WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

     காசியின் கதைக்களம் 2

   தொடர்கதை -2   

விடியலில் மலரும் பூக்கள் 

பண்ணாகம் இணையப்பக்கத்தில் பதிவில் உள்ள

கதைப் பகுதிகள் 1,2,3,4,5,6,7,8,9

தொடரும்...

Click to edit table header
பண்ணாகம் கொம் வழங்கும்
பிரபல கதை ஆசிரியர் வண்ணத்துப்பூச்சி  காசி அவர்கள் எழுதிய

` விடியலில் மலரும் பூக்கள்  ``கதை தொடராக பண்ணாகம் இணையத்தில் 1.5.2019 இருந்து வலம்வருகிறது. இக்கதையை எவ்வளவோ சிரமங்கள் மத்தியில் பிரசுரிக்க எழுத்தாளர் எழுதி வருகிறார்.  வாசித்த பின் இக்கதைபற்றிய உங்கள் கருத்துக்களை இரண்டு வரியாவது எழுதுங்கள். இதன்மூலம் நீங்கள் தமிழ் எழுத்தாளரை மேலும் ஊக்கமளிக்கலாம்

உங்கள்கருத்துகள் விமர்சனங்களை  17 62 38 26 260 என்ற இலக்க  வைபர் viber, வாற்ஸ்அப் whats App  மூலமும் தயவு செய்து எழுதுங்கள். அல்லது ekk.moorthy@gmx.de  என்ற Email மூலமும்அனுப்பலாம்.  
நன்றி` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 24

17.10.2019எலியும் பூனையும்

பங்குபற்றும் பாத்திரங்கள்        

ஜானகி 
யசோ  
கண்ணன்  
வேணி  

'பரதனைத் தெரியும். நல்லாத் தெரியும்.'

'சொன்னபடி கேட்பார். சோலிக்கு வரமாட்டார். பாவம் எவ்வளவு கெட்டிக்காரன்... நல்ல எண்ணங்கள் நிறைந்தவர். பொருத்தமில்லாத பொம்பிளையைக் கட்டினதாலை ஏமாந்து, வாழ்க்கையை இழந்து... பெத்தபிள்ளைகள் டேய்! என்று ஏசுமளவுக்கு பாதாளத்தில் தள்ளப் பட்டு வீழ்ந்து கிடக்கிறார். அந்த மனிசனை நிமிர்த்திவிட உங்களாலை முடியும்.'

'யசோ நீ நல்லாக் கதைக்கிறாய்! ஆமா, அவரைப் பற்றி இவ்வளவு விபரங்கள் எப்பிடித் தெரிஞ்சு வைச்சிருக்கிறாய்?'

'கோகுலன் கொஞ்சம் சொன்னவர், மிகுதியை நேரில் சந்திச்சுத் தெரிஞ்சு கொண்டனான்.'

'பொல்லாத துணிச்சல்காரியா இருக்கிறாய்!'

'பெண்டாட்டியை விட்டிட்டிருக்கிற ஆம்பிளையள் எல்லாரும் என்ன பொல்லாதவையே...?'

'அப்பிடிச் சொன்னனானே?'

'அப்ப ஏன் யோசிக்கிறீங்கள்..? நானும் நீங்களும் பெட்றூமுக்கை படுக்கலாம். பரதன் என்ரை றூமுக்கை இருக்கலாம்.. பிள்ளையளும் சந்தோசப்படுவாங்கள்! ஓமெண்டு சொல்லுங்கோ அக்கா!' என்று கெஞ்சினாள் யசோ.

'எடி! பொம்பிளையள் இரண்டு பேர் நாங்கள் இருக்கிற வீட்டிலை ஒரு ஆம்பிளை... ஒரு சொந்தபந்தமில்லை... இருக்க வைச்சால் பாக்கிற சனத்துக்கு என்ன பதில் சொல்லுறது...?'

'என்னக்கா கேள்வியிது? சனத்துக்குப்பயந்து கொண்டிருக்கிறியள்.'

'மானம் மரியாதை எண்டதுக்குத் தலை வணங்கத்தானே வேணும்!'

'தலை வணங்கிறம்தானே அக்கா. சமுதாயத்துக்கு மாறா நடக்கிறமே... இல்லைத்தானே! நீங்கள் கணவரை இழந்து இத்தனை ஆண்டுகளாய் தனித்து வாழுறீங்கள். பரதனின் மனைவி இன்னொருத்தனோடை ஓடிப்போய்  விவாகரத்துச் செய்து, வேறொருத்தனைக் கல்யாணம் செய்து, பிள்ளையும் பெற்றுச் சந்தோசமா இருக்கிறாள். நீங்கள் இரண்டுபேரும் கல்யாணம் செய்யிறதிலை என்ன பிழையிருக்கு....?'

'நான்தானே சொல்லியிட்டன்... கலியாணம் செய்ய என்னாலை முடியாதெண்டு...!'

'நீங்கள் சொன்னனீங்கள்.. உங்கடை மனதிலை இன்னொரு ஆம்பிளைக்கு இடமில்லையெண்டு... அதைக் காப்பாற்றுங்கோ! ஆனால் கலியாணம் செய்து ஊர்வாயை மூடுங்கோ! அவரும் நீங்களும் நல்ல பிறன்ட்ஸாக இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ! சமூகத்திலை மதிப்போடை, கௌரவமா இருக்கலாம். எல்லாத்தையும்விட பிள்ளையளுக்குப் பெரிய பாதுகாப்பு. இதையெல்லாம் ஏன் சிந்திக்க மாட்டன் எண்டுறியள்?
செத்தவை திரும்பி வரப்போறேல்லை. உயிரோடை இருப்பவை யின்ரை சோகத்தைப் பகிர்ந்து கொள்வதாக நினையுங்கோவன்!'

ஜானகி பதில் சொல்லாமல் இருந்தாள்.

'அக்கா! அடுத்தவைக்குப் பயந்து நாங்கள் வாழமுடியாது. லவன், குசனுக்கும் பரதனிலை நல்ல விருப்பம். உங்களுக்கே தெரியும்.'

'இரண்டாம்; கலியாணம் எண்டதை என்னாலை நினைச்சுக்கூடப் பார்க்க முடியேல்லை.'

'ஏன் நினைக்கிறீங்கள்...ஓமெண்டு செய்யுங்கோ! ஊர்உலகத்திலை நடக்காததே... பிளீஸ் அக்கா!'

'உன்னட்டையிருந்து லேசிலை தப்ப முடியாது. எல்லாவித ஆயுதங்களையும் காட்டி என்ரை வாயை அடைச்சுப் போட்டாய். எண்டாலும் என்னாலை இப்ப பதில் சொல்ல முடியாது. என்னை வற்புறுத்தாதை!' என்றாள் ஜானகி.

அதற்கு மேலும் இந்த விடயத்தைப்பற்றி அவளுடன் கதைத்துப் பிரயோசனமில்லை என்று நினைத்தவளாய்,
'ஓ.கே இனி உங்கடை விருப்பம்.. ஆனால் இராகுலனுக்கு ஒரு பாடம் படிப்பிக்காட்டி அவன் உங்களுக்குத் தொல்லை தந்து கொண்டேதான் இருப்பான்.' என்று எச்சரித்தவளாய் தன் அறைக்குச் சென்றாள் யசோ.


'ரதிக்குப் பெரிய வாய் தானேயொழிய வேறை ஒண்டுமில்லை. நாளைக்கே வேலை எடுக்கலாம் எண்டமாதிரி விளாசித்தள்ளிவிட்டு இண்டைக்குச் சொல்லுறாள், கொஞ்சநாள் பொறுத்து வந்து கேட்டுப்பாக்கட்டாம்.' என்றாள் வேணி கண்ணனைப் பார்த்து.
அவன் வேலையால் வந்து பாத்றூமுக்குள் உடுப்பு மாற்றிக் கொண்டிருந்தான்.

'நீங்கள் எங்கையாவது கேட்டுப்பாருங்கோ!' என்று குரலை இறக்கிக் கேட்டாள்  வேணி.

'பேசாமல் கிட! வேலையும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம்' என்று எச்சரித்தான் கண்ணன்.

'நான் இங்கை முழுநாளும் என்னப்பா செய்யிறது?'

'வீட்டுவேலையைச் செய்! நேரம் தன்னாலை பறந்து போயிடும். பிள்ளை பிறந்தால் அதைக் கவனிக்கவே நேரம் பத்தாது.'

'இப்ப ஏன் பிள்ளைக்கதையைத் தொடங்குறீங்கள்? நான் இப்போதைக்குப் பிள்ளை வேண்டாமெண்டு சொல்லிப்போட்டன். என்னை வேலைக்குப் போக ஓமெண்டு விடுங்கோ! இல்லாட்டிப் பறவாயில்லை நான் போவன்!'

'போ! நல்லாப்போ! கையோடை ஒரு வீட்டையும் பார்! அங்கேயே போய் இரு! இஞ்சை வரவேண்டாம்.'

'என்ன வேறை வீடு பாக்கட்டோ...? இப்பிடிச் சொன்னாப் பயந்திடுவன் எண்டு பாக்கிறீங்களோ...?'

'உன்னைப் பயப்பிடுத்தி எனக்கு என்ன லாபம்.. ஒழுங்கா வீட்டிலை இருந்து, பிள்ளையைப் பெத்து வளர்! நான் வேலைக்குப் போய் உழைச்சுத்தாறன்.'

'கலியாணம் கட்டின உடனை பிள்ளையைப் பெத்திட்டு வீட்டுக்குள்ளை அடைஞ்சு கிடக்கட்டே...?'

'ஏன் அடைஞ்சு கிடக்கிறாய்? பிள்ளையைக் கூட்டிக்கொண்டு பார்க்கிற்குப் போ!'

'என்னப்பா கிரந்தக்கதை கதைக்கிறீங்கள்...?'

'வேலையாலை வந்த என்னை கொஞ்சம் சும்மா இருக்கவிடு! அரிப்பெட்டி போட்டுக் கொண்டிருக்காதை!'

'நான் கதைக்கிறது உங்களுக்கு அரிப்பெட்டி போடுற மாதிரி இருக்கோ?'


'அரிப்பெட்டியைவிட மோசமாக் கிடக்கு! பின்னையென்ன வேலைக்குப் போகவேண்டாமெண்டால் கேக்கவேணும். அதை விட்டிட்டுத் திருப்பித் திருப்பிக் கேட்டுக்கொண்டிருந்தா...?'

'ஏன் வேண்டாமெண்டுறீங்கள்..!'

'கலியாணம் கட்டினால் நேரகாலத்துக்குப் பிள்ளையைப் பெற வேணும்.'

'இரண்டுவருசம் வேலை செய்திட்டுப் பிறகு பெத்தாலென்ன...?'

'என்னோடை அப்ப வந்தவங்களைப் பார்! இரண்டு மூண்டு பிள்ளையளைப் பெத்து, நல்லா முன்னேறி இருக்கிறாங்கள். நாங்கள் இன்னும்  நாளைப் பிற்போட்டா...?'

'ஏன் நான் வேலைக்குப் போனால் காசு வராதா...முன்னேற மாட்டமா? என்ன பாவம் செய்து உங்களிட்டை வந்து கழுத்தை நீட்டினேனோ தெரியாது! சிக்... இந்த உலகத்திலை எத்தினை வடிவான வசதியான பெடியன்கள் இருக்க, உங்களைக் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டிக்கிடக்கு!'

'ஏன் மாரடிக்கிறாய்... விட்டிட்டுப் போவன். இஞ்சை நீ இல்லையெண்டு  ஆர் அழுகிறது...?'

'கழுத்திலை தாலியைக் கட்டி, சீதனத்தையும் வாங்கிப் பொக்கற்றுக்கை போட்டுக்கொண்டு, போற எண்டாப் போகட்டோ...? நீங்கள்  எல்லாம் ஒரு ஆம்பிளை, உங்களுக்கெல்லாம் ஒரு கலியாணம்...' என்றவள் கதவை அடிச்சுச் சாத்திவிட்டுப் போனாள்.

ஒரு பெருமூச்சு விட்டான் கண்ணன். கல்யாணம் என்றது எவ்வளவு சுகமான இன்பமளிக்கும் ஒரு நிகழ்வு... அவனைப் பொறுத்தவரை ஈட்டியும் வாளுமாக... இரவும் பகலும் புரியும் யுத்தகளமாக இருந்தது.

கதவைக் கோபத்தில் சாத்திவிட்டுப் போனவள் என்ன செய்யப் போறாள்... நிஜமாகப் போனால்... என்ற பயம் வளர, அவசரமாக எட்டிப் பார்த்தான். வேணி சமையலறைக்குள் சாப்பாடு சூடாக்கிக் கொண்டிருந்தாள்.

நிமிர்ந்து பார்த்துவிட்டு, 'சாப்பிட்டுப் படுக்கப் போறீங்களோ?' என்று கேட்டாள்.
'இல்லை... ஏன் கேக்கிறீர்...?' என்றான்.

'அண்ணை சிலோனாலை வந்திட்டார். போட்டு வரலாமெண்டு நினைச்சன்.'

'போட்டு வருவம்!' என்று சாப்பிட உட்கார்ந்தான்.
'இவள் ஒரு வித்தியாசமானவள். அடியாபிடியா எண்டாள், இப்ப அறுசுவையுடன் உணவு படைக்கிறாளே! நல்லாயிருக்கு எண்டு சொல்லப்போனால் நக்கலாகச் சொல்லுறதாய் நினைத்து, பிறகும் சண்டையை வளர்ப்பாள்.' என்று எண்ணியவனாய் மௌனமாகச் சாப்பிட்டான்.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 23

11.10.2019


வேணி வேலைக்குக் போகப்போறாள்?

பங்குபற்றும் பாத்திரங்கள்        

பரதன்  
ஜானகி 
யசோ  
இராகுலன் 
கண்ணன்  
வேணி  

'ஜானகி வந்தால் செய்யலாம். இல்லாட்டி இப்பிடியே இருப்பன். பிள்ளையளையெல்லே அவள் வெறுக்கச் செய்யிறாள். ஏனெண்டே தெரியேல்லை...!'

'இப்பிடியானவைக்கு முன்னாலை நீங்கள் வாழ்ந்து காட்டவேணும். தலை குனியாமல் நிமிர்ந்து நடந்து காட்டுங்கோ! அதைப் பார்த்து அவை தலை குனிவினம்!'

'என்ரை பிள்ளையளை என்னட்டை விட்டாளெண்டால் அதுகளை நான் ராஜாவீட்டுப்பிள்ளைகள் மாதிரி வளர்த்துக் காட்டுவன்.. உங்களைப்போல!'

'என்ரை பிள்ளையள் ராஜாவீட்டுப்பிள்ளையள் மாதிரி வளர்றாங்கள் எண்டுறீங்கள்!'

'நிச்சயமா..!'

'தாங்ஸ்! அவர் இல்லை எண்ட குறையைப் பிள்ளையள் உணரக்கூடாது எண்டு நிறைய முயற்சி எடுத்தன்... அவள் கண்கள் நனைந்தன.'

'என்ரை பிள்ளையள் என்னோடை இருந்தா முதல் வேலையை விட்டிட்டு பாட்ரைம் வேலை ஒண்டைத் தேடிச் செய்து கொண்டு வீட்டோடை இருந்து பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்குவன்.' என்றான் பெருமூச்சுவிட்டபடி.

'அவள் விடாட்டி பறவாயில்லை, என்ரை பிள்ளையளைப் படிப்பிச்சு ஆளாக்கி விடுங்கோவன்!'

'அதுக்கு...!' என்று பரதன் தயங்குவதை அவள் கவனியாதவளாய் கதவைத் திறந்து கொண்டு தன் வீட்டுக்கு விரைந்தாள்.                        


கண்ணன் வீடு.
தொலைக்காட்சியில் ஏதோ செற்றிங் செய்து கொண்டிருந்தான் கண்ணன்.

வேணி தொலைபேசியில் கதைத்துவிட்டு வந்தாள்.
'எப்பிடி இண்டைக்கு வேலை...?' கண்ணனைப் பார்த்துக் கேட்டாள்.

அவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். ஒருநாளும் அவள்  அப்படி ஆர்வமாகக் கேட்டதில்லை.

'என்ன இண்டைக்கு என்னிலை இவ்வளவு அக்கறை...?'

'உங்களிலை இல்லை. உங்கடை வேலையிலை.'

'நான் வேலையிலை சந்தோசமாக இருந்தாத்தானே ஒழுங்கா வேலைக்குப் போய் குடும்பத்தின்ரை நிதிப்பிரச்சனையைச் சோல் பண்ணலாம்... அதுதானே!'

'நீங்கள் உழைக்கிறது எந்த மூலைக்குக் காணும்?'

'என்ன...? என்ரை சம்பளம் எந்த மூலைக்குக் காணுமோ! வடிவா பேசீற் பாக்கிறியோ இல்லாட்டிப் போகடிபோக்கிலை கேக்கிறியோ?'

'உண்மையாத்தான். அவனவன் மாதாமாதம் எவ்வளவு சுழையா அள்ளுறாங்கள்... கடை... அந்த பிஸ்னஸ்... இந்த பிஸ்னஸ் எண்டு... அதுதான் நான்...'

'என்ன கடை போடப் போறியோ...?'

'இல்லை, வேலைக்குப் போகப்போறன்!'

'வேலைக்குப் போகப் போறியோ.... எங்கை வேலை கிடக்கு? எவ்வளவு சனம் வேலையில்லாமல் கிடக்குதுகள். உனக்கு ஆரோ வேலையே தாறான்...!' என்று நளினமாகச் சிரித்தான் கண்ணன்.

'ஏன் சிரிக்கிறீங்கள்...? ரதி வேலைக்குப் போறாள் தெரியுமே!'

'ஓ!'

'அவளிட்டைச் சொல்லியிருக்கிறன், அநேகமாக் கிடைக்கும்.'

'என்ன...!'

'வேலைதான்.'

'சும்மா விசர்க்கதை கதைக்காமல் வீட்டுவேலையை ஒழுங்காச் செய்து பழகு! பிறகு மற்றதைப் பாப்பம்.'

'வீட்டுவேலையை ஒழுங்கா நான் செய்யாமல் வேறை நீங்களே வெட்டி விழுத்துறீங்கள்..?'

'ஒருவேலை செய்ய ஒன்பது மணித்தியாலம் எடுக்கும். உன்னை ஆரும் வேலைக்கு எடுத்தால் பக்றரியைப் பூட்டிப்போட்டு, அவன் வேலை தேடித் திரிய வேண்டி வந்திடும்.'

'நீங்கள் என்ன பெரிய திறமே...? ஒரு அலுவல் சொந்தமா யோசிச்சுச் செய்திருக்கிறீங்களா...? சும்மா பிளேன் வேண்டுவம் பறக்க விடுவம் என்று கற்பனையில் மிதப்பீங்களேயொழிய, ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறீங்களா..?'

'இவ்வளவு நாளும் இந்தவீட்டு அடுப்பிலை பூனைதான் படுத்து எழும்பினது, இப்ப நீ வந்தபிறகுதான் பானை வைச்சு இறக்கிறம். சும்மா ஏன் கொக்கரிக்கிறாய்.... அலுவலைப் பார்த்திட்டுக் கிட!'

'நீங்கள் என்ன வேணுமெண்டாலும் சொல்லுங்கோ! நான் வேலைக்குப் போகத்தான் போறன்!'

'சரி போ!' என்றான் கண்ணன்.

'என்ன சரி போ எண்டுறீங்கள்.'

'ஏன் வேணி பாயிறீர்? ரதி வேலை எடுத்துத் தந்தால் போம்! நான் தடுக்கேல்லை.' என்று அவள் ஆசைக்கு இசைந்தான் அவன்.


தொலைபேசி மணியடித்தது.

நித்திரைத்தூக்கத்தில் றிஸீவரை எடுத்தாள் ஜானகி.

'ஹலோ ஜானகி... ஐ லவ் யூ! என்று ஒலித்தது மறுமுனையில்.

'ஆர் நீ?' என்று அதட்டினாள் ஜானகி.

'என்னைத் தெரியாதோ... நான் உன்ரை கொத்தானடி! கதவைத் திறந்து வை வாறன்!' என்றதும் யார் என்று விளங்கிக்கொண்டாள்.

'இராகுலன்! இனிமேல் சொந்தம் பந்தமெண்டு  பாக்கமாட்டன், பொலிசிலை சொல்லுவன்! வை போனை!'

'குழந்தைப்பிள்ளை மாதிரிக் கதைக்கிறாய். வீட்டுக்கு வாற மகாவிஸ்ணுவை வேண்டாமெண்டு விரட்டுறாய்... கொஞ்சம் மனசு வை! சின்னவயசிலை நானும் நீயும் அப்பா, அம்மா விளையாடேல்லை...!' இரவு குடித்த மதுபானத்தின் உளறல் இன்னும் இராகுலனின் வார்த்தைகளில் பின்னியிருந்தது.

ஜானகி பேச்சை வளர்க்காமல் தொலைபேசியை அடித்து வைத்தவள் கவலை முட்டிக்கொண்டு வர, மீண்டும் படுக்கையில் விழுந்து அழுதாள்.

பக்கத்தில் குசன் படுத்திருந்தான்.

சத்தமாக அழுது அவன் நித்திரையைக் குழப்ப மனமில்லாமல் எழுந்து பாத்றூம் போனாள். நேரம் ஆறுமணி பத்து நிமிடமாகி இருந்தது.

முகத்தைக் கழுவி, சாமியறைக்குப்போய் விளக்கேற்றி, திருநீறும் பூசிவிட்டு, கண்ணீர் வழிந்தோட நின்றாள்.

'இராமா! 'ராமா! எனக்கேன் இந்தச் சோதனை.. பிள்ளையளை வளர்த்து ஆளாக்கிவிடவேணும் எண்டு உயிரோடு இருக்கிறேன். இந்த இராட்சதன் ஏன் என்னோடை வம்புக்கு வாறான்? கடவுளே! நல்ல கணவனைத் தந்து ஆசைகாட்டிவிட்டு பாதியிலே அழித்து விட்டியே.. பிள்ளைகளும் நானும் தவிக்கிற தவிப்பு... ஐயோ கண்ணா...!'

யாரோ நடந்து வரும் அரவம் கேட்டு, கண்ணீரை அவசரமாகத் துடைக்கப் போனாள்.

'அக்கா!' என்று அவளை ஆதரவோடு அணைத்து,
'அழாதேங்கோ...! பிளீஸ் அக்கா...! என்ன?' என்று கேட்டாள் யசோ.

'என்னடி யசோ... இவன்ரை ஆக்கினை தாங்கமுடியேல்லை! சின்ன வயசிலை அம்மா அப்பா விளையாடினனாங்களெண்டு தண்ணியைப் போட்டிட்டு விசர்க்கதை கதைக்கிறான்.'

'கமலமக்காவுக்குத் தெரியாதே...? சொல்லுங்கோவன்! இல்லாட்டி கோகுலன் வரட்டும் சொல்லுவம்.'

'வேண்டாம் யசோ! தேவையில்லாத பிரச்சனையள் வரும்.'

'ஓ.கே அக்கா...! நான் ஒண்டு கேக்கிறன் கோவிக்காதேங்கோ.' என்றாள் யசோ ஜானகியின் கையைப் பிடித்தபடி.

'சொல்லு! உன்னோடை நான் ஏன் கோவிக்கிறன்!'

'கோவிக்கக்கூடிய விசயம் எண்டதிலை சொல்லுறன்.'

'சொல்லு, நான் கோவிக்கேல்லை!'

''ராம்அண்ணாவும் நீங்களும் உயிருக்குயிரா வாழ்ந்தனீங்கள்.  அதை மறக்கமுடியாது. நான் நினைக்கிறன்... எனக்கு அவரைத் தெரியாது... நீங்கள்  சொன்னதை வைச்சுப் பார்த்தால் அவர் ஆத்மா உண்மையிலை சந்தோசப்படும், நான் சொல்லுறதை நீங்கள் செய்தால்....' என்றாள் யசோ பீடிகையுடன்.

'என்னடி பெரிசாக் கதையளக்கிறாய்...? 'ராம்... அவர் 'ராமன்தான்... நாங்கள் எத்தினை தரம் சண்டை போட்டிருப்பம். தேவையில்லாமல் எல்லாம் சண்டை போட்டிருப்பம்... ஆனால் ஒருநாள் கூட அதைக் கோபமா வளர்த்துக்கொண்டது கிடையாது. கருத்துக்களை பெரிசா விவாதிப்பம். மோதிக்கொள்வம். பிறகு கொஞ்சநேரத்திலை இரண்டு பேருமே ஒரு முடிவுக்கு வந்திடுவம்.... போயிட்டார் பாவி..! நான் என்ன பாவம் செய்தேனோ.... கிடந்து  மாயிறன்!'

'இல்லை..... இல்லை ! நீங்கள் ஒரு பாவமும் செய்யேல்லை. சாகிறவைக்குப் பிரச்சனையில்லை. எல்லாத்தையும் அப்பிடியே விட்டபடி அவை போயிடுவினம். இருக்கிறவைதான் பிரச்சனைகளைச் சந்திக்க வேணும்... நீங்கள் நல்ல துணிச்சல்காரி... இத்தனை காலமும் சமாளிச்சிட்டீங்கள்! ஆனால் அக்கா... பரதன் தங்கமான மனிசன் தனியா இருக்கிறார்....'

'வேண்டாம்! பிளீஸ் யசோ! இன்னொரு ஆம்பிளைக்கு என்ரை மனசிலை இடமில்லை.'

'சரி. மனசிலை இடம் கொடுக்காட்டியும் வீட்டிலை இடம்  குடுங்கோ!'  

'எப்பிடியடி...! நீ ஒரு பொம்பிளை எண்டதிலை எங்களோடை இருக்கிறாய்... ஆரும் ஒண்டும் கதைக்க முடியாது. ஒரு ஆம்பிளையை இந்த வீட்டிலை அனுமதிச்சால் பாக்கிறவங்கள் பத்துவிதமா முடிச்சுப் போடுவாங்கள்!'

'பரதனை உங்களுக்குத் தெரியும்தானே அக்கா!'` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 22

03.10.2019பரதன் வீட்டுக்குச் சென்ற ஜானகி 

பங்குபற்றும் பாத்திரங்கள்        
யசோ
பரதன்  
ஜானகி 

இரவு எல்லோரும் தூங்கிவிட்டார்கள்.
ரெலிபோன் மணி அடித்தது.
ஜானகி நித்திரைத் தூக்கத்தில் றிஸீவரை எடுத்து, 'ஹலோ!' என்றாள்.
மறுமுனையில் ஒரு முனகல் ஒலி.

'ஹலோ..! ஹலோ!' என்றாள்.
'நீ நல்ல வடிவாய் இருக்கிறாய்.' என்றது அந்தக் குரல்.

'ஆர் நீ...?' என்று கோபமாகக் கேட்டாள் அவள்.

'பேர் சொன்னா என்னோடை வருவியோ...?'

'போடா றாஸ்கல்!' அடித்து வைத்தாள் ரெலிபோனை.

தொலைபேசி மீண்டும் ஒலித்தது.
ஜானகி எடுக்கவில்லை.
பல நிமிடங்கள் போயின.
மீண்டும் ரெலிபோன்மணி ஒலித்தது.

றிஸீவரைத் தூக்கிவைத்து விடுவது என்ற எண்ணத்துடன் கட்டிலை விட்டெழ, 'அக்கா!' என்று யசோ பாதி நித்திரையிலிருந்து எழுந்து வந்தாள்.

'ஆரோ ஒருத்தன் ரெலிபோன் அடிச்சுக்கொண்டே இருக்கிறான்.'

'என்னவாம்...?'

'வெறியோ... விசரோ தெரியாது!'

மீண்டும் அடித்தது.

யசோ எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

படார் என்று மறுமுனையில் கட்டானது.

'வைச்சிட்டான்!'  என்றாள் யசோ.

'இடைக்கிடை இப்பிடி நடக்குது... ஆனால் இண்டைக்குக் கதைச்சவன், நான் வடிவா இருக்கிறனாம்.. நாய்!' என்று கறுவினாள் ஜானகி.

'வேலை வெட்டியில்லாத ஆரோ வேணுமெண்டு செய்யினம்!'

'நீயும் பாவம். விடிய எழும்பவெல்லே வேணும், போய்ப்படு! இது என்ரை தலைவிதி. இனிப் படுத்தாலென்ன நித்திரை வரப்போதே?'
'யோசிக்காமல் படுங்கோ அக்கா!'

'ஓ! நீயும் படு. போ!'
யசோ தன்னறைக்கு நடந்தாள்.

ஜானகிக்குத் தூக்கம் வரவில்லை.
இது இராகுலனாகத்தான் இருக்குமென்று நினைத்தாள். நீ நல்ல வடிவாய் இருக்கிறாய் எண்டது ரெலிபோனில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது... வேணுமெண்டு வேறை குரலில் கதைச்சிருக்கிறான். அவன் குரல்தான் எண்டு நிச்சயம் செய்தாள்.பரதன் மத்தியான உணவு அருந்திக்கொண்டிருந்தான். பிற்பகல் இரண்டுமணியாகி இருந்தது. இரவுவேலை. நித்திரையால் எழுந்து, கடையளுக்குப் போய் வந்து, சமைத்து... தனி ஒரு வயிற்றுக்கு ஒரு சோறு.. ஒரு கறி என்று சோகம் கொட்ட.. ஏதோ பசிக்குக் கொஞ்சமேனும் சாப்பிடவேணுமே... சாப்பிட்டான்.

வீட்டுமணியொலித்தது.
சாப்பாட்டை சமையறைக்குள்ளிருந்த குளிர்சாதனப்பெட்டியின் மேல் வைத்துவிட்டு, அவசரமாகக் கையைக் கழுவித்தடைத்துவிட்டு வீட்டுக்கதவைத் திறந்தான்.

எதிர்பார்க்காத அதிசயம்....!
அவன் சில வினாடிகள் அதிர்ந்துபோய் சிலையாக நின்றுவிட்டான்.

'சுகமாக இருக்கிறீங்களா?'

'ஓ!' என்று பதில் சொன்னவன்,
'வாங்கோ ஜானகி!' என்று மனம் நிறைய வரவேற்றான்.

'மனம் சரியில்லை!' என்றாள் ஜானகி.

'என்ன ஏதும் பிரச்சனையே...?'

'ம்....ம்...' என்று தலையாட்டினாள் ஜானகி.

'சாப்பிடுங்கோவன்!'

'தந்தால் சாப்பிடுவன்!'
இருவரும் சமையற்கூடத்துக்குச் சென்றார்கள்.

பிறிச் மேல் சோறும் கோப்பையும் இருப்பதைக் கண்டு,
'இப்பதான் சாப்பிடுகிறியளோ...?' கேட்டாள் ஜானகி.

'ஓ!'

அலுமாரியைத் திறந்து ஒரு கோப்பையை எடுத்து, சிறிது தண்ணீரால் கழுவிவிட்டு, அதற்குள் சோற்றைப் போட்டான் பரதன்.
கறிச்சட்டியைத் திறந்தான்.

'தாங்கோ நான் போடுறன்!' என்றாள்.

பரதன் சோற்றுடன் கோப்பையை அவளிடம் கொடுத்தான். 'கறியைக் கொஞ்சம் சூடாக்கினால் நல்லது!'
அடுப்பை அவன் போட, ஜானகி கறிச்சட்டியை அடுப்பில் வைத்தாள்.

'ஈஸ்வரி எப்பிடி இருக்கிறா...?'

'ஈஸ்வரி அவள் கெட்டிக்காரி. இப்ப ஒரு ஜேர்மன்காரனைச் செய்து இருக்கிறாள்.

'அப்ப சந்திரன்...?'

'அவன் விட்டிட்டுப் போயிட்டான்.'

'இவவுக்கு வேணும், நல்லா அலையட்டும். அப்பதான் படிப்பினை வரும்.'

'அவள் நல்லாயிருக்கிறாள்.'

'அவன் விட்டிட்டுப் போட்டானெல்லோ!'

'ஓ! இப்ப ஜேர்மன்காரன் நல்லா வைச்சிருக்கிறான். நல்ல புதுவீடு.. கார், வேலைக்குப் போறாள். என்ரை பிள்ளையள் நல்லா ஜேர்மன் கதைக்கினம். தமிழ் மறந்தே போச்சு! என்னோடை இருந்தா எட்டியும் பார்க்க முடியாத வாழ்க்கை அவளுக்குக் கிடைச்சிருக்கு! கடவுள் அவளைத் தண்டிக்கவில்லை. பதிலுக்குத் தூக்கி விட்டிருக்கிறார்.'

ஜானகி அவனைப் பார்த்தாள். அவன் கண்கள் ஈரமாகத் தெரிந்தன.

கறியைக் கிளறி அடுப்பை நிற்பாட்டினான் பரதன்.

'எங்கையெண்டாலும் அவள் நல்லாயிருக்கட்டும். பிள்ளையள் என்னை மறந்து போச்சுதுகள்!' நனைந்திருந்த கண்கள் குளமாகி வழிந்தன.

'கடவுளிலை எனக்கு நல்ல விருப்பம். கடவுளுக்கு என்னிலை விருப்பமேயில்லை. என்னென்னவெல்லாம் நினைச்சிருந்தன்! என்ரை குடும்பமே எனக்கு உலகம் எண்டு நினைச்சன். நான் எட்டாததை என்ரை பிள்ளையளைக்கொண்டு எட்டலாமெண்டு கனவு கண்டன். எல்லாம் கானல்நீராப்போச்சு!'

கறியைப் போட்டு, சோற்றைக் குழைத்த ஜானகி சாப்பிட மனமில்லாதவளாய் இருந்தாள். கண்ணீர் வழிந்தது.

'அழாதேங்கோ ஜானகி!'

'குளறியழ வேண்டும்போலிருக்கு!' என்றாள் ஜானகி.

'நெஞ்சு வெடிச்சுச் சாகவேண்டியவன் நான், இன்னும் உயிரோடை இருக்கிறன்!'

'வேண்டாம் பரதன். அப்பிடிச் சொல்லாதேங்கோ!'

'எப்பிடியெல்லாம் இருந்தனான்.  இண்டைக்கு இப்பிடியாப் போச்சு!' அவனின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது.

'அழாதேங்கோ பரதன்... பிளீஸ்!'

'கடவுள் சிலநேரம் வெறும் சிலையாகவே இருந்துவிடுவார்... நீங்களெல்லாம் எப்பிடி வாழ வேண்டியனீங்கள்... 'ராமுக்கு ஏன் அந்த அக்ஸிடன்ட் நடக்கவேணும்? நீங்கள் பிள்ளையளோடை தனியாக் கஸ்டப்படவேணும்...ஏன்...? கடவுள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்.'

'இது விதி! அழுது தீராது... அனுபவித்துத்தானேயாக வேணும்.'

'உங்களுக்கு அப்பிடி... எனக்கு இப்பிடி...'

'நீங்கள் ஏன் எங்கடை வீட்டுக்கு வாறேல்லை...?'

'நீங்கள் வரவேண்டாமெண்டு சொல்லியிருந்தீங்கள்!'

'நாங்கள் இரண்டு பேருமே துரதிஸ்டசாலியள்.... பாவம் செய்தவர்கள்... என்ன செய்யிறது? இண்டைக்கு என்னையும் மீறித்தான் நான் இங்கை வந்திருக்கிறன். நினைச்சா பயமா இருக்கு! நான் இஞ்சை வந்ததை ஆரும் பார்த்தால்... கனக்க வேண்டாம் கமலமக்கா பார்த்தாப் போதும்... நியூசிலை வந்தது போலை ஊர் முழுக்கப் பிரசித்தமாகிவிடும்.'

'அப்ப நான் உங்கடை வீட்டை வந்தாலும் இதே தானே நடக்கும். கதை கட்டுறவங்கள் அந்த மாதிரிக் கதை கட்டிப் போடுவாங்கள்! ஏன் வீணா அப்பிடி ஒரு தேவையில்லாத அவமானம் உங்களுக்கு?'

'உங்களுக்கு வேறை ஆருமே இல்லையோ..? தனிய இப்பிடிக் கவலையோடை இருப்பதை என்னாலை பார்த்துக் கொண்டிருக்க முடியேல்லை.'

'சமுதாயம் எண்ட ஒண்டிருக்கு ஜானகி! அது எங்களைச் சும்மா விடாது.'

'மனம்விட்டுக் கதைக்கிறதுக்கு எங்களுக்கு உரிமையில்லையா? இதயச்சுமைகளை இறக்கி வைக்க ஒரு மனிசன் இன்னொரு மனிசனைச் சந்திக்கக்கூடாதா?'

'எங்கடை கட்டுப்பாடு, பண்பாடு அப்பிடி... மனச்சுத்தத்தோடு பழகினாலும் அதை மாசுபடுத்த எண்டே சில சனம் இருக்கு!'

'எல்லாத்தையும் பாத்தா வாழமுடியாது. கதைக்கிறவை கதைக்கத் தான் செய்வினம்! அடிதடிக்காரர் வீட்டுக்கதையெண்டா பயத்திலை அடக்கி வைச்சு வாசிப்பினம். அப்பாவிகளின் வீட்டுக்கதையெண்டா பப்ளிக்காகவே பறை தட்டுவினம். இது மனிசஇயல்பு!'

'ஜானகி!' என்றவன் பேசாமலிருந்தான்.

'என்ன...?' என்றாள் அவள்.

'அண்டைக்கு நான் கோகுலனைக் கொண்டு கேட்டது, உங்களைக் கலியாணம் செய்ய விருப்பமெண்டது, உங்களுக்குச் சரியான கோபம் எண்டு அறிஞ்சன், கோவிக்காதேங்கோ! எந்தவிதமான தப்பான எண்ணமும் எனக்கில்லை.'

'நான் கோவிக்கேல்லை. நீங்கள் முறையா ஒழிவு மறைவில்லாமல், உங்கடை மனசுக்குப் பட்டதை வெளிப்படுத்தினீங்கள். இது உங்கடை உரிமை! பிள்ளையளுக்கு நீங்கள்  வந்தால் பெரிய சந்தோசம்!'

'வாறன்! நெஞ்சு நிறைய உங்கள்  நினைப்பு இருக்கு! என்ரை வாழ்க்கைதான் போச்சே. நீங்கள், உங்கடை பிள்ளையள் நல்லா இருக்கவேணும். அதுக்கு என்னாலை முடிஞ்சதைச் செய்ய நிறைய ஆசை. இண்டைக்கு நேரை உங்களைச் சந்திச்சதாலை உள்ளதை அப்பிடியே சொல்லியிருக்கிறன். நீங்களும் கோவிக்காமல் கேட்கிறீங்கள். நான் இண்டைக்கு நல்ல சந்தோசமா இருக்கிறன்.' பூரிப்பு பரதனின் முகத்தில் பூத்துச் சிரித்தது.

அதேவித உணர்வுகள் ஜானகி உள்ளத்திலும் எழுந்து, அவள் சோகஇருளைச் சற்று விலக்கி, கீற்றாக ஒரு ஒளிக்கதிர் அவளது நெஞ்சத்தைத் தொட்டது போல கண்களில் இனம் தெரியாத மலர்ச்சி விரிந்தது.

'எப்ப கோகுலன் வாறார்?' கேட்டான் பரதன்.

'வாற திங்கள்...'

'ரெலிபோன் எடுத்தவரே..?'

'ஓ! எடுப்பான். பொம்பிளை இன்னும் வந்து சேரேல்லை.. அவையின்ரை பதிலைப் பொறுத்து சிலநேரம் ஒரு கிழமை பிந்தி வாற எண்ணம்..!'

'கோகுலன் வரவிட்டிக்கு ஒருநாளைக்கு நான் உங்கடை வீட்டை வாறன்!'

'ஏன் இண்டைக்கு, நாளைக்கு வந்தால் குறைஞ்சு போயிடுமோ...?'

'குறையாது.. நல்லது எண்டு பாத்தன்!'

'ரெலிபோன் எடுக்கலாம்... இல்லாட்டி அதுக்கும் கோகுலன் வரவேணுமோ...?'

'ஓ.கே!' என்றான் பரதன்.

'போட்டு வாறன்!' அவள் வெளியேற நடந்தாள்.

அவனும் கதவுவரை வந்து,
'தாங்ஸ் ஜானகி!' என்றான்.

அவள் நின்று அவனைப் பார்த்தாள்.
சில வினாடிகள் கழிந்தன. அதற்கு மேலும் அவளால் அடக்க முடியவில்லை. அவனருகே போய் நின்றாள்.

பனியில் நடுங்கும் பசுபோல அவள் சோகத்தில் துவண்டு நின்றாள்.

அவளை ஆதரோவோடு தன் கைகளால் அணைத்து, அவள் கூந்தலையும் தடவிவிட அவன் மனம் உந்தியது. ஆனால் அவன் அப்படிச் செய்யாது, அவளைக் கருணையுடன் பார்த்தான்.

அவளும் பதிலுக்குப் பார்த்தவாறு, இரண்டு கைகளையும் அவனை நோக்கி நீட்ட, அவற்றை  அவன் ஆதரவோடு பற்றியபடி,
'நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கவேணுமெண்டு நினைச்சன்!' என்று சொன்னான்.

