WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

’’விழுதல் என்பது எழுகையே’’  26 எழுத்தாளர்கள் எழுதியகதை நிறைவுபகுதிகள்

END of the  STORY 2--4


”விழுதல் என்பது எழுகையே” கதையின் வித்தியாசமான 4 நிறைவுப்பகுதிகள்  4  எழுத்தாளர்கள்  எழுதினார்கள் 

இவர் இறுதியான 

4வது பகுதியை நிறைவாக்கினார்.


நிறைவுப்பகுதி 4  நோர்வேயில் இருந்து 

திரு.நோர்வே நக்கீரன் அவர்கள் 

   எழுதிய முடிவுப் பகுதி 4.


(மற்றய முடிவுப் பகுதிகள் 1- 3 பார்ப்பதற்கு இதை அழுத்துங்கள்)”விழுதல் என்பது எழுகையே”  நிறைவுப் பகுதி எழுதியவர்: நோர்வே நக்கீரா                                                               ஜேர்மனியின் சர்வதேச விமானநிலையம் பிராங்பேட் விமான நிலையம் மேலெழுவதும் தரையிறங்குவதுமாக பறந்து கொண்டிருக்கிறன. 


விமானங்கள் பறப்பதை விட மக்கள் அதிவேகமாக அங்குமிங்குமாக ஓடுபாதையின்றி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சர்வதேசவிமான நிலையம் என்பதால் உலகமே அங்கு திரண்டிருந்தது. மக்கள் காலில் சிறகு கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள்


தன்தேவதையை, இலங்கையில் விட்டுவிட்டு வந்த தேவதையை மீண்டும் ஜேர்மனியில் காணத்துடித்துக்கொண்டிருந்தான் சீலன். 


தாயை, தாய்நாட்டை, தங்கையை, தன் இதயராணி பத்மகலாவை விட்டு கடைசியாக அவன் இலங்கையில் விமானம் ஏறும் போது  கண்டகாட்சிகள் மீண்டும் மீண்டும் மனத்திரையில் காணொளிகளாகக் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. 


தன்னையே தொலைத்து வி;டுவாள் தாய். இனியெப்போ காண்போம் என்பதுபோல் தங்கை. வரம்புடைத்து கண்ணீர் முத்துக்கள் மாலையாக அசையா அணங்காக வைத்த கண்வாங்காது காதலில் கசிந்து கொண்டிருந்த பத்மகலாவின் முகம் காட்சிப்படிமமாக அவன் கண்களில் தீட்சண்யமாகத் துலங்குகிறது.


சீலன் அழைத்துவந்து நண்பன் ஓடிவந்தான்


"சீலா! விமானம் சொன்ன நேரத்துக்கு தரையிறங்கிவிட்டது. உன் பத்மகலா வந்துவிட்டாள். தேவதை வனத்தில் சீ...சீ வானத்தில் இருந்து பூமிக்கு வந்துவிட்டது"


துள்ளியது இதயம் அதை அள்ளியது ஆசை. எப்படி அவளை எதிர்கொள்வது? எப்படி அவள் இருப்பாள்? மாறியிருப்பாளோ? முழங்கால் முட்டி தட்டி நிற்கும் நீளமான கத்தையான கூந்தலைத் தாங்காது தள்ளாடும் துடியிடை துடிக்கும் அழகைக்காணத் தவித்தான், துடித்தான். 


அடந்த கார் மேகக் கூந்தலினுள் சந்திரவதனம் காதல்  கணையெறிந்து கொல்லும் காட்சிகளை இதயம் தேடுகிறது. இக்காட்சிகள் அவன் நெஞ்சில் ஓடிக்கொண்டிருந்ததால் நண்பன் சொன்னது எதுவுமே அவனுக்குக் கேட்க வில்லை.


"டேய் நான் சொன்னதேதும் கேட்டதாடா. என்ன கற்பனையோ....நிஜமாகவே அவள் வந்திட்டாளடா" திடுக்கிட்டவன் தன்னைச் சுதாரகரித்துக் கொண்டு


"எங்கேயடா வந்திட்டாளா? எங்கே... எங்கே"


"அங்கே பார் கொம்பியூட்டர் என்ன சொல்லுது என்று பார்"


கடிகாரத்தையும், கணினியையும் மாறிமாறிப்பார்த்தவன் இப்போது தான் பூமிக்கு வந்தான்.


"ஆம் பத்மகலா லாணட்பண்ணிவிட்டாள். நான்தான் இன்னும் லாண்ட் பண்ணவில்லை"


"எப்படியும் 15நிமிடத்துக்கு மேலாவது செல்லும். எயப்போட்டுக்குள்ளேயே பெரிய தேசம் சுத்திவந்து பொதிகளை கிளியர் பண்ணிவர குறைந்தது 15நிமிடமாவது செல்லுமெல்லோ".


"ம் ம்... அந்த அளவுக்கு எனக்குப் பொறுமையில்லை மச்சி"


"என்னடா வந்தவுடனை வன்புணர்வாயோ...?"


"நீ காதலித்துப் பிரிந்திருந்துபார் அதன் வேதனையும் வலியும் தெரியும்.


"ஆமாம் எங்களுக்குக் காதல் தெரியாது....நாங்கள் காதலிச்சுக் களட்டி விட்டுவிட்டு வந்தவங்கள். உன்னைமாதிரி இல்லை"


"அதோ பாரடா அங்கே பாரடா என் பத்மகாலா".


தூரத்தில் கண்ணாடிகள் ஊடாக  அவள் வருவதைக் கண்டுவிட்டான் சீலன். காற்றில் அலைந்த அந்த நீளக்கூந்தல் அவளை அடையாளம் காட்டியது. கனடா உணவு தடிக்குச்சியாக இருந்தவளை மெருகேற்றி யிருந்தது.  சினிமாத்தாரகைகள் போல் சீலனின் தேவதை கண்ணாடிகளூடாக கண்விழித்தாள். 


உதயம் இதயத்தில் எழுந்து நின்று ஆடத்தொடங்கியது. இதயம் தொண்டை வரை துள்ளியது.


"மச்சி அவசரப்படாதை நீ கண்ணாடியை உடைத்துக் கொண்டு போக ஏலாது. எல்லாம் கிளியர் பண்ணிவர ரைம் எடுக்கும். ரிலாக்ஸ் மச்சி ரிலாக்ஸ்"


நண்பன் சீலனின் ஆர்வத்துக்கு அணைபோட்டு விடுகிறான்.


ஆக்கப்பொறுத்தவன் ஆறப்பொறுக்கமாட்டான் என்பது இதைத்தானோ? மீண்டும் காதலியின் நினைவில் மூழ்கத் தொடங்கிவிட்டான். 


கணங்கள் ஒவ்வொன்றும் கற்பனைகளாக விரிய நாடி, நாளங்கள் புடைப்பேறிச் சிலிர்க்க எப்படி... எப்படி அவளை எதிர்கொள்வது என்ற எண்ணம் மனதை ஆளத்தொடங்கியது. மீளமுடியாமல் தவித்தான். வெட்கமும் அவனை சிலவேளைகளில் வெருட்டிக் கொண்டிருந்தது.


நிமிடங்கள் 30தாண்டியும் அவளைக் காணவில்லை. பயங்கரவாதத்தடை பொலிஸ் பிரிவினர் அவளை அவளின் பொதிகளுடன் அழைத்துச் சொல்வதைத் தூரத்தே கண்டுவிடுகிறான். என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. 


தகவல் நிலையத்துக்கு ஓடினான். அங்கே போதிய தகவல்கள் கிடைக்கவில்லை. 


அவள் என்ன பயங்கரவாதியா? யாராவது பொய்த் தகவல் கொடுத்தார்;களா? அவளின் பொதிகளில் ஏதாவது துப்பாக்கி, போதைவஸ்துப் போன்றன கண்டெடுக்கப்பட்டதா? உலகம் ஒருகணம் சுற்றிச் சிதறியது. தன் தலைவிதியை நொந்து கொண்டான்."மச்சி யோசிக்காதை எல்லாம் நல்லபடியாகவே முடியும்" நண்பன் சீலனைத் தேற்றிக் கொண்டான்.


"என் வாழ்க்கையில் எல்லாமே கைக்கெட்டியது வாய்க்;கெட்டா நிலைதான்".


ஏதோ தீர்மானத்துக்கு வந்தவனாக தொலைபேசியை எடுத்து பத்மகலாவின் தோழிக்கு தொடர்பு கொண்டான். அவளும் தயங்கித்தயங்கியே,


"கலோ......" என்றாள்


"நான் சீலன் கதைக்கிறன். பத்மகாலாவை பயங்கரவாத்தடைப்பிரிவு பொலிஸ்  அழைத்துப் போகிறது. ஏதாவது ஏறுக்குமாறாக கொண்டு வந்தாளா? அல்லது அவளின் பொதிக்குள் சட்டவிரோதிகள் எதையாவது வைத்து விட்டார்களா? பொலிஸ் எதற்கு அவளை....." கொட்டித்தள்ளினான்


"சீலன் இங்கே பெரிய அல்லோல கல்லோலம் நடக்குது. பத்மகாலா ஜேர்மனிக்கு வந்தது அவளின் உறவினர் எவருக்கும் தெரியாது. 


அவள் கனடாவில் இருந்து முழுமையாகவே லீவ் பண்ணிவிட்டாள். டிக்கெட் போட்டது, பயணமானது எதுவுமே என்னைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அனைவரும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியவில்லை. இனி அவள் கனடாவுக்குத் திரும்பும் நோக்கம் இல்லை. செத்தாலும் கெட்டாலும் உங்களுடன் வாழ்வது என முடிவெடுக்துக் கொண்டு வந்துவிட்டாள்"


"என்ன சொல்லுறீங்கள். கலா இங்கேயே தங்கப்போகிறாளா? அவள் படித்துமுடித்த டாக்டர் படிப்பு.. தொழில்?  இதற்கான தயார்படுத்தல் ஒன்றையும் நான் செய்யவில்லையே. 


என் இறுதிப்பரீட்சை முடிந்துவிட்டது ஒரேயடியாக வந்து கனடாவில் செற்ரிள் ஆகிறது என்று அல்லவோ நான் யோசித்துக் கொண்டிருக்கிறன். இவள் அதற்குள் எதுக்கோ முந்தின எதுவோ ஆக....? இதைப்பற்றி பேந்து யோசிக்காலாம். எதற்காக அவளைப் பொலிஸ் கொண்டு போகிறது என்று தெரியவில்லை. ஏதாவது ஐடியா இருக்கா பிளீஸ்?"


"சிலவேளை அவளின் உறவினர்கள் எதாவது தகவல் கொடுத்திருப்பார்களோ"


"இருக்காலாம்.....ஆம் இருக்காலாம்.....ஓகே நான் உங்களுடன் பின்னர் கதைக்கிறேன்" பேசிக்கொண்டிருக்கவோ யோசிக்கவோ நேரமின்றி தொலைபேசித் தொடர்பை வெட்டினான்.


பத்மாகலாவுக்கு மீண்டும் தொலைத்தொடர்பு கொண்டான் தொலைபேசி மூடியே கிடந்தது. செய்வதறியாது துடித்தான். அவள் வந்த விமானநிறுவத்திடம் ஓடிச்சென்றான். 


நாய்குட்டிபோல் அவன் நண்பனும் தொடர்ந்தான். எள்ளுக்காய்கிறது...எண்ணெய்க்காக, ஆனால் எலிப்புழுக்கை எதற்காக....நண்பனாகச் சேர்ந்த குற்றத்துக்காக.


வுpமானநிலையத் தகவல்படி பத்மகாலா வந்து இறங்கி பொதிகளையும் பெற்றுக்கொண்டாள். பொதிகளைப் பெற்ற பின்னரும் சந்தேகப்பட்டதால் பொலிஸ் அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்கும் நடைமுறையும் அங்கு உண்டு என்பதை அறிந்து கொண்டான்.


மீண்டும் கலாவுக்குத் தொலைபேச எடுத்தான் தொலைபேசி திறந்திருந்தது.


"கலோ சீலனா"


"ஆமாம் என்ன நடந்தது. எதற்காக பொலிஸ் அழைத்துப்போனது. நீ என்ன பண்ணினாய். நான் தனியனாய ; என்னாலை ஒன்றும் செய்ய முடியவில்லையடி. என்ன நடக்கிறது என்று சொல்லு"


"ஒன்றுக்கும் யோசிக்காதைங்கோ. இன்னும்  ஐந்து நிமிடத்திலை வெளியிலை வருவன். என்னை ஒண்டும் பண்ண இயலாது. வீ ஆ றிவ்யூயி பட் நொட் கிறிமினல். (நாங்கள் அகதிகள் தான். சட்டவிரோதிகள் அல்ல. பயப்படாதைங்கோ நான் வைக்கிறன்"


ஏன் அதைமட்டும் ஆங்கிலத்தில் சொன்னாள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. ஓ... பொலிசார் விளங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவோ???


