WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-6

தமிழின அழிப்பான கறுப்பு யூலையின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாள் இன்று வெள்ளிக்கிழமை(23) யாழ்.மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ். மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபையின் பிரதி முதல்வர் து.ஈசன், யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு கறுப்பு யூலையில் கொல்லப்பட்ட அனைத்துத் தமிழ்மக்களுக்கும் உணர்வுபூர்வ அஞ்சலி செலுத்தினர்.

ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 20 பேர் பலியாகியுள்ளதுடன் 70 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாலைகள் வெள்ளக்காடாக, சில இடங்களில் சாலைகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளம் சூழந்த வீடுகளின் கூரைகளில் 50 பேர் வரை மீட்கப்படுவதற்காக காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

Cologneக்கு அருகிலுள்ள Eifel பகுதியில் சாலைகளில் நதி போல் வெள்ளம் ஓட, அப்பகுதி மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Altena என்ற நகரில் மக்களை மீட்கச் சென்ற தீயணைப்புவீரர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, மற்றொருவர் Werdohl-Elverlingsen என்ற பகுதியில் மீட்புப்பணியின்போது நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

Ahrweiler என்ற இடத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மழையில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் 50 பேர் வரை காணாமல் போயிருக்கிறார்கள்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஜேர்மனி மட்டுமல்ல, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஸ இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினராகவும், நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துள்ளதையடுத்து ஆதரவாளர்கள் பல பகுதிகளிலும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி நகரில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமாரின் ஏற்பாட்டில் கட்சியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஸவிற்கு கட்டவுட், மற்றும் பதாகைகள் வைக்கப்பட்டு பொதுஜனப் பெரமுன கட்சியின கொடிகள் தொங்க விடப்பட்டன.

அத்துடன் ஆதரவாளர்கள் களுவாஞ்சிக்குடி நகரிலும், களுவாஞ்சிக்குடியில் அமைந்துள் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சியின் காரியாலயத்திற்கு முன்பும் பட்டாசு கொழுத்தி வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதனால் அப்பிரதேசமெங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்துள்ளது.

இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உடைய ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பதனால் ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து ஆராய்வதோ கருத்துக்களை வெளியிடுவதோ அவசியமற்ற செயல் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஆங்கில ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

பஷில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை எதிர்க்கட்சியினரின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இது உங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவிக்கின்றனரே என்ற கேள்விக்கு அவர்கள் இது குறித்து கவலைப்படவேண்டிய தேவையில்லை. எனக்கு என்னை பார்த்துக்கொள்ள தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்கள் என்ற ஊகங்கள் உண்மையா என்ற கேள்விக்கு – வாரிசு அரசியல் அல்லது அரசியலில் முன் அனுமானம் போன்றவை எதிர்காலத்தில் பலன் அளிக்கப்போவதில்லை என எப்போதும் கருதுபவன் நான். இதன் காரணமாக நான் இது குறித்து பதிலளிக்கவிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த சூழலில் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கின்றார். இதன் காரணமாக நாங்கள் இந்த தருணத்தில் இது குறித்து ஆராயவேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி உள்ள ஒருவர் உள்ளதால் இவ்வாறான விடயங்கள் பற்றி பேசுவது அவசியமற்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேரைத் தவிர்த்து சிறிய குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 77 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 17 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்திருந்தார்.

அதன்படி, விடுதலை செய்யக்கூடிய 17 சந்தேகநபர்களின் பெயர் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். பொசன் பூரணையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களை விடுதலை செய்ய முடியும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