'உங்களிலை நிறையப்பேர் அன்பு வைச்சிருக்கினம். நீங்கள் நீண்டகாலம் சந்தோசமாக வாழ்வீங்கள்!' என்று ஆறுதற்படுத்தினாள் ஜானகி.

'வாயாலை சும்மா ஆறுதலுக்குச் சொல்லுறீங்கள். ஆனால் உண்மை உங்களுக்கே தெரியும்.'

'என்ன தெரியும்...?'

'நான் ஒரு அனாதையெண்டு தான்!'

'ஆர் உங்களை அனாதை எண்டது?'

'அப்ப என்ரை இந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்...?'

'பரதன்! ஏன் வொறீஸாகக் கதைக்கிறீங்கள்? நாங்களெல்லாம் இல்லையோ...?'

'இல்லையெண்டு சொல்லேல்லை, 'ராம் இருந்தால் எனக்குத் தனிமையே வந்திராது. ஆனால் அவன்தான்... இல்லையே... உங்களோடை நான் பழகினால் அதை உலகம் உரசிப் பார்க்கும்... வாய்க்கு வந்தபடியெல்லாம் கதைக்கும்!'

'உலகம் நல்லது. உலகத்திலுள்ள மனிசர்கள்... அதுவும் ஒருசிலர் தான் அப்பிடி... நல்லவர்கள்தான் இந்த உலகத்திலை அதிகம்... நிறைய நிறைய இருக்கிறார்கள். அவர்கள் நிறையவே மௌனம் சாதித்துவிடுவார்கள். உள்ளதை உள்ளபடி சொல்லவோ, இல்லாததை இல்லையென்று சொல்லவோ துணிவில்லாமல்,
'எமக்கேன் வீண்வம்பு?' என்று ஒதுங்கி விடுவார்கள்.'

'அவர்கள் இருந்தும் இல்லாததுமாதிரித்தானே! ஒரு சிலர் கதை கட்டி விடுவாரே என்று நாங்கள் நல்ல நண்பர்களாகக்கூடப் பழக முடியாதே!' என்றான் ஏக்கத்துடன்.

'நான் 'ராமிலை உயிரையே வைச்சிருந்தன். கணவன் மனைவிக்கு அடுத்தவர்கள் உதாரணம் காட்டக்கூடியதாக வாழ்ந்தனாங்கள். இண்டைக்கு 'ராம் இல்லை. உடலை விட்டு உயிர் போனதுமாதிரி பிள்ளையளுக்காக என்ரை வாழ்க்கை போகுது. பிள்ளையளின் வாழ்க்கைதான் என்ரை வாழ்க்கை என்றாகிவிட்டது.'

'அதை ஆரும் தவறு எண்டு சொல்லேல்லையே! உங்கடை நிலையிலை நான் இருந்தாலும் இதைத்தான்; செய்திருப்பன்.'

'ஆம்பிளை நீங்கள்... நல்ல பொம்பிளையாப் பார்த்து கலியாணம் செய்யுங்கோ!'

'ஜானகி வந்தால் செய்யலாம்


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 21

28.9.2019
நீ கோகுலன் எண்டா நான் தாமோதரன்

 பங்குபற்றும் பாத்திரங்கள்  

கோகுலன்
தாமோதரன்


 தாமோதரனின் கடைக்குப் போனான் கோகுலன்.

'அண்ணை! எப்பிடிச் சுகமா இருக்கிறீங்களே...?'

'சுகத்துக்கு என்னடாப்பா...? என்ன சிலோனுக்குப் போறியாம்.'

'ஓமண்ணை. அம்மா, அப்பாவைப் பாத்திட்டு வரலாமெண்டு பாக்கிறன்.'

'கலியாணம் கட்டப் போறாய் எண்டு சனம் கதைக்குது!'

'அதுவும் தான்!'

பென்னாம்பெரிய பூசனிக்காயைச் சோத்துக்கை மூடி ஒழிக்கிற மாதிரி ஒழிக்கப் பாக்கிறாய்!'

'சீ...சீ.... வீட்டுக்காரர் தெரியாதே ஒரே ஆக்கினையாக் கிடக்கு!  அக்காவும் ஒற்றைக்காலிலை போய்ச் செய்துகொண்டு வா! எண்டு கலைக்கிறா.'

'சரி...சரி.. ஏன் வெட்கப்படுகிறாய்? நல்ல விசயம்தானே. மற்றது இரண்டு மூண்டு தரம் உனக்கு ரெலிபோன் எடுத்தன் எங்கை போறனி..?'

'அக்கா வீட்டைதான் போயிருப்பன். ஏன் சும்மா எடுத்தனீங்களே?'

'இல்லை. காசு கொஞ்சம் தரலாமெண்டு நினைக்கிறன்.'

'என்ன காசு...?'

'என்ன காசெண்டு கேக்கிறாய்...! நான் உன்னட்டை கடை போடேக்கை வாங்கின காசு. நான் கேட்க கேட்க ஒண்டும் சொல்லுறாயில்லை. பக்கத்துக்கடை விடப்போறாங்களாம்.. விருப்பம் எண்டாச் சொல்லு! பங்காச் செய்வம்!'

'எனக்குப் பிரச்சனையில்லை.'

'அப்ப செய்வமடா!' புடவையும் நகையும் அந்தக் கடைக்கை போடலாம். நல்லா ஓடும்!'

'ஒண்டண்ணை! மாதவன் அண்ணைக்குக் காசு குடுக்க வேணும். மாதம் மாதம் வட்டிக்கே உழைக்கிற சம்பளம் போகுது!'

தாமோதரன் யோசித்தார்.
'சீட்டொண்டு தொடங்குது. சேர்ந்திட்டு இரண்டாவது மூண்டாவதிலை கழிவு போனாலும் பறவாயில்லை எடுத்துக்குடு!'

'ஐயோ அண்ணை! சீட்டோ... வேண்டாமண்ணை! ஒருக்காப் பட்ட நட்டம் போதுமண்ணை! யசோவோ அக்காவோ அறிஞ்சால் அடிக்க வருவினம்.'

'எல்லா விசயங்களையும் பொம்பிளையளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கக்கூடாது. பிறகு சொல்லலாம்.'

'சரி. அப்பிடித்தானெண்டாலும்... என்னெண்டு சீட்டுக் கட்டுறது? வட்டிக்காசு குடுக்கத்தான் சரி!'

'என்னட்டை நீ தந்த பத்து... அது இப்ப ஏழு வருசம்... வட்டியும் முதலும் எவ்வளவு எண்டு பார்!

'உங்களிட்டை நான் வட்டி வேண்டுவனே? என்னண்ணை நீங்கள்?'

'நீ கோகுலன் எண்டா நான் தாமோதரன். உனக்கு நான் இப்ப வட்டியும் தரேல்லை முதலும் தரேல்லை. உன்ரை முதலை நான் பங்காத்தான் கணக்கிலை வைச்சு அதுக்கு லாபம் கணக்குப் பார்த்து, பாங்கிலை வைச்சிருக்கிறன். எவ்வளவு தெரியுமே?'

லாச்சியைத் திறந்து, கணக்குத் துண்டை எடுத்துக் கொடுத்துவிட்டு வியாபாரத்தைக் கவனித்தார்.

கோகுலன் பிரமித்துப் போய் நின்றான்.

'ஒண்டு போட்டு நூறு கொடுப்பான் விவசாயி. நூறை ஆயிரம் ஆக்குவான்; வியாபாரி.'

'அண்ணை! நான் இல்லையெண்டு சொல்லேல்லை. நீங்கள் கஸ்டப் படுகிறீங்கள். உழைக்கிறீங்கள்! சும்மா இருந்த எனக்கேன்?' என்று கேட்டான் கோகுலன்.

'சும்மா இருந்தாலும் முதல் போட்டது நீ! இது ஆதாயம்.'

'அப்ப நீங்கள் கடை போடேக்கை, கொஞ்சம் உதவி செய்  எண்டு கேட்டீங்கள்! தந்தன். அதுக்கு நீங்கள் முதல்... லாபம் எண்டு பெரிசுபடுத்திறீங்கள்.'

'உனக்குத் தெரியும் 'ராமும் நானும் எப்பிடிப் பழகினனாங்கள்  எண்டு.....!'

'அதுசரி...!'

'அப்ப நான் சொல்லுறதைக்  கேள்! உனக்கு காசு வேணுமெண்டா தாறன். இல்லாட்டி இரண்டு பேருமா கடையை எடுத்துச் செய்வம்!'

'பாவக்காய் என்ன விலை...? ஒண்டும் நல்லாயில்லை... அழுகல் பிடிச்சமாதிரிக் கிடக்கு!' என்று சாமான் வாங்க வந்த ஒருவர் கேட்டார்.

'எடுங்கோ! பாத்துப் போடலாம்.' என்று மரக்கறிகள் இருந்த இடத்துக்கு பொலித்தீன்பை ஒன்றை எடுத்துச் சென்று, பாவற்காயை அதற்குள் எடுத்துப்போட்டு,
'வேறை என்ன எடுக்கப் போறீங்கள்?' என்று கேட்டார்.

'அரிசி எடுத்தனான்.  தேங்காய்... புளி... படக்கசற் இது இரண்டும்
ரெலிபோன்கார்ட்டும்.....'

கணக்கைப் பார்த்து, காசை வாங்கி, மிச்சத்தையும் கொடுத்து வழியனுப்பிவிட்டு, கோகுலனைப் பார்த்தார் தாமோதரன்.

'பொம்பிளைப்பிள்ளை ஒண்டை வேலைக்கு வைக்கவேணும். மகள் இடைக்கிடை வந்து உதவி செய்யிறவள். இப்ப படிப்பு... கஸ்டம் எண்டு பஞ்சிப்படுகிறாள்.'

'படிக்கிற பிள்ளையை ஏன் டிஸ்ரப் பண்ணுறீங்கள்...? ஒரு ஆளை வேலைக்கு வையுங்கோவன். நான் றான்ஸ்போர்ட் வேலை ஏதாவது வேணுமெண்டா செய்து தாறன். முந்தியும் சொன்னனான்தானே! கடையிலை நிக்கச் சொல்லி மட்டும் கேட்டிடாதேங்கோ!'

'ஓ! ஓ! நான் கேக்கேல்லை. காரோட்டம் கிழமையிலை இரண்டு மூண்டு தரம் ஓடவேணும். வேலையோடை சமாளிப்பியே!'

'ஓ. அது செய்யலாம்.'

'மாதவனுக்குக் கடன் காசைப்பற்றி இப்ப ஒண்டும் கதைக்காதை. நான் சீட்டுப் போடுறன். சேருகிற காசைக் குடுப்பம். பிறகு கழிவு கொஞ்சம் இறங்க நீ எடுத்து எனக்குத் தா!'

'சரி. கணக்கு வழக்கிலை நீங்கள் பிழை விட மாட்டீங்கள். பார்த்துக் கொள்ளுங்கோ!'
  'அது நான் பாப்பன். நீ கவனமாகப் போயிட்டு வா!' என்று அன்போடு அவனைத் தடவிவிட்டார் தாமோதரன்.

'ஓமண்ணை... சரி போட்டு வாறன்!' என்று விடை பெற்றான்  


ஜானகியின் குழப்பம்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி 
இராகுலன்
கமலம்


ஜானகி வேலையால் வந்திருந்தாள். குளித்து, உடுப்பு மாற்றி, சாப்பிட்டபின் சிறிது ஓய்வாக இருக்கவேணும் போலிருந்தது.

யசோ பள்ளிக்கூடம் போயிருந்தாள். முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சிக்கு இடம் கிடைத்ததால்  படித்துக்கொண்டிருந்தாள்.  பயிற்சி முடிந்தால் உடனே அண்மையிலுள்ள முதியோர் இல்லத்தில் வேலை எடுக்கலாம். இந்தப் பயிற்சி படிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது யசோவுக்குப்  பெரிய சந்தோசம். இதுவும் கடவுள் செயல்தான். அவள் வருத்தமாக வைத்தியசாலையில் இருந்தபோது அங்கு வந்த நோயாளிகளைப் பார்வையிட்டு  ஆசீர்வதிச்சுச் செல்லும் போதகர் அவளுக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார்.
ஒருசமயம் அவர் அவளைப்பற்றி விசாரித்து, அவள் நிலைமையை அறிந்து, இரக்கப்பட்டு, தனக்குத் தெரிந்தவர்கள் மூலமாக இந்த முதியோர் பராமரிப்புக்குரிய பயிற்சியும், அதன்பின் அங்கேயே தொடர்ந்து தொழில்புரியும் வாய்ப்பையும் எடுத்துக் கொடுத்திருந்தார்.

இதனால் வீட்டுவேலைகளை ஜானகியும் யசோவும் வசதிப்படி பகிர்ந்து செய்து வந்தார்கள்.

கொஞ்சம் காலாற இருந்து, அன்று வந்திருந்த ஈழநாடு பத்திரிகையை எடுத்து வாசித்தாள் ஜானகி.

வீட்டுமணி ஒலித்தது. யாராக இருக்குமென்ற கேள்விக்குறியுடன் கதவைத் திறந்தாள். இராகுலனும் அவன் மனைவி கமலமும் நின்றார்கள். இராகுலன் முகம் முழுக்கப் பல்லாகச் சிரித்தான். கமலம் கதவைத் தாண்டி உள்ளே வந்தபடி,
'என்ன, ரெலிபோனும் எடுக்கிறேல்லை, வீட்டையும் வாறேல்லை... கோவம். கீவமே..?' என்று கேட்டாள்.

விருப்பமில்லாத வேளையிலே வந்த வேண்டாத விருந்தினர்கள் என்றாலும் வீட்டுக்கு வந்தவர்களை வாசலிலே வைத்துத் திருப்பி விட ஜானகிக்கு மனம் வரவில்லை.

'வாங்கோ! இப்பதான் வேலையாலை வந்தனான்.' என்று உள்ளே அழைத்து, சோபாவில் இருக்கச் சொன்னாள்.

'எங்கை யசோ...?' கேட்டான் இராகுலன்.

கேட்காததுபோல பத்திரிகையிலே கண்ணை வைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று ஒருநாள் இராகுலன் வீட்டுக்கு வந்து, கீழ்த்தரமா நடந்து கொண்டதை அவள் இன்னும் மறக்கவில்லை.

'தண்ணி வென்னி குடிக்கிறீங்களோ எண்டு ஒரு வார்த்தை கேட்க மாட்டியே....?' கேட்டாள் கமலம்.

'இப்பதானே வந்தனீங்கள், பொறுத்துப்போடலாம் எண்டு இருக்கிறன். போட்டுத்தாறன்.' என்று மனமில்லாதவளாய் சமையலறைக்கு நடந்தாள்.
அவளுக்குப் பின்னால் இருவரும் எழுந்து சமையலறைக்கு வந்துவிட்டனர்.

'வீடெல்லாம் குப்பையாக் கிடக்கு! பொம்பிளையள் வேலைக்குப் போனால் இப்பிடித்தான் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாது.' என்றான் இராகுலன்.

ஜானகி அவனை நிமிர்ந்து பார்த்தாள். பதில் சொல்லவில்லை. 'இவனுக்கெல்லாம் என்ன விளக்கம் சொல்லுறது..? மீசை நரைச்சும் ஆசை நரைக்காமல் பிற பெண்களைப் பார்த்துக்கொண்டு திரியும் பித்துப் பிடிச்ச உனக்கு என்ரை வீடு குப்பையாக் கிடக்கோ...?' என்று மனதுக்குள் கறுவியபடி, கண்களால் ஒருகணம் அவனைப் பார்த்து சுட்டுவிட்டு,
'காலநேரம் பார்க்காமல் வீடுகளுக்கு விசிற் வந்திடுவியள், உங்கடைவீடு எப்பிடிக் கிடக்கெண்டு அதைப்பற்றி அக்கறைப்பட மாட்டீங்கள். இங்கை வந்து வேலைக்குப் போற பொம்பிளையள் ஒண்டையும் பொறுப்பாச் செய்யேலாதாம்' என்று நினைத்தவளாய், தண்ணீரை அடுப்பில் வைத்துவிட்டுச் சட்டிபானைகளைக் கழுவினாள்.

இராகுலனும் கமலமும் சாப்பாட்டு மேசைக்கு முன்னிருந்த கதிரைகளில் இருந்தார்கள்.

'கோகுலன் சிலோனுக்குப் போட்டானாம், எங்களுக்குச் சொல்லேல்லை!' என்றாள் கமலம்.

'என்னத்தைச் சொல்லுறது...?'

'கலியாணம் செய்யப் போறானாம் பொம்பிளை கொழும்பிலை வந்து நிக்கிறாவாம்.' என்றான் இராகுலன்.

ஜானகி கேட்காததுபோலக் கழுவிக்கொண்டிருந்தாள்.

பதில் வராதது கண்ட கமலம், புதினம் அறியும் ஆவலுடன்,
'என்ன ஜானகி, பொம்பிளை வந்திருக்கிறாவோ..?' என்று சற்று உரத்துக் கேட்டாள்.

'தெரியாது...!' என்றாள் ஜானகி.

'ஏன் மறைக்கிறாய்? ஊரே கதைக்குது. நீ எங்களுக்கு ஒழிக்கிறாய்'

'நான் ஏன் ஒழிக்கிறன்? இது அவன்ரை விசயம்... தன்னோடை பழகிற ஆருக்காவது சொன்னானோ இல்லையோ தெரியாது. நான் ஒருத்தருக்கும் சொல்லேல்லை.'
'உங்கடை தம்பி கலியாணம் செய்யிறது உங்களுக்குத் தெரியாமலிருக்கே...?' நளினம்படக் கேட்டான் இராகுலன்.

'ஒவ்வொருநாளும் வந்துபோறான், ஏன் சொல்லாமல் விடுகிறான்!' சொன்னாள் கமலம்.

'யசோவைச் செய்யேல்லையோ..?' கேட்டான் இராகுலன்.

கழுவுறதை அப்படியே போட்டுவிட்டு, அதிர்ச்சி முகத்தில் குவிய, இராகுலனை விழித்துப் பார்த்தாள்.

'என்ன ஒண்டும் தெரியாதமாதிரிப் பாக்கிறாய்...! யசோவைக் கோகுலன் கலியாணம் செய்யப்போறான் எண்டுதானே எல்லாரும் நினைச்சுக்கொண்டு இருக்கினம்.' என்றாள் கமலம்.

'என்ன கதைக்கிறீங்கள் கமலமக்கா?' ஜானகியின் முகத்தில் கோபம் கோலம் போட்டது.

'ஏன் கோவிக்கிறாய்...? ஊரிலை சனங்கள்  கதைக்கிறதைக் கேட்டனான். அதுக்கு எரிஞ்சு விழுகிறாய் ஜானகி!'

'சனங்கள் எண்டா ஆரைச் சொல்லுறீங்கள்? எங்களிட்டை ஒருத்தரும் இப்பிடிக் கதைச்சதில்லை.'

'உங்களிட்டை இந்தக்கதையை ஆரோ சொல்லுவினமே? நாங்கள் நெருங்கி உங்களோடை பழகினதாலை சொல்லுறம்.'

'நீங்களும் மற்றவை மாதிரிச் சொல்லாமலே விட்டிருக்கலாம். இனிமேல் இப்பிடி ஆருக்கேன் தயவுசெய்து சொல்லிப் போடாதேங்கோ! உங்கள் இரண்டு பேரையும் கையெடுத்துக் கும்பிடுறன்.' என்றாள் ஜானகி பொறுமை இழந்தவளாய்.

அவசரமாகத் தேநீரைக் கலந்து கொடுத்தாள்.
'கெதியாப் போங்கோ!' என்று அவள் மனம் கத்தியது.

'யசோ நல்ல பிள்ளைதான், ஆனால் வருத்தக்காரி. அவளைக் கட்டிப்போட்டு கோகுலன் என்ன செய்யிறது...? அவன் செய்யிறது தான் சரி!' என்றாள் கமலம்.

'என்ன உளறுறீங்கள்...? எனக்கெண்டா விளங்கேல்லை!'

'யசோவும் கோகுலனும் ஒருத்தரையொருத்தர் விரும்பினவை.. உங்களுக்குத் தெரியாதே?' கேட்டான் இராகுலன் கிண்டலாக.

'அப்பிடி அதுகள் பழகேல்லை.' முறித்துச் சொன்னாள் ஜானகி.

'எங்களுக்கேன் தேவையில்லாத கதை! வாங்கோ போவம். கடைக்குப் போய்ச் சாமான்கள் வாங்கவேணும்.' என்று இராகுலனின் தோளில் இடித்தாள் கமலம்.

'போட்டு வாறம்!' என்று இருவரும் எழுந்தனர்.

ஜானகிக்கு கோபம் மூக்கு முட்ட வந்து விட்டது. அடக்கிக்கொண்டு மௌனமாக நின்றாள்.

'வேலையாலை வந்து நிக்கிறாய், நாங்கள் இன்னொரு நாளைக்கு வாறம் சரியே!' என்று கமலம் ஜானகியை நெருங்கி, நாடியில் தடவிவிட்டாள்.

'சரி, போட்டு வாங்கோ!' என்று அவர்களுக்கு விடை கொடுத்தவள். 'யசோவையும் கோகுலனையும் சேர்த்து ஊர் கதைக்கிறதா?' என்று தனக்குள் குழம்பினாள்.

அப்படியிருந்தாலும் அதில் அவளுக்கு ஆட்சேபனை இருக்கவில்லை. இதுவரை அப்படியொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றவில்லை.


அவர்கள் ஒழிவு மறைவாகப் பழகியதாக அவளுக்குத் தெரிய வில்லை. கதைப்பது, சேர்ந்துபோவது, ஒருவருக்கொருவர் உதவி புரிவது... இவற்றை வைத்துக்கொண்டு காதல் என்று முடிவு செய்வதா....?

அப்படியிருந்தால் கோகுலன் கலியாணம் செய்யச் சம்மதித்து, கொழும்புக்குப் போகத்  தேவையில்லையே!

அவன் கலியாணம் செய்யப்போவது தெரிந்தும் யசோ எந்த எதிர்ப்போ கவலையோ காட்டவில்லையே! வழக்கம் போல அவள் கலகலப்பாக, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கிறாள்.

எங்கடை சனங்களின் கட்டுக்கதை இது! என்று முடிவுக்கு வந்தவளாய், பாதியில் விட்ட வீட்டுவேலையைத் தொடர்ந்தாள்.` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 20

18.9.2019


ஜானகியின் அறிவுரையும் வேணியின் வெறுப்பும்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி 
வேணி 

'புருசனோ.. புடலங்காய். தெரிஞ்சிருந்தா கழுத்தை நீட்டியிருக்க மாட்டன்.'

'இப்பிடிச் சொல்லாதை! கலியாணம் கட்ட முந்தி இவன் வேண்டாம் அவன் வேண்டாமெண்டு நல்ல கணவனைத் தேடலாம். கட்டினபிறகு இவன்தான் எல்லாமெண்டு அவனுக்கு அடங்கி வாழக்கற்றுக்கொள்ள வேணும். இல்லாட்டி வாழ்க்கை தொலைந்து போயிடும்!'

'நீயே வாழ்க்கையைத் தொலைச்சுப்போட்டு நிக்கிறாய்! பிறகு எனக்கென்ன வாழ்க்கையைப்பற்றி பாடம் சொல்லிக் குடுக்கிறியோ?'

'எடியே! நான் உன் அக்காவெடி! நான் முந்தி உன்னைமாதிரித்  தான் துடிப்பா இருந்தன். இப்ப எல்லாம் போச்சுதடி...' கண் கலங்கினாள் ஜானகி.

'உன்ரை வயசுக்கு இன்னொரு கலியாணம் கட்டிச் சந்தோசமா இருக்கலாம்தானே! ஆர் உன்னை இப்பிடி அலையச் சொன்னது?'

'பாவங்களுக்குத் தண்டனைகள்  உண்டு. அதுதான் நான் அனுபவிக்கிறன்.'

'ஏன் அக்கா அழுகிறாய்? எனக்கு இந்தக் கலியாணம் சந்தோசத்தைத் தரேல்லை.'

'ஏன் அப்பிடிச் சொல்லுறாய்?'

'அவர், இன்னும் தம்பி, தமக்கை, தாய், தகப்பன் எண்டு காசு அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஆமான வீடு இல்லை. மற்றவை எல்லாம் எவ்வளவு நல்லா இருக்கினம். ஒரு பழங்கிடையன் காரை வைச்சுத்தள்ளிக்கொண்டு திரியிறார். நல்ல வேலையில்லை. கோர்ட் சூட் போட்ட, படிச்ச ஒருவனா எனக்குப் பேசியிருக்கலாந்தானே! அண்ணை சீதனத்துக்குப் பயந்து, இப்பிடியான ஒரு ஆளை எனக்குக் கட்டித்தந்திருக்கிறார்.'

'வேணி!' அதட்டினாள் ஜானகி.

'இப்ப அவர் உன்ரை புருசன். இப்பிடியொரு வாழ்க்கையாவது கிடைச்சிருக்கே எண்டு கடவுளுக்கு நன்றி சொல்லுறதை விட்டிட்டு என்னடி உளறுறாய்? இப்ப வன்னியிலை இருந்தா எப்பிடி இருக்கும் கொஞ்சம் யோசிச்சுப்பார்!' என்றாள் ஜானகி.

'ஏன்.. எனக்கென்ன தலையெழுத்தே... என்னட்டை வடிவில்லையோ படிப்பில்லையோ... நீங்களெல்லாம் இருக்கேக்கை நான் ஏன் கஸ்டப்படவேணும்?
'வேணி! இருக்கிறதை எறிஞ்சு போட்டு, பறக்கிறதுக்கு எட்டாதை!'

'இருக்கிறது குப்பை. அதை எறிஞ்சா என்ன? கொட்டினா என்ன? நான் ஒண்டும் குறைஞ்சுபோக மாட்டன்.'
'அப்ப ஏனடி கட்டினனீ...? கட்ட முந்தியெல்லோ மாட்டன் எண்டிருக்க வேணும்.'

'எனக்குத் தெரியுமே? நேற்றும் தம்பியார் எடுத்து மில் வாங்கப் போறன் எண்டுறார். இவர் பெரிய கொடைவள்ளல் கர்ணன்.. உடனை ஓம்.. இந்தா அனுப்பிறன்! எண்டு பாங்குக்கு ஓடுறார்.'

'அது அவரின்ரை பிரச்சினை. அவர் குடும்பத்தை அவர்தானே பாக்க வேணும். உன்னைப் பட்டினி போட்டு அப்பிடிச் செய்தாத்தான் பிழை.. பெத்து வளர்த்த தாய்தகப்பனை வேறை ஆர் பாக்கிறது?'

'மற்றப் பிள்ளையள் சிலோனிலை இருக்கினம் தானே, அவையும் பாக்கலாம்தானே!'

'ஊரிலை அவரவர் தங்கடை பாட்டையே பாக்கக் காணேல்லை. அங்கை இருந்திட்டு வந்த நீயே இப்பிடிக் கேட்டா...? பேசாமல் அந்தாளின்ரை சொல்லைக் கேட்டு வாழப்பார்! சும்மா வாய் காட்டாதை!'

'உங்களுக்கு என்ன தெரியும்? இப்பிடிப் பிரச்சனை அவரவருக்கு வரேக்கைதான் தெரியும்.'

'ஏன் எனக்குத் தெரியாதோ?'

'இவ்வளவு நாளும் உழைச்சு என்ன செய்தவர்? வீட்டுக்குத்தானே கொட்டினவர். இப்ப கலியாணம் கட்டியிட்டார், இனி மனிசி பிள்ளையள் எண்டு வாழ வேணுமெண்டா காசு வேணும், சேமிக்கப் பழகவேணும்.'

'எல்லாம் போகப்போகச் சரிவரும். நீ வந்தவுடனேயே நூற்றுக்கு நூறு உன்ரை எண்ணம் போலை நடக்க அவர் ஒண்டும் கொம்பியூட்டரில்லை. கொஞ்சம் கொஞ்சமாத்தான் வழிக்குக் கொண்டு வரலாம்.'

'அது எனக்குச் சரிவராது. வெட்டு ஒண்டு துண்டு இரண்டு எண்டு நடப்பவள் நான்.'

'இதுக்கு மேலை நான் என்ன சொல்ல? அக்கா எண்ட முறையிலை என்ரை அறிவுக்குப்பட்டதைச் சொல்லியிருக்கிறன். பார்த்து நடந்துகொள்! கலியாணம் கட்ட முந்தி அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் கூட நிப்பினம். கட்டினபிறகு கணவன், பிள்ளையள்தான் பக்கத்திலை கூட இருப்பினம். கடைசிவரை வரப் போறவையும் அவைதான். இப்ப இருக்கிற வசதிகளைக் கண்டிட்டு நீ துள்ளாதை! இந்த வசதிகளும் எங்களை விட்டிட்டு விலகிப் போகக் கனநேரம் எடுக்காது.' என்ற ஜானகி மணிக்கூட்டைப் பார்த்துவிட்டு, 'எனக்கு நேரமாகுது. நான் போட்டு வாறன்!' என்று விடைபெற்றாள்.

கணவனின் தவறை ஏற்க மறுக்கும் கமலம்

பங்குபற்றும் பாத்திரங்கள்

ஜானகி
கமலம் - இராகுலனின் மனைவி 

ஜானகிவீட்டுக்கு இராகுலனின் மனைவி கமலம் வந்தாள். கதவைத் திறந்துவிட்டவள், வாங்கோ என்று கூட ஒரு வார்த்தை அழைக்க மனமில்லாமல் மினுக்கிக் கொண்டிருந்த உடுப்பைத் தொடர்ந்து மினுக்கினாள்.

'ஜானகி! என்ன பேசாமலிருக்கிறாய்?'

'என்னத்தைப் பேசிறதெண்டு யோசிக்கிறன்.'

'எத்தினை நாள் கழித்து வந்திருக்கிறன், பேசுறதுக்கே கதையில்லை?'

'எனக்கு மனம் சரியில்லை. நீங்கள் போட்டு இன்னொரு நாளைக்கு வாங்கோ!'

'ஏன் கோவிக்கிறாய்?'

'எனக்கு ஒருதரோடும் கோபமில்லை. நானும் பிள்ளையளும்  தனியா இருந்தாலும் நிம்மதியா இருக்கிறம். அதைக் கெடுக்காமல் இருங்கோ! உங்கடை புருசனை இஞ்சை வரவேண்டாமெண்டு சொல்லுங்கோ... நீங்கள் இல்லாதநேரம் இங்கை வந்து, தனியா இருந்த என்னை என்னவெல்லாம் கேட்டவன் எண்டு கேளுங்கோ!'

'அவர்  உன்ரை கொத்தான்.... எனக்குத் தெரியுமே என்ன கேட்டவரெண்டு!'

'கலியாணங்கட்டி பிள்ளையளும் வளந்திட்டுதுகள்...மனிசர் மாதிரியே நடக்கினம்...?'

'ஏன் ஏதோ பிழையா நடந்தவரே?'

'என்னக்கா சாதாரணமாக் கேக்கிறீங்கள்? உங்களுக்காக விட்டனான். இல்லாட்டி பொலிசுக்குச் சொல்லி, ஜெயிலுக்கு அனுப்பியிருப்பன்.'

'என்ன ஜானகி குழந்தைப்பிள்ளை மாதிரி...? அவர் பியரைக் குடிச்சா என்ன கதைக்கிறதெண்டு தெரியாமல் ஏதேனும் கதைச்சிருப்பார். நீ இதையெல்லாம்; பெரிசுபடுத்துறாய்!'

'குடிச்சாக் குடிச்சிட்டு வீட்டிலை படுக்க வேணும்  கமலமக்கா. அடுத்தவீட்டை போய் இன்னொருத்தன்ரை மனிசியின்ரை புடவையை பிடிக்கக்கூடாது!'

'முறைமச்சான் எண்டிட்டு பகிடிபகிடியா அப்பிடி இப்பிடியேதும் செய்திருப்பர். இதுக்குப் போய்க் கோவிக்கிறாய்!'

'அக்கா! நீங்களும் ஒரு பொம்பிளை... உங்கடை புருசன் நடந்த விதத்துக்குக் கோவிக்காமல் வேறை என்னக்கா செய்யிறது?'

'வடிவா இருக்கிறாய். ஸ்ரைலாத் திரியிறாய். ஆம்பிளையளுக்குப் பார்க்க ஆசையாயிருக்கு! நாங்கள் பொம்பிளையள்தான் கொஞ்சம் அடக்கமா இருக்கவேணும்.'

'வீட்டிலை இருந்த என்னட்டை வந்து, நடக்கக்கூடாத விதத்திலை அநாகரிகமா நடந்திட்டுப் போயிருக்கிறார். அவருக்கு வக்காளத்து வாங்குறீங்கள். வெளிநாட்டிலை வேலை செய்யிற நான் வெள்ளைச் சேலை கட்டிக்கொண்டு மூலைக்குள்ளை இருக்கேலுமே...?'

'அப்பிடி அடக்கமா இருந்தா ஆரும் வராயினமெண்டு சொல்லுறன்.'

'இஞ்சை ஆரும் வரேல்லை... உங்கடை புருசன்தான் வந்தவர்... எனக்கு ஒரு கதையும் வேண்டாம். நீங்களோ அவரோ இனிமேல் எங்கடை வீட்டை வரவேண்டாம்.... தயவுசெய்து வரவேண்டாம்! என்னை நிம்மதியா இருக்க விடுங்கோ!'

கமலம் எழுந்து கையை விரித்து, முகத்தை நெளித்துவிட்டு வெளியேறினாள்.

குசனின் கவலை

பங்குபற்றும் பாத்திரங்கள்

லவன்
குசன்

லவன் படித்துக்கொண்டிருக்க, அவனிடம் குசன் கவலையுடன் வந்தான்.

'லவன்!'

'என்ன..?'

'அம்மா கலியாணம் செய்தா எவ்வளவு நல்லது..'

'ஏன்டா...?' என்று புத்தகத்தை மூடிவிட்டு, தம்பியாரைப் பார்த்தான்.

'அம்மா கலியாணம் செய்தா எங்களுக்கொரு புதுப் பப்பா வருவாரெல்லேடா...!'

'அதை அம்மாவைப் போய்க் கேளன்!'

'நீயும் வாடா...!'

'அம்மாவுக்குக் கலியாணம் செய்ய விருப்பமில்லை.'

'ஏனடா? அப்பா ஒருத்தர் இருந்தால் எவ்வளவு நல்லது! டேவிட்.. அவன்ரை அம்மாவும் கலியாணம் செய்து அவனுக்குப் புதுஅப்பா வந்திட்டார்.' என்று உதாரணம் காட்டினான் குசன்.

'டேவிட்டின் அம்மா ஜேர்மன்காரி. நாங்கள் தமிழர்... எங்கடை ஆக்கள் அப்பா இல்லாட்டி திரும்பக் கலியாணம் செய்யிறது குறைவு!' என்றான் லவன்.

'பரதன்மாமா மாதிரி ஒரு அப்பா எண்டால் அம்மாவுக்கும் விருப்பமாயிருக்கும்.' என்று மேலும் சொன்னான் குசன்.

'அம்மாவுக்கு அப்பாவைத் தவிர வேறை ஒருத்தரிலும் விருப்பமே இல்லை.' என்று தாயின் மனக்கிடக்கைகளைத் தம்பியாருக்குக் கூறினான் லவன்.

கோகுலனுக்குத் திருமணப்பேச்சு

பங்குபற்றும் பாத்திரங்கள்

கோகுலன்
யசோ

கோகுலன் கொழும்புக்குச் செல்லத் தயாரானான். அவன் தாயும்  தகப்பனும் ஏற்கனவே கொழும்பில் தங்கியிருந்தார்கள். ஊரிலே அவனுக்குப் பொம்பிளை பார்த்து கொழும்புக்கு வருகிறா. பார்த்துப்பேசிப் பொருத்தமென்றால் திருமணமும் செய்யும் தீர்மானமும் இருந்தது.

முதல் ஒரு பெண் பார்த்து அவனுக்கு அனுப்பி வைக்கும் தறுவாயில் யாரோ வேண்டாதவர்கள் இல்லாததையும் உள்ளதையும் பெரிதுபடுத்திக் காட்டிக் குத்திவிட்டார்கள்.
இதனால் இரண்டாந்தரம் அதே பிசகு எழக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தான்.
பயணத்துக்கு முதல்நாள் யசோவைச் சந்தித்து விடைபெறச் சென்றான்.

'மாப்பிள்ளை வாங்கோ!' என்றாள் யசோ. அவன் இலங்கை போய் வர இருப்பது ஏற்கனவே அவளுக்குத் தெரியும். முகத்தில் வாட்டம் இருந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல் பூசி மறைக்க முகத்தில் சிரிப்பை விசேடமாக அழைத்திருந்தாள்.

'சிலோனிலிருந்து என்ன வேண்டிக்கொண்டு வாறது...?'

'ஒண்டும் வேண்டாம். நீங்கள் பத்திரமாப் போட்டு வந்தால் அதுவே போதும்!' என்றாள்.
'எதாவது கொண்டு வந்தால் வேண்டாமெண்டு சொல்லுவீங்களா...? சந்தோசப்படமாட்டீங்களா..?'

'நான் ஒரு வருத்தக்காரி. நான் சந்தோசமாக இருந்தாலென்ன இல்லாட்டியென்ன... ஆருக்கு நட்டம்?'

'உங்களை ஆர் வருத்தக்காரி எண்டது? ஏன் இப்பிடிக் கவலையாக் கதைக்கிறீங்கள்?'

'ஒண்டுமில்லை!'

'நான் சிலோனுக்கெல்லே போட்டு வரப்போறன். சிரிச்சுக்கொண்டு வழியனுப்புறதுக்கு அழுகிறமாதிரி இருக்கிறீங்கள்.'

'நீங்கள் நல்லாயிருக்க வேணும். சந்தோசமாப் போட்டு வாங்கோ! அம்மா, அப்பாவுக்கு அடுத்தபடியா உங்களிலை உயிரையே வைச்சிருக்கிறன். கவனமாப்போய் பொம்பிளையை உங்களுக்குப் பிடிச்சுக்கொண்டால் கலியாணம் செய்து கொண்டு வாங்கோ! என்ரை வாழ்த்து என்றைக்கும் உங்களுக்கு இருக்கும்!'

'யசோ! கலியாணத்துக்கு நான் அவசரப்படேல்லை. அம்மா ஒற்றைக்காலில் நிக்கிறா. எத்தினைதரம் மாட்டன் எண்டு சொல்லுறது. இது நல்ல இடமெண்டு அப்பாவும் சேர்ந்து மறுப்புத் தெரிவிக்கமுடியாதளவுக்கு ரெலிபோனிலை சொல்லியிட்டினம்.'

'கலியாணம் எண்டது இந்த வயதிலைதான் செய்யிறது. மினுமினுப்பா, கம்பீரமா, தலையிலை அடர்ந்த கறுத்தமுடி இருக்கேக்கை, வயிறு தொந்திவிழ முதல் செய்யேக்கை ஒரு அழகு இருக்கு! போய்ச் சந்தோசமாச் செய்திட்டு வாங்கோ!'

'என்ன... இண்டைக்குக் கனக்கக் கதைக்கிறீங்கள்?'

'நீங்கள் வருமட்டும் இங்கை பம்பலில்லை போறடிக்கும்.'

'இரண்டு கிழமை லீவிலைதானே போறன். டக்கெண்டு வந்திடுவன்.'

'கலியாணம் செய்தால் பிறகு மனிசியைக் கவனிக்கவே நேரம் போதாது. பிறகெங்கை மற்றவையைக் கவனிக்கிறது?'

'ஏன் அப்பிடி நினைக்கிறீங்கள்? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும் தானே!'

'உங்களைப்பற்றி நல்லாத் தெரியும். ஆனா கலியாணம் செய்தா அநேகமான ஆம்பிளையளின்ரை பாதிக்குணங்கள் பதுங்கி ஒழிச்சிடும். மனைவியின் மீது கொண்ட பாசத்தாலோ அல்லது பயத்தாலோ தெரியாது. இதை அநேகமான  இடத்திலை நான் பாத்திருக்கிறன்.'

'கோகுலன் வித்தியாசமானவன்!'

'யசோவும் வித்தியாசமானவள்தான் ஆனால் ஆரையும் கவலைப் படுத்தமாட்டாள்.'

'நீங்கள் சொல்லுறதைப் பாத்தால் நான் யாரையோ கவலைப்படுத்திற மாதிரியெல்லோ கிடக்குது!'

'நான் விசரி ஏதோ உளறுறன். நீங்களும்  என்னை மாதிரித்தான்  ஆரையும் கவலைப்படுத்தமாட்டீங்கள். ஒண்டுக்கும் யோசிக்காமல் சந்தோசமாப் போட்டு வாங்கோ!'

'அம்மா, அப்பாவைப் பார்க்கத்தானே வேணும். யாழ்ப்பாணம் போகப்போயினமாம். அங்கை போனா பிறகு கஸ்டம்தானே!'

