WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 10

ஐந்து தமிழ் கட்சிகளால் கையெழுத்திடப்பட்டுள்ள பொது இணக்க ஆவணம்- தமிழ் தேசம், அதன் இறைமை, தமிழ் மக்களின்  சுயநிர்ணய உரிமை, சமஷ்டித்  தீர்வு, பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கம் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை  முன்வைத்து, தயாரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியங்களால் ஒழுங்கமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த பொது உடன்பாட்டு ஆவணத்தில் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட் மற்றும் ஈபிஆர்எல்எப் ஆகிய 5 தமிழ் கட்சிகளின் தலைவர்கள் நேற்று கையொப்பமிட்டனர்.

இந்த ஆவணத்தின் முழு விபரம் வருமாறு:

இலங்கைத் தீவின் தேசியக் கேள்வியாக கடந்த பல பத்தாண்டுகளாக நீடித்து வந்திருப்பதும்3 பத்தாண்டுகளுக்கு மேலாக நீடித்து நிகழ்ந்த போருக்கும் வழிவகுத்ததுமான, தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு என்பது தமிழ் தேசிய இனத்தின் அரசியல் வேணவாக்களை அங்கீகரித்து, வடக்கு – கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசம் தமிழ் தேசியத்தின் வரலாற்று ரீதியான வாழ்விடம் என்பதனையும் மரபுவழித் தாயகம் என்பதனையும் அங்கீகரித்து அதற்கு தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் அங்கீகரித்து, தமிழ் மக்களுக்கு சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமை உண்டு என்பதனை அங்கீகரித்து, சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் ஏற்படுத்தப்படவேண்டும் எனும் எமது நிலைபாட்டுக்கு அமைவாக;

நடந்து முடிந்த போரின் தாக்கத்தாலும் நீடித்து கொண்டிருக்கும் விளைவுகளாலும் தமிழ் மக்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை சாத்தியமான வழிகளில் காணமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளாகிய நாம் இதற்குக் கீழ் காணப்படும் கோரிக்கைகளை அதிபர்த் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளிடமும் வற்றின் அதிபர் வேட்பாளர்களிடமும் முன்வைக்கின்றோம்.

கோரிக்கைகள்

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் ஒற்றையாட்சி முறைமையை நிராகரித்து தமிழ் தேசத்தினை அங்கீகரித்து அதற்குத் தனித்துவமான இறமை உண்டு என்பதனையும் தமிழ் மக்கள் சர்வதேச சட்டத்தின் கீழ் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதனையும் அங்கீகரித்து சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை என்பவற்றுக்கு முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற சர்வதேசப் பொறிமுறையிலான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் / சர்வதேச தீர்ப்பாயம் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படல் வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேசப் பொறிமுறையின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிலை கொண்டிருக்கும் அரச படைகள் போருக்கு முன் தமிழ் மக்களின் பாவனையிலிருந்த தனியார் மற்றும் அரச காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு அக்காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், மீள்குடியமர்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டும்.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அரச ஆதரவுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்களக் குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

வடக்குக்கு மகாவலி நதியை திசை திருப்புவது என்ற போர்வையில் வடக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துவதற்கு மாத்திரமே திட்டமிட்டுச் செயற்படும் சபையாக மகாவலி அதிகார சபை இயங்குவதால் மகாவலி அதிகார சபையின் நியாயாதிக்கம் வடக்கில் இல்லாது ஒழிக்கப்படல்வேண்டும். அத்துடன், கிழக்கில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்படல்வேண்டும்.

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொரகஹகந்த நீர்பாசனத் திட்டத்தின் கீழ் வன்னிப் பிரதேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம், வன உயிரினங்கள் திணைக்களம் உள்பட பல அரச திணைக்களங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் நில, வழிபாட்டுத்தல ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். மேற்குறிப்பிடப்பட்ட திணைக்களங்கள் ஊடாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசிதழ் பிரகடனங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தியையும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினையும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு வெளிநாடுகளில் வாழ் இலங்கையர்களிடமிருந்து நேரடி முதலீடுகளை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக இங்கு காணிகளையும் நிதிகளையும் கையாள்வதில் இப்போது அவர்கள் எதிர்கொள்ளும் சட்டப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்.

