WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS - 4

அரசியலில்  பெண்களின்   பிரதிநிதித்துவம் 
 வடக்கில் செயலமர்வுகள்  ஆரம்பம் .


ஜெசாக் நிறுவனமானது USAID-SDGAP நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன்  பெண்களினை அரசியலில்  பங்காளிகளாக்குகின்ற செயற்பாட்டின் ஒரு பகுதியாக யாழ் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட 25 அரசியலில் ஆர்வமுள்ள பெண்களுக்கான பயிற்சி நெறி கடந்த  வாரம் யாழ்ப்பாணம்  TCT மண்டபத்தில் இடம்பெற்றது.

 நிறுவன இணைப்பாளர் .ந.சுகிர்தராஜ் தலைமையில்  ஆரம்பமான  இந் நிகழ்வில்   சிறப்பு பேச்சாளராக பிரபல அரசியல் ஆய்வாளர்.நிலாந்தன் கலந்து கொண்டு பெண்களை  அரசியலில் ஊக்கப்படுத்தும்  வகையில் கருத்துக்களை வழங்கினார். 


அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்  குறைவாகவுள்ளமையினால் , அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்கு விக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு. என்ற வகையிலு ம்   ''அரசியலில் பெண்களை ஈடுபடுத்துவதன்  மூலம் இலங்கையில்  நியாயமான  மற்றும் பொறுப்பு உணர்வு  மிக்க  அரசியல் பிரதிநிததித்துவத்திற்கான  ஒரு தளத்தினை  உருவாக்குதல் '' என்ற  கோட்ப்பாட்டில்  ஜெசாக்  நிறுவனம் USAID/SDGAP இன் நிதியனுசரணையில் கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. 

அந்த வகையில் திட்டமிடப்பட் ட  இவ் பயிற்சியில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களை சேர்ந்த பெண்கள் பங்கு கொண்டு கலந்துரையாடினார்கள் . அரசியல் பங்களிப்பில்  உள்ள சட்டங்கள் , அடிப்படை பிரச்சனைகள் , பெண்கள் பிரதிநிதி துவத்தின்  அவசியம் , சவால்கள் போன்ற  விடயங்கள் தொடர்பில்  கொழும்பைச் சேர்ந்த சட்டவாளர்     அபிராமி வன்னியசிங்கம் டிசில்வா     கலந்துரையாடலினை  மேற்கொண்டார் . இப் பயிற்சியானது வடமாகாணத்தில் முல்லைத்தீவு , வவுனியா, கிளிநொச்சி , மன்னார் ஆகிய இடங்களிலும் இடம்பெறவுள்ளமையுடன்   பிரதேசங்கள் தோறும்  அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்  எதிர்காலத்தில்  பெண்கள்  அரசியலில்  ஈடுபடுவதனை அதிகரிக்கும்  வகையில் தொடர்ந்தும் பாயிற்சிகள்  இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .  


தொகுப்பு. மற்றும் படங்கள் 
யாழ்.தர்மினி பத்மநாதன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் ஏற்பட்ட கோளாறினை, அதே ரயிலில் பயணித்த மாணவன் ஒருவன் அதிரடியாக சீர் செய்துள்ளார்.

தொழில்நுட்ப கல்லூரி மாணவரான ஜனித் தீமந்த என்ற இளைஞனின் அபார திறமை குறித்து கொழும்பு ஊடகங்கள் பாராட்டி பேசியுள்ளன.

கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இடை நடுவில் நின்ற ரயிலை குறித்த மாணவன் உடனடியாக சரி செய்து மீண்டும் பயணத்தை தொடர உதவியுள்ளார்.