'ஓ! பின்னையென்ன.... போய்ப்  பாத்திட்டு வாங்கோ! யாழ்ப்பாணம் பிறகு போகலாம்தானே, அப்ப நானும் வாறன்.'

'உங்களுக்கும் ஊர் ஆசை வந்திட்டுது!'

'பெற்ற தாய், தந்தை, பிறந்த ஊர், கும்பிட்ட கோவில் இதெல்லாத்தையும் விட்டிட்டு இங்கை வந்து ஏதோ வாழுறம். அதெல்லாம் உயிரோடை ஒட்டிய பந்தங்கள். மரணம்வரை கண்முன்னே நிற்பவை!'

'என்ன செய்யிறது....? இதுதான் விதி என்றிட்டு இருக்கிறது. வாழ்க்கை வாழவேணுமே! சரி உங்களுக்கு என்ன கொண்டு வாறது...? சொல்லுங்கோவன்.'

'மயூரி அம்மன் கோவிலுக்குப் போகேலுமென்றால் ஒரு அர்ச்சனை செய்யுங்கோ!'

'ஆர் பேருக்கு...?'

'சும்மா ஒரு அர்ச்சனை. அம்மாளுக்குத் தெரியும்.'

'உங்களுக்குக் கலியாணம் சீக்கிரமாக் கைகூட வேணுமெண்டு தானே!' கேட்டான் கோகுலன்.

'இதைவிட வாழ்க்கையிலை வேறை ஆசையளே இல்லையா...?

'ஒரு பெண்ணுக்கு திருமணம் எண்டது வாழ்க்கையிலை முக்கியமான ஒண்டுதானே.'

'எனக்கில்லை....!'

'ஏன்?'

'எனக்கு அதைவிட வேறை பெரிய ஆசைகள் இருக்கலாமெல்லே!'

'இருக்கலாம். அது என்னெண்டு சொன்னால் தானே. நானும் சேர்ந்து அர்ச்சனையின் போது கும்பிட முடியும்.'

'எனக்கு உயிராய் இருப்பவ ஜானகியக்கா. அவ நல்லாயிருக்க வேணும் எண்டதுதான் என்ரை பெரிய ஆசை.'

'அப்ப நான் நல்லாயிருக்கவேணுமெண்டு கும்பிட மாட்டீங்களா?'

'நீங்கள் நல்லாயிருப்பீங்கள். உங்களைக் கட்டப்போறவ ஒண்டுக்குப் பத்துத் தடவை சுத்திச்சுத்திக் கும்பிடுவா.'


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 19

14.9.2019கீரியும் பாம்பும்

பங்குபற்றும் பாத்திரங்கள்;
கோகுலன்
யசோ
பரதன்
ஜானகி
லவன்
தாமோதரம் அண்ணை
வேணி
கண்ணன்                                                                                                                                
ராம் - ஜானகியின் கணவர் பெயர்


அப்போ தொலைபேசிமணி அடித்தது.

'நான் பரதன் இஞ்சை ஆஸ்பத்திரியிலையிருந்து கதைக்கிறன்.'

'சொல்லுங்கோ பரதனண்ணை என்ன ஆஸ்பத்திரியிலை நிக்கிறீங்களோ...?'

'ஓ! குசனை இஞ்சை கொண்டு வந்து மருந்து கட்டுப்படுது!'

'என்ன நடந்தது...?' பதறினான் கோகுலன்.

'ஒண்டுமில்லை. எல்லாம் சுகம். அறிவு வந்திட்டுது. இப்ப உடனை விடமாட்டினம் எண்டுதான் நினைக்கிறன். நாளைக்கு விட்டிடுவினம்.'

'நாங்கள் வாறம்! எத்தினையாம் வார்ட்...? ஓ...ஓ! எங்கை கண்டனீங்கள்? ஓ! அந்த பவுஸ்ரெல.... பெரிய கிடங்கு வெட்டி வைச்சிருக்கிறாங்கள்.... அதுக்கையோ... ஐயோ! அங்கை நீங்கள் எங்கை போனனீங்கள்? ஓ... நன்றி பரதனண்ணை... நன்றி. கடவுள் மாதிரி நீங்கள் வந்திருக்கிறீங்கள்!'

'புகழாதையும். உங்களை மாதிரி நானும் தேடிக்கொண்டு திரிஞ்சனான். ஒரு ஊகத்திலை அந்த றோட்டுவேலை நடக்கும் இடத்துக்குப் போய்ப் பாத்தனான். அது ஒரு பயங்கரமான இடம். ஏன் அப்பிடிச் செய்து வைச்சிருக்கிறாங்களோ தெரியாது. சரி! அப்ப வாங்கோ! வந்து கதைக்கலாம்.'

'ஓ! வைக்கிறன்.' என்று முகம் சிரிக்க ரிஸீவரை வைத்தான்.
'குசன் கொஸ்பிற்றல்லை இருக்கிறான்... றோட்டுவேலை செய்யிற கிடங்குக்கை விழுந்து பாதிமயக்கத்திலை கிடந்திருக்கிறான்... பரதனண்ணை  ஊரெல்லாம் தேடித் திரிஞ்சு போட்டு, அங்கையும் போய்த் தேடியிருக்கிறார். கண்டிட்டு அம்புலன்சுக்கு அடிச்சு ஆஸ்பத்திரியிலை சேர்த்திட்டு, இஞ்சை அடிச்சவர்.'

ஜானகிக்கு அழுகை மேலும் பொங்கிக் குமுறியது. எழுந்துபோய் 'ராமின் படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள்.

யசோ அவளின் கண்ணீரைத் துடைத்து,
'அக்கா! அழாதேங்கோ. கும்பிட்ட தெய்வம் எங்களைத் தவிக்க விடாது. வாங்கோ! போட்டு வருவம்...' என்று அழைத்தாள்.

அப்போ தாமோதரன், 'நீங்கள் போய்ப் பாருங்கோ! இந்த நேரத்திலை நாங்கள் வந்தால் சரியில்லை.... விடியப் போறம்.' என்று சொல்லி, வீட்டுக்குப் போக எழுந்தார்.

அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் செல்ல, கோகுலன், ஜானகி, யசோ, லவன் எல்லோரும் வைத்தியசாலைக்குச் சென்றார்கள்.

குசனின் உடலில் பல இடங்களில் உரசலும் காயங்களும். கட்டுக்கள் போடப்பட்டிருந்தன.

'பயப்படும்படி ஒண்டுமில்லை. எக்ஸ்றே எடுத்து எல்லாம் ஓ.கே. நாளைக்கு வீட்டுக்கு விடலாமெண்டு டொக்டர் சொன்னவர்.' என்றான் பரதன்.

'ஜானகி, பரதனை அணுகி,
'உங்கடை கால்லை விழுந்து வணங்கவேணும் போலக் கிடக்கு.. கடவுள் மாதிரி வந்து என்ரை பிள்ளையைக் காப்பாற்றி இருக்கிறீங்கள்... தாங்ஸ் பரதன்.' என்றாள்.

'இப்பிடி ஏன் பெரியவார்த்தையள் சொல்லி என்னை அளவுக்கு அதிகமாப் புகழுறீங்கள்? நான் அப்பிடியொண்டும் அதிசயமாச் செய்யேல்லை. நீங்கள் தேடினமாதிரி நானும் தேடினனான்... தாமோதரனண்ணை தான் எனக்கும் சொன்னவர். தெரிஞ்சதும் உங்கடை வீட்டை வந்து ஆறுதல் சொல்ல நினைச்சன்... பிறகு தேடிப்பாத்திட்டு வரலாமெண்டு இருந்தன்...!' என்றான் பரதன்.


ஒருநாள்.
கண்ணன் வீட்டிலே காலை ஏழு மணிபோல தொலைபேசிமணி அடித்தது.

நித்திரையில் இருந்த வேணி, திடுக்கிட்டு விழித்து, அரைத்தூக்கத்தில், 'ஹலோ!' என்றாள்.

'அண்ணி! நான் யாழ்ப்பாணத்திலையிருந்து சுந்தரம் கதைக்கிறன். சுகமா இருக்கிறீங்களே?'

'சுகமா இருக்கிறம்! பொறும், அண்ணையிட்டைக் குடுக்கிறன்.'

'கதையுங்கோவன் அண்ணி....' என்ற சுந்தரத்தின் வார்த்தைகளைக் கேட்க வேணி அங்கில்லை. அவள் றிஸீவரைக் கீழே வைத்துவிட்டு, கண்ணனை எழுப்பிவிட்டாள்.

'அண்ணை கதைக்கிறன்... என்ன சுந்தரம்...சும்மா எடுத்தனியே?'

'அண்ணை! மெயின்றோட்டிலை இருந்த மில் விற்கப்போயினம். மலிவா எடுக்கலாம். வேண்டட்டே..? எனக்கும் இப்ப வேலையில்லை. அத்தானும் இங்கை சும்மா இருக்கிறார். வாங்கினா எல்லாருக்கும் நல்லது....'

'நம்பரைத்தாவன்! நான் எடுக்கிறன்.'

'பிரச்சனையில்லை. விபரத்தைக் கடிதத்திலை எழுதுறன். இரண்டு லட்சம் ரூபா. நாங்கள் ஒண்டரை கேட்டிருக்கிறம். என்ன செய்யிறது?' என்று கண்ணனிடம் ஆவலுடன் விடயத்தைக் கூறினான் சுந்தரம்.

'ஓம் எண்டு சொல்லு! நான் இரண்டு லட்சம் அனுப்புறன்!'

'சரியண்ணை. அனுப்புங்கோ! ஓமெண்டு சொல்லுறம். அத்தான்ரை எக்கவுண்டுக்கு அனுப்புங்கோ!'

கண்ணன் தொலைபேசியை வைத்துவிட்டு பாத்றூம் போய்வந்து, மீண்டும் படுக்கையில் சரிந்தான். பஞ்சி அலுப்பு இன்னும் கொஞ்சம் தூங்கச் சொன்னது.

படுத்திருந்தபடி,
'மில் ஒண்டு மலிவா வந்திருக்காம். தம்பி வேண்டப்போறானாம்.' என்று வேணியைப் பார்த்தான்.

'வேண்டட்டன். அதுக்கேன் விடியக்காத்தாலை ரெலிபோன் எடுப்பான்...?'

'அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு ரெலிபோன் எடுக்க  வந்திருப்பான் எண்டதை நினைச்சுப்பார்!'

'எல்லாரும்தானே அப்பிடிச் செய்யினம்! இவை மட்டும்தான்
கஸ்டப்படுகினமோ?'

'ஏன் விடியக்காத்தாலை சண்டைக்கு வாறீர்?'

'நான் ஒண்டும் சண்டைக்கு வரேல்லை. பேசாமல் படுங்கோ!'

கண்ணன் பேசாமலிருந்தான். தம்பி சொன்ன விபரங்களை அவளுக்குச் சொல்லவேணும் எண்டு அவனுக்கு ஆவல். அதைக் கேட்கும் ஆர்வம் அவளுக்கில்லை.

அந்த மில்லை அவனுக்கு நன்கு தெரியும். சின்ன வயசிலை அங்கே நெல்லுக்குற்ற, மாவரைக்க என்று சென்றிருக்கிறான். அப்போ அது அவன் கைக்கெட்டாத ஒன்று. அந்த முதலாளி வயதாக, பிள்ளைகளிடம் ஒப்படைத்தார். பிள்ளைகள் ஒருவர் பின் ஒருவராய் வெளிநாடு செல்ல, மில்லை விற்க வேண்டிய நிலை வந்திருந்தது.

இதுபற்றி வேணி அறிந்திருக்க நியாயமில்லை. அவளைப் பொறுத்த வரை ஒன்றைப் பார்த்தால் அப்படி ஒன்று தனக்கும் வேணுமென்று ஆசை வரும். புதுவீடொன்றைக் கண்டால் அந்தமாதிரி இருக்கு! என்று அந்த வீட்டுக்காரர்மீது பொறாமை எழும்.

நியாயமே இல்லாத பொறாமை. அந்த வீட்டைக் கட்ட, வீட்டுக்குச் சொந்தமானவர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள். இரவு பகலென்று உழைத்து... மூளையைச் செலவழித்து, பல சிரமங்களைச் சந்தித்து... அப்படியொரு அழகான வீடு எழுந்து நிற்கிறது. இதனைச் சிந்தித்துப் பார்க்குமளவுக்கு அவளுக்கு அறிவு இடம் கொடுக்கவில்லை. ஆசை இருக்கிறளவுக்கு ஆர்வமோ முயற்சியோ  அவளிடமில்லை.

எழுந்து வெளிக்கிட்டு வங்கிக்குச் செல்லக் கிளம்பினான் கண்ணன்.

'எங்கை போறீங்கள்....?' கேட்டாள் வேணி.

'பாங்குக்கு...'

'ஏன்?'

'வீட்டுக்குக் காசு அனுப்பப் போறன்!'

'இப்ப உங்களிட்டைக் காசு கிடக்கே? இங்கை எத்தினை தேவையள் இருக்கு.  தம்பி எடுத்த உடனை அவைக்குக் கொட்ட மட்டும் காசு கிடக்கே?'

'ஏன் இப்பிடிக் கத்திறீர்? ஒரு நல்ல காரியத்துக்கு அவன் கேக்கிறான்... நானும் ஓமெண்டுட்டன்... அத்தானுக்கும் வருமானம் இல்லை. நல்ல லாபம் வரும்.'

'இலாபம் வந்தா எங்களுக்குத் தரப்போயினமே? என்ரை காசிலை ஒரு சதமும் எடுக்க வேண்டாம். நான் தரமாட்டன்.'

'ஏன் வேணி தடை சொல்லுறாய்? மாதாமாதம் காசு அனுப்பிறது தானே. இப்பிடி ஒண்டை வாங்கிக் கொடுத்தா, முதலும் முதலாய் இருக்கும் அவையளுக்கும் வேலையாகுது!'

'ஆர் மாதம்மாதம் காசு அனுப்பிறதெண்டது?'

'நான்தான்... ஏன்?'

'நீங்கள் என்னண்டு அனுப்பப் போறீங்கள்? நானும் ஒருத்தி வீட்டிலை இருக்கிறன்.. ஒரு ஆமான வீடில்லை ...........
காரைப் பாருங்கோ!.............
இப்பிடி ஒரு சின்னக்காரை ஆர் வைச்சிருக்கிறாங்கள்? பென்சும், அவ்டியுமெண்டு பளபளக்கத் திரியுது சனம்.'

'அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்....? என்ரை வீட்டை நான் தானே பாக்கவேணும்.'

'இப்ப உங்கடை வீடு இது.... கலியாணம் கட்ட முந்தி உங்கடை பிரச்சனையளைப் பாத்தீங்கள்... அதைப் பற்றிக் கேட்டனானே... இனிமேல் ஒருடமும் ஒரு காசும் அனுப்பேலாது. அப்பிடியெண்டா எங்கடை அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருக்கும் அனுப்ப வேணும்.'

கண்ணன் ஜக்கற்றைக் கழற்றி எறிந்துவிட்டு ஹோலில் கிடந்த சோபாவில் தொப்பென்று விழுந்தான்.

'என்ன இருந்திட்டீங்கள்..?'

'ஏன் இருக்கவும் கூடாதே...? அடக்கம் ஒடுக்கமா சொல்லுறதைக் கேட்டு நடக்கிறதுதான் மனைவிக்கு அழகு.  எதுக்கெடுத்தாலும்
பறநாகம் மாதிரிப் படமெடுத்துக்கொண்டு நிக்கிறாய்!'

'எனக்கு உங்களைப் பிடிக்கேல்லை. மதிப்பா கோட்சூட் போட்டுக் கொண்டு கௌரவமா வேலை செய்யிற ஒருத்தன்தான் எனக்கு மாப்பிள்ளையா வரவேணுமெண்டு கனவு கண்டவள் நான்...'

'அப்பிடியெண்டா ஏன் என்னைக் கட்டினனீ? கழுத்தை நீட்டிப் போட்டு, இப்ப ஏன் என்ரை கழுத்தை அறுக்கிறாய்? ஜேர்மனியிலை படிக்கச் சந்தர்ப்பம் வரேல்லை. கிடைச்ச வேலையைச் செய்து கொண்டிருக்கிறன். போதுமான சம்பளம் தாறாங்கள். பெரும்பாலும் இப்பிடித்தான் எல்லாரும்....!'

'அப்பிடிச்சொல்லாதேங்கோ! கடை வச்சிருக்கிறாங்கள். றேடியோ நடத்துறாங்கள். ஏஜென்ஸி செய்யிறாங்கள். டொல்மேச்சராய் இருக்கிறாங்கள்... இப்பிடி எங்கடையாக்கள் எத்தினை செய்யினம்... விபரமுள்ளவங்கள் விலாசமா இருக்கிறாங்கள்.'

'அப்பிடியெண்டா அவங்கள்ளை ஒருத்தனைப் போய்க்கட்டு!' என்று சொல்ல வாய்வந்தது. முன்பென்றால் கழுத்திலே பிடித்து வெளியே தள்ளியிருப்பான். ஆனால் இது அவனுக்கு இரண்டாவது முறை. முதல் யசோவை வருத்தமென்ற காரணத்தை வைத்து, ஆராயாமல் கலைத்துவிட்டவன், காலங்கடந்த பின்தான், தான் செய்தது தவறு என்று தெரிந்துகொண்டவன். வேணிக்கும் யசோவுக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.... இவளைக் கண்டபின்தான் யசோவின் அன்பு, அடக்கம், பணிவு என்ற பண்புகள் அவன் மனதில் தெரியத் தொடங்கின.

யசோவிடம் அளவுக்கதிகமாகவே இருந்த இந்தப் பண்புகளை வேணியிடம் தேடினான் கண்ணன். மருந்துக்கும் அவை இவளிடம் கிடைக்காமல் காய்ந்தான்.

அன்போடு கையை நீட்டினால், அவன் நினைவைப் புரிந்துகொண்டு, என்ன அவசரம் இருந்தாலும் அவன் கைகளுக்குள் அடங்கி, அவனுக்குள் அந்தக்கணம் ஐக்கியமாகிவிடுவாள் யசோ. கேட்காமலே அவன் தேவைகளைப் புரிந்துகொண்டு பம்பரமாகச் சுழன்று வந்தவள் அவள்.

யசோவுக்கென்று தனிப்பட்ட ஆசைகள் இருந்ததாக அவனறியான். இவன் நினைப்புக்கள்தான் அவள் ஆசைகளாய் இருந்தன.

இப்போ அவள் அவனிடம் இல்லை. மனைவி என்ற உரிமையுடன் பத்திரகாளி ஒன்றுடன் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கிறதே என்று தனக்குள் நொந்து பெருமூச்சுவிட்டான்.


அன்று ஜானகிவீட்டுக்குச் சென்றான் கண்ணன். ஜானகியிடம் நடந்ததைச் சொன்னான். யசோவும் கேட்டுக்கொண்டிருந்தாள். அவனது கண்கள் கலங்கி, சோகத்தின் கொந்தளிப்பு வெளிப்பட்டது.

'நாங்கள் கணவன் மனைவியாக இருக்கேல்லை..... கீரியும் பாம்புமாகத்தான் இருக்கிறம்.'

'அவள் சின்னப்பிள்ளை. கொஞ்சம் விட்டுப்பிடியுங்கோ! நான் அவளோடை கதைக்கிறன்.' என்று ஆறுதல் பகர்ந்தாள் ஜானகி.

'எதுக்கெடுத்தாலும் திருப்பிக்கதைக்கிறாள்!' வார்த்தைகளில் வறட்சி ஒலிக்கக் கூறினான் கண்ணன்.

'அவள் செல்லமாக வளர்ந்ததாலை அடக்கமில்லாமல் இருக்கிறாள். என்னோடையே எடுத்தெறிஞ்சுதான் கதைக்கிறவள். அக்கா எண்டு மதிக்கிறேல்லை.'

'தம்பி காசு அனுப்பச்சொல்லிக் கேட்டவன். மில் ஒண்டு சந்திச்சிருக்காம் வாங்கப் போறானாம். நானும் சரியெண்டு காசு அனுப்பிறதாச் சொல்லிப்போட்டன். வேணி ஒற்றைக்காலிலை நிண்டு மறிக்கிறாள். வீட்டுக்கு ஒருசதக்காசும் அனுப்பவிடமாட்டன் என்கிறாள். ஆம்பிளைப்பிள்ளையெண்டு நான் இருக்கிறன். தாய் தகப்பன் சகோதரங்களுக்கு உதவி செய்யத்தானே வேணும். அது அவளுக்கு விளங்குதில்லை. அவளோடை கதைக்க முடியாதக்கா!' என்று தன் மனக்குமைச்சல்களை வெளிக்கொட்டினான்.

'அவளுக்குக் கன்னத்திலை இரண்டு அறை அறையாதேங்கோவன். பொல்லாத வாய்க்காரியா இருக்கிறாள். நான் வாறன். அவவுக்கு வாழ்க்கையெண்டா என்னெண்டு தெரியேல்லை. நீங்கள் போங்கோ! கவலைப்படாதேங்கோ! சமாளிச்சுப்போங்கோ!' என்றாள் ஜானகி.

'நான் எவ்வளவோ சொல்லிப் பாத்திட்டன். படிச்சமாப்பிள்ளைதான் வேணுமெண்டு கனவு கண்டவளாம். மதிப்பான வேலை செய்யேல்லையாம் எண்டு பெரிய கதை அளக்கிறாள். அவளுக்கு என்னைப் பிடிக்கேல்லை. வாயாலை நேரையே சொல்லுறாள். நான் என்ன செய்ய? தான் படிச்சவளாம் நான் படிக்கேல்லையாம் எண்டு வாயிலை வந்தபடி கொட்டுறாள்.'

ஜானகி மறுநாள் வேணிவீட்டுக்கு வந்தாள். கண்ணன் வேலைக்குப் போயிருந்தான். வேணி தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜன்னல் திறந்துவிடாததால் வீட்டுக்குள் ஒரே வெக்கைமணம். ஹோலுக்குள் கழற்றிப் போட்ட உடுப்புக்கள் அங்குமிங்குமாகக் கிடந்தன. படுக்கையறை பார்க்கத் தேவையில்லை. படுமோசமாக இருந்தது.

'இந்த நேரத்திலை படமே பாக்கிறாய்?' கேட்டாள் ஜானகி.

'வேறை என்ன செய்யச் சொல்லுறாய்?'

'வீடு கிடக்கிற கிடைக்கு என்ன செய்யிறதெண்டு கேக்கிறியே?'

'தலையிடிக்குது.... ஒண்டும் செய்ய மனமில்லை.'

'ஜன்னலைத் திறந்து நல்ல காற்றை வீட்டுக்கைவிடு! தலையிடி தன்ரைபாட்டிலை போகும்! வேலைக்குப் போன மனிசன் திரும்பி வரப் போறார், நீ இன்னும் தலை இழுக்காமல்... என்ன கோலம் இது? ஆரும் பார்த்தா எங்களையுமெல்லே குறை சொல்லுவினம்!'

'உங்களை ஒருத்தரும் குறை சொல்ல மாட்டினம். இது என்ரை வீடே... விரும்பினபடி வைச்சிருக்க...? வாடை வீடு. இருக்குமட்டும் இருந்திட்டுப் போறது!'

'அது உன்ரை இஸ்டம்... நான் வந்த விசயம் வேறை.. கண்ணன் நேற்று வீட்டை வந்தவர்....'

'ஏன் வந்தவர்? எனக்குச் சொல்லேல்லை!'

'அவர் சொன்னதை நான்  நம்பேல்லை. இஞ்சை வந்து பார்த்த பிறகுதான் வீடு கிடக்கிறகிடையைப் பாக்க நம்பத்தான் வேண்டிக் கிடக்கு!'

'வீட்டுக்கதையை ஊர்ஊரா விற்கவும் தொடங்கிட்டார். வரட்டும்!'

'ஏன் மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்...? அவர் உனக்குத் தாலி கட்டின புருசன்.'


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 18

05.9.2019யசோவின் ஆசை

பங்குபற்றும் பாத்திரங்கள் -   

யசோ
கோகுலன்
தாமோதரன்

யசோ வழியை வழியைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அன்று கோகுலன் வீட்டுக்கு வரவுமில்லை, தொலைபேசி எடுக்கவும் இல்லை.

இது வழக்கத்துக்கு மாறு என்பதால் அவளின் நெஞ்சு படபடத்தது. ஜானகி வேலைக்குப் போயிருந்தாள். சிறுவர்கள் வழக்கம்போல பள்ளிக்கூடம் போயிருந்தார்கள்.

கோகுலனுக்கு ரெலிபோன் எடுக்கும் முடிவோடு எழுந்து செல்ல, தொலைபேசிமணியொலித்தது.

அவனாகத்தான் இருக்குமென்று நினைத்து நெஞ்சம் இன்ப இடி இடிக்க, றிஸீவரை எடுத்தாள்.

எதிர்பார்த்த குரல் ஒலிக்கவில்லை.

'பிள்ளை யசோ!' என்றார் தாமோதரன்.

'தாமோதரமண்ணை சொல்லுங்கோ!' என்று சமாளிக்க முடியாமற் தடுமாறிப் போனாள்.

'என்ன.. டிஸ்ரேப் பண்ணிப்போட்டனே..? வருத்தம் சுகமே?

'பறவாயில்லை இருக்கிறன்.'

'யசோ! கோகுலன் இஞ்சை வந்தவன். கேட்டா கோவிப்பாய்.
நான் வேணுமெண்டு சொல்லேல்லை.... வாய் வழுக்கி கண்ணன்ரை பெயரை உச்சரிச்சுப் போட்டன். கோகுலன் பிறகு விடுத்துவிடுத்துக் கேட்டும் சொல்லேல்லை.'

'என்ன அண்ணை நீங்கள்.... இது சாதாரண விசயமே? குடும்பங்களுக்கிடையிலை பிரச்சனையெல்லே வெடிக்கப்போகுது!'

'இல்லை யசோ! நான் நடந்தது ஒண்டும் விபரமாச் சொல்லேல்லை. கண்ணன் செய்திட்டான், இனி யசோவுக்கு ஒரு இடத்திலை பாக்கலாமெண்டு வஞ்சகமில்லாமல்  சொல்லிட்டன். வேறை ஒண்டுமே சொல்லேல்லை.'

'அவ்வளவும் காணும்தானே குண்டு வெடிக்கிறதுக்கு...' என்றவள்.
'சரி அண்ணை. நான் பிறகு எடுக்கிறன்.' என்று றிஸீவரை வைத்துவிட்டாள்.

கோகுலனின் நம்பர்களை தொலைபேசியில் அழுத்தினாள். என்கேச் அடித்தது. திரும்பவும் முயற்சி செய்து அதுவும் அப்படியேயிருக்க, றிஸீவரை வைத்துவிட்டு உடுப்பைச் சரிப்படுத்தி முகத்தையும் கண்ணாடியில் பார்த்து தலைமுடியையும் ஒழுங்கு படுத்திக்கொண்டு கோகுலனின் அறைக்கு விரைந்தாள்.

கதவு பூட்டிக் கிடந்தது. பலதடவை தட்டியும் திறக்கவில்லை.
ஏமாற்றம் முகத்தில் இருளாகப் படியத் திரும்பிச் சோர்வுடன் நடந்தாள்.

அப்போ கதவு திறக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தவள் அங்கே கதவைத் திறந்தபடி கோகுலன் நிற்பதைக் கண்டாள். அவனை அப்படி ஒரு கோலத்தில் இதுவரை அவள் பார்க்கவில்லை. கிளறிக்கிடந்த தலைமுடியும் வியர்த்து எண்ணெய் படிந்த முகமும் திறந்த சேட்டும் அவன் நன்றாகக் குடித்திருக்கிறான் என்பதை எடுத்துக்காட்டின.

'என்ன...?'என்றாள் யசோ.

'ஒண்டுமில்லை!'

'ஏன் குடிச்சனீங்கள்?'

'நான் குடிச்சா அதைக் கேட்க நீர் ஆர்?'

'நானோ... உங்கடை மனிசி!'

'ம்' என்று அலுப்புக் கொட்டினான்.

'உங்களுக்கு என்ன பிரச்சனை...? குடிக்கமாட்டன் எண்டு அண்டைக்குச் சத்தியம் செய்து போட்டு இண்டைக்குத் திரும்பவும் போத்திலை உடைச்சு வைச்சிட்டு இருந்தா...?
என்ன பேசாமலிருக்கிறீங்கள்;...?
என்னைப் பற்றி ஏதும் அறிய வேணும்  எண்டால் என்னைக் கேட்கலாம்தானே!'

'முழுப்பூசனிக்காயைச் சோற்றுக்கள் மறைச்சு வைச்சிருக்கிறீர்!' என்ற கோகுலனின் வார்த்தைகள் அடைச்ச குரலில் வெளிவந்தன.

'நான் ஒண்டும் ஒழிக்கேல்லை. என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியும்தானே...!'

'உங்களைப்பற்றி எனக்கு என்ன தெரியும்? உங்கடை வாயாலை ஏதாவது சொன்னனீங்களோ? யாரோ சொல்லித்தானே எல்லாம் அறியவேண்டிக்கிடக்கு!'

வசனங்களை முறித்து முறித்து தன் மனக்கிடக்கையை வெளிப்படுத்தினான் கோகுலன்.

'யாருக்கும் சொல்லமாட்டீங்கள் என்றால்... இதாலை வேறை எந்தப் பிரச்சனையும் வராது என்று சத்தியம் செய்யுங்கோ சொல்லுறன்!'

'சத்தியம் செய்ய வேணும்...
என்னை உமக்குத் தெரியாது.... நம்ப மாட்டீர்...
சத்தியம் பண்ணினால்தான் சொல்லுவீரோ?'

'சத்தியம் செய்தே நீங்கள் குடிக்கிறீங்கள்... அப்ப என்னெண்டு உங்களை நம்புறது...?'

'எல்லாருந்தானேப்பா குடிக்கிறாங்கள்! நான் மட்டும் ஏதோ பெரிசா குடிச்சு அழிக்கிறனாக்கும்!'

'ஒரு விசேடத்துக்கு பார்ட்டீ ஒண்டிலை  நாகரிகத்துக்காக  கொஞ்சம் நண்பர்களோடு சேர்ந்த குடிப்பதை இந்த நாடுகளிலை தவிர்க்க முடியாதெண்டாலும் நீங்கள் சின்னன்பொன்னன் பிரச்சனைக்கெல்லாம் பியரையும் பிரண்டியையும் ஊத்திக் குளிக்கிறீங்கள். மற்றவையின்ரை மனம் எரிந்து கதறுவது உங்களுக்குத் தெரியாது.' யசோவின் கண்களில் நீர் தழும்பித் துளித்தது.

'இப்ப என்ன நடந்து போச்சு! நான் என்ன புதுசாக் குடிக்கிறன்... ஊரிலையும் குடிச்சவன். ஊர்மாறி சிற்றிக்கு வந்தும் குடிச்சவன். நீங்கள் வந்த பிறகு உங்கடை விருப்பத்துக்குக் குடிக்காமலிருந்தது உண்மைதான்... என்னை ஏன் தடுக்கிறீங்கள்?'

'அக்கா சொல்லி அலுத்துப்போய் விட்டிட்டா! இனி நானும் சொல்லி, கத்தி அழுது எல்லாம் பாத்திட்டு விட்டிடுவன் எண்டு மட்டும் நினைக்காதேங்கோ! என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியாது... செத்துப்போயிடுவன்.'
கோகுலனுக்கு வார்த்தைகள் வரவில்லை. அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து அவள் தன்மீது வைத்திருக்கும் எல்லை மீறிய அன்பைப் புரிந்து கொண்டவனாய்...
'நீர் ஏன் இவ்வளவுதூரம்... வருத்தம் சரியாக மாறேல்லை. ஏன் யசோ?
உம்மைக் கண்ணன் ஏமாத்திட்டான் எண்டதை அறிய ........  என்னாலை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு சொல்லுச் சொல்லி யிருந்தால் இண்டைக்கு நீர் அவன் மனைவியாக இருக்கலாமே!'

'அந்தக்கதை வேண்டாம்.... அது முடிஞ்சு போச்சு.. எனக்கு அப்படி ஒரு ஆசையுமில்லை.'

'அப்ப என்ன ஆசை இருக்கு..? சொல்லும்'

'ஜானகியக்கா முதலே எனக்குச் சொன்னது மாதிரி நான் ஒரு வேலைக்குப் படிக்கப் போறன்!'

'படிச்சிட்டு....!'

'வேலை செய்யப்போறன்.'

'வேலை கிடைச்சபிறகு...?'

'அதுக்குப் பிறகு யோசிப்பம்.'

'அதுக்குப்பிறகு நான் சொல்லுறதைச் செய்வீரோ...?'

'என்ன சொல்லப்போறீங்கள்? சொல்லுங்கோ முடிஞ்சாப் பாப்பம்!'

'இப்ப சொல்லமாட்டன்.'

'இரகசியமோ...?'

'அப்பிடித்தான் வையுமன்.'


குசனைக் காணவில்லை.

பங்குபற்றும் பாத்திரங்கள் -   

யசோ
கோகுலன்
தாமோதரன்
லவன்
குசன்
பரதன்
கண்ணன்
வேணி

ஒருநாள்....
குசனைக் காணவில்லை.
யசோ எங்கும் தேடிப் பார்த்துவிட்டாள். கோகுலனுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்ல, அவனும் வந்து தேடினான்.
லவன் குசனோடு கூடப்படிக்கும், சேர்ந்து விளையாடும் பிள்ளைகள் வீடுகள் எல்லாம் விசாரித்துப் பார்த்தான்.

'பாடசாலையால் வந்து சாப்பிட்டிட்டு விளையாடப் போறன் எண்டு போனவன் பொழுதுபட்டுப்போச்சு... எங்கை போய் நிக்கிறான்?' என்று யசோ கண்ணீரைக் கொட்டினாள்.

'உங்கை எங்கையாவது தானே நிப்பான். நான் போய்ப் பாத்துக் கொண்டு வாறன்... நீர் அழாதையும்.'

'இஞ்சை.... ஒருக்கா வாசு வீட்டுக்கு ரெலிபோன் எடுத்துப் பாருங்கோ!'

'அங்கை போறவனே...?' என்று கேட்ட கோகுலன் அவர்களின் தொலைபேசி எண்களை அழுத்தினான்.

'குசன் வந்தவனே அக்கா...?'

'இல்லை...!'

'விளையாடப் போனவன். காணேல்லை.'

'பிள்ளையைக் கவனமா எல்லே பார்க்க வேணும். பிள்ளை கடத்துறவங்கள் உலாவுறாங்கள். அண்டைக்கும் ஜேர்மன்காரப்பிள்ளை.... பன்னிரெண்டுவயது... காணேல்லையெண்டு தேடினவை... பிறகு...!'

'சரி. அப்ப நான் பிறகு எடுக்கிறன்.... றிஸீவரை வைத்தவன்.
'எந்தநேரம் என்ன கதைக்கிறதெண்டு தெரியாததுகள் எல்லாம் வெளிநாட்டுக்கு வந்திருக்குதுகள்... அசல் விசர்க்கேஸ்!'

'என்னவாம்;;.;..?' என்றாள் யசோ விளங்காதவளாய்.

'சிக்.... இந்த மனிசிக்கு எடுத்தநேரம் எடுக்காமல் விட்டிருக்கலாம்.'

'ஏன் என்ன சொன்னவை?'

'பிள்ளைபிடிகாரர் உலாவுறாங்களாம் அதாம் இதாம் எண்டு பெரிசா உளறுது!'

'எனக்குப் பயமாக்கிடக்கு! அக்கா வந்து இக்கணம் துடிதுடிக்கப் போறா! ஐயோ! கோகுலன் என்ன செய்ய? பொலிசுக்கு ரெலிபோன் எடுத்துச் சொல்லுவமா...?'

'பொறும் யசோ! முதல் அக்காவுக்குச் சொல்லிப்போட்டு...' என்றவன் மீண்டும் ரெலிபோன் எடுத்து நம்பர்களை அழுத்திவிட்டு,
'அக்கா!' என்றழைத்தான்.

'கோகுலன்! சொல்லு என்ன விசேசம்....?'

'குசன் விளையாடப்போனவன் இன்னும் வீட்டை வரேல்லை. தேடிப்பார்த்தும் காணேல்லை.
என்ன செய்யிறது... பொலிசுக்கு எடுத்துச் சொல்லவோ?'

'மிகயேல், டானியல் இவங்கடை வீடுகளிலெலாம் பாத்தனீங்களே? அநேகமா போய் நிக்கிறவன்.' என்று பதற்றத்துடன் பதில் சொன்ன ஜானகி,
'நான் லீவு போட்டிட்டு வாறன்.' என்று றிஸீவரை வைத்தாள்.

'அக்கா வாறாவாம்!' என்று யசோவைப் பார்த்துச் சொல்லிவிட்டு வேறும் தெரிந்தவர்களுக்கு ரெலிபோன் எடுத்து விசாரித்தான்.
தொலைபேசியை வைக்க, அதன் மணி ஒலித்தது. எடுத்து,
'ஹலோ!' என்றான் கோகுலன்.

'தாமோதரன் கதைக்கிறன்;... டேய் கோகுலன்! என்ன குசனைக் காணேல்லையாம். வாசன்ரை மனிசி எடுத்துச் சொன்னவ!'

'ஓமண்ணை! எங்கை போய் நிக்கிறானோ தெரியாது. வழக்கமா நேரத்தோடை வீட்டை வந்திடுவான்.'
'லவன் எங்கை....? அவனுக்கும் தெரியாதே?'

'அவன் இஞ்சை நிக்கிறான். வீட்டுவேலை செய்து கொண்டிருந்தவன்...... குசனைக் காணேல்லையெண்டு அவனும் உங்கை தேடிப்போட்டு வந்திருக்கிறான்.'
'உதுவழிய எங்கையாலும் தான் நிப்பன். அவசரப்படாதேங்கோ!'

'இங்கை யசோ அழுதுகொண்டிருக்கிறா... அக்கா வேலைக்குப் பாதியிலை லீவுக்குச் சொல்லிப் போட்டு வந்து கொண்டிருக்கிறா! என்ன செய்யிறதென்டு தெரியேல்லை.'

'நான் வாறன்.... பயப்பிடாதேங்கோ! பெடியங்களைத் தெரியாதே... விளையாட்டுக் கண்ட இடத்திலை மிலாந்திக்கொண்டு நிக்கிறது வழக்கம்தானே! பாத்திட்டுப் பொலிசுக்குப் போகலாம் பொறுங்கோ'

தொலைபேசி வைக்கப்பட்டது. சில நிமிடத்தில் மீண்டும் அடித்தது. கோகுலன் அதை எடுத்தான்.
'ஹலோ!'

'ஓ! நான் தாமோதரன் .... டேய் கோகுலன்! ரவுணுக்கை கேர்மஸ் நடக்குது... அங்கை போய் பாத்தனீங்களே?'

'இல்லையண்ணை நோர்மலாப் போகமாட்டான்... தூரந்தானே!'

'போய் ஒருக்காப் பார்! பெடியளைச் சொல்லேலாது. ஆரோடையன் அள்ளுப்பட்டு போய் நிக்குங்கள்.!' என்று விட்டு ரெலிபோனை வைத்தார்.

'தாமோதரன் அண்ணைதான் எடுத்தவர்... கேமர்ஸ் நடக்குதெல்லே.. அங்கை போயிருப்பானெண்டு சொல்லுறார்... நான் போய்ப் பார்த்திட்டு வாறன்... நீர் அழாதையும்.  அக்கா வந்திடுவா. தாமோதரன் அண்ணையும் வாறன் எண்டு சொல்லியிருக்கிறார்.' என்று ஜக்கட்டை எடுத்துக் கொழுவிக்கொண்டு வெளியே போனவன் திரும்பிவந்து, 'வேணிக்கு எடுத்துச் சொல்லும், வேறு ஆராவது சொல்லித் தெரிஞ்சால் நாங்கள் எடுத்துச் சொல்லேல்லை எண்டு நீட்டுவாள்.'

'நான் சொல்லுறன். நீங்கள் கவனமாப் போட்டு வாங்கோ!' என்று கோகுலனைப் போகவிட்டு மனக்குழப்பத்துடன் அங்குமிங்கும் நடந்தாள் யசோ.

சிறிதுநேரம் செல்ல ஜானகி வீட்டுக்கு வந்தாள். லவனைப் பார்த்து,
'உனக்குச் சொன்னனான், குசன் எங்கை போனாலும் கவனிக்கச்சொல்லி... ' என்று அவனைக் கண்டித்தாள்.

'நான் வெளியிலை போகேல்லை, வீட்டுவேலையெல்லே செய்து கொண்டிருந்தனான்.'
'அப்ப அவனையும் வீட்டிலை மறிச்சு வைச்சிருக்கிறது.'

'அவனை ஏன் ஏசுகிறீங்கள்? நான் சொல்லிமறிச்சிருக்கலாம். வழக்கம்போல பக்கத்திலை எங்கையாவது தான் விளையாடப் போறானெண்டு நானும் பேசாமலிருந்து விட்டன்.' என்று தன்னில் தவறைத் தாங்க முயற்சி செய்தாள் யசோ.

