WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 11

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-மட்கோ,மஹமாயபுர பகுதியைச் சேர்ந்த ஏ.துலாஜ் மதுசங்க 30வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கு அமைவாக குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சென்ற மோட்டார் சைக்கிளை சோதனையிட்ட போது அவரிடமிருந்து 14 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

குறித்த நபர் திருகோணமலை சிறைச்சாலையில் கடமையாற்றி வரும் ஜெயிலர் எனவும் பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட  நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். 


கிளிநொச்சி கோணாவில் பகுதியில் வீடு ஒன்றிற்கு தாக்குதல் மேற்கொள்ள பெப்பர் ஸ்பிரே, இரும்புக்கம்பிகள் சகிதம் வந்த ரவுடிகள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாக்குதல் மேற்கொள்ளும் முகமாக நேற்றய தினம் நள்ளிரவு வேளை 6 மோட்டார் சைக்கிள்களில் வந்த ரவுடி கும்பல்களை உள்ளுர் மக்கள் விரட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனை எதிர்பார்க்காத ரவுடிகள் வாகனங்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரியவருகின்றது.

கைவிடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


கொரோனா ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் மூடி கிடக்கின்றன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளன.

இந்த நிலையில் செல்பேசி சிக்னல் கிடைக்காததால் ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனிக்கிறார்கள் நாமக்கல் மாவட்டத்தில் பெரியகோம்பை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள்.

இங்கு ஒன்றிரண்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டால் கூட பரவாயில்லை. ஒரே மரத்தில் இருபத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அமர்ந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறார்கள்.

காடு நோக்கி படையெடுப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பெரியகோம்பை என்ற கிராமம். இந்த கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்குச் சென்றபோது பி.எஸ்.என்.எல் மொபைல் சிக்னல் மட்டுமே கிடைத்தது. இதர மொபைல் சிக்னல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதுவும் ஒன்று அல்லது இரண்டு பாயின்ட்கள் மட்டுமே கிடைத்தன.

இதனால் மாணவர்கள் அருகில் உள்ள வனப்பகுதியில், கொஞ்சம் உயரமாக அமைந்துள்ள பகுதிக்கு சாரை சாரையாகப் படையெடுக்கின்றனர். அவர்கள் பின்னாலேயே நாமும் சென்றோம். நீரோடைகள் எல்லாம் கடந்து அரை கிலோ மீட்டர் பயணம் செய்தோம்.


வெட்டவெளி முடிந்து காடு தொடங்கும் பகுதியில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. அதன் அருகே கள்ளி முள் செடிகளும் இதர முள் செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கின்றன.

படக்குறிப்பு,

வானுயர்ந்த சோலையிலே வகுப்பறை.

எந்தவிதமான பயமும் இன்றி மாணவர்களும், மாணவிகளும் ஆலமரத்தின் கிளைகளில் ஏறுகின்றனர். பின்னர், ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கிளைகளில் அமர்ந்துகொண்டு மொபைல் போன் வழியாக ஆன்லைன் வகுப்பை கவனிக்கின்றனர். ஆலமரத்தின் அடியில் பிஎஸ்என்எல் சிக்னல் மூன்று பாயின்ட்களுக்கு மேல் கிடைத்தன.

ஆலமரத்தில் ஆன்லைன் வகுப்பு கவனிக்கும் கல்லூரி மாணவி துர்காவிடம் பேசினோம். "ராசிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் பயோடெக்னாலஜி முதலாண்டு படிக்கிறேன். கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து கொரோனா ஊரடங்கு என்பதால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடக்கின்றன. எங்கள் பகுதியில் மொபைல் சிக்னல் சரியாக கிடைக்காதது காற்று பலமாக அடித்ததால் ஒன்றிரண்டு பாயிண்ட்கள் கிடைக்கும்.

அதை வைத்துக்கொண்டு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளவோ அல்லது குறிப்புகளை டவுன்லோடு செய்யவோ முடியாது. எங்கள் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள இந்தக் காட்டுப்பகுதி கொஞ்சம் மேடாக உள்ளது. இந்த ஆலமரத்துக்குப் பக்கத்தில் சென்றால் மொபைல் சிக்னல் கூடுதலாகக் கிடைக்கும்.

ஆலமரத்தின் மீது ஏறினால் ஓரளவுக்கு சிக்னல் கிடைக்கவே கடந்த ஓராண்டாக ஆலமரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்புகளைக் கவனித்து வருகிறேன். என்னுடன் என் தங்கையும், பிற நண்பர்களும் என்னுடன் வருகிறார்கள். மழைக்காலம் என்றால் ஆலமரத்துக்கு அருகில் செல்ல முடியாது," என்றார்.

