WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

15th year Story

36.வது கதை

செருப்பு

   பசியுடன் முனியம்மா வீட்டில் படுத்து கிடந்தாள் ரேஷனில் நாளைக்குதான் அரிசி போடுவாங்க அது இருந்தா கஞ்சி காய்ச்சியாவது இன்னைக்கு பொழுத கழிச்சிடலாம்
     கையில் அஞ்சு பைசா கூட இல்லை
கந்தை உடையில் எண்ணெய் காணாத தலை சோர்ந்த முகமாய் செருப்புத் தைக்கும் கந்தன் காணப்பட்டான்
    நூலகத்தை ஒட்டியிருக்கும் புங்க மரத்தடியில் வெகுநேரம் சாக்கு பை போட்டு அதிலே செருப்புத் தைக்க தேவையான நூல், ஊசி, பாலிஸ் வகையறாக்களை வைத்தான்
   வெகுநேரம் அவ்வழியே  செல்லும் ஜனங்களின் கால்களை ஆவலாய் பார்த்துக்கொண்டிருந்தான்
    மிடுக்கான, மினுக்கான  புது செருப்போடு  நடந்து கொண்டிருந்த எவரும் அவனை கண்டுகொள்ளவில்லை
   இப்பொழுதெல்லாம் அறுந்த செருப்புகள், தேய்ந்து செருப்புகள் வருவதே அபூர்வம் ஆயிற்று
    முன்பெல்லாம் டயர் செருப்பு வேணும்னு கிராமத்திலிருந்து வரும் விவசாயிகள், ஆடு மேய்க்கிற பசங்க வருவாங்க
    பெரும்பாலும் செருப்பு கடைக்கு போக மாட்டாங்க அளவு கொடுத்து காத்து இருப்பாங்க ரெண்டு நாள் கழிச்சு கூட வந்து வாங்கிக்குவாங்க
   இப்ப காலமே மாறிடுச்சு எல்லாருக்கும் அவசரம்  கால்ல சுடு தண்ணி பட்ட  மாதிரி அவசரப்படறாங்க
     காத்திருக்க யாருக்கும் பொறுமை இல்லை எல்லாம் ரெடிமேடா வந்துடுச்சு என மனதுக்குள் துயரம் கொண்டான்
    சில நேரங்களில் ச்சீய் என்னடா பொழப்புன்னு தோணும் அவனவன் கண்ட கருமத்ததெல்லாம்  மிதிச்சிட்டு வந்து கொடுப்பாங்க
    மூக்கைப் பொத்திக் கிட்டு தைக்க வேண்டி இருக்கும் தைக்க மாட்டேன்னு நாசுக்கா சொல்ல முடியாது அப்படி சொன்னா அன்னைக்கு கஞ்சித்தண்ணிக்கு வர்ற காசும் வராம போய்டும் 
  "நல்லா தைச்சு குடுய்யா" சிலர் ஜம்பமாய்  பேசுவார்கள்
  "சரி சாமி" என பதிலுரைத்து அவர்களிடம் இருபது ரூபாய் வாங்குவதற்க்குள் உயிர் போய் உயிர் வந்துவிடும்
    இந்த தொழிலில் யாரிடமும் மதிப்பை எதிர்பார்க்க முடியாது அந்தந்த நாளுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கிறதே பெருசு
    கிடைக்கிற காசுல்ல முடிவெட்ட, தாடியை சவரம் பண்ண மனசு வராது
    வீட்டில வயசுக்கு வந்த பொண்ணு
பத்மா குந்திட்டிருக்கா  அவள நேரம் காலத்துல எவனுக்காவது புடிச்சு கொடுக்கணும் கையில ஒரு நாலஞ்சு பவுனாவது  இருக்கணும்
    எங்க வர்ற காசு சோத்துக்கே பத்த மாட்டேங்குது
  மழைக்காலத்தில நாலாபுறம்  வீட்டு மண் சுவர் ஊறிக் கிடக்கும் அது எப்ப யார் தல மேல விழுமோ அது ஒரு கவலை போதாக்குறைக்கு மனசுல வந்து உட்கார்ந்துக்கிச்சி
    பத்மாவுக்கு ரோல்டு கோல்டுல மூக்குத்தி, செயின் வாங்க கூட கதி இல்ல 
   நானெல்லாம் என்ன மனுஷன் தனக்குள்ளே திட்டிக் கொண்டான்
  அவனுக்கு அவனையே பிடிக்கவில்லை அடிக்கடி வானத்தை பார்த்து
        "கடவுளே பூமிக்கு பாரமாக என்னைய ஏன் வெச்ச" அந்த கேள்விக்கு இதுவரை பதில் கிடைத்தபாடில்லை சாகவும் துணிவு இல்லை
  ஒண்டிக்கட்டையா இருந்தா தூக்கு மாட்டியோ, மருந்து குடிச்சோ வாழ்க்கைய  முடிச்சுக்கலாம் 
     ஆனா பெத்த புள்ளையையும், பொண்டாட்டியையும் விட்டு போக மனசு என்னமோ ஒத்துழைக்க மாட்டேங்குது 
  இவங்க பாசக்கயிறு இழுக்கிறது நாளதான்  உயிரைக் கையில புடிச்சிகிட்டு வாழ வேண்டியிருக்குன்னு நொந்து கொண்டான்
   வழியில் புது செருப்புகளை காலில் அணிந்து கொண்டு போகும் மக்களை பார்க்கும் பொழுது அவனுக்கு கடுப்பாக தான் இருக்கும்
    பழைய தேய்ந்துப்போன, கழன்றுப்போன செருப்புடன் தன்னிடம்  வருபவர்களை தெய்வமாக பார்த்தான்
     "இன்னைக்கு ஒருத்தர் கூட செருப்பு தைக்க வரலையே கடவுளே யாரையாவது அனுப்பி வையுங்க "அவனுக்கு தெரிந்த படி மனசுக்குள் கும்பிட்டான் தன் தேவைகளை முன்னிறுத்தினான்
   எத்தனையோ தேவைகள் அவனுக்கு உண்டு அவைகள் நிறைவேறாத பட்சத்தில் கனவுகள் என்பது எட்டாத கனிக்கு கொட்டாவி விடுகிற கதையாக  இருந்தது
  அடிக்கடி செத்துப்போன தன் தகப்பனின் போட்டோவை பார்த்து நொந்து கொள்வான் 
   யோவ் படிக்க வச்சிருந்தா  நானும் சமுதாயத்தில ஒசந்து இருந்திருப்பேன்
  நீயோ  குடிச்சிட்டு வந்து தலையில் குட்டிக் குட்டி இந்தத் தோல்ல செருப்பு தைக்கிற தொழிலுக்கு ஆளாக்கிட்ட
     அன்னைக்கு உனக்கு வரும் படி இருந்தது இன்னைக்கு இத வச்சு ஒன்னும் செய்ய முடியாது
   செருப்புத் தைக்கிற நூலையும் ஊசியையும் தோலையும்  மூலதனமாக விட்டுட்டு போயிட்ட
     இத்னூண்டு இடத்தை தூங்கி எந்திரிச்சுக்க விட்டுட்டு போய்ட்ட உன்பாடு நிம்மதி சிவனேன்னு கண்மூடிக்கிட்டு தனியா என் பதிமூணு வயசுல  தவிக்க விட்டுட்டு போயிட்ட  சொல்லி அழுவான்
  போட்டோவில் பதிலுக்கு அவன் அப்பன் சிரித்தபடியே கிடப்பான்
  சிரிப்பு மட்டும் உனக்கு குறைச்சலில்லை குடிபோதையில் அவன் கன்னத்தைக் கிள்ளுவாள்
   அடிக்கடி அவன் வீட்டில் இப்படியெல்லாம் கூத்து நடக்கும்
" அப்பா ஏம்பா இப்படி நடந்துக்கிறிங்க" மகள்  வேதனைப் பிணைந்த அக்கறையோடு  கேட்பாள்
    "என் தங்கமே" மகள் பக்கம் பார்த்து அவன் "நீ பெரிய ராசா வீட்டில பிறக்க வேண்டிய இந்த சாபம் பிடிச்ச அப்பன் கிட்ட வந்து ஏம்மா பிறந்த" தலையை சுவற்றில் நங்கு நங்கு என்று இடித்துக்கொண்டு அழுவான்
     மகளோ "அழாதப்பா நான் இருக்கேன் நீ ஒன்னுக்கும் கவலப்படாதே"   அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதலின் வார்த்தைகளால் தோளைத் தட்டி தேற்றுவாள் 
     அவனோ தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு "நம்ம குடும்பத்துல நீயாவது நல்லா படிச்சு வேலைக்கு வாம்மா" என்பான் 
    பத்மா அந்த ஊர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம்  வகுப்பு படித்து வந்தாள்
    பத்தாம் வகுப்பில் அந்தப் பள்ளியில் பத்மா தான் முதல் மதிப்பெண் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவள்
    வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வைராக்கியம் கொண்டவள் தன்மானத்தோடு வாழ நினைப்பவள்
  அவளின்  அப்பா சோர்ந்து போகும்போதெல்லாம் ஆறுதல் சொல்வாள்" அப்பா கவலைப்படாதே நான் படிச்சு வேலைக்கு போய் உன்னை ராஜா மாதிரி வச்சிக்கிறேன்"
    நூல் பிடித்து, பாலிஸ் போட்டு,  செருப்பு தைத்து தேய்ந்துபோன அவனின் கரத்தை கையில் பிடித்து தன் கன்னத்தில் ஒற்றி கொண்டு முத்தம் தருவாள்
    அவன் மனம் ஆறுதல் கொள்ளும் அப்படியே அவள் பேச்சில் கவலை மறந்து குடி போதையில்  இரவு உணவை மறந்து கோரைப் பாயில் சரிந்துவிடுவான்
  பத்மாவுக்கு இந்த சூழலை மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் நாளுக்கு நாள் அக்கினிப் பிழம்பாய் எரிந்துகொண்டிருந்தது
   பத்மா மனசுக்குள் நாங்களும் மனுஷங்கதானே எங்களை இழிவு நினைக்கிறவங்க மத்தியில சாதிச்சு காட்டுவேன்
   இந்த பொண்ணு  செருப்புத் தைக்கிற கந்தனுடைய பொண்ணுன்னு யாரும் சொல்லக்கூடாது
    எங்க அப்பாவையும் அவர் செய்ற தொழிலையும் இழிவா நினைக்கிற மக்கள் கலெக்டர் பத்மாவின் அப்பான்னு சொல்லனும் அதுதான் என் லட்சியம் அடிக்கடி அவளுக்குள்ளே  மனப்பாடம் செய்த வசனமாய் சொல்லிக் கொள்வாள்
     அரசாங்கம் இலவச பஸ் பாஸ், பாடப்புத்தகம், லேப்டாப், ஸ்காலர்ஷிப் கொடுக்குது
    ஊக்கப்படுத்த பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் இருக்காங்க கடவுளே உங்களுக்கு நன்றி இதய நான் சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறும் ஞானம் புத்திய எனக்கு குடுங்க' என்பாள்
   வருஷத்துக்கு ஒரு தடவை புதுசா கலர்ல இரண்டு செட் டிரஸ்  அந்தப் பள்ளிக்கூட த்துல ஆங்கில ஆசிரியர் சுப்புலட்சுமி அம்மா பத்மாவுக்கு வாங்கி கொடுப்பாங்க
   இவளோ வாங்க மறுப்பாள்
   அந்த அம்மாவோ "எங்க ஆத்துல எனக்குன்னு சொந்தம் பாராட்டிக்க  சொல்லிக்க ஒரு மக இல்ல மறுக்காதே இந்த வாங்கிக்கோ  என கொடுப்பார்கள்
   பத்மாவினாள் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது நன்றி சொல்லி  முழு இருதயத்தோடு சந்தோசமாய் வாங்கிக் கொள்வாள்
   மனிதநேயமிக்க அந்த சுப்புலட்சுமி ஆசிரியை பள்ளி பிள்ளைகளை அதிகமாக நேசிக்கும் ஆசிரியை  இயலாதவர்களுக்கு உதவி செய்யயும் மனப்பான்மை கொண்டவர்
   அந்த டீச்சருக்கும் மன திருப்தி ஏற்படும்
இது ஒவ்வொரு வருடமும் நடக்கிற காரியம்
   "எதுனாலும் கேளு பத்மா கூச்சபடாதே" என அந்த டீச்சர்  பத்மாவிடம் அடிக்கடி கேட்பார்கள்
  வேண்டாம் டீச்சர் எல்லாம் இருக்கு என சமாளிப்பாள் இப்படியாய் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது
  பத்மாவுக்கு அத்தை பையன் ஒருத்தன் அதே தெருவில் இருந்து வந்தான் அவன் குடிகார பையன் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருப்பவன்
  அவனுக்கு பத்மா மேல எப்பவும் ஒரு கண்ணு அவ பள்ளிக்கூடம் போகும் போதெல்லாம் பின்னாடியே போவான் சும்மாச் சும்மாவே பேச்சை கொடுப்பான்  
  பத்மாவோ பொறுக்க முடியாமல் ஒரு நாள் "வேணாம் மாமா இது நல்லா இல்ல எல்லாரும் பாக்குறாங்க" என்றாள்
    "யாரு பார்த்தா என்ன நீ என் சொந்த அத்தை பொண்ணுதானே"  என்றான்
   "எந்த இடத்தில எப்படி நடந்துக்கணும்னு உனக்குக்குத் தெரியாதா"சொல்லிப் பார்த்தாள்
    அவனோ "ஐ லவ் யூ பத்மா"ன்னு  சொல்லிக்கொண்டு அருகே வர
  பத்மாவுக்கு வந்ததே கோபம் செருப்பை எடுத்து அவனை ஓங்கி அடிக்க முற்பட்டாள்
   அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட ஆரம்பித்துவிட்டான் எப்படியோ அவளிடம் செருப்படி வாங்காமல் அவன் தப்பினான்  
  அன்றிலிருந்து அவன் மாமன் மகன் அடங்கிப்போனான் வாலை சுருட்டிக் கொண்டான்
   பத்மாவின் லட்சியம் முழு மூச்சு எல்லாம் படிப்புதான் அது மட்டுமே இந்த சமுதாயத்தில் தன்னை உயர்த்திக் காட்டும் அந்தஸ்தைக் கொண்டு வரும்
   கல்விதான் அழியாச் செல்வம் படித்து நாலெழுத்து தெரிந்தவரை மட்டும்தான் இந்த சமுதாயம் மதிக்கும்
    பல ஆண்களால் இளிவாய் நடத்தப்படும் ஒவ்வொரு பெண்ணும் படித்தவளாக இருந்தால் மட்டுமே இந்த சமுதாயத்தில் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படுவாள்
    ஒரு பெண் கல்வி கற்றால் அந்த குடும்பத்தின்  வறுமையை இருள், அறியாமையின் இருள் அகல்கிறது
    ஆகவே பத்மா  இரவும்,பகலும் படிப்பதில் தன்னை முனைப்பாய் ஈடுபடுத்திக்  கொண்டாள்
   அறியாமைல் விதியென வாழும் தன் சமூகத்தை நிலைநிறுத்த, தானும் சிறந்து விளங்கிட கல்வி எனும் வெளிச்சம் அவசியம் என்பதை உணர்ந்தவளாய் காணப்பட்டாள்
   நன்றாக படிக்கும் அவளுக்கு அந்த பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து ஆதரித்தார்கள்
  "உன்னால் முடியும் பத்மா, நீ வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவள், தோல்வி மனப்பான்மையை அகற்றிவிடு அடிக்கடி சுப்புலட்சுமி டீச்சர் சொல்லி பத்மாவின் மனதில் மலையாய் இருக்கும் பிரச்சினைகளை பனி போல உருகச் செய்துவிடுவார்கள் 
  தொடர்ந்து அவன்  அடையவேண்டிய லட்சிய பாதையில் அவளை வழி நடத்தி செல்வார்கள்
  ஒவ்வொரு வகையிலும் அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் அவளை மனதளவில் ஊக்கம் கொடுத்தார்கள்
   ஆகவே ஆசிரியர்கள் மீது அவள் பெருமதிப்பு வைத்திருந்தாள்
   அவளின் பள்ளி நூலகத்தில் அவள் படித்த ஓர் கவிதையை மனதுக்குள் எப்பொழுதும் நினைத்துக் கொள்வாள்
   அந்தக் கவிதை
"உயிர் கற்களை
சொல்உளிக்கொண்டு
பிரமிக்கும்
அறிவுச் சிற்பங்களாய்
உருவாக்கும்
இறைச் சிற்பிகளே
ஆசிரியர்கள்"
     அவள் பள்ளிக்கு செல்லும் போது எல்லாம்  வீட்டின் கஷ்டங்களை மறந்து விடுவாள்
    பாடம் படிப்பதிலும், தன் சிநேகிதிகளோடு மனம் விட்டு சிரித்து பேசுவதிலும் ஆசிரியைகளின் ஊக்குவிப்பிலும் மனம் புதிய நம்பிக்கை கொள்ளும்
  அங்கு படிக்கும் பல பிள்ளைகளுக்கு
எப்பொழுது பள்ளியில் விடுமுறை கிடைக்கும் என ஆவலோடு காத்திருப்பார்கள்
   இவள் மட்டும் விடுமுறை முடிந்து எப்பொழுது பள்ளி திறக்கப்படும் என காத்திருப்பாள்
    வீடு அவளுக்கு பிடிப்பதில்லை வீட்டின் வறுமை, அப்பாவின் இயலாமை புலம்பல், நோய்க்கு ஒடுங்கிப்போய் குழிவிழுந்த கண்களில்  நம்பிக்கையற்ற தாய், சுற்றிலும் வீண் கதை பேசி நேரத்தை வீணாய் கழிக்கும்  உறவு கூட்டங்கள் இவைகள் அவளுக்கு  ஒவ்வாதவைகளாகவே காணப்பட்டது
    பலரைப் போல நேரத்தை  தொலைக்காட்சிப் பெட்டியின் முன் உட்கார்ந்து கடத்த வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும்  கிடையாது
   விடுமுறையில் அம்மாவுக்கு வீட்டு வேலைகள் எல்லாம் பத்மா செய்வாள்
     அம்மாவின் சமையல் அப்பாவுக்கு பிடிப்பதில்லை பத்மாவுக்கு பள்ளி விடுமுறை என்றால் அவளின் அப்பாவுக்கு கொண்டாட்டம்
    "என் தங்கமே நாக்கு செத்துப் போச்சு இன்னைக்காவது தேங்காய்ய மைய அரைச்சி, சுறுசுறுன்னு காரம் வச்சி மசாலா குழம்பு செய்யுடா" அவளின் அப்பா அவளிடம் கெஞ்சுவதைப் போல கேட்பார்
     "நீ கேக்குற மாதிரியே செஞ்சு தரேம்பா" என்பாள்
     செய்து முடித்ததும் அம்மா செய்த ராகி களி  உருண்டையை சூட்டோடு ஆவி பறக்க தட்டில் வைத்து  அவன் அருகே பத்மா வைப்பாள்
    அப்படியே மெய்மறந்து கந்தன் சாப்பிடுவான்  தொண்டையில் இதமானன சூட்டில் களி திருநெல்வேலி இருட்டுக்கடை  அல்வாவைப் போல எந்த தங்குத் தடையும் இன்றி  இறங்கும்
       நன்றியோடு மகளை ஏறிட்டு பார்ப்பான் கன்னங்களில் கண்ணீர் மிதக்கும்
   பத்மா "ஏம்பா" என்பாள்
   "ஒன்னுமில்ல" என தன் துண்டால் கன்னத்தை ஒற்றி எடுப்பான்
   "செத்துப்போன நாக்குக்கு இப்பதான் உசுரே வந்திருக்குமா" என்பான்
   அதேப் போல் கருவாட்டுக்குழம்பு வாசம் வீட்டில் மணக்கையில் அப்படியே  அவன் பசி  மனத்தாலே ஆறிவிடும்
    அவனுக்கு கருவாடு என்றால் உசுரு அதுலையும் நெத்திலி கருவாடு எங்க கிடைச்சாலும் கடன் சொல்லியாவது  வாங்கி வந்து விடுவான்
   கருவாட்டை குழம்பாய் செய்ய முடியாத நேரங்களில்  தக்காளி, வெங்காயத்தை நறுக்கி அவைகளை அம்மிக்கல்லில்  அரைத்து  எண்ணெயில் வதக்கி கழுவிய கருவாட்டை கொட்டி வேக வைத்து உச்சுக் கொட்டி சாப்பிடுவான்
  ரச சாதம் என்றாலும் நாலு வாய்க்கு ஒரு தடவை கருவாட்டை கடித்து ருசிப்பான் கருவாடு சாப்பிடுவதில் அப்படி ஒரு அலாதி இன்பம் கொள்வான்
  ஆனால் இன்று வீட்டில் ஒரு பொட்டு அரிசி இல்லை பருப்பு தீர்ந்து போய்விட்டது
    அவன் மகள் பத்மா பசியோடு  பள்ளிக்கூடம் போய் விட்டாள்  மனைவியோ  படுத்த படுக்கையாய்  கிழிந்த கோரைப் பாயில் வியாதியோடு சுருண்டு கிடக்கிறாள்
    இன்னைக்கு எந்த சாமியும் செருப்பு தைக்க வரலையே என மனதுக்குள் உசுரை புடுங்கி சாகும் அளவுக்கு நொந்து  போயிருந்தான்
  போதாக்குறைக்கு பக்கத்திலேயே ஒருத்தன் தார்பாய் விரித்து பெரிய குடையை  நேராக்கி மண்ணில் குத்திட்டு நிறுத்தினான்
   கொண்டு வந்திருந்த புது செருப்புகளை வரிசையாய் அடுக்கி வைத்து கூவி அழைத்துக் கொண்டிருந்தான்
   " சார் ஜோடி செருப்பு நூறு ரூபாய் வாங்க சார் வாங்க"
    ஒரு பத்து நிமிடம்தான் கூவியிருப்பான்  கூட்டம் கூடியது செருப்பின் தரத்தை யாரும் பார்க்கவில்லை
    நூறு ரூபாய்தான என பணத்தை அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு பொருட்டாக எண்ணாமல் வாங்கினார்கள்
    இரண்டு மணி நேரத்திற்குள் கல்லா கட்டினான்
    கொண்டுவந்திருந்த அறுபது ஜோடி செருப்புகளை அறாயிரம்  ரூபாய்க்கு விற்றான்
  பக்கத்தில் நூலும், தோலுமாய் உட்கார்ந்திருந்த கந்தனை பார்த்து சிரித்தான் "என்ன பெரியவரே அப்படி பார்க்கிறிங்க எதையோ யோசிக்கிறீங்க டீ சாப்பிடுறீங்களா" என்றான்
    வேண்டாமென சொல்ல நினைத்தாலும் வயிற்றுப் பசி கிள்ளியது தலையை ஆட்டினார்
     "நான் சந்தோசமாய் இருக்கிறேன் பெரியவரே எனக்காக டீ சாப்பிடுங்க"
   சைக்கிளின் பின் கேரியரில் ஸ்டீல் டிரம்மில் டீயை வைத்துக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த பெரியவரை அழைத்து "ஐயா இரண்டு டீ குடுங்க" என்றான் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினான்
  "தம்பி சில்லரை இல்லிங்களே இப்பதான் முதல் போணி நீங்கதான்" என்றார் பெரியவர் 
     "பரவால்ல பெரியவரே வச்சுக்கோங்க"
என்றான்
    அவரோ வாயெல்லாம் பல்லாக "நீங்க நல்லா இருக்கணும் சாமி என கும்பிட்டு அந்த இடத்தை விட்டு கடந்து சென்றார் 
    கந்தனின் கையில் டீ கொடுத்தான் பசியை அடக்க அந்த டீ சூடாய் வயிற்றில் இறங்கியது
  வீட்டில் முனியம்மா என்ன பண்றாளோ அவளுக்கு வீசிங் மருந்து வாங்க கூட காசு இல்ல
     ஒரு பொட்டு அரிசி இல்ல  வீட்டு பக்கம் போக கந்தனுக்கு மனசு இல்ல ஏதேதோ யோசனைகளில் அவன் மனம் மூழ்கியிருந்தது
   செருப்பு விற்ற வாலிப பையன் கந்தனையே பார்த்துக் கொண்டிருந்தான் "என்ன பெரியவரே பலத்த யோசனையா இருக்கீங்க" என்றான்
   சுயநினைவுக்கு வந்தவராய் "ஒன்னும் இல்லப்பா" என்றார்
  "சரி உங்கள பாத்தா பாவமா இருக்கு கை செலவுக்கு வச்சுக்கோங்க" கையில் நூறு ரூபாயைக் திணித்தான்
  வாங்க மனம் மறுத்ததுது சுய கௌரவம் தடுத்தது  மனதுக்குள் இன்னொரு குரல் "டேய் கந்தா உனக்கெல்லாம் எதுக்குடா இந்த தன்மானம்,ரோஷம் முதல்ல காச வாங்குடா" என்றது
   கை வாங்க மறுத்தது வீட்டின் நிலைமையோ வாங்க சொல்லிற்று
   "வேண்டாம் தம்பி" என்றார்
   "பெரியவரே உனக்கு ஒரு மகன் இருந்து கொடுத்தா வாங்க மாட்டியா"
  அவன்  சொன்ன வார்த்தையில் மனம் குளிர்ந்தது  பிறகு எதையும் மறுத்து பேசாமல் "வாங்கிக்கிறேன் சாமி" என கையை முன் நீட்டினார்
    அவன் கையை தொட்டு கும்பிட்டு வாங்கிக்கொண்டார்
  "பரவாயில்ல பெரியவரே நான் ஒன்னும் அவ்வளவு பெரிய ஆள் இல்ல உனக்கு கொடுக்கணும்னு தோணுச்சு உன்ன பார்க்க அசப்புல எங்க அப்பா போலவே இருக்கிற" என்று அந்த வாலிபன் தன் கண்களில் கண்ணீர் கசிய கூறினான்
   "அழாத சாமி ஏன் அழற" என்றார்
  எங்க அப்பா என் மேல உசுரையே வச்சிருந்தாரு அவரை காப்பாத்த முடியல வீட்டை அடமானம் வச்சு வைத்தியம் பார்த்தேன் அப்பவும் முடியல" என மேற்கொண்டு அவனால் பேச முடியாமல் தேம்பினான்
  "அப்படி அது என்ன நோவு சாமி"கரிசனையொடு கேட்டார்
  "இரத்த புற்று நோய் உடம்புல இரத்தம் எல்லாம் கட்டியா மாறிட்டே இருக்கும் நாளாக ஆக  இரத்திரி எல்லாம் தூங்க முடியாது
   நோவு உயிர் போற மாதிரி வலிக்கும் அப்பா வலியால கத்துற சத்தம் யாரையும் தூங்க விடாது நரக வேதனை 
    ஹீமோதெரபி கொடுத்து  கொடுத்து ஆளே அடையாளம் தெரியாம போயிட்டாரு  அவரையே அவருக்கு பார்க்க பிடிக்கல தலையில,உடம்புல எல்லாம் முடி உதிர்ந்திடுச்சி"அதற்குமேல் அவனால் ஒன்றும் பேச முடியாமல் தேம்பி அழுதான்
  "கஷ்டம்தான் சாமி பணக்காரர்களுக்கு வர்ற நோவு ஏழைகளுக்கு வந்தா எப்படிக் காப்பாத்த முடியும்" துக்கத்தோடு கூறினார்
  தான் பெற்ற மகன் ஒருவன் இருந்தால் எப்படி அவன் மீது கரிசனையாய் இருப்பாரோ அப்படியாய் அவன் மீது மனதுருகினார்
  இப்பொழுது அந்த இளைஞனைக் குறித்து  தான் வைத்திருந்த எண்ணங்கள் அவரை விட்டு கலைந்து போயிற்று
  மேலும் அந்த இளைஞன் கந்தனை விடுவதாயில்லை தன் கருப்பு பேன்ட்டின் பின் பாக்கெட்டில் இருந்து மணி பர்சை எடுத்து அதைப் பிரித்து உள்ளே இருக்கின்ற தன் அப்பாவின் படத்தை கந்தனிடம் காண்பித்தான்
  கந்தன் அசந்து போனான் அப்படியே அசப்பில் அவனையே உரித்து வைத்ததைப் போல இருந்தது
   "அப்பாவும் உங்களை போல செருப்புத் தைக்கிற வேலைதான் செஞ்சார்"  என்றான்
  கந்தன் வியந்தான் "அப்படியா என்னால எதுவுமே நம்ப முடியல சாமி எல்லாம் மாயாஜாலம் மாதிரி இருக்கு"
  "நம்ம கையில என்ன இருக்குதுங்க எல்லாம் கடவுளுடைய திருவிளையாடல்"
  "சரி சாமி நீங்க எப்படி இந்த தொழிலுக்கு"
  "நான் டிப்ளமோ லெதர் டெக்னாலஜி முடிச்சிருக்கேன் கைவசம் பிராஜக்ட் வச்சிருக்கேன் காலம் கை கூடி வரும்போது அது நடக்கும் அதுவரைக்கும் காலத்தை ஓட்டனுமே அதனாலதான் இந்த பிசினஸ்"
   "நல்லது உன் மனசுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கும்"
  பெரியவரே உங்க கஷ்டம் நஷ்டம் எல்லாம் எனக்குத் தெரியும் புரியும் ஏன்னா நான் கண்கூடா எங்க அப்பா வாழ்க்கையில பார்த்து நொந்து போய் இருக்கேன்
   இந்த சமுதாயம் நம்மள மதிக்கணும்  நம்ம புள்ளைங்க எல்லாம் படிச்சே ஆகணும்" என வெறி கொண்ட பார்வையோடு பெரியவரைப் பார்த்தான்
  "அதான் சாமி என் பொணண  கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன்"
   பெரியவரிடம்  அவன் "படிப்ப மட்டும்  பாதியில நிறுத்திவிடாதிங்க கடல்ல மூச்சடைக்கி முத்து எடுக்கிற மாதிரி உசுர கொடுத்தாவது படிக்க வச்சிடணும்" என்றான்
    "ஆமா சாமி உன்ன மாதிரிதான் என் பொண்ணு பத்மா படிச்சு பெருசா சாதிக்கணும்னு அடிக்கடி சொல்லுவா"
  "பெரியவரே உங்கள அப்பான்னு கூப்பிடணும் போல தோணுது கூப்பிடலாமா"அனுமதி கேட்டான்
  "தாராளமா கூப்பிடலாம் சாமி என் மனசு குளிரும் எனக்கு ஆம்பள பையன் இல்ல"முகம் மலர்ந்தான்
  "கவலைப்படாதீங்க அப்பா எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா நான் படிக்க வைக்க மாட்டேனா இனிமே எதுனாலும் எந்த உதவின்னாலும் என் கிட்ட தயங்காம கேளுங்க
    நீங்க யார் எவருனே எனக்கு தெரியாது ஆனா பாருங்க என் அப்பா மாதிரியே அச்சா இருக்கிறீங்க அதனால அப்படியே இந்த நிலையிலையே உங்கள விட்டுட்டு போக எனக்கு மனசு வரல" என்றான்
   சூரியன் மறையும் மாலை நேரம்  "அப்பா உங்க வீடு எங்க இருக்கு சொல்லுங்க நான் கொண்டு போய் உங்கள விட்டுட்டு போறேன் என்றான்
    தன்னுடைய ஆக்டிவ் ஹொண்டாவில்  பெரியவரிடம் இருந்த கந்தல் துணிப் பையை வாங்கி முன்னாடி வைத்துக்கொண்டான் கந்தனோ உட்காருவதற்கு சங்கோஜப்பட்டார்
  "உட்காருங்க என்ன யோசிக்கிறீங்க உங்க வீடு எங்க"
   "எம்ஜிஆர் நகரில் நாளாவது வீடு"
  ஐந்து நிமிடத்தில் வண்டியை பெரியவரின் வீட்டு நிலைப்படி அருகே கொண்டுபோய் நிறுத்தினான் அந்த இளைஞனான மகேஷ்
   அந்த வீட்டை தன் கண்களால் அளவெடுத்தான் வீட்டுக்குள் முனகல் சத்தம்
   "என்னப்பா சத்தம் அம்மாவுக்கு உடம்புக்கு முடியலையா"
    "ஆமாப்பா" என குரல் தழும்ப கூறினார்
   அந்த வீட்டின் ஏழ்மை கோலம் அங்கிருந்த அம்மாவின் சுருண்டு படுத்திருக்கும் ஒல்லியான தேகம் பார்க்க மகேஷின் மனமும் கசிந்தது
   மகேஷை பார்த்ததும் அந்த அம்மா எழ முடியாமல் விருட்டென்று எழுந்து கும்பிட்டது "வாங்க தம்பி"
    "இதா தம்பிக்கு காப்பி, தண்ணி ஏதாவது போடு" என்றான் கந்தன்
   "வேணாம்பா"
  "முதல் தடவையா  வீட்டுக்கு வந்திருக்க"
   "அதெல்லாம் எதுவும் வேணாம் அம்மாவுக்கு என்ன" என்றான்
     "ஆஸ்துமா குளிர்காலம் வந்தா மூச்சு இளைக்கும் அப்புறம் டாக்டரை பார்த்து மருந்து மாத்திரை வாங்கி போட்டுக்கிட்டா   சரியா போயிடும்"  என்றார்
   மகேஷின் மனம் அந்த இடத்தை விட்டு கடந்து செல்ல  ஒத்துழைக்கவில்லை
  மணி பர்சை எடுத்து மீண்டும் பிரித்து ஐநாறு ரூபாய் நோட்டை பெரியவரின் கையில் நீட்டினான்
    "முதல்ல ஒரு ஆட்டோவ வச்சு அம்மாவா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்" என்றான்
  வாங்க மறுத்த பெரியவரின் கையில் நோட்டு திணிக்கப்பட்டது
   கந்தனால் அழாமல் இருக்க முடியவில்லை தனியாய் போய் ஓவென அழ வேண்டும்போல  தோணிற்று
    கைகளால் வாயை பொத்தி அடக்கிக் கொண்டு  கண்களிலிருந்து கன்னக் குழிகளில்  தேங்கின கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை
  "திரும்பவும் நாளைக்கு வரேன்" என்று சொன்ன மகேஷ் அச்சூழலில் அந்த இடத்தில் அதிக நேரம் இருக்க மனம் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை அங்கே இருந்தால் அவனும் அழுது விடுபவன் போலவே காணப்பட்டான் ஆகவே புறப்பட்டான்
   பிறகு கந்தன் ஆட்டோவில் தன் மனைவியை உட்கார வைத்து பக்கத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட வைத்து  மருந்து மாத்திரை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினான்
   மாலை நேர பள்ளி டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்த தன் மகளிடம் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் கந்தன் பிசகாமல் கூறினான்
   மகளின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன "அப்படியா அந்த அண்ணன பார்க்கணுமே" அவளுக்குள் ஆவல் அதிகரித்தது
   நாளைக்கு அந்த அண்ணன் வரும்மா
இரவெல்லாம் அவளுக்குத் தூக்கம் வரவில்லை
   தன்னுடன் பிறக்காத அந்த பாச அண்ணன் எப்படி  இருப்பார் எப்படி பேசுவார் என தன் மனதுக்குள் ஆயிரம் யோசனைகள் அவளுக்குள் ஓடியது
   அடுத்த நாள் பள்ளி விடுமுறை என்பதால் பத்மா வீட்டிலே ஆவலோடு காத்திருந்தாள்
    மகேஷ் வந்தான் வீட்டுக்குள் நுழைய கந்தன் தன் மகளிடம் மகேஷை அறிமுகப்படுத்தினான்
   "வாங்க அண்ணா" என்றாள்
  அம்மாவுக்கு எப்படி இருக்குமா உன் படிப்பு எப்படி போகிறது உன் எதிர்கால லட்சியம் என்ன சகலமும் பல மணி நேரங்கள் அங்கெ இருந்து பேசப்பட்டது
  குறுகிய நேரத்திலே பழகின அவர்கள் அதிக நாட்கள் பழகின பந்தம் போல் உணர்ந்தார்கள்
   "கவலைப்படாதே நான் உனக்கு ஒரு அண்ணனா இருந்து  சகலத்தையும் செய்து வைக்கிறேன்" என்றான்
   அந்த வார்த்தை அவளுடைய மனதிற்குள் அசைக்க முடியாத நம்பிக்கை எனும் வேரை ஊன்றிற்று
   பிறகு அடிக்கடி அவன் அங்கு வந்து அந்த குடும்பத்தின் நலனை விசாரித்தான் அவர்களின் தேவைகளை சந்தித்தான் அந்த குடும்பத்தில் ஒருவனாகவே ஆகிவிட்டான்
   "இனிமே அப்பா நீங்க செருப்பு தைக்க போக வேணாம் நானே செருப்பு கடை ஆரம்பிக்கிறேன் நீங்க தான் அதுக்கு முதலாளி" என்றான்
   "என்னால எப்படிப்பா முடியும் எனக்கு படிப்பு ஒன்னும் இல்லையேப்பா"  என்றார்
   "உங்களால் எல்லாம் முடியும் உங்க மேற்பார்வையில  அந்த கடை நடக்கும்" என்றான்
    பிறகு ஒரு சில மாதத்தில் மகேஷ் புட் வியர் எனும் பெயரை பஸ் ஸ்டாண்டில் முக்கியமான இடத்தில்  திறக்கப்பட்டது
   மகேஷ் வாங்கி தந்த வேட்டி, சட்டையில் கந்தன் மினுமினுப்பாய் கடையில் ஜொலித்துக் கொண்டிருந்தார்
    சிரித்த முகத்துடன் கஸ்டமர்களை வரவேற்று அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்வதில் கந்தன் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்
    செருப்பு கடை எப்பொழுதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது
  மகேஷ் தன் சொந்த அம்மாவை கவனிப்பது போல கந்தனின் மனைவியை  ஒரு நல்ல தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற செய்தான் அவள் முன்னேற்றம் கொண்டாள்
   பத்மாவின் அனைத்து படிப்பு செலவுகளையும் மகேஷ் பொறுப்பெடுத்துக் கொண்டான்
   பத்மா பள்ளியில் படிக்கும் தன் சக மாணவிகளிடம்  இவர்தான் எங்க அண்ணன் மகேஷ் என அறிமுகப்படுத்தினாள் அவனை உரிமை கொண்டாடினாள்
   பத்மாவிற்கு எதிர்காலத்தைக் குறித்து அசைக்க முடியாத நம்பிக்கை பிறந்து வளர்ந்தது 
    எப்படியும் நான் கலெக்டர் ஆகி விடுவேன் அதில் துளியும் சந்தேகம் இல்லையென அவள் படிப்பைத் தொடர்ந்தாள்
   கந்தனின் கவலை தோய்ந்த மனைவியின் முகம் இப்பொழுதெல்லாம் மலர்ச்சியை கொண்டிருந்தது
  இப்ப இருக்குற இடம் சுத்தம், சுகாதாரம் இல்லையென  மகேஷ் அவர்களை புது வாடகை வீட்டில் குடியமர்த்தினான்
  கந்தன் பரந்த மனதோடு கண்களை ஏறெடுத்து வீட்டு வாசலில் இருந்து வானத்தை அண்ணாந்து  பார்த்து இரு கரங்களை அகலமாய் விரிவாய் நீட்டினான்
    கண்ணீரோடு "கடவுளே நீர் நல்லவர் இந்த பூமியில் பிறந்ததின் பலனை கண்டு கொண்டேன் நீர் கொடுத்த உறவுகளுக்காக நன்றி  என்றான்