'இல்லை யசோ! இவன் வளந்திட்டான், தம்பியார் எங்கை போறான் வாறான் எண்டு பார்க்கலாம்தானே!'

'அக்கா! தாமோதரமண்ணை எடுத்துக் கதைச்சவர். ரவுணுக்கை கேர்மஸ் நடக்குதாம்.... அங்கை போயிருப்பானோ தெரியாது, போய்ப் பாருங்கோ! எண்டு சொன்னவர்.  அதுதான் கோகுலன் அங்கை தேடிப் போயிருக்கிறார். 

அப்போ வேணியும் கண்ணனும் உள்ளே வந்தார்கள்.
'குசன் இன்னும் வரேல்லையே..?' என்றாள் வேணி.

'இப்பிடி ஒருநாளும் நிக்கிறேல்லை!' என்று பதில் சொன்னாள் யசோ.

'வேலையைவிட்டிட்டு வீட்டிலையிருந்து பிள்ளையளைப் பாக்கிறதுக்கு வேலை வேலையெண்டு அலைஞ்சு என்னத்தைக் கண்டனீங்கள்? எத்தினை நாளைக்கெண்டு பிறத்தியாரை நம்பிறது...?' என்று தமக்கை ஜானகியைப் 

பார்த்து மறைமுகமாக யசோவில் கவனக் குறைவு இருக்குமெண்டு குற்றம் சாட்டினாள்.


'இஞ்சை நாங்கள் ஒரு பிறத்தியாரையும் நம்பியிருக்கேல்லை. நானும் யசோவும் கோகுலனும் ஒருத்தர்மாறி ஒருத்தர் வீட்டிலை இருப்பம். அவன் என்ன ஆறுமாதக் குழந்தையே.... இடுப்பிலை தூக்கிக்கொண்டு திரிய...?' என்றாள் ஜானகி.

'கதைக்கப் பேசத் தெரியாட்டிப் பேசாமலிரு!' என்று வேணியை அடக்கப் பார்த்தான் கண்ணன்.

'என்ன பிரச்சனை...?' என்று கேட்டபடி தாமோதரனும் அவர் மனைவி நீலாவும் வந்தனர்.

'சும்மா கதைக்கிறம். பிள்ளையைக் காணேல்லையெண்டதும் ஒருத்தரையொருத்தர் குற்றம் சாட்டேலுமே..? இவள் வேணி சும்மா அதையும் இதையும் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.' என்றாள் ஜானகி. யசோவின் மனம் புண்படக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.

'ஏன் பிள்ளை...? அவன் குழந்தைப்பெடியன். விளையாட்டிலை அங்கை இங்கை போயிருப்பான்... வருவான்தானே! இதுக்குப் போய்த் தேவையில்லாமல் மற்றவையைக் குறை சொல்லுறதே?'

'ஏன் நான் தேவையில்லாமல் குறை சொல்லுறன்? பரதன் அக்காவைக் கலியாணம் கட்டக் கேட்டவன். அக்கா மாட்டன் எண்டிட்டா.... அதாலை...'

'வேணி!' என்று அதட்டி, அவள் வாயையடைக்க கண்ணன் முயன்றும் அவள் சொல்ல வந்ததைத் தடுக்க முடியவில்லை.

'அக்கா மாட்டனெண்டதாலை வேணுமெண்டு பிள்ளையைக் கடத்திக் கொண்டு போய் வைச்சிருக்கலாம்தானே!'

ஜானகிக்குக் கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது.

'என்ன கதைக்கிறாய்...? கதைக்கப் பேசத் தெரியாட்டி வாயை மூடிக்கொண்டிரு! தேவையில்லாத பிரச்சனையை விலைக்கு வாங்கிறாய்.' என்று ஜானகி கோபமாக முறைத்தபடி வேணியைக் கண்டித்தாள்.

'இப்பிடிக் கதைக்காதை வேணி... பரதன் காதிலை விழுந்தால், அவன் எவ்வளவு கவலைப்படுவான். என்ன கதை கதைக்கிறாய்! அவன் ஏன் உங்கடை பிள்ளையைக் கடத்த வேணும்?' என்று காரமாகவே அதட்டினார் தாமோதரன்.

அப்போ கோகுலன் ரவுண் எல்லாம் தேடிவிட்டு, களைத்துப் போய் வீட்டுக்கு வந்தான்.

எல்லோரும் ஆவலோடு அவனைப் பார்த்தார்கள். அவன் கையை விரித்தான்.

'சரியான சனம். அதுக்குள்ளை நிண்டாலும் தெரியாது. நான் மூலை மூலையாப் பாத்திட்டன். மகேந்திரன், ஜெகன் எல்லாம் கேர்மஸிலை நிக்கினம். விசாரித்தனான். அவை ஒருத்தரும் காணேல்லையாம்.'

'என்ரை பிள்ளை எங்கை போட்டான்....?' ஜானகி அழத் தொடங்கி விட்டாள்.

நேரம் போகப்போக பயம் விசுவரூபமாக வளர்ந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் எல்லோரும் கவலை முட்ட உட்கார்ந்திருந்தார்கள்.

'பொலிசுக்கு எடுத்துச் சொல்லுங்கோ! அவங்களும் தேடுவாங்கள்... கோகுலன் சொல்லு...!'' என்றார் தாமோதரன்.

யசோவும் ஜானகியும் விக்கிவிக்கி அழுது கொண்டிருந்தார்கள்.

'கோகுலன் என்ன யோசிக்கிறாய்...?' கேட்டார் தாமோதரன்.
'பொலிசுக்குச் சொல்லவோ... பேந்து பாத்துச் சொல்லவோ எண்டு யோசிக்கிறன்!'

'பத்து மணியாகுது. சொல்லுறதிலை எந்தப் பிரச்சனையும் வரப் போறேல்லை. நாங்கள் எத்தினை மணித்தியாலங்களாத் தேடிக் கொண்டிருக்கிறம்.... பொலிஸ் எங்களுக்காகத் தானே இருக்கு. இப்பிடியான பிரச்சனைகளுக்கு உதவத்தானே அவை இருக்கினம்.' என்று அவசரப்படுத்தினார் தாமோதரன்.
 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்   
இக்கதையை எழுதிவரும் திரு. காசி அவர்களுக்கு 29.8.2019 இல் பிறந்தநாள். இக்கதையிலும் பிறந்தநாள் கொண்டாட்டம் வருகிறது. அவரின் மனம்போல் சரியாக அமைந்து வந்துள்ளது. அவருக்கு பண்ணாகம் இணைய வாசகர்கள்,பிரதம ஆசிரியர்,நிர்வாகத்தினர் அனைவரும் நீடு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
இக்கதை 17வது பகுதியில் அவரை கெளரவப்படுத்த அவரின் படத்தை பிரசுரம் செய்கிறோம். நன்றி
=============================


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 17

28.8.2019

வாங்கோ பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு!

பங்குபற்றும் பாத்திரங்கள் -   
கண்ணன்  
வேணி 

அன்று சனிக்கிழமை.
கண்ணன் ஹோலுக்குள்ளிருந்த அலுமாரியை ஒதுக்கி, தூசு துடைத்துக்கொண்டிருந்தான்.

'பேத்டேக்குப் போக வேணும் பிறசன்ற் வாங்கவேணும் இப்ப ஏன் உதைக் கிளறிக்கொண்டு நிக்கிறியள்?' என்றாள் வேணி.
'ஆருக்கு பேத்டே...?' கேட்டான் கண்ணன்.

'அண்டைக்கு வந்து சொல்லிப்போட்டு, கார்ட்டும் தந்திட்டுப் போச்சுதுகள்.' என்றவள் எழுந்து போய் அலுமாரிக்குள் இருந்த அழைப்பிதழை எடுத்த வந்து கண்ணனிடம் நீட்டினாள்.

அதை வாங்கிப் பார்த்துவிட்டு ஞாபகம் வர,
'ஆ... இதுக்கெல்லாம் மனிசன் போவனா?' என்று கார்ட்டை மேசையில் விட்டெறிந்தான்.

'வேறையென்ன மாடா பேத்டேக்குப் போகும்?'

'மாடு போனாலென்ன? மனிசன் போனாலென்ன? உதுகள் ஒண்டுக்கும் நான் போறதில்லை!'

'கலியாணவீட்டுக்கு வந்ததுகளெல்லே?'

'ஓ! அதுக்கு...?'

'வந்த சனத்தின்ரை விசேசத்துக்கு நாங்களும் போகத்தானே வேணும்.'

'போகாட்டி என்ன வழக்கே வைக்கப்போகினம்?'

'ஜெயிலுக்கை அடைச்சுப் போடுவினம்.'

'வாய் மட்டும் பெரிசு. பொத்திக்கொண்டு வேலையைப் பார்! இல்லாட்டிப் போர்த்து மூடிக்கொண்டு படு!'

'அதுக்கு வேறையொரு ஆளைப் பாருங்கோ! நான் பேத்டேக்குப் போகத்தான் போறன்.'

'நீ செய்தாலும் செய்வாய்... அப்பிடிக்கொத்த குடும்பத்திலை இருந்து வந்தனீ...!'

'எப்பிடிப்பட்ட குடும்பத்திலையிருந்து வந்தனான்? எங்கடை குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வேலையும்  வீடும் சாப்பாடும் படுக்கையும் எண்டு கிணத்துத் தவளை மாதிரி இருக்கிற உங்களுக்கு என்ரை குடும்பத்தைப் பற்றிக் கதைக்க என்ன யோக்கியதை இருக்கு?' என்று கோபம் குமுற அழத் தொடங்கிவிட்டாள்.

'அதுக்கேன் இடிமுழங்கி மழை கொட்டுறது மாதிரி அழுது வடியிறாய்?'

'எங்கடை குடும்பத்தைப் பற்றிக் குறை சொன்னால் அழுகை வராமல் வேறென்ன வரும்? வெட்கம் ரோசம் உள்ளவைக்குத்  தான் அது விளங்கும்.'

'உன்னை மாதிரி ஒரு பொம்பிளையை நான் பாக்கேல்லை.'

'அதைத்தான் நானும் சொல்லுறன். உங்களைமாதிரி ஒரு மனிசனை நான் பாக்கேல்லை. ஒரு பேத்டேக்குப் போறதுக்கு அதுவும் எங்கடை கலியாணவீட்டுக்கு வந்து பிறசன்ற்ரும் தந்து சாப்பிட்டுப் போனதுகள். எங்களை மதிச்சு வீட்டுக்கு வந்து, கார்ட் தந்து, வாங்கோ எண்டு சொல்லி, தேத்தண்ணியும் குடிச்சிட்டுப் போன மனிசரை நாங்கள் மதிக்கவேணும். இப்பிடியான நல்லநாள் பெரியநாளுக்கு சனங்கள் கூப்பிட்டால் போய் நாலு பேரோடை கதைச்சுப் பழகினால்தானே எங்களுக்கும் ஒண்டெண்டால் ஆரும் வருவினம். பிடிச்ச பிள்ளையார்மாதிரி சோபாவைக் கட்டிப் பிடிச்சுக்கொண்டு இருங்கோ!'

'எனக்கெல்லாம் தெரியும். கனக்கக் கரையாதை காகம் மாதிரி.'

'உங்களுக்கெல்லாம் தெரியுமோ...? என்ன தெரியும்? உந்த றேடியோ வாங்கினனீங்கள், செற் பண்ணத் தெரிஞ்சதே? அதுக்கும் என்ரை அண்ணை வேணும். கலியாணம் கட்டினால் இரண்டு மூண்டு நாளைக்கு வீட்டிலை நிக்கவேணும் எண்டு நீங்களா நினைச்சு லீவு எடுக்கத் தெரியாது. அதுகூட மற்றவை சொல்லித்தான் தெரியுது. பிறகு எனக்கு எல்லாம் தெரியுமெண்டு சும்மா தம்பட்டம் அடிக்கிறீங்கள். நான் காகமோ... நீங்கள்தான் பெரிய அண்டாங்காகம்.'

கண்ணனுக்குக்  கோபம் கொதித்துக்கொண்டு வந்தது. பாய்ந்து எழுந்து தலைமயிரில் கோதிப்பிடித்துக்கொண்டு, பளீர்...பளீரென்று நாலு கன்னத்தில் போட அவன் கைகள் ஏவியபோதும் தன்னை அடக்கிக்கொண்டு பேசாமல் இருந்து விட்டான்.

'என்ன பேசாமல் இருக்கிறீங்கள்? இண்டைக்கு பேத்டேக்குப் போறன். விரும்பினால் நீங்களும் வாங்கோ! வராட்டி, ஆரும் 'எங்கை கண்ணன்?' என்று கேட்டால், நீங்கள் கொஞ்சம் முந்தியா என்னைப் பாத்து, 'நீயும் ஒரு பொம்பிளையா?' என்று கேட்ட மாதிரி நானும், 'அவரும் ஒரு ஆம்பிளை எண்டு கூட்டிக்கொண்டு திரியட்டா.. என்று சொல்லுவன்.' என்றவள் பதிலை எதிர்பார்க்காது சமையலறையை நோக்கிச் சென்றாள்.
வேணி  போவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன், அவளுடன் மோதி வாதம் செய்வதை விட்டு அவள் வழியில் சென்று பார்ப்போம் என்று நினைத்தவனாய், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு  போகும் முடிவுடன் எழுந்து தானும் சமையலறைக்குச் சென்றான்.
பூகம்பம் வெடிக்குமா!

 பங்குபற்றும் பாத்திரங்கள் -                   

கோகுலன்  
தாமோதரன்  

தாமோதரன் கடைக்கு கோகுலன் வந்தான்.

'கோகுலன்! வாரும்! வாரும்! என்ன கனநாளாக் கடைப்பக்கம் காணேல்லை?'

'எங்கை வருவம் எண்டு உப்பிடித்தான்.... கடையிலை எப்பிடி பிஸ்னெஸ்....?'

'நல்லாயிருக்கு! பலசரக்குச்சாமான்களை விட புடவையிலை நல்ல லாபம். அதோடை ரெலிபோன்கார்ட் ... வீடியோக்கசற் இப்பிடியெண்டு பிஸ்னெஸ் பறவாயில்லைப் போகுது. நீ எப்பிடி இருக்கிறாய்?'

'இருக்கிறன். எனக்கென்ன இப்பதானே தங்கச்சியின்ரை கலியாணம் முடிஞ்சது. கடன் கொஞ்சம் கழுத்தை நெரிக்குது. காலுக்குமேலை கால் போட்டுக்கொண்டு இருக்கேலுமே? அதுதான் ஓடுப்பட்டுத் திரியிறன். மாதவனண்ணைக்கு மாதாமாதம் வட்டி குடுக்கிறதே கஸ்டமாக் கிடக்கு!'

தாமோதரன் யோசனையுடன் தலையாட்டிவிட்டுக் கேட்டார்.
'அக்கா, பிள்ளையள் எப்பிடி?'

'சுகமா இருக்கினம் அண்ணை!'

'அதெல்லாம் இருக்க யசோ என்ன செய்யிறாள்?  அவளுக்கு பாத்து ஒரு இடத்திலை சம்பந்தம் செய்து வைச்சால் நல்லதெல்லே!' பாவம். கெட்டிக்காரப்பிள்ளை. கெட்டகாலம் போட்டு அவளை உலைக்குது!'

'கெட்டகாலம் முடிஞ்சுது அண்ணை! யசோ சுகமா இருக்கிறா. உங்களுக்குத் தெரிஞ்ச இடங்களிலை விசரரிச்சுப்பாருங்கோ! முதல்லை யசோவையும் சம்மதிக்க வைக்கவேணும்.'

'கண்ணன் செய்திட்டான்தானே! இனி ஏன் அவள் யோசிக்க வேணும்?'

'என்னண்ணை...! கண்ணன் செய்தால் யசோவுக்கு என்ன?'
தாமோதரன் தன்னையறியாமலே கோகுலனுக்கு உண்மையைக் கொட்டிவிட்டுத் தன் தவறுக்காக நெற்றியில் அடித்துத் தலை முடியைப் பிடுங்கினார்.

'ஒண்டுமில்லை கோகுலன்... ஆனால் நல்ல இடம் சந்திச்சால் சொல்லுறன்.'

'ஏனண்ணை ஒழிக்கிறீங்கள்...? சொல்லுங்கோ!'

'ஒருத்தருக்கும் சொல்லவேண்டாமெண்டு யசோ சத்தியம் வேண்டியிருக்கிறாள். இதாலை ஒரு பிரச்சனை வரக்கூடாது. அவன் இப்ப உன்ரை மச்சான்.'

'லவ் பண்ணி ஏமாத்திப்போட்டு இப்ப நல்லபிள்ளைமாதிரி நடிச்சு, தங்கச்சியைக் கட்டியிட்டார். அப்பிடித்தானே..?'

'இல்லை. லவ் பண்ணி ஏமாத்தேல்லை...டேய்! கோகுலன் பிளீஸ்! என்னை ஒண்டும் கேக்காதை! பிறகு யசோவின்ரை கண்ணிலை முழிக்கேலாது.' என்று சொல்ல மறுத்துவிட்டார் தாமோதரன். கோகுலனும் அதற்கு மேல் அவரை வற்புறுத்த வில்லை.

'யசோவிடம் நான் இப்பிடிச் சொன்னதாகச் சொல்லிப் போடாதை!'

'என்னையறியாமலே இப்பிடியொரு பூகம்பம் எங்கடை வீட்டுக்குள்ளை புதைஞ்சு கிடக்குதோ...?'

'பூகம்பம் அடங்கி விட்டுது கோகுலன். அதை நீ மீண்டும்
குமுறச் செய்யாதை!' என்று எச்சரித்தார் தாமோதரன்.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 16
20.8.2019

கண்ணன் வேணி கருத்துமோதல்
பங்குபற்றும் பாத்திரங்கள் - 
யசோ
கோகுலன்
ஜானகி  
கண்ணன்  
வேணி 
பரதன்


'இதென்ன சிலோனே... நினைச்சாப்போலை லீவு எடுக்க?' என்றான்.

'ஏன் நினைச்சாப்போலை எண்டுறியள்? வெடிங்குக்கு லீவு எடுக்கேக்கை அஞ்சாறு நாளைக் கூட எடுத்திருக்கலாம்தானே!'

'இப்ப பிஸியான நேரம் கண்டபடி லீவு எடுக்கேலாது.'

'ஆரோ சொன்னவையோ...?'

'ஆரும் சொல்லேல்லை. பாக்கத் தெரியும்தானே!'

'மரி பண்ணினது.. ஒரு கிழமை லீவு வேணும் எண்டு கேளுங்கோ!'

'கேக்கேலாது.'

'கேட்டுப் பாருங்கோ! கட்டாயம் வேணுமெண்டு கொஞ்சம் இறுக்கிக் கேளுங்கோ!'

கண்ணன் பதில் சொல்லவில்லை.

வேணியின் இடத்தில் யசோவை நினைத்தான்.

அவள் வந்து, அவன் வீட்டில் இருந்த மறுநாள் அவன் லீவு எடுக்க நினைத்தான்.
'ஒரு அவசரம் தேவை வரேக்கை லீவு எடுக்கலாம், நான் வந்திட்டன் எண்டு திடீரென்று நீங்கள் பக்றியிலை லீவு கேக்கிறது அவ்வளவு நல்லாயில்லை.... நான் சமாளிப்பன்.' என்று சொல்லி அவனை யசோ வேலைக்குப் போகவைத்தாள். அவள் வருத்தமாக
இருக்கும்போதுகூட அவனை அவள் வேலைக்குப் போகாமல்விடும் படி தடுக்கவில்லை.

நினைவைச் சுருக்கிக்கொண்டு வேலைக்குக் கிளம்பினான்.
'கேட்டதுக்குப் பதில் சொல்லத் தெரியாதே?'

'விடியகாத்தாலை எழும்பி நிண்டுகொண்டு ஏனப்பா அறுக்கிறீர்? ஜேர்மனியிலை வேலை எவ்வளவு முக்கியமெண்டு உமக்குத் தெரியாது. பேசாமற் போய் சமையலறைக்கை இரும்!'

'ஏன் நான் சமையலறைக்கை போயிருக்கவேணும்? ஹோலுக்கை இருப்பன், பெட்றூமுக்கை படுப்பன், வெளியிலை நிப்பன்.' என்றாள்.

'சரியான வாய்காரியாக்கிடக்கு!' எரிச்சலுடன் வாய்க்குள் முணுமுணுத்தான்.

'கேக்கேல்லை. சொல்லுறதை வாயைத்திறந்து சொல்லுங்கோ! பல்லுக்கை வைச்சுக் கடிக்காதேங்கோ!'

'என்ரை அலுவலை எனக்குப் பாக்கத் தெரியும் உன்ரை அலுவலை நீ பாத்தாச் சரி!'

'அதுக்குள்ளை என்ரை உன்ரை எண்டு ஏன் பிரிக்கிறீங்கள்? நான் ஒண்டும் சும்மா வரேல்லை. சுளைசுளையாச் சீதனத்தை வாங்கிக் கொண்டு வந்தனான்.'

'இப்ப ஆர் இல்லையெண்டது? ஏன் இந்தத் தேவையில்லாத கதை எல்லாம்...?'

'எது தேவையில்லாத கதை.?'

'எல்லாந்தானப்பா!'

'கண்ணன்!  அப்பா எண்டெல்லாம் என்னைப் பாத்துச் சொல்லத்தேவையில்லை. அப்பா, அம்மா ஆசையோடை வைச்ச பெயர் இருக்கு வேணி எண்டு, அதைச் சொல்லுங்கோ! அதை உச்சரிக்க உங்களுக்குக் கஸ்டமெண்டால் பல்டொக்டரிட்டைப் போய்ச் சரிப்பண்ணிக் கொண்டு வாங்கோ!'

'என்னடி கதைக்கிறாய்... ஆரிட்டை எங்கை நிண்டு பேசிறாய் எண்டு தெரிஞ்சுகொண்டுதான் பேசிறியோ...?'

'ஓ! தெரிஞ்சுகொண்டுதான் கதைக்கிறன்.!'
'என்னடி தெரிஞ்சு கொண்டு கதைக்கிறாய்...?'      
'உந்த டீ... மட்டும் வேண்டாம். பிறகு நான் டா.... போட வேண்டி வரும்.'
'சரியான வாய்க்கொழுப்பு...!'

'ஏன் இருக்கக்கூடாதா?'

'இருக்கலாம் இருக்கலாம்... ஆனால் அதைப் புருசனிட்டைக் காட்டக்கூடாது. தெரிஞ்சுகொள்!'

'எந்தப் புருசனிட்டைக் காட்டக்கூடாது?'

'அப்ப...!'

'அப்பவுமில்லை இப்பவுமில்லை! எப்பவும் நான் நினைச்சது படிச்ச ஒருத்தன்தான் எனக்குப் புருசனாக வருவானெண்டு... அண்ணை ஏமாத்திப்போட்டான்.!'

'நான் படிக்கேல்லையெண்டு ஆர் சொன்னது...?'

'பாக்கத் தெரியுதே..'

'என்ன தெரியுது?'

'எல்லாந்தான். செய்யிற வேலையிலிருந்து இருக்கிற வீடு வரைக்கும் நீங்கள் எப்பிடி எண்டதைச் சொல்லுது.'

'வேணி! எனக்கும் கதைக்கத் தெரியும். நான் உன்னைக்  கலியாணம் செய்தது எனக்கு ஒரு மனிசி வேணுமெண்டொழிய ஒரு மாப்பிள்ளை வேணுமெண்டில்லை.'

'எனக்கும் கதைக்கத் தெரியும்.'

'என்ன திருப்பித் திருப்பிக் கதைச்சுக் கொண்டிருக்கிறாய்? கலியாணம் கட்டி இரண்டாம் கிழமை இப்பிடி மனிசிக்காரி புரிசனோடை கட்சிகட்டிக்கொண்டு நிக்கிறது ஜேர்மனியிலை என்ரை வீட்டிலையாத்தான் இருக்கும்.'

'ஏன் நீங்கள் எல்லா வீட்டிலையும் போய்ப் பாத்துக்கொண்டே வந்தனீங்கள்?'

'கடிநாயை வீட்டுக்கை வைச்சிருக்கலாம் இப்பிடி ஒரு குரைக்கிற நாயை வீட்டுக்கை வைச்சிருந்தா வீடு அதிர்ந்தே வெடிச்சுப்போம்!'
'என்னைப் பார்த்து நாய் எண்டு சொல்லுறியோ.? உன்னைப் பார்த்து நான் குரங்கெண்டால் எப்பிடி?'

'நான் உன்னை நாய் எண்டு சொல்லேல்லை. நான்தான் நாய். ஏன் தெரியுமே...? பைத்தியம் ஒண்டைப் பெண்சாதி எண்டு கட்டிக்  கொண்டு வந்திருக்கிறேனே! என்னை நாய் எண்டும் சொல்லலாம் குரங்கெண்டும் சொல்லலாம்.'

'நான் பைத்தியமோ...? அண்ணை அறிஞ்சா உன்னை அடிச்சே கொண்டிடுவான்.'

'ஐயோ! எந்தச் சனியனிலை முழிச்சனானோ தெரியேல்லை.'

'என்னிலை முழிச்சனி, அப்ப நான் சனியனோ...?'

'ஈஸ்வரா...ஈஸ்வரா.... ஒண்டும் வேண்டாம்' என்று நேரத்தைப்  பார்த்துவிட்டு வேலைக்குப் போட்ட ஜக்கற்றைக் கழற்றிப் போட்டு, 'நான் என்ன செய்யிறது?' என்று கேட்டான்.

'என்னண்டாலும் செய்யுங்கோவன்! எனக்கென்ன?' என்றாள்.

'லீவு எடுக்கச் சொன்னீரப்பா!'

'அப்பா எண்டு சொல்லவேண்டாம். எனக்குப் பிடிக்காது.'

'சரி சொல்லேல்லை. ஒரு கிழமை லீவு எடுக்கிறன்.. என்ன?'

'நீங்கள் லீவு எடுத்தாலென்ன? வேலைக்குப் போனாலென்ன? உங்களோடை கத்தித் தொண்டை வறண்டு போச்சு. ரீ போட்டாத் தான் சரி வேணுமெண்டா நீங்களும் குடிச்சிட்டுப்போங்கோ! ஒரு அறிவு கெட்ட சனமாக் கிடக்கு. படிப்பறிவில்லாத தாய், தகப்பனுக்குப் பிறந்ததுகள் இப்பிடித்தானே இருக்கும். கலியாணம் செய்தால் வந்து போன சனங்கள் வீட்டை போய்வரவேணும்  நாலு பேர் வந்து போக வீட்டை வசதியா வைச்சிருக்க வேணும். இதெல்லாம் நான் சொல்லித்தெரிய வேணும்... பத்து வருசம் யூரோப்பிலை எண்டு பட்டை குத்திக்கொண்டு திரியினமேயொழிய, புத்தியெண்டது மண்டைக்கை ஒரு மண்ணளவுகூட இல்லை.'

'சரி, தேத்தண்ணியைப் போடு! குடிச்சிட்டுப் போய் லீவு எழுதியிட்டு வாறன. போக வேண்டிய இடத்துக்குப் போவம்!' என்றான்.

'விளங்கினால் சரி!' என்று வேணி சமையலறைக்குச்  சென்றாள்.

என்ன செய்வதென்று தெரியாதவனாய் தலையைப் பொத்திக் கொண்டு ஹோலுக்குள் அங்குமிங்கும் நடந்தான் கண்ணன்.


பரதன் கோகுலனின் நண்பன். ஜானகி வீட்டுக்குகு கோகுலனுடன் வருவான். கைவேலைகள் செய்யும் ஆற்றல் கொண்டவன். ஜானகி வீட்டில் வெப்பமூட்டி, தண்ணீர்க்குழாய், மின்னிணைப்பு போன்றவற்றில் ஏற்படும் சிறிய திருத்தவேலைகளைச் செய்வான். அண்மையில் சற்றலைற் கோப்பை பூட்டி, தமிழ் றேடியோ கேட்பதற்கும் ஆவன செய்திருந்தான்.

சில மாதங்களாக அவன் தானாக ஜானகிவீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டான்.
வா! என்று அழைத்தால்  வருவான்.
வேணியின் திருமணம் சம்பந்தப்பட்ட வேலைகளில் கோகுலனுக்குப் பெரிதும் உதவியாக இருந்தவன்.

அன்று ஒருநாள் தன் மனதில் அரும்பிய எண்ணத்தைக் கோகுலனுக்குத் தெரிவித்தான்.

'அக்காவோடை நேரை கதையுங்கோ!' என்று கோகுலன்  சொன்னான்.

'வேண்டாம்! எதுக்கும் சில வழிமுறையள்  இருக்கு! அக்காவோடை நீ கதை! அவ சம்மதிச்சால்  பிறகு நேரை கதைக்கலாம்;' என்று பரதன் தெரிவித்ததையடுத்து ஜானகிக்கு அவன் சொன்னதைப்  பக்குவமாக கோகுலன் எடுத்துக் கூறினான்.

'இப்படியான எண்ணத்தில் யாரும் என்ரை வீட்டுக்கை வரக்கூடாது' என்று அடித்துச் சொன்னாள் ஜானகி.

'நல்ல மனிசன். ஒருவிதத்தில்  பாவம்!'

'நான் யாரையும் எடைபோட்டுப் பார்க்கவோ இரக்கப்பட்டுத் தூக்கக்கூடிய நிலையிலோ இல்லை.'

'கோவிக்காதையக்கா! நீ சந்தோசமாயிருந்தால்   நானும் சந்தோசப்  படுவன். அப்பா, அம்மாவும் உன்னை நினைச்சு எவ்வளவு கவலைப்படுகிறார்கள்... கொஞ்சம் யோசிச்சுப்பார்!'

'என்னை உனக்கு நல்லாத்தெரியும். தெரிஞ்சுகொண்டும் கேக்கிறியே கோகுலன். நான் நிம்மதியா இருக்கிறன். இதுக்கு மேலை நான் ஒண்டையும் எதிர்பாக்கேல்லை.'

'அப்பிடிச் சொல்லாதை அக்கா! வெளிநாட்டிலை எவ்வளவு பேர் எப்பிடியெல்லாம்  வாழுறாங்கள்! உனக்கு இப்பிடியொரு சந்தர்ப்பம் கடவுளின் அருள் என்றுகூடச் சொல்லலாம்.'

'கடவுளை இழுக்காதை! கடவுளுக்கு நாங்கள் சந்தோசமா இருந்தது பிடிக்கேல்லைத்தானே! வேண்டாம். என்னைக் கவலைப் படுத்தாதே!'

'பிள்ளையளின்ரை எதிர்காலத்தையாவது யோசியன். உனக்காக வேண்டாம் அதுகளுக்கு ஒரு துணையெல்லோ!'

'அவங்களுக்கு இருக்கிற துணையள் போதும்! ஆரோ ஒருத்தனைப் பார்த்து அப்பா! எண்டு அவங்கள் கூப்பிட வேண்டாம். என்னாலை தாங்கிக்கொள்ள முடியாது.'

'விளங்குது அக்கா! உன்னுடைய நிலை எனக்கு நல்லா விளங்குது!
அத்தான்ரை இடத்தைக் கடவுளாலை கூட நிரப்ப முடியாது. ஆனால் பரதன்.... அவரும் பாவம். மனிசிக்காரி விட்டிட்டுப் போன பிறகும் இவ்வளவுகாலமும் தனியாத்தானே இருக்கிறார். நல்ல பிறன்ஸாக இருக்கலாம் இல்லையோ...?'

'நல்ல பிறன்ஸாக இருக்கலாம். நான் இல்லையெண்டு சொல்லேல்லையே!'

'அக்கா! விளங்காமல் கதைக்காதை!'

'என்ன விளங்காமல் கதைக்கிறன்! எனக்கு இன்னொரு கலியாணம், இன்னொரு வாழ்க்கை வேண்டாம்.'

'தடி முறிக்கிறமாதிரி பதில் சொல்லாதேங்கோ! ஒரு முடிவிலை இன்னொரு ஆரம்பம்.... இது இயற்கையின் விதி.'

'ஓ! இல்லையெண்டு நான் சொல்லேல்லை. அவர் இருக்கும் போது நான் ஒண்டுக்கும் யோசிக்காமல் இருந்தன். எஞ்சினிலை கொழுவின பெட்டிபோல வாழ்க்கைப் பாதையில் ஓடிக்கொண்டிருந்தேன். பொறுப்பெல்லாம் அவர் தலையிலை. நல்லா சிந்தித்தார். திட்டமிட்டு நடந்தார். நல்ல வாழ்க்கை தந்தார். மரணம் இப்பிடி இடையில் வருமெண்டு ஆர் நினைச்சது? ஆனாலும் பார்! தனக்கு ஏதும் நடந்தாலும் நானோ பிள்ளையளோ தெருவுக்கு வந்திடக்கூடாது... இன்னொருத்தரிட்டைப் போய்க் கையேந்தக்கூடாது எண்டு மனிசன் எல்லா ஒழுங்கும் செய்திருக்கிறார்! அவரின்ரை பொறுப்பு இப்ப என்ரை தலையிலை. எண்டாலும் அதைக் கொண்டு நடத்த எனக்கு மனிசன் வழிகாட்டிப் போட்டுத்தான் போயிருக்கிறார்.'

'சரி! சரி! இனி ஏன் அழுகிறாய்...? அழாதை! கண்ணைத் துடைச்சுப்போட்டு சமைக்கிற அலுவலைப் பார்! பெடியள் வரப்போறாங்கள்!' என்று அவளைச் சமாதானம் செய்தான் கோகுலன்.

இதன்பின் அவசியம் ஏற்படும்போது மட்டும்தான் ஜானகி வீட்டுக்குப் பரதன் வருவது வழக்கம்.


யசோ தன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
'வா யசோ! கூப்பிட்டா நான் வந்திருப்பன்தானே! கவனம்...' என்று ஜானகி அன்போடு உபசரிக்க, கோகுலனும் அவள் சுகத்தை ஆதரவு தழுவக் கேட்டான்.

'இப்ப எப்பிடியிருக்கு?'

'பறவாயில்லை. முந்தினதைவிட எவ்வளவோ சுகம். இவ்வளவு கெதியா எழும்பி நடப்பன் எண்டு நான் நினைக்கேல்லை.'

'கடவுள் செயல். நீங்கள் கும்பிட்ட நாராயணன் திருவருள்தான் எல்லாம்.'

'இனி என்னை முதலாளி வேலைக்கு வரவேண்டாமெண்டு சொல்லுறவரோ தெரியாது.'

'ஏன்? அவருக்கு உம்மிலை நல்ல விருப்பம்தானே. அடிக்கடி விசாரிப்பார். 'யசோ!' என்று நல்ல வடிவா இழுத்துச் சொல்லுவார்.'

அப்போ ஜானகி யசோவைப் பார்த்து,
'வருத்தம் மாற நீர் ஏதாவது படியுமன். றெஸ்றோறன்ற்வேலை உமக்குக் கஸ்டமெல்லே! எழும்பி இருக்கமாட்டாமல் இருக்கிறீர். இப்ப ஏன் வேலைக்கதை? சுகம் வரட்டும். பிறகு பாப்பம்.'

யசோ ஹோலுக்குள் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தாள். அப்போ தொலைபேசி அடித்தது. எடுத்து,

'ஹலோ! யசோ கதைக்கிறன்!' எண்டவள்,

'அண்ணை! சுகமாக இருக்கிறன்.... மருந்துகள் எடுக்கிறன்... இரண்டு நாளைக்கொருக்கா வரச்சொல்லி டொக்டரிடம் போனனான். இப்ப ஒரு கிழமைக்கொருக்கா செக் பண்ண வரச் சொல்லியிருக்கினம்.'

'உன்னைத் தனிய விட்டிட்டு வந்தது எவ்வளவு பேய்த்தனம் எண்டு இஞ்சை அண்ணியும் சரியாக் கவலைப்படுகிறா. இரவிலை நித்திரை கொள்ளாமல் உன்னைப்பற்றித்தான் கதைச்சுக்கொண்டிருப்பம். ஒரே யோசினையாக் கிடக்கு!'

'நான் நல்ல சுகமா இருக்கிறன். நீங்கள் ஒண்டுக்கும் யோசிக்கவேண்டாம். இஞ்சை ஜானகியக்கா கோகுலன் எல்லாரும் என்னை நல்லாப் பாக்கினம். அவைக்குத்தான் என்ன கைமாறு செய்யப்போறனோ தெரியாது.'

'அந்தப் போக்கிலியை நம்பி உன்னை அவனிட்டை ஒப்படைச்சது என்ரை மடைத்தனம். நல்லபிள்ளை மாதிரி இருந்தான்.... இப்பிடிச் செய்ய என்னெண்டு மனம் வந்தது?'

'அண்ணை! சும்மா ஏன் நீங்கள் உங்கை இருந்து கொண்டு கவலைப்படுகிறியள்? எனக்கு ஒரு குறையுமில்லை. கண்ணன் கலியாணம் செய்து தன்ரை பாதையிலை போட்டார். அவரின்ரை கதை இனிமேல் எங்களுக்கு வேண்டாமண்ணை!'

'உவங்களையெல்லாம் கடவுள் சும்மா விடமாட்டார்... என்று தன் மனக்கவலைகளைக் கொட்டினான் அண்ணன் வரதராசன்.

'வேறை என்ன அண்ணை? நான் ஏதாவது அவசரம் எண்டா எடுப்பன்தானே! அண்ணி, பிள்ளையளைக் கேட்டதாச் சொல்லுங்கோ!' என்றுவிட்டு ரெலிபோனை வைத்தாள் யசோ.

அப்போ ஜானகி வெளியேயிருந்து வீட்டுக்கு வந்தாள்.

'அண்ணை எடுத்தவர். என்னை நினைச்சு அண்ணியும் அவரும் நல்லாக் கவலைப்படுகினம்.'

'தூர இருக்கேக்கை வருத்தம் துன்பம் எண்டு நினைக்கப் பெரிசாக் கவலைப்படத்தான் தோன்றும். நேருக்கு நேரை பார்க்கக் கதைக்கக் கவலை கொஞ்சம் குறையிறது வழக்கம்தானே! என்ன செய்யிறது...?'

'நீங்களும் கோகுலனும் பக்கத்திலை இருந்து பார்க்கிற தாலை எனக்கு ஒரு குறையுமில்லையெண்டு சொன்னனான். அது அவருக்குக் கொஞ்சம் ஆறுதல்.'

'எல்லாருக்கும் எங்களைப்பற்றி பெரிசா புழுகி விடுவாய். மனிசர் எண்டா ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்யிறது தானே!' என்று சமையலறைக்குட் போனவள் அங்கே சமைத்து வைத்திருப்பதைக் கண்டு, கோபமாக வெளியே வந்து,

'யசோ! என்ன செய்திருக்கிறீர்.. சொன்னா கேக்கமாட்டீர்... டொக்டர் கொஞ்சநாளைக்கு ஒரு வேலையும் செய்ய வேண்டா மெண்டு எச்சரிச்செல்லே விட்டவர். நீர் சோறு கறியெல்லாம் சமைச்சு இவ்வளவு வேலையும் பாத்திருக்கிறீர்!'

'அக்கா! என்னாலை ஏலக்கூடியதைத்தான் செய்தனான். சும்மா வீட்டுக்கை இருக்கச் சினமாக்கிடக்கு!'

'றேடியோ கிடக்கு ரிவி இருக்கு.... எவ்வளவு புத்தகங்கள் இருக்கு... பொழுதா போகாது? வரட்டும் கோகுலன். அவன் சொன்னாத்தான் உமக்கு ஏறும்!'

'அக்கா பிளீஸ்! அவரிட்டைச் சொல்லிப் போடாதேங்கோ! என்ரை அக்காவெல்லே.... மெதுவா மெதுவா ஏதோ செய்தனான். எனக்கு ஒரு கஸ்டமுமில்லை. றைஸ்குக்கருக்கை சோறைப் போட்டிட்டு, இரண்டு கறி சமைச்சிருக்கிறன். இதென்ன ஊரே...? விறகு தேடி, அடுப்பு மூட்டி, வாளி எடுத்துத் தண்ணி அள்ளிச் சிரமப்பட...?

'நீ கதைப்பாய்... என்ரை யசோவெல்லே... கொஞ்ச நாளைக்குக் கவனமாக இரடி! எவ்வளவு பெரிய ஒப்பரேசன். சாகக் கிடந்து தப்பி எழும்பிருக்கிறாய்.'

'நான் என்ன குழந்தைப்பிள்ளையே? என்னாலை முடிஞ்ச தைத்தானே செய்யிறன். அதோடை டொக்டர் உடம்புக்கு அசைவு வேணும்... லேசான வேலைகள், எக்ஸ்சசைஸ் எல்லாம் செய்யவேணும் எண்டுதானே சொல்லியிருக்கிறார். அக்கா கோகுலனுக்குச் சொல்லிப் போடாதேங்கோ! அவர் கத்துவார் பிளீஸ்'

'சரி! நான் சொல்லேல்லை எங்கை இவங்கள்...?'

'சாப்பிட்டு வெளியிலை விளையாடப்போட்டாங்கள்!'