மஹகல்கடவல பிரதேசத்தில் வைத்தே இந்த சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோளாறு ஏற்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஒரு காட்டு பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தர்ப்பத்தில் இந்த ரயிலில் பணி செய்த தொழில்நுட்ப பிரிவு நபரால் 45 நிமிடங்கள் முயற்சித்த போதிலும் ரயிலை மீண்டும் இயக்க முடியாமல் போயுள்ளது.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த மாணவர் அதனை சீரமைப்பதற்கு தன்னார்வமாக முன்வந்துள்ளார். அதற்காக ரயில் அதிகாரிகள் மற்றும் பயணிகளும் உதவியுள்ளனர்.

20 நிமிடங்கள் என்ற சிறிய நேரத்திற்குள் குறித்த மாணவன் அதனை மீளவும் இயக்கி பயணிகளின் ரயில் பயணத்தை தொடர உதவியுள்ளார்.

மாணவனின் அபார திறமையினால் பயணிகளுக்கு ஏற்படவிருந்த அசௌகரியங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் மாணவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நயினை நாகபூஷணி அம்மன்   தியானப்பெருங்கோவிலில்   என

யேர்மனி எசன் நகரில்  ஓர் புதிய ஆலயம் உருவாகிறது.

 யேர்மனியில் வாழும் மக்களின் தியான வழிபாட்டை வளர்த்தெடுக்கும் நோக்கில் இவ்வாலயம்  அமையப்போவதாக அந்த ஆலய அறங்காவலர் ஒருவர்  பண்ணாகம் இணையத்திடம் தெரிவித்தார். 
இவ்வாலயத்தில் தமிழிலும்  சமஸ்கிருதத்திலும்  வழிபாடுகள் நடைபெறும். 

அமெரிக்காவில் மழை காலம் தொடங்கி உள்ளது. இந்த காலக்கட்டத்தில் அடிக்கடி புயல் உருவாகி கிழக்கு பகுதி மற்றும் வடக்கு பகுதியை தாக்குவது உண்டு.

சில புயல்கள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப்போது அதே போல் ஒரு புயல் அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.

அடுத்த 48 மணி நேரத்தில் புயல் அமெரிக்காவை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலுக்கு புளோரன்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

புயல் வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது, அதிசக்தி வாய்ந்த புயலின் வரிசையில் 3 வது இடத்தை வகிப்பது ஆகும். எனவே, இதன் தாக்குதல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனவே, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற உத்தர விடப்பட்டுள்ளது.

இதன்படி 17 லட்சம் பேரை வெளியேறும்படி கூறி உள்ளனர். அவர்கள் அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

தெற்கு கரோலினாவில் ஒரு சிறையில் இருந்த ஆயிரம் கைதிகளையும் வெளியேற்றி இருக்கிறார்கள். மீட்பு படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக தெற்கு கரோலினா கவர்னர் ராய்கூப்பர் கூறும் போது, மிகப்பெரிய ஆபத்து வீட்டின் வாசலில் வந்து நிற்கிறது. மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தேவைப்படுபவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

இந்த புயலால் 193 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்று அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடையும். கடல் கொந்தளிப்பால் தண்ணீர் ஊருக்குள் புகும். மேலும் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் என்றும் கூறி உள்ளனர்.

இதே பகுதியில் டயானா, மேத்யூ ஆகிய சக்திவாய்ந்த புயல்கள் தாக்கின. அப்போது ஏற்பட்ட பாதிப்பை விட இப்போது பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். பலருடைய வாழ்க்கையில் சந்திக்காத மிகப்பெரிய புயலை இப்போது சந்திக்க போகிறார்கள் என்று நிபுணர்கள் கூறி உள்ளனர்.

இதே போல் தெற்கு சீன கடல் பகுதியில் ஓம்போங் என்ற புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் பிலிப்பைன்சை தாக்கும் என்றும். இதில் அங்குள்ள லூசான் தீவு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர் அந்த புயல் சீனாவின் தெற்கு பகுதி, ஹாங்காங், மகாவ் ஆகிய இடங்களையும் தாக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 252 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசும் என்றும் கூறி உள்ளனர்.

