WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS -3

கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(26) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-02.45 மணி வரை கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையக் கட்டடத்தில் நடைபெற்றது.

தற்போது யாழில் நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இரத்ததான முகாமை யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் விருந்தினராகக் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ். ஜெயகரன் ஆகியோரும் இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டனர்.               

மேற்படி இரத்ததான முகாமில் ஐந்து பெண்கள் மற்றும் இளைஞர்கள் என 68 பேர் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினர். கொக்குவில் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மாத்திரமன்றி அயற்கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். 

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் வைத்தியர் ரி.ஜெயதர்சன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர் தங்கராஜா ரவினதாஸ், மற்றும் இரு வைத்தியசாலைகளின் உத்தியோகத்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.               

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் இரத்ததானம் வழங்கிய அனைவருக்கும் மேற்படி சனசமூக நிலைய நிர்வாகத்தால் ஊக்குவிப்பாக நினைவுப் பரிசிலும், சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் சிற்றுண்டிகளும் பரிமாறப்பட்டன.

இறுதியாக நேரடியாக வருகை தந்த இரத்தம் பெற்றுக் கொண்ட இரு வைத்தியசாலைகளின்  உத்தியோகத்தர்களுக்கும் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.              

கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலைய நிர்வாகம் முதற்தடவையாக மேற்படி இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்த நிலையில் முதற் தடவையிலேயே 68 குருதிக் கொடையாளர்கள்  இரத்ததானம் வழங்கியிருப்பது தொடர்பில் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். 

ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு   கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதிதாசன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, ராகுல் காந்தி கல்லூரி மாணவிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்று கேள்விகளுக்கு பதில் அளித்துப் பேசியதாவது:

“பெண்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி என அனைத்துத் துறைகளிலும் 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம்.

நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து அவை சுயமாகச் செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை முழுமையாகப் பாதுகாக்க வேண்டும்.

மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது நான் திணிக்கமாட்டேன். தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்கிறேன். பல்வேறு சிந்தனைகளைக் கொண்டதுதான் இந்தியா. ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை.

பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது தாங்களாகவே ஆண்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும். பெண்களுக்குப் பெண்களால்தான் பாதுகாப்பு அளிக்க முடியும்.

பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்ற சிந்தனையை சமுதாயத்தில் உருவாக்கும்போதுதான் பெண்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும்.

கரோனா காலகட்டத்தில் 5 சதவீத தொழிலதிபர்களுக்கு ரூ.1.57 லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்கியது.

ஆனால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லப் பேருந்து வசதியைக்கூட செய்து தரவில்லை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது மிகப்பெரிய கடினமான தருணம்.

அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது.

இந்தியாவை 4 தொழில் நிறுவனங்கள் மட்டுமே வழிநடத்தும்போது பொதுமக்கள் எப்படித் தொழில் செய்ய முடியும்? விவசாயிகள், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாகக் கருதுகிறேன். இவை மூலம்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது.

வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும் இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும்.

ஆனால், இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால்தான் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்க்கிறோம்” என ராகுல் காந்தி பேசினார்.

இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.

அண்ணா என்று அழைக்கலாமா?

கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடிக் கொண்டிருந்தார். அப்போது மாணவிகள் ஒவ்வொருவராக ராகுல் காந்தியிடம் ‘சார்’ என்று அழைத்துக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவரும் பதில் அளித்தபடி இருந்தார். ‘சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழைக்கலாம்’ என்றார்.

அப்போது, மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் ‘உங்களை அண்ணா என்று அழைக்கலாமா?’ என்று கேட்டார். அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.

தொடர்ந்து, கலந்துரையாடலில் கேள்வி கேட்ட மாணவிகள் சிலர் ‘அண்ணா’ என்று ராகுல் காந்தியை அழைத்து தங்களின் கேள்வியைக் கேட்டனர்.

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக! – ஜேர்மனியில் கையெழுத்து வேட்டை!

ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமைய வேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து பெறும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இலங்கை தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து பெறும் நடவடிக்கை அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது

இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு   www.gerechtigkeitfürtamilen.de  எனும் இணையவழி மூலமாக மக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.

1) இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு அனுப்ப வேண்டும்.

2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கையைச் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது.

இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்கள், மானிடத்துக்கெதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.

பாதிப்புக்குள்ளான மக்கள் பொது வாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொது வாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்கு தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொது வாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.

3) போரினால் விதவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலை குறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குப்புறம்பாகச் சிறை வைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெவ்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா மனிதவுரிமைகளுக்கான உயரணையாளர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்குத் தொடர்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் எனக் கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம், தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யோசனைக்கமைவாக, யாழ் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் உள்ளூர் கைத்தறி, துணி உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை தான் விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

வேலணை பிரதேசத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புங்குடுதீவு பிரதேசத்திற்கு இன்று காலை சென்றிருந்த இராஜாங்க அமைச்சர், அங்குள்ள தையல் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற கைத்தறி உற்பத்திக்கான பொருட்களை 30 பெண்களுக்கு வழங்கிவைத்து 3 மாத பயிற்சி நெறியையும் ஆரம்பித்து வைத்திருந்தார்.