அதிர்ந்து போனான் இது கலாவா? இரண்டு சொல்லுக் கதைக்கவே நாலு நிமிடம் எடுக்கும் அந்தக் கலாவா இவள்? பெண்களே புதிர்தான் என்றபடி தலையைச் சொறிந்து கொள்கிறான். கனடா இவளை எப்படி எல்லாம் மாற்றிவிட்டது.


"இன்னும்  ஐந்து நிமிடத்தில் வந்துவிடுவாளாம்" நண்பனிடம் கூறியபடி வெளியேறும் வாசலுக்கு வருகிறான். 


அவளுடைய பெட்டி படுக்கையுடன் கூடிய பொதிகளை பொலிஸ்காரர்களும் சேர்ந்து இழுந்து வந்தார்கள். சீலனைக் கண்டதும் அந்த தோகை மயில் சிரித்தபடி சுரிதார் சிறகில் பறக்கத் தொடங்கியது. 


இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க ஓடினார்கள். ஆனால்  நாலு மீற்றர் இடைவெளியில் ஏதோ எண்ணிக்கொண்டவர்கள் ஓட்டத்தை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்தவண்ணம் நின்றனர். 


ஆம் ஐரோப்பிய வாழ்வுக்குப் பழக்கப்பட்ட காதலர்கள் கட்டிப்பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இங்கே இயற்கையானது. 


இருந்தாலும் எம் தமிழ்க் கலாச்சாரம் இதயத்தில் வேரூன்றியதால் இதயக் கதவுகள் ஒருதடவை தட்டப்பட்டிருக்க வேண்டும். நாணம் நிலத்தில் கோலம்போட்டது. பாவையின் பார்வை அந்த லாசர்கண் காதலை கக்கியது. எதிர்கொள்ள முடியாதவன் தலைகுனிந்தான். மீண்டும் சுதாரித்துக் கொண்டு,


"காலா என்னை கலங்கப்பண்ணி விட்டாயடி....." என்று ஆணின் பாணியில் கதையை எடுத்தான். அதற்கிடையில் அவளின் பொதியை இழுத்து வந்த பொலிசாரும் அருகில் வந்துவிட்டனர்.


"எல்லாவற்றையும் விபரமாக கதைக்கலாம். முதலில் வீட்டை போவம்."


"எங்கே கனடாவுக்கா?"


"உங்களுக்கு இப்பவும் அந்த லொள்ளு போகேல்லை"


அருகே வந்த பொலிசார்ரிடம் பத்மகலா, "இவர்தான் எனது காதலன். நாங்கள் இங்கே திருமணம் செய்யப்போகிறோம்" என ஆங்கிலத்தில் சீலனை  அறிமுகப்படுத்தி வைத்தாள். 


இவ்வளவு நட்புடன் பொலிசார் நடப்பதைப் பார்த்தால் இலங்கையில் ஆச்சரியமாகவே இருக்கும். பொலிசைக் கண்டாலே வயிறு கலக்கும் காலத்தில் வெளிக்கிட்டவர்கள் இவர்கள்.


”ஸ்பிறேகன்சி டொச்” (நீ டொச் கதைப்பாயா)" எனப் பொலிசார் சீலனைப் பார்த்துக் கேட்டார்கள்


"யா (ஆம்)"


பொலிஸ் டொச் மொழியில் பத்மகலாவின் பிரச்சனையை சீலனுக்கு விளங்கப் படுத்தினார்கள். தமக்கு கனடாவில் இருந்து வந்த தொலைத்தொடர்பால் நாம் பத்மகலாவை விசாரணைக்கு உட்படுத்தினோம். 


இவள் ஒரு பயங்கரவாதி என்றும் போதை வஸ்துக்களுடன் யேர்மனிக்குள் நுழைகிறாள் என்றும் அனாமதேயச் செய்திகள் கிடைத்தன. 


மேலும் இவள் நாடுகடத்தப்படுகிறாள் என்றும், உளவாளி என்றும் செய்திகள் கிடைத்தன. விசாரணையில் இவை அனைத்தும் சதி என்பது தெரியவருகிறது. உங்கள் திருமணவாழ்வு நலமாக அமைய வாழ்த்துக்கள் என்று பொதிகளை சீலனிடம் ஒப்படைத்துவிட்டு கைகளைக் காட்டிவிட்டுச் சென்றனர் பொலிசார்.


திருப்பிப்பார்த்தால் நண்பனைக் காணவில்லை. இனி இவன் பாவியைத் தடவ வேணுமா? என்றபடி திருப்பிப்பார்த்தால் பதுங்கிப் பதுங்கி கள்வனைப்போல் சீலனை நோக்கி வந்து கொண்டிருந்தான்.


" கலா ஓ அவனுக்கு விசா இல்லை. கள்ளமாக வேலை செய்து கொண்டு இருக்கிறான். மனைவி பிள்ளைகளுக்கு விசா இருக்கு இவனுக்கு இல்லை. சொல்கிற பொய்யை ஒழுங்காகச் சொல்லாததால் வந்த வினை"


நண்பனை அறிமுகம் செய்து வைத்துவிட்டு பொதிளை எடுத்துக் கொண்டு வந்த வானில் ஏற்றிப் புறப்பட்டனர். 


பத்மகலா அதிகம் பேசவே இல்லை. சீலனைப் பார்த்தபடி அவன் வாகனம் செலுத்தும் அழகை இரசித்த வண்ணம் இருந்தாள். இடைக்கிடை எட்டி அவன் தோள்களில் மறந்து போய் கையைப் போட்டவள் நண்பனைப் பார்த்துவிட்டு கையை எடுத்துக் கொள்வாள். 


சிவபூசைக்குள் கரடி மாதிரியாக பாவம் நண்பன். அவனும் தன்மனைவியிடம் கள்ளக்காதலன் போலவே போய் வருகிறான். அகதி விண்ணப்பத்தில் சொல்லுற பொய்களையும் சரியாகச் சொல்லாவிட்டாள் மனைவி கள்ளக்காதலிதான்.


சீலனின் வீடு வந்துவிட்டது பொதிகள் இறக்கப்பட்டு வீட்டுக்குள் அனுப்பப்பட்டுவிட்டன. தபால்பெட்டியைத் திறந்து கடிதங்களை எடுத்து வந்தவன் கலாவை மறந்தவனாக ஒரு முக்கிய கடிதத்தை உடைத்தான். 


கலாவுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. என்னை விட முக்கியமான கடிதமா? என எண்ணிக் கொண்டாள்


"கலா ரீ குடிக்கிறாயா சாப்பிடுகிறாயா?"


"ஒண்டும் வேண்டாம்"


"நீ இன்னும் மாறவே இல்லை. என்ன பிளைட்டில் (விமானத்தில்) ஏதாவது சாப்பிட்டாயோ"


"ஓம்...முதலிலை உந்தக்கடிதத்தில் என்ன இருக்கு என்று சொல்லுங்கோ" சீலனின்  அவசரம் அவளின் ஆர்வத்தைத் தூண்டியது.


"இது எனக்கு வந்து கடிதம். உனக்க எதற்கு"

"இன்றில் இருந்து உனக்கு எனக்கு எண்டு ஒன்றும் கிடையாது. எல்லாம் எமதே"


"இவளிட்டைக ;கேட்டால் ஒன்றும் நடக்காது மச்சி  மூன்று ரீ போடு. பிட்சா ஓடர் பண்ணியிருக்கிறன் அதுவும் வந்துவிடும்"


நண்பன் தேனீர்போட சீலன் கடிதத்தை உடைத்து வாசிக்கத் தொடங்கினான். கடித்தை தூக்கி  எறிந்து விட்டு மகிழ்ச்சியில் கத்திக் கொண்டு கலாவை எட்டிக் கட்டிப்பிடிக்கப் பாய்ந்தான். அவள் விலத்திக் கொண்டாள்.


"இது எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு......."


மௌனித்து நின்ற  சீலனின் தலையை எட்டித் தடவி விட்டபடி


"உங்களின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிட்டேன் சொல்லுங்கள் அது என்ன செய்தி"


நாம தொட்டால் குற்றம் அவங்கள் தொட்டாக்  குற்றமில்லையாக்கும் என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.


"சொல்லுங்கள் சீலன். அதில் அப்படி என்ன செய்தி இருந்தது"


"நீ வந்த பலனடி நான் இறுதிப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளேன் வருகிற வெள்ளி பட்டமளிப்பு விழா. நீயும் என்னுடன் வரப்போகிறாய்" என்றபடி அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான்.


மகிழ்ச்சிக் களிப்பில் அவள் தானாகவே சீலனைத் தாவி அணைத்துக் கொண்டாள்;. நண்பன்  மூன்று ரீயுடன் வெட்கப்பட்டபடி அவர்கள் அருகின் நின்றதைக் கண்டதும் சீலன்


"இதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு" என்றான்.


”ஓ அப்படியா” சீலனின் காதில் காற்றாக சொன்னாள். 


ரீ குடித்துக் கொண்டிருக்கும் போது பிட்சாவும் வந்தது மூவரும் ரீயையும் குடித்து பிட்சாவையும் சாப்பிட்ட பின் நண்பன் விடைபெற்றுக் கொண்டான். 


சீலன் வீட்டைச் சுற்றிக்காட்டினான். படுக்கை அறைக்கு வந்ததும்.


"இதுதான் எமது படுக்கை அறை" என்றான்

"எமதா? உமதா...எனதா?..... எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான்"


"உனது எனது என்று எதுவும் இல்லை எல்லாமே எமது என்றாயே. உடனை மாற்றுகிறாயே விரட்டுகிறாயேடி"


"அதுவேறை இது வேறை முடியாததுக்கெல்லாம் முடிச்சுப்போடக்கூடாது"

சிரித்தபடி சீலன்


"நீ மேலை நான் கீழே"


கலாவும் சிரித்தபடி " எல்லாம் இங்கே தலை கீழாக்கும்" என்றாள்.


"இல்லையடி கண்ணே நீ மேலை படுக்கிறாய் நான் நிலத்தில் கீழே படுக்கிறேன் என்றேன்""அதைத்தான் மேலை கீழை என்றீர்களோ பாவம் பால் குடிக்காத பூனை” என்றாள் கலா

"பெண்களின் வாயில் அம்பிட்டாள் சப்பித் துப்பிவிடுவார்கள்" என்றவன் பூராயம் விசாரிக்கத் தொடங்கினான்.


அன்று அவர்களுக்கு சிவராத்திரி அடுத்தநாள் சனிக்கிழமை என்பதால் பதட்டப்பட வேண்டியதில்லை.

-----------------------------------------------நாட்கள் உருண்டது பட்டமளிப்பு விழாவுக்கு போவதற்கு முன்னர் கலாவும் சீலனும் எதைப்பற்றியோ கடுமையாகக் விவாதித்துக் கொண்டிருந்தனர். 


வாழ்க்கையின் முக்கியமான விடயங்கள் கதைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியக்கூடியதாக இருக்கிறது. இறுதியில் அவள் இணங்குவது போல் தோன்றுகிறது. அவசர அவசரமாக வெளிக்கிட்டு மண்டபத்தை வந்தடைந்தனர்.


ஜேர்மன்மக்களால் நிறைந்திருந்த மண்டபம் விழாக்கோலம் பூண்டிருந்தது. சீலனின்  பட்டமளிப்பு விழாவைப் பார்ப்பதற்காக வந்த நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர் அனைவருக்குமாக இரண்டு வரிசைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. 


கலாவை தமிழர்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான் சீலன். சீலனுடன் பல்கலைக் கழகத்தில் படித்த பெண் ஆண்கள் அனைவரும் சீலனை வாழ்த்தினார்கள். அவர்களுக்கும் தன்காதலி எதிர்கால மனைவி என்று அவளை அறிமுகப்படுத்தினான். 


ஜேர்மனியப் பெண்கள் அவளையும் கன்னத்தில் கன்னம் வைத்து கொஞ்சிய பின் கலாவின் அழகை வர்ணித்தார்கள். அவனிள் நீள் கூந்தலை தொட்டு தடவிப்பார்த்து இரசித்தார்கள். சீலன் நீ கொடுத்து வைத்தவன் என்று நேராவும் சொல்லிக் கொண்டார்கள். 


பெண்கள் கன்னத்தில் கன்னம் வைத்து கட்டியணைப்பது வாழ்த்துவது இங்கு வழமையான விடயம். அப்படி ஜேர்மனியப் பெண்கள் சீலனைக் கொஞ்சுவது பத்மகலாவின் உணர்வுகளை உரசத்தான் செய்தது. 


