவ்வாறு மலருகின்ற ஈழம் சமதர்ம ஈழமாக, பொதுவுடமைச் சித்தாந்தத்தின் படி ஆளப்படுகின்ற ஒரு தேசமாக இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஈழம் சாத்தியப்படாத விடத்து, ஆகக் குறைந்தது சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வாவது கிடைத்துவிட வேண்டும் என்பதே அவர் கனவு.

மட்டக்களப்பு தொடர்பாக அவர் கொண்டிருந்த கனவு வித்தியாசமானது. மட்டக்களப்பைப் பொறுத்தவரை, ‘பெரும்பான்மையான மக்கள் அப்பாவிகள், அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைத்துத் தரப்பட வேண்டும். யாழ் மேட்டுக்குடி சிந்தனை உடையவர்களிடம் இருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” என அவர் விரும்பினார். அதற்காகப் பாடுபடவும் செய்தார். அதேவேளை, மட்டக்களப்பில் நிலவும் தலைமைத்துவப் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவலை கொண்டிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்குத் தலைமை தாங்கும் நபர்கள் போதிய அறிவும், தூரநோக்குச் சிந்தனையும் அற்றவர்களாக இருப்பது தொடர்பில் கவலை கொண்ட அவர் இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக முயல வேண்டியதன் தேவை தொடர்பில் எங்களோடு அடிக்கடி கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். தூரதிர்~;டவசமாக இத்தகைய நிலைமை தற்போதும் மாறாமல் இருப்பதையே காண முடிகின்றது.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை அவர்களிடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் தேவை என்பது அவரது நிலைப்பாடு. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பிரதித் தலைவராகப் பணியாற்றிய வேளையிலும், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய வேளையிலும் அவரது சிந்தனையும், செயற்பாடும் அவரது நிலைப்பாட்டை ஒட்டியதாகவே இருந்தன.

ஆனால், அவரது படுகொலையைத் தொடர்ந்து எங்களைப் போன்ற ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேறியதாலும், வேறு பலர் அஞ்ஞாதவாசம் சென்றதாலும், காலச்சூழல் காரணமாக அரசியல் வாதிகளுக்கு ஜால்ரா அடிக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக அதிகரித்து விட்டதாலும், இன்று மட்டக்களப்பில் ஊடகப் பணி முன்னரைப் போல காத்திரமானதாக இல்லை.

இளம் ஊடகவியலாளர்களுக்கு முறையான வழிகாட்டல் இல்லாமை, ஊடகவியலாளர்கள் மத்தியில் புரிந்துணர்வும் ஒற்றுமையும் இல்லாமை, குறிப்பாக தமிழ் – முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மத்தியில் ஐக்கியம் இல்லாமை, பொது விடயங்களில் ஒத்த கருத்து இல்லாமை, நடுநிலை பேணாமை, குழு வாதம், அரசாங்க ஊழியர்களாக இருந்து கொண்டு பகுதிநேர ஊடகர்களாகக் கடைமையாற்றும் ஒருசிலர் அரச அதிகாரிகளைத் திருப்திப் படுத்தும் விதமாக நடந்து கொள்ளுதல், ஒருவரை ஒருவர் தள்ளி விழுத்துவதற்கு முயற்சித்தல் எனப் பல குறைபாடுகளைப் பட்டியலிட முடியும்.

நடேசன் அவர்களின் பன்னிரெண்டாவது நினைவு தினத்திலாவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இந்த விடயங்கள் தொடர்பில் கவனஞ் செலுத்தி தம்மைச் சுய விமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். இது கூட நடேசன் அவர்களுக்குச் செலுத்தும் ஒரு அஞ்சலியாக அமையக் கூடும்.

அதேவேளை, ஊடகவியலாளர்கள் தாம் யாருடன் இணைந்து பயணிக்கின்றோம் என்பது தொடர்பிலும் ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சமூகத்திற்கு வழிகாட்டும் பொறுப்பில் உள்ளவர்கள், தம் மீது வேறு எவரும் சவாரி செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற தெளிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்துடன், இன்று தங்களுக்கு சமூகத்தில் வழங்கப் பட்டிருக்கும் அந்தஸ்து தமது முன்னோடிகளின் உழைப்பிலும், தியாகத்திலும் உருவானது என்பதை நினைவில் கொண்டு தமது பணியின் மாண்பை நிலை நிறுத்துபவர்களாகத் தம்மை அவர்கள் செதுக்கிக் கொள்ள வேண்டும்.

மாறாக, மரணித்தவர்களின் தியாகத்தில் பணம் சம்பாதிப்பவர்களாக அவர்கள் நடந்து கொள்ளக் கூடாது.
தேவராஜ் அவர்களின் உரையைச் சரியாகப் புரிந்து கொண்டால் நிச்சயம் ஒரு மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கலாம். காலத்திற்கு ஏற்பத் தம்மை மாற்றிக் கொள்ள முன்வராதவர்கள் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் வீசப் படுவார்கள் என்பதற்கு ஏராளம் எடுத்துக்காட்டுகள் உள்ளன என்பதை இத்தகையோர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நடேசன் போன்றோரின் சிந்தனை.


ஆக்கம் -சண்  தவராசா (Journalist)

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

.