34. வது கதை

நம்பிக்கை..

ஆடிமாதத்தின் கடைசி வெள்ளி. ஆத்தா சம்பந்தமான பாடல்கள் அம்மன் கோயிலில் இடைவிடாது ஒலிக்கும் வழக்கம். வழக்கத்திற்கு மாறாக அமைதியான விடியற்காலையாயிற்று.

கொரோனா தொற்று மனிதர்களை மட்டுமா ஆட்டிப் படைக்கிறது. கடவுள்களையும் அல்லவா ஆட்டிப் படைக்கிறது. ஐந்தாவது மாதமாக கோயில்கள் வழிபாடில்லாமல் பூட்டியே கிடக்கின்றன. சிற்சில கோயில்களில் விடியலில் பூசாரி சிலைக்கு அபிஷேகம் செய்து உடை மாற்றி தீபாராதனை செய்துவிட்டுப் பூட்டிவிட்டு வரும் கோயில்களுமுண்டு. பூசாரிக்கு மாதாமாதம் சம்பளம் கொடுக்கும் ஆலயங்களில் இது நிகழ்கிறது. தனக்குத்தானே வருவாயைத் தேடிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் உள்ள ஆலயங்களில் பூசாரிகளால் கொரோனா தடையை மீறி ஒன்றும் செய்ய முடியாமல் போகும் போது எந்த வருவாயுமின்றி கோயிலைத் திறந்து என்ன செய்ய..

கிராமத்திலும் அடங்காத நகரத்திலும் அடங்காத ரெண்டுங்கெட்டானாக டவுன் பஞ்சாயத்து எனும் பெத்த பேரோடு நீலு தாக லேது எனும்படியாக வசதிகளற்ற ஊராக விளங்கி வரும் ஊரது.

பிழைப்பு நடத்த நாதியற்ற நிலையில் ஐந்து மாதங்களாக கொரோனா கொடூரத்தை அனுபவித்து அனுபவித்து விரக்தியின் விளிம்புக்குச் சென்ற சிங்காரம் அந்த விடியலில் ஆத்தா ரேணுகாம்பாளை நினைத்து நொந்து கொண்டான்.

சிங்காரம் நகர தொழிற்சங்க கூட்டமைப்புச் செயலாளர். கட்சி உறுப்பினர். ஆனால் தன்னை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தயாரில்லை அவன். உறுப்பினர்களை மேம்படுத்த நடத்தப்படும் வகுப்புகளிலும் கலந்து கொள்வதில்லை‌ எதையும் படிப்பதுமில்லை. ஏதோ மேலிருந்து சொல்லப்படும் போராட்டங்களில் வந்து நிற்பான்.‌ அத்தகைய போராட்டங்களுக்கும் ஆட்களைத் திரட்டும் வேலைகளைத் தானாகவே செய்வதில்லை. கூட யாராவது வர வேண்டும்.

தனியார் பேருந்தில் நடத்துனராக பத்தாண்டுகளாக ஏதோ பிழைப்பு நடந்து கொண்டிருந்தது. மனைவி சங்கீதாவுடன் ஐந்தாண்டுகளாக குடும்பமும் உருண்டு கொண்டுதானிருந்தது.

வயித்தைக் கட்டி வாயக் கட்டி சேர்த்து வச்ச பணத்தில் அவனாகவே பெண் பார்த்து முடித்த மணமது. பெற்றோர்களும் நெருங்கிய உறவுகளும் இல்லாத அவனுக்கு அவன் செய்யும் தொழில் மூலமாக ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் கிடைத்தாள் சங்கீதா. முதல் குழந்தையே ஆண்பிள்ளையாகப் பிறந்ததில் அத்தனை மகிழ்ச்சி இருவருக்கும். வயது ஐந்தாகிவிட்டது. அடிச்சி புடிச்சி எல்.கே.ஜி.யில் சேர்த்துவிட்டு கான்வென்டில் படிக்க வைத்தான். இப்போது ஆங்கில வழியில் முதல் வகுப்பு. மாதம் மூன்றாச்சு. கொரோனாவால் பள்ளிக் கூடம் திறக்கவில்லை. ஆனால் மூன்று மாதங்களாக மகனுக்குக் கட்ட வேண்டிய ஃபீஸ் குறித்து பக்கத்து வீட்டு பிரின்சிபால் இவனிடம் கேட்டது கேட்டபடியே இருக்கிறார்.

"பள்ளிக்கூடம் தான் திறக்கலியே..ஏன் அவசரப்படுத்துறீங்க சாரு..உங்களுக்கே தெரியும். இப்ப எனக்கு வேலையில்லாதது..நாலு மாசமா பஸ் ஓடாம..சம்பளமில்லாத நெலம..மூக்கைப் புடிச்சா ஜீவன் போகுது..ரேஷன் அரிசியில் அரை வயிறு கஞ்சியைக் குடிச்சிக்கிட்டுக் கிடக்கோம். பொறுத்துக்குங்க.."

இப்படிச் சொன்ன சிங்காரத்திடம் அந்த பிரின்சிபால்..
"சிங்காரம்..உன் முதலாளியும் போலத்தான் என் முதலாளியும். ஸ்கூல் நடந்தால்தான் நான் வேலை பார்க்க முடியும். எதோ வெள்ளையும் சொள்ளையுமா திரியிரேன்னு பார்த்தியா..உம் பொழப்புத்தான் எம் பொழப்பும். புதுப் பசங்களச் சேக்கறதும் ஏற்கனவே படிக்கிற பசங்களுக்கு ஸ்கூல் ஃபீஸ் கலெக்ட் பண்றதப் பொறுத்துமே எனக்குச் சம்பளம். என் வீட்டில் அடுப்பு எரிய வேணாமா.."

"கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்க ஒரு கொடுமை டிங்கு டிங்குன்னு ஆடுச்சாம்" தனக்குள் சொல்லிக் கொண்டவன் பிரின்சிபாலிடம் எதுவும் சொல்லாமல் வீட்டுக்குள் வந்து கதவைத் தாழிட்டுக் கொண்டான்.

காலண்டரில் தேதி 5ஐக் காட்டியது. 5ஆம் தேதிக்குள் மளிகைக் கடை பாக்கி 2000 ரூபாயக் கொடுக்கலன்னா நடக்கிறதே வேறன்னு நாடார் சொன்னது நினைவுக்கு வந்தது. பெருமூச்செறிந்தபடி சமையலறைக்குள் சென்றான். சங்கீதா வாடிய முகத்துடன் பழைய சாதத்தைக் கரைத்துக் கொண்டிருந்தாள்.

"பால் பாக்கி ஆயிரம் ரூபாய் அப்படியே நிக்கிது. அதனால ஐநூறுக்குப் பதிலாக இருநூறு பால் மட்டுந்தான் வாங்கியிருக்கேன். அதக் காய்ச்சி பொற குத்தி மோராக்கினாத்தான் ரேஷன் அரிசி சாதத்தோட தண்ணீரும் மோருமா ஒப்பேத்த முடியும். பையன் இன்னும் எழுந்திருக்கல. எதா இருந்தாலும் அந்தக் குழந்தை முன்னாடி நாம் படற பாட்டப் படிச்சிக்கிட்டிருக்க வேணாம்"

சொல்வதறியாது தலையை மட்டும் ஆட்டிவிட்டு சுவரில் உடம்பை வைத்துத் தரையில் சரிந்தான். உள்ளுக்குள் அழுது கொண்டனர் இருவரும்.

அரசு கொடுத்த இலவச டி.வி.யை வைக்க எண்ணியது மனம். ரிமோட்டை எடுத்த கையோ அப்படியே தரையில் வைத்து விட்டது.

"அண்ணே இவ்வளவு காலமாக கேபுள் கட்டணம் மாசா மாசம் கொடுத்துக்கிட்டுதான இருந்தேன். இந்த மாசம் ஒன்னுமே பண்ண முடியல. நிர்தாட்சண்யமா கட் பண்ணிட்டிங்களே.. பையனுக்கு எதோ கல்வி சானல்ல கிளாஸ் நடத்தறாங்களாம். இந்த நேரம் பார்த்து கட் பண்ணிட்டீங்களே.."

"சிங்காரம்..வெவரம் புரியாத ஆளாக இருக்கியே..நீ கேபுள் டி.வி. கட்டணத்தைக் கட்டலன்னா தானாவே உனக்கு லைன் கட்டாயிடும். என்‌கையில் ஒன்னுமில்ல."

நினைவிலாடியவை எல்லாம் சிங்காரத்தைப் பிடுங்கித் நின்றன.

"மணி எட்டாயிடுச்சி..டீக்குப் பதிலாக மட்டுமில்ல..இதுதான் காலை சாப்பாடு.."குண்டு சொம்பை சிங்காரத்தின் பக்கத்தில் வைத்துவிட்டுச் சென்றாள் சங்கீதா.

நீரும்  மோருமாய் முக்கால் பகுதி. கால் பகுதி சோறு. குண்டு சொம்பை எடுத்து ஒரு‌மிடறுதான் குடித்திருப்பான். அப்படியே கீழே வைத்துவிட்டுக் கண்களை மூடியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.