கனடா நாட்டில் இருந்து வந்தாலும் தன் காதலன் முழுமையாகத் தனக்கே என்ற உடமை உணர்வு பொறாமையாக வெளிப்படத் தொடங்கிறது. 


சீலன் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல் தனது காதலியை தெரிந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தினான். கலாவுக்கு அது பெருமையாக இருந்தாலும் யாராவது பெண்கள் சீலனை உற்றோ, குறுகுறு என்றோ பார்க்கிறார்களா? என்பதையும் கவனித்தாள். இது பெண்களுக்கு உரிய இயற்கையான குணம் இவளை மட்டும் விட்டுவிடுமா என்ன?

இவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பிரபல்யங்கள் இருக்கையில் அமர்ந்தவண்ணம் தனது பொறாமை மூட்டைகளை கொட்டத் தொடங்குகிறாள்


"அந்த வெள்ளைகாரப் பெட்டையள் எல்லாம் பாய்ந்து பாய்ந்து இறுகக்கட்டிப்பிடித்துக் கொஞ்சுதுகள் இவரும் சிரிச்சுக் கொண்டு கட்டிப்பிடிப்பாராக்கும்" பொருமிக் கொள்கிறாள்


"கலா இது மேற்குலகம் நாங்கள் கும்பிடுவது போல் இங்கே கக் பண்ணுவார்கள் கனடாவில் இருந்து வந்த உனக்கு இது கூடத் தெரியவில்லையா"


"அதுக்கு நான் ஒருத்தி காதலி பக்கத்திலை இருக்கிறன் எண்டு நீங்களாவது..."


"அடி.. நீ என்னடி சிறீலங்காவில் இருந்து வந்த பெண்கள் மாதிரி இருக்கிறாய்"


"என்ன மாதிரியானாலும் நான் சிறீலங்கா தமிழ்பெண் தான். இதை எந்தக்காலமும் மாத்த முடியாது. மாறவும் மாட்டன். இதுக்கெல்லாம் ஒரு முடிவு வரத்தானே போகுது" இரைந்து கொள்கிறாள்


விழா ஆரம்பமாகிறது. ஆட்டம் பாட்டும் கொண்டாட்டமாக மணிகள் ஓடத்தொடங்கியன. பட்டமளிக்கும் வேளை ஆரம்பமானது சீலனும் அழைக்கப்பட்டான். கறுப்புகோட்டு சூட்டுடன் அத்தனை பத்து ஜேர்மனிய மாணவர்களுடன் சீலன் சிரித்த முகத்துடன் நின்ற காட்சி பத்மகலாவை பெருமிதப்படுத்தியது.


வெள்ளை டாக்டர் உடையுடன் கழுத்தில் ரெதஸ்கோப்புடன் இருவதும் அன்று தம்மைப்பற்றிக் கண்ட கனவுகளை எண்ணிப்பார்க்கிறாள். 


சீலன் டாக்டராக வரக்கூடாது என்பதற்காக எத்தனை திட்டங்களைப் போட்டு என்னவனை இவ்வளவு நாடுகள் துரத்தி டாக்டர் எண்ணத்தை மறக்கடித்து இன்று இஞ்சினியராக்கி இருக்கிறது விதி. இதன் பின்னாலும் இறைவன் சூட்சுமம் என்னவோ?


பட்டமளிப்பு விழாக்களில் சில நிறுவனங்கள் தாமாகவே முன்வந்த திறமையாகச் சித்தியடைந்தவர்களை தெரிவு செய்து வேலை கொடுத்து உறுதிப்பத்திரமும் வழங்குவார்கள். 


சீலன் பகுதி நேரமாக வேலைசெய்யும் பி எம் டபிள்யூ கார் கொம்பனியும் வந்திருந்தது. பட்டமளிப்பு முடிந்தவுடன் அவர்கள் முன்வந்து தாம் யார் யாரை தெரிவு செய்திருக்கிறோம் என்பதை அறிவிப்பார்கள். பி எம் டபிள்யூ கொம்பனி சீலனைத் தெரிவு செய்திருந்தது.


சீலன் உரையாற்றும் நேரம் வந்தது. பத்மகலா பரபரப்பானாள். இனம் புரியாத தவிப்பு ஏக்கம் எதிர்பார்ப்பு என உணர்வுகளின் போராட்டம். அப்படி என்ன பேசப்போகிறான் இவள் எதற்காக இப்படி அரக்கப்பறக்கிறாள். சீலன் தனது உரையை நிதானமாக ஜேர்மன் மொழியில் தொடங்குகிறான்.


நான் ஈழத்தில் இருந்து வந்த ஏதிலி....அகதி. என் தாய்மண்ணில் என்னால் என்மக்களுடன் வாழமுடியாத துர்ப்பாகியசாலி. குண்டுகளுக்கும், தோட்டாக்களுக்கும் பயந்து உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு போக்கிடம் அற்று இறுதியில் நான் வந்தடைந்தது என்னைக் இருகரம் நீட்டி அழைத்த என் சின்னத்தாய்  ஜேர்மனியிடந்தான். 


என் சின்னத்தாய் முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் எப்படியெல்லாம் காயப்பட்டாள் என்பதை அவள் உணர்ந்திருந்ததால் என் துயரையும் அவள் புரிந்துகொண்டாள். 


என் சின்னத் தாயான ஜேர்மன் நாட்டுக்கும் இந்நாட்டு மக்களுக்கும் நான் என் உயிருள்ளவரை நன்றியுணர்வுடன் இருக்கக் கடமைப்பட்டவன்.


கரகோசம் வானைப் பிளந்தது. கண்களில் கண்ணீர் ததும்பியது. பலர் எழுந்து நின்றே கைதட்டினார்கள். சீலன் தொடர்ந்தான்.........


என்னை இவ்வளவு காலமும்  மெக்கானிக்காக வேலை செய்யவும், பின் என்னை நிரந்த பொறியியலாளனாக ஏற்ற பி எம் டபிள்யூ கொம்பனிக்கு என் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் என்னால் உங்கள் கொம்பனியில் தொடர்ந்து வேலை செய்யமுடியாத  நிலையில் உள்ளேன் என்பதை மிகக் கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


சபை ஒருகணம் அமைதியானது. 


வேலை எடுப்பதே எட்டாப்பழமாக உள்ளபோது கிடைத்த பெரிய வேலையையே உதறித் தள்ளுகிறானே இந்த மடைப்பயல் என்று எண்ணினார்;களோ என்னவோ? இவன் என்ன பைத்தியமா? என்று வினாவுவது போல் ஆச்சரியத்துடன் காத்திருந்தனர். 


கொம்பனி முதலாளியின் முகத்தில் ஈ கூட ஆடவில்லை. ஆச்சரியமும் வேதனையும் எதிர்பார்ப்பும் நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார், சீலன் தொடர்ந்தான்........


என் உடல், பொருள், ஆவி அனைத்தும் என் தாய்க்குச் சொந்தமானது. என்தாய் நாட்டுக்குச் சொந்தமானது. கற்றகல்வி, பெற்ற செல்வம், என் வியர்வை, இரத்தம் அனைத்தும் என்மண்ணைச் சேரவேண்டியது. நாம் குழந்தையாக இருந்தபோது தொட்டு நக்கியது எம் மண்ணைத்தான். 


இது இன்றும் என்னுடலில் உதிரமாக உள்ளத்தில் உணர்வுடன் உறைந்து கிடக்கிறது. இந்த ஜேர்மன் நாடு எனக்குக் கற்றுத் தந்தவற்றை நினைவுபடுத்துகிறேன். 


முதலாவது உலகயுத்தத்தில் ஜேர்மன் மீது அதியுயர் போர்க் குற்றவரி விதிக்கப்பட்டு வறுமையில் அல்லாடியபோது இவர்கள் நாட்டை விட்டு ஓடியிருந்தால் இன்று ஜேர்மன் என்ற ஒரு வல்லரசை உலகம் கண்டிருக்காது. நாம் ஜேருமனியர்கள் என்று பெருமைப்பட ஒருபிடி மண் இருந்திருக்காது. கிட்லர் என்ற ஒரு தனிமனிதனால் இரண்டாவது உலகயுத்தம் முடிந்தபின்னரும் இந்நாடு வெறுக்கப்பட்டது. இதையே நான் எனது நாட்டுடன் இணைத்துப் பார்க்கிறேன். தவறுகள் செய்யா மனிதர்களும் இல்லை சமூகங்களும் இல்லை. மீள எழுவோம்...மீண்டு வருவோம்.


என் மண், மரங்கள், நிலவு,சூரியன், ஆடு மாடு கோழி எவையுமே போருக்குப்பயந்து நாட்டை விட்டு ஓடவில்லை. 


மரங்கள் கூட என் மண்ணைப் பற்றிக்கொண்டு இன்றும் நிற்கிறன. ஒரு சின்னச்செடிக்கு மண்மேல் உள்ள பற்று எமக்கு இல்லை என்றால் எப்படி?. 


ஏன் மண் என்று பெருமைப்படும் நான் போருக்குப் பயந்து கோழையாக என்மக்களைப் பிரிந்து, ஏதிலியாக எத்தனை ஐரோப்பிய மண்ணில் பிச்சை எடுத்தேன். 


என்று என் மண்ணை விட்டு நீங்கினோமோ அன்றிலிருந்து நாம் அன்னியர்தான். எம்மண்ணுக்கும் அந்நியர்கள். உலக மக்களுக்கும் அன்னியர்கள். இன்று நாம் உணர்வுகளால், உள்ளத்தால், கலாசாரத்தால் எம்பிள்ளைகளிடம் இருந்தும் அன்னியப்பட்டே நிற்கிறோம்.


நான் இந்தப் பெருமேடையில் பி எம் டபியூ கொம்பனியிடம் அன்பாக வேண்டிக் கொள்வது இதுதான். எமது நாடு விவசாயநாடு. உலகத்துக்கே உணவளிக்கும் வளம்கொண்ட நாடு. அங்கே அது கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டு, கந்தக்காற்றால் நிரப்பப்பட்டும் கிடக்கிறது. 


என் தாய் நிலம் அன்னியன் காலடியில் இறுதி மூச்சுக்காகச் சேடம் இழுத்துக் கொண்டிருக்கிறது. அவளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு. 


எமக்கு உங்கள் கொம்பனி போன்ற பெரிய கொம்பனிகளின் உதவி தேவை. எனது திட்டப்படி மலிவான விலையில் உழவு இயந்திரங்களையும், முச்சக்கரவண்டிகளையும் அங்கேயே தயாரித்து மலிந்த விலையில் விற்பனை செய்வதுடன், மேலதிகமான தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யவும் விரும்புகிறேன். 


உங்கள் உதவியுடன், உங்கள் பெயரில், தொழிற்சாலைகளை நான் உருவாக்க விரும்புகிறேன். அதற்கான அனுமதியையும் உதவியையும் தந்துதவ ஆவன செய்வீர்களா?


கொம்பனி முதலாளி தனிய எழுந்து நின்று அவனை ஆமதிப்பதுபோல தன் கைகளை உயர்த்தி தட்டினார். 


அவரைத் தொடர்ந்து அனைவரும் எழுத்து நின்று கைகளைத் தட்டினார்கள். சீலன் பத்மகாலாவை அடிக்கடி பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தான். அவள் கண்கலங்கி பூரித்துப்போய் இருந்தாள். கைக்குட்டை கண்ணீர் குட்டையானது.


நான் எனது நெடுநாள் காதலியும் என் எதிர்கால மனைவியுமான டாக்டர் பத்மகலாவை மேடைக்கு அழைக்கிறேன்.


என்றபடி தமிழில் அவளை வருமாறு அழைத்தாள். அவளும் தன்னை அழகாக அலங்கரித்து சொர்க்கத்துத் தேவதைபோல் மேடைநோக்கிப் பறந்து கொண்டிருந்தாள்.  மேடையில் நிற்கும் போது சோடிப் பொருத்தும் பிரமாதமாகவே இருந்தது.


எம்மிருவருடைய கனவும், கற்பனையும் டாக்டராகி எம்மக்களைப் காத்து, உதவவேண்டும் என்றே எண்ணினோம். விதி என்னை விரட்டி விரட்டி பொறியிலாளன் ஆக்கியது. 


இந்த மேடையில் என் சின்னம்மா நிலத்தில் என் ஜேர்மனியச் சகோதரங்களின் முன்னிலையில் எனது காதலியான என் பத்மகலாவை என் மனைவியா வரிந்து நாம் மோதிரத்தை மாற்றிக் கொள்கிறோம்.


அவர்கள் மோதிரத்தை மாற்றும்போது சபை எழுந்து நின்ற வாழ்த்தியது. சிலர் யேர்மனிய தேசியகீதத்தை பாடுவது கேட்கிறது. 


