WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

சிறப்பு பதிவுகள்

இது என் தலைவிதி அல்ல

ஏலையா க.முருகதாசன்


தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் தானுகா தனது தோழி சுகந்தினியுடன்.

'சுகந்தினி, கல்யாணம் செய்யாமலும் வாழலாம் உடலின் தேவைதான் வாழ்க்கையல்ல, மனசுதான் வாழ்க்கை'

'அப்ப நீ ஏன் கல்யாணம் செய்தனி'

'என்னை ஒருத்தர் காதலிச்சார்,போனால் போகுதென்று அவரைக் கல்யாணம் செய்தன்'

'தானுகா நீயும் அவரை காதலிச்சனிதானே'

'அவர் காதலிச்சார் நானும் காதலிச்சன்'

'தானுகா பூசி மழுப்பிக் கதைக்காதை, உடலின் தேவை முக்கியமில்லையென்றாள் எப்படி குழந்தை பெத்தனி'

'பரம்பரைக்கு பிள்ளைகள் தேவையென்றதால்'

'ஓகோ.......அப்படியா, அப்ப உன்ரை உடலும் அவற்றை உடலும் ஒன்று சேராமல் எப்படி பிள்ளைஉருவாகினது!

'நீ விதண்டாவாதம் செய்கிறாய்'

'நான் விதண்டாவாதம் செய்யவில்லை யதார்த்தத்தைச் சொல்கிறன் நீதான் மனச்சாட்சியே இல்லாமல் நடக்கிறாய் பேசுகிறாய்'

அப்பொழுது கட்டிலில் படுத்திருந்த தானுகாவின் மூன்று வயதுக் குழந்தை சகிலா அழ, இவ்வளவு நேரமும் தங்கை பேசுவதை சோபாவில் உட்கார்ந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த பரிமளத்திடம் குழந்தையைப் பார்க்கும்படி சைகை காட்ட அவள் எழுந்து போகிறாள்.பேச்சைத் தொடர்கிறாள் தானுகா'

'சகிலா அழுதாள் அக்காவைப் போய்ப் பார்க்கச் சொல்லிட்டன் நீ சொல்லு, நான் என்ன மனச்சாட்சியே இல்லாமல் கதைக்கிறன் என்கிறாய், நான் என்ன பிழை விட்டனான்'

'உன்னுடைய அக்கா பரிமளத்திற்கு முப்பத்Nழு முதிர்கன்னியாகி நிற்கிறாள், அவளுக்கு எத்தனை சம்பந்தம் வந்தது எல்லாத்தையும் குழப்பினவள் நீதானே, ஒரு விசயம் கேட்டுக்கொள் நீ எனக்கு தோழியாக இருக்கலாம், ஆனால் எப்பவும் நீ செய்யிற எல்லாத்துக்கும் உனக்கு ஆதரவாக இருப்பன் என்று நினைக்காதை'

மறுமுனையில் சுகந்தினியின் குரல் ஒங்கவே தானுகா சொல்லிக் கொள்ளாமல் தொலைபேசியை சடக்கென்று வைத்துவிடுகிறாள்.

ஜேர்மனிக்கு பெற்றோருடன் வந்த பொழுது பரிமளாவுக்கு வயது ஏழு,சுகந்தினிக்கு வயது நான்கு.ஜேர்மனியில் முப்பத்துமூன்று வருடங்களை வாழ்ந்து முடித்த பெற்றோர் தமது உடலுக்கு ஜேர்மனியின் பருவகாலநிலைகள் ஒத்துவராது என்று ஊருக்குப் போய்விட்டார்கள்.பரிமளத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்பதில் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் நடக்கவில்லை.

பேசிக் கல்யாணம் செய்யலாம் என்றால் இளைஞர்களின் எதிர்பார்ப்பு வியப்பாக இருந்தது.சிலர் வெள்ளையாக இருக்க வேண்டும்,உயரமாக இருக்க வேண்டும்,மூக்கு நீளமாக இருக்க வேண்டும், தலைமயிர் நீளமாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும் வேலை செய்யும் பெண்ணாக இருக்க வேண்டும் என்றனர்.