'பள்ளிக்கூட வீட்டுவேலையெல்லாம்  செய்யேல்லையோ...?'

'செய்திட்டுத்தான் போனவை!' என்றாள் யசோ.


` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 15
14.8.2019

விசா கிடைத்துவிட்டது

பங்குபற்றும் பாத்திரங்கள் - 

யசோ
கோகுலன்
ஜானகி  
கண்ணன்  
வேணி (கோகுலனின் தங்கை)


றெஸ்ரோறன்ரில் வெங்காயம், தக்காளி, சலாற் என்பன வெட்டுவதும் சமையலுக்கு வேண்டிய ஒழுங்குகள் செய்வதும் அவளது வேலை.

யசோவுக்கு நேரம் போவதே தெரியாமலிருக்கும். மூளையைப் போட்டு உடைக்காமல் கவலைகளை ஒரு ஓரத்தில் ஒதுக்கிவிட்டு, உலகத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

யசோ வேலையால் வீட்டுக்கு வந்து சமையலில் ஈடுபட்டிருக்க வீட்டுமணியொலித்தது.

தபாற்காரர்.

பெரிய எம்பலப்பில் பாஸ்போர்ட். இந்தியா எம்பசியிலிருந்து வந்திருந்தது. கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டாள்.
விசா அடிக்கப்பட்டிருந்தது.
சில நாட்கள் இந்த நினைப்பே அவளுக்கில்லை. இப்ப என்ன செய்யிறது...?

பாஸ்போர்ட் வந்த விடயத்தை யாருக்கும் சொல்லாமல் இருப்பது என்று தீர்மானித்தாள்.

மாதவனிடம் வட்டிக்குக் கடன் வாங்கி, வங்கியிலும் எடுத்து வேணியின் சீதனத்தைக் கொடுத்தான் கோகுலன்.

கல்யாணத்தேதி வைத்தாகிவிட்டது. பிள்ளையார் கோவிலில் கல்யாணம். சாப்பாடு, எல்லா ஒழுங்குகளும்  நடந்தன.

நகை, உடுப்பு வாங்குவது, பலகாரங்கள் செய்வது என்று ஒரே வேலையும் ஓட்டமுமாய் காரியங்கள் நடந்தன.

அந்த நெருக்கடியிலும்  கோகுலன்  யசோவிடம், 'ஏன் இன்னும் பாஸ்போர்ட் வரவில்லை...?' என்று கேட்டான்.

'நாளெடுக்கும்தானே... இப்ப என்ன அவசரம்?' என்று மறைக்க முயன்றாள் அவள்.

'ஒருக்கா எம்பஸிக்கு எடுத்துக் கேட்டிட்டு, நேரை போவம்!' என்றான் கோகுலன்.

'வேண்டாம்! வேண்டாம்! இரண்டு நாள் பாத்திட்டு எடுப்பம்.' என்று தடுத்தாள் யசோ.

கோகுலன் கேட்கவில்லை. தொலைபேசியை எடுத்து நம்பர்களை அழுத்தினான்.

யசோ விரைந்து வந்து தடுத்தவாறே,
'பாஸ்போர்ட் வந்திட்டுது' என்றாள்.

'வந்திட்டுதோ...! எங்கை?'

'வந்திட்டுது. அதை ஏன் இப்ப? நாளைக்குக் கலியாணவீடு முடியட்டும்.' என்றாள்.

'நான் என்ரை கண்ணாலை பாத்தால்தான் நம்புவன். பாஸ்போர்ட்டைக் காட்டும்.' என்றான்.

'நீங்கள் பிடிச்சா உடும்புப்பிடி!' என்றவள், எழுந்து சென்று பாஸ்போர்ட்டை எடுத்து வந்தாள்.

வாங்கிப் பார்த்துவிட்டு,
'வந்து எத்தினை நாளாகுது? உடனை சொல்லியிருக்கலாமெல்லே!'
என்று கேட்டான்.

'கலியாணம் நடக்கட்டும். அதுக்குப் பிறகு சொல்லலாமெண்டு இருந்தன்.'

'கலியாணம் நடக்கும்தானே! முதலிலை உம்முடைய வருத்தத்தை மாற்ற யோசிக்கவேணும்!'

'கோகுலன்! குழந்தை மாதிரி கதைக்காதேங்கோ!'

'என்ன குழந்தை மாதிரி...!'

'இந்தியா போறதெண்டா விளையாட்டே..? நீங்கள் படும் கஸ்டம் எனக்குத் தெரியும். பிளீஸ் வேண்டாம்!'

'ஒரு கஸ்டமுமில்லை. நீர் நாளைக்கு இந்தியாவுக்குப் போறீர்! ஆயித்தப்படுத்தும்!' என்று கோகுலன் உறுதியாகக் கூறிவிட்டு அவசரமாக வெளியேறினான்.

'நான் போகேல்லை... கோகுலன்! இஞ்சை நில்லுங்கோ....! சொல்லுறதைக் கேளுங்கோ!' என்று யசோ எவ்வளவோ தடுத்தும் அவன் கேட்கவில்லை. சோபாவில் உட்கார்ந்து பிரடி சார்வுப்  பகுதியில் பொறுக்க அண்ணார்ந்து பார்த்தபடி, கையையும் கட்டிக் கொண்டு யோசனையுடன் இருந்தாள் யசோ.

ஐானகி குளித்துவிட்டு, தலையிலே துவாய் முறுக்கியபடி கிடக்க, புதுமலர் போல வந்தாள்.
அவளைக் கண்டு, தலையை நிமிர்த்தி உட்கார்ந்தபடி,
'கோகுலன் எனக்கு ரிக்கற் எடுக்கப் போகிறார்!' என்றாள்.

'பாஸ்போர்ட்..!' என்று ஆச்சரியம் முகத்தில் விரியக் கேட்டாள் ஐானகி.

'பாஸ்போர்ட் விசா அடிச்சு வந்திட்டுது. நான் சொல்லேல்லை. இப்ப எம்பஸிக்கு ரெலிபோன் எடுக்கப்போறன் எண்டு சொன்னார். அதுதான் பாஸ்போர்ட் வந்திட்டுது எண்டு சொன்னனான். அதைப் பாத்திட்டு நாளைக்கு நீர் இந்தியாவுக்குப் போறீர் எண்டு, நான் மறிக்க மறிக்கக் கேளாத மாதிரிப் போட்டார்.

'நீர் என்ன யசோ.... குழந்தை மாதிரி? எப்ப விசா வரும் எண்டு நாங்கள் பாத்துக்கொண்டிருக்கிறம்... வந்த விசாவைச் சொல்லாமல் என்ன நீர்....?'

'நீங்கள் கோகுலனைவிட மோசமாக் கிடக்கு! நாளைக்கு உங்கடை தங்கச்சிக்குக் கலியாணம். நிலைமை தெரியாமல் கதைக்கிறீங்கள்!'

'கலியாணத்துக்கும் இதுக்கும் என்ன...? முதலிலை நீ குணமாக வேணும். இந்தியா போறதெண்டுதானே பிளான் போட்டிருந்தது.'

'அதுக்குக் காசெல்லே வேணும்!'

'காசில்லாமலே கோகுலன் ரிக்கற் எடுக்கப் போறான்?'

'கலியாணவீட்டுக்குச் செலவழிக்க வேண்டிய காசு கையில் வைச்சிருக்கிறார். அதை எனக்குத் தந்திட்டு பிறகு தங்கச்சியாருக்கு என்ன சொல்லப்போறார்?'

'அதை நான் பாத்துக்கொள்ளுறன். நீ இந்தியாவுக்குப் போய் வருத்தத்தை மாத்திக்கொண்டு வா!'

'அக்கா! நான் சொல்லுறதைக் கேளுங்கோ!'

'நீ ஒண்டும் சொல்ல வேண்டாம். ஒரு மனதோடை போய் நோயைக் குணப்படுத்திக்கொண்டு வா!'
கோகுலன் திரும்பி வந்தான்.

'ரிக்கற் விசாரிக்கச் சொல்லியிருக்கிறன். நாளைக்கிடையில் தெரியும். இல்லாட்டி எயர்போர்ட்டிலை போய்ப் பாக்கிறது?' என்றான்.
'சூட்கேஸை றெடி பண்ணிவை!' என்றாள் ஐானகி.

கல்யாணமும் அறுவைச் சிகிட்சையும்


வேணியைக் கூட்டிக்கொண்டு கண்ணன் வந்தான்.

'கலியாணவீடு எண்ட அமளியே இல்லை!' என்றாள் வேணி.

'அமளிதுமளியிலை ஒண்டுமில்லை. ஆகவேண்டியது சரியா நடந்;தா சரிதானே!' என்றான் கோகுலன்.

'வீடியோவுக்குச் சொன்னனீங்களே!'

'ஓ! அதெல்லாம் எப்பவோ சொல்லிப்போட்டன். கொஞ்சம் முந்தியாவும் ஆளைச் சந்திச்சனான். எல்லாம் ஓ.கே.'

'ஹோல்லை செய்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.'

'அது என்ரை பிழையில்லை. அத்தானிட்டை அதைக் கேள்!'

'என்ன?' என்று வேணியைப் பார்த்துக் கேட்டான் கண்ணன்.

'ஹோல்லை செய்ய விட்டிருக்கலாம்தானே! ஏன் மாட்டன் எண்டனீங்கள்?'

'கோயில் எண்டால் நல்லதுதானே!' என்றான் கண்ணன் சுருக்கமாக.

'ஹோல் எடுத்து எல்லாருக்கும் சொல்லி வடிவாச் செய்திருக்கலாம். வாழ்க்கையிலே ஒரேயொருக்கா வாறதைச் சிறப்பாச் செய்யலாம்தானே!'

'பிள்ளையின்ரை முதல் பேத்டேயை நீ நினைக்கிறமாதிரி ஹோல்   எடுத்து வடிவாச் செய்யன். விடிஞ்சாக் கலியாணம்... அப்பிடிச் செய்திருக்கலாம் இப்பிடிச் செய்திருக்கலாம் எண்டு மனசைக் குழப்பாமல் சந்தோசமா இரு!' என்றாள் ஜானகி.

'எட்டு மணிக்கு வீடியோ எடுக்க வரச்சொல்லியிருக்கு! உங்கடை வீட்டைதான் முதல் வருவினம். குளிக்க வாக்கிறதை எடுத்திட்டு, பிறகு இஞ்சை வருவினம்.' என்றான் கோகுலன்.

'அங்கை வீடியோ எடுக்க வேணுமே...?' என்று மனமில்லாமல்  கேட்டான் கண்ணன்.

'எடுக்கத்தானே வேணும்' என்றாள் வேணி.

'நாங்கள் குளிக்கவாக்க வருவம்... அப்ப எடுக்கிறது பிரச்சனையில்லை.' என்றான் கோகுலன்.

அப்ப கோகுலனின் நண்பர்கள் வந்தார்கள்.
அவர்களுக்கு ஜானகி தேநீர் தயார்படுத்தினாள். யசோ அரை குறையிலிருந்த சமையல்வேலைகளைக் கவனித்தாள்.

ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வெற்றிக்கொடி, பலூன்போன்ற அலங்காரப்பொருட்களைக் காட்டி, சோடிப்பதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தான் கோகுலன்.

ஆணியடித்தல், நூல்கட்டல், வெற்றிக்கொடிகட்டல், பலூன்ஊதுதல் என்று இளைஞர்கள் தங்களுக்குள்  பகிடிகள், கிண்டல்களுடன் வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.

சில தெரிந்தவர்கள், திருமணத்துக்கு வேண்டிய உதவி ஒத்தாசை செய்யவும், பம்பலுக்கு புதினமறிய என்று சிலரும் வந்திருந்தார்கள்.

எல்லாருக்கும் எதாவது சாப்பாடு செய்யவேண்டும்;; என்று பெண்கள் சமையல் அலுவல்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

கண்ணனும் வேறுசிலரும் சோபாவில் உட்கார்ந்திருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுவர்களுக்கு ஒரேகொண்டாட்டம்  ஓடியாடி விளையாடிக்கொண்டும் அடிபட்டு அழுதுகொண்டும்; இருந்தார்கள்.

நேரமாக, வந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்ப, கண்ணனும் சிறிது நேரம் இருந்துவிட்டு, விடிய எழும்பவேணும் என்பதால் வீட்டுக்குச் சென்றான்.

யசோ படுக்கும்போது மூன்று மணியாகிவிட்டது. திருமண அழைப்பிதழ் ஒன்று அவள் கண்களில்பட, கண்ணன், யசோ என்று சேர இருந்தது... காலத்தால் யசோ தள்ளப்பட்டு, வேணி வந்து அமரப்போகிறாள் என்று மனம் நினைக்க, மறுபக்கம் திரும்பிப் படுத்தாள். சிறிது நேரம் போல இருந்தது. 
.
ஐானகி அவசரமாக யசோவை எழுப்பினாள்.

'ஹொஸ்பிற்றல்லை இருந்து ரெலிபோன்!'  யசோ போர்வையைச் சட்டென்று தள்ளிக்கொண்டு, ஹோலிலிருந்த ரெலிபோனையடைந்து கதைத்தாள்.

ஐானகியும் யசோவின் பக்கத்தில் நின்று,  'ஹொஸ்பிற்றல்லை இருந்து இந்த நேரத்திலை வந்த ரெலிபோன் என்னவாக இருக்கும்'  என்ற திகிலுடன் உரையாடலை உற்றுக் கேட்டாள்.

யசோவுக்குப் பொருந்தக்கூடிய சிறுநீரகம் ஒன்று கிடைத்திருப்பதாயும் உடனே அவளைக் ஹொஸ்பிற்றலுக்கு வரும்படி  அவசர அழைப்பு வந்தது.

விடயத்தை ஐானகி நித்திரையாயிருந்த கோகுலனை எழுப்பிச் சொன்னாள்.

ஆழ்ந்த நித்திரையிலிருந்து எழுந்தபோதும்,  அடிமனம்வரை மகிழ்ச்சி ஊட்டும் செய்தி என்பதால் சோம்பல் பறந்துபோக, எழுந்து நேரத்தையும் பார்த்துவிட்டு,
'எங்கை யசோ? மினக்கெடாமல் வெளிக்கிடும்...' என்று அவளைக் கூட்டிக்கொண்டு போகத் தானும் தயாரானான்.

யசோ வைத்தியசாலைக்குப் போகவும் அங்கே எல்லாம் தயார் நிலையில் இருந்தன.

வைத்தியர் சில சோதனைகளை மேற்கொண்டபின், திருப்தியுடன் துணைடாக்டர்களைப் பார்த்துப் பேசிவிட்டு, வெற்றியளிக்கும் என்று யசோவைத் தடவி, அவளுக்கும் உற்சாகம் கொடுத்துவிட்டுச் செல்ல, தாதிமார் அவளைக் கட்டிலில் படுக்க வைத்து, தள்ளிக் கொண்டு யசோவுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றனர்.

மேலும் பல்வேறு சோதனைகள் செய்யவேண்டி இருந்தன. அவற்றின் பின் ஒப்பிரேசனுக்கு   நேரம் குறிப்படப்பட்டிருந்தது.  

அவளுக்குக் கை கொடுத்து, 'நாராயணன் பக்கத்தில் இருப்பார்.. தைரியமாக இரும். நான் பின்னேரம் வாறன்!' என்றான் கோகுலன்.

'எனக்கு எல்லாம் சுகம் வரும், நீங்கள் தங்கச்சியின்ரை கல்யாணத்தை முழுமனதாக நிறைவேற்றி வையுங்கோ! என்னை வந்து நாளைக்குப் பாக்கலாம்.' என்றாள் யசோ.

'ஓ.கே... ஓ.கே... அதெல்லாம் நான் பாப்பன். இப்ப சாமியைக் கும்பிடும், நானும் என்னால் இயன்றமட்டும் ராமனை மன்றாடுவேன். யசோ! ''ராமஐயம் வெல்லும்!' என்று கூறி,  வாசல்வரை வந்து விடை கொடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினான் கோகுலன்.

கல்யாணம் கோவிலில் சிறப்பாக நடந்தேறியது. படங்கள், பலகாரங்கள், வீடியோப்படப்பிடிப்பு எல்லாம் வழக்கம்போலக் களை கட்டியிருந்தன.

மணவறையில் மணமக்கள் மகிழ்வுடன் உட்கார்ந்திருக்க, குருக்கள்  முறைப்படி மந்திரங்களை உச்சரித்து ஊர்க்கல்யாணம்போலப் பொலிவுடன் நடத்தி வைத்தார்.

'யசோ ஹொஸ்பிற்றலுக்காம்' என்ற செய்தி கண்ணனின் காதுக்கும் எட்டியது.

மாப்பிள்ளையாக புதுமணமகளுக்குப் பக்கத்தில் இருந்தபோதும், அந்தச்செய்தி அவன் நெஞ்சில் யசோவின் நினைவுகளை  அவிழ்த்துவிட்டது.

அவள் கலியாணவீட்டுக்கு வரக்கூடாது என்று அவன் நினைத்தான்.
அவள் வருவாள். அவள் வர மறுத்தாலும் ஜானகியும் கோகுலனும் அவளை விடப்போவதில்லை. கூட்டி வருவார்கள்.

அவள் வந்தால் தெரிந்தவர்கள் விசாரிக்க, கலியாணவீட்டில் குழப்பம் பிறந்தால்... அவன் மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தது.

இப்போ அவள் வரமாட்டாள். ஆனால் அவன் நெஞ்சில் ஏதோ ஒரு வேதனை.

வேண்டாதவளென்று தள்ளியாச்சு, ஆனால் ஒன்றாயிருந்த சில நாட்கள் அவன் நெஞ்சில் பதித்த சில சுவடுகள் லேசாக அரிப்பது போல ஒரு உணர்வு.

சூத்தையென்று தான் தூக்கியெறிந்த விதை ஒன்று ஈரம்பட்டுத் தளிர் விடுவதைக் கண்டவன்  போல 'நல்லாயிருக்கவேணும்' என்று அவன் மனம் வேண்டியது.

யாரோ ஒருத்தி அவள்.

'இல்லை. சிலநாட்கள் மனைவியாக இருந்தவள்.
பலருக்குத் தெரியாது.
சிலருக்குத் தெரியும்.
தெரிந்தவர்கள் பலருக்கு இன்று அவனுக்குக் கல்யாணம் என்று தெரியாது.

தெரிந்த சிலரும் எமக்கேன் வம்பை என்று வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டார்கள்.

அவள் நல்லவள்.
குணத்தில் குறைபிடிக்கமுடியாது.
ஆனால் வருத்தக்காரி.

'என் இலட்சியத்துக்கு அவளால் துணை நிற்க முடியாது. என்  இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். கோகுலன் என் இடத்தில் இருந்திருந்தால்.... தமக்கையின் பிள்ளை களைப் பார்க்க வந்திருந்த அந்தப் பழக்கத்துக்காக இவ்வளவு உதவிகளையும் செய்கிறவன். மனைவியாக வரப்போகிறவளாக இருந்திருந்தால்.... தன்னைப் போலத் தள்ளிவிட்டிருப்பானா?' என்று நினைக்கவே அவன்  நெஞ்சு மறுத்துவிட்டது.

கோகுலனின் மனசு தனக்கில்லை என்பதை அவன் ஏற்றுக் கொண்டான். ஐானகிகூட எவ்வளவு அன்பை யசோ மீது வைத்திருக்கிறாள். ஏனென்று அவனுக்கு விளங்கவில்லை.

வேணிமீது கூட ஐானகி இவ்வளவு அன்பு வைத்திருப்பாள் என்று சொல்லமுடியாது.

ஐயா மணியைக் கிலுக்கி மந்திரங்களைக்கூற, அவன் மனம் மீண்டும் மணவறைக்கு வந்தது.

மேளவாத்தியம் (வானொலியில்) மிக உரமாக ஒலித்தது.
தாலியை வேணியின் கழுத்தில் கட்டினான்.
கமராக்கள் மின்னல் போல ஒளியை எழுப்பி போட்டோக்களைப் பிறப்பித்தன.
வீடியோப்படமும் மிக மும்மரமாகப் பிடிக்கப்பட்டது.

'சிரிச்சுக்கொண்டு நில்லுங்கோ!' என்று வேணி பலமுறைகள் கண்ணனுக்குச் சொல்லிவிட்டாள்.

அவனும் பல தடவைகள் சிரித்துப் பார்த்துவிட்டான். அது நிற்கவில்லை.

கல்யாண ஆரவாரங்கள் எல்லாம் ஒரு கிழமைக்குள் அடங்கி ஓய்ந்துவிட்டன.

கண்ணனுக்கு லீவு போதுமானது இருந்தும் கல்யாணம் முடிந்து இரண்டாவது வாரமே வேலைக்குக் கிளம்பினான்.

'கனிமூன்;...... அது இதெண்டு ஜாலியா ஊர் உலாத்தப் போட்டு வாறதை விட்டிட்டு. வேலைக்குப் போகப்போறன் எண்டுறாய். கிடக்கற லீவை இப்ப எடுக்காமல் என்னடாப்பா நீ...? முதலாளிக்கு உழைக்கிறவனாக் கிடக்கு!' என்று நண்பர்கள் கிண்டலடித்ததை மனதில் வைத்திருந்த வேணி, அவன் வேலைக்கப் புறப்படும்போது,
'லீவு எடுங்கோவன்!' என்றாள்.

` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 14
5.8.2019

ஆசையும் அறியாமையும்பங்குபற்றும் பாத்திரங்கள் - 

யசோ
கோகுலன்
ஜானகி  
கண்ணன்  
வேணி (கோகுலனின் தங்கை)
மாதவன் (வட்டிக்குக் கடன் கொடுப்பவர்)யசோ கண்கலங்கி நின்றாள்.
'இராப்பகலா உழைச்சகாசு..... இப்பிடி அநியாயமாப்போச்சு.' என்றாள்.

'நீ கவலைப்படாதை! அவனாலை இதைமாதிரி எவளவோ சம்பாதிக்க முடியும்... அவனைக் கவலைப்படாமல் பாக்கவேணும். இல்லாட்டி குடிக்கத் தொடங்கிவிடுவான்.' என்ற ஐானகி தொலைபேசி எடுக்கப் போக யசோ தடுத்தாள்.

'வேண்டாம்! நான் கொஞ்சம் முந்தியாத்தான் கதைச்சனான். பஞ்சி யாக்கிடக்காம் கொஞ்சநேரம் படுத்திட்டுப் பிறகு வாறன் எண்டு சொன்னவர்.' என்றாள்.

'நீ வந்த பிறகு அவன் குடிப்பது குறைவு.'

'நல்லபிள்ளை!' என்றாள் யசோ.

'நான் குளிச்சிட்டு வாறன்' என்று ஐானகி உடுப்புக்களை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.

இரவு
கோகுலன் வந்திருந்தான்.
நீண்டநேரம் கதைத்துக்கொண்டிருந்தார்கள்.
பத்துமணியாகியும் வேணியும் கண்ணனும் வீடு திரும்பவில்லை.  பார்த்துக்கொண்டிருந்துவிட்டு கோகுலன் கண்ணன் வீட்டுக்கு ரெலிபோன் எடுத்தான்.
'சமைக்கிறம் வாங்கோ!' என்றான் கோகுலன்.

'நாங்கள் இங்கை சமைச்சிட்டம்.' என்றாள் வேணி.
'சாப்பிட்டு வாங்கோ!' என்றான் கோகுலன்.

'நாளைக்கு வாறம்!' என்றாள் வேணி.

தொலைபேசியைக் கையால் பொத்தியவாறு ஐானகியைப் பார்த்து,
'அங்கை படுக்கப்போயினமாம்... நாளைக்கு வருகினமாம்!' என்று சொன்னான் கோகுலன்.

'அக்கா ஏசுறா! சமைச்சுச் சாப்பிட்டு நில்! நான் வாறன் கூப்பிட!' என்றான் கோகுலன்.

'நான் உங்கை வந்து என்ன செய்ய...?'

'சரி!' என்று கோபத்துடன் றிசீவரை வைத்தான் அவன்.

யசோ அமைதியாக இருந்தாள்.

ஐானகி எரிந்து விழுந்தாள்.

'கலியாணம் கட்டமுந்தி கதைக்கவிட்டதே பிழை இங்கை வந்து என்ன செய்யிறது எண்டு திருப்பிக் கேக்கிறா அவ நாச்சியார் ஊர் சிரிக்கப்போகுது.'

'நான் போய்க் கூட்டிக்கொண்டு வாறன்!' என்று எழுந்தான் கோகுலன்.

'வேண்டாம்! பிறகு அந்தாள் என்ன நினைக்குமோ தெரியாது. எங்கடைபிள்ளையெல்லோ நினைக்கவேணும்.' என்று தடுத்தாள் ஐானகி.

யசோவுக்கு கண்ணன் வீட்டில் தங்கிய முதல்நாள் கண்முன்னே பளிச்சிட்டது. காதல் வார்த்ததைகளைக் கொட்டு கொட்டென்று கொட்டியதும் நடந்துகொண்ட விதமும்... சீ... மறந்துவிட்டான். ஆனால் யசோவால் அவ்வளவு சீக்கிரம் எப்படி மறக்கமுடியும்?

தலையிடிக்குது.... என்று சாட்டுச் சொல்லிவிட்டு எழுந்து போக முயற்சித்தாள்.
'எனக்கும்தான்' என்றாள் ஐானகி.

'எனக்கு மண்டை வெடிச்சிடும் போலிருக்கு! இதுக்கு ஒரேயொரு மருந்து விஸ்கி...!' என்றவன், யசோவைப் பார்த்துவிட்டு, 'இல்லை' என்ற அர்த்தத்தில் தலையாட்டினான்.

மறுநாள் வேணி வீட்டுக்கு வந்தாள்.

'எங்கை அத்தான்...?' என்று கேட்டான் கோகுலன்.

'றேடியோ பூட்டுறதுக்கு ஏதோ வேண்டப்போறாராம்.'

'சற்றலைற் பூட்டவோ....?'

'ஏதோ சொன்னவர். எனக்கு விளங்கேல்லை. எல்லா வீட்டிலும் தமிழ்றேடியோ இருக்கு! நீங்கள் ஏன் வேண்டேல்லை எண்டு கேட்டன், உதெல்லாம் கேட்க எனக்கு நேரமில்லை. இப்ப உனக்கு வேணுமெண்டா பூட்டிவிடுறன் எண்டவர்.'

'நல்ல விசயம்தான். ஆனா நீ வந்ததும் வராததுமா ஏன் அத்தானிட்டை இதையெல்லாம் கேட்டனீ?'

'அத்தானிட்டைக் கேட்காமல் உன்னட்டைக் கேட்கட்டோ? நீ எனக்கு வாங்கித்தாறியோ...? நீ வேறை ஆருக்கேனெல்லோ வாங்கிக் குடுப்பாய்...!'

'என்ன பிரச்சனை?' என்று கேட்டுக்கொண்டு ஐானகி வந்தாள்.

'ஒண்டுமில்லை' என்றான் கோகுலன்.

'என்ன ஒண்டுமில்லை ஜேர்மனிக்கு வந்து ஒருமாதமாகுது. அண்ணையெண்டு இருக்கிறாய் என்ன வேண்டித் தந்தனீ....?'

'இல்லைஇ ஒண்டும் வேண்டித்தரேல்லை. உனக்கு ஏதும் வேணுமெண்டால் ஒரு துண்டிலை எழுதிவை! நான் நாளைக்கு வாங்கித்தாறன்!' என்றவன் விரைவாக வீட்டைவிட்டு வெளியேறினான்.

யசோ எல்லாவற்றையும்   கேட்டபடி          சமையலறைக்குள்;
ஆகவேண்டியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

ஐானகி வேணியைக் கோபத்துடன் முறைத்தபடி,
'அண்ணையெண்டு இருக்கிறாய். என்ன வேண்டித் தந்தனீ... எண்டு கேட்டமாதிரிக் கிடக்கு!' என்றாள்.

'ஓ! கேட்டனான். ஏதோ இரண்டு சட்டையளை வாங்கித் தந்திட்டு அவர் தன்ரைபாடு...'


'ஒண்டும் தெரியாதது போலைக் கதைக்காதை! நீ இண்டைக்கு ஜேர்மனிக்கு வந்ததே அவனாலைதான். கொழும்பிலை ஆறு மாதத்துக்கு மேலை நிண்டது ஆற்றை காசிலை? நீ உழைச்சதா.. இல்லாட்டி உங்கடை அப்பா உழைச்சதா...?'

'மற்றவங்கள் செய்யாததையே இவர் செய்து போட்டார்...? அக்கா தங்கைகளுக்கெண்டு எத்தினை இலட்சங்களை அள்ளி இறைக்கிறாங்கள்!'

'நீ வந்த ராசி உனக்கெண்டு கட்டின சீட்டும் குடுத்து வைச்ச காசும் அழிஞ்சுபோச்சு! தங்கச்சிக்கெண்டு சேர்த்து வைச்சிருந்தான். ஏமாந்து போனான். அவன் இருக்கிற வேதனை தெரியாமல் வாயிலை வந்தபடி கதைக்காதை!'

'சீதனம் தர மனமில்லாட்டி இல்லையெண்டு சொல்லுறது.'

'வேணி! என்ன கதைக்கிறாய்!'

'என்ன கதைக்கிறது..? வெறும் பொம்பிளையாத் தள்ளிவிட நினைக்கிறீங்கள்... அத்தான் தங்கமான மனிசன். கட்டின சீலையோடை போனாலும் ஏற்கக்கூடிய ஆள்.' என்று கண்கலங்கி அழுதாள் வேணி.
'அழு! நல்லா அழு! உதுக்கு நாங்கள் ஒண்டும் செய்ய முடியாது.'

'உங்களுக்கென்ன வசதியா இருந்துகொண்டு சொல்லுறீங்கள். சொல்லுங்கோ! நான் அவர் வீட்டை போறன்...
வரேல்லை போகேல்லையெண்டு மட்டும் ரெலிபோன் எடுத்து வைச்சு இரைய வேண்டாம். பேசின சீதனத்தைத் தர றெடி எண்டால் ரெலிபோன் அடியுங்கோ! வாறன்.' என்றுவிட்டு வேணி வெளியே கிளம்பி விட்டாள்.

தேநீரோடு உள்ளே வந்த யசோ,
'நில்லுங்கோ! ரீ குடிச்சிட்டுப் போங்கோ!' என்று அமைதியொழுகக் கேட்டாள்.

'இப்ப ரீ குடிக்கேல்லை எண்டதுதான் குறை!' என்று வாயைச் சுழித்துக்கொண்டு வெளியேறினாள் வேணி.
யசோவின் முகம் வாடிச் சுருங்கிவிட்டது.

'இவள் இப்பிடித்தான். ஒற்றைறோட்டு. வளர்ந்திட்டாள்... திருந்தி இருப்பாள்  எண்டு நினைச்சா முந்தினதைவிட மோசமாக் கிடக்கு!

'இவ்வளவு செய்யிறராரே அண்ணை எண்டு சந்தோசப்படுகிறதை விட்டிட்டு.... இதென்ன இப்பிடி...?' திகைப்புடன் சொன்ன யசோ,
'கோகுலன் பாவம். இப்ப கவலையோடை எங்கை போனார்? கன்டிக்கு ஒருக்கா எடுத்துப் பாருங்கோ அக்கா!' என்றாள்.

ஐானகி தொலைபேசியை எடுத்து கோகுலனின் கைத்தொலைபேசி நம்பர்களை அழுத்தினாள்.
'ஹலோ!' என்று குரல் கொடுத்தான் கோகுலன்.

'எங்கை நிக்கிறாய்?'

'சிவன் வீட்டிலை! என்னவாம் வேணி? நிண்டா ஊரைக் கூட்டிப் போடுவாள் போலக்கிடந்தது. அதுதான் வந்திட்டன்.'

'அவள் கொதிச்சடிச்சுக்கொண்டு போட்டாள். சீதனம் றெடியெண்டா மட்டும் ரெலிபோன் எடுக்கட்டாம்.'

'றெடி இல்லாட்டி என்ன செய்யட்டாம்?'

'தன்னைத் தேட வேண்டாமெண்டு சொல்லாமற் சொல்லியிருக் கிறாள். வேறை என்னத்தை நான் சொல்ல...!'

'வந்து இரண்டு, மூண்டு நாள் நல்லாயிருந்தாள். என்ன சனியன் பிடிச்சமாதிரி.. எப்ப பாத்தாலும் மூஞ்சையை நீட்டியபடி நிக்கிறாள். நான் என்ன செய்யிறது...?'

'வந்தண்டே கலியாணம். புதுவீடு, சீதனம்... எல்லாம் கிடைக்கும் எண்டு கனவு கண்டுகொண்டு வந்திருக்கிறாள் போலைக் கிடக்கு!'

'சரி! கிடக்கட்டும். பசிக்குது... என்ன கிடக்கு?'

'இங்கை சமைச்சபடி கிடக்கு வா! யசோவும் இன்னும் சாப்பிடேல்லை.' என்றாள்.

'வாறன். சாப்பிட்டிட்டு மாதவனிட்டைப் போய் காசு வேண்ட வேணும்.'

'என்ன காசு...?'

'வாறன். வந்து சொல்லுறன்.' தொலைபேசித்தொடர்பு துண்டிக்கப் பட்டது.

இரவு பிள்ளைகள் சாப்பிட்டுப் படுக்கப் போய் விட்டார்கள். கோகுலன் அப்பதான் வீட்டுக்கு வந்தான். அவன் மாதவனிடம் காசு வாங்கப் போனதால் நேரமாகிவிட்டது.

'எங்கை போனனி....? எவ்வளவு நேரமெண்டு பாத்துக் கொண்டிருக்கிறது?'

'மாதவனுக்குப் பிறகு நேரமில்லை எண்டதாலை உடனை வரச் சொன்னார். அதுதான் உங்களுக்கு எடுத்துச் சொல்லிப்போட்டு போகலாமெண்டால் ரெலிபோன் ஒரே என்கேச்.'

'என்கேச்...! சீ... நாங்கள் ஒருத்தரோடும் கதைக்கேல்லை!' என்றாள் யசோ.

'அப்ப வடிவா வைக்கேல்லையாக்கும்!'

ஐானகி எழுந்து போய் தொலைபேசியைப் பார்த்தாள். சற்று அரங்கியிருந்தது. சரியாக வைத்துவிட்டு, 'வடிவா வைபடேல்லை' என்றவள், 'வாங்கோ சாப்பிடுவோம்!' என்று சமையலறைக்குச் சென்றாள்.

அவள் பின்னே யசோவும் கோகுலனும் சென்றனர்.
சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கண்ணனும் வேணியும் வந்தனர்.

எதிர்பார்க்கவில்லை.
'வாங்கோ!' என்று ஐானகி வரவேற்றாள்.

யசோ சாப்பிட்ட கோப்பையை வைத்துவிட்டு,
'வாங்கோ சாப்பாடு போடுறன்!' என்று எழுந்தாள்.

'வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கோ!' என்று வேணி மறுத்தாள்.

'ஏன் சாப்பிடுமன்....!' என்ற கண்ணன், 'பசிக்குது எண்டு சொல்லிக் கொண்டு வந்தவ, நீங்கள் சாப்பாட்டைப் போடுங்கோ!' என்றான்.

யசோ சாப்பாடு போட, ஐானகியும் எழுந்து உதவி செய்தாள்.

எல்லோரும் சாப்பிட்டனர்.

'சற்றலைற் வாங்கிப் போட்டீங்களோ...?' கண்ணனைப் பார்த்துக் கேட்டான் கோகுலன்.

'வாங்கியாச்சு. செற் பண்ணுப்படாதாம்.'

'என்ரை பிறன்ட் ஒருவன் செய்வான். நாளைக்குக் கூட்டிக்கொண்டு வாறன்!'

'வயர் ஏதோ மாறிக் குடுத்திட்டடன் போலக் கிடக்கு...'

சாப்பிட்டபடியே, கைத்தொலைபேசியை எடுத்து, நண்பனின் தொலைபேசி எண்களை அழுத்திவிட்டு,
'டேய்! என்ன செய்யிறாய்? றேடியோ ஒண்டு பூட்டமுடியாமல் நிக்கிறம் வாறியே? இப்ப அக்கா வீட்டிலை நிக்கிறன். ஓ...வா! சேர்ந்து போவம்!' என்றவன், உரையாடலை முடித்துக்கொண்டு சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

'நாளைக்கு வேலைக்கு வரப்போறீரே?' யசோவைக் கேட்டான் கோகுலன்.

'ஓ!' என்றாள். என்னவேலை என்று கூடக் கேட்கவில்லை. வேலை என்றதும் பதில் பட்டென்று வந்துவிட்டது.

'முதலாளியிட்டை அண்டைக்குச் சொல்லி வைத்தனான். நாளைக்கு வரச் சொல்லிச் சொன்னவர். நாலு மணித்தியாலம்... சிலவேளை இரண்டு மணித்தியாலம்... வேலையைப் பொறுத்தது.

யசோ சம்மதித்தாள். சந்தோசம் கண்களில் பூக்க, கோகுலனுக்கு  இதயத்தால் நன்றி சொன்னாள்.

` விடியலில் மலரும் பூக்கள்  `

பகுதி   .. 13
2.8.2019


சீட்டும் ஏமாற்றமும்


பங்குபற்றும் பாத்திரங்கள் - 

யசோ
கோகுலன்
ஜானகி
லவன்  
கண்ணன்  
வேணி (கோகுலனின் தங்கை)
மாதவன் அண்ணை (வட்டிக்குக் கடன் கொடுப்பவர்)
தாமோதரம் அண்ணை
நீலா


ஜரனகி வேலைக்குப் போகும்போது யசோவிடம்,
'இண்டைக்கு அவுஸ்லன்டஅம்ருக்குப் (வெளிநாட்டு அலுவலகம்) போகவேணும், கோகுலன் வருவான். பெஸ்ற் ஒப் லக்' என்று வாழ்த்திவிட்டுப் போனாள்.

கோகுலனும் சொன்ன நேரத்துக்கு வந்து நின்றான்.
யசோ வெளிக்கிடாமல், தலைகூடச் சரிப்படுத்தாமல் காப்பெற்றுக்கு கூவர் பிடித்துக்கொண்டு நின்றாள்.

கோகுலன் வந்ததைக் கண்டதும் கூவர் பிடிப்பதை நிறுத்திவிட்டு, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'அவுஸ்லன்டஅம்ருக்கெல்லே போக வேணும்...! மறந்திட்டீரே..?
கெதியா வெளிக்கிடும்....!' என்றான்.

'வேண்டாம்!' என்று மெதுவாகச் சொன்னாள்.

'யசோ என்ன சொல்லுறீர்...? பாஸ்போர்ட் எல்லே எடுக்க வேணும், சாட்டுச் சொல்லாமல் டக்கெண்டு வாரும்.'

'கோகுலன் பிளீஸ்! சொல்லுறதைக் கேளுங்கோ! நான் இந்தியா வுக்குப்; போகேல்லை.'

'உமக்கென்ன விசரே....?'

'விசர்தான்... கடவுளால் முடிந்தால் இங்கை வைச்சே என்னைக் காப்பாற்றலாம் தானே.... வேண்டாம் என்னாலை முடியாது. உங்களைக் கஸ்டப்படுத்தி நான் குணமாக வேண்டுமெண்டில்லை.'

'நீர் ஆரையும் கஸ்டப்படுத்தேல்லை! இப்ப வாரும்!'

'கோகுலன், என்னை வற்புறுத்தாதேங்கோ!'

'ஏன் யசோ...? எல்லாம் றெடி பண்ணியாச்சு. பாஸ்போர்ட் எடுத்தக் கொண்டு, நாளைக்கு எம்பஸிக்குப் போய் விசா எடுத்துதும் ரிக்கற் எடுக்கிறதுதானே. வாங்கோ! நல்ல விசயம் மாட்டனெண்டு சொல்லாதேங்கோ!'

'விளையாட்டுபிள்ளை மாதிரி நிக்கிறீங்கள்...! உங்கடை தங்கச்சி நாளைக்கோ நாளையிண்டைக்கோ வந்து இறங்கப்போகிறா. சீதனக்காசை இப்ப வை! எண்டால் என்ன செய்வீங்கள்....?'

'அதுக்கோ யோசிக்கிறீர்...? சீட்டுக்கிடக்கு. சேவிங்கிலையும் கிடக்கு. பத்தாட்டி ஒரு ரெலிபோனிலை எடுப்பன். அதைவிட்டிட்டு வாரும் போவம் நேரமாகுது!'

யசோ மறுப்புடன் தலையாட்டினாள்.

'தயவு செய்து கோகுலன் என்னை வற்புறுத்தாதேங்கோ. எனக்கு விருப்பமில்லை. உங்களுக்கு எவ்வளவோ கடமைகள்..... அதுக்குள்ளை சொந்தச்சகோதரத்தைவிட அன்பு காட்டி, இவ்வளவு உதவிகள் செய்ததே காணும்.!'

