WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS - 2 

ஜேர்மனியில் பெய்த மழை, அதைத் தொடர்ந்து உருவான பெருவெள்ளம், நிலச்சரிவு என, இயற்கைச் சீற்றம் கம்பீரமாக நின்ற நாட்டை நிலைகுலையச் செய்ய, 170 பேர் பலியாக இன்னமும் ஆயிரக்கணக்கானோரை காணாமல் திணறி வருகிறது ஜேர்மனி.

செப்டம்பரில் ஜேர்மனியில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், ஐரோப்பாவிலேயே பணக்கார நாடான ஜேர்மனி வெள்ளத்தை எதிர்கொள்ள தடுமாறியது ஏன் என, உறவுகளை இழந்த வேதனையிலும் கோபத்திலும் இருக்கும் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.

பெடரல் அரசும், உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மக்களை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க சரியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என மூன்றில் இரண்டு பங்கு ஜேர்மானியர்கள் கருதுவதாக இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் நிறுவனமாக மாறி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர்களின் புதல்வர்களுக்கும் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது, குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் கூறியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுடன் அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் மற்றுமொரு சகோதரரான சமல் ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச ஆகியோர் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர்.

சமல் ராஜபக்சவின் புதல்வர் ஷசீந்திர ராஜபக்ச ராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், அண்மையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பசில் ராஜபக்ச, நாட்டின் மிக முக்கிய அமைச்சு பதவிகளில் ஒன்றான நிதியமைச்சு பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவர்களை தவிர ராஜபக்ச சகோதரர்களில் தங்கையின் புதல்வரான நிபுண ரணவக்க நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இலங்கையின் அரசத்துறையில் உள்ள நிறுவனங்களின் கிட்டத்தட்ட 80 வீதமான நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாக திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(05) மாலை நடந்த நிகழ்வு ஒன்றில் பேசியபோதே தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் செப்டெம்பர் வரை நீடிக்கும் என அறிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மாதம் மேலும் 9 மில்லியன் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன. தடுப்பூசிகளை விரைவில் வழங்கி செப்டெம்பர் மாதமளவில் நாட்டைத் திறக்க உத்தேசித்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.கனடாவில் வரலாறு காணாத வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலி

கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண காவல்துறையினர், அந்த மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.

அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம் என அவர்கள் கூறுகிறார்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டனில் அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவானது. அதற்கு முந்தைய வாரம்வரை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடக்கவில்லை.

வான்கூவர் புறநகர் பகுதி போலீஸ் கேப்டன் மைக் கலன்ஞ், "உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்னை," என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையைப் பொருத்தவரை, வான்கூவர் புறநகர் பகுதிகளான பர்னபீ, சர்ரீ ஆகிய பகுதிகளில் மட்டும் வெப்ப தாக்கம் காரணமாக 69 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலரும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த வயோதிகர்கள்.

சிறிய கிராமமான லைட்டனில் வாழும் குடியிருப்புவாசி மேகன் ஃபேண்டரிச் குளோபல் அண்ட் மெயில் நாளிதழிடம் பேசும்போது, "வசிப்பிடங்களை விட்டு வெளியே செல்வதே இயலாத ஒன்றாகி விட்டது," என்று கூறினார்.

இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த மேகன், தமது மகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வெளியே உள்ள வெப்பநிலை குறைவாக பதிவாகும் இடத்துக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.

"இயன்றவரை நாங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறோம். அதிக வெப்பநிலையும் வறண்ட வானிலையும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால், 47 டிகிரிக்கு உள்பட்ட வெப்பநிலையில் வாழ்வதற்கும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையின் தாக்கத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

கனடா வானிலை துறை, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

"உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் இரண்டாவது நாடு எங்களுடையது. அடிக்கடி காணப்படும் பனி மழை, பனிக்காற்று பற்றி நாம் அதிகம் பேசியிருப்போம். ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவாகும் என்பது பற்றி இதுவரை நாம் பேசியது கிடையாது. இப்போதுள்ள நிலையுடன் துபையை ஒப்பிட்டால் அங்கு இதை விட குளுமையான நிலை இருக்கும் என்பது போல உள்ளது," என்று கனடா வானிலை துறையின் மூத்த ஆய்வாளர் டேவிட் ஃபிலிப்ஸ் தெரிவித்தார்.

அமெரிக்காவை வெப்பச்சலனம் எப்படி பாதிக்கும்?

அமெரிக்க நகரங்களான போர்ட்லாந்து, சியாட்டில் ஆகியவை மட்டுமே 1940களுக்கு பிறகு மிக அதிகமான வெப்பநிலையை எதிர்கொண்டுள்ளன.