ஆம் ஒருதேசிய உணர்வு இன்னொரு தேசியத்தைத் தட்டி எழுப்புகிறது. பத்மகலா தாவிப் பாய்ந்து கட்டியணைத்து அவன் கன்னங்களின் முத்தமாரி பொழிந்தாள். ஆம்...அந்தத் தமிழ் தந்த நாணம் எங்கே போனது?  முத்தங்களை ஏற்றுக்கொண்டவன் மெதுவாக அவள் காதுகளில் " இதுகள் எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகு" என்றான். 


அவள் அவன் காதில் கடித்து ஜேர்மன் பெட்டைகள் கட்டிப்பிடித்துக் கொஞ்சினால் மட்டும் ஏற்றுக் கொள்வீர்களோ என்று காதுள் கிசுகிசுத்தாள்.


சீலன் தற்போது தன் துணைவியின் கரங்களைப் பற்றியபடி மீண்டும் பேச ஆரம்பித்தான். திரைகடலோயும் திரவியம் தேடு என்றார்கள் நாம் திரவியம் மட்டுமல்ல கல்விச் சொல்வத்தையும் பெற்று அறிவு வளங்களை எம்நாட்டுக்குக் கொண்டு செல்கிறோம். 


நான் வெறும் டாக்டராக படித்து முடித்திருந்தால் மற்றைய டாக்கர்கள்  போல் யாரோ ஒருவருக்குக் கீழ் வேலை செய்பவனாக இருப்பேன். 


ஆனால் நான் என்மக்களுக்கு வேலை வாய்பையும், வாழ்வாதாரத்தையும், சுயதொழிலையும் கொடுக்க விரும்புகிறேன். சுயதொழிலுக்கு ஊக்குவிக்க விளைகிறேன். 


என்மக்களை தன் காலில் தன்னிறைவுடன் நிற்கும் மனிதர்களாக்க விரும்புகிறேன். இந்தப்பலத்தையும் மனவுறுதியையும் தந்தது நான் அடிபட்டு மிதிபட்டு எழுந்த இந்த அகதி வாழ்க்கைதான். 


நாம் ஏதிலிகள் அல்ல உலகிற்கே முதன் முதலில் நாகரீகத்தைக் கற்றுத்தந்தவர்கள். மானத்தை மறைக்க பருத்தி பயிரிட்டு நூல் நூற்று ஆடை பின்னியவர்கள். முதன் முதலில் மரவுரி களைந்தவர்களும் தமிழர்களே என்பதை இங்கே அடக்கத்துடன் சொல்வதில் பெருமை கொள்கிறேன். 


எனது என்மனைவியின் அறிவும் எம்மக்களுக்கே பயன்படும். அங்கே மருத்துவ நிலையங்களை நிறுவி எம்மக்களுக்கு இலவசமாக அல்லது மிகக் குறைந்த செலவில் வைத்தியம் செய்ய விரும்புகிறோம்.


அன்று முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் நாடு நாடாக, ஊர் ஊராக, குருதியும் கண்ணீருமாக தெருத் தெருவாகக் கத்தினோம் எங்களைக் காப்பாற்றுங்கள், எம்மக்களை மீட்டுத்தாருங்கள் என்று. 


எமது குரல்கள் எந்த ஐரோப்பிய, அமெரிக்க ஏன் ....? உலகநாடுகளின் செவிப்பறைகளைத் தட்டவே இல்லை. நாம் நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது வல்லவர்களாக, எமது மூதாதையரின் மரபணுக்களை உயிர்ப்பித்து திறமைசாலிகளாக, கல்வி கேள்விகளில் வல்லவர்களாக, பொருளாதார நிறைவுள்ளவர்களாக நாம் நிமிரும் போது எங்கள் சிணுங்கல்கள் கூட உலகின் செவிப்பறைகளில் வெடித்துச் சிதறும். 


நான் வல்வவர்களாக நிமிரும் வரை எனது எமது போராட்டம் தொடரும். இதுவும் ஒரு தன்நிறைவுப் போரே. எமது குரல்கள் நாளை ஓங்கி ஒலிக்கும். எமக்கு என் சின்னம்மா தேசத்தின், என் ஜேர்மனியச் சகோதரர்களின் உதவியும், ஆசியும், வாழ்த்துக்களுடனும் நாம் நிமிர்வோம்.


எதிர்வரும் புதன்கிழமை நான் என் சின்னம்மா மண்ணில் என்காதலியைப் பதிவுத் திருமணம் செய்தபின், வரும் வெள்ளியன்று காலை 10மணிக்கு நாடு திருப்புகிறோம். 


எமது திருமணம்  எம் தாய் மண்ணில், என் தாய் முன்பாக நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்திக் கொண்டு என்னுரையை முடிக்கிறேன்.


அன்றைய விழாவின் கதாநாயகனாக சீலனே இருந்தான். அன்று சீலனைப்பற்றி பேச்சுக்களே அதிகமாக இருந்தது. தமிழர்கள் பலர் ஏன் தம்பி இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்? என்றும் விசனப்பட்டுக் கொண்டனர்.

--------------------------------------------


வெள்ளிக்கிழமை சீலன் பத்மகலா இருவதும் நாட்டுக்குப் பயணமாகிறார்கள் அவர்களை அனுப்ப சீலனின் நண்பர்கள், பாடசாலை மாணவர்கள், பேராசிரியர்கள் கூடிவிட்டார்கள். பிஎம்டபிளயூ நிறுவனத்து முதலாளி சீலனை அழைத்து


"நான் எனது பெரிய தலைமையகத்துடன் கதைத்து உனக்குத் தேவையான பொருள்கள் பணம், அனைத்து உதவிகளையும் எமது கொம்பனியூடாகச் செய்துள்ளேன். 


நீ எத்தனை நிறுவனத்தையும் அங்கே நிறுவி நடத்தும் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கிறோம். நான் முதலிடும் பணமானது மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கும் உதவி நிதியாகக் கருதுகிறோம். 


அவற்றை நாம் திருப்பி எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீ எமது நிறுவனத்தின் நிரந்தர தலைமைப் பொறியலாளன் என்பதை எழுத்து மூலமாக உறுதி செய்யவேண்டும்."


சீலனும் தலையசைத்துக் கொண்டான். பத்திரங்கள் கைச்சாத்திடப்பட்டு கைமாறிக்கொண்டன. பறப்புக்கான நேரம் சரியாக இருந்தது. 


அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு பத்மகலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஒருவருக்கு ஒருவர் துணையாக விமானத்தை நோக்கி நடக்கிறார்கள். 


கருவுற்ற நட்பின் கண்கள் கலங்கி நின்றன. விமானத்தினுள் காலடி எடுத்து வைப்பதற்கு முன்னர் ஜேர்மன் மண்ணை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறான். அவனது மனம்

"எனக்கு அடைக்கலம் தந்து போற்றிக் காத்தவளே உன்னை நான் என்று நேசிக்கிறேன்." என்றது


பரந்து விரிந்து நிற்கும் அந்த பிரமாண்டமான பிராங்பேட் விமான நிலையம் வெறிச்சோடிக்கிடந்தது போல் இருந்தது. 


என்னை இவ்வளவுகாலமும் வைத்துக் காத்து கல்விமானாக்கிய என் தாயே நான் மீண்டும் உன்னை மடியை மிதிப்பேனா? தெரியாது. நான் எங்கு வாழ்ந்தாலும் நானும் உன்பிள்ளைதான்" என்று மனம் துடித்துக் கொள்கிறது.


விமானத்தில் காலடி எழுத்து வைக்கும் போது கூட அந்த ஜேர்மன் மண்ணையும் விமான நிலையத்தையும் திரும்பத் திரும்பப் பார்க்கிறான். நன்றி கண்களால் உப்பு உவர்ப்புடன் வழிந்து கொண்டிருந்தது. 


எம் நாட்டுச் சிட்டுக்கள் இரண்டு சோடியாக அலுமீனியப் பறவையின் வயிற்றினுள் புகுந்து பதுங்கிக் கொண்டன. 


புலம்பெயர் தமிழர்களின் மனங்களில் ஓடி, உதைத்து எழுந்தது விமானம் அண்டவெளியில், நாம் அண்ணாந்து பார்க்கும் உயரத்தில், எம் கண்ணுக்கெட்டா தூரத்தில், பறக்கத் தொடங்கி விட்டனர்;. புலத்துத்தமிழர்;களாகிய நாம் நிலத்தில் நின்றபடி அகதிகள், அன்னியர்கள், வந்தேறிகள், நிலமற்றவர்;கள், ஏதிலியாக வந்தவர்கள் என்ற அடையாளப் பெயருடன் அவர்களை அண்ணாந்தே பார்க்கிறோம். 


எங்கள் கண்ணுக்கெட்டாத் தூரம் வரை, எங்கள் கண்களில் இருந்து வானத்தில் விமானம் மறைந்து கொள்கிறது. தம் ஆத்மாவில் இருந்து ஒருபகுதி பிரிந்துபோன உணர்வுகளுடன், தூக்கிய கைகளை இறக்காது, வைத்த கண்வாங்காது சீலனும் பத்மகலாவும் பறந்தபாதையிலே வழியனுப்பவந்த நண்பர்களுடன் நாங்களும்....!!!


சுபம்

---------------


கதை நிறைவாகியது

இக்கதை கடந்த ஒருவருடமாக வெளிவந்தது.   இதுவரை  இக்கதையை திறம்பட செயற்படுத்த  உதவியவர்கள் மற்றும் கதை ஆசிரியர்கள் மற்றும் இணையத்தள ஆசிரியர்கள் அனைவருக்கமான நன்றியறிதல்களை  நிர்வாக இணைப்பாளரும்இ  நிர்வாக பெறுப்பாளரும்  திரும்பிப் பார்கின்றோம் என்ற ஒரு குறிப்பின் மூலம் உங்களுடன் நன்றியறிதலையும் அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றோம் அதையும் வரும் வாரங்களில் பாருங்கள்.

நன்றி


அன்புடன் உங்கள்

தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

நிர்வாக இணைப்பாளர் , நிர்வாக பொறுப்பாளர்.

திரு.ஏலையா முருகதாசன் , பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி

-------------------------------------------------------------------------  

கதையின் வித்தியாசமான 4 நிறைவுப்பகுதிகள்  4  எழுத்தாளர்கள்     எழுதுகிறார்கள்

(மற்றய முடிவுப் பகுதிகள் 1- பார்ப்பதற்கு இதை அழுத்துங்கள்)

நிறைவுப்பகுதி 2  இங்கிலாந்தில் இருந்து 

திரு.சசிகரன்  பசுபதி அவர்கள் 

   எழுதிய முடிவுப் பகுதி 2.' விழுதல் என்பது  எழுகையே'  நிறைவு  4 இல்  பகுதி: 2 சசிகரன் பசுபதி (இலண்டன்)


கதை தொடர்கிறது.............


கனடாவில் இருந்து ஜேர்மனிக்கு வந்த கலாவை ( பத்மகலா ) சீலன் காரில் பிராங்பேர்ட் விமானநிலையம் சென்று ஏற்றி வந்து கொண்டிருந்தான் . 

முரளியும் கலாவின் அக்கா மல்லிகாவும் இணைந்து ஏதாவது சதி செய்து தனது திருமணத்தை நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் இன்னும் அவனை விட்டு போகவில்லை . 

நேரம் இரவு 7 மணியாகிக்கொண்டிருந்தது. மழை தூறிக்கொண்டிருந்தது. ஏனோ  கலாவுக்கு முகம் சரி இல்லை . அவள் பேச்சு பசுமை இன்றி வெறும் சம்பிரதாயச் சொற்களாக இருந்தது.  

ஒருவேளை தான்  பிராங்பேர்ட்டுக்கு  வர தாமதமாகியதுதான் காரணமோ என எண்ணினான் .  ஆனாலும் அவள் முகம் செம்ஜம்பு பழம் போல சிவந்திருந்தது. 

அவள் சீலனை எதிர்பார்த்து விமான நிலையத்தில் ஒவ்வொரு இடமாக இருந்து இருந்து எழும்பி அலுத்து விட்டாள் . ' இதோ வந்துகொண்டிருக்கிறேன்,  இந்தா இன்னும் அரை மணித்தியாலத்தில் வந்துவிடுவேன்'  என்ற சீலனை ஒரு மணித்தியாலம் ஆகியும்  காணவில்லை என  எண்ணிக் கொண்டிருக்கையில்தான்  முரளி போன் பண்ணினான் ,  „என்ன கலா இப்ப எங்க நிக்கிறீங்கள்'  என்றவனிடம் , நான்  சீலனை பார்த்துக்கொண்டு  எயாப்போட்டில்  நிற்கிறேன்  என கூற முரளி  ஐந்து  நிமிடத்தில் வந்து அருகில் உள்ள உணவகத்திற்கு  அழைத்து சென்றுவிட்டான்.  