இதன்போது வேலணை பிரதேசபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் குறித்த பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் திருமதி அனுஷியா ஜெயகாந்த் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இராஜாங்க அமைச்சர் சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைவாக யாழ் மாவட்டத்திலுள்ள சுயதொழிலில் ஈடுபடக் கூடிய இளைஞர் யுவதிகளை இணைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதுடன்,

புங்குடுதீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பற்றிக் கைத்தொழில் உற்பத்தியைப் போன்று யாழ் மாவட்டத்தில் ஏனைய பிரதேசங்களிலும் காணப்படும் உள்ளூர் பற்றிக் உற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வது தருமாறும், புதிதாக உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இராஜாங்க அமைச்சர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மக்கள் நலன் கருதிய யோசனைகள் ஒவ்வொன்றையும் இந்த அரசு குடாநாட்டு மக்களுக்காக செய்துகொடுக்க தயாராக உள்ளது என்றார்.
யா / பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தொகுதி திறப்பு விழா.

யா / பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் ஓய்வு பெற்ற பிரதி நில அளவைத் திணைக்கள நாயகம் அமரர் சரவணமுத்து கனகரசன் அவர்களின் நினைவாக அன்னாரது துணைவியாரினால் 6 மில்லியன் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறைகள் உள்ளடங்கிய கட்டடத் தொகுதி புதிதாக அமைக்கப்பட்டு இன்று 28/01/2021 பாடசாலைச் சமூகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவி வரும் நிலையில் தலைநகர் பீஜிங்கில் மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

சீனாவின் ஊகான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதனால், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.  
சீனாவில் விரைவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

எனினும், தற்போது பீஜிங் டாக்சிங் எனுமிடத்தில் புதிதாகப் பலருக்கு கொரோனாத் தொற்றுப் பரவி வருகிறது. இதனையடுத்துக் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பீஜிங்கின் பல பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.    

இனிய நந்தவன சஞ்சிகையின் 24 வது ஆண்டு விழா 10.1.2021 திருச்சி நகரில் மிகவிமர்சையாக நடைபெற்றது.
ஒட்டு மொத்த ஆளுமைகளும் ஒரே மேடையில்!!

கொரோனா காலமாதலால் விழாவுக்குஅனுமதிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கான மக்கள் நேரடியாகவும் மற்றும் பல நாடுகளில் இருந்து  இணையம் வழி இணைந்து விழாவை சிறப்பித்தது அருமை. தமிழ் நாட்டில் வளர்ந்து நிற்கிறது ஒரு மாபெரும் விருட்சமாய் இனிய நந்தவனம் பல்லாண்டு தொடர்ந்து பணிசெய்ய பண்ணாகம்.கொம்  இணையம்   இனிய நந்தவன சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பிரித்தானியாவின் தினசரி கொரோனா தொற்றில் முதன் முறையாக 60,000 க்கு மேலான தொற்றாளர்கள் பதிவான நிலையில் இங்கிலாந்து பிராந்தியத்தில் 50 வீடுகளில் ஒரு வீட்டில் தொற்று ஏற்படக்கூடிய அபாயத்துடனும் லண்டனில் 30 பேரில் ஒருவருக்கு தொற்றை உருவாக்கும் வகையிலும புதிய திரிபு கொரோனா வீரியம் பெற்றுள்ளது.

இங்கிலாந்து பிராந்தியத்தில் தொடர்ச்சியாக இன்று ஒன்பதாவது நாளாகவும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பிரித்தானியா தற்போது முழு முடக்க நிலையில் உள்ளது.

இந்த முடக்கநிலையை சட்டப்படி எதிர்வரும் மார்ச்மாதம் இறுதியில் நடைமுறைப்படுத்துவதற்குரிய புதியசட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் இந்த முடக்க நிலையை ஆதரித்துள்ளது.

தற்போது இங்கிலாந்து பிராந்தியத்தில் வசிப்பவர்கள் அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே வெளியே செல்ல முடியும், வெளியில் உடற்பயிற்சி செய்வது ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளது.

இதற்கிடையே எதிர்வரும் கோடைகாலத்தில் இடம்பெறவுள்ள கபொத சாதாரண மற்றும் உயர்தர இறுதி பரீட்சைகள் மீளெடுக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய கல்வியமைச்சர் கெவின் வில்லியம்சன் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

கடந்த வருடத்தைப்போலவே கபொத சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கு ஆசிரியர்களின் மதிப்பீட்டுத் தரங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளா

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு முக்கிய நகரங்களில் 4 அடுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் புதிய வகை கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 6-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 55,892 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,88,780 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 964  பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 73,512 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் விற்பனை விலை 193 ரூபாய் 5 சதமாக பதிவாகியுள்ளது.