கோகுலனுக்குச் சினம் வந்தது. கிட்ட வந்த அவள் கையைப் பிடித்தான்.
'இப்ப உமக்கு நான் தாலி கட்டியிட்டன் எண்டு வையும், என்ன செய்வீர்...? போடி! போய்க் குணப்படுத்திக்கொண்டு வாடி! என்று நான் அனுப்பினால் என்ன செய்வீர்...? மாட்டன் என்பீரா...?' கையை இறுகப் பிடித்த அவன் மூச்சு சூடாக அவள் முகத்தில் தொட்டது.

அப்போ லவன் ஓடி வந்தான்.
வந்தவன் அங்கு அவர்கள் நெருங்கி நின்ற நிலையையும் கண்டு கொண்டான்.
இதை இருவரும் எதிர்பார்க்கவுமில்லை.

'வாங்கோ போவம்!' என்று கோகுலன் மீண்டும் கேட்டான். 
யசோ மறுக்கவில்லை.
உடைமாற்றி, தேவையான பத்திரங்களுடன் அவன் பின்னால் நடந்தாள்.

காரில் போய்க்கொண்டிருக்கும்போது யசோ மௌனத்தைக் கலைத்தாள்.

'லவன் இக்கணம் ஐானகியக்காவுக்கு ஏதாவது உளறிவிடப் போறான்.' என்றாள்.

'ம்...ம்... அவன் சொல்லமாட்டான்.' என்ற கோகுலன்.
'இப்ப ஓம் எண்டு வந்தனீர் முதலே வந்திருக்கலாம்தானே!' என்று கேட்டான்.

'நான் உயிரோடை இருக்கவேணுமெண்டு நீங்கள் உரிமையோடை கேட்டீங்கள்... வேறை வார்த்தைகள் உங்களுக்கும் அந்த நேரத்திலை வாயிலை வரேல்லை.... தாலி கட்டியிட்டன் எண்டு  வையும் என்று சொன்னீங்கள், அந்தச்சொல்லுக்கு மதிப்புக் கொடுக்காமல் இருக்கமுடியவில்லை.' என்றாள்.
'நான் அப்பிடிக் கேட்டது கோவமா...?'

தலையசைத்து மறுத்த யசோ,
'நீங்கள் நல்லாயிருப்பீங்கள்!' என்று  கலங்கிய அவள்
'எதுக்கு இவ்வளவு அன்பு காட்டுறீங்கள்.... என்னாலை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.' என்று அழுதாள்.

'சீ...!' வலதுகையால் அவள் கரத்தைப்பற்றி,
'உமக்கு வருத்தம் குணமாகவேணும். உம்மை ஏமாத்தியவனின் கண்முன்னால் நீர் வாழ்ந்து காட்டவேணும். அதோடை....'

வெளிநாட்டலுவலகத்துக்கு வந்துவிட்டதால், சொல்லவந்ததைப் பாதியிலே நிறுத்திவிட்டு, காரைத் தரிப்பிடத்தில் நிறுத்துவதில் கவனத்தைச் செலுத்தினான்.

இருவரும் இறங்கி அலுவலகத்தைநோக்கி நடந்தனர்.

'அதோடை எண்டு ஏதோ சொல்ல வந்திட்டு விட்டிட்டீங்கள்!

'ம்... ஒண்டுமில்லை....' என்று சொல்ல வந்ததைத் தொண்டைக் குள்ளே விழுங்கிக் கொண்டான் கோகுலன்.

யசோவும் வற்புறுத்தவில்லை. அலுவலகத்தில் என்ன கதைக்க வேணுமென்று தயார் பண்ணுவதில் அவள் மனம் இறங்கியது.

தயாராக இருந்த பாஸ்போர்ட்டில் படத்தையொட்டி, எழுதவேண்டிய குறிப்புக்களையும் கையொப்பமும் இட்ட பின், பாஸ்போர்ட்டைக் கொடுத்து, யசோ விரைவில் குணமாகித் திரும்பவும் ஜேர்மனிக்கு வர வாழ்த்துக்களையும் தெரிவித்தார் அந்த அதிகாரி.

மறுநாள்.
இந்தியா எம்பஸியில் விசா எடுக்கப்போக, அங்கே பாஸ்போர்ட்டை வாங்கிவைத்துவிட்டு, விரைவில் அனுப்புவதாகக் கூறிவிட்டார்கள்.
உடனே தராதது சற்று ஏமாற்றமாக இருந்தது. சரி மற்ற ஆயித்தங்களைச் செய்வோமென்று, யசோவின் பயணத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

அதற்குள் கோகுலனின் தங்கை வந்து இறங்கிவிட்டாள். கோகுலனின் முகச்சாயல் அவளிடமும் இருந்தது. சுமாரான வடிவு... அமோகமான அலங்காரம்.. நாகரிகமோகம் அவளிடம் தெரிந்தது.

திருமணமாகுமட்டும் ஜானகி வீட்டில்  வேணி தங்குவது என்பது ஐானகியினதும் கோகுலனதும் முடிவு. கண்ணனுக்கும் இதில் சம்மதம்.
வந்து சில நாட்கள்வரை இந்த முடிவுக்கு வேணி பணிந்திருந்தாள்.

பதிவுத்திருமணத்துக்குரிய படிவங்களைச் சேகரித்து, அதற்கான அலுவலகத்தில் விண்ணப்பித்தாகிவிட்டது. சில நாட்களில் அங்கிருந்து அனுமதி கிடைத்ததும் பதிவுத்திருமணத்துக்கான நாள் குறிக்க வேண்டும்.

சமயசடங்குகளுடன் கூடிய திருமணத்தை.... தெரிந்தவர்களுக்குச் சொல்லி, அடுத்த சிலமாதங்களுக்குள் நல்ல முகூர்த்தம் பார்த்து செய்வதாகத் தீர்மானித்திருந்தார்கள்.

கண்ணன் தினமும் வந்து போனான். அவனுடன் வேணி வெளியே போவதும் அவன் வீட்டுக்குப்போய்த்  தங்கி இரவு வருவதும், நாளாக சில இரவுகள் அவன் வீட்டில் தங்குவதும் என்று தொடர்ந்தது.

திருமணத்தை விரைவாக நடத்துவதே புத்தியென்று ஐானகி கோகுலனை எச்சரித்தாள்.

இந்தியா விசா கிடைத்ததும் யசோவின் பயணத்துக்காகப் பணம் விசாரித்து வைத்திருந்தான் கோகுலன்.

வேணியின் கல்யாணத்துக்கு சீட்டுக் கட்டிக்கொண்டு வந்தான்.

ஒருநாள்....
வைத்தியசாலைக்குக் கூட்டிக்கொண்டு போகவாறன் என்றுவிட்டுப் போன கோகுலன் இன்னும் வரவில்லையே என்று அவனுக்குத்  தொலைபேசி எடுத்தாள் யசோ.
முதல்தடவை தொலைபேசிமணியடித்து ஓய்ந்தது.
கோகுலன் வெளிக்கிட்டிருக்கிறார்போலும் என்ற நினைப்புடன் தான் தயாரானாள்.

நேரம் போனது. `என்ன இவ்வளவு நேரம்.....?` நெஞ்சு கடகடத்தது. மீண்டும் தொலைபேசிஎண்களை அழுத்தினாள். நீண்டநேரம் ஒலித்த பின் தொலைபேசியை எடுத்தான் கோகுலன். அவன் குரல் அடைத்திருந்தது.

'வரேல்லையா...? நான் ஹொஸ்பிற்றலுக்குப் போகவேணும். பார்த்துக்கொண்டிருக்கிறன்.

சில வினாடிகள் மௌனத்தின்பின்,
'சொறி! எனக்குச் சுகமில்லை, எழும்ப முடியேல்லை. இண்டைக்கு மட்டும் ரைக்ஸியிலை போம்!' என்று போனை வைத்தான்.

யசோவுக்குச் சுரீர் என்றது.

அவசரமாக வீட்டைவிட்டு இறங்கி, அகப்பட்ட பஸ்ஸில் ஏறி ஆஸ்பத்திரிக்குப்போய் சிகிட்சையை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்ப முனைந்தவளுக்கு கோகுலனின் எண்ணம் வந்தது.

பஸ் ஏறி அவனுடைய வீட்டுக்குப் போனாள். வீட்டுமணியை அழுத்தி, நீண்டநேரத்தின்பின் கதவு திறந்தது. அங்கே ஒரே சிகரெட்புகை. விஸ்கிப்போத்தல் காலியாகத் தரையில் வீழ்ந்து கிடந்தது.

'நீர் ஏன் இங்கை வந்தனீர்...?' என்ற கோகுலனின் குரலில் விருப்பமின்மை தெரிந்தது.

'என்ன இது....! ஏன் இப்பிடி...?' எரிந்தாள் யசோ.

'நாளைக்குப் பேசலாம். நீர் வீட்டை போம்!'
யசோ அங்கிருந்த சோபா ஒன்றில் முள்மீது இருப்பதுபோல உட்கார்ந்தாள்.

'இண்டைக்கு என்னாலை உமக்குப் பதில் சொல்ல முடியாது. பிளீஸ் போயிடும்!'

யசோ எழுந்து அவன் அண்மையில் சென்று அவன் கைகளைப் பற்றி.... நீர் அண்டைக்குச் சொன்னது மாதிரி நீங்கள் என் கழுத்திலை தாலிகட்டியிருந்தால், எனக்கு நீங்கள் பதில்  சொல்லித்தான் ஆகவேணும்!'

'இப்ப சொல்லுங்கோ! என்ன பிரச்சனை...?'

'ஒரு பிரச்சனையும் இல்லை... மனசு சரியில்லை.'

'ஏன்! தங்கச்சி ஏதாவது சொன்னவவா...? இல்லாட்டி கண்ணன் ஏதாவது சொன்னவரா...?'

'இல்லை...'

'அப்ப என்ன...? சொல்லுங்கோவன்!'

'என்னத்தைச் சொல்ல...?'

'ஏன் குடிக்கிறீங்கள்....?'

'நான் குடிக்கேல்லை... சரியா.!'

'ஏன் குடிச்சீங்கள் எண்டு கேக்கிறன்...!'

'நான் குடிக்கக்கூடாதா? எனக்கு அந்தச் சுதந்திரம் கிடையாதா?'

'குடிக்கலாம். சுதந்திரமாக் குடிக்கலாம். அது மாதிரித்தான் மற்றவைக்கும் சுதந்திரம் இருக்கு... வைத்தியம் செய்வம் செய்யாமலும் விடுவம்.' என்றவள் வந்த வழியே திரும்ப நடந்தாள்.

கதவைத்திறந்து வெளியே போக முனைந்தவளைக் கைப்பற்றி, மீண்டும் உள்ளே இழுத்துக் கதவைச் சாத்தினான்.

'சீட்டு முறிஞ்சுபோச்சு!'

'என்ன...!' என்று மின்னல் தலையில் இறங்கியதுபோல் அதிர்ச்சி உடம்பில் பாயக் கேட்டாள் யசோ.

'அம்பதாயிரம்;...! சீட்டுப் பிடிச்சவன் ஓடிட்டான்.'

'ஓடியிட்டானெண்டு சாதாரணமாச் சொல்லுறீங்கள்...!'

'வேறை எப்பிடிச் சொல்லுறது?'

யசோ பதில் சொல்லவில்லை. தலையைத் தொங்கவிட்டபடி, அவனருகே சோபாவில் உட்கார்ந்தாள்.

சில நிமிட மௌனத்தின் பின்,
தொலைபேசியை எடுத்து ஏதோ நம்பர்களை அழுத்தினான் கோகுலன்.
'மாதவன்அண்ணை! கொஞ்சக்காசு வேணும்!''எவ்வளவு?' என்று கேட்க, 'முப்பது' என்றான்.

'தாறன். அஞ்சுமணிக்குப் பிறகு வா!'

'அவசரம்... மறந்து போகாதேங்கோ!'

'ஓம்...ஓம்...!' தொலைபேசித்தொடர்பு துண்டிக்கப்பட்டது.

'நீர் வீட்டைபோம்! நான் கொஞ்சம் படுத்திட்டுப் பின்னேரம் வாறன். அக்காவுக்கோ வேணிக்கோ சொல்லிப் போடாதையும்.

'என்னத்தை... சீட்டு முறிஞ்சதையோ?'

'சீ.... அது தெரியவரும்தானே! நான் குடிச்சதெண்டு சொல்லாதையும்.'

'நான் சொல்லேல்லை. இரவைக்குச் சமைக்கிறன். கட்டாயம் வாங்கோ!' என்று வலியுறுத்திவிட்டு வீட்டுக்குப் புறப்பட்டாள் யசோ.

வீட்டுக்கு வந்து, சமையல் செய்துகொண்டிருக்க, தொலைபேசிமணி அலறியது. றிஸீவரை எடுத்து,
'ஹலோ!' என்றாள்.

'தாமோதரமண்ணை கதைக்கிறன் யசோ! எப்பிடிச் சுகமா இருக்கிறீரே...? நேற்றுத்தான் திரும்பி வந்தனாங்கள்.'

'நான் சுகமா இருக்கிறன். ஒரு விசயம்... கண்ணனுக்கு மனிசி வந்திட்டா. பொம்பிளை ஆர் தெரியுமே?'

'ஆர்...!' எடியே நீலா...!' என்று மனைவியை அழைத்து,
'கண்ணனுக்கு மனிசி வந்திட்டாவாம், யசோ சொல்லுறா...' என்று சொல்ல, தொலைபேசியைப் பறித்து அவர் மனைவி நீலா யசோ வுடன் கதைத்தாள்.

'என்னடி யசோ...! கண்ணனுக்கு மனிசி வந்திருக்கோ...?'

'ஓமக்கா! கோகுலன்ரை தங்கச்சி.... ஆள் வந்திட்டா. கலியாணத் துக்கு ஏற்பாடுகள் நடக்குது.'

'உனக்கும்  கண்ணனுக்கும் கலியாணம் நிச்சயித்திருந்தது தெரியுமே....?'

'இல்லை'

'நீ சொல்லாதையன்.'

மனைவியிடம் தொலைபேசியை வாங்கி தாமோதரம் கதைத்தார்.

'யசோ! ஐானகிக்கு விசயத்தைச் சொல்லு! உடனை கலியாணம் நிக்கும். அவருக்கு ஒரு கல்யாணம் தேவைதான். நீ சொல்லுறியோ இல்லாட்டி நான் சொல்லட்டோ...?'

'வேண்டாம். எங்கையெண்டாலும் நல்லாயிருக்கட்டும்.'

'என்ன யசோ நீர் பேய்க்கதை கதைக்கிறீர்? பட்டப்பகல் கொள்ளை அடிச்சது மாதிரி அவன் உம்மை ஏமாத்தியிருக்கிறான். அவனைப் போய் நல்லாயிருக்கட்டும் என்கிறீர்!'

'எனக்கு வருத்தமெண்டு தெரிஞ்சபிறகுதானே அவர் மாட்டன் எண்டவர்... வருத்தக்காரியோடை சந்தோசமா இருக்கேலாது என்று நினைச்சு வேறை கலியாணம் செய்யிறார்.. செய்யட்டன்.'

'இப்பிடி ஏன் விட்டுக்குடுக்கிறீர்? கலியாணத்ததைக் குழப்பினால் தான் அவனுக்கு அறிவு வரும.'

'அப்பிடி ஒரு அவசியம் எனக்கில்லை. நீங்களும் சொல்லாதேங்கோ! எனக்காக என்ன....' என்று தாமோதரத்தின் வாயைப் பூட்டினாள் யசோ.

'நாங்கள் சொல்லாட்டிப்போலை இது தெரியாமலே விடப்போகுது? ஊர்வாயை மூடமுடியுமே...?'

'அதுக்கு நாங்கள் ஒண்டும் செய்யமுடியாது. அப்பிடித் தெரிய வந்தால் அதை அவை சந்திக்கட்டும்.' என்ற யசோ தான் இந்தியா போக இருக்கிற விடயத்தையும் கூறி, ஒரு நாளைக்கு வீட்டுக்கு வருவதாகவும் சொல்லி தொலைபேசி உரையாடலை முடித்தாள்.

லவன், குசன் இருவருக்கும் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு தானும் சாப்பிட்டாள் யசோ.

ஐானகி வேலையால் வீட்டுக்கு வந்தாள்.

ராசனைக் காணேல்லையாம். சனமெல்லாம் குத்தி முறியுதுகள். ஊரெல்லாம் கடன். சீட்டுக்காசுகளையும் எடுத்துக்கொண்டு ஆள் குடும்பத்தோடை மாறியிட்டுது.' என்று சொன்னாள் ஐானகி.

'பாவம் கோகுலன். இந்தமாதம் சீட்டு எடுக்கவெண்டு இருந்தவர்' என்று இரக்கப்பட்டாள் யசோ.

'நான் சொன்னனான். கேக்கேல்லை. இனி என்ன செய்யிறது? சீட்டுக்காசைவிட இருபதினாயிரத்துக்கு மேலை வட்டிக்குக் குடுத்து வைச்சிருந்தவன். இப்ப வட்டியுமில்லை, முதலுமில்லை. என்ன செய்யிறதோ தெரியாது.' என்ற ஐானகியின் குரலில் துக்கம் சொட்டியது.
` விடியலில் மலரும் பூக்கள்  `

தொடர் 12  ,
 23.7.2019யசோவின் தயக்கம்


பங்குபற்றும் பாத்திரங்கள் - 
யசோ
கோகுலன்
ஜானகி
கண்ணன்  
வேணி (கோகுலனின் தங்கை)வெளிநாட்டலுவலகத்திலை போய் டொக்டரின் துண்டைக் குடுத்து, விசயத்தை விளக்கமாச் சொன்னால் ஒரு சான்ஸ் கிடைச்சாலும் கிடைக்கலாம்.' என்றாள் ஜானகி.

'விசா பிரச்சனை இல்லையெண்டா காசுக்கு நான் கரன்ரி!' என்றான் கோகுலன்.

'காசைப்பற்றி யோசிக்காதை! நாங்கள் இருக்கிறம். பாங்க் இருக்கு. எத்தினை ஆயிரமும் கடன் எடுக்க முடியும். முதல்லை உன் வருத்தம் மாற வேணும்.' என்றாள் ஐானகி.

யசோவின் உடல் புல்லரித்தது.

'தங்கச்சியின் கலியாணத்துக்கெண்டு சீட்டுக் கட்டிக்கொண்டு வாறன்... அவசரத்துக்கு அதையும் எடுக்கலாம். காசுப்பிரச்சனை இல்லை.' என்று மேலும் உறுதிப்படுத்தினான் கோகுலன்.

யசோவுக்குப் பேச்சு வரவில்லை. யாரோ இருவர்...... பழகி இரு மாதங்கள் தானிருக்கும். இப்படித் தன்னில் அன்பும் அக்கறையும் வைத்திருப்பதைக் கண்டு வாயடைத்துப்போய் நின்றாள்.

மறுநாள்
'வெளிநாட்டலுவலகத்துக்குப் போனீங்களா...?' கேட்டாள் ஐானகி.

கோகுலனும் யசோவும் வெளிநாட்டலுவலகத்துக்குப் போய் வந்திருந்தார்கள்.

'முதல் எடுத்த உடனே முடியாது என்று விட்டார்கள். பிறகு யசோவைப் பார்த்து,
'எவ்வளவு காலம் இங்கை இருக்கிறாய்?' என்று கேட்டார்கள். யசோ பட்டென்று டொச்சிலை பதில் சொல்ல, இலங்கையில் என்ன செய்தாய்...? ஜேர்மன்மொழி படிக்கிறாயா..? எவ்வளவு காலமாக கிட்னி வருத்தம்...? என்றெல்லாம் கேட்க, யசோ பதில் சொல்ல, பாஸ்போர்ட்டைத் தூக்கிக்கொண்டு போட்டு, கொஞ்சநேரத்தாலை வந்து, தற்காலிகமா ஒரு பாஸ்போர்ட் தரலாமாம். போம் நிரப்பிக் கையெழுத்தும் வைச்சாச்சு, வாறகிழமை படத்தைக் கொண்டு வரட்டாம்.' என்றான் கோகுலன்.

'பிறகென்ன யசோ! கடவுள் ஒரு வழியை மூடிவிட்டிருந்தாலும் இன்னொருவழியைத் திறந்து விட்டிருக்கிறார்.' என்றாள் ஐானகி.

'நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை அக்கா! பாஸ்போர்ட் வந்தாப் போலை முடிஞ்சிடுமே...? இந்தியாவுக்குப் போய்த் தங்குவது... வைத்தியசாலைச்செலவு... என்னிடம் ஒருசதமும் இல்லாத நிலையில் அக்கா பிளீஸ்! வேண்டாம்... நடக்க வேண்டிய தங்கச்சியின் கலியாணத்தையும் என்னாலை பிற்போட நினைக்காதேங்கோ! என்றாள்.

கோகுலன் குறுக்கிட்டான்.

'கல்யாணத்தைப் பிற்போடுறதெண்டு நாங்கள் சொல்லேல்லை. சீதனக்காசைப் பிறகு குடுக்கலாம். அத்தானுக்கு விசயத்தைச் சொன்னா அவர் கேட்பர். இல்லாட்டிலும் பறவாயில்லை. என்னட்டை வேறை காசு கிடக்கு!

ஐானகி சொன்னாள்.

'முதலிலை உன்ரை வருத்தம் மாறவேணும்... அதுக்குப் பிறகு நீ உழைச்சு முடிந்தால் திருப்பித்தா!  இதுக்குப் போய் பெரிசா யோசிக்காதை!'

யசோவின் கண்கள் கலங்கி கண்ணீர் துளித்தது.

'ஏன் அழுகிறீங்கள் யசோ?' என்றான் கோகுலன்.

'சீ! என்ன குழந்தைப்பிள்ளை மாதிரி அழுகிறாய்..? நாங்கள் எல்லாம் இருக்கிறம்... கடவுள் இருக்கிறார்... பிறகென்ன..?' என்று ஐானகி அவள் அழுகையைத் துடைத்தாள்.

'எனக்கேன் இந்தச் சோதனை...? ஊரிலை இருந்திருந்தால் இப்பிடி வருத்தம் எனக்கேன் வருகுது...?' என்றாள்.

'பைத்தியம் மாதிரிக் கதைக்கிறீர்... ஊரிலை இருக்கிற சனங்களுக்கு வருத்தம் வாறேல்லையா?'

'இப்பிடி வைத்தியவசதிகள் அங்கையில்லை. கெதியிலை கண்டு பிடிப்பதும் கடினம்.... இங்கை ஆரம்பத்திலையே கண்டுபிடிக்கக் கூடிய வைத்தியமுறைகள் இருப்பதாலை குணப்படுத்திவிடுவினம்.'

'வருத்தம், துன்பம் எங்கையிருந்தாலும் வரும். இதுக்கு நாட்டையோ கடவுளையோ நொந்து பிரியோசனமில்லை. இருக்கிற சான்ஸைப் பயன்படுத்தி நல்லது நடக்கிறதுக்கு முயற்சி எடுக்கிறதை விட்டிட்டு அழுகிறீர்...?'

'சோசல் காம்பிலையிருந்து கூட்டிக்கொண்டு வந்து, உங்கடை வீட்டிலை பதிஞ்சு, இப்பிடி வசதியா இருக்க விட்டதே நீங்கள் செய்த பெரிய உதவி. இனியும் உங்களை நான் கஸ்டப்படுத்துவது எப்பிடி... ? வேண்டாம் பிளீஸ்! இந்த முயற்சி வேண்டாம்!'

ஐானகி சற்றுக் கோபம் வார்த்தைகளில் தெறிக்கச் சொன்னாள்.

'அப்ப உனக்கு வாழ விருப்பமேயில்லையா...? உன்ரை தங்கச்சி தம்பிக்கு உதவி செய்யிற எண்ணம் ஒண்டுமில்லையா..? உனக்கு ஒண்டெண்டா உன் அம்மா, அப்பா தாங்கிக் கொள்வார்களா..?'

'சாகிறது எல்லோரும்தானே! ஆனால் சாகும்வரை வாழ்வுக்காகப் போராடவேண்டும்... போராடித்தானாக வேண்டும். சோர்ந்து போனால் பிறப்புக்கே அர்த்தம் காணமுடியாது.'

'எங்கடை உதவியாலை உன் வருத்தம் குணமாகுமாக இருந்தால் எங்கள் வாழ்வுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அதுமாதிரி நீ குணமாகி உன் வீட்டுக்காரருக்கோ வேறு யாருக்குமோ உதவி செய்தால் உன் வாழ்வுக்கும் ஒரு அர்த்தமிருக்குமல்லவா!'

யசோ யோசித்தாள். ஐானகியினதும் கோகுலனதும் அடுத்தடுத்த அழுத்தங்கள்  அவளை இந்தியா செல்ல இசைய வைத்தது.

பாஸ்போர்ட் வந்ததும் இந்தியா சென்று சிகிட்சை பெற அவள் தயாரானாள்.

தொலைபேசி மணியடித்தது. கோகுலனின் தங்கை வேணி கொழும்பிலிருந்து கதைத்தாள். 'விசா கிடைத்துவிட்டது. ரிக்கற் ஓ.கே பண்ணப் போகிறோம்.' என்றாள்.

'எம்பஸி இவ்வளவு கெதியா விசாக் கொடுத்துவிட்டது' ஆச்சரியமும் அதேநேரம் தங்கச்சி வரப்போகிறாளென்ற ஆனந்தமும் கோகுலனது நெஞ்சில் ஆரவாரித்தன.

ஐனகியும் யசோவும் அவன் சந்தோசத்தில் பங்கெடுத்துக் கொண்டனர்.

அப்போ வீட்டுமணி ஒலித்தது. கோகுலன் கதவைத் திறந்தான். அங்கே கண்ணன் நின்றான்.

'வாங்கோ!' என்று வாய் நிறைய அழைத்து வரவேற்றான்.

வேணி தனக்கு விசாக் கிடைத்திருக்கிற விடயத்தை கண்ணனுக்கும் தொலைபேசியில் சொல்லியிருந்தாள்.

யசோ தேநீர் போட எழுந்து சென்றாள்.

கண்ணனின் முகத்தில் களையிருக்கவில்லை.

'என்னத்தான் யோசிக்கிறீங்கள்...?' கேட்டான் கோகுலன்;.

'ஒண்டுமில்லை!' என்று சமாளித்துவிட்டு அமைதியாக இருந்தான் கண்ணன்.

'ஏதாவது பிரச்சனையா...?' என்று கேட்டு அவன் மௌனத்தைக் கலைக்க முயன்றான் கோகுலன்.

'வேணி ரெலிபோனில் வேறை ஒண்டும் சொல்லேல்லையோ...?'

'இல்லை' என்றாள் ஐானகி.

'விசா கிடைத்துவிட்டது. ரிக்கற் ஓ.கே பண்ண இருப்பதாகச் சொன்னாள்.' என்றான் கோகுலன்.

யசோ தேநீரோடு வந்தவள் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு,
'நீங்கள் கதைச்சுக்கொண்டு இருங்கோ! நான் லவனையும் குசனையும் அவை விளையாடப் போன இடத்துக்குப் போய்ப் பார்த்திட்டு வாறன்.' என்று புறப்பட்டாள்.

'அவங்கள் நின்று விளையாடட்டும் நீர் இங்கை இரும்.' என்று தடுத்துவிட்டாள் ஐனகி.
யசோவுக்கு அங்கே இருப்பது நாகரிகமில்லை என்றுபட்டது. அவர்கள் குடும்பவிடயம் கதைக்கும்போது அதைக் கேட்பதில் ஆர்வமிருக்கவில்லை. போதாதற்கு எதிரே மாப்பிள்ளையாக... அந்த வீட்டுக்கு வர இருப்பவன் ஏற்கனவே அவள் மாப்பிள்ளையெண்டு அவளுக்கு அறிமுகமானவன்.

அவள் மனதுக்குள் அவன் இல்லை. ஆயினும் அவனுக்கு முன் அநாவசியமாக நிற்பது அவளுக்குச் சங்கடமாக இருந்தது.

'நீங்கள் கதையுங்கோ! நான் டக் என்று திரும்பிவாறன்.' என்று எழ முயன்றாள்.

'நல்ல விசயம் ஒன்று கதைக்கக் கூடியிருக்கிறம் அதைத் தெரிஞ்சு கொண்டும் பங்கெடுக்காமல் போக நினைப்பது உங்களுக்கு இதிலை இன்றஸ்ற் இல்லையெண்டதுதானே!' என்று கோகுலன் ஒரு போடு போட்டான். யசோ அதை மீறி அப்பால் போகமாட்டாள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.

ஐானகிக்குப் பக்கத்தில் வேறுவழியின்றி உட்கார்ந்தாள் யசோ.

'தங்கச்சி உங்களுக்கு ஏதாவது சொன்னவளா...?'

'ம்!' என்றான் கண்ணன்.

'என்ன சொன்னவள்...?'

'சீதனக்காசு தந்திட்டினமா என்று கேட்டவ...!'

'ஆர் வேணியோ...?' ஐானகி குறுக்கிட்டாள்.

யசோவுக்குத் திக்கென்றது. யார் யாரிடம் சீதனம் கேட்பது...? வெட்கமில்லாமல் அண்ணனிட்டை தங்கச்சி 'சீதனம் வாங்குங்கோ!' என்று மாப்பிள்ளையா வரப் போகிறவரை அனுப்பியிருக்கிறாளே..! இல்லாட்டி இது கண்ணனின் சுத்துமாத்தாயும் இருக்கலாம்.

கண்ணன் மேலும் சொன்னான்.

'ஐானகியக்கா மாதிரி வீடு ஒன்றை வாங்க ஒழுங்கு செய்யட்டாம். வாடகை வீட்டிலிருந்து தனக்குப் பழக்கமில்லையாம்!'

அவன் சொன்னவை மற்றவர்களுக்குக் குண்டு வெடித்துபோல இருந்தது. ஐானகி சமாளித்துக்கொண்டு,

'அவள் இப்பிடித்தான். அவசரக்குடுக்கை... இஞ்சத்தை நிலைமை தெரியாமல் ஏதோ உளறியிருக்கிறாள். நீங்கள் ஒண்டும் பெரிசா யோசிக்காதேங்கோ! என்றாள்.

'நான் சொன்னபடி சீதனம் கல்யாணத்துக்கு முதல் உங்கடை கையிலை தருவன். கலியாணச்செலவு என்னுடையதெண்டு சொன்னனான். அதைச் செய்வன். வீடு வாங்குவது.... கலியாணம் முடிஞ்சபிறகு நீங்கள் இரண்டுபேரும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டியது.' என்றான் கோகுலன்.

'என்ன நினைக்கிறீங்களோ தெரியாது...! உங்கடை தங்கச்சி சொன்னதைத் தான் நான் உங்களிட்டைச் சொன்னனான். என்னை நீங்கள் தவறாக நினைக்கக்கூடாது.' என்று கண்ணன் சொல்ல,

'சீ...சீ... அதொன்றுமில்லை! நான் நாளைக்கு அவளோடை கதைக்கிறன்.' என்றான் கோகுலன்.

தேநீர் குடித்தபின் வீட்டுக்குச் செல்ல எழுந்த கண்ணனை,
'சாப்பிட்டுப் போகலாம்!' என்று ஐானகியும் கோகுலனும் மறிக்க, அவனும் இசைந்தான்.

ஐானகியும் யசோவும் சமையலறைக்குச் செல்ல, கோகுலன் தொலைக்காட்சியை இயக்கிவிட்டு,
'றேடியோ கேக்கப்போறீங்களா...?' என்று கேட்க,
'போடுங்கோ!' என்று கண்ணன் சொல்ல, தொலைக்காட்சியை நிற்பாட்டி, வானொலியின் பொத்தான்களை முறுக்கிவிட்டான் கோகுலன்.

யசோ, வெளிநாட்டலுவலகம் போய் படம் கொடுத்து, பாஸ்போர்ட் எடுக்க வேண்டும்... போகத்தான் வேண்டுமா என்று தயங்கினாள். இந்தியா போவது... வைத்தியம் செய்வது நடக்கக்கூடியதொன்றா..?

கோகுலனும் ஐானகியும் அளவுக்கு மீறிய அன்பால் இவ்வளவு பெரிய உதவியைச் செய்ய முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்வது சரியெனப்படவில்லை.

'ஐானகியோ கணவனை இழந்தவள்... காசு அவளிடமிருந்தாலும் அதைப் பயன்படுத்துவது நொண்டிக் குதிரையிலே சவாரி விடுவது போலாகும்.

கோகுலனுக்கோ தங்கை வந்து கொண்டிருக்கிறாள். யானை வர முன்னே மணியோசை ரெலிபோனில் அதிர்ந்துவிட்டது. சீதனப் பழுவும் கலியாணச்செலவும் அவன் தலையில்....' என்று மனதுக்குள் குழம்பிய யசோ, ஒரே பிடிவாதமாக மறுப்பது என்று முடிவெடுத்திருந்தாள். அதையும் மிஞ்சினால் திரும்பவும் சோசல் வீட்டுக்குப் போய்விடுவது என்ற தீர்மானத்துடன் இருந்தாள்.

விடியலில் மலரும் பூக்கள் 


பகுதி - 11  ..   15.7.2019


மனதுதான் வாழ்க்கையை வழிப்படுத்துகிறது.
பங்குபற்றும் பாத்திரங்கள் - 

யசோ
கோகுலன்
ஜானகி
பரதன்
கமலம், வனஜா, சேகர்  - நண்பர்கள்

லவனின் பிறந்தநாள். ஜானகியுடன் பழகுபவர்கள் சிலர் குடும்பமாக வந்திருந்தார்கள். அவர்களுக்குத் தேனீர், பலகாரம் கொடுத்து உபசரித்து, இரவுச்சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தாள் ஜானகி. அவளுக்கு யசோ பெரிதும் உதவியாக இருந்தாள்.

ஹோலுக்குள் விருந்தினர்கள் பலதரப்பட்ட கதையும், பகிடியுமாக இருந்தார்கள்.

'தாமோதரத்தாற்றை மகள் பரதநாட்டியம்  பழகிறாவோ?' என்று புதினம் அறியும் ஆவலுடன் கமலம் வனஜாவைக் கேட்டாள்.

'ஓ! உங்கை எல்லாரும்தானே பழகுகினம். சனத்தக்கு வேறை வேலையில்லை.'

அதைக் கேட்டுக்கொண்டு வந்த பரதன்,
'நீங்கள்  பரதநாட்டியம் பழகியிருக்கிறீங்களோ...!' என்று கேட்டான்.

'இல்லை... ஏன்?' கேட்டாள் வனஜா.

'கற்றது கையளவு, கல்லாதது உலகளவு! உங்களுக்குத் தெரியாத ஒண்டைப் பற்றி ஏன் தேவையில்லாமல் குறை சொல்லுறீங்கள்?'

'இல்லை பரதன்.....!' என்று குறுக்கிட்டான் சேகர்.

'ஊரிலை ஆர் இப்பிடிப் பரதநாட்டியம் பழகிக்கொண்டிருக்கினம்...? பத்துப்பன்னிரெண்டு வயதிலை எங்கை அரங்கேற்றம் நடந்தது...?'

'ஊரிலை பலருக்கும் இந்த வசதி ஏற்படேல்லை... இங்கை அந்த வசதி கிடைச்சிருக்கு... அதோடை இந்தப் பரதக்கலையை நாங்கள் எங்களுக்காகப்  பயன்படுத்த முடியிறது.

வெளிநாட்டுக்கு வந்த ஆரம்பகாலத்திலை இப்பிடிச் சூழ்நிலையள் இல்லை. தமிழைப் படிக்கவோ தமிழ்க்கலாச்சாரங்களைத் தெரிந்து கொள்ளவோ பிள்ளையளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கேல்லை. அப்பிடியே போயிருந்தா எங்கடை வருங்காலச்சந்ததி தமிழ்மொழி தெரியாத, தமிழரின் தொன்மை அறியாத சந்ததியாகத் தான் இருந்திருக்கும். 
இப்ப பாருங்கோ.... எங்கடை பிள்ளையள் போட்டி போட்டுக்- கொண்டு தமிழ் படிக்கினம். பேச்சு, கவிதை எண்டெல்லாம் போட்டிகளில் பங்கெடுக்கினம். இதுக்கெல்லாம் காரணம் பரதநாட்டியம் போன்ற கலைக்கூடங்கள் வெளிநாட்டில் வளர்ந்தமையும் தான். 
அதோடை இன்றைய காலத் தேவைகளை நினைச்சு, மக்களுக்கு விழிப்புணர்வை ஏறபடுத்தலாம். 
புதியபல திருப்பங்களோடை எழுச்சியூட்டும்  நடனங்கள், நாட்டியநாடகங்கள் என்பவை முலம் தமிழ்மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளை விளங்க ப்படுத்தலாம்.  
இது விளங்காமல் கதைச்சுக்கொண்டு இருக்கிறீங்கள்.....!' என்று பரதன் விளக்கமாகக் கூறினான்.

பரதனின் பதில் வெட்டிப்பேச்சுப் பேசும் இவர்களுக்கு ஒரு நல்ல அடி என்று திருப்திப்பட்டாள் யசோ.

மேலும் பரதன் சொன்னான்.

'பிள்ளையளுக்கு இப்ப நல்ல பெயர்களை வைக்கினம்! ஸ்ரயிலுக்குப் பெயர் வைச்சவை வெட்கித் தலைகுனியினம்! ஏன்...? தமிழன் விழித்துக்கொண்டான். இனியும் அகதியாகப் போய்விடக் கூடாதெண்டு பெரும்பாடுபடுகிறான்.' என்று உறைக்கும்படி கூறினான் பரதன்.

லவன், குசன் இருவரும் பள்ளிக்கூடம்.... ரியூசன்.... விளையாட்டு என்று போய்விடுவார்கள்.

யசோ ஜேர்மன்மொழி பயின்று சான்றிதழ்களும் பெற்றிருந்தாள்.

'வேலை ஒன்றுக்குப் போகப் போறீங்களா...?' தமாஸாகக் கேட்டுக் கொண்டு கோகுலன் வந்தான்.

'நாலைந்து மணித்தியாலங்கள் செய்யக்கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கோ...!' என்றாள் யசோ.

'இது ஆபீஸ் வேலை உங்களாலை செய்ய முடியாது.'

'என்னட்டை சோட்கான்ட் ரைப்பிங் படிச்சபிள்ளையள் நல்ல வேலைகள் செய்துகொண்டிருக்கினம்.. தெரியாதா?'

'தெரியாதே...' தினசரிப்பத்திரிகையில் இருந்ததா...?'

'உங்களுக்குப் பகிடி...! உண்மையாத்தான் சொல்லுறன்... வீட்டிலை இருந்து கடிதம் வந்தது... காசுக்கஸ்டம்...'

'என்னட்டைக் கேட்டிருக்கலாம்தானே! எவ்வளவு வேணும்...?'

'எவ்வளவு கேட்டாலும் நீங்கள் தருவீங்கள் என்று எனக்குத் தெரியும்.'

'அப்ப கேட்கிறதைவிட்டு, கஸ்டம் வேலைக்குப் போகவேணும் என்கிறீங்கள்.'

'நானும் என்ரை சொந்தக்காலிலை நிற்க முயற்சிக்கக்கூடாதா...? சோசலிலும், உங்கடை அக்கா தயவிலும் இருப்பது எனக்குச் சங்கடமாக இருக்கு.'

'உங்கடை வருத்தம் குணமடையட்டும், நான் உங்களுக்கு நல்ல மாப்பிள்ளை தேடித்தாறன். என்ரை செலவிலை தான் உங்கடை கல்யாணம், ஓ.கே.'

'றொக்கற் மாதிரிப் பறக்கிறீங்கள்.'

'நான் பறக்கேல்லை, நடக்கக்கூடியதொன்றைத்தான் சொன்னனான்.

'முதலில் நீங்களே சரியாக நடக்கத்தொடங்கவில்லை, பிறகு என்ரை வாழ்க்கை.... அதுவும், கடவுளே என்ன செய்வதென்று தெரியாமற் குழம்பிப்போய் இருப்பதை நீங்கள் சரிப்படுத்திவிடலாம் என்று நினைப்பது நடக்கக்கூடியதொன்றா...?'

'யசோ!' என்ற கோகுலனின் குரலில் சற்றுக்கடுமை கலந்திருந்தது.

'நான் சரியாக நடக்கவில்லை எண்டு யார் சொன்னது...?'

'கோவிக்காதேங்கோ, நீங்கள் என்னிலை எவ்வளவோ அக்கறை காட்டுறீங்கள். அதுதான் நீங்களும் நல்லாயிருக்கவேணுமென்று நான் நினைச்சேன்.'

'நான் நல்லாத்தான் இருக்கிறேன்.... பொறுப்போடு இருக்கிறேன், தங்கச்சி வரப்போகிறாள், கல்யாணம் எல்லாம் என் செலவுதான்.'

'பொறுப்பில்லாதவர் என்று சொன்னனானே...? சரியாக நடக்கத் தொடங்கவில்லை என்றுதான் சொன்னனான்.'

கோகுலன் பதில் சொல்லவில்லை. யசோ எதனை மனதில் வைத்துக்கொண்டு கதைக்கிறாள் என்பது விளங்கியது.

