WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 9

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று பிற்பகல் 2 மணியளவில் கொழும்பில் நடைபெற்றது.

இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நரேந்திரமோடி இரண்டாவது முறையாகப் பிரதமராக வந்தமைக்கு வாழ்த்தைத் தெரிவித்தனர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

சந்திப்பானது அண்ணளவாக 7 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.

தமிழ் மக்களுக்கு எதிராகவே சிறீலங்கா அரசியல் அமைப்பு இருப்பதாகவும் இலங்கையில் தமிழர்கள் சமமாக வாழ இந்தியா கரிசனை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அத்துடன் பலாலி வானூர்தி நிலையத்தின் விரிவாக்கம் மற்றும் சிறிய ரக வானூர்திகளைச் சேவையில் ஈடுபடுத்தப்படுவது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

கூட்டமைப்பின் கோரிக்கையை செவிமடுத்த நரேந்திரமோடி இது பற்றி ஏற்கனவே என்னிடம் இவ்விடயங்கள் குறித்து கூறியுள்ளீர்கள் என்பதை நினைவுபடுத்தினார்.

எதுவாக இருந்தாலும் நீங்கள் இந்தியாவுக்கு வாருங்கள் இவை பற்றி விரிவாக பேசலாம் என்று மோடி கூட்டமைப்பினரிடம் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் இந்தியப் பயண ஏற்பாட்டையும், கூட்டமைப்பினர் கூறிய விடயங்களைக் கவனத்தில் எடுக்குமாறும் பிரதமர் மோடி அங்கிருந்த தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற திகதி விபரத்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  (31) அறிவித்தார்.

இதன்படி நவம்பர் 15 அல்லது டிசம்பர் 07 ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் கட்டாயம் நடத்தப்படும் என்ற உறுதிமொழியையும் அவர் வழங்கினார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று ( 31) மாலை இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார்.

இதன்போது, “21/4 தாக்குதலை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து நிலவுகின்றது.

எனவே, இது தொடர்பில் உங்கள் கருத்து என்னவாக இருக்கின்றது.’’ என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“1988 ஆம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது நிலைமை படுமோசமாக இருந்தது. பலவழிகளிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நாடே பதற்றமடைந்திருந்தது. ஆனால், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

எனவே, குண்டு தாக்குதலை மையப்படுத்தி தேர்தலை ஒத்திவைக்க முயற்சிப்பார்களாயின், அது பயங்கரவாதத் தாக்குதலைவிட படுமோசமான செயலாகமே அமையும்.

நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு வரும் ஒரு தினத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அது டிசம்பர் 9 ஆம் திகதியை தாண்டிதாக இருக்ககூடாது.

ஆகவே, உடன் நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், காலக்கெடுவரை காத்திருந்து நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7ஆம் திகதியும் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும்.

ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளோம்.’’ என்றார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்.

நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் வடக்கில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுடைய பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நல்லூர் பிரதேச செயலகத்தில் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் அலுவலகத்தை சம்பிரதாய பூர்வமாக இன்று திறந்து வைத்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில்,

முன்னைய காலங்களில் பிறப்பு இறப்புச் சான்றிதழ்கள் பெறும் நடவடிக்கைகள் யாழ்.மாவட்ட செயலகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் பின்னர் பிரதேச செயலகங்களுக்கு அந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அதன்படி அவர்கள் அந்தந்த பிரதேச செயலகத்திற்குரிய பிரதேசங்களில் பிறந்தவர்கள் அந்தந்தப் பிரதேசங்களில் பிறப்பு, இறப்பு மற்றும் பதிவுச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன் பின்னர், யாழ்.மாவட்டத்தினுடைய பிரசேங்களில் பிறந்தவர்களுடைய பிறப்புச் சான்றிதழ்களையும் பெறக்கூடியதாக இருக்கும்.

வடமாகாணத்தில் பிறந்தவர்கள் வடக்கில் எந்தப் பிரதேச செயலகத்திலும் பெறக்கூடிய ஏற்பாடுகள் முன்னரே இருந்திருந்தாலும், தற்போது, அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டதன் அடிப்படையில், நாட்டில் எந்த மாவட்டத்தில் பிறந்திருந்தாலும், யாழ்.மாவட்டத்தில் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறித்த செயற்திட்டம் எமது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதே மில்லதே இப்ராஹீம் மற்றும் வில்லயத் அஸ் ஸெய்லானி ஆகிய மூன்று அமைப்புக்களும் தடை செய்யப்பட்டமை தொடர்பான வர்த்தமான அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சோதனை நடவடிக்கைகளுக்காகப் பாதுகாப்பு படையினர் கொழும்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றிருந்தவேளை அந்தச் சம்பவம் இடம்பெற்றது.