இதனால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி இருக்கிறார்கள். சுமார் 4 கோடி மக்கள் இந்த புயலால் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாய்க்குப் பயந்த நபர் ஒருவர் வேலிக்குள் சைக்கிளைச் செருகிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இரவு வேளைகளில் வட்டுக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றின் முன்னால் உள்ள வீதியில் நாய் ஒன்று படுத்திருப்பதாகவும், அந்த வழியாக செல்வோரை குறித்த நாய் குரைத்தபடி விரட்டிச் செல்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவர் அவ்வழியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது வேலியோரம் மறைந்திருந்த நாய் திடீரென்று பெரும் சத்தமாக குரைத்தபடி எழுந்துள்ளது.

எதிர்பாராதவிதமாக இந்தச் சம்பவம் நிகழ்ந்ததால் வெலவெலத்துப்போன குறித்த இளைஞர் பதறியடித்து சைக்கிளை ஓட்டியுள்ளார்.

நாய் குரைத்தபடி அருகில் வந்ததும் நாயைத் திரும்பிப்பார்த்தவாறே சைக்கிளை செலுத்தியபோது அருகிலுள்ள கிடுகு வேலி ஒன்றுடன் மோதியுள்ளார்.

இதனால் சைக்கிள் முன்பகுதி வேலியைப் பிரித்து உள்ளே சென்றதுடன் குறித்த நபரின் முகம் மற்றும் கையிலும் சிறு கீறல் காயங்கள் ஏற்பட்டதாக எமது பிரதேச செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்பின்னர் குறித்த நபர், நாய் படுத்திருந்த பகுதியிலுள்ள வீட்டுக்காரரை கூப்பிட்டு ஏசியபோதும் அது தமது நாய் இல்லை என அவர்கள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது குறித்து பொதுமகன் ஒருவர் கூறும்போது, வேலி ஓரமாக அமைதியாகப் படுத்திருக்கும் அந்த நாய், வீதியில் யாராவது வந்தால் திடீரென்று சிங்கம்போல எழுந்து பாய்ந்து பாய்ந்து விரட்டிச் செல்வதாக விபரித்தார்.

எவ்வாறாயினும் விசித்திர குணம் கொண்டதாகக் காணப்படும் அந்த நாய் இதுவரை யாரையுமே கடித்ததில்லை எனக் கூறும் அவர், விளையாட்டுக்காக அந்த நாய் அப்படி நடந்துகொள்ளலாம் என மேலும் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்த பின்னர், கிளிநொச்சியில் இரண்டு விகாரைகளைக் கட்டுவதற்கு, ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் கூறிய குற்றச்சாட்டை வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே மறுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்த பின்னர், கிளிநொச்சியை சிங்கள பௌத்த மயப்படுத்த ஆளுனர் திட்டமிட்டுள்ளார் என்றும்,  இரண்டு விகாரைகளை கட்டுவதற்கு ஆளுனர் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,  முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, விகாரைகள் கட்டப்படவுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவை எந்த இடத்தில் கட்டப்படவுள்ளன என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றும் சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

சிறிலங்காவின் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில், எதிர்க்கட்சித் தலைவரைத் தன்னால் மாற்ற முடியாது என்றும் அதற்கு தமக்கு அதிகாரம் இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் இன்று காலை சபாநாயகர் தெரிவித்தார்.

முன்னதாக, இரா.சம்பந்தனிடம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூட்டு எதிரணியினர் கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் ஆயுதத்தினை வைத்திருப்பவளாக இருந்தால், ஆயுதம் வைத்திருப்பதற்கான அனுமதி தொடர்பான முழு ஆதாரங்களையும் சபையில் வெளியிட வேண்டும்.

வடமாகாண சபையின் 128 ஆவது அமர்வு இன்று (26) அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் பேரவைச் செயலகத்தில் ஆரம்பமாகியது.