அற்ககோல், சிகரெட், காட்ஸ்அடி.... அக்கா ஜானகி,

'வேண்டாம் இந்தப்பழக்கம் மறந்திடடா தம்பி!' என்று சொல்லி நா அலுத்துக் கைவிட்ட அந்த விடயத்தை இவ ஆரம்பிக்கிறா என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டபோதும், அவள் வார்த்தைகளை இலகுவில் ஒதுக்கிவிட ஏனோ அவனால் முடியவில்லை. கதையை திசைதிருப்ப அவள் கேட்ட வேலை விடயத்துக்கு வந்தான்.

'உங்களுக்கு வேலை வேணும், எடுத்துத்தாறன்.'

'நான் சொன்னது தப்பென்றால் மன்னிச்சிடுங்கோ! நீங்கள் நல்லாயிருக்க வேணுமெண்ட எண்ணத்தில் என்னையும் அடக்க முடியாமல் சொல்லிப்போட்டன்.'

'தப்பெண்டு நான் சொல்லேல்லை, முயற்சி செய்யிறன்.' என்று சொன்னவன்,

'அவசரம் நீங்கள் வேலைக்குப் போய்த்தானாக வேணுமோ...? உங்கடை வருத்தம் மாற, படிக்கிற டொச் கோசையும் முடிச்சுக் கொண்டு நல்ல வேலையாப் பாக்கலாம்.'

'இரண்டு மணித்தியாலங்கள் …………… இல்லாட்டி கிழமையிலை இரண்டு நாளைக்காவது ……………. ஏதாவது வேலைக்குப் போகவேணும் போலக் கிடக்கு.... வேலைக்குப் போறது எனக்குக் கஸ்டமெண்டு நீங்கள் நினைக்கிறீங்கள், ஆனால் நான் அதுக்கு எதிர்மாறா நினைக்கிறன். வேலையிலை நாலு பேரைச் சந்திக்கும்போது மனதிலை உற்சாகம் பிறக்குமெல்லே...!'

'இருக்கிற உற்சாகம் பத்தாதென்று இன்னும் புதிசா உற்சாகம் பிறக்கவேணுமெண்டு நீங்கள் ஆசைப்படுகிறீங்களோ...?

இங்கை கனபேர் இருக்கிற உற்சாகத்தையும் சாகடிச்சுப்போட்டு, பாதிப்பொழுதை உறக்கத்துக்கும், மீதிப்பொழுதை சாப்பாடு, சினிமா... விடுப்புக்கதை என்று அள்ளிக் குடுத்திட்டு, ஊரிலை இருக்கிற அம்மாக்கு ஒரு கடிதம் எழுத நேரமில்லையெண்டு கௌரவமாகக் கதைச்சுக் கொண்டிருக்கினம்.... நானும்தான்.'

'கோகுலன்! மனிசனுக்கு உற்சாகம் மனசுக்குள் ஊற்றாகப் பொங்கிச் சொரிந்தால்தான் வாழ்க்கை வாழ்க்கையாக இருக்கும், இல்லாட்டி மரம் ஒன்று நடமாடுவது போலாகிவிடும்.'

'உங்களோடை கதைக்க முடியாது, எனக்குப் புரியாததையும், புரிய வைச்சு குழப்பிப் போடுவீங்கள். எங்கடை ரெஸ்ரோரன்றிலை வேலை கேட்டிட்டுச் சொல்லுறன். உங்களை மாதிரி ஒரு ஆள் அங்கை வந்து போனாலே வயலுக்குப் புதுவெள்ளம் வந்தது போலைச் செழிப்பா இருக்கும்.'

'இந்த நக்கல்தானே வேண்டாமெண்டுறது...'

'உண்மையைத்தான் சொல்லுறன்.'

'நீங்கள் பெரிய பகிடிக்காரன்!'

'சரியாக நடக்கத்தொடங்காத பகிடிக்காரன்... அப்பிடித்தானே!'

அப்போ ஜானகி வேலையால் வந்தாள்.

'யசோ வேலைக்குப் போகப்போறாவாம்.' என்று கோகுலன் ஐானகியைப் பார்த்தான்.

'ஏன் யசோ வேலைக்குப் போகக்கூடாதா...?' என்று பதிலைக் கேள்வியாகக் கேட்ட ஐானகி, வேலைக்குக் கொண்டு போன பாக்கை சமையலறையில் வைத்துவிட்டு வந்தாள்.

'றெஸ்றோறன்ற் வேலைக்கு...!' என்று கிண்டலாக யசோவைப் பார்த்தான் கோகுலன்.

'இரண்டு, மூண்டு மணித்தியாலங்கள் வேலைக்குப் போனால் நல்லதெண்டு சொன்னனான், அதைப்போய் பெரிசா அக்காவுக்குச் சொல்லுறீங்கள்.' என்று அவனை முறைத்தாள் யசோ.

'ஏன் யசோ...? டொச் படிச்சிட்டு, ஒரு வேலைகுறிச்சுப் படிச்சா நல்ல வேலை எடுக்கலாம்... அதுக்குள்ளை முதல் வருத்தம் மாறட்டும்..' என்றாள் ஐானகி தன் சொந்தத் தங்கை போன்ற உணர்வுடன்.

'வெளியிலை போனால் மனதுக்கு வித்தியாசமா இருக்குமாம், உற்சாகம் வரும் என்கிறா.'

'அது உண்மைதான்.... மனதுதான் வாழ்க்கையை வழிப்படுத்துகிறது... அது சுதந்திரமாக, மகிழ்ச்சியாக இருந்தால்தான் சிந்தனை உதிக்கும்... வாழவேண்டுமென்ற துடிப்பு, ஆர்வம் பிறக்கும்.. இல்லாட்டி செத்தமாடு நடப்பது போலத்தான் இருக்கும்.'

'அவ சொல்லுறா, மரம் ஒண்டு நடமாடுவது போல இருக்குமெண்டு, நீங்கள் சொல்லுறீங்கள் செத்தமாடு நடப்பது போல இருக்கும் எண்டு... ரெண்டுபேரும் ஒரு குட்டையில் ஊறிய மட்டையள் போலக் கிடக்கு.'

'இரண்டு பேரும் கடவுளாலை அதிகம் சோதிக்கப்பட்டவர்கள்.' என்றாள் ஐானகி.

'ஓ.கே, இண்டைக்கு முதலாளியிட்டைக் கேக்கிறன்.' என்று கோகுலன் பதில் சொன்னான்.

'டொக்டர் என்ன சொல்லுறார்;...?' என்று யசோவைப் பார்த்துக் கேட்டாள் ஐானகி.

'கிட்னி கிடைச்சால் உடனே ஒப்பிரேசன் செய்து பொருத்துவம் எண்டு பெரிய டொக்டர் சொல்லியிருக்கிறார்'

'இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாலென்ன..? அங்கை போய் வேறை ஆக்களும் செய்திருக்கினம்!' என்றான் கோகுலன்.

'ம்...!' என்று நடக்க முடியாத ஒன்றை நிராகரிக்கும் பாணியில் தலையசைத்த யசோ,

'என்ரை விசாவுக்கு நான் எப்பிடி இந்தியா போறது...? கேஸ் இன்னும் அரைகுறையிலை கிடக்குது. அதோடை காசுக்கு எங்கை போறது...?' என்றாள்.

விடியலில் மலரும் பூக்கள் 


பகுதி - 10யசோவின் கேள்வியும் கண்ணனின் மௌனமும்

பங்குபற்றும் பாத்திரங்கள் -
யசோ
கோகுலன்
கண்ணன்  

'அப்ப உண்மையைச் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிற்பாட்ட மாட்டியோ....?'

பிச்சைக்காரன் பிச்சை போடு! என்று கையேந்துவது போலிருந்தது அவன் செயல்.

தலையை அசைத்து மறுப்புத் தெரிவித்த யசோ,

'என் வாயால் ஒருநாளும் இவையளுக்கோ இல்லாட்டி உங்களுக்கு மனைவியாக வருகிறவுக்கோ நடந்ததைச் சொல்லமாட்டன். இன்னொருவரின் மகிழ்ச்சியைக் கெடுத்து எனக்கோ என் பரம்பரைக்கோ பழக்கமில்லை. நீங்கள் சந்தோசமாக இருங்கோ!'

'அப்ப நீர்...?'

நான் சந்தோசமாக இருக்கிறன்.'

'இல்லை.... கலியாணம்?'

'தெரியாது...!'

'நீரும் ஒரு நல்ல மாப்பிளையாப் பார்த்துக் கலியாணம் செய்யும்!'

'அவசியம் ஏற்படேக்கை பாப்பம்!'

'நான் உம்மை ஏமாத்திப்போட்டன், இல்லையோ...?'

'இல்லை. நான்தான் ஏமாந்திட்டன்.'

'எனக்குக் கன இலட்சியங்கள்.'

'எனக்கும்தான!;'

'இல்லை. என் நண்பர்கள் நல்லாயிருக்கிறார்கள். அவர்களுக்கீடாக நானும் இருக்க வேணும்.'

'என்னைமாதிரி வருத்தக்கார மனிசியைக் கட்டிக்கொண்டு அவையோடை போட்டிபோட ஏலாது. அப்பிடித்தானே!'

'கோபிக்காதையும்!'

'நான் கோவிக்கேல்லை!'

'பொய் சொல்லுறீர்...! நான் செய்த வேலைக்கு கடவுள்கூடக் கோவிப்பார்.'

'அப்பிடியெண்டா ஏன் அப்பிடிச் செய்தனீங்கள்...?'

யசோவின் கேள்விக்குக் கண்ணனிடம் பதில் இல்லை.

'நானும் ஒரு மனிதஐன்மம் என்பதை நீங்கள் நினைக்கவில்லை. உங்களோடு வாழ வந்தவள் என்று நீங்கள் நினைக்கவில்லை. தொலைந்து போ! என்று தள்ளிவிட்டீங்கள். நான் தொலைந்து போயிருப்பேன். அந்தப் பொன்னாலையான் இல்லாட்டி...! நான் வணங்கிய தெய்வம் என்னைக் காப்பாற்றியது. கடவுளே...! நீ இல்லையா என்று கதறி நான் அழுதேன்.. கடவுள் தான் தாமோதரன்அங்கிள், ஐானகியக்கா போன்றவர்களைச் சந்திக்க வைத்தார். இண்டைக்குப் பறவாயில்லை, இருக்கிறன். ஆனால் நீங்கள் அண்டைக்குச் செய்தது பிழை.'

'நான் செய்தது பிழைதான்.... ஆனால் உம்மைக் கலியாணம் செய்து என்னால் சந்தோசமா இருக்க முடியாது.'

'நான் வருத்தக்காரி. ஓ.கே. கலியாணம் செய்ய மறுத்தீங்கள். ஆனால் நான் ஒரு வீடு ஏடுத்துப்போகும் வரை பொறுத்தி ருக்கலாமோ... இல்லையோ...? ஆராவது தெரிஞ்சவர்கள் வீட்டிலை யாவது என்னைக்கொண்டுபோய் விட்டிருக்கலாம்தானே! ஒண்டுமில்லாத சோசல்காம்பிலை கொண்டுபோய் விட்டீங்களே! அதுதான் எனக்குக் கோபம். இப்ப எல்லாம் ஓ.கே.'

தன்னையும் மீறி வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு,
'எனக்கு எந்தக் கோபமும் இல்லை. நீங்கள் சந்தோசமாக இருங்கோ!' என்றாள் யசோ.
'நீரும் சந்தோசமாக இருக்கு வேணும்.'

'இருப்பன்!'
அப்போ கோகுலன் வரும் சத்தம் கேட்டது.
'தயவு செய்து இவைக்குச் சொல்லிப்போடாதையும்.'

'சொல்லமாட்டன். நீங்கள் பயப்பிட வேண்டாம். உங்கடை கலியாணத்தை இவர்களோடை நானும் நிண்டு நல்லபடியா நடத்தி வைப்பன்.'

அப்போ உள்ளே வந்த கோகுலன்,
'ஹொஸ்பிற்றலுக்கோ...!' எதிர்பாராதது போலக் கேட்டவன்,
'நீங்கள் நிப்பீங்களெண்டு அத்தானை வரச் சொல்லிப்போட்டன்.' என்றான்.
'ரீ போட்டுத் தந்திட்டுப்போறன்!'

'வேண்டாம்..!' என்ற அவன் கண்ணனைப் பார்த்து,
'உங்களுக்கு நேரமிருக்கோ...?' என்று கேட்டான்.

'பிரச்சனையில்லை. இண்டைக்கு நான் லீவிலைதான் நிக்கிறன்.' என்று பதில் சொன்னான் கண்ணன்.

'அப்போ வாங்கோ! ஹொஸ்பிற்றல்லை யசோவை விட்டிட்டு நாங்கள் கன்ரீனிலை போய் கோப்பி குடிச்சுக்கொண்டு கதைப்பம்.'
கோகுலனின் அழைப்பை மறுக்கமுடியாமல் கண்ணனும் அதற்கு இசைந்தான்.

பின் சீற்றில் இருக்கப்போன யசோவை,
'நீங்கள் முன்னுக்கு இருங்கோவன்...!' கேட்டான் கோகுலன்.

'பறவாயில்லை..' என்று நாகரிகமாக மறுத்தாள் யசோ.

'பின்னுக்கிருந்தால் உங்களுக்கு ஒத்து வராதெல்லே! வாங்கோ...! அத்தான் பின்னுக்கு இருப்பார்.' என்று கோகுலன் கட்டாயப்படுத்த, யசோ முன்னால் ஏறிக்கொண்டாள்.

வைத்தியசாலைக்கு அண்டியுள்ள கார்த்தரிப்பிடத்தில் காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்கள்.

'நீங்கள் கன்ரீனிலை போய் இருங்கோ! நான் யசோவை மேலே கூட்டிக்கொண்டு போய் விட்டிட்டு வாறன்.' என்றான் கோகுலன்.

'நான் போவன், நீங்கள் அவரோடை போங்கோ!' என்று தடுக்க முயன்றாள் யசோ.

'முதல் உங்களுக்குச் சுகம் வரட்டும். அதுக்குப் பிறகு நீங்கள் சொல்லுறதைக் கேட்பம். இப்ப வாங்கோ!' என்று கையில் பிடித்துக் கூட்டிச் சென்றான் கோகுலன்.

கண்ணனுக்கு நெஞ்சிலே ஆணியடிப்பதுபோலக் குத்தியது.

நான் ஒரு அனாதையா! 
 
யசோவுக்கு வீட்டிலிருந்து கடிதம் வந்திருந்தது. அண்ணன் வரதராசன் மூலம் அவளது நிலமை பெற்றோருக்கும் தம்பி தங்கைகளுக்கும் தெரியவர, அவர்கள்  அழுகை வடியக் கடிதம் எழுதியிருந்தார்கள்.

நோய் சீக்கிரம் குணமாக வேண்டி விசேட பூiஐகள் செய்து திருநீற்;றுப் பிரசாதமும் கடிதத்தோடு வைத்திருந்தனர். அதைப் பக்தியோடு எடுத்து அவள் தன் உடமைகளுடன் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

'நீங்கள் கண்கலங்குமளவுக்கு எனக்கு ஒன்றும் நடந்துவிடவில்லை. நான் நல்லாயிருக்கிறேன்... ஐானகியக்காவைச் சந்தித்தது கடவுளின் திருவருள் என்றுதான் சொல்ல வேண்டும்... வருத்தத்துக்கு வைத்தியங்கள் செய்கிறார்கள். எல்லாம் சுகம் வரும். நான் ஜேர்மன்மொழி படிக்கிறன். நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டாம்.

'நான் உங்கிருந்து பறக்கும்போது கணவனே எல்லாமென்று நினைத்தேன். உங்களைப்பிரிந்து செல்கிறேனென்ற கவலை இருந்தது. கணவன் என்ற புதிய உறவும் பலம்மிக்க பாசமும் என்னைச் சுற்றிப்படரப்போகிறது என்ற ஆவலில் உங்கள் பிரிவு எனக்குப் பெரிதாக அன்று  தெரியவில்லை. பொறுப்பில்லாத ஒருத்தியாக வந்தேன்.... பொறுப்புக்களைச் சுமக்க அண்ணன் இருக்கிறானென்ற துணிவு இருந்தது. இங்கு வந்த பிறகுதான் புரிந்தது.... எதுவும் குழம்பலாமென்று...........
                       
அண்ணை கனடாவுக்குப் போகவேண்டி வந்தது. கணவன் என்று நம்பி வந்தவன் என்னைக் கை உதறி விட்டான். ஆனால் கடவுள் கைவிடவில்லை. நான் சந்தோசமாக இருக்கிறேன். ஜேர்மனியில் எல்லா வசதிகளும் இருக்கின்றன. வாழ நினைத்தால் வாழலாம்... என்னைப்பற்றி நீங்கள் கலங்க வேண்டியதில்லை.

என்ன புதினம் தெரியுமா...? எனக்குக் கணவனாக வர இருந்தவருக்குக் கல்யாணமாம், பெண் யார் தெரியுமா? கோகுலனின் தங்கச்சி. அவருக்கு ஏற்கனவே கல்யாணம் நிச்சயமானதோ என்னைத்தான் கல்யாணம் செய்ய இருந்தார் என்பதோ ஜானகியக்கா, கோகுலனவைக்குத் தெரியாது. நல்லது நடக்கட்டும்.'

கடிதத்தை முடித்து உறைக்குள்ளிட்டு தன் பெற்றோரின்; முகவரியை எழுதித் தபாலிற் சேர்த்தாள்.

தனிமையில் இருக்கும் வேளைகளில் கவலைகள் நெஞ்சையிடிக்க 'அம்மா' என்று வாய்விட்டு அழைப்பாள் யசோ.
'எவ்வளவு ஆசைகள், கனவுகளுடன் என்னை வளர்த்திருப்பீங்கள்... எனக்கேன் இப்பிடியொரு நிலை...? நான் யாருக்குமே தீங்கு செய்ய வில்லை... கடவுள் என்னை நோயாளியாக்கிப் போட்டார்... கல்யாணமும் குழம்பிப்போச்சு....
உங்கிருந்தால் உங்கள் மடியில், உங்கள் கரங்களுக்குள் அடைக்கலம் தருவீங்கள். இங்கு  நான் ஒரு அனாதையாக நிற்கிறேன்;.'

கண்ணீர் வழிவதையும் தடுக்காமல் படித்த நாட்கள்... பழகிய நண்பர்கள்  எல்லாரையும் நினைத்தாள்.

விமானத்தில் அவளோடு கூட வந்த பெண், தனது திருமணத்துக்கு அனுப்பியிருந்த அழகிய வர்ண அழைப்பிதழ் அவள் கண்களில் குத்தியது.
'எனக்கு மட்டும் ஏன் இந்த ஏமாற்றம்...?'
'வாழ்க்கையென்றால் இவ்வளவு தானா...?'
'அதிர்ஸ்டமில்லாதவள் நான்!'

யோசனையில் ஜானகி தட்டுப்பட்டாள். அவளுக்கு வாழ்க்கையைக் கொடுத்து, விநோதங்களைக் காட்டி ஆசைகளை வளர்த்துவிட்டு விடுகதையாக்கி வேடிக்கை பார்க்கும் தெய்வத்தின்  விளையாட்டை எப்படிச் சொல்வது...?
அவளும் துரதிஸ்டசாலி...... பாவம்... என்று மனதுக்குள் அழுதாள். நாட்கள் நடந்தன.
விடியலில் மலரும் பூக்கள் 


பகுதி - 9
வாழ்க்கையும் போராட்டமும்

பங்குபற்றும் பாத்திரங்கள் - 
ஜானகி 
யசோ
கோகுலன்
பரதன்  
பரதனுடன் கூட வந்தவர்
ஈஸ்வரி (பரதனின் மனைவி) 
லவன் 
குசன்
கண்ணன்  

ஒருநாள் ஜானகி வீட்டுக்கு பரதனும் அவன் நண்பனும் வந்தார்கள். அவர்களை ஹோலுக்கு அழைத்து வந்தாள் ஜானகி. அங்கே கோகுலன் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். யசோ லவனுக்கும்  குசனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

'வாங்கோ!' என்று கோகுலனும் யசோவும் அவர்களை வரவேற்றார்கள்.

யசோவுக்கு அவர்களை யார் என்று தெரியாது.

'என்ன பரதனண்ணை... கனகாலம் காணேல்லை.' என்று கோகுலன் கேட்க,

'இவரா பரதன்....?' என்று இதுவரை அறிமுகமாகாத பரதனை இன்று சந்திக்கிறோம் என்ற மகிழ்வு யசோவின் மனதுக்குள் நிறைந்தது.

அவன் எழுச்சிக் கவிதைகளை வானொலியில் அவள் அடிக்கடி கேட்டிருக்கிறாள். வரிக்குவரி அழகும்  துடிப்பும் என்று உயிரோட்டமாக இருக்கும்.

பரதன் சற்று உயரமாய், கம்பீரமான தோற்றம் கொண்டவன். மெல்லிய மீசை... கண்களில் ஒரு வசீகரம்... வார்த்தைகளில் அழகு. இவை அவனுக்கேயுரியவை!

பரதனுடன் கூட வந்தவர்,  ஊரில் ஊனமுற்றோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் சேகரிக்கும் உயர்ந்த பணியில் ஈடுபட்டிருப்பவர். அவருக்கு உதவியாக பரதனும் நேரம் கிடைக்கும் வேளையில் சேர்ந்து செல்வான்.

ஜானகி தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

'தமிழ் படிக்கிறீங்களோ...?' பரதனின் நண்பன் லவனையும் குசனையும் பார்த்துக் கேட்டார்.

'ஓம்!' என்றார்கள் இருவரும்.

'பாட்டுப் படிப்பீங்களா...?' கேட்டான் பரதன்.

'ஓ! படிப்பம்;!'

'எங்கை ஒரு பாட்டுப் படியுங்கோ பாப்பம்!'

 மிக இனிமையாகப் பல பாடல்களை  இசைத்தார்கள். மயிர்க்கூச்செறிந்தது.

அவர்கள் பாடி முடித்து அப்பாற் செல்ல, பரதன் சொன்னான்,

'எல்லா வீட்டையும் போட்டு வாறம்!'

'எனக்கு உங்களைப் பாக்கச் சந்தோசமாக இருக்கு! இவ்வளவு நல்ல சேவையைச் செய்யிறீங்கள்... உங்கடை கஸ்டத்தையும் பாக்காமல் இப்பிடி வீடுவீடாய்ப்  போய் கஸ்டப்படுகிறீங்கள்....  இரண்டாயிரமும் பிறந்திட்டுது... என்றாள் யசோ.

'உங்களைப் பாக்க எங்களுக்கும் சந்தோசமா இருக்கு! உங்களை மாதிரி ஒவ்வொருத்தரும் எங்களோடை ஒத்துழைச்சு,  தேவையை விளங்கிக் கொண்டால் விடியலுக்கு வெகுதூரம் ஆகாது!' என்று பரதன் சொன்னான்.

ஜானகியும் கோகுலனும் யசோவும் தங்கள் பங்களிப்பை மனமுவந்து வழங்கினார்கள்.

பரதனும் நண்பனும் எழுந்து விடைபெற்றுச் செல்ல,

'மெல்லத் தமிழ் இனிக்கும' என்ற வரிகளை உச்சரித்தாள் யசோ.

அவர்கள் சென்றபின் பரதனைப் பற்றி விசாரித்தாள் யசோ. அப்போ ஜானகியும் கோகுலனும் சுருக்கமாக அவன் நிலைமையை எடுத்துக் கூறினர்;.


'ராமும் பரதனும் ஜேர்மனிக்கு வந்தகாலத்திலிருந்தே நண்பர்கள். 'ராம் ஜானகியைத் திருமணம் புரிந்த பின்பும் நீண்டகாலமா நெருங்கிப் பழகி வந்தார்கள். சில ஆண்டுகள் கழித்து, பரதன் ஈஸ்வரியை மணம் புரிந்தான். இதன்பின் ஈஸ்வரியின் போட்டி மனப்பான்மையின் குறுக்கீட்டால் குடும்பமாகப் பழக முடியாத நிலையேற்பட்டது.

ஒருநாள் வீட்டுக்கு வந்துபோய், நல்லவன் போல் நடித்த, சந்திரன் கூட ஈஸ்வரி ஓடிவிட்டாள்.

பிள்ளைகள் இருவர், அவர்களையும் கூட்டிக்கொண்டு போனது மட்டுமன்றி வங்கிச் சேமிப்பில் இருந்த பணத்தையும் தான் எடுத்துக்கொண்டாள்.

இதனால் பரதன் ஒன்றுமில்லாமல் வெறுவிலியாக நின்றான். அப்போ 'ராமும் ஜானகியும் அவனுக்கு ஆறுதல் சொல்லி உதவி புரிந்திருந்தார்கள்.

தங்கள் வீட்டில் வந்து இருக்கும்படி அவனைக் கேட்டபோது,

'அன்புக்கும்  ஒரு எல்லை இருக்கு! என்னைக் கட்டாயப்படுத்தா தேங்கோ!' என்று, சிறியவீடு ஒன்று எடுத்து, அதில்  தனிச்சீவியம் நடத்தி வந்தான்  பரதன்.

அப்பப்போ நேரம்      இருக்கும் போது       வானொலிக்கோ, பத்திரிகைக்கோ கவிதை எழுதுவான். புரட்சியெண்ணம் படைத்தவன். தமிழின முன்னேற்றத்துக்கு  இயன்றளவு உழைப்பவன். நல்ல குணம் கொண்டவன். அநேகருக்கும் அவனைப் பிடிக்கும்.

வாழ்க்கையென்றால் இப்பிடித்தான்... சிலநேரம் எல்லாமே இருக்கிற மாதிரி இருக்கும். சிலவேளை ஒண்டுமே இல்லாத மாதிரி இருக்கும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் பூச்சியம்தான் மிஞ்சும்.

ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு கட்டத்தில் தனித்து விடப் படுகிறான்.

பத்துச் சகோதரங்களுடன் பிறந்திருக்கலாம்... ஏழெட்டுப் பிள்ளைகளைப் பெற்றிருக்கலாம்.... நல்ல மனைவி, நிறைந்த சுற்றம் என்று ஏராளமான உறவுகள்  இருந்தாலும் ஒரு சந்தர்ப்பத்தில் பணம் தேடவென்று அந்நியதேசம் செல்வதாலோ...

நோய் கண்டு வைத்தியசாலையில் சில காலம் இருப்பதாலோ...

குடும்பத்தை இழந்தோ....

ஏதோ ஒரு நிலையில் தனித்து விடப்படுகிறான் மனிதன்.

இந்த நிலையில் அவனுக்கு இவ்வுலகம் பூதகரமாகத் தோன்றும். வாழ்க்கையே வெறுப்பாக, பயங்கரமாக, கண்முன்னெ விரிந்து நிற்கும். அந்தப் பயங்கரமான சூழ்நிலையில்தான் பரதனும் படாதபாடு பட்டான்.

'ராம், ஜானகி, கோகுலன், நண்பர்கள் என்று சிலரும் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தார்கள்.

பிள்ளைகளைப் பிரிந்த சோகம் அவனை நன்றாக வாட்டியெடுத்து விட்டது. நாளாக ஆகப் பல திசைகளிலும் மனதைச் செலுத்தி, ஒருவாறு தன்னை வாழ்க்கையில் நிலை நிறுத்திக்கொண்டான்.

ஓடிப்போன ஒருத்திக்காகத் தன்னை அழிப்பது அறிவீனம் என்ற ஒரு உண்மையை அவன் மீண்டும்  மீண்டும் மனத்திடை கொணர்ந்து, நெஞ்சில் பீறிட்ட கவலையை அடக்க முனைந்தான்.

அவன் மனந்தேறி புதுவேலையும் எடுத்து, தனது எழுத்தாற்றலை தமிழின முன்னேற்றத்துக்குப் பயன்படும் வகையில் பணிபுரிந்து கொண்டிருந்தான்.

ஜானகி, பிள்ளைகள், கோகுலன் யாவரும் கண்ணன் வீட்டுக்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்று வந்த பிறகு, அவனைப் பற்றி விமர்சித்திருந்தார்கள்.

'வீட்டை அழகாக வைத்திருந்தாராம். அவர்களை விழுந்து விழுந்து உபசரித்தாராம்.. லவனுக்கும் குசனுக்கும் பக்கத்திலிருந்த சாப்பாட்டுக்கடையில் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாராம்.' என்று யசோவுக்கு வியந்துரைத்தார்கள்.

அவள் நாகரிகத்துக்காக சிரிக்க முயன்றபடி, ஓரிரு வார்த்தைகள் சொன்னாள்.

கண்ணனைப் பற்றி ஏற்கனவே தன் நண்பன் ஒருவன் மூலம்  கோகுலன் விசாரித்திருந்தான்.

'கண்ணன் இலட்சியவாதி. பிரயாசை கொண்டவன். ஒழுக்கத்திலும் பிழை பிடிக்க முடியாது. எப்பாலும் இருந்திட்டு பியர் குடிப்பான். இது வெளிநாட்டில் சாதாரணம்தானே!' இப்படிக் கூறியிருந்தான் அந்த நண்பன்.

யசோ என்ன சொல்வதென்று தெரியாமற் தடுமாறினாள். உள்ளதைச் சொல்லிவிட்டால் கல்யாணம் நின்று விடும். உண்மையைக்கூறி ஒரு கல்யாணத்தைத் தடுப்பது பண்பான செயலாகுமா...?' என்று மனம் குழம்பி நின்றாள்.

ஐானகி ஒருநாளும் இல்லாதவாறு மகிழ்ச்சியுடன் இருந்தாள். இந்தவேளை வாயைக் கொடுத்து, உண்மையைக் கக்கிவிட்டால் அவள் மகிழ்ச்சி காற்றோடு பறந்து விடும்  என்று நினைத்து, சொல்லுவதில்லை என்ற திடமான முடிவுக்கு வந்தாள் யசோ.

மறுநாள் லவன், குசன் இருவரையும் பாடசாலைக்கு அனுப்பியபின் வைத்தியசாலைக்குப் போகத் தயாரானாள்.

கதவு திறக்;கும் ஒலி கேட்டது.

'ஆர் இந்த வெள்ளெண்ண...? அக்கா இல்லாட்டி கோகுலன்... வேறு யாராயும் இருக்க முடியாது.' என்று நினைத்தவளாய் வாயிலே கிளிப், தலையிலே சீப்பு கௌவிய நிலையில் எட்டிப் பார்த்தாள்.

படியிலே காலடியோசை.

மேலே ஏறிவருவது கண்ணன் என்று கண்டதும் யசோவின் முகம் காய்ந்து இறுகியது. இதயமற்ற மிருகம் ஒன்று நடந்து வருவது போல அவள் கண்கள்; வெறுப்பைக் கக்கின.

'இவள் எப்பிடி இங்கை....?' சோசல்காம்பில் இருந்தவளுக்கு முன்பின் தெரியாத ஐானகி வீட்டில் என்ன வேலையென்று நினைத்தவாறு  இடிந்துபோய்  நின்றான் கண்ணன்.

'வாங்கோ!' என்று ஒற்றைச்சொல்லில் சம்பிரதாயத்துக்கு வரவேற்றவள், ஹோலுக்குள் சோபாவைக் காட்டி,

'இருங்கோ!' என்றாள்.

'கோகுலன்தான் கூட்டிக்கொண்டு வந்தவர். பக்கத்துக்கடைக்குப் போட்டு வருவதாகச் சொல்லிக் கதவைத் திறந்து விட்டுட்டுப்  போனவர்.' என்று அவள் கேட்காமலே, தான் அங்கு வந்த விபரத்தை எடுத்துச் சொன்னான்.

'எனக்கு பஸ்க்கு நேரமாகுது, வெளிக்கிடவேணும்!' என்று வார்த்தைகளில் அவசரம் தொனிக்கக் கூறியவளாய், தன் அறைக்கு விரைந்தாள்.

ஊசிக்கு மேல் உட்கார்ந்திருப்பவன் போல் இருந்தான் கண்ணன்.

'இவள் வாயைத் திறந்து உண்மையைக் கொட்டிவிட்டால் எல்லாமே உழுத்துப்போயிடும். இருக்கிற வயிற்றெரிச்சலில் குசினிக்குள் இருக்கிற இறைச்சி வெட்டுற கத்தியைத் தூக்கி வந்து ஏத்தினாலும் ஏத்திப் போடுவாள்.

வெளியிலை போய் நின்று கோகுலன் வர, அவசரவேலையிருக்கு, இப்பதான் நினைவுக்கு வந்தது என்று சாக்குப்போக்குச் சொல்லி விட்டு, இப்போதைக்கு தப்புவம்! பிறகு ஆறுதலாக வருவம்!' என்று நினைத்து எழுந்திருக்க முயல,

'மனிசி வாறாவாம்! கேள்விப்பட்டன்' என்று கூறிக்கொண்டு யசோ கைப்பையுடன் வெளியே புறப்பட ஆயத்தமாக வந்தாள்.

வருத்தக்காரியானாலும் வடிவாக இருக்கிறாளே என்று அவன் மனத்தினுள் எறும்பு கடிப்பது போன்று எரிவு தெரிந்தது.

பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தான். இவளால் ஒன்றும் செய்யமுடியாது. சும்மா செல்லாக்காசு மாதிரி ஒரு மினுமினுப்பு அவ்வளவுதான் என்று தன்னைச் சமாதானம் செய்துகொண்டான்.

'பயமா இருக்கா...?' கேட்டாள் யசோ.

'என்னைப் பார்த்து இப்பிடி ஒரு கேள்வி கேட்க இவளுக்கு என்ன தைரியம்..!'என்று கண்ணனின் மனம் முறுகியது.

'எல்லாம் காலந்தான்.' என்று நினைத்துக்கொண்டான்.

'நீர் நினைத்தால் இந்தக் கல்யாணத்தை நிறுத்தலாம்.'

'நான்  ஏன் அப்படி நினைக்கிறேன்...!'

'என்னில் உமக்குக் கோபம் இருக்கும்தானே!'

'ஏன்...?'

'கலியாணம் செய்யிறன் எண்டிட்டு மாட்டன் எண்டிட்டன்.'

'அதனாலென்ன..... சொல்லுறதையெல்லாம் செய்ய நீங்கள் என்ன அரிச்சந்திரனா...?'

கண்ணன் மௌனமாக நின்றான்.

'அண்டைக்கு இவள் என்னுடையவளாக இருந்தபோது எனக்குப் பயந்தவளாக என் காலில் வீழ்ந்து கிடந்தாள். இண்டைக்கு நேருக்கு நேர் நிமிர்ந்து நிற்கிறாள்.' என்று அநாவசியமான எண்ணங்கள் அவனுள் உதித்து மண்டையை இடித்தது.

'நீங்கள் உங்கள் விருப்பப்படி நல்லாயிருங்கோ! என்னைக் கண்டு பயப்பிடவேண்டாம்.'

'அப்ப உண்மையைச் சொல்லி இந்தக் கல்யாணத்தை நிற்பாட்ட மாட்டியோ....?'

பிச்சைக்காரன் பிச்சை போடு! என்று கையேந்துவது போலிருந்தது அவன் செயல்.
விடியலில் மலரும் பூக்கள் 


பகுதி - 8
உயிரோடு ஒட்டிய தாய்மொழி தமிழ்

பங்குபற்றும் பாத்திரங்கள் - 
ஜானகி 
யசோ
வனஜா
சேகர்
கோகுலன்  
யசோவின் அண்ணா  
யசோவின் அண்ணி  

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை!

ஜானகிக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர், அவள் வீட்டுக்கு வந்திருந்தனர்.

'ராம் உயிருடன் இருக்கும்போதே பழக்கமானவர்கள். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகள் அவர்களுக்கு!

மத்தியானச்சாப்பாடு சமைத்து அவர்களை ஜானகி உபசரித்தாள். யசோவும்    உதவி புரிந்தாள்.

அவர்களின் பிள்ளைகள் அழகாயும், சுறுசுறுப்பாயும் இருந்தார்கள். ஆனால் தமிழ் கதைக்காமல் ஜேர்மன்மொழியில் கதைத்தார்கள்.

'தமிழைக் கதையுங்கோவன்!' சொன்னாள் யசோ.

அதற்குத் தாயார் வனஜா, 'அவைக்குத் தமிழ் தெரியாது!' என்றாள் பெருமையாக.

ஜானகிக்கு அவர்களைப் பற்றித் தெரியும். பேசாமல் தன் வேலையில் இருந்தாள்.

தன் பிள்ளைக்குத் தமிழ் தெரியாது என்று பெருமையாகச் சொல்லும் தாயைப் பார்க்க யசோவுக்குப் பரிதாபமாக இருந்தது.

'தமிழ்ப்பள்ளிக்கூடம் போறேல்லையோ....?' கேட்டாள் யசோ.

'சீ...!' என்றார் தகப்பன் சேகர்.

'நேரமில்லை.... மாஸ்டர் சொன்னவர் பிள்ளையளுக்கு ஓய்வு தேவை எண்டு!'

'தாய்மொழியைப் படிக்கிறதுக்குத் தினமும்    சிலமணிநேரம் ஒதுக்குவது அப்பிடியொண்டும் இடைஞ்சலா இருக்குமெண்டு நான் நினைக்கேல்லை. இஞ்சை இவங்களும் படிக்கிறாங்கள்;... எல்லாத்திலையும் கெட்டிக்காரன்களாத் தான் இருக்கிறாங்கள்!' என்றாள் யசோ லவன், குசனைக் காட்டி.

'நீர் இப்பதானே புதிசா வந்தனீர்! உமக்கு இது விளங்காது!' என்றார் அந்தப் பிள்ளைகளின் தகப்பனார்.

'தமிழ்ப்பிள்ளைகள் தமிழ் படிக்க வேணுமெண்டு சொல்லுறதுக்கு, ஜேர்மனியில் கனகாலம் இருக்கவேணுமெண்ட தேவையில்லையே!' என்று குறுக்கிட்டாள் ஜானகி.

'இஞ்சை பிள்ளையளுக்குரிய கஸ்டங்கள் புதுசா வந்த யசோவுக்குத் தெரியாது, அதுதான் சொல்லுறார்.' என்றாள் வனஜா.

'எனக்குத் தெரியுமக்கா! பல கஸ்டங்கள் பிள்ளையளுக்கு இருக்குத்தான்... 
இது எங்கடை அப்பு, அம்மா வழிவந்த அன்னைமொழி.... இது தெரியாமல் நாங்கள் பிள்ளையளை வளர்த்தால்.... எங்கடை தமிழ்மொழியின்ரை நிலை என்னெண்டு யோசிச்சுப் பாருங்கோ!'

'இங்கிலிஸ் படிச்சாலும் பறவாயில்லை... உதவும், தமிழ் படிச்சா பிள்ளையளின்ரை நேரம்தான் வீணாகும்.' என்றான் சேகர்.

'அண்ணை! இப்பிடி வேறை எங்கையும் கதைச்சுப்போடாதேங்கோ!

'இதயம் உறுதியாக இருந்தால் சுண்டெலிகூட யானையைத் தூக்கும்! என்ன இருந்தாலும் எங்கடை தாய்மொழியை விட்டுக் குடுக்கக்கூடாது. நாங்கள் தான் எங்கடை பிள்ளையளுக்கு இதை விளங்கப்படுத்திச் சொல்லி, தமிழைப் பேச, வாசிக்க வைச்சு நாலு வரியாவது எழுதக்கூடியவர்களாக ஆக்க வேணும்!' என்று சூடாகக் கொடுத்தாள் யசோ.

கல்யாணக் கனவு

சிலநாட்களின் பின்,

ஒருநாள் வழக்கம் போல எல்லா நிகழ்வுகளும் நடந்தன. யசோ வைத்தியசாலைக்கு அன்று போகவேண்டியதில்லையென்பதால் ஓய்வு எடுத்தெடுத்து வீட்டுவேலைகளையும் செய்து, சமையலையும் முடித்திருந்தாள். அப்போ அங்கே கோகுலன் வந்தான்.

'சுகமாக இருக்கிறீங்களா...?'

'பறவாயில்லை... நீங்கள் எப்பிடி...?'

'இருக்கிறன், கலியாணம் பேசுப்படுகுது, அக்கா சொல்லேல்லையே?'

'சொன்னவ, சந்தோசமான விசயம்தானே.' என்று யசோ மகிழ்ச்சியுடன் பதில் சொல்ல, கோகுலன் பேஸிற்குள்ளிருந்து படம் ஒன்றை எடுத்துக்காட்டினான்.

'ஏ.எல் படித்திட்டு, ஆபீஸ் ஒன்றிலை வேலை செய்யிறா.'

'வடிவான பிள்ளை, குணநடையிலும் நல்லா இருப்பா எண்டு முகம் சொல்லுது, ஓம் எண்டு சொல்லுறதுதானே.'

'மாட்டன் எண்டு சொல்லேல்லை, கொழும்பிலை தமக்கையின்ரை வீட்டிலை வந்து நிக்கிறா. ரெலிபோனிலை கதைத்தனான்.'

'இவ்வளவு நெருங்கிவிட்டீங்களெண்டு அக்கா சொல்லேல்லை..!'