இவற்றில் எதிலுமே பரிமளாவைப் பொருத்த முடியவில்லை என்பது அவளின் தங்கை தானுகாவின் கருத்து.மாநிறம் அளவான உயரம் களையான முகம் இவைதான் பரிமளா.தமக்கைக்கு கல்யாணம் நடக்கவில்லையே என்று தானுகா கவலைப்படவில்லை.கோபப்பட்டாள் தமக்கைமீது எரிச்சல்பட்டாள்.தான் காதலித்தவரை கெதியிலை கல்யாணம் செய்வதற்கு தமக்கைதான் இடைஞ்சல் என எண்ணிக் கொண்டு தமக்கை மீது எரிந்துவிழுந்து கொண்டிருந்தாள்.சாடைமாடையாக தமக்கையின் அழகை கிண்டலடிப்பதும்,'உன்ரை அழகின்ரை திறத்திலை உனக்கு மாப்பிள்ளை கிடைக்குமென்று நினைக்கிறியோ' என பரிமளாவை வேதனைப்படுத்துவாள்.ஊருக்குப் போய் அப்பா அம்மாவுடன் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த போதும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதாலும் தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தாய் தகப்பனுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாலும் அவளால் போக முடியவில்லை.

தாய் தகப்பனை வற்புறுத்தி தங்கைக்கு காதலிச்சவனையே கல்யாணம் செய்து வைத்தாள்.'அக்கா நீ கல்யாணம் செய்யாமல் இருக்கிற போது நான் உனக்குத் தங்கச்சி உனக்கு முந்தி எப்படியக்கா செய்வது என்று தானுகா நடித்தாள் நீலிக்கண்ணீர் வடித்தாள்'.தனது தங்கை நடிக்கிறாள் என்று தெரிந்தும் தெரியாதது போலிருந்தாள் பரிமளா.

தமக்கைக்கு எல்லாம் பொருந்தி வந்த நிலையில்கூட மாப்பிள்ளை பொருத்தமில்லையென்று பொருந்தின சம்பந்தம் எல்லாவற்றையும் தானுகா குழப்பினாள்.அவள் குழப்பினதுக்கும் தானும் கணவரும் வேலைக்குப் போனால், தமக்கைக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தங்களுடைய பிள்ளையை தமக்கை பார்ப்பாள் என்ற சயநலமும் காரணமாக இருந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிமளத்திற்கு ஒரு சம்பந்தம் பேசி, பரிமளத்தை பெண் பார்க்க கம் அம்மன் கோவிலுக்கு வந்திருந்தான் கணேசன்;. கணேசனுக்கு பரிமளத்தை பிடித்துவிட்டது.அங்கேயே தனது விருப்பத்தை தெரிவித்துவிட்டான்.

பரிமளா, பரிமளாவின் தங்கை தானுகா, தானுகாவின் கணவன் ரூபன் தானுகாவின் தோழி சுகந்தினி என எல்லோரும் கம் அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.பரிமளாவிற்கு கணேசனை பிடித்துவிட்டது.தோழி சுகந்தினி தானுகாவின் கணவன் ரூபனுக்கும் கணேசனைப் பிடித்துவிட்டது.ஆனால் தானுகாவிற்கு பிடிக்கவில்லை.

கணேசனின் முகத்திலடித்தமாதிரி வீட்டுக்கு போய் அறிவிக்கிறோம் என சொல்லிவிட்டு தானுகா தமக்கை கணவன் சுகந்தினியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.கணேசன் தனியாகவே இங்கே இருந்தான்.பெற்றோர் ஊரில் இருந்தார்கள்.அவனுக்கு அவனேதான் ஆறுதல்.

கணேசனைப் பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருக்கையில் 'நீ ஏன் அங்கேயே பதில் சொல்லாமல் வீட்டுக்குப் போய் அறிவிக்கிறம் என்று சொன்னனி, கொக்காவிற்கு பிடித்துவிட்டதுதானே என ரூபன் சொன்னதை சுகந்தினியும் ஆமோதித்தாள்.

'அவரைப் பார்த்தியே தலையிலை ஒரு மயிர்கூட இல்லை, முழு மொட்டை, கலரும் ஆபிரிக்கக் கலர் அது சரிபட்டு வராது என மிக ஆவேசமாகச் சொன்னாள்.சொன்னவள் அத்துடன் நிறுத்தியிருக்கலாம்'என்னையும் உங்களையும் பாருங்கள் சோடிப் பொருத்தம் சரியா அமைஞ்சிருக்கு என்றாள.;இது மேலும் பரிமளாவை வேதனைப்படுத்தியது.தனது தோழி வேண்டுமென்றே தமக்கையின் சம்பத்தத்தை குழப்புகிறாள், குழப்பி வேதனைப்படுத்துகிறாள் என்று சுகந்தினி புரிந்து கொண்டாள்.

இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் பரிமளம் தனது தொழிற்சாலைச் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணேசனைக் கண்டாள். லொறிச் சாரதியான கணேசன் தனது தொழிற்சாலையிலிருந்து சில பொருட்களை பரிமளா வேலை செய்த தொழிற்சாலைக்குக் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்தான்.அவன் முன்னால் போய் உட்கார்ந்து தான் கொண்டு வந்து பாணைச் சாப்பிட்டபடியே அவனுடன் பேசிக் கொண்டிருந்த பரிமளா இன்னும் கணேசன் கல்யாணம் செய்யவில்லை என்பதை அறிந்து கொண்டாள்.

நிறையவே இருவரும் பேசினார்கள்.அவளிடம் விடைபெற்றுச் செல்லும் போது தயங்கித் தயங்கி ' நீங்கள் விரும்பினால் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம், தயங்கித் தயங்கி கண்ணீர் விடுவதைவிட திடமான முடிவை நீங்கள் எடுங்கள் 'எனச் சொல்லிவிட்டு கணேசன் போய்விட்டான்.

ஒரு திருமணத்துக்கு போய்விட்டு தானுகாவும் கணவனும் அவர்களின் குழந்தையுடன் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த போது அங்கே பரிமளாவைக் காணவில்லை.மேசையில் ஒரு தாள் மடித்தபடி இருந்தது.அதைத் தானுகா வேகமாக எடுத்து வாசித்தாள்.

தங்கச்சி தானுகா

இது நான் எடுத்த சொந்த முடிவு.முதிர்கன்னியாகிக் கொண்டிருக்கும் நான் இது எனது தலைவிதியென்று இவ்வுலக வாழ்வை வாழ்ந்து இறக்க முடியாது.உன்னைப் போல எனக்கும் பசி தாகம் இருக்கிறது. உன்னுடைய சுயநலம்பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அதைப் பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.என்னைப் பெண் பார்த்த கணேசனுக்கு மனைவியாக வாழ அவர் வீட்டுக்கு போகிறேன்....

உன்னுடைய அக்கா

கடிதத்தை படித்து முடித்ததும் வீடே அதிரும்படி 'மானம் போச்சுது மரியாதை போச்சுது குடும்ப கௌரவமே போச்சுது இனி வெளியிலை தலைகாட்ட முடியாது' என்று பத்திரகாளியாக நின்றாள்.தானுகா கசக்கி எறிந்த தாளை ரூபன் எடுத்துப் படித்தான்.அவன் முகத்தில் ஒரு நிம்மதி தென்பட்டது, மனைவியின் பக்கம் திரும்பி 'கொக்கா எடுத்த முடிவு சரியானதுதான். ஒருத்தற்றை மானமும் போகாது மரியாதையும் போகாது.உன்னோடு இருந்தால் கொக்கா கிழவியாகும் வரை அப்படியே இருக்க வேணடியதுதான், சத்தம் போடாமல் இரு என்றான்.

கணவன் சொன்னதைக் கேட்டதும் இன்னும் ஆவேசமானாள் தானுகா.சுகந்தினிக்கு தொiபேசியை எடுத்து' தெரியுமா என்ரை அக்கா செய்த வேலையை' என்றாள் தொலைபேசியில்.மறுமுனையில் 'தெரியும்' என்றாள் சுகந்தினி.'ஓகோ அப்ப உனக்கும் தெரியும், என்னெண்டு உனக்குத் தெரியும்' என்று கத்தினாள்.'என்னோடு கதைச்சவ நான்தான் துணிஞ்சு முடிவெடு 'என்றனான்.'அப்ப நீதான் மாமா வேலை பார்த்திருக்கிறாய்' என்றாள் தானுகா. 'வாயை மூடு பரிமளாக்கா தனது வாழ்க்கையைத் தீர்மானித்தவிட்டாள். பத்துப் பேருக்கு சொல்லிக் கல்யாணம் செய்வதும் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைப்பதற்கே.பரிமளாக்கா தனக்கு விருப்பமான ஆணை கணவனாக ஏற்றிருக்கிறாள்.இதுவும் கல்யாணந்தான்.உன்னுடைய அக்காவுக்கு வயது பதினாறல்ல முப்பததேழு புரிஞ்சு கொள், வை ரெலிபோனை 'என்று சுகந்தினி சொல்லிக் கொண்டே ரெலிபோனை வைத்தாள். ஏதோ நல்லது நடந்தது போன்றிருந்தது சுகந்தினிக்கு.