ஒவ்வொரு மாதமும் முடியும்போது இந்த ஒன்னாந் தேதி அரசு அறிவித்துவிடுமா..பொதுப் போக்குவரத்து துவங்கிவிடுமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். அப்படியே நிலமை சரியானாலும் சமூக இடைவெளியுடன் பேருந்துகளை இயக்க அறிவித்தால் முதலாளிகள் பேருந்துகளை இயக்குவது சந்தேகம்தான். பஸ் பிதுங்கி வழிய ஆட்களை ஏற்றிச் சென்றால் கூட திருப்தி அடையாத முதலாளி களாயிற்றே..மேலும் ஆட்குறைப்பைச் செய்தால் தனக்கு வேலை கிடைக்க வேண்டுமே..

இருட்டிக் கொண்டு வந்தது சிங்காரத்துக்கு. அவனுடைய நண்பன் நல்லத்தம்பி கிராமத்தில் இருப்பதால் ஒரு மாற்று ஏற்பாடாவது கிடைத்தது. 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலைக்குப் போவதால் ஒரு மாதமாக நல்லத் தம்பிக்கு பிழைப்பு நடக்கிறது. ஆனால் சிங்காரம் வசிக்கும் ஊர் பேரூராட்சி என்பதால் 100 நாள் வேலைத் திட்டம் அங்கு கிடையாது. இதுவே கிராமமாக இருந்தால் இருவருக்கும் வேலை அட்டை கிடைத்திருக்கும். குறைந்தது ஒருவர் மாற்றி ஒருவருக்கு குடும்பத்தில் வேலை கிடைத்திருக்கும்.

சங்கரன் மனைவி கீதாவை சமாதானப்படுத்தி உள்ளூர் அவலங்களைப் புரியவைத்து அவலங்களுக்குத் தீீர்வாக பேரூராட்சி மக்களுக்கும் நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த போராட்டம் நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி சம்மதிக்க வைத்தார். உற்சாகமுடன் பம்பரமாக வேலை செய்து 500 பேரைத் திரட்டியதும் 1000 விண்ணப்ப படிவங்களைக் கொடுத்ததும் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க போராட்டமாக அமைந்தது.

சிந்தனையோட்டத்தை நிறுத்தியது வீட்டு காலிங் பெல். எழுந்தவனுக்கு நினைத்தது போலவே நடந்தது.

தெருவிலேயே நின்றபடி...
"தோ பாரு..சிங்காரம். ரெண்டு மாதமாக வாடகை தரல..இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் ரெண்டு மாத வாடகை மூவாயிரத்தத் தரலன்னா வீட்டுச் சாமான்லாம் வெளியில் வரும்"

பதிலுக்குக் காத்திராமல் விருட்டென்று கிளம்பினார் வீட்டு உரிமையாளர். நாக்கைப் பிடுங்குவது போலான சிங்காரம் சுற்று முற்றும் பார்த்தான். பக்கத்து வீட்டில் பிரின்சிபால் இந்தக் காட்சி யிலிருந்து விடுபட்டு உள்ளே சென்று கொண்டிருந்தார். இவன் உள்ளே நுழைந்ததும் முந்தானையை வாயில் வைத்தபடிக் கேவிக் கேவி அழுது கொண்டிருந்தாள் சங்கீதா. இவன் சுவரோடு சுவராய் சரிந்து கண்களை இறுக மூடினான். கண்ணீர் கண்களிலிருந்து விடுதலை பெற்றது.

"சங்கீதா...எனக்கென்னவோ நெலம சரியாகும்னு தோனல..ஏற்கெனவே பைனான்ஸ் கடன் வட்டியோடு கழுத்த நெறிக்குது..பால் பாக்கி, ஸ்கூல் ஃபீஸ், மளிகை பாக்கின்னு நெனச்சாலே பயமாயிருக்கு.. இப்படி ஒரு வாழ்க்கை நமக்குத் தேவையா...நிம்மதியா ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்துரலாமான்னு தோணுது.. எனக்கும் வேற உறவுகள் இல்ல தாங்கறதுக்கு..உங்க அம்மா வீடும் கஷ்ட ஜீவனம். நம்ம வாழ்க்கையை முடிச்சிக்கினா என்ன"

முந்தாநாள் இரவு இப்படிப் பேசி சிங்காரத்தின் வாயைப் பொத்திய சங்கீதா..."இனி இந்த மாதிரி எப்பவுமே பேச வேண்டாம்..மரம் வச்சவன் தண்ணி ஊத்தாமலா போயிடுவான்..வழி கிடைக்கும். நம்பிக்கையாத் தூங்குங்க" என்று சொன்னது நினைவுக்கு வந்தது சிங்காரத்திற்கு.  

சத்தம் போடாமல் எழுந்து வந்த மகன் விக்ரம் அப்பாவின் எதிரில் உட்கார்ந்து கொண்டு அப்பாவையே பார்த்தான்.

கண்களைத் திறந்து கண்முன் அமைதியாய் அமர்ந்திருந்த மகனிடம் சாதாரித்துக் கொண்டு...

"என்னடா.. இப்பத்தான் எழுந்தியா..மணி எட்டுக்கு மேலாகுது.."

"ராத்திரி எல்லாம் தூக்கமே வரலப்பா..லேட்டா தான் தூக்கம் வந்தது. எனக்கு இப்ப படிக்கிற பள்ளிக்கூடம் வேண்டாம்பா.. கவர்மெண்ட் ஸ்கூல்லயே ஒன்னாங்கிளாஸ் சேந்துக்கறம்பா..எச்.எம். கௌசல்யா என்னோட ப்ரண்ட் அசோக்கோட அம்மா தானே.." மேலும் தொடர்ந்தான்.

"அப்பா..இப்ப உள்ள நெலமையில அதுதாம்பா நல்லது.அரசுப் பள்ளியில் படிச்சவங்க எவ்வளவோ பேர் பெரிய ஆளாக வந்திருக்காங்கன்னு அசோக்கோட அம்மா சொல்லியிருக்காங்க."  

இடைமறித்து சிங்காரம்..
"ஆனா அவங்க பையன் அசோக் கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கலயப்பா"

"அவங்க கை நிறைய சம்பளம் வாங்கறாங்க..ஆனா நீங்க.."

பெரிவர்களைப் போல மகன் பேசியது சிங்காரத்துக்கும் சங்கீதாவுக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. இப்போது சங்கீதா மகனை வாரியெடுத்து முத்தமிட்டாள்.

"போப்பா..டாய்லெட் பாத் ரூமெல்லாம் போய் வாப்பா..சாப்பிடுவ"
தலையசைத்துப் பின்பக்கம் சென்றான் விக்ரம்.

"இதோ பாரு..இப்பிடியே மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிட்டு இருந்தா ஒன்னும் செய்ய முடியாது. நமக்கு நெல புலமில்லை..நம்ம ஊர்ல 100 நாள் வேலையுமில்ல..ஏதாச்சும் வேலைக்குப் போயி நாலு காசு சம்பாரிச்சாதான் உயிர் வாழ முடியும். அதனால் நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்."இப்படிச் சொன்ன சங்கீதாவை நோக்கிப்

புருவத்தை உயர்த்திப் பார்த்தான் சிங்காரம்.

"என்ன அப்படி பார்க்கிற...டீச்சரம்மா வீட்ல கொரோனாவுக்கு பயந்துகிட்டு வீட்டு வேலை செஞ்சிக்கிட்டிருந்த வேலக்காரம்மாவ நிறுத்தி மூனு மாசமாச்சி..இப்ப அவங்களால முடியாம மறுபடியும் ஆள் வக்கிறதுக்குப் பாக்குறாங்க. பழைய வேலக்காரம்மா ஊர  விட்டு அம்மா ஊருக்குப் பொழக்கப் போயிடுச்சி..அது ஒண்டிக்கட்டை.
இதுதான் சரியான சந்தர்ப்பம்னு அசோக் மூலமா அவங்கம்மாவக் கேக்க வச்சேன். சம்மதிச்சிட்டாங்க.. நேத்து அவங்ககிட்டயே பேசிட்டேன்‌. மாசம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம். வீடு பெருக்கிறது, துடைக்கிறது,  சாமான் தேய்க்கிறது, துணி காயப் போடறதுதான் வேலை"

விக்ரம் பின்பக்கத்திலிருந்து வந்துவிட்டான். குண்டு சொம்புடன் வந்தாள். சோறும் மோரும் சாப்பிட ஆரம்பித்தான் விக்ரம்.

காலிங் பெல் சத்தம் கேட்டு விரைந்தாள் சங்கீதா. சிங்காரத்துக்கு உள்ளுக்குள் பக்பக்கென்றது. அசோக்கிடம் பேசிக் கொண்டு அவனிடம் சங்கீதா ஏதோ கைநீட்டி வாங்குவதை அறிந்தான் சிங்காரம்.

அசோக் சென்றுவிட்டிருந்தான். உள்ளே நுழைந்ததும்
"டீச்சரம்மா ரொம்ப நல்லவங்க போல. நெலமயப் புரிஞ்சிகிட்டு அட்வான்சாவே ஆயிரத்து ஐநூறு ரூபாயக் குடுத்து விட்டிருக்காங்க..இன்னிக்கே வேலைக்கி வரச்சொல்லிட்டாங்களாம். நான் நம்ம ஹவுஸ் ஓனரிடம் இந்தப் பணத்தக் குடுத்துட்டு வேலைக்குப் போயிட்டு வரேன்"

பதிலுக்காகக் காத்திராமல் புறப்பட்டாள் சங்கீதா. ஏற்கனவே அசோக் விக்ரமிடம் இதைப் பற்றி பேசியிருந்ததால் விக்ரம் அவன் பாட்டுக்குச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் தெம்பு வந்த சிங்காரம் காலிங் பெல் சத்தம் கேட்டு வந்தான். சங்கரன் டூவீலரில் இருந்து கொண்டு இரண்டு காலையும் இறங்கி தரையில் ஊன்றியவாறே முன்பக்கம் வைத்திருந்த அரிசி சிப்பத்தைக் கீழே தள்ளினார். இப்போது சிங்காரம் வணக்கம் சொல்லிக் கொண்டே மூட்டையைத் தூக்கி நிறுத்தினான். சங்கரன் மாஸ்கைக் கீழிறக்கி வண்டியை ஸ்டாண்ட் போட்டு அவரும் ஒரு கை பிடித்தவாறே..

"என்ன தோழர் சிங்காரம்..உங்களுக்குத்தான் இந்த அரிசி..சி.ஐ.டி.யு.வில் பண்ண முடிவு. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை பார்க்கும் தோழர்கள் மூலமாக நன்கொடை வசூலித்து தனியார் போக்குவரத்துல வேலை பார்த்து கொரோனாவால சம்பளம் இழந்த இயக்கத் தோழர்களின் வீடுகளுக்கே சென்று அரிசியைக் கொடுத்து விட்டு ஆறுதல் சொல்லிவிட்டு வரனம்னு  முடிவு."

இருவரும் அரிசி சிப்பத்தை உள்ளே எடுத்துச் சென்று கூடத்தில் சுவரோரம் சாத்திவிட்டு சிங்காரம் பேச நா எழாமல் சங்கரனை நாற்காலியில் அமரச் சொன்னான். கலங்கிய தன் கண்களை லுங்கியின் முனையில் துடைத்துக் கொண்டான்.

"நீங்களும் உட்காருங்க சிங்காரம். எங்க சங்கீதவக் காணோம். பையன் விக்ரம் எங்கே?"

"வேறு வழியில்ல தோழரே..வீட்டு வேலை செய்யறதுக்குப் போயிருக்கா..பையன் வெளியே விளையாடப் போயிருக்கான். 100 நாள் வேலை கேட்டுப் போராட்டம் பண்ணதுக்கு ஒன்னும் பதில் இல்லையா தோழர்"

சருங்கியது சங்கரனின் முகம்.

"நாம் நினைக்கிற மாதிரி அரசாங்கம் இல்லையே சிங்காரம். ரங்கராஜன் குழு பரிந்துரையில் பேருராட்சி மக்களுக்கும் 100 நாள் வேலையை விரிவுபடுத்தனும்னு இருக்கு. அதைக் குறிப்பிட்டு நம்ம இயக்கத் தலைவர்கள்ளாம் முதலமைச்சர்கிட்டப் பேசி வலியுறுத்தியிருக்காங்க. மேலும் பொதுப் போக்குவரத்த உடனே தொடங்கச் சொல்லியும் வற்புறுத்தியிருக்காங்க..கொரோனா மரணத்தைவிட பட்டினிச்சாவு சவாலா மாறிக்கிட்டிருக்குங்கிறதையும் உணர்த்தியிருக்காங்க..அதனால இன்னும் பத்து நாள்ள பொதுப் போக்குவரத்த துவக்கிடுவாங்க. உங்க பஸ் கம்பெனி முதலாளிகிட்ட நான் பேசுறேன். சிங்காரத்துக்குக் கட்டாயம் வேலை கொடுக்கனும்னு வலியுறுத்துறேன். கவலையே பட வேண்டாம். நிச்சயமா வேலை கிடைச்சிடும்."
கையெடுத்துக் கும்பிட்ட சிங்காரம் கண்கலங்குவது தெரிந்து தேற்றினார் சங்கரன். சட்டைப் பையிலிருந்து நான்காக மடிக்கப் பட்டிருந்த நோட்டீசைக் கொடுத்து ..
"நல வாரியத்தில் பதிவு செய்யாத முறைசாறா தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி நாளைக்கு அண்ணா சிலை முன்னாடி ஆர்ப்பாட்டம் வச்சிருக்கோம். உங்க நண்பர்களோடு அவசியம் வந்துடுங்க."

முறுவலித்துக் கொண்டே எழுந்தார் சங்கரன். அவருக்குக் குடிக்கவோ சாப்பிடவோ தருவதற்கு எதுவும் இல்லாத நிலையில் தயங்கியபடியே..
"டீ சாப்பிடுங்களேன் தோழர்" என்றான் சிங்காரம்.

மீண்டும் முறுவலித்துக் கொண்டே ஹாங்கரில் மாட்டப்பட்டிருந்த காக்கிச் சட்டையையும் பேண்டையும் பார்த்துக் கொண்டே மாஸ்கைச் சரி செய்தபடித் தலையசைத்துக் கிளம்பினார் சங்கரன். சங்கரனின் வண்டி எழுப்பிய புகையில் இப்போது துர்நாற்றம் தெரியவில்லை. வண்டி சென்ற திசையையே நோக்கின சிங்காரத்தின் கண்கள்.

சான்று
-------------

34 வது கதை


தாத்தாவின் தோட்டம்


   இன்னும் முகுந்தனால் மறக்க முடியவில்லை தாத்தாவின் பசுமைத் தோட்டம்
  அவனுடைய தாத்தா எட்டு ஏக்கர் நிலம் வைத்திருந்தார் மூன்று ஏக்கர் நிலத்தில் பெரியப் பெரிய மாமரங்கள் வளர்ந்த அடர்ந்து கிடந்தது 
    சீசனுக்கு சுவைக்க எல்லா வகையான மாங்கனியும் அங்கு கிடைக்கும் மற்ற ஐந்து ஏக்கர் நிலம் பசுமை போர்த்தியதாய் பயிர் வகைகள்  காணப்படும்
   கண்ணுக்கு எட்டியவரை பசுமையான குளிர்ச்சியான இடம் மனதுக்கு இதம் தரும் நிலமது
   குருவிகள் கூடும், குயில்கள் பாடும், கிளிகள் பேசும், அதிகாலைதோறும் அலாரம் இல்லாமல் சேவல்கள் எழுப்பிவிடும், கிணற்றில் மீன்கள் துள்ளி விளையாடும்
   ஒவ்வொரு காட்சிகளும் பார்ப்பதற்கு அழகாகவும்,மனதை மயக்கக் கூடியதாகவும் முகுந்தன் உணர்ந்து அனுபவித்த அந்த நாட்களை நினைத்து பெருமூச்சு விட்டான்  
    தாத்தா கறந்த பாலில் தண்ணீர் சேர்க்காமல் அப்படியே கொண்டு வந்து கொடுக்க பாட்டி  நன்றாக கொதிக்கவைத்து அதில் நாட்டு சர்க்கரையை போட்டு சூடு பறக்க  ஆற்றி கொடுப்பாள்
   அந்தப் பால் குடித்து வெகு நாளாயிற்று பதமான ராகி களி செய்து சூடாய் தட்டில் இட்டு வெந்த கறியோடு ஆவி பறக்கும் சூடாக மண்சட்டியில்  கொதித்த குழம்பை இறக்கி  அதில் ஊற்றுவாள் கழியை அதில் தொட்டு வாயில் வைக்கும்போது திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவை போல   தொண்டைக்குழிக்குள் சூடாய் இதமாய் கடினப் படுத்தாமல் இறங்கும்  இப்ப யாரும் அப்படி கறி செய்து பதமாய் போட ஆளில்லை வருந்தினான்
    தண்ணீர் சேர்க்காத கெட்டித்தயிர் கண்டிப்போடு உணவோடு சேர்த்துக்கொள்ள வற்புறுத்தும் பாட்டி மழித்ததில் மனம் வலித்தது 
   தினம் மோர் சிலிப்பி வெண்ணை எடுத்து நெய்யாய் உருக்கி  சூடான பருப்பு சாதத்தில் அதையிட்டு அவனை கொழு கொழுவென வளர்த்த பாட்டியை அவனால் என்றும் மறக்க இயலாது
   வருடங்கள் கடந்து ஓடிற்று
ஒவ்வொரு கோடை காலத்திலும் வெயில் கொடுமை தாங்கமுடியாமல் சென்னையிலிருந்து மாமா,அத்தை மற்றும் உறவினர்கள் அவர்களுடைய பிள்ளைகளோடு தோட்டத்திற்கு வந்து  பிள்ளைகளின் விடுமுறை நாட்கள் முடியும் வரை எங்களோடு இருப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத சந்தோசங்களை
    அந்தத் தருணங்கள் வாழ்வில் கிடைத்த பொக்கிஷம் நாட்கள்  ஒவ்வொருநாளும் ஆடிப்பாடி, ஒருவரையொருவர் கேலி செய்து,யார் எப்படி பேசுவார்கள் குடும்பத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை எல்லாம் டிராமாவை போல செய்து காட்டும் பெரிய மாமாவை அவனால் மறக்க முடியவில்லை
  விதவிதமாய் சமைத்து, பரிமாறி, அன்பு பாராட்டி விடுமுறை முடிந்து உறவுகள் பிரிந்து செல்லும் பொழுது பிரிய முடியாமல் கண்ணீர் விட்டு ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிட்டு எழுகின்ற அந்த காட்சிகளெல்லாம் இன்று காண இயலாமல் போனது
   காரணம் தாத்தா இறந்த பிறகு முகுந்தனின் அப்பாவும், உடன் பிறந்த இரு தம்பிகளும் அந்த தோட்டத்தை பராமரிக்க முடியாமல் விலைக்கு விற்று விட்டார்கள்
   முகுந்தனின் அப்பா லேத் பட்டறையில் வேலை செய்தபடியால் அவர் சென்னையை நோக்கி தன் குடும்பத்தோடு பயணப்பட்டார்
   முகுந்தனின் மீதி வாழ்க்கை ஆவடியில் தான் ஆரம்பித்தது சென்னை வாழ்க்கை அவனுக்கு அசௌகரியமாகதான் ஆரம்பத்தில் பட்டது
  காரணம் அங்கே கிராம மனம் இல்லை நிறம் இல்லை எதார்த்தமான மனிதர்களைத் தேடினான் பக்கத்தில் கொலை விழுந்தாலும் எட்டிப்பார்க்காத பக்கத்து வீட்டினர்களைதான் விசித்திரமாய் சந்தித்தான் 
   நாட்கள் செல்ல செல்லதான் இங்கும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பதை உணர ஆரம்பித்தான்
    சென்னையில் எப்படியோ படித்து சிவில் என்ஜினியர் ஆனான்
   அங்கேயே பெண் பார்த்து திருமணம் நடத்தி வைக்கப்பட்டது இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள் முதல் பெண் பிள்ளை இரண்டாவது ஆண் பிள்ளை
   வாழ்க்கைச் சக்கரம் வேகமாய் சுழல ஆரம்பித்தது தேவைகள் பெருகியது பிள்ளைகளுக்கு படிப்பு செலவு ,வீட்டுத் தேவைகள் அதிகரிக்க வேலையிலே மூழ்கிக் கிடந்தான்
   சிலநேரங்களில் தன் கிராமத்தின் பசுமை நினைவுகள் வந்து ஆட்கொள்ளும்
ஒவ்வொரு நாளும் வீட்டின் மொட்டைமாடியில் கயிற்று கட்டிலில் தலையணையில் தலை சாய்த்து வானத்தை அண்ணார்ந்து பார்க்கும்போது
   அந்த நட்சத்திரங்களோடு அவன் பேசுவான்  "ஏய் நட்சத்திரங்ளே! நிலவே! எங்கள் தோட்டத்தின் கயிற்று கட்டிலில் படுத்து பார்க்கும்போது அங்கேயும் நீங்கள் தானே என்னை சந்தித்தீர்கள் இன்னும் என்னை நீங்கள் மறக்கவில்லை சென்னை வந்ததும் என்னை சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் ஆனால் என் கிராமத்தை நான் இன்னும் சந்திக்க இயலாமல் இங்கே நகர வாழ்க்கையில் என் தேவைகளுக்காக நசுங்கிக் கொண்டு இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்" என மனதிற்குள் வருந்தினான்
   முகுந்தனின் இரு பிள்ளைகளும் ஒவ்வொரு நாளும்  "அப்பா கதை சொல்லுங்க இன்னைக்கு என்ன கதை சொல்ல போறீங்க"
    ஒவ்வொரு நாளும் மொட்டைமாடியில் நட்சத்திரங்களோடு தன் மனதைப் பிணைத்துக்கொண்டு பிள்ளைகளுக்கு சுவாரசியமாக  இளமையின் நிகழ்வுகளை கதையாக கூறுவான் 
    பிள்ளைகள் அவைகளையெல்லாம் காட்சிகளாய் தன் மனதிற்குள் நிறைத்துக் கொள்ளும் 
  அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அவனுடைய கிராமம், அவனுடைய தோட்டம் அந்த நிகழ்வுகளையே தொடர்கதையாக  ஒவ்வொரு நாளும் பகுதி பகுதியாக அவர்களுக்கு சொல்லிக் கொண்டு வந்தான்
    பிள்ளைகளின் மனத்திரையில் அந்த கிராமத்தின் காட்சிகள் பதிந்து போயிற்று அவன் கிராமத்தை விட்டு நகரத்துக்கு வந்து பல வருடங்கள் ஆயிற்று  கிராமத்தையே காணாத தன் பிள்ளைகளுடைய உள்ளங்களில் கிராமத்தை குடி வைத்தான் தான் வாழ்ந்து தோட்டத்தை நிலை நிறுத்தினான்
     பிள்ளைகள் அவனை வற்புறுத்தினார்கள் "அப்பா இந்த மே மாத லீவுக்கு கண்டிப்பா உங்க கிராமத்துக்கு, அந்த தோட்டத்துக்கு எங்களை கூட்டிட்டு போங்க அப்பா"
    அவனும் ஆவல் கொண்டான் "வெகு நாளாயிற்று கண்டிப்பா நம்ம போறோம்  நல்லா என்ஜாய் பண்ண போறோம் அங்க இருக்கிற தோட்டத்துக் கிணற்றில் குதித்து மீனைப்போல நீந்த போறோம்"  என்றான்
    ஆண்டுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் அந்த பிள்ளைகளுடைய உள்ளத்தில் ஒவ்வொரு நாளும் பரிட்சை எப்பொழுது முடியும் பயணம் எப்பொழுது துவங்கும் எனும் ஆவல் நிரம்பிக் கிடந்தது
முகுந்தனின் மனைவி சரசும் "ஏங்க எனக்கும் உங்க கிராமத்தை பாக்கணும் ஆசையா இருக்கு ,உங்க தம்பி குடும்பத்த எல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு" என்றாள்
    ஒருவழியாக பிள்ளைகளுக்கு பரீட்சை எல்லாம் முடிந்தது  "அப்பா எப்ப லீவு போட போறீங்க சொல்லுங்க பிச்சி எடுக்காத குறையாக அப்பாவின் மனதை குடைந்தார்கள்
  முகுந்தன் ஆபீஸில் த்து நாட்கள் லீவு வேண்டுமென லீவு லெட்டர் எழுதி கொடுத்தான்
   சரசு அந்த கிராமத்திற்கு புறப்பட அதற்கான எல்லா ஆயத்தங்களையும் செய்து கொண்டிருந்தாள்
   முகுந்தனின் தம்பி குழந்தைக்கு பஞ்சால் ஆன கரடி பொம்மையை வாங்கினாள் காரம், இனிப்பு எல்லாவற்றையும் வாங்கி பையில் அடுக்கி வைத்தாள்
   பிள்ளைகள் அங்கே தங்கி உடை மாற்றிக் கொள்ள தேவையான உடைகளை எடுத்து வைத்தாள்
    முகுந்தனும்  ஏசி பஸ்ஸில் டிக்கெட் ரிசர்வ் செய்தான்
   அடுத்தநாள் பிள்ளைகள் உற்சாகமாய் வீட்டில் எழுந்தார்கள் "அப்பா எப்ப போறோம்" ஆவலில் துள்ளினார்கள்
   "கொஞ்சம் பொறுமையா இருங்கப்பா நைட்டுதான் கிளம்ப போறோம் பதினொரு மணிக்கு"
    பிள்ளைகள் அந்த கிராமத்தையும் தோட்டத்தையும் கண்டு  ஆனந்தம் கொள்ள துடித்துக் கொண்டிருந்தார்கள்
  பிள்ளைகளின் மனதிற்குள் காட்சிகளாய் விதைத்த தோட்டத்தில் அவர்களின் கற்பனைகள் பெருகி  கொண்டிருந்தது
   புது இடம், புது மக்கள், புது கிராமத்தை பார்க்கும் அவளில் பிள்ளைகள் இருவரும் ஆசை பொங்க பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தார்கள்
  இரவு வந்தது ஆட்டோ வீட்டிற்கு முன்பாக வந்து நிற்க மூன்று பைகளை எடுத்து ஆட்டோவில் வைத்தார்கள்
    பிறகு அவர்களும் உள்ளே நுழைய ஆட்டோ நிரப்பிக் கொண்டது கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் வந்து ஆட்டோ நிற்க இறங்கிக் கொண்டார்கள்
   சரியாக பதினோரு மணிக்கு  சூப்பர் டீலக்ஸ் பஸ் வந்து நிற்க. ரிசர்வ் செய்யப்பட்ட சீட்களில் ஏறி ஆசையோடு உட்கார்ந்தார்கள் 
   முகுந்தனின் பிள்ளைகள் வண்டியில் ஏறியதில் இருந்து சும்மா இருக்கவில்லை அப்பாவிடம் ஆயிரம் கேள்விகள் கேட்டார்கள் "அப்பா நீங்க குழிச்ச கிணத்துல தண்ணி இருக்குமா? அங்க இருக்கிற ஜனங்கள் எல்லாம் எப்படி இருப்பாங்க? தோட்டம் எப்படி  இருக்கும்?
    இப்படி பிள்ளைகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கூறினான்
   இரண்டு மணி நேரம் கேள்விகள் கேட்ட அந்த பிள்ளைகள் முகுந்தனின் தோல் மீதும் மடி மீது சாய்ந்து களைத்து உறங்கினார்கள்
  அவன்  மனைவியும் பிள்ளைகளின் சந்தோசம்தான் எனது சந்தோசம் என்பதைப்போல அவனை பார்த்து சிரித்தாள் 
    விடிந்தது பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்க  இறங்கினார்கள் இவர்களுக்காக காத்திருந்த காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள்
   அது முகுந்தனின் தம்பி வீடு அவனின் தம்பி அந்த கிராமத்தில் மளிகைக்கடை வைத்திருந்தார்  வெந்நீரில் எல்லோரும் குளித்தார்கள் காலை டிபன் அங்கே செய்யப்பட்டது
    தம்பியின்  குழந்தை பழகுவதற்கு சங்கோஜப்பட்டது 
   முகுந்தனின் தம்பி அண்ணனை பார்த்து சொன்னான் "அதுக்குதான் அடிக்கடி இங்க வரணும், போகணும் இப்ப யாரு என்னேன்னு தெரிய மாட்டேங்குது எல்லாம் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதா இருக்கு" என சிரித்தாள்
    "எங்கடா வரமுடியுது நினைச்சாலும் வேலை சரியா இருக்கு" என தன் நிலைமையை பதிலாக கூறினான் முகுந்தன்
    பிறகு முகுந்தனின் மனைவி கொண்டு வந்திருந்த கரடி பொம்மையையும், சாக்லேட்ஸ்களையும் அந்த பிள்ளையின் கையில் கொடுத்து அவளை கட்டி அரவணைத்து  கன்னத்தில் முத்தமிட்டாள்
  முகுந்தனின் தம்பி மனைவி "பாப்பா பெரிய அம்மாடா உன்னை பார்க்க ஆசையா வந்து இருக்காங்க பாரு அக்கா, அண்ணன்"  என அறிமுகப்படுத்தி வைத்தாள்
    கொஞ்ச நேரத்தில் சகஜமாய் அந்த பாப்பா பழக, பேச ஆரம்பித்தாள்  சாக்லேட்டும் பொம்மையும் கொடுத்ததால்  சினேகம் ஆகிவிட்டாள்
  "சரி தம்பி நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வரலாமா"
"சரி அண்ணா" வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் எல்லோரும் ஆசையோடு  நுழைய முகுந்தனின் தம்பி கார் ஓட்டினான்
பத்து நிமிடத்தில் கார் அந்த தோட்டத்தை அடைந்தது
  கார் நிறுத்தப்பட்டது "டேய் நம்ம தோட்டம் எங்கடா" முகுந்தன் கேட்டேன்
    "இதுதான் அண்ணா"
     "எங்கடா வயல்லே காணோம், கிணறு காணோம், மாந்தோப்பு காணோம்"
  "அண்ணா இந்த ஏரியாவுக்கு சிப்காட் வருதுன்னு இந்த நிலத்தை வாங்கினவரு  பிளாட் போட்டு எல்லாத்தையும் வீடுகட்டி வித்துட்டாரு   மாமரத்த எல்லாம் கதவுகள் செய்யவும் ஜன்னல்கள் செய்யவும் வெட்டி அறுத்து எடுத்துட்டாரு"
   முகுந்தன் ஏமாந்து போனான் மனதை யாரோ ரம்பத்தால் போட்டு அறுப்பதைப்போல  உணர்ந்தான்
   அதை விட அவன் பிள்ளைகள் அதிகமாய் ஏமாற்றம் அடைந்தார்கள்
   முகுந்தனின் ஏமாந்த முகத்தை பார்த்து அவனின்  தம்பி  "அண்ணா நம்ம ஊரு ரொம்ப மாறிடுச்சு  இங்க கம்ப்யூட்டர் சென்டர் இருக்கு ,பெரிய ஹோட்டல்கள் இருக்கு, மளிகைகடை நிறைய ஆயிடுச்சு  நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல அண்ணா" என்றான் 
     "அப்போ ஒவ்வொரு நாளும் என் பிள்ளைகளுக்கு நான் சொல்லின மாந்தோப்பு, பசுமை வயல்கள், பேசும் கிளிகள், கூவும் குயில்கள் எங்கே? அவனின்  மனதிற்கு உள்ளாய் விடை தெரியாத கேள்விகள் அவைகள்
  பிள்ளைகளின் முகத்தை பார்த்தான் அவர்கள் ஏமாற்றத்தோடு "அப்பா நீ சொன்னதெல்லாம் பொய் இனி நீ எதை சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம்" என்றார்கள் 
    கடவுளே இவர்களுக்கு எப்படி நான் பதில் சொல்ல இயலும் அவனின் மனம் வலித்தது ஒவ்வோர் இரவும் பிள்ளைகளுக்கு சொன்ன கதை எல்லாம் இப்பொழுது அர்த்தம் அற்றதாய் ஆகிப்போனது
      இரண்டு நாட்கள் தம்பியின் வீட்டில் தங்கினான் பிறகு சென்னைக்கு புறப்பட்டார்கள்
   இப்பொழுதெல்லாம் மொட்டைமாடியில் கட்டிலில் ஒவ்வொரு நாளும் தலை சாய்த்து படுக்கையில்  நட்சத்திரங்களை பார்த்து பிள்ளைகளுக்கு கதை சொல்வதை நிறுத்திக் கொண்டான்
   அந்தப் பசுமை கிராமமும் அந்தப் பழைய தாத்தா,பாட்டி மற்றும் உறவினர்களோடு குதூகலித்த நாட்களை  தனக்குள் மட்டுமே
வைத்துக்கொண்டான்