கடந்த 127 வது விசேட அமர்வின் போது, ஆளும் கட்சி உறுப்பினர் அஸ்மின் அயூப் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்ற கருத்தினை வெளியிட்டமை தொடர்பில் பல சர்ச்சைகள் இடம்பெற்று வந்த நிலையில், அமைச்சர் அனந்தி சசிதரன் துப்பாக்கி விடயம் தொடர்பாக தனது விளக்கத்தை அளிக்க சபையில் அனுமதி கேரியிருந்தார்.

அவைத் தலைவரினால் அனுமதி வழங்கப்பட்ட போது, அனந்தி சசிதரன் தனது விளக்கத்தை தெரிவித்த போது, உறுப்பினர் கேசவன் சயந்தன் குறுக்கிட்டு தனது கருத்தினை முன்வைத்ததால் சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

இதன்போது, அனந்தி சசிதரன் கருத்து தெரிவிக்கையில், கடந்த 127 ஆவது அமர்வு டெனிஸ்வரனின் வழக்கு விசேட அமர்வு, அஸ்மின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று துப்பாக்கி பெற்றுள்ளதாக உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுள்ளார். நான் ஒரு ஆயுததாரி, ஆயுதங்களில் இருப்பம் இருப்பவள் போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

கையில் ஆயுதத்தினை வைத்திருப்பவளாக இருந்தால், ஆயுதம் வைத்திருப்பதற்கான அனுமதி தொடர்பான முழு ஆதாரங்களையும் சபையில் வெளியிட வேண்டும்.

எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்தாக அதனை நான் பார்க்கின்றேன். சபையை மட்டுமல்ல உறுப்பினர் தவறாக வழி நடத்தியது, எனக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உயிர் ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

இதனை சபை கண்டிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார். அரசியல் பிரவேசம் நான் விரும்பிப் பெற்றுக்கொண்டதல்ல. அங்குள்ள சிலர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளாவிடின் என்ன, அதிகபடியான வாக்குகளைப் பெற்று வடக்கு மாகாணத்தின் முதற் பெண்மணியாக இருக்கின்றேன்.

வரலாற்றுப் பதிவாக தன்னை அமைச்சராக முதலமைச்சர் நியமித்துள்ளார். ஒரு போராளியின் மனைவியாக பாதிக்கப்பட்ட பெண்ணாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை இலக்காக கொண்டு, தமது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக என்னை பலிக்காடாக மாற்றுவது மிகவும் வருந்தத்தக்கது.

போராட்டமும், ஆயுதம் என்பது எனக்குப் புதிய விடயம் அல்ல. நேரடியாவும் மறைமுகமாக உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகை இலங்கை அரசை எதிர்க்கின்றேன் என்றால், எனது பாதிப்பும், எனது மக்களின் பாதிப்பு, அரச உத்தியோகத்தர் காலப்பகுதியில் பாப்பரசர் வந்த போது, பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 3 நாட்கள் சிறைச்சாலையில் இருந்தேன்.

1996 ஆம் ஆண்டு சூரியகதிர் நடவடிக்கையின் போதும், இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு, இராணுவ முகாமில் சித்திரவதை அனுபவித்தேன். அரசினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவள் என்ற வகையில், இந்த நாட்டின் மக்கள் பாதுகாப்பினை கோரும் நிலையில், சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையிலும், இவர் போன்ற உறுப்பினர்களிடம் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆயுதங்களைக் கோர வேண்டிய நிலை இருக்கின்றது.

இதன்போது, அஸ்மினால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதற்கான ஆதாரம் இருக்கின்றதா என அவைத்தலைவர் அனந்தி சசிதரனிடம் கேட்டார். வார்த்தைக்காக கதைக்க வேண்டாமென்றும் அவைத் தலைவர் அனந்தி சசிதரனைக் கடிந்துகொண்டார்.