படக்குறிப்பு,

மரத்தடி வகுப்பறைகள், தகவல் தொழில்நுட்ப யுகத்தில், மரத்தின் மேல் வகுப்பறைகளாக புதிய அவதாரம் எடுத்துள்ளனவா?

எம்.காம் படித்து முடித்து விட்டு தற்போது போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வரும் மணியரசன், "எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு என்பதால் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்ல முடியாது. எங்கள் ஊரில் சரியாக மொபைல் சிக்னல் கிடைக்காததால் எங்கு மொபைல் சிக்னல் கிடைக்கிறதோ அங்குச் சென்று தான் பேசுவோம். ஆன்லைன் பயன்படுத்தும் அளவுக்கு மொபைல் சிக்னல் இருப்பதில்லை.

'எங்கள் போதிமரம்'

இதனால் ஆலமரத்தின் மீது அமர்ந்துதான் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை. ஒருவருக்குக் கிடைக்கும் சிக்னலை வைத்து ஹாட்ஸ்பாட் போட்டு மற்றவர்களும் பயன்படுத்தி வருகிறோம். காலையிலேயே பகலுக்கான உணவை எடுத்துக்கொண்டு வந்து இங்கேயே சாப்பிட்டு விட்டு மாலை வரை வகுப்புகளைக் கவனிக்கிறோம். ஆலமரம்தான் எங்களுக்கு போதி மரம் மாதிரி இருக்கிறது. எங்களுக்கு மொபைல் டவர் அமைத்துக்கொடுத்தால் எங்கள் கல்விக்கு உதவியாக இருக்கும்," என்றார்.

இரண்டாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் பிரவீன் என்ற மாணவர், "எங்களுக்கு போன் இருக்கும். சிம் இருக்கும். ஆனால் மொபைல் சிக்னல் கிடைக்காது. இதனால் பல நேரம் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடிவதில்லை. வீடுகள் தள்ளித்தள்ளியே இருக்கின்றன. சிக்னல் ஓரளவுக்குக் கிடைக்கும் இடம் என்றால் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆலமரத்து உச்சிதான். அதனால் இங்கு வந்து தான் படிக்க வேண்டி இருக்கிறது," என்றார்.

படக்குறிப்பு,

எட்டிவிடும் தூரத்தில் நெட்வொர்க்.

இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள், "எங்கள் பகுதியிலிருந்து முள்ளுக்குறிச்சி என்ற பகுதி எட்டு கிலோ மீட்டர் தொலைவில்இருக்கிறது. அதன் பக்கத்தில்தான் பி.எஸ்.என்.எல் டவர் இருக்கிறது. எங்கள் பகுதி கொஞ்சம் பள்ளமாக இருப்பதால் சரியாக சிக்னல் கிடைப்பதில்லை. இங்கு மொபைல் சிக்னல் கிடைக்காததால் அவசரத்துக்கு 108க்கு கூட அழைக்க முடிவதில்லை. சொந்தக்காரர்களுக்கு ஏதாவது தகவல் சொல்லலாம் என்றாலும் சொல்ல முடிவதில்லை. இப்போது பிள்ளைக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்கிறார்கள்.

ஆனால், சிக்னல் கிடைக்காததால் உயரமான மேட்டுப் பகுதிக்குத்தான் செல்லும்போதுதான் ஒன்றிரண்டு பாயிண்ட் சிக்னல் கிடைக்கிறது என்று ஆலமரத்துக்கு மேலே ஏறி படிக்கிறார்கள்.

எந்த நேரத்தில் என்ன நடக்குமோவென்று ஒரு பயம் இருந்துகொண்டு இருக்கிறது. அரசு எங்களுக்கு மொபைல் டவர் அமைத்துக் கொடுத்தால் உதவியாக இருக்கும்," என்றார்.

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை சீன அரசு செய்து வருகின்றது அதற்கு ஸ்ரீலங்கா முழுமையாக ஒத்துழைப்பு வழங்குகின்றது என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் சீனாவின் கடல் அட்டை பண்ணையை பார்வையிடுவதற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மைய நாட்களிலே சர்வதேச ரீதியாக பேசப்படும் ஓர் விடயமாக இலங்கையினுடைய தென் பகுதியிலே சீனாவின் அகலக் கால்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வடக்கு பகுதியில் குறிப்பாக நெடுந்தீவு அனலைதீவு நயினாதீவுகளில் ஆதிக்கத்தை செலுத்தியுள்ள நிலையில், தற்பொழுது யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதாக கூறி உருவாக்கப்பட்ட அட்டை பண்ணை, கிளிநொச்சியின் மூலை எல்லையில் கௌதாரிமுனை என்னும் இடத்தில் எந்த அனுமதியும் இன்றி அட்டை பண்ணையை செய்து வருகின்றார்கள்.