....................

33.வது கதை


என்ன ஆவது?

அது ஒரு அதிகாலைப் பொழுது குருவிகள் ஒலி எழுப்பின, காகங்கள் கரைந்தன. கரைந்த காகம் ஒன்று ஒரு மரத்தின் மீது போய் அமர்ந்தது அந்த மரத்தின் அருகே ஒரு குடிசை வீடு. அவ்வீட்டில் ஒரு தாயும் மகனும் வசித்து வந்தனர். கணவனை இழந்த அத்தாய் வேலைக்கு போகும் நிர்பந்ததில் உள்ளார். அவள் சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறாள். அத்தாயக்கு பத்து வயதில் ஒரு மகன் அவன் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான்.

தந்தையை இழந்த அச்சிறுவன் தாயின் அரவனைப்பில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றான்.

ஒருநாள் அச்சிறுவன் பள்ளி செல்வதற்காக அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு பள்ளி சீருடையை அணிந்து கொண்டு காலை உணவுக்காக தன் தாயை அனுகினான்.

சமையலறையில் அவன் தாய் சுடச்சுட இட்லி செய்து கொண்டு யிருந்தார்.

அம்மா பள்ளிக்கு சீக்கிரம் போகனும் சாப்பாடு தாங்க என்றான்.

இதோ முடிஞ்சிருச்சி பா என்று தட்டில் வைத்திருந்த இட்லியை தன் மகனுக்கு ஊட்டி விட்டார். அதை அவனும் ஆவளுடன் ஊட்டிக்கொண்டான். வயிறு நிறைந்த பின் பள்ளிக்கு செல்ல அயுத்தமானான்.

அம்மா நா பள்ளிக்கு போய்ட்டுவரேன் என்றான்.

அம்மா ஒங்கிட்ட ஒன்னு கேக்கானும் நீ பெரிய ஆளா ஆன என்ன ஆகா போற?

அச்சிறுவனுக்கு அம்மாவின் அந்த கேள்வி குழப்பத்தை தந்தது அதற்கு அவனிடம் பதில் இல்லை. அம்மாவிடம் நா மாலை வந்து சொல்றேன் என்று கூறி சமாளித்து விட்டான்.

சரிப்பா பாத்து கவனமாபோய்ட்டுவா என்றாள் தாய்.

தன் வகுப்பு தோழனுடன் பள்ளிக்கு நடக்க தொடங்கினான். பள்ளி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அப்போது அவன் மனதில் அன்னை கேட்ட கேள்வி நினைவு வந்தது. அவன் தனக்கு தானே கேட்டுக் கொண்டான்.

அம்மா என்ன பாத்து என்ன ஆகபோறேன்னு கேட்டாங்க என்னவாக ஆகுறது ? என்று யோசித்துக் கொண்டே நடந்தான்.

அப்போது சாலையில் மக்கள் கூட்டமாக நின்றுகொண்டு இருந்தனர். ஆர்வமிகுதியால் அவனும் அவன் நண்பனும் அந்த கூட்டத்தில் நுழைந்து பார்த்தனர். அப்போது அங்கே ஒரு மனிதர் மயங்கிய நிலையில் உணர்வற்று இருந்தார். என்ன நடந்தது என்று இருவரும் நினைக்கையில் கூட்டத்தில் ஒருவர் முநுமுநுத்தார் மயங்கி இருக்கும் மனிதர் மின்சார ஊழியர் என்றும் மின்கம்பத்தை பழுது நீக்கும் போது மின்சாரம் தாக்கியதில் மயங்கி கிழே விழுந்தார் என்றார். இதை கேட்ட சிறுவன் வருந்தினான் பின் மயங்கி கிடந்த மனிதரை ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்றது.

சிறுவன் அங்கிருந்து அகன்று நடக்க தொடங்கினான்.

சற்று தூரத்தில் ஒரு வயதான நபர் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கழிவுகளை சுத்தம் செய்துக்கொண்டு யிருந்தார். அதை கண்டவாரே நடந்து சென்றான் சிறுவன்.

ஒருவழியாக சரியான நேரத்தில் பள்ளியை அடைந்தான். தன் வகுப்புபறைக்குள் சென்று அமர்ந்தான்.

அறிவியல் ஆசிரியர் வந்தார் அறிவியல் படம் நடந்தது.

அறிவியல் இன்று நம் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக கலந்தது விட்டது. முன்னோருக்காலத்தில் சாதாரண மக்கள் பயணம் செய்வதற்கு நடைபயணமாக தான் செல்ல வேண்டும் ஆனால் இப்போது அறிவியலின் உதவியால் இருசக்கர வாகனம், கார் என பயணம் செய்வதற்கு வாகனங்கள் உருவாகி உள்ளது. அதுமட்டுமின்றி சமுகத்தின் வளர்ச்சிக்கும் அறிவியல் பெரும் உதவி புரிந்துள்ளது.

என்று ஆசிரியர் கூறினார்.

இவற்றை எல்லாம் நன்கு கவனித்துக் கொண்டிருந்தான் சிறுவன். அறிவியல் வகுப்பு முடிந்தது. சிறுவன் வகுப்பறையில் தன்னிடத்தில் அமர்ந்து கொண்டு அந்த மின் ஊழியர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்ததையும் , வயதான முதியவர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ததையும், அறிவியல் ஆசிரியர் கூறிய சமுகவளர்ச்சிக்கு அறிவியலின் முக்கியத்துவத்தையும் எண்ணி யோசித்துக் கொண்டு யிருந்தான் . அறிவியல் மூலம் சமுபிரச்சனைகளுக்கு தீர்வுக்கான முடியும் என்று புரிந்து கொண்டான் அதுமட்டுமின்றி அன்னை கேட்ட கேள்விக்கும் பதில் கிடைத்தது. பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு சென்றான் அங்கு அவனுடைய அம்மா அவனுக்காக காத்திருந்தாள்.

இன்னைக்கு எப்படி போச்சு வகுப்பு என்றாள் தாய்.

நல்ல போச்சு மா அம்மா இன்னைக்கு நீங்க ஒரு கேள்வி கேடிங்கல அதுக்கு பதில் கிடைச்சிருச்சு நா ஆராய்ச்சியாளர் ஆகபோரேன்.

இதை கேட்ட தாய் தன் மகனை கட்டி அனைத்துக் கொண்டாள்.

32 வது கதை


இறைவன் கொடுத்த வரம்


    ரமணனுக்கு மே மாதம் இருபத்தி இரண்டாம் நாள் வருஷம் இரண்டாயிரத்து ஐந்து அன்று தான் திருமண வைபவம் நடந்தது
     அப்ப ஒரு பவுன் தங்கத்தின் விலை வெறும் நாலாயிரத்து ஐநூறு  ரூபாய் மட்டுமே
    இருந்தாலும் அப்ப அது அதிக ரூபாய்தான் வாய் பிளந்து யோசிக்கும் அளவுக்கு பெரிய விலை என்றும் சொல்லிவிட முடியாது
     இன்றைக்கு இருக்கும் தங்கத்தின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது இன்று ஒரு கிராம் தங்கமே நாளாயிரத்து எட்டுனூறு பிளக்காத வாயை பிளக்க வைக்கிறது
     தங்கம் ஒரு பவுன் சேர்ப்பதற்கு  நடுத்தர வர்க்கத்திற்கு உயிர் போய் உயிர் வருகிறது ஒவ்வொரு மாதமும் ஒரு கிராம் என எட்டு மாதம் சேர்த்தால்தான் ஒரு பவுன் ஆகிறது
     ரமணனுக்கு கூடப்பிறந்த அக்கா மாலா அந்த திருமண நாளில் ஒரு பவுனில் மோதிரம் செய்து போட்டாள்
     நிறைய பேர் மொய்யாக பணத்தை வைத்தார்கள் மொய் பணம் என்பது அவனுக்குப் பெரிய பிரச்சனை இல்லை அன்றைக்கு நூறு ரூபாய் வைத்தவர்களுக்கு இன்று கூடுதலாய் இருநூறு  வைத்தாலும் பற்றாக்குறை எனும் நிலை வராது
     பவுன் வைத்தவர்களுக்கு என்ன செய்வது என மண்டைக்குள் எண்ணங்கள் வண்டாய் குடைந்து கொண்டிருந்தது
     கொரோனா காலம் ரமணன் ஒரு தனியார் பள்ளியில் எட்டாங்கிளாஸ் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தான் தொடர்ந்து பள்ளி திறக்காத இந்த ஒன்பது மாதங்களில் நான்கு  மாதங்களுக்கு பாதி சம்பளம் வந்தது
    மீதி ஐந்து மாதங்கள் பள்ளி நிர்வாகம் "எங்களால் இப்போ ஒன்னும் முடியாது" என கைவிரித்து விட்டார்கள்
      ரமணன் தன் மனைவியிடம் இருந்த கொஞ்ச நகைகளையும் குல்லா போட்டு வயிறு பெருத்த  ஒரு சேட்டிடம் அடமானம் வைத்து பணத்தை வாங்கி அன்றாட பிழைப்பு நடத்தி வந்தான்
     தன் குடும்பத்தை காத்தான் வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் ஒருத்தி பத்தாம் வகுப்பு படிக்கிறாள் இன்னொருவள் எட்டாம் வகுப்பு படிக்கிறாள்
    மொத்தம் வீட்டில் நான்கு நபர்கள் இருந்தார்கள் நல்லது கெட்டது என சொந்தக்காரர்களின் கல்யாணம் கச்சேரிகளுக்கு சென்று செலவு செய்யவே நகைகளின் அடமான பணம் சரியாய் இருந்தது
      வட்டிக் கடையில் வைத்த நகைகளை மீட்க முடியவில்லை குல்லா போட்ட சேட்டோ வெளியே ரமணனுக்காக பரிதாபப் பட்டாலும்  மனதுக்குள் வந்த வரை லாபம் என குதூகலித்துக் கொண்டிருந்தான்
      கரடு முரடான தேவை நிறைந்த வாழ்வின் பாதையில்  ஓட வேண்டிய நிர்பந்தம் மனிதனாய் ரமணன் கூடவே அவன் மனைவி, பிள்ளைகளும்
     வாத்தியார் வேலை இழந்து, நகைகளுக்கு வட்டி கட்ட முடியாமல் நகைகளையும் இழந்து,  கொரோனா காலத்தில் வாழ வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரமணனுக்கு
    ஒரு போன் கால் வந்தது "தம்பி ரமணா எப்படிடா இருக்க"
     அவன் என்ன சொல்வான் வழக்கமாய் எவரிடமும் கேட்கும் கேள்விக்கு வழக்கமான பதிலையே உதித்தான் "நல்லா இருக்கேன் நீ எப்படி இருக்க" 
      அவனோடு தொடர்ந்து அவனின் அக்கா பேசினாள்" நம்ம சதீஷ்க்கு கல்யாணம் வச்சிருக்கேன்"
       "நல்லது எப்ப எங்க"
     "கொரோனா காலம் எல்லார்கிட்டயும் சொல்லள பத்திரிக்கை அடிக்கல முக்கியமானவங்களுக்கு மட்டும் டிரேவல் பேசியிருக்கோம் அஞ்செட்டி பக்கம் ஒரு மலை மேல இருக்கிற முருகன் கோயிலில் திருமணம் மறக்காம உன் பொண்டாட்டி, பிள்ளைகளோட முந்தின நாளே நம்ம வீட்டுக்கு வந்துடு" என மூச்சு விடாமல் பேசி முடித்தாள் அவளின் அக்கா மாலா
     இவனுக்குதான் மூச்சு முட்டியது வைத்த நகையை மீட்க முடியாமல், வட்டி கட்ட முடியாமல் இருக்குற இந்த நேரத்துல அக்கா என் கல்யாணத்தில் போட்ட அந்த நகையை எப்படி திரும்ப நான் கொடுக்க போறேன்
     அவள் போட்ட அந்த நகைக்கு ஈடாக அந்த வருஷ கணக்கின்படி நாலாயிரத்து ஐநூறு  அதை இப்ப பணமா கொடுத்தா ஒத்துக்க மாட்டா "நீ எல்லாம் ஒரு  தாய் மாமனா? போட்ட நகைய திரும்ப தர வக்கில்ல"  என வாய் கூசாமல் திட்டுவாள்
     அந்த வசைப் பாட்டை என்னால் எப்படி கேட்க முடியும்  நான் என்ன செய்ய அவன் மனதுக்குள் வலி உண்டாயிற்று இந்த வலிக்கான நிவாரண மருந்து பணம்தான்
       அந்தப் பணம்  கிடைக்காததால்தான் குடும்பத்திலும், உறவினர்களிடமும் மனக்கசப்பு, சண்டை, பிரிவுகள் எல்லாம் உண்டாகிறது இந்த உறவு கூட்டங்களில் இருந்து நிம்மதியாய் பிரிந்து தப்பிக்க வாழவும் இயலாது என யோசனையோடு இருந்த அவனின் யோசனையை களைத்தது  அக்கா மாலாவின் புருஷனும் மொபைல்
   " மாப்பிள எப்படி இருக்கீங்க உங்களுக்கு  ராம்ராஜ் வேட்டி சட்டை எடுத்திருக்கோம் மறக்காம வந்துடுங்க தங்கச்சி, பிள்ளைகளையும் கூட்டிட்டு வந்துடுங்க" என அவர் பங்குக்கு அவர் சொல்ல
       "சரி மாமா" என்றான்
    போக மனசு இல்லை கையில் பணமும் இல்லை கெத்தா நகை போட வக்கில்லாத எனக்கு எதுக்கு ராம்ராஜ் வேஷ்டி சட்டை என மனதுக்குள் தனிமையாய் அழுதான்
     தனக்குள்ளே தொடர்ச்சியாய் பேசினான் அக்கா நீ அன்னைக்கு ஆசையா எனக்கு ஒரு பவுன் மோதிரம் செஞ்சு போட்ட நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஆனா இப்ப அந்த சந்தோஷம் எனக்கு முள்ளா குத்துது
      என்ன செய்ய  உன் அவசரம் உனக்கு கல்யாணத்தை தள்ளி போட முடியாது உன் பையனுக்கு வயசு ஆயிட்டே போகுது அமஞ்ச பொண்ண விடக்கூடாதுன்னு இருக்க தப்பில்லை என பேசிக் கொண்டான்
     சரி அக்காவுக்கு இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க இந்தப் பையனுக்கு அரை பவுன் போட்டுடலாம் மத்த பசங்களுக்கு மீதிக்கு மேல வசதி வந்த பிறகு பார்ப்போம் இப்ப இருக்கிற சூழல் மாறும்  என முடிவு செய்தான்
    பிறகு தன் மனைவி லட்சுமியை பார்த்தான் அவளும் அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள் "என்னங்க செய்யறது" என்றாள்
    "எனக்கு ஒன்னும் யோசிக்க முடியல" என்றவனின் கண்களில் வறுமையின் வெளிப்பாடாய் கண்ணீர் துளிகள்
   "அழாதீங்க" என்று சொன்ன லட்சுமியின் கைகளில் அரைப்பவனுக்கு உரிய தாலி குழல்கள் இருந்தன "இந்தாங்க இதோட கொஞ்சம் கூட பணம் போட்டு நாலு கிராம் தங்க காசு வாங்கிலாம்" என்றாள்
   அவன் மேலும் "லட்சுமி நான் உன் தாலிய கூட காப்பாத்த முடியாத பரதேசி ஆயிட்டேன்" என்றான்
   "இதுல போய் என்ன இருக்குங்க நீங்க வேற நான் வேறயா உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அது என்னைய பாதிக்காதா" என்றாள்
    இப்பொழுது அவளின் தாலிக்கயிற்றில் ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லை
     அவள் தாலியின் தங்க குழல்கள் அரைப்  பவுன் தங்கக் காசாக மாறி இருந்தது
    யாவரும்  அஞ்செட்டி மலையில் ஒரு முருகன் கோயிலில் கூடியிருந்தார்கள் ரமணன் தன் அக்கா மகனுக்கு திருமண பரிசாக அரைப் பவுன் தங்கக் காசை கொடுத்தான்
     ரமணனின் அக்கா அங்கிருந்தவர்களிடம் "என் தம்பி அரை பவுன் தங்கம் மொய்யா  வச்சிருக்கான்" என வாய் நிறைய சந்தோஷத்தோடு பெருமையாய் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தாள்
     ரமணனோ வெளியே சிரித்தாலும் மனதுக்குள் தன் மனைவியின் தங்கம் இல்லாத தாலியை  நினைத்து அவளுக்காக உள்ளத்துக்குள் அழுதுகொண்டிருந்தான்
     ரமணனின் மனைவி லட்சுமி தன்னுடைய இழப்பீடுகளை பெரிதாக எண்ணாமல் அந்தக் கல்யாணத்தில் இருக்கும் யாவரின் சந்தோஷத்திலும் பங்காக இருந்தாள்
   தன் கணவனின் புது வேட்டி, சட்டையை பார்த்து "நீங்க தான் இப்ப மாப்பிள்ளை மாதிரி ஜம்முனு இருக்கீங்க" என சிரித்த முகத்துடன் கேலி செய்து தன் கணவனை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தாள்
   ரமணனோ ஒப்புக்கு சிரித்தவனாய் மாப்பிள்ளை கோலத்தில் இருந்த தன் அக்கா மகனிடம் "நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் உன் மனைவிய கண்கலங்காம பார்த்துக் கொள்" என்றான்
    அவ்விடத்தை விட்டு வெளியே வந்தவனின் கண்கள் கலங்கி கொண்டிருந்தது
   கலங்கின கண்ணீரைத் துடைத்தாலும்      அவன் மனைவி லட்சுமியின் பாச நிகழ்வுகள் நில்லாமல்  மனதுக்குள் படமாய் ஓடிக்கொண்டே இருந்தது