பின்  தான் தங்கி இருந்த நண்பனின் வீட்டுக்கு கூட்டிச்சென்றான்.  அந்த விலாசத்திற்கு சீலனை வருமாறு கலா மூலமாக கேட்டுக்கொண்டான். முரளி- சீலன் இருவரும் பேசுவதில்லை.  எல்லாம் கலாவை யார் திருமணம் செய்வது என்ற  போட்டியால் வந்த சர்ச்சை .  

கார் விரைவுப்  பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிரு வாகனங்கள் அவ்வப்போது பின்னால் இருந்து வந்து கடந்து போனது. இன்னும் மழை விட வில்லை.  மெதுவாக தூறிக்கொண்டு இருந்தது. 

வண்டி  தண்ணீரில் மிதப்பதுபோல ஆனால் வேகமாக சென்றுகொண்டிருந்தது. ஜேர்மனிய வெள்ளைக்கார நண்பர் ஜோசப் காரை லாவகமாக அதேவேளை நிதானமாக ஓட்டிக்கொண்டிருந்தார் . 

கலாவுக்கு பயண அலுப்பு சீற்றில் சாந்தபடி தூங்கிவிட்டாள். காரினுள் இருந்த இருட்டு எல்லோரையும் போர்த்தியிருந்தது. அந்தப்  பயணச்சூழல் நல்ல இதமான கதகதப்பான அனுபவமாக இருந்தபோதும்  அவை ஒன்றிலும் சீலனின் புலன் லயிக்க வில்லை. 

அவனின் மனம் கடந்து வந்த பாதையையும் , சந்தித்தவர்களையும் , சம்பவங்களையும் மாறி மாறி சுற்றி வந்துகொண்டிருந்தது.

முதல் முதல் வெளிநாடு வந்தபோது இருந்த மனநிலை இப்போது துண்டற மாறி இருந்தது. யாழ் பல்கலைக்கழகத்தில் படையினரால் கைது செய்யப்பட்டபோது கருக்கொண்ட இந்த வெளிநாட்டுப்பயண எண்ணம் முதற்கட்டத்திலேயே  எதுவும் பிடிக்காமல் பைத்தியம் மட்டும் பிடிக்கும் நிலையில் இருந்தது. 

அன்று சுவிசில் அந்த வெள்ளைக்காரார் இறங்கசொன்ன இடத்தில் கால் வைத்து ஆரம்பித்த  ஐரோப்பிய வாழ்க்கைப்பயணம், உயிரை உறையவைக்கும் பல தருணங்களை தனித்தே கடந்து நாளை முதல் சுமுகமாக இன்னொருவரின் துணையுடன் வேறொரு இன்பப் பாதையில் பயணிக்க இருக்கிறது . 

எனக்கும் கலாவுக்கும் நாளை திருமணம் என நினைக்கையில் மனம் விரிந்து உடல் பூரித்தது . கிழக்கிலங்கை பெண்ணுடனான வாழ்வை இந்த மேற்கத்தேய  திசையில் கட்டி முடிக்க உதவியவர்களை நன்றியோடு எண்ணிப்பார்த்தான். 

சுவிஸ்  கோப்பிக்கடையில் கண்ட முதல் ஐரோப்பிய வாழ் தமிழ் மகன் , முதல் முதல் தனது தமிழை பிறமொழியாக்கிய மொழிபெயர்ப்பாளர் இராஜேஸ்வரன் , கூட  குடியிருந்த தவத்தார் , முதல் முதல் அம்மாவிடம் பேசிய சுவிஸ் கட்டணத் தொலைபேசி, அருகிலே கண்ட முத்தமிடும்  பூங்கா காதலர்கள் , முத்தம் என்றதும் தான் ஏன் நானும் ஒருமுறை கலாவை கொஞ்சினால் என்ன ..? பின் சீற்றில்தானே இருக்கிறாள். களவின்பத்தை ஒருமுறை கண்டுவிட்டால்  என்ன...?  நாளை கட்ட போறவள் தானே ; சீச்சீ......- " தொடுகையற்ற தமிழ்க்காதல் ;  உணர்வுகளால்  மீண்டும் , மீண்டும் உயிர்ப்புடன்  துளிர்க்கும் " என ஞாபகம் வரவே  இன்னும் ஒரு நாள் தானே - நாளை பார்க்கலாம் - என அவ் எண்ணத்தை விட்டுவிட்டான்.  ஆனாலும் கலா - இப்போதும் சீலனே கணவன் - என்ற நினைப்பில் வாழ்பவள்  என நினைக்கும் போது  எங்கோ ஏதோ செய்தது.  கூடவே அவளை இறுதியாக ஊரில் கண்டது நினைவில் வந்தது. 

சுதந்திரதினத்திற்கு கறுப்புக்கொடி கட்டியமை , முரளி காட்டிக்கொடுத்தது . " மருத்துவர் பத்மகலாவாகத்தான் பார்க்க வேண்டும்" என்று விட்டு காதலி கலாவிடம் இருந்து விடைபெற்றது , " முடிந்தவரை உழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பு " என்று பேசிய அவுஸ்ரேலிய குணரட்ணம் வரை நினைத்தான் , பழையவையே தன்னை இங்கே கொண்டுவந்த பாலங்கள் . அந்த ஏணிப்பாலங்களை எண்ணுகையில்  நன்றியுணர்வு பெருக மனம் அமைதி அடைந்தது. 


மக்டொனால் வேலை எடுத்து தந்த டானியல் அண்ணன்  , கூட வேலை செய்த நண்பன் மகேந்தி , அவன் சொன்ன - போடர் கடக்கும்போது-  கூட பயணித்த செல்வம் என்பவன்  பனியாற்றில் புதைந்து செத்த கதை , புருசோத்தை குளிர் கொன்ற - அவலக்கதை , விமானத்தையே வாடகைக்கமர்த்தி உறவுகளை இக்கரையில் சேர்த்த  ஏஜென்சிகளின் சாகசக்கதை , உயிர்வாழ  படகேறிய உறவுகளின்  உயிர் பறித்து உடல் கரைத்த அவுஸ்ரேலிய கடல்கதை , பேரவலத்தின் பிறிதொரு சொல்லான முள்ளிவாய்க்கால் என வரிசைய் எண்ணத் திரையில் வர  மனம் நடுங்கியது . 


தான்  இங்கு வர உதவிய முகம் , பெயர் , ஊர் தெரியாதவர்கட்கும் உதடுகளுக்குள்ளே நன்றி நினைத்தான். சக சிங்களவர்கள் கூட அதிலிருந்தார்கள். என்னே ஒரு அவலப் பெரும் பயணம் .

தமிழா...... ! 

சுதந்திரம் அவ்வளவு சுலபமானதல்ல. 

பட்டதை சொல்லி 

கட்டி அழுவதை விட்டு

முட்டி மோது....

விழ விழ எழு ....,

விதை விழாது முளை ஏது ....,? 

விழுதலே எழுதலின் முதற்படி அல்லவா ? 

- விழுதல் என்பது - அதுவே 

என மனத்திரையில் ஒரு பெரு வெடிப்பு தோன்றி மறைய உடல் சிலுர்த்தது. 

வலியாகவும்,   ஏமாற்றமாகவும்  தமிழராய் இங்குள்ள எல்லோர் குரலின்  அடியிலும் சொல்லாத சொற்களாக படிந்திருப்பது சோகமே......

சொற்கள் என்றதும் அதன் முதல் சொந்தக்காரர் அம்மா நினைவுக்கு வந்தார். அம்மாவை கொழும்புக்கு மாற்றி பின் யாழுக்கே அழைத்ததையும் , அதற்காக கடனாக தன்னை நம்பி முதல் முதல் மூன்று லட்சத்தை தந்துதவிய பானுவும் வந்துபோனாள் . 

யாழ் பல்கலைக்கழகத்தில்  துளிர்த்த நட்பை மறக்காமல்  இங்கும் வந்து பார்த்து சென்ற தொப்புள் கொடி உறவு பேராசிரியை மங்கயற்கரசியும் மனதில் நின்றார். 

கண்ணால் இப்புற தேச உலகை காண முன்; செய்தித்தாள் மூலம் படித்து அறியும் வகை செய்த   அம்மையா பிரக்கராசி கந்தவடிவேலரைதான் விட்டுவிட முடியுமா , டென்மார்க்கில் மாரிமுத்து வடிவில் இருந்த சீலனை  கண்டுகொண்ட மொழிபெயர்ப்பாளன் சாந்தனின் உதவி,  காந்தன் அண்ணா மூலம் கிடைத்த  புடவைக்கடை வேலை, அதன் தங்க மனசுக்கார முதலாளி ஆனந்தர், வழிப்பறியில் எல்லாவற்றையும் இழந்து இன்னுமொருமுறை  விழுந்து  நொந்த போது - என்னைப்பற்றிக்கொண்டு எழுந்து வாடா சீலா.... ! என நான் காருக்குள் நித்திரையில் இருக்கும் போதே மன்றொரு போடரை கடந்து வந்த  விவேக் அண்ணனை ,  எல்லாம் இழந்த  யோசனையால் வந்த தலையிடியை எதை  மறக்கமுடியும். 

நல்லவர் மட்டுமா பாதையில் வந்தார் தங்கையின் திருமணத்திற்காக சேர்த்த உழைப்பை சீட்டு என்ற பெயரில் சுறுட்டிக்கொண்ட சிவம்,  ' இன்னொருவன் மனைவி பானுவோட சுத்துறியாம் ' என்ற கலாவின் சுடு சொல.; பின், அருகில் அக்கா மல்லிகா நின்றதால்தான் அப்படி கேட்டேன்  என நீரூற்றி அணைக்கப்பட்டமை, இவற்றின் பின்னுள்ள சூத்திரதாரி முரளி, மன்னித்தாலும்  இவற்றை மறக்கமுடியுமா... ?- 

சங்கம் வளர்த்து சண்டை பிடிக்கும் கூட்டமும் அவன் எண்ண திரையில் வந்து போனது.  

துன்ப சங்கட நிலை ஓரளவுக்கு முடிவுக்கு வர  சந்தோச சங்கம் பிறந்தது. விசாவுடன் வேலை வந்ததும் மாமா பத்மநாதன் மகள் சாம்பவியை சீலனுக்கு மனைவியாக்க விரும்பினார். சத்தியநாதன் அண்ணனின் மகள் குமுதாவை கட்டிவைக்க லண்டோவ் நகர் நல்லுள்ளங்கள் முயன்றன . பல வரன் தேடி வந்ததை நினைக்க,தேடி வந்து கட்டி கைவிட்ட சுபத்திரா மனதில் நிழலாடினாள். 

வெளிநாட்டு மாப்பிள்ளைத ;திருமணம் என்ற பந்தத்தில் சுக்குநூறாகி  விட்ட சுபத்திராவை விபச்சாரத்தில் தள்ளிவிட்டதை எண்ணும்போது மனம் புண்ணாகியது. 

இன்றும் வெளியில் சொல்ல முடியாது உள்ளே புளுங்கி தினமும் நசிந்து பிள்ளைக்காகவும், குடும்ப பேருக்காகவும் வாழ்வை தாங்கி பயணிக்கும் பெண்ணினத்தை எண்ணுகையில் ஏக்கமே மிஞ்சியது. . 

ஆஸ்திரியாவில் கணவனிடம் போக வந்த சாந்தி ஏஜென்சியால் கசக்கி மணக்கப்பட்டதையும்  பின் அவனையே குத்தி கொன்றுவிட்டு ஏழாம் மாடியில் இருந்து - என்னை மன்னித்துவிடுங்கோ அண்ணா - என ஆறுதல் சொன்ன சீலனிடம் கூறியபடி குதித்து இறந்தவளை நினைக்க ஒரு பெரு மூச்சு வந்துபோனது.

கார் வண்டியோ இது எதையும் காதில் வாங்காதது போல லண்டோவ் நகரை நோக்கி நெடுஞ்சாலை ஏ 65 ( அவுட்டபான் - யு 65 ) இல் ஓடிக்கொண்டு இருந்தது. 

மழை இப்போது விட்டிருந்தது. வயிறு தானும் அவனுடன் பயணிப்பதாக கிள்ளி காட்டியது. மனம் உணவை நாடவில்லையாயினும் வயிறு பசிக்கவே செய்தது. 