அத்துடன் கொள்விலை 188 ரூபாய் 37 சதமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நெருக்கடி காரணமாக அண்மைக்காலங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை கண்டிருந்தது.

எனினும் தற்போது இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

ஒரு மாத ஊரடங்கிற்கு பின் ஜெனீவாவில் கடந்த 10ம் தேதி பார்கள் மற்றும் உணவகங்கள் திறக்கப்பட்டன.

ஆனால், இரவு 7 மணியோடு கடைகளை மூட வேண்டும் என்ற சுவிஸ் அரசின் கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது

ஊரடங்கு குறித்து Romandie எண்டர்பிரைசஸ் தலைவர் Blaise Matthey கூறுகையில், மக்களிடையே பீதி இருக்கிறது. அராசங்கம் மற்றும் மக்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்.

ஜெனீவாவில் கடைகள் மூடப்பட்டாலும், அருகிலுள்ள vaud மாவட்டத்தில் கடைகள் திறந்திருப்பது எப்படி தர்க்கரீதியாக இருக்கும் என்று Blaise Matthey கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சிறந்த இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று Blaise Matthey கோரிக்கை விடுத்துள்ளார்.

தொழிற்சங்கத் தலைவர்கள் வணிக உரிமையாளர்களுடன் உடன்படுகிறார்கள் என ஜெனீவா தொழிற்சங்கத்தின் தலைவர் Davide de Filippo கூறினார்.

மேலும், குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் உதவி தேவை, குறைந்த ஊதியம் பெறுபவர்களுக்கு 20% ஊதியக் குறைப்பு மிகவும் வேதனையானது மற்றும் உணவு உதவிக்கான தேவை அதிகரித்து வருகிறது என Davide de Filippo தெரிவித்தார்.


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த தீர்வுகள் சொல்லிலடங்காதவை என கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவிதுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் போன்றவர்களால் பேசமுடியும் ஆனால் செயல் வடிவம் கொடுக்க முடியது என மட்டக்களப்பில் கடந்த சனிக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் இன்று(13) நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

'கிளியே வாய்ச் சொல்லில் வீரரடி' எனும் பாரதியாரின் கவிதையைப் போல் தான் அடைக்கலநாதனின் கருத்து இருக்கின்றது.

கடந்த 72 வருடகாலத்தில் அவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவைகள் சொல்லிலடங்காது. அதனை வைப்பதற்கே இடமில்லாமல் உள்ளது.

அன்புக்குரிய அடைக்கலநாதன் அண்ணன் உட்பட நான் பலருக்குச் சொல்லும் அறிவுரை என்வெனில் வியாழேந்திரன் என்ன செய்கின்றார், அவர் தலை சொறிகின்றாரா, மூக்கைச் சொறிகின்றாரா என்று பார்க்காமல், வியாழேந்திரனின் சட்டியில் என்ன வேகுது என்று பாராமல் உங்கள், உங்கள் சட்டிகளில் என்ன கருகுது என்று பாருங்கள் என்பதை உள அன்புடன் சொல்லிக் கொள்கின்றேன்.

எனது அலுவலகத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றார்கள். அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக வருகின்றார்கள். அந்த மக்களுக்கு தெரியும் அடைக்கலநாதன் போன்றவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று.

நாங்கள மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொடுப்போம். மக்கள் எங்களிடத்தில் வீடு, வேலைவாய்ப்பு, வீதி, என்பனவற்றைப் பெற்றுத்தாருங்கள் என எங்களிடம் கேட்டார்கள். அததைத்தான் நாங்கள் தற்போது செய்து வருகின்றோம் என்றார்.


யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் 
German  Tamil Kultur verein e.V.
இசைக் கலை வகுப்புகள் நடைபெறுகின்றன.
சனிக்கிழமைகளில்   மாலை 15.00 மணியிலிருந்து 

இடம்.-  Engagementzentrums  Hüsten
                                    Am Hüttengaben  29
                                    59759 Arndberg 
    ( Neheim -Hüsten புகையிரதநிலையத்திற்கு அருகாமையில் )
 மாணவர்கள் புதிய வகுப்பில் இணைய விரும்பியவர்கள் தொலைபேசிமூலமாக, நேரடியாக  வந்து இணையலாம். தரமான பட்டதாரி இளம் ஆசிரியர்களால் கற்பிக்கப்படும். முன் பதிவுக்கு முந்துங்கள்.

யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம்  தொடர்புகளுக்கு=  01737079149 ,017623826260 ,015143564209 

தமிழர் கலைகளை ஒன்றுபட்டுக் காப்போம்.

German  Tamil Kultur verein e.V.

வாய்ப்பாட்டு ,கீபோட்(சுரத்தட்டு) ,வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் ஆகிய வகுப்புகள் உங்களுக்காக மன்றத்தால்    ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.