சங்கீதா சுரேஷ் 

26 . வது கதை

"அம்மாவின் பொய்"
ஏழாவது வருட தாம்பத்திய வெறுப்பு அம்மாவுக்கு ஸ்ரீதரின் இருபதாவது வயதில் வந்தது. 
அப்பாவால் குடியையும், நண்பர்களையும், அனாவசிய செலவுகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை. 
ஸ்ரீதர் வேலையில் சேர்ந்ததும் நெஞ்சு வலிக்கு மதுரை பெரிய தனியார் ஆஸ்பத்திரியில் நல்ல சிகிச்சை தருவதாக ஒரு மாதம் தாத்தா வீட்டில் தங்கி விட்டு வருவதாக சொல்லி போனவள் தான். இரண்டே வாரத்தில் மகன்கள் இருவரும் வாட ஆரம்பித்து விட்டனர்.
அப்பா கூட ஆடித்தான் போய்விட்டார்.
பொறுப்பாக காலையில் எழுந்து டிபன் வாங்கி, சாம்பார் தனியே வாங்கி, அவர்கள் பள்ளி செல்லும் முன் டிபனும், குக்கர் வைத்து சாதம், சிப்ஸ் என்று மதிய சாப்பாடும் தயார் செய்து கொடுத்தது கஷ்டமாக இருந்தது. 
முதல் நாள் ரசித்த ஹோட்டல் சாம்பார், உருளை சிப்ஸ் நாள் பட போர் அடித்தது.
அம்மாவுக்கும் சமைத்து சமைத்து கணவன் பாராட்டு கிடைக்காமல், குடித்துவிட்டு வந்து அதிகாரம் பண்ணும் ஆண் திமிர் அலுத்துப் போயிருக்க வேண்டும். 
அம்மா வசதியானவள். அப்பாவை விட அழகும் கூட.
என்ன ஜாதக தோஷம் அவருக்கு வசதியாகப் போனது.
முதல் சில வருடங்கள் அவர்கள் செய்த சீருக்கு நண்பர்கள் பார்ட்டி கேட்க ,கடன் அதிகரித்தது. 
"எனக்கு என்னடா ராஜா. கண்ணுக்கு அழகான பொண்டாட்டி, கவர்மெண்ட் உத்யோகம், சிங்கம் மாதிரி ரெண்டு பசங்க "என்றவர் கடன் எல்லை மீறுவதை கவனிக்க வில்லை. அம்மாவின் எச்சரிக்கை யை அவர் லட்சியம் செய்யவில்லை.
"அவர் வம்ச குணம் அது. வாசலில் உட்கார்ந்து சீட்டாடி, வம்பு பேசி ,கெட்ட வழியில் போய் சாம்ராஜ்யத்தை தொலைத்த குடும்பம் அது"அம்மாவின் உறவு ஒன்று அப்பா குணத்தின் மூலத்தை விளக்கியது.
விளக்கு இல்லா வீடானது அம்மா இல்லாத வீடு.
தம்பி சைக்கிள் கற்றுக்கொள்ள முயற்சித்து கீழே விழுந்து கையில் அடிபட்ட போது அப்பா ஆடிப்போனார். அப்போது தான் ஸ்ரீ மதுரை கிளம்பி போனான் யாருக்கும் சொல்லாமல்.
"குறுக்குத்துரை முருகா .அம்மா தாத்தா வீட்டில் இருக்கணும். ஆஸ்பத்திரியில் இருந்தால் பேச வழி கிடையாது"
சில சமயம் உண்மையான பிரார்த்தனைகள் கடவுளால் கவனிக்கப்படும்.
தாத்தா தினத் தந்தி படித்துக் கொண்டிருந்தார்.
காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை என்ற கொட்டை எழுத்து அவன் சிந்தனையை மாற்றியது.
"வாடா பேராண்டி. ஊர்ல மழை உண்டா?"
"உண்டு தாத்தா. போதும் போதுங்கற அளவுக்கு பெய்யுது.வெளில தலை காட்ட முடியலை. அப்பா டிபன் வாங்க கஷ்டப்பட்டு போனார்.நானும் தம்பியும் பாதி நாள் பசியோடு ஸ்கூல் போறோம் "வேண்டும் என்றே சத்தமாக பேசினான்.
அம்மா கண்ணீருடன் வெளியே வந்தாள்.
"எப்படி ஸ்ரீ இருக்க?"
"என்ன சொல்ல. உயிரோடு இருக்கோம். தம்பி சைக்கிளில் இருந்து விழுந்து கையில் பிராக்சர். "
"அய்யய்யோ எப்படா. என்ன செய்தீங்க. ஏன் எனக்கு சொல்லலை"
அம்மா பதறிப் போனாள்.
"நீ ஏற்கனவே ஹார்ட் பிராப்ளம்னு வந்து இருக்கே. இதை வேற சொல்லி உன் கவலையை அதிகரிக்கணுமா "
"சரி சரி.உன் செல்ல மகனை உள்ள கூட்டிப் போய் விஜாரி"
தாத்தா எழுபது வயசிலும் கம்பீரமாக இருந்தார்.
வீடு பளிச்சென்று இருந்தது அம்மா கை வண்ணத்தால்.
"சாப்பிடறியா ஸ்ரீதர். உனக்கு பிடிச்ச மீன் குழம்பும், கார கறியும்"
"வேண்டாம்மா"
"ஏண்டா. வாரா வாரம் மீன் கேட்பே?"
"அங்கே தம்பி வறண்ட தோசையைக் கஷ்டப்பட்டு சாப்பிடற போது இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நல்ல சாப்பாடு சாப்பிட்டா கஷ்டம். மனம் ஏங்கும் நான் காதலில் ராதாவுக்கு ஏங்கற மாதிரி"
"எந்த ராதாடா "
"எங்கள் ஆபீஸ்"
"நம்ம ஜாலியா?"
"கேரளா"
"கலரை, அழகை பார்த்து மயங்கிட்டியா. பெரியவங்க நாங்க எதுக்கு இருக்கோம். உன் அப்பாவுக்கு தெரியுமா?"என்று கவலையுடன் கேட்டு அவன் தலையை கோதினாள். 
"அம்மா. பசங்க இதை எல்லாம் அப்பா கிட்டே சொல்லி ஏச்சு வாங்க மாட்டாங்க. அம்மா தான் பையன் மனத புரிஞ்சு அப்பா கிட்டே சமயம் பார்த்து சொல்லணும்"
"டேய். ஜாதகம், குடும்பம் பார்க்க வேண்டாம்?"
"எந்த காலத்தில் இருக்கே? எல்லாம் பார்த்து பண்ணிய நீ திருப்தியா இருக்கியா?"
"சரி. ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட். அப்பா எப்படி இருக்கார் "
"தம்பி ரொம்ப ஏங்கறான். நீ இல்லாதது கை ஒடிந்த மாதிரின்னு பேச்சுக்கு சொல்லுவாங்க. நிஜமாகவே தம்பி கை ஒடிந்ததும் அப்பா ஆடிப் போயிட்டார். அத்தனை திமிரும் அடங்கி போச்சு. வேலை முடித்தால் வீடு. வீடு விட்டால் ஆபீஸ். நோ நண்பர். நோ கொண்டாட்டம். ஒரு அதிகாரி, ஒரு சமையல் காரர்"
"நான் வந்து என்ன செய்ய. இன்னும் ஒரு செக் அப் இருக்கிறது "
"அம்மா குடும்பத்தை நீ ரெகுலராக செக் அப் பண்ணலே எல்லாம் கை மீறி போய்விடும். தம்பி கையை கவனி. என் காதலியை கோவிலிலோ, அப்பா இல்லாத நேரமோ கூட்டி வர்ரேன் பேசி தீர்மானி "
"அதெல்லாம் அவர் பாடு"
"அவர் கோபப்பட்டு அவ கிட்டே கத்தினால் உனக்கு ஒரே பையன் தம்பி தான்.என் வாழ்க்கையை கை விட்ட மாதிரி அவன் கையையும் இழக்க நீ காரணமா ஆயிடாதே"என்றான் எண்ணம் நிறைவேறாத வருத்தத்தில். 
"டேய், சாப்பிட்டுப் போடா."
"நீ வர்ரேன்னு சொல்லு"
"எனக்காக சாப்பிட்டு போ"
"உனக்காக நான் எப்படிம்மா சாப்பிட முடியும். "
"அப்படியே திருநெல்வேலி இடக்கு
"தம்பி ய கவலைப் பட வேண்டாம் சொல்லு"
என்று குழம்பை ஊற்றியவள் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் மேஜையில் விழுந்தது.
காதலுக்கு நன்றி. கடவுளுக்கும்.
சாப்பாடு அவனை உலகை மறக்க வைத்தது.
"அவளுக்கும் இதே மாதிரி மீன் குழம்பு வைக்க சொல்லி தருவியா வந்து?"
"அய்யர் பொண்ணு இல்லேன்னா சொல்லித் தரலாம்"என்றாள்.
"அவளுக்கு பிடிக்கலைன்னா நான் சைவமா மாறிடுவேன்"என்று ஸ்ரீதர் சொன்னது அம்மா வுக்கு பிடித்து இருந்தது.
"அது தான் உண்மை யான காதல் "என்றாள் மனம் நெகிழ்ந்து. 
.. முற்றும்...


21 வது கதை

மூன்று முகம் -
 சிறுகதை- கவிஜி 
*******************************************************
சிதிலமடைந்த தெருவில்.. கிழக்கு மேற்கு திசை மாறி இருந்தது. எல்லாம் கலைந்த பின் நிலை குலைந்து நிற்கும் பூமி கிறுக்கு பிடித்த கைகள் வரைந்தவை. உடல் அற்றவன் போல அல்லது உயிர் அற்றவன் போல.. மிச்சம் எதையோ காத்துக் கொள்ள அலைந்து திரியும் அவன் கால்களில் போர்க்களத்தின் மிச்ச யாத்திரை. காற்றற்ற அந்த இடம் கதறுவது தூரத்தில் அசையும் மனப்பிறழ்வு போல உணரப்பட்டது. 

ஆங்காங்கே மாண்டவர் குவிந்திருக்க....மீண்டவர் தலை மறைவாகியிருக்க வேண்டும்.

தீரா பசிக்கு தன்னையே தின்று விடலாம் போல. திகைத்தவன் கண்களில்... கோழி ஒன்று..... நடமாட மறந்து நகர்ந்து கொண்டிருந்தது. இந்த ஊரும் தெருவும் உடைந்து கிடக்கும் காட்சிக்குள் தான் யாரென்பதை மறந்திருக்கும் கோழி. போக இருந்த மூச்சுக்கு பேச்சு கிடைத்தது போல விரட்டி பிடித்து விட்டான். விரக்தி மெல்ல சிரிக்க செய்தது.

வேக வேகமாய் உரித்து தீயிலிட்டான். தேகம் கருக....தேம்பி அழலாம் போல. தேன் மதுரம் உண்ட நாவில் எச்சில் வடிக்கவும் காலமில்லை. சுட சுடவே கோழி சதையைப் பிடித்திழுத்து உண்டான். ஒரு கால் தின்று முடிக்கையில் உள்ளொடுங்கிய கண்கள் வெளி வந்திருந்தன. நலிந்து கிடந்த கழுத்து புடைக்க ஆரம்பிக்க குரல் கூட தொண்டை கரகரப்பை சரி செய்யும் அளவுக்கு வந்திருந்தது. ரசித்து சுவைத்துக் கொண்டிருப்பது தொடர தொடரவே.....தலையில் எதுவோ பட... மெல்ல திரும்பினான். 

எதிரி வீரன்.. துப்பாக்கி காட்டிக் கொண்டிருந்தான். மிச்ச வேட்டைக்கு அலைந்த காரண கொடூரம் அவன் கண்களில்.

ஒரு கையில் கோழி... மறு கையில் மரணம்.

எதிரி நாட்டு வீரனைப் பார்த்து கெஞ்சினான். "சாப்பிட்டுக் கொள்கிறேன். பிறகு சுட்டுக் கொள்....". 

"சரி....!" என்றான் எதிரி நாட்டு அக்கினி புத்திரன். வாழ்வுக்கும் சாவுக்கும் இடையேயான சிறு பாலம் மூச்சிரைத்துக் கொண்டிருக்க......ம்ம்ம்ம்ம்ம் என்று அலைமோதும் மவுனம் அந்த இடத்தில் சூனியம் துளைத்துக் கொண்டிருந்தது.

ஆசுவாசத்துக்கு நேரமில்லை. அடிவயிறு நிறைய கோழியின் சதையை பிய்த்து பிய்த்து தின்ற போதுதான் ஒன்றை கவனித்தான். துப்பாக்கி மண்டையை விட்டு இறங்கி இருக்க...... எதிரி நாட்டு வீரனின் கண்கள்........குறைந்து கொண்டே இருக்கும் வெந்து தணிந்த கோழியின் மிச்சத்தையே வெறித்திருந்தது. ஒரு வயிறுடைந்த வறியவனின் உடல்மொழியில் பிச்சைக்கு உண்டான பாவனை அவனிடம் தென்பட்டது. 

சாவதற்கு ஆயிரம் வழி. வாழ்வதற்கு ஒரே வழி... உயிரோடு இருத்தல். அவனை பார்த்துக் கொண்டே தின்று கொண்டிருந்த இவன்....கோழி சதையை பிய்த்து எடுத்து "ம்ம்ம்.... இந்தா... சாப்டு..." என்பது போல நீட்டினான்.  

நொடி கூட நிரம்பாத கேள்விக்குள் படக்கென்று வாங்கி வாயடைத்து கடித்த அவன்.....வேக வேகமாய் குதப்பி மென்று சுவைத்தான். பெரும் பசியின் வடிவம் அது.

துப்பாக்கி அனிச்சையாக நழுவி விட்டிருந்தது.

இருவரும் மாற்றி மாற்றி தின்றார்கள். இடையே பேசிக் கொள்ளவும் முடிந்தது. மெல்ல சிரிப்பு கூட வந்தது. வேறு வேறு சீருடைகளில் ரத்தமும் யுத்தமும் மட்டும் ஒன்றாகவே கறை படிந்திருந்தது. மரணங்களின் குவிதல் ஒருவருக்கொருவர் ஆறுதல் தேடியது. "இந்தா இன்னும் கொஞ்சம் சாப்பிடு.." என்று மாற்றி மாற்றி பகிர்ந்து கொண்டார்கள். தோள் மீது கை போட்டுக் கொண்டார்கள். சிதிலமடைந்து சின்னாபின்னமாய் கிடந்த நகரத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டார்கள். வேரற்ற மானுட சமூகத்தின் மிச்சமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வயிறு நிறைந்த போது வாய் விட்டு அழ வேண்டும் போல இருந்தது. ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்பது போல பார்த்துக் கொண்டார்கள். 

அதே நேரம் யாரோ பின்னால் நிற்பது தெரிய மெல்ல திரும்பினார்கள். வயிறு ஒட்டிய பொதுமக்களின் ஒருவன் உடல் நடுங்க நின்று கொண்டிருந்தான். அவன் கண்களில்... கொலை பசி. நா வறண்ட முகத்தில்... நடுக்கம். அவன் கண்கள்... தின்று முடிந்து கிடந்த கோழியின் மிச்ச எலும்புகளை......தோல்களை.....வெறி கொண்டு பார்த்தன. அவன் மூக்கு விடைக்க.... முகம் அங்கும் இங்கும் தாவ பார்த்தது. 

"முட்டா பயலுகளா....." என்று கத்தியபடியே கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து பட் பட்டென்று இரண்டு நாட்டு போர் வீரர்களையும் சுட்டான். பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் தன் வயிற்றிலேயே சுட்டுக் கொண்டான். 

அங்கு பசியின் அஃகு சமன் பட்டது.  

சுபம்.

13 வது கதை

மழைவெயில்
-----------------------------------------
 வசந்ததீபன்


வாதுமை மரங்கள் நிரம்பிய அந்த மருத்துவமனையின் வகிடு போன்ற சிமிண்ட் தளத்தின் வழியாக வெங்கடேசன் நடக்கிறான். துக்கமும்,பதட்டமும் உடல் நரம்புகளின் வழியே பாய்ந்தோட வேதனையின் குவியல்..வலியாக மாறி அவனை கீழே உருட்ட முயற்சித்தது. ராபினும், மதியழகனும் அவனுக்கு இரு பக்கங்களிலும் தாங்கும் விதத்தில் சென்றார்கள்.

மூவரும் நேராக பிணமறுத்துச் சோதிக்கும் அறைக்கு முன்னால் போய் நின்றார்கள். அதன் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் ஒருவரையும் அங்கு காணாது..திகைத்து..எவராவது தென்படுகிறார்களா என விழிகளால் துளாவினார்கள். தூரத்தில் இருவர் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அருகில் வந்ததும்..ஒருவர் கறுப்பு நிறத்தில் சட்டையும் முழுக்கால் சட்டையும் அணிருந்தவர். மற்றவர் போலீஸ்காரர்.

கறுப்புநிற உடைக்காரர் அந்த அறையின் பூட்டைத் திறக்க ஆரம்பித்தார். போலீஸ்காரர் மூவரையும் சந்தேக தோரணையில் பார்த்து விட்டு விசாரித்தார்.

மதியழகன் சொன்னான்..வெங்கடேசை சுட்டிக் காட்டியபடி ..ஸார்..இவன் தான் பிணமாயிருப்பவர்களின் தம்பி.

அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் அந்த போலீஸ்காரர் மெளனித்திருக்கையில்..கறுப்பு நிற உடையாளர் அனைவரையும் அறைக்குள் அழைத்தார்.

மேற்குப் புறமாய் இலைகளை உதிர்த்து விட்டு முற்றிய நெற்றுகளை..நாட்டுப்புற மந்திரவாதி செய்திருக்கும் அலங்காரத்தைப் போல..தொங்க விட்டபடி நின்றிருந்த வாகை மரத்தின் கொம்புகளில் சில கருங்காக்கைகள் அமர்ந்து கத்திக் கொண்டிருந்தன.

அது பெருமழை பெய்து ஓய்ந்த பின்னிரவு. நிலவத் தொடங்கியிருந்த குரூரமான அமைதியை தடுப்பது போல் மழைப்பூச்சிகளின் ஓசை..விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது. நாய்களின் குளிர் நடுக்கத்தினால் முக்கி ஊளையிடும் சத்தமும் கேட்டது.

அழகன் பெருமாள் நீர் நிரம்பிய பானையை தலையில் சுமந்து கனம் தாளாமல் தள்ளாடுவது போல நடந்து தன் வீட்டிற்குச் செல்லும் குறுகிய சந்துக்குள் நுழைந்தார்.திரும்பும் இடத்தில் நின்றிருந்த தெரு குழல் மின்விளக்கு மந்தமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

எதிர்பாராத விதமாக வலது பக்க சாக்கடைத் திட்டின் மேல் படுத்திருந்த நாயின் வாலை மிதித்ததும்.. அது அவரின் பூட்ஸ் அணிந்த வலது காலைக் கவ்வியது. உடனே இடது காலால் அதன் வயிற்றில் ஓங்கி..உதை விட்டார். கொலைப்பட்டினியாய் கிடந்த அந்த நாய்..கத்த முடியாமல் கார்..புர்ரென்று ஓசை எழுப்பியபடி ஓட முடியாமல் தொங்கோட்டம் ஓடியது.அப்போது நிலை தடுமாறி முகம் குப்புற அவர் சரிந்தார்.

திடீரென்று தெரு விளக்கு அணைந்து போனது. இருளுக்குள் முகம் குப்புற கீழே சாய்ந்த அவரின் இடது மேற்க் கன்னத்தில் அடிபட்டு கன்றிப் போனது. உதடுகள் கிழிந்து இரத்தம் கொட்டியது. கீழ் முன் பற்களில் ஒன்று பாதியாக சிதறியது. குபுக்குபுக்கென்று பிராந்தியும், அரைகுறையாய் மென்ற புரோட்டா, கோழிக்கறி, ஆம்லெட் என்ற வகையறாக்கள் வெளியேறி மண்ணில் படர்ந்தன. எழுந்தவர் முகம் அதில் பதிய சாய்ந்தார்.

சிறிது நேரம் அப்படியே கிடந்த அவர்..எப்படியோ சில மணி நேரங்களுக்கு பிறகு எழுந்து தன் வீட்டின் முன் வந்து நின்றார்.

கனத்த ஒற்றைக்கதவு வாசலை அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. அடிபட்டு வேதனையும், வாந்தியெடுத்ததால் உண்டான நெஞ்செரிச்சலும், வயிற்றை உக்கிப் பிடித்திழுக்கும் வலியும் அவரை ஆங்காரம் கொள்ள வைத்தன.

கதவை கைகளால் அறைந்தும்,கால்களால் எற்றியும் வாயில் வந்தபடி வையத் தொடங்கினார்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவரின் மனைவி மங்கையர்க்கரசி..கதவு இடிபடும் பேரொலியால் அலறி எழுந்து..அடித்துப் பிடித்து எழுந்தோடி வந்து கதவைத் திறந்தாள்.

மூண்டெழுந்த ஆத்திரத்தை அவள் முகத்தில் குத்தாக அவர் இறக்கினார். அவளின் மூக்கு உடைபட..மல்லாக்கக் கவிழ்ந்தாள்.

"ஏண்டி..எவன நெனச்சுக்கிட்டு..கனவு கண்டுக்கிட்டுக் கிடந்த..."

இரத்தம் ஒழுகும் மூக்கை இடது கையால் பொத்திக் கொண்டு எழுந்த அவள் கத்தினாள்," ஓம்..வாயில..புழுதள்ள..எவளையோ சேத்துக்கிட்டு நீ.. அடிக்கிற கொட்டம்..ஆனா..எனக்கு வந்து அவுசாரி பட்டம் கட்டுறயா..நீ..நாசமாப் போக..வெறுங்கலமாப் போக..."

"எனக்கென்ன தெரியாதாடி..ஏந் தம்பிய வச்சுக்கிட்டு நீ அடிக்கிற கூத்து..ஒன்னய கொல்லாம விடமாட்டேன்டி..." என்றபடி முறுக்கிக் கொண்டு பூட்ஸ் காலால் அவளின் வயிற்றில் ஓங்கி மிதித்தார்.

உயிரே போவது போல் அலறியபடி அவள் போட்ட சத்தத்தில்..தூங்கிக் கொண்டிருந்த அவரின் தம்பிகளும்,அய்யாவும், அம்மாவும் பதறிப் போய் எழுந்து வந்தார்கள்.