முதல் முதல் ராமலிங்கத்தாருடன் தவம் வீட்டில் சப்பிட்ட ஊர் சாப்பாடு நினைவை நிரப்பியது . கூடவே ஊரில் இருந்து பேசி வந்த மாப்பிள்ளை முரளி - காலை கட்டிய தாலியோடு - இரவு ஆபிரிக்க காதலனுடன் ஒடிய நிரோஜா  , மைத்துனன் குணாவின் குடி மரணம்,  தொடர்ந்து கிடைத்த சுவிஸ் அகதி அனுமதி, கனடாவில் இருந்து  ' உங்கள் பத்மகலா ' என முதல் முதலாய் அழைத்த காதலி கலாவின் குரல் ,  முரளி கலாவை அடைய காதல்வாழ்வில் குறுக்கிட்டு முடியாமல் போக - இருவரையும் பிரிக்க முயன்றது - என கடந்து வந்த  நெடிய பாதையை ஒரு மின்னல் ஒளியில் கருமுகிலை காண்பது போல கண்டு மீண்டான் சீலன். வண்டி ஒரு பெரு வளைவில் திரும்பி ஓடிக்கொண்டு இருந்தது.  

கனடாவில் இருந்து வந்ததில் இருந்து கலா இன்னும் சரியாக பேசவே இல்லை . முரளியோடு அவள் நின்றதை அவளே சொல்ல கேட்டதில் இருந்து சீலனின் மனம் ரணமாக வெந்துகொண்டிருப்பது என்னவோ உண்மைதான். 

ஆனால் பலத்த மழை காரணமாக ஒரு விபத்து நடந்து செடுஞ்சாலை மூடி விட்டிருந்தார்கள். வேறு மாற்று வழி ஊடாக போய் அழைக்க தாமதமாகிவிட்டது. 

அதற்குள் முரளி வந்து விட்டான் . அவனுக்கு நம்பர் கொடுத்தது கலாவின் அக்கா மல்லிகாவாகத்தான் இருக்கும் என எண்ணினான் . மல்லிகா ஒன்றும் கனடாவில் இருந்து இந்த காரியத்தை செய்யவில்லை . 

கலா - சீலன் திருமணத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு முன்னரே லண்டோவ் வந்து . இப்போது விவேக் அண்ணனின் வீட்டின் பின்னால் பிரத்தியேகமாக போடப்பட்ட குசினிப்பந்தலில் பலகாரம் சுடும்  சுற்றத்துப்  பெண்களுடன்  இருந்தே இதை செய்திருந்தார். 


தான் தாமதித்ததை எண்ணியே கலா மனம் நோகுறாள் என பேசாமல் வந்தான் சீலன். அவளோ தான் முரளியிடம் பேசியது இவனை புண்படுத்தி இருக்கும் அதுதான் பேசாமல் வருகிறான் என நினைத்தாள்.  

நீண்ட கால இடைவெளிக்கு பின் ஒருவரை ஒருவர் கண்ட கதலர்கள் என்றோ  அல்லது நாளையே திருமணமாகி தம்பதியராகப் போகும் இருவர்  என்றோ இல்லாமல் எந்த வித ஆரவாரங்களும் இன்றி இருந்தார்கள். 

உண்மையான பாசமுள்ளவர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி பிரச்சனை நடக்கும் . பின் எந்த சமரசமும் இன்றி மறு கணம் கட்டிப்புரளுவார்கள் என்பது போல இருந்து இவர்கள் இருவரினதும் நடவடிக்கை . 

கலாவுக்கு கனடா - ஜேர்மனி நீண்ட விமான பயணம்.   , பின் காத்திருப்பு  ,  கார் பயணம் என தொடர் பயணத்தால் வயிறு குமட்டி கொண்டு வந்தது .  மென்மை அதிகமான பெண்மை அவள். அவள் அதை மறைத்தாலும் ஓங்காளிப்பு குமட்டலை காட்டிக்கொடுத்தது. 

இதனை அவதானித்த சீலன் முதல் வரும் தேனீர் அருந்தும் இழைப்பாறிடத்தில்  காரை நிறுத்துமாறு ஜோசேப்பிடம் கேட்டுக்கொண்டான். 

இடைத்தரிப்பிடம் வந்ததும்  அவளுக்குக் கழுவுமிடம் ( பாத்றூம் ) இருக்கும் இடத்தை காட்டி விட்டான் . அழைத்து வந்த அவனின் முன்னாள் முதலாளியும்  நண்பருமான காரோட்டி ஜோசப்  மூவருக்கும்  தேனீர் வாங்கி வந்தார். கலா ' தனக்கு வேண்டாம் வயிறு சரியில்லை இப்போதுதான் முரளியுடன் குடித்தேன் ' என்றுவிட்டாள் .

கலாவுக்கு  லீவு தாமதமாகவே கிடைத்திருந்தது  ஆனால் ஒருமாத லீவு . திருமணத்தின்  பின் என்ன செய்வதென்பது இருவரும் கூடி பேசிதான் முடிவு பண்ணவேண்டும். 

நாளைய திருமணத்தில் மணப்பெண்ணாக மணவறையில் இருப்பதை தவிர தான் எந்த உதவியும் செய்ய முடியாமையை எண்ணி உள்ளூர வருந்தவே செய்தாள் கலா . மணப்பெண் முக அலங்கார வேலைகள் ஆரம்பித்தால் வேறு எந்த வேலையும் செய்யவும்  முடியாது . 

மீண்டும் இடைத்தரிப்பிடத்தை நீங்கி வண்டியை  ஓட்ட ஆயத்தமானார் ஜோசப் .  சீலன் இம்முறை கலாவுடன் பின் சீற்றில் இருந்தான் . கலாவோ சற்று நேரத்திலெல்லாம் சீற்றில் சோர்ந்து சய்ந்து  தூங்கிவிட்டாள்.

பெண்வீட்டாருக்கு என டேவிட்  அங்கிள் விவேக் அண்ணன் மூலமாக ஒழுங்கு செய்த சஹானி  வீட்டிற்கு வரும் வரை கலா தூக்கத்திலேயே இருந்தாள் . லண்டோவ் பகுதி வீடுகளும் யாழ்ப்பாணத்தைபோல் தனித்தனியே வெட்டி வீதியாக இருந்தன  . மணமகன் வீடும் மணமகள் வீடும் ஒரே ஒழுங்கையில் ஐந்து வீடு தள்ளி தள்ளியே  இருந்தது.


0000


எங்கிருந்து தான் கொண்டு வந்தார்களோ மணப்பந்தலில் செவ்விளநீர் கட்டிய கதலிக்குலையுடன் வாழைகள் இரண்டு அழகாக கட்டப்பட்டிருந்தது. ஒழுங்கையோர வாசல் மேசையில் கம்பளம் விரித்து நெல்லு பரப்பி வைத்த கும்பமும் , இரவு தூறலில் நனைந்த மெல்லிய ஈர நிலமும்  வீதியோர பச்சைப்புல்லும் ஒருகணம் ஊரை நினைவூட்டியது. 

ஏனோ ஊரை நினைக்கும் போதெல்லாம் மகிழ்ச்சியும் பின் சிறு மனவருத்தமும் வந்தே போகிறது . எமதூராய் இருந்தாலும் அது எமக்கில்லை. எம் பிள்ளைகளுக்கானதும் இல்லை . இனி அது எமது கனவுக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனவருத்தம் அது. 

மண்டபம் எடுத்து குறித்த மணிநேரந்துக்குள் முண்டி விழுங்கி விட்டு , பின் அவரவர் வண்டியில் கிண்டி கிழம்பி காணாமல் போகும்.; ஒரு நண்டு திருமணமாக இல்லாமல் இப்படி வீட்டில் நடாத்த முடிவெடுத்தவரை கட்டி அணைத்தொரு முத்தமிட தோன்றியது. 


மணப்பந்தல் சோடனை பூக்கள் காற்றிலாடி மின்னின. நீள பந்தலை நீலநிற கதிரைகள் இரண்டாக பிரித்திருந்தன . திருமணத்திற்கே கட்டிய வீடு போல் விவேக் அண்ணனின் வீடு கம்பீரமாக நின்றது. கண்ணாடியில் பட்டு தெறித்த ஒளி போல் காலை வெய்யில் மஞ்சளும் சூடும் குறைவாக இருந்தது.  

சூரியகாந்தி பூவில் பறக்கும் வண்ணத்திப்பூச்சிகள் போல புத்தாடை அணிந்த இளவயதினர் குறுக்கும் நெடுக்குமாக ஒருவரை ஒருவர் கலைத்துக்கொண்டு  காலை ஒளிக்குள் ஓடிவந்து போய்க்கொண்டிருந்தார்கள் . அவர்கள் பின் குட்டி பூனையளவு நாய் ஒன்றும் ஓடித்திரிந்தது. வாசனை படர்ந்த பட்டு சேலைகளுடன் கலியாணவீட்டிற்கு வந்து கொண்டிருந்த  பெண்கள்  அச்சுற்றத்தை ரம்மியமாக்கினார்கள். 

அது எப்படியோ தெரியவில்லை பட்டு சேலையில் பருமனான பெண்களும்   பனங்கிழங்கு போலவே இருந்துவிடுகிறார்கள். பட்டு வேட்டியில் பட்டு தெறித்த சிறு கீற்றொளி ஆங்காங்கே தூர  மின்னல் போல  கண்ணை கூசியது   ' அடடா....  என்னே ஓரு இதமான தமிழ் பண்பாட்டுச் சூழல் ' என ஜேர்மனியர்கள் கூடி நின்று ரசித்துக்கொண்டிருந்தார்கள். 

வாழ்த்த வந்தவர்களால் மணப்பந்தல் நிறைந்திருந்தது  ,  மாதுளம்பூ நிறத்தில் இருந்த மணவறையில்  ஓமசாலை முன் இருந்த இரு அந்தணர்களுக்கு அருகில் சீலன் மாப்பிள்ளை கோலத்தில் எடுப்புடன்  வீற்றிருந்தான் . அவனின் பார்வை பந்தலோரம்  சுற்றிவந்தது. அவனை தோள் கொடுத்து தாங்கிய பல நல் உள்ளங்கள்  நெடு மையில் கடந்து  வந்திருந்தார்கள். 

குமாரவேல் பேராசிரியர் மனைவியுடன் முன் வரிசையில் இருந்தார். மக்டொனால்ட் மகேந்தியும் பானுவின் கணவரும் புடவைக்கடை முதலாளி ஆனந்தரும் வெற்றிலை போட்டபடி ஏதோ பந்தலை காட்டி பேசிக்கொண்டிருந்தார்கள்  ,  சுபத்திரா தலையில் கனகாம்பர பூச்சரத்துடன் ஓரமாக இருந்து சீலனை பார்த்து மெல்ல நகைத்தாள் .

அக்கால தமிழ் மரபு ஒன்று எல்லாவற்றையும் கவிதையாக பாடி விடுவது  . அது காலம் கடந்தும் பாடலாக வாழ்ந்துகொண்டிருக்கும் . அவ்வாறு நெடுந்தீவில் ஒரு திருமண பந்தலில் வீற்றிருந்தவர்களை பாடிய  பாடல் ஒன்று சீலனுக்கு நினைவில் வந்தது . பழைய காலத்தில் பெயரிலும் பட்ட பெயரே அதிகம் பயன்படுத்தப்படும். நெடுந்தீவு தேசத்தில் ஒரு துடிப்பான பெண்ணின் திருமணத்தில் 

" ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....

வீணானவாயர் வெறுவாயர் அங்கிருந்தார் 

வேறார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....

உப்பு சிரட்டையோடு உவல்பேத்தை அங்கிருந்தார். 

ஆரார் கொலுவிருந்தார் ஆனசிங்கி பந்தலிலே .....

கூடம் இறுக்கவென்று கும்பகுடம் அங்கிருந்தார். 


சீட்டு சிவத்தின் வீட்டில் இருந்த நண்பன் சிறிராமச்சந்திரன்  அனுமான் என செல்லமாக அழைக்கப்பட்டானே அவன் கூட மூலையில் இருந்து சீலனை பார்த்து சிரித்தான்.  சிவத்தைபற்றி அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்தான் சீலன் . தனது 20 ஆயிரம் பிராங் பணத்தை என்ன செய்தான் ? உள்ளேயா வெளியேயா , இறுதி வரை அவன் எனக்கு கடனாளியாவேதான் இருக்க போகிறானா.... என சிந்தனை ஓடியது.

மறுபுறம் பொம்பிள பகுதி வீட்டில் பத்மகாலவுக்கு மணமகள் அலங்காரம் நடந்துகொண்டு இருக்கவேண்டும். ஆனால் அது இன்னமும் ஆரம்பிக்கவும் இல்லை. 