ஓரிகனில் உள்ள போர்ட்லாந்தில் அதிகபட்சமாக 46.1 டிகிரியும் சியாட்டிலில் 42.2 டிகிரியும் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது. ஒரு கனமான கேபிளை உருக்குவதற்கு இந்த அளவு வெப்பமே போதுமானது. இதன் காரணமாக தமது ரோப்கார் சேவையை போர்லாந்து நகர நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

வாஷிங்டனின் ஸ்போகேன் பகுதியில் வெப்பம் காரணமாக அதிக அளவில் ஏசி சாதனங்களை பயன்படுத்தி வருவதால் மின்சார தேவை அதிகமாகியுள்ளது.

சியாட்டில் நகரில் உள்ள ஒரு குடியிருப்புவாசி, ஏஎஃப்பி செய்தி முகமையிடம் பேசும்போது, "வாஷிங்டன் மாகாணம் முழுவதும் பாலைவனம் போல வெப்பநிலை நிலவுகிறது," என்று கூறினார்.

"வழக்கமாக வெப்பநிலை கடுமையாக இருக்கும்போது நகரவாசிகள் டீசர்டுகள், அரைக்கால் பேன்டுகளை அணிவார்கள். ஆனால், இப்போதுள்ள வெப்பநிலை அப்படியெல்லாம் ஆடை அணிய முடியாத அளவுக்கு ஆக்கியிருக்கிறது," என்று அந்த குடியிருப்புவாசி தெரிவித்தார்.

சியாட்டில் நகரில் உள்ள அமேசான் நிறுவனம், அதன் தலைமையத்தில் வெளிப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பாதுகாப்பான மற்றும் குளுமையான பகுதிகளில் தங்கியிருக்க வசதிகளை செய்துள்ளது. போர்ட்லாந்து நகரில் உள்ள குடியிருப்புவாசிகளும் குளுமை மையங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். வாஷிங்டனில் பெரும்பாலான மக்கள் நீர்வீழ்ச்சி ,செயற்கை நீரூற்று இடங்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

தீவிர பருவநிலை நிகழ்வுகள், வரும் காலங்களில் பருவநிலை மாற்றத்தை கடுமையாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும், தற்போதைய வெப்பநிலை பதிவை உலகளாவிய வெப்பநிலை மாற்றத்தின் தாக்கத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்று அவர்கள் கருதுகின்றனர்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் ஒன்று கூடிய பெருந்திரளான மக்களால் பதற்ற நிலைமை நிலவிவருகின்றது.

இதன்போது மக்கள் குறித்த துப்பாக்கிசூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பிவருகின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை  ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.

இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.

இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பாக ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நாளை (புதன்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜாவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகைய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அவர் நடத்தும் முதலாவது சந்திப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் ஜே189, 190 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் அரசடிப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அதிக அளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவும் அதேபோல காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றிரவு கிடைத்த பி.சி.ஆர் பரிசோதனைகளில் முடிவுகளின் படி 59பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் யாழ் மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 508 ஆக அதிகரித்திருக்கின்றது. அதே நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 48 கொரோனா உயிரிழப்புகள் இன்றுவரை பதிவாகியுள்ளன.

மேலும் 2 ஆயிரத்து 908 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 778 நபர்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அதனைவிட வறிய குடும்பங்களுக்கான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு முதற் கட்டமாக சமூர்த்தி பெறுபவர்கள் அதேபோல் மாற்றுத்திறனாளி கொடுப்பனவு பெறுவோர் வயது முதிர்ந்தோர் கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு பெறுவோருக்கு முதற் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் சுமார்59 ஆயிரம் குடும்பங்கள் இன்று வரை 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவினை பெற்றிருக்கின்றார்கள். ஏனைய பகுதியினருக்கு நிதி கிடைத்தவுடன் அதனை வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்குரிய நிதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை எனவே பொதுமக்கள் பொறுமையாக இருந்து அந்த நிதியினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் தடுப்பூசி வழங்கலை பொறுத்தவரை முதற் கட்டமாக வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் தடுப்பூசிகளின் 49 ஆயிரத்து 439 தடுப்பூசிகள் முழுமையாக வழங்கப்பட்டு முடிவுறுத்தப்படுத்தப்பட்டுள்ளன.   தடுப்பூசிகள் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தடுப்பூசி இன்றைய தினம் காலையில் இருந்து 4 வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டு வருகின்றது.

தற்போது பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் சில வீதிகளிலே பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருக்கிறன.  இதனை நாங்கள் 24 மணி நேரமும் பொலிசாரை வைத்து கண்காணிக்க முடியாது.

எனவே பொதுமக்கள் தாங்களாகவே அந்த விடயத்தை உணர்ந்து அநாவசிய நடமாட்டங்களை கட்டுப்படுத்தி அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியில் வருவதை தவிர்த்து இந்த நிலைமையினை அனுசரித்து செயற்பட வேண்டும்.

பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகாமல் மேலும் தொற்றை ஏற்படுத்தாது பயண கட்டுப்பாட்டை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். தற்பொழுது பொதுமக்கள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் நடமாடும் விற்பனை நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்களுக்கு மிக அத்தியாவசியமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகின்றது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அந்த அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யாது நிலைமையை அனுசரித்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.