அவரின் வாயிலிருந்து வாந்தியெடுத்த பிராந்தி வீச்சமும்..மலம் போன்ற வார்த்தைகளும் விசிறியடித்தன.

தண்ணீர்த் தொட்டியிலிருந்து வாளியில் தண்ணீரை நிரப்பி வந்து அழகம் பெருமாளின் மீது ஊற்றினார்கள் அவரின் தம்பிகள்.

கட்டையால் அடித்து நொறுக்கப்பட்ட மண்பானைத் துண்டுகளாய் உள் வாசலில் குவிந்து கிடந்தாள் மங்கையர்க்கரசி.

சிறிது நேரத்தில் அடங்கிப்போன அழகம்பெருமாளின் ஆடைகளைக் களைந்து கைலி உடுத்தி வராந்தாவில் போடப்பட்டிருந்த கட்டிலில் அவரைக் கிடத்தினார்கள்.

அவற்றில் அரற்றி ஓய்ந்த மங்கையர்க்கரசி மூக்கைச்சிந்தி..முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு குழந்தைகள் படுத்திருக்கும் அறைக்குள் போனாள்.

மூன்று பெண்குழந்தைகளும் எந்த சலனமின்றி தூங்கிக் கொண்டிருந்தனர்.

எப்போது விடிந்ததோ?அழகம் பெருமாள் எப்போது புறப்பட்டு போனாரோ? யாருக்கும் தெரியாது.

தென்னந்தோப்புக்கு நீர் பாய்ச்ச..அதிகாலையிலே சென்ற கிருஷ்ணன் வீடு திரும்பினான். வீடு அசைவற்றுக் கிடந்தது. கொண்டு போன மண்வெட்டியை வீட்டுக்குள் நுழையும் தெற்குப் பக்கமாக விவசாயக் கருவிகள் போட்டு வைக்கும் பரணில் போட்டு விட்டு மதினியின் அறையைப் பார்த்தான்.அது அடைத்தபடியே இருந்தது. சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தான்.சரியாக 8.30 ஆகியிருந்தது. ஒருவேளை மதினி சமையல் அறைக்குள் இருக்கலாம் என்று எண்ணியபடி குளிப்பறைக்குள் சென்று கதவை தாழிட்டு குளிக்கத் தொடங்கினான்.

அழகம் பெருமாளின் அய்யா முத்தையா லூஸ் பொகையிலையை கடைவாயுக்க்குள் திணித்து விட்டு சில்வர் தூக்குவாளியைத் தூக்கியபடி செருமிக் கொண்டு அவரது அறைக்குள்ளிலிருந்து வெளியே வந்தார்.

கூடவே அவரது மனைவி மீனாட்சியின் தோரணைக்குரலும் வெளியே வந்தது..." என்ன..காபி வாங்குனமா..வந்தமான்னு இல்லாம..பழம கிழமை பேசிக்கிட்டு நின்னுராத... "

" இவ ஒருத்தி..குலுக்கப்பான மாதிரி கெடக்காம.. சும்மா நொச்சு நொச்சுன்னுக்கிட்டு..."

இரவு பெய்த மழை தெருவை மட்டுமல்ல..வானத்தையும் சுத்தமாகக் கழுவி விட்டது போலிருந்தது. சந்தணத்தில் குளித்து வந்தது போல் சூரியன் மஞ்சள் வண்ணத்தில் ஜொலித்தான். வெயிலின் சூடு ஒத்தடம் கொடுப்பது போலிருந்தது.

காபி வாங்குவதற்காக விஜயா லாட்ஜ் என்ற காபிக் கடையின் வாசலில் கூட்டம் பெருகிக் கிடந்தது. அங்கு காபி பிரசித்தம். காலையிலும் , மாலையிலும் பத்தாயிரம் காபிகள் விற்பதாக செவி வழித் தகவல்.

முத்தையாவுக்கு மூன்று மகன்கள். மகள்கள் யாரும் இல்லை. மூத்த மகன் அழகம் பெருமாள் ஒரு தேசீய வங்கியில் எழுத்தராக சிவகங்கையில் வேலை பார்த்தார். கண்டமனூரில் மங்கையர்க்கரசியை கல்யாணம் செய்து..இரண்டு வருட,மூன்று வருட வயது வித்தியாசங்களில் மூன்று பெண் பிள்ளைகள் பிறந்திருந்தனர்.

மங்கையர்க்கரசி சாதுவான,படிப்பறிவற்ற ஒரு சராசரி வெள்ளந்தியான கிராமத்துப் பெண். இதுவே அழகம் பெருமாளுக்கு அசூசையும், வெறுப்பையும் ஊட்டிய முதல் விஷயம். பத்து வருட தாம்பத்ய காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்று எடுத்ததில் தான் அவர்களின் ஒற்றுமை இருந்ததே தவிர அவர்களுக்குள் உளப்பூர்வமான ஈடுபாடோ, இணைப்போ, மன உறவோ எப்போதுமே இருந்ததில்லை.

கல்யாணம் ஆனதிலிருந்து.. குடும்பத்தை தன் சொந்த ஊரிலே விட்டு விட்டு..தனித்தே வெளியூரிலே தங்கி வந்தார். அவ்வப்போது..நினைத்த போது வந்து போவதைத் தவிர குடும்பத்தோடு எந்தவித பற்றுதலும் அவருக்கு ஏற்பட்டதில்லை.

இதற்கிடையிலே அவருக்கும் அவருடன் வேலை பார்க்கும் விதவை காயத்ரிக்கும்  தொடர்புள்ளதாக அரசல் புரசலாக செய்தி கசிந்து மங்கையர்க்கரசிக்கும் மற்றவர்களுக்கும் வந்து சேர்ந்தது.

மங்கையர்க்கரசி அது பற்றி எப்போதும் தன் கணவனிடம் பேசிக் கொண்டதேயில்லை. அழகம் பெருமாளின் தம்பிகள் தான் தங்கள் அண்ணனிடம் விசாரித்து இருக்கிறார்கள். குறிப்பாக கிருஷ்ணன் அதிகம் பேசியிருக்கிறார்.அதனால் வாய்த் தகராறுகளும், லேசான சண்டைகளும் நிகழ்ந்திருக்கின்றன.

குடும்பச் சொத்துக்கள் யாவும் பிரிக்கப்பட்டு...கிருஷ்ணனுக்கு அடுத்தவனான ஜெயராம் சடையால்பட்டியில் கல்யாணம் செய்து கொண்டு போய் விட்டான். மூன்றாமவன் வெங்கடேஷ் மதுரைக் கல்லூரியில் படித்தபடி அங்கேயே ஒரு வீடு ஒத்திக்கு எடுத்து தனியாகத் தங்கி விட்டான். அவன் பெரும்பாலும் ஊருக்கு வருவதேயில்லை. கிருஷ்ணன் ஃபேன் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்களை பழுது பார்த்துக் கொண்டும் , தனக்குக் கிடைத்த சொத்துக்களைப் பராமரித்துக் கொண்டும் 40 வயதாகியும் கல்யாணம் செய்து கொள்ளாமல் தனித்து இருந்து வந்தான்.

முத்தையாவும் அவரது மனைவி மீனாட்சியும் தங்கள் பங்குக்குக் கிடைத்த நிலபுலன்களை ஒத்திக்கு விட்டு..அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஹோட்டலில் மூன்று வேளையும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு வந்தனர்.

வெங்கடேசுக்குக் கிடைத்த பங்கும், அழகம் பெருமாளின் பங்கும் சென்னியப்பன் என்பவரின் மேற்பார்வையில் இருந்து வந்தது.
அதில் வரும் வருமானம் வெங்கடேசனுக்கும், மங்கையர்கரசிக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. அழகம் பெருமாள் தன் சம்பளத்தில் ஒரு சல்லிக்காசு கூட குடும்பத்திற்காக கொடுப்பதில்லை.

குளித்து முடித்து விட்டு வந்த கிருஷ்ணன் மறுபடியும் மதினியின் அறைப் பக்கமாகப் பார்த்தான். அறை இன்னும் மூடப்பட்டே இருந்தது. நெருங்கி கதவை தட்டலாமா ? இல்லை வேண்டாமா ? எனும் தயக்கத்துடனே முன்னோக்கி நடந்தான். கதவு சட்டென்று திறந்து ஒரு சிறுமி வெளியே வந்தாள். அவள் அழகம் பெருமாளின் மூத்த மகள் சாந்தி.

அவளைப் பார்த்து கிருஷ்ணன் கேட்டான், " ஏண்டா..சாந்து..அம்மாவ எங்கடா..? "
சல்வாய் ஒழுகவிட்டபடி தலையெல்லாம் கலைந்த நிலையில் இருந்த அந்த சிறுமி சொன்னாள் ," சித்தப்பா..அம்மாவுக்கு காய்ச்சல்..உள்ள படுத்திருக்கு..."

திடுக்கிட்டுப் போன கிருஷ்ணன் வாசல் கதவண்டையில் போய், " மதினி...மதினி..." என்று சத்தமாகக் கூப்பிட்டான்.

பல சத்தங்களுக்குப் பிறகு முனகிபடியும் திணறியபடியும் எழுந்து வந்தாள் மங்கையர்க்கரசி. அவள் முகம் முழுக்க வீங்கிப் போயிருந்தது. கீழ் உதட்டின் மேல் பிளவுண்டு அதில் இரத்தம் உறைந்திருப்பது தெரிந்தது. அதைப் பார்த்ததும் கிருஷ்ணனுக்கு ஆத்திரமும் ஆங்காரமும் முட்டிக் கொண்டு வந்து தன் அண்ணனின் மேல் வெஞ்சினம் ஏற்பட்டது.

அழகம் பெருமாள் வருவதும்..மங்கையர்க்கரசியைத் துன்புறுத்துவதும் தொடர்ந்து கொண்டேயிருந்தது. யாரும் அழகம் பெருமாளின் குரூரச் செயல்களை தட்டிக் கேட்பதாகவோ...தடுத்து நிறுத்துவதாகவோ இல்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் எதனையும் பார்க்காதது போலவும்.. கேட்காதது போலவும் நடந்து கொண்டனர். ஆனாலும் அழகம் பெருமாளின் குற்றச்சாட்டுகளுக்கு காரணமில்லாமல் இருக்காது என்றும்..நெருப்பில்லாமல் புகையாது என்றும் நினைத்துக் கொண்டார்கள். சமயங்களில் குசுகுசுவென்று பேசி ஒருவருக்கொருவர் நையாண்டியாய் சிரித்துக் கொள்வார்கள்.

அன்று மதியம் 2 மணியிருக்கும். தீவிர வெக்கையின் புழுக்கம் தாங்க முடியாத அளவில் கடுமையாக இருந்தது. தெருவில் மனித நடமாட்டம் இருக்கா? இல்லையா? என்பது மாதிரி அமைதியாய் இருந்தது.

அழகம் பெருமாளின் கையில் மங்கையர்க்கரசியின் குடுமி சிக்கியிருந்தது. அவர் மதிலோடு மதிலாக அவளின் மண்டையை மோத வைத்தார். வலது நெற்றிக்கு மேலாக வெடித்து இரத்தம் பொங்கியது. அவள் திமிறி இரு கைகளையும் கொண்டு அவரின் அடிவயிற்றில் குத்தினாள். அவர் அலறி தன் கைப்பிடியிலிருந்த கொத்து முடியை தளர விட்டபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தார். வேர்வையும் மூக்குச் சளியும் வழிய அவள் அவரை வலது காலால் உதைத்தாள். அவர் தடுமாறி உருண்டார். அவள் உடனே ஓடிப்போய் தன் அறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டாள். கீழே விழுந்த அழகம் பெருமாள் வெறியுடன் துள்ளி எழுந்து..வைதபடி..தேடி..மூடியிருந்த அறைக்கதவை ஓங்கி எட்டி உதைத்தார்.

அவரது அய்யாவும், அம்மாவும் ஆந்தைகள் போல் விழித்தபடி அங்கு நடப்பவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

மிகுந்த களைப்புடன் வீட்டுக்குள் நுழைந்த கிருஷ்ணன் தன் அண்ணனின் ஆட்டத்தைக் கண்டு கலங்கிப் போய் தடுக்க முயற்சித்தான்.

எப்போதும் அழகம் பெருமாள் தன் தம்பியையும், தன் மனைவியையும் சேர்த்து வைத்துப் பேசுவது மங்கையர்க்கரசியிடம் மட்டும் தான். ஆனால் இன்று தன் தம்பியிடமே பேச ஆரம்பித்தவுடன் கிருஷ்ணன் கொதித்துப் போனான். எவ்வளவோ தடுத்தும் தன் அண்ணனின் கீழ்த்தரமான பேச்சு அவனை தன் நிலை மறக்க வைத்தது. தன் தாயைப் போல உயர்வாக மதித்திருந்த தன் மதினியையும் தன்னையும் இணைத்துக் தரங்கெட்ட வார்த்தைகளால் பேசும் தன் அண்ணனின் மீது கட்டுக்கடங்காத கோபம் கொந்தளித்தது. அவன் ஆவேசமாக ஓடிப் போய் தென்னை மட்டைகளை வெட்டும் அரிவாளை எடுத்து வந்தான்.

அழகம் பெருமாளும் அவனை மேலும்..மேலும் வெறியைத் தூண்டும் விதத்தில் பேசியபடியே இருந்தார்.அரிவாளை எடுத்து வந்த கிருஷ்ணன் தன் அண்ணனின் கழுத்து , தோள்பட்டை மீது வீசினான்

துள்ளி விழுந்த அழகம் பெருமாள் சற்று நேரம் துடித்து..அடங்கிப் போனார். என்ன செய்தோம்? ஏது செய்தோம்? என்று  சில நிமிடங்களுக்குப் பின் கிருஷ்ணன் உணர்ந்ததும் ..கோவென்று அழுது கதறியபடி தன் அண்ணனைப் பார்த்தான். அசைவற்ற அண்ணனின் உடலைச் சுற்றி இரத்தம் பெருகிக் கிடந்தது.

போலீஸ் கிருஷ்ணனை தேடினார்கள். அவன் எங்கே போனான்? என்ன ஆனான்? என்று தெரியவில்லை. வெங்கடேசுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்து விட்டான். ஜெயராம் இழவு சொல்லிப் போனவர்களிடம் வரமாட்டேன் என்று சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சாமி வாய்க்கால் தென்னந்தோப்புக் கிணற்றில் ஒரு பிணம் மிதப்பதாக அந்த தோப்புக் காவல்காரன் வந்து போலீஸிடம் தகவல் சொன்னான். போலீஸ்காரர்கள் போய் பார்த்த போது அது கிருஷ்ணனின் பிணம்.
சுபம்.
6.வது  கதை

வேண்டாத செயலே சீரழிவு 

 தன் இரண்டு குழந்தைகளைக் கரை சேர்க்க வேண்டி தினமும் அதிகாலையில் பூ மார்க்கெட்டுக்கு நகரப் பேருந்தில் சென்று, பூக்களை வாங்கிக் கொண்டு, பஸ் நிறுத்தத்தில் விற்கும் போது, தனது எண்ண ஓட்டங்களை தன் இறந்த கணவன் பழனி மேல் இருப்பதில் தவறுவதில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதில் மரகதம் மேல் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. நடுநிசியில் கதவைத் தட்டிய வேகமோ இப்பொழுது கதவைத் தட்டுகின்ற மாதிரி இருக்கின்றது என்று மனதுக்குள் எண்ணங்களை பாய விட்டு, பிறகு விட்டு விட்டு வியாபாரம் செய்தாள். ஆனால், காலம் ஓட்டப் பந்தயம் போல வேகமாக மின்னல் வேகத்தில் ஓடியது. மரகதம் முதலில் மல்லிகைப் பூவைத் தலையில் செருகிய பிறகு தான் வியாபாரம் பார்ப்பாள். அன்று, அவசர அவசரமாக தலையில் கடைசியாகப் பூச்சூடியது என்றும் மறக்க முடியாத நிழலாக வந்து போகும் நிஜமான நிகழ்வாக இருந்தது. தன் கணவன் குடிகாரன் குடும்பத்துக்கு உதவாத வன் என்றிருந்தும், கணவனுக்குச் செய்யும் கடமைகளில் குறி தவறியதில்லை. தன் கணவன் பழனி இரவு வீடு திரும்பும் வரை குழந்தைகள் இருவரும் பள்ளிப் பாடங்களைப் படித்துக் கொண்டிருப்பார்கள். மரகதம் பூக்களைத் தொடுத்துக் கொண்டிருப்பாள். தன் தகப்பன் கதவைத் தட்டும் சப்தம் கேட்டால், பத்தாவது படிக்கும் வருண், பத்தாவது படிக்கும் வனிதா இருவரும் அப்படியே உறங்குவது போல நடித்து விடுவார்கள். இருவரும் இரட்டைப் பிள்ளைகள் இருவரும் ஒரே வகுப்பு இருவரும் ஒரே குணம் இல்லத்தில் கசப்பை தாங்கிக் கொண்டு, இரவு பகல் பாராது படிப்பர். மரகதமோ பூக்கூடையை ஒரு துணி போட்டு முடி விடுவாள். இல்லாவிடில் குடிகாரக் கணவன் பழனியோ, பாதயாத்திரைக்கு காவடி யாட்டம் எடுப்பது போல் ஆடி பூக்களை மிதித்துப் போடுவான். இந்த சிக்கல் தேவையா? ஆகவே, சாதுர்யமாக நடந்து கொள்வாள் மரகதம். மரகதம் மரகதம் உங்க புருஷனை என் கை வண்டியில் வைத்துள்ளேன் பார்த்து விட்டு, அழுகாமல் எடுத்துச் செல் அவனுக்கு இன்னிக்கு அதிகம். என்றான் காளி. அட ச்சீ இரு வர்றேன் பார்க்கின்றேன் என்று சொல்லிக் கொண்டே பழ வண்டியருகே ஓடினாள் மரகதம் அக்கம் பக்கம் மரகதம் மற்றும் குழந்தைகள் அழும் சப்தம் கேட்டு ஓடி வர, சில நிமிடங்களில் .காவல் நிலையத்தார் சுற்றியுள்ளவர்களை விசாரித்ததில் பூக்கார அம்மா கணவன் பழனியும் அவனது நண்பனான காளியும் நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேரும் வண்டியில் பழ வியாபாரம் செய்பவர்கள், தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியில் வரும் ரசிகர்கள் வந்து இவர்களிடம் பழங்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு வண்டியை விட்டு அகன்றவுடன் இருவரும் தங்கள் பையில் வைத்திருக்கும் குடி பாட்டிகளை எடுத்து மனமார குடித்துவிட்டு, ஒருவருக்கொருவர் மனமார பேசிவிட்டு, கை வண்டியைத் தங்கள் வீடு நோக்கி நகர்த்த ஆரம்பிப்பது வழக்கம். அன்றைய தினம் இருவரும் சூடான பேச்சு பேச, வாய்ச் சண்டை கைச்சண்டையாகி விட்டது. எனக்கு வந்த கஸ்டமரை நீ ஏன் உன்னிடம் பழம் வாங்க வைத்தாய் என்று பழனி காளியைப் பார்த்துக் கேட்க . . . காளியோ உன் கறார் பேச்சுக்கு உன்னிடம் யார் பழம் வாங்க வருவாங்க? என்று கேட்டு முடிப்பதற்குள், கnளியோ, பழசீப்பை அறுப்பதற்கு வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக பழனியைக் குத்திவிட்டான். பழனி இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க' காளி தானே தள்ளாடியபடி தன் நண்பன் பழனியை தன் வண்டியில் படுக்க வைத்து, பழனியின் வீட்டு வாசலில் பழ வண்டியை நிறுத்தி விட்டு, பழனியின் வீட்டுக் கதவைத் தட்டினான் காளி. குடியின் வேகம் குடிக்க வைத்தது குடித்த வேகம் குத்த வைத்தது குத்த வைத்ததோ குடியைக் கெடுத்தது குடி குடியைக் கெடுக்கும் பழமொழி செயலில் ஒத்துப் போனது. இப்படி பக்கம் பக்கமாக பத்திரிக்கையில் போட படித்த மக்கள் பரிதாபப்பட்டு பேசினார்கள். வேண்டாத செயலே சீரழிவு என்று உணர்ந்த பழனியின் குழந்தைகள் இருவரும் நன்றாகப் படித்து உயர் பதவிக்கு வந்துவிட்டது கண்டு பூரிப்பு மிகுதியானாலும், பூரிப்பை தொடராது இடையிடையே மரகதம் வருந்திக் கொண்டு, தன் கையாலே பன்னீர் ரோசாப் பூமாலை தொடுத்து, தன் கணவன் பழனி படத்துக்குப் . போட்டு தன் கணவனை பூஜித்து விட்டு, தன் வீட்டு பணியாட்களிடம் வேலை வாங்குவது என்று சுகமாக அதாவது துக்கத்திலும் ஓர் சுகம் என்று வாழ்ந்து வந்தாள் மரகதம். இரு குழந்தைகளுக்கும் ஒரே மண மேடையில் திருமணம் செய்வதற்கு ஏற்பாடு தீவிரமாக நடக்க மரகதம் மகிழ்ச்சியோடு வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். 
சுபம்


5வது கதை


   ஒற்றுமையின் பலம்
                                           *******************
தமிழ் சிறுகதை ( எழுதியவர். வள்ளியம்மை சுப்பிரமணியம் )

                                    அது ஒரு சிறந்த கிராம ம். பல கனிதரு மரங்களும், அருள்மிகு ஆலயங்களும், பள்ளிக்கூடங்களும், ஒரு சிறிய வைத்தியசாலையும் தன்னகத்தே கொண்ட கிராம ம். ஆனால், இந்த வருடம் பெய்த பெருமழை காரணமாக ஒவ்வொருவர் வளவுகளின் உள்ளேயும், வெளியேயுள்ள ஒழுங்கைகளிலும் மழைநீர் ஓடாமல் தேங்கி நிற்கத் தொடங்கி விட்டது. இற்றைக்கு நூறு வருடங்களின் முன்னர் மழைநீரை வெளியேற்றும் வடிகால் அமைப்பும், மதவுகளும் சீமெந்து போட்டு அடைக்கப் பட்டு விட்டன.ஏனெனில், சில ஏழை மக்கள் அந்ததாழ்வான நிலப்பிரதேசத்தில் குடிசைகள் கட்டி வாழ்வதனால்,தமது குடியிருப்புக்கு வெள்ளம்வராமல் இருப்பதற்கு மதவின் துவாரத்தைச் சீமெந்து போட்டு அடைத்து விட்டனர்.அதனால் பெய்யும் மழைநீர் முழுவதும் ஓடிச்சென்று வயலை அடைந்து, குளத்தைச் சேருகிறஅந்தப் படிமுறை இல்லாமற் போய்விட்டது.
                              இதனால், கிராமத்து மக்கள் சிலர் தமது கிராம அதிகாரி தொடக்கம், காரியாதிகாரி, ஈற்றில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வரை சென்று தமது முறைப்பாட்டினை எழுதி...அவ்வூர் மக்களின் கையொப்பங்களையும் பெற்று...பல முறையீடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களும் மக்களுடைய நச்சரிப்புத் தாங்காமல்நேரில் வந்து பார்வையிட்டனர்.அவர்களது பார்வையில்....ஒவ்வொரு குடியிருப்பாளரும்,தமதுளவுக்கு மதில்கட்டியோ அல்லது தகர வேலி அடைத்தோ....மழை வெள்ளத்தை ஓடிச் செல்லவிடாது தடுத்து விட்டதைக் கண்டு அவர்களது செயலினால் தான்’ இந்த வெள்ளத் தேக்கம்’ என்று கூறிச் சென்று விட்டனர்.அதிகாரிகளின் வார்த்தையால் திருப்தியுறாத மக்கள் தங்கள்அரசாங்க அதிபரைச் சந்தித்து தங்கள் கோரிக்கையைச் சமர்பித்தனர். அவருக்கு இதைப்போல 30 கிராமங்கள்.....மழை வெள்ளத் தேக்கங்கள்....குடிசைகளின் அழிவு....வீசிய புயற்காற்றினால் உண்டாகிய அனர்த்தங்கள், உயிரிழப்புகள், கால்நடைகளின் அழிவுகள்’ என்ற கணக்கில் அடங்காத மேன்மைறையீடுகள்....மேசைமேல் நிறைந்து கிடந்தன.
                    தன்னைக்காணவந்த கிராம மக்களை அதிபர் அமரச் சொல்லி ...’ இந்த வருடபெருமழை காரணமாக எமது பெரியாஸ்பத்திரி  வார்ட்’டுகளுள்ளே மழைநீர் உள்ளே புகுந்துநிற்பதையும், கடமையில் ஈடுபட்டிருந்த வைத்தியசாலை ஊழியர்கள் தமது சீருடைகள், பாதணிகள் யாவும் வெள்ளத்துள் மூழ்கிக்கிடப்பதைக் காண்பித்தார்.ஊரிலிருந்து போன குழுவில் இரண்டு சமூக அக்கறையுள்ள இளைஞர்களும் இருந்தனர். அவர்களும் தமது வடபகுதிநிலைமையை நன்கு உணர்ந்து கொண்டனர்.” ஐயா, நாமே எமது கிராமத்தின் ...முன்னேற்றத்திற்கு சில நடவடிக்கைகள் எடுக்க , ஒருசில குடியிருப்பாளர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.சண்டைக்கு வருகிறார்கள். ‘ முந்த நாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான்கள். எங்கடை ஒழுங்கையிலே ஏதாவது வாய்க்கால் கீற வந்தீங்களென்றால் நீங்க கொண்டுவரும் மண்வெட்டியாலே தான் உங்களை வெட்டிப் புதைத்துப் போடுவம் “ என்று கூச்சல் போடுகிறார்கள்’ என்று கூறினார்கள்.
                 அரசாங்க அதிபர் அவர்கள் உடனே....தமது கடித தலைப்புள்ள கடதாசிகள் மூலம்எழுதுவினைஞர் மூலம் தட்டச்சு செய்வித்து வலி.மேற்கு காரியாதிகாரி ஊடாக....கிராம அதிகாரி அவர்களின் கவனத்திற்கு ‘ என்று தலையங்கத்துடன் குறிப்பிட்டு மூன்று கடிதங்களைதயார் செய்து, அவற்றுள் ஒன்றினை கிராம இளைஞர்கள் கையிலும், மற்றவற்றை அந்தந்தகாரியாலய அதிகாரிகளுக்கும் தபாலிற் சேர்க்குமாறு கட்டளையிட்டார். தூதுக்குழுவில் ...கிராம அக்கறை....விழிப்புணர்வு கொண்ட இரண்டு இளைஞர்களைக்கும், அரசாங்க அதிபரின் ....கடித எச்சரிக்கைகள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது. வீடுவந்து சேர்ந்ததும் தாம்சில நாட்களுக்கு ...கிராமத்து சில இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டு....இந்த பொதுச்சேவைக்கு புறப்படப் போவதாக க்கூறினர். சில வீடுகளில் பெற்றார் எதிர்ப்புக் காட்டினர். ‘அவனவன், காசு...பணம் உழைத்து பெற்றார் சகோதரங்களுக்கு கொடுக்கிறான்கள்..இவருக்கு மாத்திரம் றோட்டளக்கிற வேலை’ என்று ஏசினார்கள். பரிந்துணர்வு கொண்ட பெற்றார்...எங்கடை ஊருக்குத்தானே....நன்மை செய்யப் போகிறாய். போய்வா...சனத்திடம் அன்பாகப்பேசி விசயத்தை தெளிவு படுத்து. இல்லாவிட்டால்...அதுகள் சண்டைக்கு வந்து விடுவினம். பொறுமையாகச் சனத்தோடை கதைக்கவேணும்’ என்று ஆலோசனை கூறினார்கள்.