கண்ணீரைத் துடைக்கவா சான்றிதழ்?
ஏலையா க.முருகதாசன்

ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து குடிகொண்ட நாடுகளெங்கும் ஆங்காங்கே மௌனமான அழுகைகளுடனும், யாருமே கண்டு கொள்ளாத வகையில் கண்ணீர்த்துளிகளை துடைக்கும் கைகளுமாக நூற்றுக் கணக்காண பெண்கள் சிரிப்பென்னும் போர்வையுடன் வாழ்கின்றனர் அல்லது காலங்கழிக்கின்றனர்.
புலம்பெயர்ந்து வந்தவர்களில் குடும்பமாக பிள்ளைகளுடன் வந்தவர்கள் எனவும்  திருமணமாகாத இளைஞர்களாக யுவதிகளாக வந்தவர்களும் ஆயிரத்தைத் தாண்டியவர்கள்.
காலவோட்ட நகர்வில்,இளைஞர்களும் யுவதிகளும் தமக்கான துணையை திருமணம் என்ற உறவு நிலைக்கூடாக தேடிக்கொள்ள வேண்டியிருந்தது.
புலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் யுவதிகளுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக தாயகத்தில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளும் இருந்தனர்.
இங்கு வந்த இவர்கள் தாங்கள் கற்ற துறைசார் கல்வியுடன் அக்கல்விக்கேற்ற பணியினைத் தேடிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர்.அதற்குக் காரணம் அந்தந்த நாடுகளிலுள்ள அமாழிகளிலும் துறைசார் கல்வியைக் கற்றால் மட்டுமே அதற்குரிய பணி கிடைக்கும் என்ற நிலையிருந்தது.
பட்டதாரியாக வந்த ஆண்கள் பலர் உணவு விடுதிகளிலும் வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.அரிதான பட்டதாரிப் பெண்களுக்கும் அதே சூழ்நிலைதான் ஏற்பட்டது.
திருமணம் என்று வந்தவுடன் பட்டதாரிப் பெண்கள் தமக்கான துணையை தேடிக் கொண்டனர்.பட்டதாரிப் பெண்கள் தாங்கள் கற்றுக் கொண்ட கல்வியை எந்த ஒரு இடத்திலாவது பிரதிபலிக்க முடியாத நிலைக்கு உற்பட்டனர்.
துறைசார் கல்வியென்பது பல்வேறுபட்ட பாடங்களைக் கொண்டிருந்தாலோ அல்லது  பல பாடங்களை கொண்டதாக தாம் கற்றுக் கொண்ட கல்வியாக இருந்த போதிலும், தாங்கள் பெற்றக் கொண்ட கல்வியை மேம்படுத்த முடியாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர் இருந்தும் வருகின்றனர்.
ஒரு பாடம் நோக்கிய கல்வியென்பது பரீட்சையில் வெற்றியடைவதுடன்  நின்றுவிடுவதில்லை. அந்தப் பாடம் கற்றுக் கொண்டவரின் சிந்தனையை கிளர்ந்தெழச் செய்து புதிது புதிதாய் எண்ணங்கள் தோன்ற வழிவிடும்.
அதற்கான வடிகாலாக ஊடகங்களில் எழுதுதல் பொது மேடைகளில் பேசுதல்,பயிற்றுவித்தல்;; என்பன கைக்கெட்டிய தூரத்தில் இருந்து போதும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாத பட்டதாரிப் பெண்கள் பலர் இருக்கவே செய்கின்றனர்.
யுவதிகளாக வந்த பட்டதாரிப் பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் அவர்களுடைய கல்விநிலையின் காத்திரத்தையோ அதனால் சமூகம் பெறப் போகும் நன்மையையோ அறிந்திருக்கவில்லை என்று சொல்வதைவிட தங்கள் மனைவியின் கல்வியை உதாசீனம் செய்தார்கள் அல்லது அவர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்தார்கள் என்றே சொல்லலாம்.வீட்டு வேலைகளைச் செய்து கொள்வதற்கும் இனவிருத்திக்குமாக மட்டுமே அவர்கள் மனைவியென்ற பெயர் தாங்கி வாழுகின்றனர்.
இன்னொரு வகைப் பெண்கள் எவர்களென்றால் புலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் தமக்கான துணையை திருமண உறவு மூலம்  தேடிக் கொண்ட பட்டதாரிப் பெண்கள்.
புலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் தமது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஊரிலேயே பெண்ணைத் தேர்வு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தல்  இதில் இரண்டு விடயங்கள் உண்டு. முதலாவது சில பட்டதாரிப் பெண்கள் தங்கள் கல்வியின் மூலம் தாங்கள்  செய்து வந்த பணியினை தூக்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை, வெளிநாடு என்ற ஆசையுடன் வந்தவர்கள்.
இரண்டாவது தாயகத்தில் திருமணம் பேசப்பட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக தடைப்பட வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சாதகம் பொருந்த அதனால் திருமணம் செய்து கொள்ள வந்தவர்கள்.
பட்டதாரிப் பெண்கள் மட்டுமல்ல துறைசார் பணியினைச் செய்த பல பெண்கள் தமக்குரிய ஆற்றலை வெளிப்படுத்த முடியாதவர்களாக குடும்ப வட்டத்திற்குள் முடங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.
இத்தகையானவர்களுடைய ஆற்றல்கள் தடைப்படுவதற்கும் அவை பிதிபலித்துப் போகாமல் இருப்பதற்கு பட்டதாரிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட ஆண்களும் பெரும் காரணமாகவிருக்கின்றனர்.
தனது மனைவி பெற்றுக் கொண்ட கல்விக்கமைய அதனை வெளிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா அல்லது அதற்கான களம் இருக்கின்றதா என கண்டறிந்து தனது மனைவிக்கு ஒத்துழைப்பு வழங்க கணவன் மறுக்கிறான்,வேண்டுமென்றே மறுக்கிறான் என்றே சொல்லலாம்.
தன்னைவிட தன் மனைவி கல்வியாளளாக இருப்பது அவனுக்கு தாழ்வுமனப்பான்மையாக இருக்கின்றது. அதனால் குடும்பத்தைப் பார் என்ற என்ற குடும்பச் சுமையை அவளின் தலையில் போட்டுவிட்டு மனவியின் கல்வித் தகுதியை தேவையற்ற தகுதியாக்க முயல்கிறான்.
மனைவி தனது கல்விபற்றி ஏதாவது கதைத்தாலோ ' அப்படியென்றால் அங்கேயே இருந்திருக்கலாந்தானே' என பொறுப்பற்ற விதத்தில் பதிலஇ சொல்லி  மனைவியின் உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்கிறான்.சான்றிதழ்களை வைத்து நாக்கை வழிக்கவா முடியும் எனச் சொல்லுகின்ற ஆண்களும் இருக்கவே செய்கின்றனர்.
யுவதிகளாக வந்த பட்டதாரிப் பெண்கள்,தாயகத்தில் திருமணம் செய்ய முடியாத நிலையில் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து திருமணம் செய்த பட்டதாரிப் பெண்கள்,வெளிநாட்டு ஆசையில் செய்து வந்த பணியினை தூக்கிப் போட்டுவிட்டு வந்த பட்டதாரிப் பெண்கள் இவர்கள் தமது கல்வி வீணாகிப் போவதை நினைத்து கவலைப்படாமல் இருப்பதில்லை.
சமூகத்தோடு பழகும் போது'பரவாயில்லை' என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லி தமது இயலாமையை மென்று விழுங்கிச் சீரணித்தாலும், போலிக்குச் சிரித்தாலும் ஆணாதிக்கத்திற்கள் இவர்களின் ஆசைகள் உணர்வுகள் சிதைந்து உருக்குலைந்து போவதை இவர்கள் அறிவார்கள்.
தங்களின் பட்டப்படிப்புச் சான்றிதழை அவ்வப்போது எடுத்துப் பார்த்து நினைவுகளை மீட்டி பெருமூச்சு மட்டுமே அவர்களால் விடமுடியும்.
கண்ணீரைத் துடைக்கவா சான்றிதழ் பெற்றோம் எனக்குமுறியழும் ஓசை அவர்களின் இதயத்திற்கு மட்டுமே கேட்கும்.

----------------------------------------