குமுதா அவள்தான் சத்தியநாதன் அண்ணனின் மகள். அதாவது  சீலனுக்கு கனகலிங்கம் மூலம் சம்மந்தம் பேசப்பட்டவள் மிக அழகான புளியம்பூ வண்ண சேலையில் கடற்கன்னி போல வலம் வந்தாள். பார்க்க பொறாமையாக இருந்தது. அவளின் தந்தையின் முகத்தில் தான் ஒரு சோகம் படர்ந்திருந்தது . டேவிட் அங்கிள் காலில் சில்லு பூட்டி இருக்கிறாரா என கூட்டத்தின் ஊடே கூர்ந்து தேடும்படி அங்குமிங்கும்  ஓட்டிக்கொண்டிருந்தார் . அவரே இவ் நிகழ்வின் அச்சாணி. மனைவி மெற்றில்டா அக்கா பெண்வீட்டை இயக்கிக்கொண்டிருந்தார். மகள் சாலினியும் பல்கலைக்கழக விடுமுறை என்பதால் வந்திருந்தாள். 

பானு பலகாரப்பகுதியை பொறுப்பெடுத்திருந்தாள்.  விவேக் அண்ணனின் மனைவி வவா அக்கா கலியாண சமையலை கவனித்தார் . சுவிஸ் தவம் அண்ணர் மேளம், ஐயர், மணவறை, போன்ற வெளி அலுவல்களை கட்டி மேய்த்தார். ஒலி, ஒளி, வீடியோ, போட்டோ விவேக் அண்ணனின் ஏற்பாடு. 

எவற்றிலும் பொறுப்பின்றி எல்லாவற்றிலும் மூக்கு நுழைத்து குறை பிடித்துக்கொண்டு இருந்தார் கலாவின் அக்கா மல்லிகா . அவருக்கு இந்த திருமணத்தில் பூரண சம்மதம் இல்லை ஒரு பொழுது போக்கு சம்மதமே . டொக்ரருக்கு படித்துக்கொண்டு இருக்கும் முரளியை கட்டிக்கொடுப்பதே அவரின் எண்ணமாக இருந்து. அது சாத்தியமாகாமல் போகவே ஏனோ தானோ என இங்கு வந்திருக்கிறார். 

எல்லா துறையையும் ஒன்றிணைத்து  நெறிப்படுத்தும் டேவிட் அங்கிளுக்கு உதவியாக அவரின் மகள் சாலினி முன்னும் பின்னும் நடந்துகொண்டிருந்தாள்.  ஆனால் அவளின் நடை பார்ப்பதற்கு ஒரு அழகிய வண்ண மெல்லிய திரை சீலை அசைவது போலவே இருந்தது. அவள் பேச்சில் வல்லின எழுத்தே இல்லாமல் இருப்பது போல இருந்தது. டொச்சு மொழி நாவில் நனைந்து வந்த தமிழை கேட்க அழகாகதான் இருந்தது. அவள் இங்கு பிறந்த பெண்.


00000


பெண்வீட்டில் மணப்பெண் கலாவுக்கு வயிறு இன்னும் சரி வர இல்லை . 

நேற்றில் இருந்து  7 , 8 தடவைக்கு மேல் வயிற்றாலை போய்விட்டது . 

பனிநிலவு மல்லிகை மொட்டு போல இருந்தவள் மத்தியான கீரைப்பிடி போல வாடி இருந்தாள்  . ஏனோ நேற்றில் இருந்து அவளுக்கு சாப்பிடதெல்லாம் உடனே சத்தி வந்தது.

அடிக்கடி பாத்ரூம் போய்வந்ததால் முக , சிகை , நக அலங்காரம்  எதுவும் செய்ய  முடியாமல் இருந்தது . ' என்ன நடந்தது இவளுக்கு... ? இப்ப என்ன செய்வது ..? மத்தியானம் 11 மணிக்கு தாலி கட்டு விடிய ஏழு மணிக்கே இப்படி சீலைத்துணி மாதிரி கிடக்கிறாள் " என வவா அக்கா  கலாவின் அக்கா மல்லிகாவை கேட்டபடியே இருந்தார். ' இன்னும் கொஞ்சம் பாப்பம் சரி வந்திடும் ' என்பதையே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார்  கலாவின் கட்டிலருகில் இருந்த மல்லிகா . இந்த இருவரை தவிர கதை இன்னும் வெளியில் கசியவில்லை .  என்ன சாப்பிட்டாய் கலா என கேட்டதற்கு " விமானத்தில் சானட்;விச் சாபிட்டேன்  .  பின் முரளியுடன்  ரீ குடித்தேன்  " என்றாள் கலா. 

கதை வவா அக்காவின் கணவர் விவேக் அண்ணன் ஊடாக  சீலனுக்கு வந்தது.  அவனுக்கு ஒன்றும் புரியவில்லை . இந்த திருமணத்தில் கலாவின் அக்கா மல்லிகாவிற்கு  இன்னும் விருப்பமில்லை அவர்தான் நாடகமாடுகிறாரா ?  முரளி நேற்று ஏதேனும் சொல்லி கலாவின் மனதை மாற்றி விட்டானா..? மனதை மாற்றினால் வயிறு ஏன் குளறுபடி செய்ய வேண்டும், கலாவுக்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லையா....?  . இத்தனை தடைகளை தாண்டி வந்தும் இந்த நேரத்திலா இப்படி நடக்க வேண்டும் . 

மேலும் ஒரு சிறு ஆனால் பாரதூரமான சொல்லக் கூசும் செய்தி இம்முறை மெற்றில்டா அக்காவின்  கணவர் டேவிட் அங்கிள்  ஊடாக சீலனை வந்தடைந்தது . பொதுவாக இரகசிய அந்தரங்கங்கள்  பரவுவது எவ்வாறோ அவ்வாறுதான்  இந்த செய்தியும் வந்தது . 

கலாவின் உடுப்பில் இரத்தமும் இருந்ததாம் . சீலன் என்ன என ஏங்கி முகம் கலவரமடைந்தாலும் மறுகணம் விடையம் அறிந்து  " இது எல்லாம் ஒரு பிரச்சனையா மாதா மாதம் வருவதுதானே " என்றான் . வைத்தியம் படிக்க சென்ற அவனுக்கு  இது தெரியாதா என்ன . 

" ஆனாலும் இதனையும் பார்த்துத்தானே  திருமணத்திற்கு நாள் குறிக்கவேண்டும் என்பது கூட ஏன் பெண்வீட்டாருக்கு தெரியாமல் போனது  " என விவேக் அண்ணன் கேட்டார் . 

" இதை எல்லம் சொல்லவா முடியும்  " என டேவிட் அங்கிள்  வாதாடினார் . 


" சாமத்தியப்பட்டு பிள்ளையே அதை வெளிய சொல்ல வெக்கப்பட்டு இருக்கும் போது கண்டுபிடித்து பறை அடித்து ஊருக்கே சொல்லுவினம் , இப்படி சொல்ல வேண்டிய சந்தர்ப்பத்தில் சொன்னா மட்டும் வெக்கக்கேடா... ?" என்று ஒரு போடு போட்டார் விவேக் அண்ணன் . அவருக்கு தன் வீட்டில் நடக்கும் ஒரு நல்ல காரியம் கெட்டுப்  போகக்கூடாது என்ற பரிதவிப்பு. 

சீலனுக்கு எதிராக இயற்கையும் காய் நகர்த்தியது .

இது எதுவும் தெரியாத சபை கலகலவென இருந்தது . பாட்டுப் பெட்டி பாட்டு வேற பாடி மகிழ்த்திக்கொண்டிருந்தது.  இனியும் கலாவுடன் நேருக்கு நேர்  பேசாது பிரச்சினையை தீர்க்க முடியாது என மணவறையை விட்டு எழுந்தான் சீலன்  .

" தம்பி  பொண்ணு வந்து  தாலி கட்டி முடியும் வரை மாப்பிளை மணவறையை விட்டு எழும்பக்கூடாது " என்றார் உருத்திராச்ச மாலை போட்டு  குடும்பி வைத்த சுவிஸ் ஐயர் . 

அங்கிருந்தவாறே ஒருவரை தேடினான். பந்தலில் இருந்த நண்பன் அனுமான் „என்ன“  என கண்ணால் கேட்டான் . தூது போக உகந்தவன் அனுமானே என தன் சீதையிடம் அவனை அனுப்ப கண்ணை காட்டி அழைத்தான் . அவன்  எழுந்து எல்லோர் முன்னும் வர வெட்கப்பட்டு  பின் சட்டை பொத்தானை துணைக்கு  பிடித்துக்கொண்டு ஒருவாறு வந்து சீலனின் முகமருகே குனிந்து என்ன என்றான். 

" வலப்பக்க அறை மேசையில் என் போன் சாச் போட்டபடி கிடக்கு எடுத்து வா மச்சான் " என்றான் . போன் கைக்கு வந்ததும் சமையலில் நின்ற வவா அக்காவுக்கு போன் பண்ணி  " போனை கலாவிடம் கொடுங்கள் பேசவேண்டும் " என்றான் . 

பாயாசக்கறண்டியுடன் நின்ற வவா அக்கா போனை அருகில் நின்ற மல்லிகாவிடம் கொடுத்து கலாவிடம் கொடுக்க சொன்னார். கலாவின் போன் ஏனோ பதிலின்றி றிங் பண்ணிக்கொண்டே இருந்தது . அருகில் மாப்பிள்ளை தோழன் , முன்னால் சபையோர்  என எல்லோரும் அவனையே பார்த்திருந்ததால் வெளிப்படையாக பேச முடியவில்லை . குறுந்தகவல் அனுப்பினான் . செய்தி சென்று பதில் வந்துகொண்டிருந்தது.  

" உடனுக்குடன் இந்த தகவல்களை அழித்துவிடும் கலா . இன்னொருவரின் போன். உமது போனுக்கும் அடித்தேன் ஏன் பதில் இல்லை . என்ன நடக்குது அங்க ?  அக்கா மல்லிகாவுக்கு இந்த கலியாணத்தில விருப்பமில்லை என எனக்கு முதலே தெரியும். 

„அவா இன்னும் மனம் திருந்த இல்லையா... ? ஏதோ ஏதோ எல்லாம் கதை வருகுது. உமக்கு என்னை கட்ட விருப்பமா ..? இல்லையா....? விருப்பம் இல்லாட்டி நேர சொல்ல வேண்டியது தானே . அதை விட்டிட்டு . நேற்று என்னோட கதைக்காம உம் எண்டு கொண்டு வந்தீர். இண்டைக்கு என்னடா எண்டால் வயித்தாலை , சத்தி, ரத்தம் என்கிறீர்“ 

„இதுக்கெல்லாம் என்ன அர்த்தம் . ஒரு சாறியை சுத்திக்கொண்டு பக்கத்தில வந்திருக்க ஏலாத அளவுக்கு  வருத்தமா... ? கலியாணம் நிண்டு போனால் நாளைக்கு கனடா போயிடுவீர் . நான் இங்க இருக்கிறவன் , வந்திருக்கிறது முழுக்க என் நண்பர்கள்.  உமக்கென்ன நட்டம். முரளிக்கு நான் அழைப்பு கொடுக்கவே இல்லை.   மல்லிகா அக்கா காட் கொடுத்து  அவன் வந்து உங்க பலகார சட்டிக்கு முன்னால காவல் இருக்கிறானாமே. எனக்கொண்டும் விளங்கேல்ல ... . தாலி கட்டும் மட்டும் சமாளியும் எவ்வளவு பிரச்னையை கடந்து  இந்த நிலைக்கு  வந்திருக்கிறம்  எண்டு கொஞ்சம் யோசியும். "  

இது சீலனின் தகவல் .  சற்று காரமாகவே கேட்டு விட்டான். கோவம் வராதா பின்ன. 

„பேசவே முடியாம இருக்கிறவளை பிடிச்சு ரைப் பண்ண சொல்லுறீர்.... வருத்தம் எண்டு ஆரும் ஆசைப்பட்டு வேணுமெண்டு சொல்லுதுகளே.....அதுவும் இந்த நேரத்தில் சொல்லுவினமோ....“ 

„நடக்கிறதுதான் நடக்கும்.  தாலி கட்டி மனைவியாக முன்னமே  இப்படி உறுக்கிறீர். எங்கிட சொந்தக்காரன் எண்டு முரளி ஒரே ஒரு ஆள் கலியாணத்திற்கு வந்ததே உமக்கு பொறுக்கவில்லை . நான் உம்மை பற்றி பெருசா நினைச்சேன் . இவ்வளவு தானா நீர். ஏன் கதைக்க மாட்டீர்“. „உமக்குதான் குமுதா......, சாம்பவி.....  பானு இன்னும் ஆர் ஆரோ.... வருசையில் இருக்கிகேக்க கதைப்பீர் தானே.....“ 

இது கலாவின் தகவல் அல்ல அவளுக்கு தெரியாமல் அக்கா மல்லிகா அனுப்பிய செய்தி. 