            அதன்படி , செயலில் இறங்கத் தொடங்கினார்கள். முதலில் வீடுவீடாகச் சென்று அரசாங்க அதிபரின் கடித த்தையும் வாசித்துக் காட்டி....தெளிவு படுத்தினார்கள். “ அரசாங்கக கோழி முட்டை குடியானவனின் அம்மியை உடைக்கும்” என்று சொல்லி ‘ மக்காள், நீங்கள் என்ன செய்தாலும் அது நல்லதாக முடிந்தால் சரிதான் ‘ என்றார்கள்.தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் சொன்னார்கள்....” நீங்களும் மாஸ்கைப் போட்டுக் கொண்டு அண்ணாக்களுக்கு கைஉதவி செய்ய வேணும். களையாறத் தேத்தண்ணியும் கொடுக்கவேணும் “ என்றுஉதவிக்கரம் நீட்டினார்கள்.முதலில் மண்வெட்டி, அலவாங்கு, பிக்கான் போன்ற கருவிகள்
தேவைப்பட்டன.சில வாய்கால்களின் குறுக்கே மரவேர்களைத் துண்டிப்பதற்கு கோடரியும் தேவைப்பட்டது. மொத்தம் நாற்பது வீடுகள்....பன்னிரண்டு முடக்குகள்....இரண்டு நாற்சந்திகள், ஆறு முச்சந்திகள்....எல்லாவற்றிலும், வாய்க்கால் வெட்டி...அது மழைநீரில்
கரைந்து போகாமல்.   ....சீமெந்தினால் வாய்க்கால் கட்டி...அதையும்...அவ்வூர் ஓய்வு பெற்ற நீர்ப்பாசன பொறியாயலாளர் ஒருவரது ஆசோசனைப் படி ...சந்திக்குச் சந்தி ஒரு அங்குல கீழிறக்கம் பார்க்க நீர்ரமட்டம் என்ற கருவியைப் பாவிக்க வேண்டும். மழைகாலம் முடிந்து...நெல்அறுவடையும் முடிந்தபின் ...சீமெந்தினால் வாய்க்கால்கள், ஒவ்வொரு வளவின் ஒழுங்கைக் கரையோரமாக வாய்க்கால் கீறி...ஒழுங்கையில் அமைக்கப்படும் சீமெந்து வாய்க்காலுள் வெள்ளம் வந்து விழக்கூடியதாக....அந்த நீர்ப பாசன பொறியியலாளரின்ஆலோசனை நன்கு பயன்தரக் கூடியதாக இருந்தது.
               இந்த வாய்க்காலை அமைத்து....அதனை ...பாணாவெட்டி வரை கொண்டு போய்...பிரதான வீதியைக் குறுக்காக வெட்டி...அதற்குள் பாரிய சீமெந்து குழாய்கள் இரண்டினை இணைத்து...மதவுச் சுவரையும் கட்டி....பாய்ந்துவரும் வெள்ளத்தை சாத்திரியார் வீட்டிற்கு முன்பாக பாணாவெட்டி வயலுக்கும்...அங்கிருந்து பறட்டைக் குளத்திற்கும் பாய விடவேண்டும் ‘ என்றும் தீர்மானம் நிறைவேறியது.இந்தச் சீமெந்துக் குழாய் பொருத்தும, வேலை மாத்திரம் இரவு பத்து மணிக்கு மேல் ஆரம்பித்து அதிகாலை ஐந்து மணிக்கிடையில் முடிக்கவேண்டும்.ஏனெனில், வாகனங்களின் போக்குவரத்தைத் தடைசெய்யக் கூடாதல்லவா?...
                             ஆகவே, சில வருடங்களாக வெள்ளத்துள்ளும், ‘ டெங்கு’ பயத்துடனும், நுளம்புத் தொல்லையுடனும் வாழ்ந்த மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதமல்லவா... சில நல்லுள்ளங்கள் சீமெந்து, மணல், சறளை, குழாய்கள் இரண்டு இவற்றிற்கு பணம் கொடுத்து உதவினார்கள். இந்த இளைஞர்களின் ஒற்றுமைச்செயலை அறிந்த  வெளிநாட்டுப் புலம் பெயர் அமைப்பும் அவர்களது சனசமூக நிலைய மூடாகப் பணம் அனுப்பி ஊக்குவித்தது. மக்கள் எல்லோரும் நன்றாக வாழவேண்டுமாயின் “ ஒற்றுமையே பலம்” .

* தனது கிராமத்து இழிநிலை கண்டு மனம் வருந்திய ஒரு வயோதிபத் தாயின் கற்பனையில்
இருந்து இச் சிறு கதை பிறந்தது*

4 வது கதை

3 வது கதை

2. வது கதை 15.12.2020சித்திரப்பூ

————-


அன்று ஒரு வெள்ளிக்கிழமை ஆறு நாட்கள் மிகுந்த பனிப்பொழிவுகளுக்குமத்தியிலும் கப்பல்களில் இருந்து கொண்டுவந்து தரையில் இறக்கப்படும் மீன்களை பார ஊர்திகளுக்கு ஏற்றி தொழிற்சாலைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து நொருக்கிய ஐஸ் கட்டிகளுக்குள்மீன்களை மறைத்து பொதிசெய்யும் வேலையில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார் தங்கராசாண்ணை. ஊரில சேட்டைக்கழட்டி தோளில் மடித்துவைத்துக்கொண்டு பனங்குற்றிகளையும் தண்டவாளக்குற்றிகளையும் லாவகமாக தூக்கிச்சுமந்த மனுசனுக்கு இந்த சின்ன குளிர் பெட்டியில் அடைக்கப்பட்ட மீன்களை -12 பாகை குளிருக்குள் நின்றபடி தூக்கிக்காவி வேலை செய்வது சிரமமாகத்தான் இருக்குது.  கொம்பனி தந்த கையுறையையும் மீறி கையைக்குத்தி விறைக்கவைக்கிற குளிருக்கு அவர் மட்டுமல்ல அகதியாக வந்த எல்லோரும் தங்களை மாற்றிக்கொண்டுதானே ஆகவேண்டும். 

ஓயாத வேலைகளுக்கு மத்தியில் அவருக்கு பக்கத்தில் வந்த ஈசன் “என்ன அண்ணை இந்தமாச காசு கொடுத்திட்டீங்களோ”அன்று தங்கராசாண்ணையின் காதுக்குள் கேட்டான்.”இல்லடாப்பா,இந்த கொரோணாவால என்ர கீப்பில வேலைசெஞ்ச மூண்டு சுகர்கார வேலையாட்கள் சோமாஷ் பார்சையில நிக்கினம். அதால பத்ரோன் என்ன தொடர்ந்து வேல செய்ய சொல்லிப்போட்டான்” என்றபடி அவரது வேலையில் துரிதமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

தங்கராசாண்ணை போனமாதம் இடம்பெற்ற அந்தோனியார் கோயில் திருப்பலி ஒன்றில் கலந்து கொண்டபோது அவருக்கு உடம்பில சீனி குறைஞ்சதால தலை சுற்றி கோவில் வாங்கிலேயே சரிந்துவிட்டார்.அதுக்குப்பிறகு அம்புலன்ஸ் வந்து வைத்தியசாலைக்கு ஏற்றிக்கொண்டு போனதுவரை அது வேறகதை.

ஆரும் கேட்டால்; “என்ன செய்வது நாங்க அகதிகள்தானே;வெள்ளக்காரன் மாதிரியே!  எங்களுக்கு சொந்த பந்தம், குடும்பம் என்று எத்தினை பொறுப்புக்கள் இருக்கு” என்பார்.”தற்போது ஏற்பட்டுள்ள கோவிட்19 உலக நெருக்கடியில லொக்டவுனுக்குள்ள இருக்கிற எங்கட சனத்த காப்பாத்திற பொறுப்பும் கடமையும் வெளிநாட்டில வாழுற எங்கட சனத்தின்ர கையிதானே இருக்கு அதனால அந்தக்கடமையில என்ர பங்கும் இருக்கவேணும் என்றதால; நாட்டில எத்தனையோ மலேரியா செங்கமாரி எல்லாம் தாங்கின உடம்புக்கு இந்த கொரோணா வந்து என்னத்தப்பண்ணிப்படைக்கப்போகுது; கிடைக்கிற சந்தர்ப்பத்த பயன்படுத்தி எங்கட மக்கள காப்பாத்திப்போடணும். கொடிய யுத்தத்தாலையும் திட்டமிட்ட இனப்படுகொலைகளாலயும் பாதிக்கப்பட்ட எங்கட மக்களை இப்ப இந்த இயற்கையும் ஒரு வழிபண்ணி அழிக்கப்பார்க்குது. அதற்கும்மேலாக யுத்தத்தால ஏதிலிகளான மக்களை வீட்டோட அடைச்சு வைச்சா அதுகளுக்கு யார் ஒரு நேர சாப்பாடு போடுறது?இந்த நேரத்திலயாவது அதுகளுக்கு நாங்க இருக்கிறோம் என்ற நம்பிக்கைய ஊட்டவேணும் தம்பி!” என்று எல்லோருக்கும் சொல்லுவார் தங்கராசண்ணை.

அன்று ஞாயிற்றுக்கிழமை, ஆறு நாளும் ஓவர்ரைம் வேலைசெய்து களைத்திருந்த தங்கராசாண்ணையின் தூக்கத்தை கலைப்பது போல் அவரது கையடக்கத்தொலைபேசி காட்டுக்கத்தல் கத்திக்கொண்டு இருந்தது.ஏற்கனவே வேலைக்காக அலாம் வைத்து விட்டு; வைத்த அலாம் அடிக்குமா, இல்லையா?எனும் சந்தேகத்தில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து எழுந்து ரெலிபோனில் நேரத்தை பார்த்துக்கொண்டிருந்தே இரவை விரட்டிக்கொண்டிருக்கும் தங்கராசாண்ணைக்கு, அலைபேசியில் அழைப்பு ஒலி கேட்டதும் மனுசனுக்கு வேலைக்கு தாமதமாகிவிட்டது என்ற பயமே முதலில் ஏற்பட்டிருந்தது. பின்னர் இன்றைய நாள் அவரது ஓய்வு நாள், என்ற ஞாபகம் மூளையில் படர, மனதுக்குள் நச்சரித்துக்கொண்டே அலை பேசியில் இருந்த குரல் பதிவினை கேட்டபடியே தேனீர் கேத்திலை சூடேற விட்டுவிட்டு அவர் உறைந்துபோனார்.


“வணக்கம் அண்ணை எனக்கு பொசிற்றிவ் என்று வந்திருக்கு.முதலில தெரியாது. இப்ப மூச்சுவிட கஸ்ரமாயிருக்கு. சரியான காய்ச்சல். நானும் மனுசியும் ஒரு அறையிலும் பிள்ளைகள் ஒரு அறையிலும் தனிமையில் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு ஒழுங்கா சாப்பாடுகொடுத்து இரண்டு நாளா போயிற்றுது .நீங்கள் எங்கட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ காசு கேட்ட நீங்கள். அதனான் ஒண்லைன் மூலமாக உங்கட கணக்கிற்கு மாற்றிப்போட்டன்.ஒருக்கா உங்கட எக்கவுண்ட செக்பண்ணுங்கோ”என இருமலும் மூக்கடைப்புமாகப்பேசி ஈசன் குரல் பதிவிட்டிருந்தான்.ஈசனுக்கும் இரண்டு பிள்ளைகள். முள்ளி வாய்க்காலில் தமிழரின்ட கடைசி இருப்பும் முடிவடைந்து நிர்வாணமாய் கரயேறிய ஆண்டிற்கு சற்று ஆறுமாதங்களுக்கு முன்பாகவே பிரான்சிற்கு வந்திருந்தான்.வெளி நாடு வருவதற்கு முன்னர் கொழும்பில் ஏஜென்சிக்காக காத்துக்கிடந்தபோது சீவம் லொஜ்ஜில வைச்சு சீ.ஐ.டி.இரவோடுஇரவாக கண்ணைக்கட்டி கொண்டுபோய் புலியா என்று கேட்டு; எஸ். லோன் பைப்பிற்குள் முள்ளுக்கம்பியை விட்டு; மலவாசலுக்குள் தள்ளி போட்டு; பைப்ப வெளியில் இழுத்து கம்பியை முறுக்குற போது குடல் பிஞ்சு வெளியில் வருவதுபோல் இருக்குமாம் என்பான். இரண்டு கால் பெருவிரலையும் கட்டித்தூக்கிப்போட்டு குதிகாலில அடிச்ச அடியில் இப்பவும் கால் விறைப்பு மாறம கொஞ்சம் சைற் இழுவையில்தான் நடப்பான். சித்திரவதைக்குப்பிறகு வந்த மூல வருத்தம் இன்னும் மாறவில்லை.இரண்டு தரம் ஒப்பிறேசனும் பண்ணிப்போட்டன். 

பிரான்ஸில் அவனது அகதி வாழ்க்கையப்பொறுத்தவரை சிமிற்சம்பளம்தான்.வாடகைக்கு வீடு எடுப்பதென்றால், ஒருமாத வாடகை,ஒருமாத அட்வான்ஸ் தேவைப்படும் அதைவிட வாடாகையில் இருந்து குறைந்தது மூன்று மடங்காவது சம்பளத்தாளின் பெறுமதி இருக்கவேண்டும். இதனாலேயே இன்றுவரை எழுதாதவீட்டில், கார் கராஜ் ஒன்றில் குடித்தனமாக இருக்கின்றான்.ஒவ்வொரு மாதமும் வாய,வயிற்றைக்கட்டி தனது உழைப்பில ஒருபகுதியை நாட்டில யுத்தத்தாலும் அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஒதுக்கிவிடுவான்.தங்கராசரின் பொதுவாழ்விற்கு உறுதுணையாக இருப்பவர்களில் ஈசனும் ஒருவன் என்பதால் ஈசனின் நிலைமை அவரைப்பொறுத்தவரை துயர்படிந்ததாகவே இருக்கும்.

ஈசனின் குரல் பதிவை கேட்டபின்னர் ஒயில் கீற்றரின் கதகதப்பிற்குள்ளும் பனியாய் உறைந்திருந்தார் தங்கராசாண்ணை.யன்னலில் வெளியே குளிர் காற்றின் அறைதலில் படபடத்துக்கொண்டிருந்த சட்டறை விலக்கி யன்னலை மூடும்போது யன்னல் வளியாக அறையில் படந்த குளிரால் உடல் உதற வெளிக்கிடுவதுபோல இருந்தது அவருக்கு  .அவரை அறியாமலே அவரது கைகள் புள் ஓவரை துளாவிக்கொண்டிருந்தது. பனி உறுஞ்சிய இலையற்றமரக்கிளையில் அமர்ந்திருந்த “மேக்பை” துணையிழந்த ஒற்றைப்பறவை கொடுகிக்கொடுகி அதனது அகதி வாழ்வை நொந்து புலம்பிக்கொண்டிருந்தது. சிந்தனையில் இருந்து ஒரு முடிவிற்கு வந்த தங்கராசாண்ணை பத்மினி அக்கவை தட்டியெழுப்பி “இஞ்சாரப்பா உவன்ஈசனுக்கும் கொரோணா கெண்போமாம். அவன்ர ரெண்டு பிள்ளயளையும் தனியறயில பிரிச்சு வைச்சிருக்கானாம். நாமதான் அவனையும் கவனிக்கோணும் அவனுக்கு இஞ்ச வேற ஆரு இருக்கா. முதல்ல ஏதாவது சாப்பாடு செய்யப்பா”என்று கூறிவிட்டு சீனி போடாத தேநீரில் சக்கரையாய் கரைந்துகொண்டார்.

ஊரில் சில்லாலையில பத்மினிஅக்கா குடும்பம் என்றால் சனத்துக்கு ஒரு மரியாதை.அவரது தகப்பனார் தந்தை செல்வா காலத்தில் இருந்து ஒரு தமிழ் தேசியவாதி. அதுக்குப்பிறகு போராளிகள் ஆயுதம் தூக்கியபின்னாடி போராளிகளுக்கு சமைத்துப்போட்டே பத்மினி அக்கா பழக்கப்பட்டிருந்தவா.சிங்கள ராணுவம் எப்போது அந்த குடும்பத்தை புலி எண்டு தேடிச்சினமோ அப்பவே இளம் வயதில் வெளிக்கிட்டு வந்தவதான் பத்மினி அக்கா.இப்ப கொரோணாக்காலத்தில சாப்பாடு இல்லாது கஸ்ரப்படும் (எஸ்.டே.௭வ்.)சொந்த முகவரிகளை தொலைத்துவிட்டு வீதியில் வசிப்பவர்களுக்கு ஒவ்வொரு வெள்ளியும் சாப்பாடு கொண்டு கொடுப்பா.அது சரி நாங்களே முகவரியில்லாமல் திசைகள் தொலைத்த அகதிக்குப்பயாக அலைந்து திரிகின்றோம். அந்த வலி நமக்குத்தானே தெரியும்.

வீட்டில் சமைச்ச சாப்பாட்டையும் இரண்டு தண்ணிப்போத்தல்களையும், ஜோக்கற்றுக்களையும் எடுத்துக்கொண்டு புறப்படத்தயாரானார் தங்கராசாண்ணை. காரில் படிந்திருந்த ஐஸ் படிவை சுறண்டிக்கொட்டிக்கொண்டு காருக்குள் நுழைந்து அமர்ந்தபோது, தங்கராசஅண்ணைக்கு, டீ பிறீசருக்குள் இருப்பதுபோல் இருந்தது. இருந்தாலும் அதற்கெல்லாம் மனுசன் பழக்கப்பட்டவராச்சே.  உள் ஒழுங்கையில் இருந்து பிரதான வீதியை அடைந்தபோது லூவர் ஆற்றை அண்டிய கரையில் பழுத்துக்கருகிய இலைகளை கிழறிக்கொண்டிருந்தன அழகிய மஞ்சள் செரின் பறவைகள். 15 வருடங்களைக்கடந்து இன்றுதான் முதன் முதலில் இந்தப்பறவைகள் நகருக்குள் வந்திருக்கின்றன.அதியசயம்தான் என மனதுக்குள் எண்ணங்களை ஓட்டிக்கொண்டு பதிந்து கிடந்த கரு நீலத்தொடுவானை ரசித்தபடி ஈசனின் வீட்டை அடைந்து விட்டார். ஈசன் எவ்வளவுதான் மறுத்து பேசியபோதும் மனுசன் விடாப்பிடியாக நின்று ஈசனை பார்த்து ஒருசில ஆறுதல் வார்த்தைகளாவது பேசிவிட்டு குழந்தைகளுக்கு தினமும் உணவு கொடுக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.


ஈசனின் வீட்டு அழைப்புமணியை அழுத்தியபோது அருகில் இருந்த வீட்டுக்காரரின் எரிந்து விழும் பார்வையை அவரது மனம் நிதானத்துடன் சமாளித்துக்கொண்டது.கதவின் வளியே ஒரு பூச்செண்டு தலைகாட்டியதுபோல் இருந்தது .”bonjour மாமா” என்றபடி நிசாக்குட்டி தங்கராசாண்ணையின் கைப்பையை ஆவலுடன் பார்த்தாள். இரண்டு நாட்களாய் பிறிஜ்ஜில் கிடந்த ஏதேதோவெல்லாம் சாப்பிட்டு வயிற்றை நிரப்பிய அந்த பிஞ்சுகளுக்கு சாப்பாட்டைக்கண்டதும் ஏற்பட்ட சந்தோசம் அவர்களது உடல் மொழியில் தெரிந்தது.அவர்கள் தலைவாராமல், குளிக்காமல் இருந்தது உண்மையிலேயே அகதிவாழ்வை அப்பட்டமாக காட்சிப்படுத்தியது.நிசாக்குட்டிக்கு ஏழு வயசுதான்இருக்கும் .தனக்கு தெரிந்த வகையில் ஒருவாறாய் முயற்சி செய்து அவளது கூந்தலை சரிபண்ணியிருந்தாள்.அடுத்தவன் தமிழ் ஐந்து வயது. அவர்களது அறையைப்போல் அவனது உடைகளும் சொக்குலா, மற்றும் கலர் பேனைகளின் கை வண்ணத்தில் அவனது ஆடைகள் குழம்பிப்போய் இருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த வீடு நன்கு சுத்தப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தி இருந்தது என்பது. தங்கராசாண்ணைக்கு நன்றாக தெரியும். இரண்டு குடும்பங்களும் நன்மை தீமைகள் என்றால் வந்து போய் பழகுவார்கள். அந்த அளவிற்கு இருந்தது அவர்களது உறவு. சிறியவன் தமிழ் தங்கராசாண்ணையை கண்டதும் ஒடிவந்து தான் வரைந்த அழகிய சூரியகாந்தி சித்திரப்பூவை ஆவலோடு காட்டினான். உடனே பதிலுக்குஅவனில் இருந்து சில மீற்றர்கள் தூரம் இடைவெளியை பேணி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு  “இது நல்ல அழகாய் இருக்கு மாமாக்கு தாறீங்களோ”என்றதும் வர்ணம் பூசிமுடிய தருகின்றேன் என்று குழந்தை மறுத்துக்கொண்டு வரையும் வேலையுள் மறைந்து போனான்.