உறுப்பினர் அஸ்மின் அயூப் இந்த கருத்தினைக் கூறியதன் நோக்கம் என்ன? என்ன பின்னணியில் என்னிடம் ஆயுதம் இருக்கின்றதாக உறுப்பினர் அஸ்மின் கூறினார் என்றும் சபையில் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பினார். அவ்வாறு ஆயுதம் வைத்திருக்கின்றேன் என்றால், அந்த ஆதாரத்தினை சபைக்கு வழங்காது, ஏன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த கருத்து ஆபத்தினை ஏற்படுத்தும் கருத்து. இலங்கையின் சட்டத்தின் பிரகாரம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுத் துப்பாக்கி வைத்துக் கொள்ளவதற்கான உரிமை இருக்கின்றது. ஆனால், உறுப்பினர் அஸ்மின் எந்த நோக்கத்தில் இந்த கருத்தனை தெரிவித்தார் என்பது மிகவும் சிக்கலான நிலமைக்கு தள்ளியுள்ளது.

சபையில் 37 ஆண் உறுப்பினர்களின் மத்தியில் ஒரு பெண் உறுப்பினராக இருப்பதுடன், இந்த விடயத்தினை எதிரணியினர் கேட்டிருந்தால், அதற்குரிய பதிலை வழங்கியிருக்க முடியும். ஆனால், ஆளும் தரப்பினரே இவ்வாறு கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. உறுப்பினர் அஸ்மின் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலும், எனக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் வகையில் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளமை தொடர்பாக சபை கண்டிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதன்போது, சபையில் தனது விளக்கத்தினை அளித்த உறுப்பினர் அஸ்மின் அயூப் தான் கூறிய விடயம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது, சபையில் கூறப்படும் விடயங்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியாதென்றும், அந்த விடயங்களுக்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாதென்றும் அவைத்தலைவர் மன்றில் தெரிவித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் சபையில் தெரிவித்தார்.

ஆலவட்டம் வீச வேண்டுமென்ற அவசியமில்லை. துப்பாக்கி வேண்டுமென்ற கோரிய கோரிக்கை கடிதம். பிரதம செயலாளரிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. தகவலறியும் சட்டத்தின் மூலம் பல விண்ணப்பங்களுக்கு பதில் கிடைக்கப்பட்டுள்ளது.

வலகம்பரை, பண்ணாகம், சுழிபுரம் என்ற விலாசத்திற்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் பேசவில்லை. ஏன் அந்த அமர்வின் போது, நான் ஏன் இவற்றினை குறிப்பிட்டேன் என்பதே முக்கியமானது என அஸ்மின் சுட்டிக்காட்டினார்.

பிரித்தானியா வெளியிட்ட 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமை அறிக்கையில் மனிதஉரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்தவிடயத்தை கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயமும் உறுதிப்படுத்தியுள்ளது.

மனித உரிமை நிலவரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய நாடுகள் என பட்டியலிடப்பட்ட மொத்தம்30நாடுகளில் இலங்கையும் ஒருநாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் மனிதஉரிமை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் காட்டப்படும் மெத்தனப்போக்குக்குறித்தும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிரித்தானியாவே வெளியிட்ட மனிதஉரிமை அறிக்கையில் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய நாடாக இலங்கையும் அடையாளப்படுத்தப்பட்டிருப்பதால் அகதித்தஞ்சம் கோரி உள்துறை அமைச்சின் இறுதி முடிவுக்காக காத்திருப்போருக்கு கொஞ்சம் சாதக நிலைமை ஏற்படலாமென ஊகிக்கப்படுகிறது.

சுழிபுரம் – பெரியபுலோவில் பகுதியில் சிறுவன் உயிரை காப்பாற்றுவதாக கூறி நூதனமான முறையில் சந்தேகநபர் ஒருவர் தாலிக் கொடியை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும், தெரியவருவதாவது,

பெரியபுலோவை சேர்ந்த இராசேந்திரம் டினு (வயது-14) என்ற சிறுவன் நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மகனின் நோய் குணமாக வேண்டுமாயின் தாலிக்கொடியில் சிகிச்சை செய்யவேண்டும் என்று சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.

