WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 12

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஸ்பெயின் நாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்துக்கு சென்ற காவல்துறையினர் போதையில் இருந்த 10 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் தற்போது விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை அரசு கவலையை வெளியிட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு மாறாக மீண்டும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால், நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தை இரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்திவழிப் போராட்டமாக சென்று கையெழுத்து திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கைவிடப்பட்ட போராட்டம் 


தொடர்ந்து கருத்துரைத்த அவர், " இந்த வருடத்தின் பெப்ரவரி மாதம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டத்தை நாம் ஆரம்பித்திருந்தோம். இது வடக்கு, கிழக்கு, கொழும்பு, மலையகம் என நாடு முழுவதும் இடம்பெற்றது.   '

முன்னாள் அதிபர் உட்பட பல்வேறுபட்ட அரசியல் தலைவர்கள் தொழிற்சங்க தலைவர்கள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.


ஆனாலும் கூட நாட்டில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கையெழுத்து போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டி ஏற்பட்டது. வீதியோரங்களில் நாங்கள் இருந்து கையெழுத்துக்களை சேகரித்த போது அங்கு நிற்க முடியாத அளவுக்கு வாகனங்கள் எரிபொருளுக்காக காத்திருந்ததால் நாம் கையெழுத்துப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தவில்லை.

உறுதியளித்த ரணில் 

நாம் மீண்டும் கையெழுத்து போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதியளித்திருந்தார்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை அதனை உபயோகிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கத்தால் ஐநா மனித உரிமை பேரவைக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் நாடாளுமன்றுக்கும் வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அந்த வாக்குறுதிக்கு மாறாக அரசாங்கம் மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தி கைதுகளை ஆரம்பித்து இருப்பதால் நாம் எமது போராட்டத்தையும் ஆரம்பிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தை நாட்டின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுப்போம். விசேடமாக வடக்கு கிழக்கிற்கு வெளியே நாம் இதனை மேற்கொள்ளும் போது மாணவர் அமைப்புகளும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயற்படுவர். உறுதியாக நாம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சென்றடைவோம் ", எனக் குறிப்பிட்டார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகித்த 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிரணியில் இணைந்துள்ளனர்.

இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ச, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த மாற்றம் தொடர்பில் அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மக்களால் முடியும்

இன்று நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“கடந்த காலங்களைப் போன்று நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தி மக்களிடம் உண்டென நம்புகிறேன். அந்த காலங்களில் மக்கள் கருத்துக்கு செவிசாய்க்கும் நாடாளுமன்றம் ஒன்று இருந்தது.

நாட்டின் பொது கருத்துக்கும் நாடாளுமன்றின் நிலைப்பாட்டுக்கும் பரஸ்பர வேறுபாடு உள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையிலும் சிக்கலை ஏற்படுத்தும்.

மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை உருவாக்க வாய்ப்பளிக்க வேண்டும்

மக்கள் எம்மிடம் எதனையும் கோரவில்லை. எமது ஆட்சி காலத்தில் மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்களை நாமே முன்வைத்தோம். அதன் பிரதிபலிப்பாக எமக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

எனினும், ஆளும் கட்சியின் சிலரது செயற்பாடுகளால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது. இன்று மக்கள் விரும்பும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படுவது மிக பாரதூரமானதாகும். எனவே, இவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினர்களாக அமர தீர்மானித்துள்ளோம்.

எவ்வாறாயினும், மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுமாயின் அதற்கு தராளமாக எமது ஆதரவை வழங்குவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Click here to edit text

நாட்டின் அதிபராக எதிர்வரும் 2030 ஆம் ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார் அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

விலகி சென்ற எவரும் வெற்றியடையவில்லை 

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகிச் சென்று உருவாக்கப்பட்ட எந்தவொரு அரசியல் கட்சியும் இதுவரையில் வெற்றி பெற்றதில்லை. அதே போன்று எந்தவொரு அரசியல் தலைவரும் வெற்றியடைந்ததில்லை.

ஐக்கிய மக்கள் சக்தி தொடர்பில் பேசுவது பிரயோசனமற்றது. ஏனைய கட்சிகளுக்கும் அதே நிலைமையே ஏற்படும்.

நாட்டில் பல்வேறு பௌத்த மகா சங்கங்கள் காணப்படுகின்ற போதிலும் , மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் தொடர்பிலேயே அனைவரும் பேசுகின்றர்.

அதே போன்று தான் இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திர கட்சி ஆகியவை மாத்திரமே ஸ்திரமான கட்சிகளாகவுள்ளன.

ரணிலின் நோக்கம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனித்துச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பயணிக்க முடியும். எவ்வித பேதங்களும் இன்றி அனைவரையும் அதிபருடன் இணைந்து பணியாற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன, மத, மொழி பேதமின்றி அனைவருடனும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாகும்.