பக்கத்து அறையில் இருந்தவாறே ஈசன் தங்கராசரை கண்டித்தபடி “சாப்பாட்டை வைச்சிட்டு கெதியா இஞ்ச இருந்து வெளிக்கிடுங்கோண்ணை. எங்களுக்கு பூரணமாக குணமடைந்ததும் ஆறுதலாக பேசலாம்” என்று கண்டித்தான்.இடையில் குறுக்கிட்ட சத்தியா “இவர் தன்னில் கொஞ்சமும் அக்கறையில்ல. பாட்டைமா தமிழ்கடையில வேலசெய்யப்போய் ஆரிடமோ இருந்து தொற்றிப்போட்டுது அண்ணா.எனக்கு கொஞ்சம் பரவாயில்லை இவர்தான் மூச்செடுக்க கஸ்ரப்படுறார்.மணம் குணம் ஒண்டும் தெரியாதாம் சாப்பிடுறாருமில்ல.”என்று மனக்குறைகளையெல்லாம் கொட்டித்தீர்த்தார் ஈசனின் துணைவியார் சத்தியா.

ஈசன் குடும்பத்தின் மனக்குறைகளை கேட்டறிந்தபடி “சரிதம்பி; நான் நாளைக்குவாரன். நீ கடையில வேலை என்ட பிறகுதான் எனக்கு ஒரு ஞாபகம் வருகுது உவன் “அரசியல்” ஒரு ஐம்பதுயூரோ எங்கட சனத்துக்கு வாழ்வாதார உதவிக்காக அன்பளிப்பா தாரன் எண்டவன். அவனையும் பாத்திற்று வீட்டபோகணும்” என்றபடி புறப்பட்டார்.அரசியல் என்பது பட்டப்பெயர் குமார் என்றுதான் எல்லாரும் கூப்பிடுவினம். குமார் காலையில பத்துமணிக்கு தமிழ்க்கடையில வேலைக்குப்போனால் இரவு பதினொரு மணிவரைக்கும் ஆறு நாளும்வேலை. வேலை முடிஞ்சதும் ஏதாவது கண்டதையும் மலிவில் வாங்கி குடித்துவிட்டு அரசியல் பேச வெளிக்கிட்டுவிடுவாவான்.அதனால் அந்த சுற்று வட்டாரத்தில் இருக்கின்ற தமிழர்கள் அவனை அரசியல் என்றே பேர் சொல்லி அழைக்கின்றனர்.அவனுக்கு விசா இல்லை என்பதால் எமது ஆட்கள் பதிவு செய்யாமல் வேலை வாங்குகின்றனர். இதில் சொல்லப்போனால் இரண்டு பகுதிக்கும் பிரச்சனைதான் அறா வட்டிக்கு யாரிடமும் பணத்தை வாங்கி கடைய போட்டுவிட்டு வட்டி கட்டுறதே அவர்களுக்கு வாழ்க்கையாய் இருக்கு; எங்கட தமிழ் முதலாளிமாருக்கு. இப்படி விசாஇல்லாத குமார் போன்ற பல்லாயிரக்கணக்கான அகதிகள் லச்சக்கணக்கில் கடன்பட்டு வெளிநாடுவந்திருப்பினம்.அவர்கள் வேறு வழியின்றி இப்படியான வேலைகளை விசா இல்லாமல் செய்து தங்கட வாழ்கையையும் ஊரில் குடும்பத்தையும் பார்க்க வேண்டி கிடக்கிறது.

ஈசன் வீட்டிற்கு கடந்த பத்துநாட்களாக சாப்பாடு கொண்டுவந்த தங்கராசாண்ணை ஒரு நாள் காலையில் ஈசனுக்கு போன்பண்ணி “இஞ்சாரு தம்பி நாளையில இருந்து பத்மினி சாப்பாடு கொண்டுவருவா அவாவ சுணக்காம அனுப்பி வைடாப்பா எனக்கு கொஞ்ச நாளைக்கு லீவெடுக்காம பத்தரோன் வேலை செய்ய சொல்லிப்போட்டான்”என்று கூறி தொடர்பை முடித்துக்கொண்டார். அன்றிலிருந்து பதினைந்து நாட்களாக சத்தியா பத்மினியக்காவிடம் தங்கராசாண்ணையைப்பற்றி விசாரிக்கும்போதெல்லாம். “அவர் சுகமா இருக்கிறார். ஆளுக்கு சரியான வேலை” என்றதோடு மட்டும் முடித்துக்கொண்டு அவசரமாக திரும்பிவிடுவா பத்மினியக்கா. ஈசனும் ஒருவாறாக இந்த கொடிய கொரோணாவில் இருந்து தப்பிப்பிழைத்து தங்கராசரின் வீட்டை எட்டிப்பாக்க போனபோதுதான் தெரிஞ்சுது கடையில் வேலை செய்த அரசியலிடம் காசுவாங்கப்போனபோது அவன் நாடிக்கு கீழ் மாஸ்கை போட்டுக்கொண்டு தங்கராசரின் முகத்துக்கு நேரே இருமியிருக்கிறான். தங்கராசரும் காருக்குள்தானே என்று மாஸ்க்கை அணியாமல் இருந்திருக்கின்றார்.”என்னடாப்பா இருமிக்கொண்டிருக்கின்றாய்” என்று கேட்க “இல்லையண்ண சும்மா சளிக்காச்சல்” என்று சொல்லியிருக்கிறான் அரசியல்.”எதுக்கும் ஒருக்கா செக்பண்ணுடாப்பா” என்று விட்டு வீட்டுக்குப்போன தங்கராசாண்ணை “இஞ்சரப்பா அரசியல் என்ர முகத்துக்குநேர இருமிப்போட்டான். அவன்ர நடவடிக்கைய பார்க்க எனக்கு கொஞ்சம் ஐமிச்சமாத்தான் இருக்கு. எதுக்கும் நான் குளிச்சுப்போட்டு வந்து தனியறையில இருக்கிறன்” என்று சொல்லிப்போட்டு தனிமையில் இருந்த மனுசனுக்கு மூன்றுநாளில வருத்தம் கூடி; அம்புலன்சில கொண்டுபோய் இன்றைக்கு பதினைந்துநாள். கொரோணா கூடி வைத்தியசாலை சென்ற வரைக்கும் பத்மினியக்கா கூறி முடித்திருந்தார்.இருந்தாலும் பத்மினியக்கா, ஆட்களுக்கு சாப்பாடு கொடுப்பதை இன்றுவரை நிறுத்தவில்லை.

பிற்பகல் ஐந்துமணியை தாண்டிவிட்ட பனிக்காலத்து கும்மிருட்டு. இலங்கையில் ஏற்பட்டுவரும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான காணொளி ஒன்றை பார்த்துக்கொண்டிருந்த ஈசனின் கை அலை பேசி ஒயாது மூன்று தடவைகளுக்குமேல் ஒலித்துக்கொண்டே இருந்தது. வேண்டா வெறுப்பாக அலை பேசியை அழுத்தினார் சத்தியா. ஈசன் ,அது பத்மினி அக்காவின் குரல் என்பதை அறிந்து கொண்டதும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சத்தியாவிடம் இருந்து அலை பேசியை வாங்கியதும் “வணக்கம் அக்கா!என்ன இந்த நேரத்தில போன் எடுத்திருக்கிறீங்க அண்ணைக்கு என்னமாதிரி”என்று அவனே கேள்விகளை கேட்கத்தொடங்கினான்.”வைத்திய சாலையில் இருந்து போன் பண்ணினவை!இவரபார்க்க வரச்சொல்லி !ஐஞ்சுபேருக்குமேல வரக்கூடாதாம்.அந்த வைத்தியசாலைக்கு போறதெண்டால் கார்வேணும் இவர்ர கார்வீட்டிலதான் இருக்கு ஒருக்கா என்னைநாளைக்கு கூட்டிக்கொண்டு போவியே தம்பி!”என்றபடி அழுது அழுது பேசியதை கேட்டு ஈசனும் சத்தியாவும் கூடவே அழுதே விட்டனர்.

மறு நாள். வேளைக்கே ஈசனும் சத்தியாவும் தங்கராசர் வீட்டுக்கு அவசர அவசரமாக வெளிக்கிட்டபோது சின்னவன் தமிழ் “அப்பா அந்தமாமாவை பார்க்க நாங்களும் வரவேணும்,நாங்களும் மாமாவை பார்த்து கன நாளாகுது”என்று அடம்பிடித்தான்.நிசாவோ “மாமா இப்படி நீண்ட நாளாய் எங்களை பார்க்காம இருக்கமாட்டார் நாங்களும் வரப்போறம் “என்று நிசாக்குட்டியும் அடம்பிடிக்க தமிழும் ஒத்து ஊதிக்கொண்டிருந்தான். அதனால் வேறு வழியின்றி அனைவருமாக பத்மினி அக்காவுடன் வைத்திய சாலையை அடைந்திருந்தனர்.


காலை பத்துமணி. வெண்பனி முகத்தின் விறைத்த உடல்மீது எறும்புகள் அரித்துக்கொண்டுருந்தன.

வைத்தியசாலை அலுவலகத்தில் விசாரணை செய்தபோது கோவிட்19 அவசர சிகிச்சைப்பிரிவு பெயர்ச்சுட்டிவழியாக செல்லுமாறு ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டது. நிலைமை தீவிரம் என்பதை பத்மினியக்கா புரிந்திருக்கவேண்டும்.அதனால்தான் அவர்அடக்கிவைத்திருந்த அழுகை அவவையும்மீறி கண்வழியே ஒடிக்கொண்டிருந்தது.பின்னர் தீவிர சிகிச்சைப்பிரிவின் அலுவலகத்தில் விசாரணை செய்தபோது அவர்களை தனியொரு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். ஒரு தாதியரும் வைத்தியருமாக பத்மினியக்காவிடம் வந்து “உங்கள் கணவருக்கு இறுதியாக என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்,அவர் இனி உயிர் பிழைக்கமாட்டார்.அத்தோடு அவர் உங்களுக்கு ஒரு செய்தியை சொல்லும்படி கூறியிருந்தார். தன்னை நினைத்து கவலைப்படவேண்டாம். மரணத்தின் பின் கூட நாம் இணைந்து கொள்வோம்.என்னுடன் இணைந்து இத்தனைகால இன்ப துன்பங்களிலெல்லாம் பங்கெடுத்து சந்தோசமான வாழ்க்கையை தந்தமைக்காக உமக்கு இறுதியாக எனது நன்றிகள் !எங்கள் மக்களுக்கு உதவி செய்யும்பணியில் முழுக்க முழுக்க நீ என்னோடு இருந்தாய். எமக்கு ஒரு நேர உணவு தர இந்த நாடு உள்ளது.எங்களின் மக்களது நிலை அப்படியில்லைதானே பத்மினி.எனது மரணத்தின்பின்னும் உனக்கு கிடைக்கின்ற சிறு தொகையில் ஒரு பங்கை எமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக சேமித்து அனுப்பு,நீ என்னோடு சேரும்வரை நமது பிள்ளைகள் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறி இருந்தார்.

அனைரும் கூடி சில மணி நேர அழுகையின் பின்னர் வைத்தியர்களின் தேற்றுதல்களுக்கப்பால் ஒவ்வொருவருக்கும் உடற்காப்பு உறை, கையுறை, முகக்கவசம் என்பவைகள் வழங்கப்பட்டு தம்பிராசர் இருக்கும் அறைக்கு அருகாமையில் அனைவரும் அழைத்துவரப்பட்டிருந்தனர்.ஒரு கண்ணாடி அறைக்குள் தம்பிராசர் குப்புற வைக்கப்பட்டிருந்தார்.வாயால் விணாசல் தள்ளிக்கொண்டிருந்தது ,கடைவயிறு எக்கி ,எக்கி விரிந்துகொண்டிருந்தது.வைத்தியர் ஏதோ கூறியதும் சிரமப்பட்டு தலையை நிமிர்த்திப்பார்தார்.அவரது உயிர் பிரியும் நிலையை அறிந்து கொண்ட பின்னரும்.அனைவரையும் பார்த்து ஒரு சோகப்புன்னகையுடன் அழுதுகொண்டிருந்த பத்மினி அக்காவிற்கும்,ஈசனுக்கும்,சத்தியாவிற்குமாக அழாமல் இருக்குமாறு சோர்ந்துபோன தன் கைகளால் சைகை காட்டிக்கொண்டிருந்தார்.

ஈசனின் குழந்தை; தமிழ் அவனது ஜக்கற்றில் மறைத்து வைத்திருந்த,வரைந்த சித்திரப்பூவை திடீரென தாதியர் மூலமாக தம்பிராசரிடம் கொடுக்கமுனைந்தான். அப்போது அதனை பறித்துக்கொண்ட நிசா அதன்கீழ் “மாமா இனி எப்ப வீட்டுக்கு வருவீங்க இப்படிக்கு, நிஷாக்குட்டி”. என கிறுக்கி விட்டு தாதியரிடம் கொடுத்து அனுப்பினாள்.தமிழ் வரைந்த சித்திரப்பூவையும் நிஷாவின் கிறுக்கல் கேள்விகளையும் பார்த்துவிட்டு அத்தனை நாளும் தான் மறைத்துவைத்த அழுகையை ஒன்றுதிரட்டி தங்கராசரின் கடைக் கண்களிலிருந்து அசைவின்றி நீர் வடிந்தது. மீண்டும் ஒருமுறை சிரமப்பட்டு குப்புறப்படுத்தபடியே தலையை நிமிர்த்திஅனைவரையும் இறுதியாக பார்த்தார்.அவரது முகத்தில் இத்தனை நாள் தனிமையின் துயரும் நிச்சயிக்கப்பட்ட மரணம்பற்றிய எதிர்பார்பின் சோகமும் அப்பியிருந்தது.மழலைகளை பார்த்தபடியும், சித்திரப்பூவிற்குமாக தனது வலுவிழந்த விரல்களை மாறி மாறி முத்தமிட்டு விடைபெற்றார் தங்கராசர். 

கண்ணாடி அறைக்கப்பால் பத்மினியக்கா கதறியழுததையும் பல்லாண்டு கால திருமணபந்தத்தில் அவர்களுக்குள் மரணம் தந்த பிரிவும் பத்மினி அக்காவை நிலை குலையச்செய்திருந்தது.பத்மினியக்கவை கைத்தாங்கலாக காருக்குள் அழைத்திச்சென்றான் ஈசன்.தங்கராசர் இறுதியாக பார்த்த பார்வையையும், அவர் இன்னும் மரணிக்காமலேயே மரணத்தை நோக்கிச்சென்ற அந்த நிமிடமும் ஈசனின் கண்முன் நிழலாடிக்கொண்டே இருந்தது.


சுபம்.

1 வது கதை"குயில் தோப்பு"


நொய்யல் ஆற்றங்கரையின் ஓரத்தில் நாச்சிவலசு கிராமத்தில் வசித்து வந்தாள் தைலம்மா. மூப்பனுக்கும், வடுகச்சிக்கும் ரோசாப்பூ போல வம்சம் தழைக்க பூத்து நின்ற மகள் தைலம்மா மீது கொள்ளைப்பிரியம். அவர்களைவிட தத்தா வீரய்யனுக்குத் தான் பேத்தி மீது கணக்கில் அடங்காத பாசம்.

தைலம்மா பிறந்த நாளில் மஞ்சக்கொல்லை தாண்டி காட்டுக்குள் கருக்கலில் போகும் பழக்கம் ஆரம்பித்தது வீரய்யனுக்கு. பேத்தி வளர வளர வீரய்யன் தாத்தாவின் காட்டு போக்கு வரத்தும் கூடிக் கொண்டே போனது.

"அப்படி என்ன தான் வயசான காலத்துல காட்டுக்குள்ள வேல?" என்ற மகன் மூப்பனின் கேள்விக்கு புன்முறுவல்தான் பதிலாகக் கிடைக்கும்.

விடிந்து ஆரஞ்சு நிறத்தில் வானம் தெளியத் தொடங்கும் பொழுதில் இடுப்பில் குடுவையைக் கட்டிக் கொண்டு பனந்தோப்பு நோக்கி மூப்பன் கிளம்பும் போது, சொம்பு நிறைய நீச்சுத் தண்ணியை குடித்துவிட்டு காடு நோக்கி வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு கிளம்பிவிடுவார் வீரய்யன் தாத்தா.

"பனி கொட்டுது. இந்த கருக்கல்ல காட்டுல என்ன வேல மாமா?" என்ற மருமகள் வடுகச்சி கேள்விக்கும் புன்னகை தான் பதிலாகக் கிடைக்கும். தனது வயதொத்த கிராமத்து பெரியவர்களிடம் மட்டும், "காட்டுக்குள்ள குயில் தோப்பு இருக்கு. நாள் தவறாம தோப்பை பார்த்து வந்தா தான் நாலு வாய் கஞ்சி இறங்கும்" என்பார் வீரய்யன்.

மூப்பன் இடுப்பு குடுவையில் பதனீர் சீவும் அருவா பெட்டி இருக்கும். ஒரு நாளைக்கு ஐம்பது பனைக்குக் குறையாமல் ஏறி இறங்கிவிடுவான் மூப்பன். மூப்பன் இறக்கும் பதனீரை பானையில் நிறைத்து நாச்சிவலசு கிராமம் முழுக்க விற்று வருவாள் வடுகச்சி. மிஞ்சும் பதனீரை காய்ச்சி கருப்பட்டி ஆக்கி பரணில் சேமித்து வைத்து விற்று காசாக்கிவிடுவாள் கைகாரி வடுவச்சி.

பதனீர் ஊற்றிக் கொடுக்க பட்டை பிடிக்க அளவாக வெட்டிய பச்சை ஓலைகள் குடிசை வாசலில் கிடக்கும். ஓலைகளின் நரம்பில் ஒட்டி இருக்கும் சாமைகள் காற்றில் அசைவதைப் பார்த்தபடியே வளர்ந்தாள் தைலம்மா. நாச்சிவலசு மாதா கோவில் குருத்தோலை ஞாயிறுக்கும், புனித வெள்ளிக்கும் தைலம்மா குடிசையில் இருந்துதான் பனை ஓலை குருத்துக்கள் போகும். தைலம்மா வீட்டு பனை ஓலைப் பட்டையில் கஞ்சி ஊற்றித்தான் மாதா கோவில் திருவிழாவில் கிராமத்து மக்கள் குடிப்பார்கள். தைலம்மா வீட்டு குருத்தோலைகள் தந்த நிறத்தில் மின்னும்.

மேரி மாதாவும் குறைவில்லாத அறிவை தைலம்மாவுக்கு அருளினாள். ஆத்தாவுக்குத் துணையாக கருப்பட்டி காய்ச்ச விறகுக்காக ஓடித் திரியும் நேரம் போக மற்ற நேரங்களில் பாடப் புத்தகத்துக்குள் மூழ்கிவிடுவாள் தைலம்மா. சுக்குக் கருப்பட்டி, புட்டுக் கருப்பட்டி, ஓலைக் கருப்பட்டி என விதவிதமான கருப்பட்டிகளை விற்று தைலம்மாவை படிக்க வைத்தாள் வடுகச்சி. குடிசைக்குள் நீருற்றுப் பெட்டி, பனையோலைப் பெட்டி, பனைப்பாய், கடகம் என விதவிதமான பனைஓலையில் முடையப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக்கும்.

நாளெல்லாம் மூப்பனும், வடுகச்சியும் உழைத்தும் கைக்கும் வாய்க்கும் சரியாகத்தான் இருந்தது. இதெல்லாம் தெரியாமல் சீவப்பட்ட பாளையில் இருந்து பால் சுரப்பது போல தைலம்மா அறிவு சுரந்து கொண்டிருந்தது. பள்ளி இறுதி வகுப்பில் சிறந்த மதிப்பெண் எடுத்த தைலம்மாவுக்க நகரத்து மருத்துவக் கல்லூரியில் எளிதாக இடம் கிடைத்துவிட்டது. கல்லூரி படிப்புக்கு கட்ட வேண்டிய தொகையைக் கேட்டு மூச்சே நின்றுவிட்டது மூப்பனுக்கும், வடுகச்சிக்கும். உடைமர முள் தைத்த வேதனையோடு விட்டத்தை வெறித்து நின்ற மகனையும்,


மருமகளையும் தனது வழக்கமான புன்னகையோடு பார்த்தார் வீரய்யன் தாத்தா. குயில் தோப்பு ரகசியத்தை அன்றுதான் உடைத்தார் தாத்தா. தைலம்மா பிறந்த போது காட்டுப் பகுதி நிலத்தில் பத்து மாமரம் நட்டு வளர்க்க ஆரம்பித்து இருந்தார் வீரய்யன் தாத்தா. மூன்று ஆண்டுகளில் பூத்தும் காய்த்தும் பத்து மரங்களும் தைலம்மாவோடு வளர்ந்து பெரிய தோப்பாக மாறியிருந்தது. வருஷ வருமானத்தை ரகசியமாக சேமித்து வைத்திருந்தார் வீரய்யன் தாத்தா.

பேத்தியை மருத்துவ கல்லூரியில் சேர்க்க கொஞ்சமும் மலைக்கவில்லை வீரய்யன் தாத்தா. மேரி மாதா அருளும், குயில் தோப்பு மாம்பழ வாடையும் அவருக்குள் தித்திப்பாக நிறைந்து இருந்தது.


சுபம்


பண்ணாம்.கொம் 15 வது ஆண்டு விழா சிறுகதைப் போட்டி நடுவர்களின் புள்ளிகள்  வழங்கும் முறை. 

 5 நடுவர்கள் 5 நாடுகளிலிருந்து நடுவர்களாக  கடமைசெய்கிறார்கள் அவர்களை போட்டி முடிந்த பின் விழாவின் போது உங்களுக்கு அறிமுகம் செய்யப்படுவார்கள். இகதைகள் நூல் வடிவம் பெறும். எனவே உங்கள் கதைகளின் பார்வை என  நடுவர்கருத்துக்களும் வாழ்த்துக்களும் நூலில் இடம்பெறும்.


1.கதை சமூகசிந்தனை கொண்டதாக இருப்பின் அதன் தாக்கத்திற்கமைய   புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம்.                          20 % புள்ளி


2. கதை நடைமுறைச் சாத்தியம்கொண்டதாக, யதார்தத்தை உள்வாங்கியதாக இருப்பின்   புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம்.   20 % புள்ளி


3.கதைப் புனைவு ,பாத்திர சித்தரிப்பு ,கதை யோட்டம்.  புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம்.                                                        20 % புள்ளி


4. கதை நூட்பங்கள் ,கவர்ச்சி ,தேவையற்ற விபரிப்பு நீட்சி  புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம்.                                                   20 % புள்ளி


5. கதையின் மொழி நடை ,மொழிப் பண்புகள் , மொழி கையாளும் தன்மை புள்ளிகள் 1முதல் 20 வரை வழங்கலாம்.                           20  புள்ளி

                                                                                                                                                                                                ----------------

                                                                                                                                         மொத்தப்புள்ளிகள்                              100% புள்ளி


தங்களின் தமிழ்ச் சேவைக்கு பண்ணாகம் இணையம் தலை வணங்குகிறது.  அதிஉயர் வணக்கம் எழுத்தாளர் திருமதி.தேனம்மை இலக்‌ஷ்மணன் அவர்களே!

எமது பண்ணாகம்.கொம் (யேர்மனி) இணையத்தின் 15வது ஆண்டு நிறைவு சிறுகதைப்போட்டியின் நடுவராக எமது அன்பு வேண்டுதலுக்கு தாங்கள் இணைந்ததையிட்டு பண்ணாகம் இணையம் முதலில் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவிக்கிறது.

இத்துடன் முதல் இரண்டு கதைகள் அனுப்பப்படுகிறது . இதற்கு எமது புள்ளியிடும் முறையும் அனுப்பப்படுகிறது. அந்த அடிப்படையில் புள்ளிகளை  அனுப்பி வையுங்கள். மிக்க நன்றிகள்.    எமது போட்டி முடிவு திகதி  21.3.2021 ஆகும்.
அன்புடன்