'இண்டைக்குத்தான் விடிய எடுத்தனான், அக்காவுக்குத் தெரியாது.
அதோடை எங்கடை தங்கச்சிக்கும் சரிவரும்போலை கிடக்கு, மாப்பிள்ளை இங்கை கிட்டத்ததான் இருக்கிறார்.' என்ற கோகுலன் இன்னோர் படத்தையும்  அவளிடம் நீட்டினான். 
உற்சாகமாக வாங்கிக் கண்களை அதில் பாய்ச்சியவள்  அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் நின்றாள். அவள் தலை சுற்றியது.

'எப்பிடி மாப்பிள்ளை...?' கேட்டான் கோகுலன்.

யசோ பதில் சொல்லாமல் படத்தை அவனிடம் திருப்பிக் கொடுத்தாள்.

'படிச்சவராம். இங்கை பக்ரறி ஒன்றிலை வேலை செய்யிறாராம். ஆள் எப்பிடி உங்களுக்குப் பிடிச்சிருக்கா?'

யசோவுக்கு என்ன செய்வதென்றே தெரியவல்லை..... இவ்வளவு கெதியா இன்னொரு கலியாணத்துக்கு கண்ணன் காலடி எடுத்து வைப்பானென்று அவள் கனவிலும்கூட நினைத்துப் பார்க்கவில்லை. நெஞ்சு பற்றி எரிந்தது.

நடந்ததை அவனிடம் சொல்லவென்று வார்த்தைகள் தொண்டைவரை வந்துவிட்டபோதும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

யசோ பதில் பேசாமல் இருப்பதைக் கண்ட கோகுலன், அவள் அபிப்பிராயத்தையறிய மீண்டும் ஒருமுறை

'என்ன அமைதியா விட்டீங்கள்...? பிடிக்கேல்லையோ... இல்லாட்டி வடிவில்லையோ...?' என்று யசோவைப் பார்த்துக் கேட்டான்.

அவள் தன் மௌனத்தைக் கிழித்து, பொய்யாக, 'வடிவா இருக்கிறார்.' என்றாள்.

'ஊரிலை நல்ல வசதியான ஆக்கள்... சகோதரங்கள் எல்லாரும் கைலெவல்லை இருக்கினம்.'

'வசதியானவையெண்டா நல்லதுதானே!' என்று சமாளித்தாள் யசோ. தன்னுடைய இயலாமையை அவள் மனம் ஏற்றுக்கொண்டது. வாழ்நாள் பூராவும் டாக்டர், மருந்து என்றிருக்க வேண்டியவள் அவள். தன்னை மணந்து சந்தோசமாக இருக்க முடியாது என்று அவன் நினைத்ததில் தவறில்லையென்று அவள் மனம் சொல்லியது. கண்ணனோ வாழ்க்கையைப் பற்றிப் பெரிதாகக் கற்பனை செய்து கொண்டிருப்பவன்.

'வீடு வாங்க வேணும் பிள்ளைகள் பெற வேண்டும் வாறவளும் வேலைக்குப் போக வேண்டும் இருவரும் உழைத்து நிறையச் சேமிக்க வேண்டும்.' என்று பல இலட்சியங்கள் அவனுக்கு.

வருத்தக்காரியான தன்னை ஒரு சுமை என்று அவன் நினைத்தது மனிதஇயல்புதானே! என்று மனதுக்குள் சமாதானம் சொன்னாள்.

யசோவின் திடீர் அமைதிக்குக் காரணம் தெரியாத கோகுலன், கல்யாணவயதிலே அவளும் இருப்பதால் தனது எதிர்காலம் பற்றி யோசிக்கிறாளோ என நினைத்தவனாய்,

'நல்ல மாப்பிள்ளையா பார்த்து உங்களுக்கும் கெதியிலை நான் கலியாணம் செய்து வைக்கிறன், யோசிக்காதேங்கோ!' என்றான்.

அவளுக்குச் சிரிப்பு வந்தது. எனினும் அப்படிச் சொன்னது, அவள் எரியும் நெஞ்சைக் குளிர்மைப்படுத்துவதாக இருந்தது.

'நான்தானே வருத்தத்தைக் கட்டியிருக்கிறன். இனி ஏன் எனக்குக் கல்யாணத்தை...?' என்றாள்.

'வருத்தம் வாறது எல்லாருக்கும்தான். நீங்கள் அதை ஏன் சீரியஸா எடுக்கிறீங்கள்...?'

'சீரியஸான விசயம்தானே! அப்பிடி எடாமல் வேறை எப்படி எடுக்கிறது?'

'உங்கடை நிலைமை எனக்கு விளங்குது. அத்தான் மோசம் போன போது அக்கா பட்டபாடு வார்த்ததைகளால்  வர்ணிக்க முடியாது. அம்மாடி....! இண்டைக்கு அவ தன் மனதை ஒரு மாதிரி வழிக்குக் கொண்டு வந்து, பிள்ளையளின் வாழ்க்கைதான் தன் வாழ்க்கை  என்று வாழுறா! அதுதான் உங்களுக்கும் சொல்லுறன்

இண்டைக்கு இருக்கிற சோகம் நாளைக்கு இருக்குமெண்டு சொல்ல முடியாது.'

யசோ பதில் சொல்லாது புன்சிரிப்பு இதழ்களில் தெரிய அவனைப் பார்த்தாள். தன் கவலைகளைப் போக்க அவன் முயற்சிப்பது அவள் மனதுக்கு இதமாக இருந்தது.

தன்னந்தனியாக சோசல் வீட்டில் இருந்தபோது அவளைச் சோகங்கள் விழுங்கி ஏப்பம் விட இருந்தன.

பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல் வருத்தம் என்று அவள் கலங்கி நின்றபோது கை பிடித்தவனும் காலை வாரிவிட நெஞ்சம் வேதனையால் வெடித்துவிட்டதுபோல துடித்துப் போயிருந்தவளுக்கு ஐானகியைக் கண்டபின் வீட்டுக்கு வீடு வாசற்படி என்று உணரத் தலைப்பட்டாள்.

அப்போ தொலைபேசி மணி ஒலித்தது. எழுந்து சென்று எடுத்த கோகுலன்,

'உங்களுக்குத்தான்!' என்று யசோவை அழைத்து றிசீவரைக் கொடுத்தான்.

கனடாவிலிருந்து அவள் அண்ணன் வரதராசனின் குரல் ஒலித்தது.

'தங்கச்சி..! என்னடி? என்ன...! தாமோதரன் என்னவோ எல்லாம் சொல்லுறான். கண்ணனுக்கு ரெலிபொன் எடுத்தால் அவனைப் பிடிக்க முடியேல்லை.'

யசோவுக்கு அண்ணனின் குரலைக் கேட்டதும் கண்ணீர் கொப்பளித்துக்கொண்டு வந்தது.

'அண்ணை!' என்று அழைத்தவள் விக்கிவிக்கி அழுதாள்.

'அழாதை! நாங்கள் உங்கை இருந்திருக்கலாம். இல்லாட்டி லண்டனுக்கப் போயிருக்கலாம். கனகாசும் செலவழிஞ்சு போச்சு! இவன் கண்ணன் இப்பிடிச் செய்வானெண்டு நான் எதிர்பார்க்கவும் இல்லை.'

'எல்லாம் என்ரை விதி அண்ணை! இல்லாட்டி இப்பிடியொரு வருத்தம் இவ்வளவு நாளுமில்லாமல் ஏன் இப்ப வரவேணும்....? ஊரிலை எண்டா அம்மாவின்ரை மடியிலை கிடந்து செத்தாலும் மனதுக்கு நிம்மதியா இருக்கும்.'

'நான் பிழை விட்டிட்டன். சரி, நான் உங்கை வாறன். உன்னை இந்த நிலையிலை விட்டிட்டு வந்தது என்ரை பிழை.'

'இல்லை அண்ணை! நீங்கள் இங்கை வந்து என்ன செய்யப் போறீங்கள்? எங்களுக்கு எல்லாப் பக்கத்தாலும் கஸ்டகாலம்!'

'அண்ணி கனடாவிலை நிக்கட்டும், நான் வாறன்.!'

'உங்களுக்கென்ன விசரே...? அண்ணை பேய்வேலை பாக்காதேங்கோ! இங்கை வந்து உங்கடை வாழ்க்கையையும் வீணடிக்காமல் பொறுமையா இருங்கோ!'

'என்னடி பொறுமையா இருக்கிறது...? உங்கை வந்து அவன்ரை சேட்டைப் பிடித்து நாலு கேள்வி கேட்கவேணும் போலை கிடக்கு! பொறு.... இந்தா அண்ணியோடை கதை!'

யசோவும் அழுதகுரலில் அண்ணி சாந்தாவுடன் கதைத்துவிட்டு தொலைபேசியை வைத்தாள்.

இதுவரை எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த கோகுலன்,

'அண்ணைக்கு இப்பதான் தெரியும்போலை கிடக்கு!' என்று கேட்டான்.

'நான் சொல்லேல்லை. அண்ணை சரியாக் கவலைப்படுவர்.  அவரும் பாவம்... இங்கை விசா கிடைக்காமல் இருந்தவர். பிடிச்சு அனுப்பினாலும் எண்ட பயத்திலை  இப்ப கனடாவுக்குப் போயிருக்கினம்.... அங்கையும்; இன்னும் ஒண்டும் சரிவரேல்லை.'

'எல்லாம் சோகமான கதையாக்கிடக்கு!' என்ற கோகுலன், அவள் மனதை வேறு திசைக்கு மாற்ற றேடியோவை இயக்கினான்.

அதில் 'தோல்வி நிலையென நினைத்தால்.....' என்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது.  

` விடியலில் மலரும் பூக்கள்  ``

பகுதி - 7  

ஒருதுளி ஆனந்தக்கண்ணீர்
பங்குபற்றும் பாத்திரங்கள் - 
ஜானகி 
கோகுலன்  
யசோ

கோகுலன் வந்தான்.

'ரீ குடியுங்கோவன்!' உபசாரத்தோடு கேட்டவள் முன்னேற்பாட்டுடன் போட்டு வைத்திருந்த தேநீரைச் சூடாகவே கொடுத்தாள்.

மறுக்காமல் வாங்கிக் குடித்தான். அவனுக்கும் அப்போ அது தேவையாக இருந்தது. எழுந்ததும் முகத்தைக் கழுவி, வெளிக்கிட்டு வெறுவயிற்றுடன் வந்திருந்தான். வழியில் ஒரே கார்கள், எல்லோரும் வேலைக்குப் போகும் நேரம். சிக்னல்லைற்றுக்களும் அடிக்கடி சிவப்பு எரிய நின்று நின்று வந்திருந்தான்.

இருவரும் வெளியே வந்து காரை நோக்கி நடந்தார்கள்.

'ஹொஸ்பிற்றலிலை அஞ்சு மணித்தியபலங்களுக்கு மேலை செல்லும். நீங்கள் என்னை அங்கை இறக்கிவிட்டு, வீட்டை போங்கோ! நான் பஸ்ஸிலை வாறன்.' என்றாள் யசோ அவன் பின்னால் நடந்தபடி.

'அஞ்சு மணித்தியாலம் எடுக்குமோ...?' நின்று ஆச்சரியம் தொனிக்கக் கேட்டான் அவன்.

'ம்!' என்று ஆம் போட்டவள், 'அதுக்கு மேலை எடுத்தாலும் எடுக்கும்.' என்றாள்.

'அக்கா இதுபற்றி ஒண்டும் சொல்லேல்லை.....!'               

'பிஸியிலை மறந்திருப்பா எண்டு    நினைக்கிறன்.'

'சொறி... உங்கடை நிலைமை தெரியாமல் நேற்று நான் அக்காட்டை ஏன் இங்கை கூட்டிக்கொண்டு வந்தனீங்கள் எண்டு கேட்டிட்டன்.... மன்னிச்சுக்கொள்ளுங்கோ.' என்றான்.

வைத்தியசாலை நெருங்கிவிட்டதால் உரையாடல் பாதியிலே நிற்க, முன்னாலிருந்த பெரிய கார்த்தரிப்பு இடத்தில் காரை நிறுத்திவிட்டு, யசோவும், கோகுலனும் உள்ளே நடந்தார்கள்.

'கனநேரம் எடுக்கும், நீங்கள் வீட்டை போங்கொ! நான் பஸ்ஸிலை வாறன். பிள்ளையள் பள்ளிக்கூடத்தாலை வர நீங்களும் சேர்ந்து எதாவது சாப்பிடுங்கோ!' என்று அவனை அங்கு தாமதிக்கவைக்க மனமில்லாதவளாய்க் கூறினாள்.

'நேரம் கிடக்குத்தானே, கொஞ்சநேரம் நிண்டிட்டுப் போறன். நான் கூடவாறது உங்களுக்குக் கஸ்டமென்றால் சொல்லுங்கோ, நான் போறன்......'

'எனக்கு ஒரு கஸ்டமுமில்லை, உங்கடை நேரம்தான் வீணாப்போகும்    எண்டு நினைச்சன்.'

இருவரும் படியேறி இரண்டாம் மாடியில் அமைந்திருந்த யசோவின் சிகிட்சைப்பிரிவுக்குரிய வார்ட்டையடைந்தார்கள்.

யசோ அடிக்கடி அங்கு போய்வர வேண்டியிருந்ததால் அங்கே வேலை செய்யும் தாதிமார்களுக்கு அவள் பழக்கமாகிவிட்டாள்.    வைத்தியரும் அவளுடன் அன்பாக நடந்து கொண்டார்.

யசோ இவ்வளவுநாளும் சிகிட்சைக்குத் தனியாகவே வந்து போவாள். ஜெர்மனிக்கு வந்து சிலமாதங்கள்தான் ஆகியிருந்ததால் ஜெர்மன் மொழியைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. அவள் பள்ளியில் படித்த ஆங்கிலம் ஓரளவுக்குக் கை கொடுத்தது.

ஆரம்பத்தில் கண்ணன் அவளுடன் ஓரிரு தடவைகள் கூட வந்திருந்தான். பிறகு அவன் வருவதில்லை.

வழமையான சோதனைகளைத் தொடர்ந்து, அவளைச் சிறிதுநேரம் இருக்கும்படி கூறிய தாதி ஏதோ வேலையாகப் போய்விட்டாள்.

கோகுலனுக்கு யசோவின் வருத்தம் என்ன என்பது இப்போதான் தெரிந்தது. இந்த வயதிலை இப்படி ஒரு நோயா என்று அவன் மனம் கலங்கிப் போனான்.

'உங்கடை அக்காவைச் சந்திச்சது எனக்குக் கடவுளைச் சந்தித்தது போலக் கிடக்கு. நேற்றுவரை நான் ஒரு அனாதையாக இருந்தேன்.' என்றாள் யசோ.

'நாங்கள் இருக்கிறம்.' என்று சொன்ன கோகுலனின் கை அவள் கண்ணீரைத் துடைக்க, அவள் பொங்கிவந்த அழுகையைச் சிரமப் பட்டு அடக்கிக்கொண்டாள்.

'அம்மா, அப்பா எல்லாம் எங்கை ஊரிலையா...?'

'ஓ! தம்பி, தங்கச்சி இரண்டு பேரும் அவையோடை இருக்கினம். அண்ணை கனடாவிலை.'

'நீங்கள் இங்கை...'

'நான் தனிய..... என்ன செய்யிறதெண்டு தெரியேல்லை.'

'நீங்கள் தனிய எண்டு ஆர் சொன்னது..?'

யசோ அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

'இப்ப சொன்னமாதிரி இனிமேல் சொல்லாதேங்கோ! எங்களைப் பாக்க மனிசர் மாதிரித் தெரியேல்லையோ...?'

'கோவிக்காதேங்கோ, சொந்தக்காரர் ஆருமில்லை எண்டதைச் சொன்னனான்.'

'சரி, நீங்கள் ஜெர்மனிக்கு தனியவோ வந்தனீங்கள்?'

'அண்ணை இங்கை இருந்தவர், கலியாணம் பேசிக் கூப்பிட்டவர்.....' என்று ஆரம்பித்து, நடந்த விபரங்களைச் சுருக்கமாகக் கூறினாள்.

கண்ணனின் பெயரைக் கூறவில்லை.

'இப்பிடியான ஆக்களுக்குச் செவிட்டாவடி கிழிய ஒண்டு குடுத்தாத்தான் வழிக்கு வருவினம்.' என்றான் கோகுலன்.

'வேண்டாம்... நடந்ததை நான் ஒரு கெட்ட கனவெண்டு எண்ணி மறக்க நினைக்கிறன்.'

அப்போ யசோவை அழைக்க தாதி வந்தாள். கோகுலன் நேரத்தைப் பார்த்துவிட்டு,

'நான் இங்கை இருக்கிறன், நீங்கள் றீற்மன்ரை முடிச்சிட்டு வாங்கோ!'

'இல்லை கோகுலன் பிளீஸ்! கனநேரம் செல்லும், நீங்கள் போங்கோ' என்று சொல்லிவிட்டு தாதியுடன் நடந்தாள்.

கோகுலன் சிறிதுநேரம் நின்று பார்த்துவிட்டு,

'அவள் சொன்னதும் சரிதான்.... நான்கைந்து மணிநேரங்கள் காத்துக் கொண்டு சும்மா நிற்பதைவிட வீட்டுக்குப் போட்டு பிறகு வரலாம்.' என்ற முடிவுடன் அவள் போவதைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

தாதியுடன் சென்ற யசோ, சிறிதுதூரம் நடந்தபின் திரும்பிப் பார்த்தாள். அங்கே தன்னைப் பார்த்தபடி கோகுலன் நின்று கொண்டிருக்க, அவனுக்குக் கை காட்டி விட்டுத் தொடர்ந்து சென்றாள். பதிலுக்குக் கை காட்டிவிட்டுக் கோகுலன்    வைத்தியசாலையை விட்டு வெளியே நடந்தான்.

நேற்று முதற்பார்வையில், தான் எடை போட்ட கோகுலனுக்கும், இன்று காணும் கோகுலனுக்கும் நிறைய வித்தியாசம் என்று உணர்ந்தாள் யசோ.

வருத்தம் என்று கேட்டதும் அவன் மனம் பதறி நின்ற காட்சியை அவள் மீட்டுப்பார்த்தாள். இளகிய மனம் அவனுக்கு.... மனம்விட்டுக் கதைக்கக்கூடிய ஒருவன். யாரோ ஒருத்தன்...  ஜானகிக்கு ஒன்றுவிட்ட தம்பி... ஒருவருமில்லை என்று தான் சொன்னபோது அவனுக்கு வந்த கோபத்தை எண்ணிப் பார்த்தாள்.

அவள் தன்னுடைய உண்மை நிலையைத்தானே சொன்னாள்.    அதுக்கு அவன், 'இப்ப சொன்னதுமாதிரி இன்னொரு தடவை    சொல்ல வேண்டாம்.' என்று கண்டிப்புடன் சொன்னது இன்னும் அவள் காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

நேற்றுவரை கண்ணன் போன்ற சுயநலக்காரர்களும், தன் வருத்தமும், அந்தச்சோசல்வீடும்தான் உலகம் என்று நினைத்தவளுக்கு, அந்த நினைப்புத் தவறு என்று இன்று புரிந்தது.

'வார்த்தைகளுக்குத்தான் எவ்வளவு சக்தியுண்டு. சில மனதைத்தாக்கி சிதறடித்து மனிதனைத் துடிதுடிக்க வைத்துவிடும். சிலவார்த்தைகள் இதற்கு மாறாக மனதை மகிழ வைத்துத் துள்ளிக் குதிக்க வைக்க வல்லன.' என்று நினைத்தாள்.

குருதிச்சுத்திகரிப்பு முடிந்து யசோ, அடுத்ததுக்கும் மற்றொருநாள் நேரத்தைப் பதிந்துவிட்டு வெளியே வரவும், அங்கே  ஜானகி   காத்துக் கொண்டிருந்தாள். யசோ மகிழ்ச்சியில் சொக்கிப்போனாள். மறுபக்கம் அவர்களுக்குத் தான் சுமையாகிவிட்டேனோ என்று ஒரு கணம் எண்ணத் தோன்றியது.

'நான் பஸ்ஸிலை வருவன் எல்லே அக்கா! வேலையாலை வந்தனீங்கள், பிள்ளையளோடை கொஞ்சம் றெஸ்ற்ரா இருக்கிறதை விட்டிட்டு என்னக்கா நீங்கள்.....?'

'கோகுலன் வீட்டிலை நிக்கிறான், அவன் பிள்ளையளைப் பாப்பான். நீ அதைப்பற்றி    ஒண்டும் யோசிக்காதை...!'

'தனக்கு உன்ரை வருத்தத்ததைப்பற்றிச் சொல்லேல்லையெண்டு கோகுலனுக்குக் கோபம்..... பாவம் நீ எண்டு இரக்கப்படுகிறான். இப்பிடி ஒருநாளும் அவன் சோகம்பட இருந்ததில்லை.' என்று  ஜானகி சொல்ல, யசோவுக்கு மனதில் இனம்புரியாத உணர்வலைகள் ஐனனித்து அவள் எண்ணச்சுமைகளை    ஓரமாகத் தூக்கி எறிந்து விட்டாற்போன்று உணர்ந்தாள்.

இருள் சூழ்ந்த அடர்ந்த காட்டினுள் நடப்பவளுக்கு ஒளியும், ஆட்துணையும் கிடைத்ததுபோலத் தைரியம் பிறக்க, தன் பக்கத்தில் வந்து நின்ற ஜானகியை கைகளால் அணைத்து, கடவுளுக்கு தன் நன்றியையும் சொல்லிக்கொண்டாள். அவள் கண்களில் பிறர் அறியாமல் ஒருதுளி ஆனந்தக்கண்ணீர் முளைத்து எட்டிப்பார்த்தது.

இருவரும் காரிலேறினார்கள். வழியில் வந்த சுப்பமார்க்கெட்டிற்குச் சென்று அவசியமான பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார்கள்.

'டொக்டர் என்னவாம்....?' கேட்டாள் ஜானகி.

'எல்லாம் நோர்மலாம், கிட்னி கிடைக்குமட்டும் ஹொஸ்பிற்றலில் இந்த றீற்மன் தொடர்ந்து    எடுக்கவேணும்.'

'எப்ப கிட்னி கிடைக்குமெண்டு சொல்லேல்லையே...?'

'ம்...ம்... சிலபேர் வருசக்கணக்காக் காத்துக்கொண்டிருக்கினம், பொருந்தக்கூடியது கிடைச்சால்தானே.

'நல்ல மனிசரைத்தான் கடவுள் சோதிக்கிறார்.'

'அக்கா! உங்களைச் சந்திக்குமட்டும் எனக்குக் கவலையாகத்தான் இருந்தது. கடவுள் இல்லையோ எண்டுகூட நினைச்சன், நேற்று உங்களைச் சந்தித்த பிறகு என்ரை வருத்தத்ததைக்கூட நான் மறந்திட்டன்.'

'எண்டாலும் இந்த வயசிலை உனக்கு இப்பிடி ஒரு வருத்தத்தைக் கடவுள் தந்திருக்கக்கூடாது. வாழ்க்கையெண்டால் இதுதான் எண்டு எங்களை உணரச்செய்யக் கடவுள் செய்யும் ஏற்பாடு எண்டு நினைச்சு மனதைச் சமாதானப்படுத்த வேண்டியது.'

'உங்களுக்கெல்லாம் வாழ்க்கையைத் தந்து, சந்தோசத்தைக்காட்டி... இடையிலை பறித்து சூனியமாக்கிவிட்டார். நினைச்சால் மண்டையைச் சுவரிலை மோதி அடிக்கவேணும் போல வேதனையாயிருக்கும்.'

'ஒவ்வொருவரும் சொந்தக்காலிலை நிற்கவேணும்    எண்டது கடவுளின் விருப்பம்போலை. புருசனை நம்பி மனிசியோ, மனிசியை நம்பி புருசனோ, அப்பாவை நம்பி பிள்ளையோ, பிள்ளையை நம்பி அப்பாவோ எண்டில்லாமல், அவரவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவேணும் எண்டது கடவுளின் நியதி.

எந்தச் சந்தோசமும் நிலையானதில்லை, இண்டைக்கு இருக்கிறது நாளைக்கு இல்லாமலும் போய்விடலாம்.

வாழ்க்கை நிலையானதெண்டு பொய்க்கணக்கு போட்டுக்கொண்டு அலையிறம்.' என்ற  ஜானகியின் கண்களில் கண்ணீர் தெரிந்தது.

சிறிது மௌனமும் தொடர்ந்தது. பிறகு, மனதை வேறுதிசையில் திருப்ப நினைத்த  ஜானகி,

'கோகுலனுக்கு கலியாணம் சரிவரும் போல இருக்கு.... படம் அனுப்பி இருக்கினம்.....' என்றாள்.

'நல்லதுதானே அக்கா! உங்களுக்கும் உதவியா இருக்கும்.'

'நல்லபிள்ளையா வந்து வாய்க்கவேணும், காசு நிறைய வைச்சிருக்கிறான். பிரயாசை கொண்டவன், கூட்டாளிகள், குடி எண்டு செலவும்கூட.'

'பெடியளா இருக்கேக்கை.... இப்பிடித்தான்.... பிறகு கலியாணம் கட்டினாப் பொறுப்புக்கள் வரும்தானே.

'பொறுப்பில்லாதவன் எண்டு சொல்லமுடியாது யசோ! தங்கச்சிக்கு எண்டு காசு சேர்த்து வைச்சிருக்கிறான். மாப்பிள்ளைகூடத் தேடிக் கொண்டு இருக்கிறான்.'

'கேட்கவே சந்தோசமாக இருக்கு...' என்றாள், யசோ.

காரை கராச்சுக்குள் நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கிச் சாமான்களையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு நடந்தார்கள்.

` விடியலில் மலரும் பூக்கள்  ``


பகுதி - 6              12.6.2019

 தங்கமான மனிதன்
பங்குபற்றும் பாத்திரங்கள் - 
ஜானகி 
கோகுலன்  
யசோ

ஜானகி இதுபற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லையே...! மலைபோல இந்தக் கவலையை மறைத்து வைத்துக் கொண்டா எனக்குச் சமாதானம் சொல்லவந்தாள்    என்று நினைக்க யசோவின் கண்கள் ஈரமாகின.

 ஜானகி தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு ஹோலுக்குள் வந்தவள்,

'நாளைக்கு வேலைக்குப் போகவேணும்....' என்றாள்.

யசோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்,  ஜானகியின் கணவன் 'ராமின் படத்தைக்    கண்ணீர் சொட்டப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

'ஆறுமாதங்களாச்சு, வேலையாலை வரேக்கை கார் அக்ஸிடன்ற்....' மேலே  ஜானகிக்கு வார்த்தைகள் வரவில்லை, விம்மிவிம்மி எழுந்த அழுகையை வெடித்துக்கொட்டாமல், ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு, அடக்கிக் கொண்டாள்.

'சோதனைகள் சிலபேரை அடித்துத் தும்புதும்பாக்கி விடுகின்றன.' என்றாள் யசோ தொண்டையடைக்க.

'மனிசவாழ்க்கை இவளவுதான், ஒவ்வொரு மனிசனும் தன் நேரம் வந்தாப் போகவேண்டியதுதான்.....'

கண்ணீரைத் துடைத்துவிட்டு, மேசையிலிருந்த தேநீர் குடித்த பாத்திரங்களை எடுத்து சமையலறைக்குக் கொண்டு போனாள். அவளுக்கு உதவ யசோ எழுந்து பின்னால் சென்றாள்.

'கடவுள் இப்படிச் சோதிக்கிறாரே! வெளிநாட்டிலை தனியா பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது எவ்வளவு கஸ்டம்.... பிள்ளையளுக்காக எண்டாலும் நீங்கள் புதியவாழ்க்கை ஒண்டை அமைக்க வேணும்!' மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிட்டாள் யசோ.

 ஜானகி திரும்பி அவள் கூற்றை நிராகரிக்கும் பார்வையுடன்,

'நாங்கள் எட்டுவருசங்கள் வாழ்ந்தாலும், எண்பது வருச வாழ்க்கை வாழ்ந்திருக்கிறம். எனக்கோ, இல்லாட்டி பிள்ளையளுக்கோ எண்டு புதுவாழ்க்கை தேடுமளவுக்கு நாங்களில்லை.' என்றாள்.

மேல்வீட்டைப் பார்த்தபடி,

'மேலை ஆர் இருக்கிறது..?' என்று கேட்டாள் யசோ.

'நாங்கள் தான்....'

'வாடை கனக்க வருமே...!'

'எங்கடை சொந்தவீடு.'

'எண்டாலும் அக்கா வேண்டின காசுக்கடன்கள் கட்டுறது எல்லாம் எவ்வளவு கஸ்டம்....? நீங்கள் ஒரு ஆள், பிள்ளையளையும் பார்த்து, வேலைக்குப் போறதெண்டா என்னண்டக்கா...!'

பாத்திரங்களைக் கழுவி அலுமாரிக்குள் வைத்துவிட்டு, சாப்பாட்டு மேசையுடன் இருந்த வாங்கில் இருந்துவிட்டாள்  ஜானகி.

எதிரேயிருந்த நாற்காலியில் தானும் உட்கார்ந்தபடி ஜானகியின் கையை ஆதரவோடு தடவினாள்.

'இன்சுரன்ஸிலிருந்து நிறையக்காசு வந்தது. எனக்கு ஒரு கடனும் இல்லை. பதிலா பாங்கிலை எல்லார் பேரிலும் காணக்கூடிய காசு கிடக்கு. பேச்சுக்குச் சொல்லேல்லை... உண்மையாத்தான்.... எல்லா விதத்திலும் மூளையைப் பாவிச்சு வாழ்ந்தவர், என்னைக்கூட படி...! படி....! எண்டு ஒற்றைக்காலில் நிண்டு படிக்கவைச்சதாலை,                                                                   இண்டைக்கு மற்றவேற்றைக் கையேந்தாமல் என்ரை சொந்தக் காலிலை நிக்கக்கூடியதாக் கிடக்கு..... பிள்ளையள் இரண்டு பேரையும் படிப்பிச்சுவிட்டால் அவங்கள் தங்களைத்    தாங்கள் பாத்துக் கொள்ளுவாங்கள்.'

யசோ வாயடைத்துப் போய்நின்றாள். அழுகான மலருக்கள் அடித்து ஓய்ந்திருந்த புயலை ஜீரணிக்க  முடியாதவளாய்த் திணறினாள்.

'எனக்கு அட்வைஸ் சொல்லுறதெண்டு நினைச்சு, கலியாணம் அது இது.... என்று என் மனதைக் குத்தாதை. நாங்கள் நல்லா வாழ்ந்தனாங்கள். ஒண்டிலும் குறை விடேல்லை.....'

'எண்டாலும் இந்த வயதிலை என்னண்டு.... என்னைவிட அஞ்சு வயசு தானே அக்கா உங்களுக்குக்கூட....!'

'யசோ! உனக்கு இவ்வளவுதான் எண்டு கடவுள் விதிச்சால் அவ்வளவுதான். கடுகளவும் கூடவும் மாட்டுது, குறையவும் மாட்டுது. 'ராம்..... என்ரை ராம்  செத்ததாக நான் நினைக்கவேயில்லை. கண்ணுக்கு முன்னுக்கில்லை.... எங்கோ... எங்கோ தூர ஒரு வெளிநாட்டிலை இருக்கிறார் என்றதுபோல நினைப்புத்தான்    என் மனசிலை இருக்கு. அவர் ஒரு மனிசன் யசோ, அப்பிடி ஒரு மனிசனை நீ பாத்திருக்கமாட்டாய். என்ன கொள்கை... கட்டுப்பாடு... திட்டம்...... கனக்க கதைக்காது மனிசன், எல்லாம் செயலிலை காட்டிப்போடும்.'

இமை வரம்புகளை இடித்துக்கொண்டு ஓடியது கண்ணீர்.

யசோ எழுந்து போய்  ஜானகியைக் கட்டிப்பிடித்துக் கொண்டாள். சொந்தச்சகோதரிக்கு வந்த இழப்புப்போன்ற உணர்வுகள் அவள் உள்ளத்தை உருக்கியது.

''ராம்.......' என்று உச்சரித்த யசோ, 'நல்ல பெயர்...' என்றாள்.

'பெயர் மட்டுமில்லை யசோ.... ஆளும்தான். தங்கமான மனுசன். செத்தபிறகு எல்லாரும் சொல்லுறதுபோல வெறும் வார்த்தைகளாக

சொல்லேல்லை..... உண்மையாகச் சொல்லுறன். ஒரு ஈ எறும்புக்குக் கூடத் தீங்கு நினைக்கமாட்டார். என்ன செய்வதெண்டாலும் நல்லா யோசித்து ஆழச்சிந்தித்துத்தான் செய்வார். இந்த வீட்டை வாங்கினார். எனக்கு நெடுகவே இந்த ஆசையிருந்தது. அவருக்குத் தெரியும். கடன்பட்டுத்தான் வாங்கினனாங்கள். விசயம் தெரிந்த ஆக்களோடை கதைத்து, விசாரித்து... அப்பிடிச்செய்தா என்ன... இப்பிடிச்செய்தா என்ன என்று எல்லாவழியிலும் யோசிச்சு, தனக்கு       ஏதாலும் எண்டா என்னிலோ, பிள்ளையளிலோ கடன் பொறுக்காது அதுக்கும் இன்சூரன்ஸ் செய்து..... பார்..... இண்டைக்கு அதைச் செய்திராட்டி நானும், பிள்ளையளும்    என்னசெய்யிறது?

புருஸன் செத்தா இன்னொரு கலியாணம் செய்யக்கூடாதெண்டு நான் சொல்லேல்லை... ஆனால் என்னைமாதிரி வாழ்ந்த ஒருத்திக்கு மறுகல்யாணம் எண்டது நினைச்சும் பார்க்க முடியாததொண்டு.'

'உங்கடை இடத்திலை நான் இருந்தாலும்    இந்த முடிவைத்தான்; எடுப்பன்.'

'அதுதான் உன்னை எனக்குப் பிடிச்சிருக்கு.'

'எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு அக்கா!'

'நாளைக்கு விடிய நான் வேலைக்குப் போக வேணும். பிள்ளையளை வெளிக்கிடுத்தி விடுவீர்தானே?'

'ஓம் அக்கா! நீங்கள் போட்டு வாங்கோ, நான் எல்லாம் செய்வன்.' என்ற யசோவுக்கு உடுப்பு அலுமாரியைத் திறந்து நாளைக்குப் போட்டு விடுவதற்கான உடுப்புக்களைக் காட்டினாள்.

'லவன் பள்ளிக்கூடம் தனியப்போவான், குசனைக் கின்டர்காடின் கூட்டிக்கொண்டு போய்விடவேணும்..... கிட்டத்தான்.' என்று  ஜானகி  கின்டர்காடின் இருக்கும் இடத்தையும், செல்லும் வழியையும் யசோவுக்குச் சொல்லி வைத்தாள்.

நல்ல பெரிய வீடு, நிறைய அறைகள் இருந்தன. ஒரு பெரிய அறையை  ஜானகி யசோவுக்கென்று ஒதுக்கி, அவள் பாக்கை அங்கு வைத்துவிட்டு, வீட்டைச்சுற்றிக் காட்டினாள்.

சொந்தவீடு என்பதிலோ என்னவோ, புதிய தளபாடங்கள் போட்டு, வீடு பளபளவென்று இருந்தது. கீழ்மாடியில் சமையலறை, விசிற்றிங் றூம், பாத்றூம், மற்றோர்அறை பிள்ளைகள் விளையாட, படிக்க, சாமியறை, தட்டுமுட்டுச்சாமான்களுக்கென்று ஒரு அறை என்றும், மேல்வீட்டில் படுக்கையறைகள்.... அங்குதான் யசோவுக்கென ஒதுக்கப்பட்ட அறையும் இருந்தது. அதற்கு மேலுள்ள வீடு உள்வேலைகள் முடியாமல் கதவு பூட்டியிருந்தது. பிள்ளைகள் வளர்ந்த பிறகு தேவைப்படும், அப்போ மிகுதி வேலைகளைச் செய்து முடிக்கலாம் என்று விடப்பட்டிருந்தது.

'ராம் உயிருடன் இல்லையென்ற குறையைத்தவிர, வேறெந்தக் குறையையும் காணமுடியவில்லை. சுத்தம், ஒழுங்கு, நிர்வாகம் எல்லாம் சீராக இருந்தன.

லவனும், குசனும் மற்றப்பிள்ளைகளைப்போல குறும்புத்தனம், விளையாட்டுக்குணங்கள் இருந்தாலும், சொல்வழி கேட்கும் பிள்ளைகளாய் கட்டுப்பாட்டுடன் இருந்தார்கள்.

மறுநாட்காலை,  ஜானகி எழுந்து வேலைக்கு வெளிக்கிடும்போது யசோவும் எழுந்துவிட்டாள்.

'ஏழுமணிவரை படுக்கலாம், நேரம் கிடக்கு, போம்! போய்ப்படும்! றெஸ்ற் ஆக இருக்கும்.' என்று  ஜானகி சொல்லியும் யசோ கேட்கவில்லை.

'இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்தே எனக்குப் பாதி வருத்தம் மாறினது போல இருக்கு.' என்றவள் முகத்தைக் கழுவிவிட்டு வந்து தேநீர் வைத்தாள்.

யசோ கொடுத்த தேநீரை அருந்திவிட்டு வேலைக்குப் புறப்பட்ட  ஜானகி,

'கனநாளைக்குப் பிறகு வேலைக்குப் போறன்.... சோட்லீவு எடுக்க மனமில்லை, தம்பியிட்டைச் சொன்னனான், லீவிலை நிக்கிறான், எட்டுமணிக்கு வருவான், உம்மைக் கொஸ்பிற்றலுக்குக் கூட்டிக் கொண்டு போக, ரெடியாக இரும்.' என்று யசோவை அன்போடு தடவிவிட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.

இவ்வளவு நல்ல பெண்ணுக்கு வாழ்க்கை இப்பிடிப் பாதியிலை அறுந்துபோக ஏன் விட்டாய் நாராயணா...? என்று யசோவின் மனம்  பொன்னாலை வரதராசப் பெருமானை நினைத்தது.

கோகுலன் வருவார் என்று    ஜானகி சொல்லிவிட்டுப்போகிறா, அவருக்கு நான் இந்த வீட்டுக்கு வந்தது பெரிசாப் பிடிக்கேல்லை, இனி ஹொஸ்பிற்றலுக்குக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னா எப்பிடிச் சினக்கிறாரோ தெரியாது என்று நினைத்தவளாய் சோபாவில் உட்கார்ந்தாள்.

கண்ணன் ஏன் இப்படி மாறிவிட்டான் என்று அவளுக்குப் புரிய வில்லை. அந்த சில நாட்களில் எத்தனை காதல் வசனங்களை அவன் கக்கியிருப்பான்.... எல்லாம் நுனிநாக்கிலிருந்து வழுக்கி விழுந்த வசனங்களே தவிர, ஒன்றுகூட உள்ளத்திலிருந்து முளைக்க வில்லை என்று நினைத்தவளாய் எழுந்து போய் வீட்டுவேலைகளைச் செய்தாள்.

பள்ளிக்கு நேரம் வர, லவனையும் குசனையும் எழுப்பி, வெளிக்கிடுத்தி, வழியனுப்பிவிட்டு சமையல் செய்தாள்.

தொலைபேசிமணியடித்தது.  ஜானகியாக இருக்குமென்று றிஸீவரை எடுத்து, 'ஹலோ!' என்றாள்.

மறுமுனையில் கோகுலனின் குரல் ஒலித்தது.

'வெளிக்கிட்டு நில்லுங்கோ! பத்து நிமிசத்திலை வாறன். அக்கா ரெலிபோன் எடுத்தால் நான் உங்களை கொஸ்பிற்றலுக்குக் கூட்டிக் கொண்டு போறனென்று அவவை வேலையைச் செய்யச் சொல்லுங்கோ.'

காரில் வரும்போது கைத்தொலைபேசி மூலம் கதைத்திருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து மீண்டும் தொலைபேசிமணியடித்தது. எடுத்து,'ஹலோ யசோ!' என்றாள்.

'நான் அக்கா வெளிக்கிட்டீரே...? கோகுலன் வந்துகொண்டு இருக்கிறான். கவனமாகப் போட்டு வாங்கோ' என்றாள் ஜானகி.

'எனக்கும் எடுத்தவர், நான் ரெடி. சமைக்கேல்லை அக்கா. பிள்ளையள் பசியோடு வரப்போகுதுகள்.'

'அவங்கள் பாண் சாப்பிடுவாங்கள். லவனுக்குப் பள்ளிக்கூடம் முதலே முடிஞ்சிடும், அவன் குசனைக் கூட்டிக்கொண்டு வருவான். நீர் கொஸ்பிற்றலுக்குப் போட்டுவாரும்.'

தொலைபேசியை வைத்துவிட்டு, தேவையானவற்றை எடுத்து கோகுலன் வந்ததும், செல்லக்கூடியதாகத் தயாராக இருந்தாள் யசோ.