அத்துடன் யாழ் பாசையூர் மீனவர்கள் கிளிநொச்சி கௌதாரிமுனை மீனவர்கள் கடலட்டை வளர்ப்பிற்காக முன்வைத்த உரிமங்கள் மறுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது சீனர்கள் செய்து வருவதுடன் இயற்கையாகவே இக்கடலில் வளர்கின்ற கடல் அட்டைகளை நிராகரித்து செயற்கையாக பிரோய்லர் கோழிகளுக்கு வைக்கும் மருந்துகளை போல் கடலட்டைகளுக்கு வைத்து விரைவான வளர்ச்சியை அடைய வைத்து அதனை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையில் சீனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவற்றினை சாதாரணமாகப் பார்க்கும்போது சீனாவிற்கு கடல் அட்டை ஏற்றுமதி இடமாகத்தான் தெரியும் ஆனால் இதன் பின் பாரிய அளவு அரசியல் செயற்பாடுகள் உள்ளன. சீனா தற்பொழுது கால்பதித்துள்ள இடங்கள் அனைத்தும் முக்கியமான கேத்திர நிலையங்களாகவே உள்ளன.

இவ்வாறான விடயம் ஈழத்தமிழர்களுக்கு மாத்திரம் அல்லாது அண்மையில் உள்ள இந்தியாவிற்கு கூட ஓர் பாரிய அச்சுறுத்தலை வழங்குகின்ற செயற்பாடாக காணப்படுகின்றது. அத்துடன் இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கின்ற மற்றும் இந்தியாவை கண்காணிக்கின்ற செயற்பாடுகளை துரிதமாக சீன அரசு மேற்கொண்டு வருகின்றது.

அதற்கு இலங்கை அரசு ஒத்துழைப்பினை வழங்குகின்றது என குறிப்பிட்டார். அத்துடன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குறித்த கடலட்டை பண்ணை தொடர்பாக சட்டரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என தெரிவித்தார்.

கொரோனா நிவாரணப் பணிக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு லைகா புரடக்சன்ஸ் சார்பாக நிதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து அல்லிராஜா சுபாஸ்கரன் சார்பில் 2 கோடிக்கான (இந்திய ரூபாய்) காசோலை வழங்கப்பட்டது. 

கொரோனா தொற்றில் இருந்து மீளும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று, இந்த நிதி வழங்கப்பட்டது.

பௌத்த பிக்கு ஒருவர் தம்புள்ளை நகரில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமர்ந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

திம்ரலாகலை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் மாத்தளே சாசரதன தேரர் என்ற பிக்குவே இந்த எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.

நடு வீதியில் அமர்ந்து நாட்டை திறக்குமாறு சத்தமிட்டு கோரிக்கை விடுத்துள்ளதுடன் பிக்குவை வீதியில் இருந்து அப்புறப்படுத்த தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முயற்சித்த போதிலும் அது முடியவில்லை.

இதனையடுத்து தம்புள்ளை மாநகர சபையின் மேயர் சென்று விசாரித்ததுடன் ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவருடன் தொடர்புகொண்ட பின்னர்,பிக்குவை நகர சபைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதன் பின்னர் நகர சபையின் அலுலகத்தில் இருந்து செயலாளர் ஒருவருடன் தொலைபேசியில் பேச வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அப்போது வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள பிக்குவை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தன்னை கைது செய்வதில்லை எனக் கூறி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக சாசனரதன தேரர் கூறியுள்ளார்.

நாட்டை மூடுவதாக கூறி கடைகளை திறப்பதாகவும் பணக்கொடுக்கல் வாங்கல்களை செய்வதாகவும் இப்படி நாட்டை மூடி பயனில்லை எனவும் நாட்டை மூடுவது என்றால் முழுமையாக மூட வேண்டும் எனவும் பொய்களை செய்யாது நாட்டை திறக்குமாறும் தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, சாசனரதன தேரர், ஜனாதிபதி மீது கடுமையாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சைப் பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இரு விடுதிகளிலும் நோயாளர்கள் நிரம்பியிருப்பதாக கூறியுள்ள பணிப்பாளர், மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கேட்டிருக்கின்றார்.