வடக்கு – கிழக்குக்கான அரச மற்றும் தனியார் துறைகளின் வேலைவாய்ப்புக்களில் அந்தந்த மாகாணத்தைச் சார்ந்த மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படல்வேண்டும்.

வடக்கு – கிழக்கினை போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தி அதன் அபிவிருத்திக்கான நிதியினைக் கையாள்வதற்கு வடக்கு – கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் நெறிப்படுத்தலில் பொதுக்கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கு அதிபர் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்று 3 மாதகாலப் பகுதிக்குள் தீர்வு காணப்படல்வேண்டும்.


to edit text

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப் போவதில்லை  என்று ஐதேகவின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தற்போதைய நிலவரங்கள் குறித்தே பேசப்பட்டது, அரசியல் விடயங்களில் கவனம் செலுத்தப்படவில்லை.

சிறிலங்கா அதிபருடன் எந்த சிறப்பாக விடயம் குறித்தும் கலந்துரையாடப்படவில்லை சிறிலங்கா அதிபருடன் சிறப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கான தேவை இல்லை” என்று தெரிவித்தார்.

அப்போது, ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா அதிபர் ஆதரவளிக்க முன்வந்தால், அதனை ஏற்றுக் கொள்வீர்களா என்று சஜித் பிரேமதாசவிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர், எனது கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் எவரது ஆதரவையும் வரவேற்கிறேன். என்று பதிலளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதாவது நிபந்தனைகளை போட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதிலளித்த சஜித் பிரேமதாச, எந்த நிபந்தனைகளும் இல்லை, நிபந்தனைகளுக்கு அடி பணியும் நபர் நான் அல்ல என்று முன்னரே தெளிவாக கூறியிருக்கிறேன், மற்ற கட்சிகளுடன் கொள்கை ரீதியான உடன்பாடுகள் மட்டுமே உள்ளன, நிபந்தனைகள் இல்லை” என்று கூறினார்.

நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழ் மக்களை போலீசார் தடுக்க முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் தீர்த்தக்கேணி அருகாமையில் விகாராதிபதி உடல் பிக்குகளின் தலமையில் சிங்கள மக்களால் தகனம் செய்யப்படுகிறது

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்புக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

இதேநேரம், மட்டக்களப்பில் நடத்திய ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நேற்று அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார்.

அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம் மற்றும் திலிப் வேதாராச்சி ஆகியோரும் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.

சிறிலங்கா கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் ஊடுருவுவது தொடர்பான பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள், சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து இந்தச் சந்திப்பின் போது, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கவலை தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீமின் மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக, கனிமொழி உள்ளிட்ட தமிழ்நாட்டு பிரமுகர்கள் பலரும், கொழும்பு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


பலாலி விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் என பெயரிடப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தி.மு.க கனிமொழி கருணாநிதி உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் ஆகியோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர்.

இந்த விசேட சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை காலை அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இதன் போது பலாலி விமான நிலைய அபிவிருத்தி குறித்து பிரதமரால் பேசப்பட்டுள்ளது.

பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணம் விமான நிலையமாக பெயரிடப்படும். இங்கிருந்து அடுத்த மாதம் (ஒக்டோபர்) இந்தியாவின் முக்கிய நான்கு நகரங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படவுள்ள நேரடி விமான சேவை மற்றும் இதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன் போது தெளிவுபடுத்தியுள்ளார்.


ஒற்றையாட்சிக்குள் அதிகபட்ச அதிகாரப்பகிர்வே தனது கொள்கையாக இருக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐதேகவின் அதிபர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக கூறும் சஜித் பிரேமதாச, நேற்று கொழும்பில், “புதிய சிறிலங்காவுக்கான புதிய ஊடகங்கள்“ என்ற தலைப்பில், நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கே இவ்வாறு பதிலளித்துள்ளார்.

“2015ஆம் ஆண்டு இந்த அரசாங்கத்தினால், ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் அதிகபட்ச அதிகாரபகிர்வு என்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அந்த கொள்கை இன்னமும் நீடிக்கிறது.

ஒன்றுபட்ட சிறிலங்காவை உறுதி செய்வதற்கு, இனவெறி அகற்றப்பட வேண்டும்.