சீலனுக்கு வாசிக்க வாசிக்க கைநடுங்கியது . வாக்கியங்கள் எண்ணைச் சட்டியில் பிளிந்த  முறுக்கு போல பொரிந்து கொண்டிருந்தது. செஞ்சு உலங்குவானவூர்தி காத்தாடி சத்தம் போல படபடத்தது.  என்னாச்சு கலாவுக்கு.  இப்படி வேண்டா வெறுப்பாக எழுதியிருக்கிறாள். போனில் காதலொழுக பேசினாளே... 

முடிவெடுத்தான் .  " இண்டைக்கு தாலி கட்டுறது கட்டுறதுதான்“,  யாருக்கு  என்பதே கேள்வி  . ஆனால்  அதற்கு முன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டுக்கு யார்  காரணம் என கண்டு பிடிக்க வேண்டும் . 

இந்த கதை மெல்ல சத்தியநாதன் அண்ணனுக்கு எட்டவே மகள் குமுதாவை கூப்பிட்டு  சாறியை மாத்தி பட்டு சேலை கட்டிக்கொண்டு வா என அனுப்பினார். அவள் அப்பாக்கு மூளைகழண்டுட்டுதா.... என மனதில் கறுவிக்கொண்டு ஏன் என்று புரியாமலே சாறி மாற்றச்  சென்றாள்.

மனம் கேட்கவில்லை வவா அக்காவை அனுப்பி கலாவிடம் பேசினான். ' என்னண்டு தெரியேல்ல சாபிட்டது உடனயே சத்தி வருகுது . வயிற்றை உளைஞ்சுகொண்டு வயிற்றாலை  போகுது ரண்டு நாள் ஆகுது சாபிட்டு . கடைசியா கனடாவில் கொஞ்சம் புட்டு சாப்பிட்டது  - எண்டு சொல்லுறாள் அவளால  போன்  கதைக்கவும் பலம் இல்லை.“ என்றார் வவா அக்கா. 

மணவறையில் இருந்த சீலனின் மனம்.  தோற்றுவிட கூடாது என போராடியது. இது அவனுக்கு இயற்கை கொடுத்த வரம்.  சிவம் பணத்தை சூறையாடியபின்னும், குத்துவேண்டியவரை காப்பாற்ற முயன்று கொலைப்பழி விழுந்தபோதும் , பெயரை மாற்றி மாரிமுத்து என ஆனபோது இருந்த உறுதி இப்போதும் கை கொடுத்தது.

கொழும்பு பத்மநாதன் மாமாவின் மகள் சாம்பவியை கட்டவேண்டும் என ஒரு மனம் சொன்னது. அம்மாவின் விருப்பமும் அதுவே. இரண்டாவது முறையாவது அம்மா வெற்றி அடையட்டும்  என எண்ண முற்பட்டான். மொத்தத்தில் அவன் குழம்பி இருந்தான். 

வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புவது. இந்த வாழ்வை சமைத்து தந்த நல்லுங்களை ஏமாற்றுவதா..?. குமுதாவைவே கட்டிவிடலாமா.... ? தெரியாமலே தயாராக வந்திருக்ருக்கிறாள் . கலாவை ஏமாற்றிவிட்டோமா...?. இல்லை கலா என்னை ஏமாற்றிக்கொண்டிருக்கிறாளா....?. என் முன்னாலே நாடகமாடி நம்ப வைக்கிறாளா...?. இனியும் இந்த வருத்தம் வருமா...? இருக்கக்கூட முடியாத பொண்ணுக்கு தாலி கட்ட அம்மா இங்கிருந்தால் சம்மதிப்பாரா...?  கட்டிய பின் வருத்தம் வந்தால் பார்ப்பதில்லையா....?  யாருக்கு இந்த கேள்விகளுக்கு பதில் தெரியும். பதில் கேட்டு முன்னால் இருக்கும் சபை ஆரவாரிக்க முன் . அவன் பதில் தேட வேண்டும்' 

ஒருவேளை உண்மையிலேயே அவளுக்கு என்னை பிடிக்காமலிருக்கலாம் , முன்னர் கல்லூரி இளைஞன் , இன்றோ கடின உழைப்பாளி, அவளின் கண்ணுக்கு உடல் கறுத்து மெலிந்து  இருப்பதாக தெரியலாம் . உள்ளதை உள்ளவாறு ஏற்க ஏன் மறுக்கிறாய் மனமே...

இதற்காக உயிரை விட்டுவதா... இல்லை பித்து பிடித்து வீதியில் திரியப்போகிறாயா...? இவ்வளவு தேசம் தாண்டி வந்தது இதற்காகவா....?.  கிட்டாதாயின் வெட்டென மற...  

தாலி கட்டியபிறகும்  ஆபிரிக்க காரனோட ஓடி போனாளே நிரோஜா  அதை விட மோசமான ஒன்றையா நான் செய்ய போகிறேன். திருமணத்தை தானே நிறுத்தப்போகிறேன்.  எதையும் தாங்கும் சக்தி கொள் மனமே.  உன்னை விரும்பியவள்  இப்போது உன்னை காதலிக்க வில்லை . விரும்பாவிடில் மறந்து விடு மனமே....  

மற்றவரை  கொண்டு வாருங்கள் அவளும் பின்னின்றால் விரும்பி முன் வரும் யாரையாவது மனைவியாக்கி வாழ்ந்து காட்டுகிறேன். 

எனக்கு என் நண்பர்கள் இன்று என் திருணமத்தை கண்டு போக வேண்டும் அவ்வளவுதான்.   எந்த பெண்ணுடனும் நான் வாழத் தயார். என்னோடு யார் வாழத் தயார்.....? 

எல்லா பெண்ணும் நல்ல பெண்தான் . சில கல்லுமன ஆண்களால் கறுப்பு, வெள்ளை ,உயரம் ,கட்டை ,மெல்லிசு குண்டு என வெளிப்பார்வையை கொண்டு தவிர்கப்பட்ட பெண்களே நல்ல கணவனை அடைந்து நிறைவாக வாழ்பவர்கள்.  எல்லாவற்றுக்கும்  மனமே காரணம்.   முடிவெடுக்க தயாரானான் சீலன். எவ்வளவு காசை செலவழித்து இந்த திருமண ஏற்பாடு செய்திருக்கிறோம் வெறுமானே கனடாவில் இருந்து முதல் நாள் வந்த அவையளுக்கு என்ன தெரியப்போகிறது.

மணவறையில் மயங்கி விழுந்தான் மணமகன். முறை மச்சானுக்கு மலை சூடினாள் மணப்பெண். குடியில் மணவறைக்கு வந்தவனை முடிக்க மறுத்த பெண்ணால் நின்றுபோனது திருமணம் . கேள்விப்பட்டதில்லையா அவற்றுள் இதுவும் ஒன்று என எண்ணினான்.


தான் ஒருத்தி கழுத்தில் தாலி கட்ட முன் முரளி கலா திருமணத்தை தானே இதே மேடையிலேயே  நடாத்தி வைக்க தயாரானான். அதுவே கலாவின் விருப்பம் என்றால் , இதுவே மல்லிகாவுக்கு மன மகிழ்ச்சியை தரும் என்றால் , காதலை முறித்து கலாவை அடைவதே முரளிக்கு  இன்பம் தரும் என்றால், இங்கேயே இப்போதே கலாவின் கழுத்தில் முரளி எனது தாலியையே கட்ட நான் பூத்தூவி வாழ்த்திவிடத் தயார். 

ஒன்றல்ல இரண்டு திருமணங்களை கண்டு போகட்டும் என் சபையோர். திடம் பூண்டான். விழுதல் எல்லாம் எழுவதற்கே , எழுவது உறுதியானால் விழுவதெல்லாம் தற்காலிகமானதே... ".

நேரம் ஆக ஆக  நிலைமை மோசமானது. எவ்வாறு சிந்தித்த போதிலும் பந்தலுக்கு முரளி வந்த போது சீலனுக்கு அவன் மேல் இருந்த சந்தேகமும் கோவமும் வலுக்கவே செய்தது. முரளி தான் ரீயில் எதையோ நேற்று கலந்திருக்கிறான். இது தெரியாத மல்லிகா உண்மையான உடல் வருத்தம் என நம்பிக்கொண்டிருக்கிறார். 

ஆனாலும் இதை வைத்து திருமணம் குழம்பினால் தன் விருப்பம்போல் முரளிக்கே கலாவை கட்டி வைக்கலாம் என நினைக்கிறார் . இதை கலாவுக்கு சொன்னால் அவள் நம்ப மாட்டாள் அக்கா பாசம் , முரளிமேல் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் என சிந்தித்த போது டேவிட் அங்கிள் வந்தார். 

இந்த ஐரோப்பிய வாழ்வின் கடவுள் போன்ற மனிதன் அவர். உறுதியோடு  அருகில் வந்து .

" சீலன்  இது நான் அவசரத்தில எடுத்த முடிவில்லை . நான் , என் மனைவி , மகள் சாலினி மூவரும் பேசி எடுத்த முடிவு . கலாவின் அக்கா ஏதோ மனதில் வைத்துக்கொண்டு பிடிபடாம பேசுறா.... கலாவுக்கு அது தெரியேல்ல. கலாவை மறக்கிறதுதான் உனக்கு நல்லது. நான் சொல்லுறதை வடிவா கேட்டு யோசித்து பதில் சொல்லு சீலன். தாலி கட்டும் நேரத்திற்கு இன்னும் ஒரு மணித்தியாலம் தான் இருக்கு“.  

„நானும் மெற்றில்டாவும் முறைப்படி உன்னை எங்கள் மகள் சாலினிக்கு யாழ்ப்பாணத்திற்கு போன் பண்ணி  உன் அம்மாவிடமே கட்டி தர விருப்பமா எண்டு கேட்டு அம்மாவும் ஓம் எண்டு சொல்லி விட்டார். இப்பதான் பேசினனாங்கள்.  இனி உன் விருப்பம். யோசித்து முடிவு சொல்லு ' என கேட்டு விட்டு யாரையோ வரவேற்று பன்னீர் தெளிக்க போய்விட்டார். அவர் செய்த உதவியை மறக்க முடியாது.  மகள் சாலினி அருமையான பிள்ளை அம்மாவை வேறு கேட்டுவிட்டார்கள்“ என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது தான் அந்த செய்தி வந்தது . 

கலா மயங்கிவிட்டாள் அம்புலன்சுக்கு அடித்து  கொண்டுபோய் வாட்டில் மறித்து விடார்கள். மயக்கம் தெளிந்தால் தான் முடிவு தெரியும்  என்றார் விவேக் அண்ணன். சீலனால் அந்த செய்தியை கேட்டபின்னும் மணவறையில் இருக்க முடியவில்லை.

 "கலா ..... , கலா ..... " என்று கத்தி விழித்து விட்டான் . என்ன ஆச்சரியம் கலாவின் மடியில் அவன் படுத்திருந்தான். அவன் கட்டிய தாலி அவள் மார்பில் ஆடியது. எல்லாம் கனவு....., கண்ட கனவை ஒன்று விடாமல் கலாவுக்கு சொன்னான் 

" ஆனாலும் உன் கனவு ரொம்ப மோசம் , அலுப்பாய் இருக்கிறாய் என கொஞ்சம் தூங்க விட்டால் இப்படியா கனவு காண்பாய். சீரோடு சிறப்பாக நடந்த திருமணத்தை இப்படி நாதாரித்தனமா அல்லவா கண்டிருக்கிறாய் ."  என்றாள் தன் தலை சோடனையை கழற்றியபடி பத்மகலா.

" சக்கரைப்புக்கையில் புதைத்து வைத்த வாழைப்பழம்போல் நல்ல இனிப்பான கதகதப்பாய் மடி இருந்தால் நித்திரை வராதா என்ன " என்றான் சீலன் அவளை அண்ணாந்து பார்த்து .  

"முதலிரவை கனவு காண்பவர்கள் மத்தியில் முதலிரவில் கனவுகண்ட ஒரே ஆள் நீதானடா....சீலா.... கனவில் கடைசியில யாருக்குத்தான் தாலி கட்டினாய் " என்றாள்  கலையாத கூறைபட்டின் கரையை பார்த்தபடி. 

"  அதுதான் இடையில் முழிச்சிட்டனே மீதியையும் காண இன்னொருக்கா தூங்கவா...?" . என்றான் அவள் பின்னலில் இருந்த குஞ்சத்தை அவிட்டபடி . அவள் அவனின் காதை ஊண்டி திருகினாள். அவளிள் கன்னத்தில் பட்டு தெறித்த மின் விளக்கு ஒளியில் வெட்கமும் கலந்திருந்தது. 


சுபம்