WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-5

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.

பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.

சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

20 வீதத்தால் வீழ்ச்சி

இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், ஃபிட்ச் மதிப்பீட்டின் அறிக்கை இருந்த போதிலும், இலங்கை தனது பொருளாதார விவகாரங்களை சரியான முறையில் நிர்வகித்து, அதன் அந்நிய செலாவணி ஈட்டுதலை வலுப்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் திறம்பட செயல்பட்டால், இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியின் சாத்தியத்தை முறியடிக்கும் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் ரூபாவின் பெறுமதி வலுவடைவது நாட்டின் பொருளாதார செயற்பாட்டின் விளைவு அல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

ஆனால் அதை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியாது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ரூபா மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.  


முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ள நோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(9) இரவு இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விநாயகர் வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

42 அகவையுடைய குறித்த நபர் திருகோணமலையில் திருமணம் செய்து தேவிபுரம் பகுதிக்கு வந்து செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரிடம் கள்ளநோட்டு அச்சிடும் இயந்திரம் ஒன்றும் அச்சிடப்பட்ட 5000 ரூபா தாள்கள் 700 ம் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.


சட்ட விரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதை விரைவுபடுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார்.

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

பலதரப்பட்ட முறைகேடுகள்

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “எமது பிரதேசங்களில் பல்வேறு வகைகளில் பலதரப்பட்ட முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாளாந்தம் அறியக்கிடைக்கின்றது.

இவற்றை கட்டப்படுத்த கடலோர காவற்படையினர் செயற்பட்டுவருகின்ற போதிலும், அவர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த தொண்டர் அணி செயற்படும்.

யாழ். மாவட்டத்தின் சில கிராமங்களில் கஞ்சா மற்றும் ஹெரோயின் வியாபாரம் குடிசை தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பிரதான பாடசாலைகளின் முன்பாக திடீரென தோன்றி மறைகின்ற கச்சான் மற்றும் சிற்றுண்டி வியாபாரிகள் தொடர்பாக அவதானம் செலுத்த வேண்டும்.

போதைப் பாவனை

போதைப் பாவனை மற்றும் பரவலைக் கட்டுப்படுத்த காவல்துறையினரின் சிவில் பாதுகாப்புக் குழுக்களைப் பலப்படுத்தி பிரதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இதற்காக நீதியமைச்சரோடு பேசி சட்டம், நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, புனர்வாழ்வு மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்” - என்றார்.

"அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் கிடையாது, அவருக்கு தேர்தல் தொடர்பிலும், மக்களின் நலன்கள் தொடர்பிலும் எவ்வித அக்கறையும் இல்லை.

சுயவிருப்பத்தின் பெயரில் சர்வாதிகாரியாக செயல்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாவின் நிலை என்ன ஆனது என ரணில் நினைவுபடுத்தி பார்க்கவேண்டும்"

இவ்வாறு, மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பொய்யான கருத்தை வெளியிடும் ரணில் 


தொடர்ந்து அவர்,

"அரசியல் அமைப்பிற்கு எதிரான அதிபர் ரணிலின் செயல்பாடுகளுக்கு நீதிமன்றத்தின் ஊடாக பதிலடி கொடுப்போம்.

மக்களின் ஜனநாயக உரிமையை பறித்து அரசியல் அமைப்பிற்கு முரணாக செயல்படுவதன் விளைவை ரணில் விரைவில் விளங்கிக்கொள்ளுவார்.

அரசியலமைப்பிற்கு முரணாக செயல்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரி மற்றும் கோட்டாபயவிற்கு நடந்த சம்பவங்களை அவர் திரும்பிப் பார்க்கவேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பொய்யான கருத்துக்களையே அதிபர் ரணில் நாடாளுமன்றில் முன்வைத்துள்ளார்.

தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை, தேர்தலுக்கு நிதி இல்லை என ரணில் கூறினார், அப்படியாயின் எதற்காக ஐக்கிய தேசிய கட்சி வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும், தேர்தல் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ரணில் பொறுப்புக்கூற வேண்டும்


இல்லாத தேர்தலுக்கு அனைத்து தரப்பினரையும் தயார்படுத்தியமைக்கு அவர் பொறுப்புக் கூறவேண்டும்.

வரவு செலவு திட்டத்தின் ஊடாக தேர்தலுக்கு ஒதுக்கிய நிதி எங்கே. உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பவற்றின் தோல்வி உறுதி, அதேசமயம் அதிபர் ரணில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவரும் கிடையாது, மக்களின் நலன்கள் தொடர்பில் அவருக்கு எதுவித அக்கறையும் கிடையாது.

இதுபோன்று சர்வாதிகாரமாக செயற்பட்ட முன்னாள் அதிபர் கோட்டாவின் நிலை என்ன ஆனது என அதிபர் ரணிலும் தெரிந்துகொள்ள வேண்டும்.