அவ்வேளை கதவை திறந்தவர் பாத்திமா இப்ராஹிம். தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான இலாம் இப்ராஹிமின் மனைவி- கர்ப்பிணி.

பொலிஸாரைப் பார்த்ததும் அவர் வீட்டிற்குள் ஓடிவெடிகுண்டை வெடிக்க செய்தார்.அவருடன் சேர்ந்த அவரது மூன்று மகன்களும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்றதொரு சம்பவம் மார்ச் மாதம் இந்தோனேசியாவில் இடம்பெற்றது- பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளரான அபு ஹம்சாவை கைதுசெய்திருந்தனர். இவர் குண்டு தயாரிப்பதில் திறமையானவர்.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் அவரது மனைவி சொலிமாவை கைதுசெய்வதற்காக அவரது வீட்டிற்குச் சென்றவேளை சொலிமா தன்னை வெடிக்கவைத்து இறந்தார். இதன் போது அவரது இரண்டுவயது குழந்தையும் இறக்கவேண்டிய பரிதாபம் நிகழ்ந்தது.

இலங்கை முதல் இந்தோனேசியா வரை ஆபத்தான போக்கொன்று ஆரம்பமாகியுள்ளது. ஐ.எஸ் கொள்கையினால் தங்களை தீவிரவாதமயப்படுத்திக்கொண்ட பெண்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறுகின்றனர்.இதன் போது தங்கள் பிள்ளைகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு அவர்கள் மரணிக்கின்றனர்.

ஜிகாத் வரலாற்றில் பெண் தற்கொலைக் குண்டுதாரிகள் பலர் காணப்படுகின்றனர். ரஷ்யா மேற்கொண்ட போராட்டத்தில் கருப்பு விதவைகள் என்ற பிரிவினர் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

ஆனால் தங்கள் பிள்ளைகளுடன் தாய்மார்கள் தங்களை வெடிக்கவைக்கும் போக்கொன்று புதிதாக பயங்கரவாதிகள் மத்தியில் உருவாகியுள்ளது.

அல்கொய்தாவில் இவ்வாறான போக்கு இல்லை என தெரிவிக்கின்றார். தென்கிழக்காசியாவைச் சேர்ந்த முன்னாள் அல்கொய்தா உறுப்பினர் சோபியான் சவுரி.

இஸ்லாமை பொறுத்தவரை வீட்டையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதே பெண்களுக்கான கடமை என்கிறார் அவர்.

எனினும் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபடும் பெண்கள் வேகமாக சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகின்றனர் என்கிறார் அல்கொய்தா ஜெமா இஸ்லாமிய அமைப்பின் நசீர் அபாஸ்.

இஸ்லாமிய பெண்கள் மத்தியில் இவ்வாறான புதிய போக்கு காணப்படுவதை 2018 மே மாதம் இந்தோேனசியாவின் சுரபயா நகரில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் கள் வெளிப்படுத்தியிருந்தன.

இந்த நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

தந்தை, தாய் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் இணைந்து மேற்கொண்ட இந்த தாக்குதல் இந்தோனேசியாவிலும் சர்வதேச அளவிலும் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

செல்வந்த வர்த்தகரான தந்தை, மனைவி மற்றும் இரு பெண்பிள்ளைகளின் உடல்களில் வெடி குண்டை பொருத்தினார். அவர்கள் அதனை கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடிக்க வைத்தனர்.

அதன் பின்னர் அவர் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிளில் ஏற்றி தனது இரு மகன்மாரை கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அனுப்பிவைத்தார் அவர்கள் அங்கு தங்களை வெடிக்கவைத்தனர்.

அதன் பின்னர் தந்தை வெடிபொருட்கள் நிரம்பிய காரை மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை நோக்கி செலுத்தி தன்னை வெடிக்கவைத்தார்.

குண்டுவெடிப்பு இடம்பெறுவதற்கு முதல்நாளிரவு தனது பிள்ளைகளிடம் மரணிக்க தயாராயிருங்கள் என தந்தை தெரிவித்துள்ளார் என அறியத் தருகின்றார் ஆய்வாளரான ரிஸ்கா நூருல்.

தம்பதிகள் தீவிரவாதமயப்படுத்தப்படும் இந்த போக்கு அவர்களது பிள்ளைகளுக்கு ஆபத்தான விடயமாக மாறி வருகின்றது.

பெற்றோர்கள் தாங்கள் ஜிகாத்தில் ஈடு படவேண்டும் என தீர்மானித்தால் பிள்ளைகள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றார் ஜெமா இஸ்லாமிய அமைப்பின் முன்னாள் தலைவர் நசீர்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சொர்க்கத்திற்கு கொண்டுசெல்லவேண்டும் என கருதுகின்றார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆண்களை விட பெண்களால் அதிதீவிரவாத போக்குடன் விளங்க முடியும் என பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்கள் தங்கள் மனதை தம் மனதை உறுதிபடுத்துவதால் அவர்கள் தியாகத்திற்கு அதிகளவு தயாராக இருப்பார்கள். அதனால் அவர்கள் ஆபத்தானவர்கள் என தெரிவிக்கின்றார் ஆய்வாளரான ரிஸ்கா நூருல்.