மகனின் பிறந்த திகதி மற்றும் நேரம் போன்றவற்றைக் கேட்ட அந்த சாமியார் சிறிது நேர சிந்தனையின் பின்னர் மகனுக்கு கடும் தீவிரமான நோய் ஏற்பட்டுள்ளது. வீட்டில் கும்பம் வைத்து, கும்பத்தில் தாலிக்கொடி ஒன்றை வைத்து பூசை செய்த பின்னார் அத்தாலிக்கொடியை மகனின் உடம்பில் வைத்து வணங்கினால் மட்டுமே குணமாகும் என தெிவித்துள்ளார்.

அதை நம்பிய குடும்பத்தினர் தம்மிடம் தாலிக்கொடி இல்லாத நிலையிலும் உறவினர் ஒருவரிடம் ஓடிச் சென்று ஐந்தரைப் பவண் தாலிக்கொடியைப் பெற்றுவந்து அவரிடம் கொடுத்துள்ளனர்.

வீட்டில் கும்பம் வைக்கப்பட்டது. சில மந்திரங்களும் ஓதப்பட்டன. பூசைகள் முடிந்த பின்னர் குறித்த நகைப் பொட்டலத்தை கொழும்புக்குக் கொண்டுசென்று சிறுவனின் உடம்பில் வைத்து வணங்கிய பின்னர் மூன்றாம் நாள் வீட்டிற்கு கொண்டுவந்து சுவாமி அறையில் வைத்து அவிழ்த்து தாலியை எடுக்குமாறு அந்த ஆசாமி கூறிவிட்டு பூசைக்கான கொடுப்பனவையும் பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.

குடும்பத்தினரும் அவசர அவசரமாக அன்றைய தினமே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்று மகனின் உடலில் வெள்ளைப் பொட்டலத்தை வைத்து வணங்கிவிட்டு நேற்று வீட்டிற்கு வந்து அதை அவிழ்த்தனர்.

தாலிக்கொடியைக் காணவில்லை. குறித்த போலி சாமியார் தாலியை திருடிச் சென்றுள்ளார்.

இதன்பின்னர் இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கூறியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சிறுவனுக்கு தலையில் இரண்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவர் குணமாக உள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டும் என்று, தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று, சிறிலங்கா அரச அதிகாரிகள், அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

“2009இற்கு முன்னர், விடுதலைப் புலிகளின் காலத்தில், எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமான உணரும் நிலையில் இருக்கிறோம். இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்.

நாங்கள் உயிருடன் வாழ வேண்டுமாக இருந்தால், நாங்கள் வீதிகளில் நிம்மதியாக நடமாட வேண்டுமானால், எமது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று பாதுகாப்புடன் திரும்ப வேண்டுமாக இருந்தால், வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும்.

நாங்கள், தலையால் நடந்து, சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேனவைத் தெரிவு செய்தோம். ஆனால் அவர் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. எமது மக்களைக் காப்பாற்றாமல் அவர் தனது கட்சியை வளர்க்கிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் எமக்காக எதையும் செய்யவில்லை. “ என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, உள்நாட்டு விவகார அமைச்சர் வஜிர அபேவர்த்தன, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சரவணபவன் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.

சிறிலங்கா அமைச்சர்கள் திலக் மாரப்பன, வஜிர அபேவர்த்தன போன்றவர்களின் முன்பாகவே, இராஜாங்க அமைச்சர் விஜயகலா விடுதலைப் புலிகள் மீண்டும் வலுப் பெற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தார்.

அவர் விடுதலைப் புலிகள் தொடர்பாக உரையாற்றிய போது, நிகழ்வில் பங்கேற்றிருந்த, அரச அதிகாரிகள் பெரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றதும் குறிப்பிடத்தக்கது.