தேர்தலை பிற்போட்டாலும் மக்களின் ஆணையை அவரால் எப்போதும் வெல்ல முடியாது, அடுத்ததடவை தேசியப்பட்டியல் கூட கிடைக்காமல் போகலாம்." இவ்வாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.  


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அனலைதீவு ஐயனார் கோவில் முன்றல் மற்றும் மூளாய் – வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வரும் இலங்கை, உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 09ம் தேதி, தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்து வருகிறது.

எனினும், தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் பல தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு வலியுறுத்தி மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேர்தலை நடத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை சட்டத்திற்குட்பட்டு நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உறுதி வழங்கியுள்ளமையினால், தேர்தலை நடத்துமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை என உயர்நீதிமன்றம் இன்று அறிவித்தது.

உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரை ராஜா இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதன்படி, தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித தடையும் கிடையாது.

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்துமாறு கோரி, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் மீதான விசாரணைகளின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் 9ம் தேதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்துமாறு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையே இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெற்ற கேணல் டபிள்யூ.எம்.கே.விஜயசுந்தரவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

மனுத்தாரர் தரப்பு, குறித்த மனுவை உரிய வகையில் தாக்கல் செய்யவில்லை என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மனுத்தாரர், தான் இலங்கையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை எனவும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரிக்குமாறு சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.

எனினும், நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முக்கியமான தேவைகளுக்கு மாத்திரம் பணத்தை செலவிட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சத்திய கடுதாசியில் தெரிவித்துள்ளதாக மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிடர் ஜெனரல் நெரில் புல்லே உயர்நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு மீதான விசாரணைகளை எதிர்வரும் 23ம் தேதி வரை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தேர்தலை நடத்த பணம் வழங்கப்படவில்லை

உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான பிப்ரவரி மாத செலவினங்களை ஈடு செய்வதற்கு பணத்தை வழங்கக் கோரி, தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது.

பிப்ரவரி மாத செலவினங்களுக்கு மட்டும் 770 மில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு, நிதி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

எனினும், இன்று வரை அதற்கான பதில் கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு தாம் தலை வணங்குவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றார்.

தேர்தலை நடத்துவதற்கு முதற்கட்டமாக 25 மில்லியன் ரூபா தமக்கு கிடைத்துள்ளமையினால், அதனை கொண்டு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி சபை வேட்பாளரும் கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளருமான ராஜமணி பிரசாத்

சூடு பிடிக்காத தேர்தல் களம்

இலங்கையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே காணப்படும்போதிலும், தேர்தல் களம் இன்று வரை சூடுபிடிக்கவில்லை.

இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட தேர்தல்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தேர்தல் பிரசாரங்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையிலும் பிரசார நடவடிக்கைகளில் மந்த நிலைமை காணப்படுகின்றது.

தேர்தல் பிரசாரங்கள் இதுவரை ஆரம்பிக்கப்படாமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உள்ளுராட்சி சபை வேட்பாளரும், கொட்டகலை பிரதேச சபைத் தவிசாளருமான ராஜமணி பிரசாத்திடம், பிபிசி தமிழ் வினவியது.

''தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற கேள்வி உள்ளது. பொருளாதார பிரச்சினை இன்று எல்லாருக்கும் உள்ளது. பிரசாரத்திற்கு பதாகைகள், போஸ்டர்கள் அச்சிட வேண்டும். தேர்தலுக்கு யாரிடமாவது கடனை வாங்கியே இதனை செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு பிரசாரத்திற்காக கடனை வாங்கி, இந்த வேலைகளை செய்து பின்னர், தேர்தல் இல்லை என அறிவித்தால், வாங்கிய கடனுக்கு எப்படி வட்டி கட்டுவது, எப்படி கடனை திருப்பி செலுத்துவது என்ற பயம் உள்ளது.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், சம்பளத்தை சரி கொடுக்கலாம். அதுமாத்திரம் அல்ல. மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருப்போம். அதனையும் நிறைவேற்ற முடியாமல் போய்விடும். அதனால் நான் மாத்திரமல்ல, பெரும்பாலான வேட்பாளர்கள் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை" என ராஜமணி பிரசாத் தெரிவித்தார்.


பொத்துவில் பிரதேச சபை P/6,7,8 சின்னப் புதுக்குடியிருப்பு வட்டார சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப்

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகத்தினாலேயே தான் இன்னும் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை என பொத்துவில் பிரதேச சபை P/6,7,8 சின்னப் புதுக்குடியிருப்பு வட்டார சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப் குறிப்பிடுகின்றார்.

''தேர்தல் நடக்குமா? இல்லையா? என்ற ஒரு சந்தேகம் எனக்குள் இருக்கிறது. நடக்கக்கூடிய சாத்தியம் இல்லை என தோன்றுகின்றது. நாட்டு நிலைமை அப்படி இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அந்த விடயங்களினால் பிரசாரத்தில் நான் ஈடுபடவில்லை" என சுயேட்சை வேட்பாளர் ஏ.எஸ்.மஹரூப் தெரிவிக்கின்றார்.

தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்தும் நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான வேட்பாளர்கள் இதுவரை தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கவில்லை என்பது உறுதியாகிறது.

பால் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மில்கோ நிறுவனம் பாலின் விலையினை இருபது ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் தற்போது அந்த நிறுவனத்தால் பால் ஒரு லீற்றர்( 1L) 140 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது விலை அதிகரிப்பினை அடுத்து ஒரு லீற்றர் (1L) பால் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் என அதன் தலைவர் ரேணுகா பெரேரா கூறியுள்ளார்.

அவ்வாறு இருக்கையில் தனியார் துறையினர் ஒரு லீற்றர் பாலை 160 ரூபாவிற்கு கொள்வனவு செய்து 450 விற்கு விற்பனை செய்கின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு தெரிவித்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “2010 இல் இருந்துதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் என ஈ,பி.எல்.ஆர்.எவ். ஐச் சேர்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் முதலாவதாக முன்வைத்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விவகாரம்

அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ரெலோவும் இதனைப் பதிவு செய்யவேண்டும் என தெரிவித்திருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் 2004 ஆம் ஆண்டு 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டோம். அதில் நானும் ஒருவர்.

தேர்தல் முடிந்த பின்னர் நாம் முதன் முதலில் நாடாளுமன்றம் செல்லவில்லை. மாறாக கிளிநொச்சியிலே இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தான் சென்றோம். அதில் அவ்வியக்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலரும் இருந்தார்கள்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனிடம் இரண்டு விடையத்தை நான் கேட்டிருந்தேன்.

முதலாவதாக கருணா குழுவிலே இருந்து வாகரையிலே உயிரிழந்த போராளிகளை மாவீரர் பட்டியலில் சேர்க்கவேண்டும், அதற்கு அவர் சம்மதித்தார்.

இரண்டாவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்யவேண்டும் என கேட்டேன். அப்போது அவர் தெரிவித்தது என்னவெனில் இக்கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது.

வரலாற்றை மாற்ற முடியாது

இதில் உள்ள நான்கு கட்சிகளுக்கும் தனித்தனியே கொள்கைகளும், கோட்பாடுகளும் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியே செயற்படலாம். தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செல்லலாம். அதனை இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுத்துச் செல்லவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இதற்காகத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நாம் பதிவு செய்யவில்லை. இதுதான் வரலாறு. இதனை மாற்ற முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்” - என்றார்.

பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களை இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடு முழுவதும் மீண்டும் நீண்ட மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நீண்ட மின்வெட்டு -  எரிபொருள் வரிசை

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள கட்டணங்கள் அதிகரிக்கப்படாவிட்டால் மின்வெட்டை நிச்சயமாக நீடிக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் நிலைமை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.


ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை அறிவித்தன.

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி அறிவிக்கப்பட்டது. 

புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஆரம்பித்த சந்திப்பின் பின்னர் கூட்டணி தொடர்பாக அறிவிக்கப்பட்டது.

வெளியேறிய மணிவண்ணன்

சின்னம் தொடர்பில் இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறினர்.


இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்தது தமிழரசி கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஒப்பந்தம்

வடகிழக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறித்த கூட்டணி அமைக்கப்பட்டு போட்டியிடவுள்ளது. இது தொடர்பாக ஆராய்ந்து நாளை காலை 10 மணிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவராக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறவிப்பு நாளை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள தமிழரசு கட்சியின் பொதுக்கூட்டத்தில் உறுதி செய்யப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இலங்கை தமிழரசு கட்சியின் உப தலைவராக உள்ள பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாகத் தெரிவித்து தனது பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாணக்கியனுக்கு பதவி?

இவ்வாறான நிலையிலேயே புதிய உப தலைவராக சாணக்கியனை நியமிப்பது தொடர்பில் கருத்து வெளியாகியுள்ளதுடன், நாளைய தினம் நடக்கவுள்ள கட்சியின் கூட்டத்தின் போது இது குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதவி விலகல்

மேலும் உப தலைவராக தன்னை நியமிப்பது தொடர்பில் இது வரை தனக்கு எந்த தகவலும் தெரியாது எனவும், ஆனால் முன்னர் உப தலைவராக இருந்த பொன் செல்வராஜா பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்துள்ளார் இருப்பினும் புதியவர் தெரிவு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் பதிலளித்தார்.

இவ்வாறான பின்னணியில்,  அடுத்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு உட்பட ஏனைய மாவட்டங்களில் இளைஞர் சமுதாயத்துடன் ஒன்றித்து செயற்பட கூடிய ஒரு இளம் சிரேஷ்ட உப தலைவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தமிழரசு கட்சி

ஆகவே உப தலைவர் பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் பொருத்தமாக இருப்பார் என தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழுவும் இளைஞர் அணியும் அதனை சார்ந்த இளைஞர்கள் உட்பட அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.