நாங்கள் அனைவரும் ஒரு நாட்டின் குடிமக்கள் என்பதால் சிறுபான்மையினர் என்ற வார்த்தையை பயன்படுத்த நான் விரும்பவில்லை.

சிலர் அதிருப்தி கொண்டிருந்தால், அந்த குறைகளை ஒன்றுபட்ட சிறிலங்காவுக்குள் தீர்க்க வேண்டும்.

ஒற்றையாட்சி சிறிலங்கா என்பது, விட்டுக்கொடுப்புக்கு இடமில்லாதது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யேர்மனி அரசால் நடாத்தப்படும் சர்வமத சமாதான மகாநாடு.

யேர்மனி அரசினால் லான்டவ் என்னும் நகரில் 19வது உலக சர்வமத சமாதான மகாநாடு 20,21,22.8.2019 ஆகிய 3நாட்கள் நடைபெறுகிறது.
இம் மகாநாட்டில் 125 நாடுகளைச் சேர்ந்த பல்சமய குருவினரும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டுள்ளனர். யேர்மனியில் இந்து மதசார்பாக கம் காமாட்சி அம்பாள் ஆலய தர்மகத்தா தவத்திரு. சிவ சிறீ பாஸ்கரக்குருக்கள் அவர்கள் யேர்மனி அரசால் அழைக்கப்பட்டு கலந்து கொண்டுள்ளார். இவர் இம் மகாநாட்டில் மூன்றுநாட்களும் அங்கு தங்கி சிறப்புரையாற்றுவார். அதுமட்டுமின்றி அங்கு வருகைதந்த பன்னாட்டு அரசியல்வாதிகள் ,சமயகுருமார்கள் அனைவரையும் சந்தித்து உரையாடவுள்ளார். இவரது சேவையால் ஐரோப்பாவில் இந்துமதம் தழைத்தோங்கி வருகிறது. 

மகாநாட்டு மண்டபத்திலிருந்து பண்ணாகம்.கொம் இணையம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டிருப்பது, ஆபத்தானது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அதிபராகத் தெரிவு செய்யப்பட்டால் நாடு அபிவிருத்தியடையும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அதிகாரத்துக்கு வந்தால், நாடு முற்றாக நாசமாகி விடும் என்றே தான் அச்சம் கொண்டுள்ளதாகவும், சந்திரிகா குமாரதுங்க குறிப்பிட்டார்.

சிறுவன் வாயில் இருந்து 526 பற்கள் அகற்றம் - சென்னை மருத்துவமனையில் சம்பவம் 
தாடை வீக்கத்துக்காக அழைத்துவரப்பட்ட சிறுவன் வாயில் 526 பற்கள் இருந்ததை கண்டுபிடித்து அகற்றியுள்ளது சென்னையிலுள்ள மருத்துவமனை.

யாழ்.தின்னவேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சுவிஸ் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து உடலை பொலிசார் மீட்டு , வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக ஒப்படைத்துள்ளனர்.

வெலிக்கடைச் சிறைப் படுகொலையின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொன்விழா மண்டபம், மத்திய கல்லூரி, புதுக்குடியிருப்பு, 27-7-2018, சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முல்லைத்தீவு அமைப்பாளருமான ஆ.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சிரேஸ்ட சட்­டத்­த­ரணியுமான ந.ஸ்ரீகாந்தா, யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தவிசாளருமான கவீந்திரன் கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான பிரசன்னா இந்திரகுமார், கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவருமான ஹென்றி மகேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தன் ஜனா கருணாகரம், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அரசியல் குழு உறுப்பினருமான விந்தன் கனகரட்னம், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணிச் செயலாளருமான சபா குகதாஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் நா.கணேசலிங்கம் (சொக்கன்), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் சுரேன் சுரேந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர்கள், மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் உட்பட ரெலோ முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

1983 ஜூலை 25-27 வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி, முன்னணிப் போராளிகளான ஜெகன், தேவன் மற்றும் அனைத்துப் போராளிகளையும் பொது மக்களையும் நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது தமிழ் ஈழ விடுதலை இயக்கம்.


சோஸ்நகரில் தமிழ்ப் பாடசாலையின் ஆண்டுவிழாவில்