இந்தோனேசியாவில் பொலிஸார் தேடுதல் நடத்தியவேளை, தன்னை வெடிக்கவைத்த சொலிமா தன்னை விட அதிகளவு தீவிரவாதபோக்கை கொண்டவர் என அவரது கணவர் அபு ஹம்சா விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய தம்பதியினர் இணைய மூலமே தீவிரவாதமயப்படுத்தப்பட்டுள்ளனர். தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பெண்களில் பலர் தங்கள் கணவர்களின் போதனைகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதனை அவர்களுக்கு அடிபணிவதாக அவர்கள் கருதியுள்ளனர்.

இலங்கையின் பெண் தற்கொலை குண்டுதாரி பயங்கரவாத சூழலில் வாழ்ந்தவர் என்பதால் அவரைப் பற்றி எந்தவித அதிர்ச்சியும் எனக்கு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கின்றார் இந்தோனேசியாவின் சமூக உளவியல் நிபுணர் ஒருவர். பயங்கரவாதிகளின் மனைவிமார் குறித்த எனது ஆராய்ச்சியின் போது பலர் தங்கள் கணவர்களுக்குக் கீழ்பணிவை வெளிப்படுத்தியுள்ளமை தெரியவந்தது.

சிறிய எண்ணிக்கையிலான பெண்களால் மாத்திரமே தங்கள் கணவர்களின் தீவிரவாத போக்கை நிராகரிக்க முடிந்தது ஆனால் அவ்வாறு நிராகரித்தால் அதற்கான விளைவை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அவர்கள் கணவர்களிடமிருந்து பிரிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்தோனேசியாவில் தீவிரவாதமயப்படுத்தப்பட்ட பெண்கள் சிலர் தங்கள் கணவர்களிடமிருந்து சீதனமாக தற்கொலை அங்கிகளை கேட்கின்றனர் என அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச்மாதம் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் இவ்வாறான பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

27.4.2019 இலண்டனில்  நடந்த 3வது நாடுகடந்த அரசின் தேர்தல் வாக்களிப்பு நடைபெற்றது
வாக்குச்சாவடியில் பணியாளர்கள்.

யாழ்ப்பாணம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டில் பெருந்தொகை நகை கொ்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் ஏழாலை தெற்கு மயிலங்காடு வேம்படி அம்மன் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள வீடொன்றில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

70 பவுணுக்கு மேற்பட்ட தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

உறக்கத்தில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்து விசிறி நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன.

சூட்சுமமான முறையில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை அடுத்து, அவிசாவளையில் உள்ள செப்பு வயர் தொழிற்சாலையில் 9 பாகிஸ்தானியர்களும், 3 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செப்பு வயர் தொழிற்சாலை என்ற பெயரில், இந்த தொழிற்சாலையிலேயே குண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது,

சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று பிற்பகல் 2.45 மணியளவில், அதனைச் சுற்றிவளைத்து அங்கிருந்த 12 பேரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில், 9 பேர் பாகிஸ்தானியர்கள் என்றும், 3 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் அவிசாவளையில் உள்ள இலத்திரனியல் கடையொன்றில் பணியாற்றுவதாக விசாரணையின் போது தெரிவித்தனர். எனினும், அவர்கள் கூறியது பொய் என்று காவல்துறையின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

9 பேருக்கு விளக்கமறியல்

நேற்றுமுன்தினம் நடந்த குண்டுவெடிப்புகளை அடுத்து கைது செய்யப்பட்ட 24 சந்தேக நபர்களில், 9 பேர் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் சாலிய அபேரத்ன முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.

அவர்களை எதிர்வரும் மே 6ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

வெல்லம்பிட்டிய காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போது, ஷங்ரி- லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரிக்குச் சொந்தமான தொழிற்சாலை தமது பகுதிக்குள்ளேயே இருப்பதாகவும், தெமட்டகொடவில் தற்கொலைக் குண்டுதாரி வெடித்த இடமும் தமது பிரிவுக்குள்ளேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குண்டுதாரியின் தொழிற்சாலையில் பணியாற்றியவர்கள். அவர்களுக்கு தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்படுகிறது.

குண்டுதாரியின் மனைவி, சகோதரியும் பலி

ஷங்ரி-லா விடுதியில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரியின் மனைவியும், சகோதரியுமே, தெமட்டகொட வீட்டில் உயிரிழந்த இரண்டு பெண்களாவர் என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

நேற்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட 9 சந்தேக நபர்களில் 7 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சிங்களவர், மற்றவர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.