பொசன் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபயவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 93 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைதிகளில் 16 தமிழ் அரசியல் கைதிகளும் மற்றும், 77 சிறு குற்றங்களுடன் தொடர்புடையவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையிலேயே யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதி சூரியகாந்தி ஜெயச்சந்திரனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் பயங்கரவாத தடுப்பு தடைச்சட்டத்தின் கீழ் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த கட்டடங்களை வெளிநாட்டினருக்கு ஒப்படைக்கும் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எதிர்த்து பொது ஆர்ப்பாட்டத்தை நடத்தப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முன்னணி வங்கி தொழிலாளர் சங்கங்களில் ஒன்று ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு விற்கப்பட்ட அரச சொத்துக்களை மீளப் பெறுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கம், நிதி அமைச்சின் கீழ் செலந்திவா என்ற நிறுவனத்தை அமைத்து வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதி வாய்ந்த பல கட்டடங்களை கையகப்படுத்த அண்மைய ஸ்ரீலங்கா அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பொது தபால் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு கட்டடம், இலங்கை வங்கியின் யோர்க் வீதி கட்டடம், ஹில்டன் ஹோட்டல், ஹைட் கட்டடம் மற்றும் கபூர் கட்டடம் ஆகியவற்றை முதல் கட்டமாக கையகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த சங்கத்தின் ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1955ஆம் ஆண்டு இலங்கை வங்கியால் கொள்வனவு செய்யப்பட்ட யோர்க் வீதி கட்டடம், 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை வங்கியின் தலைமை அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கட்டம் வங்கிக்கு சொந்தமானது என்றாலும், இது தொல்பொருள் மதிப்புடன் கூடிய, முழு தேசத்தின் பெருமையின் அடையாளமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கட்டடங்களில் பெரும்பாலானவை காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட பழங்கால கட்டடங்களாகும்.

கொழும்பு கோட்டை பகுதியின் பொருளாதார மையங்களையும், சிறந்த வரலாற்று, கலாச்சார மற்றும் தொல்பொருள் மதிப்புள்ள கட்டடங்களையும் தனியார் துறைக்கு அல்லது சர்வதேச முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை மாற்றியமைக்குமாறு தொழிற்சங்கம் ஸ்ரீலங்கா பிரதமருக்கு அறிவித்துள்ளது.

மேலும், இது குறித்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் ஆகியோருக்கு தெளிவுபடுத்துவதற்கும் இலங்கை வங்கி ஊழியர் சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி, நாட்டின் மதிப்புமிக்க பொதுச் சொத்தை இவ்வாறு சுரண்டுவதற்கும் விற்பனை செய்வதற்கும் அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்று திரளுமாறு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழில் இரகசிய திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்களை புகைப்பட பிடிப்பாளரின் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தும் நடடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வடமராட்சி , கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் உள்ள காரணவாய் மேற்கில் அமைந்துள்ள மணப்பெண் வீட்டில், சுகாதார பிரிவின் அனுமதியின்றி திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.

கட்டுவனை சேர்ந்த மணமகன் குடும்பம் மற்றும் உறவினர்கள் மணப்பெண் வீட்டிற்கு சென்று திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் இரு வீட்டாருமாக 50க்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து குறித்த வீட்டிற்கு பொலிஸார் சென்ற போது திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உறவினர்கள் பலரும் தப்பி ஓடி இருந்தனர். மணமக்கள் வீட்டார் , குருக்கள் , புகைப்பட பிடிப்பாளர்கள் உள்ளிட்ட சிலரை பொலிஸார் மடக்கி வைத்திருந்தனர்.

அத்துடன் அது தொடர்பில் சுகாதார பிரிவினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்திருந்த சுகாதார பிரிவினர் மணமக்கள் குடும்பம் உள்ளிட்ட பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 20 பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன் புகைப்படப்பிடிப்பாளர்களிடம் இருந்து புகைப்படம் மற்றும் காணொளிகளை பெற்று நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர். 


வெசாக் தினத்தை முன்னிட்டு நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) ஆகிய இரு தினங்களுக்கு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதற்கமைய 26 மற்றும் 27 தினங்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட வேண்டியதுடன், சுப்பர் மார்க்கெட்களின் ஊடாக மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக் கூடாது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களுக்கு மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உடுமலை மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாம்களில் வசிக்கும் 110 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

உடுமலை பகுதியில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் 69 பேர் தொற்றால் பீடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேநேரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள இலங்கை ஏதிலிகள் முகாமில் வசிப்பவர்களில் 41 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் குறித்த ஏதிலிகள் முகாம்களில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மனி, பிரித்தானியாவை மீண்டும் தனது அபாய நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அதற்கு காரணம், இந்திய வகை கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளதுதான்!

உண்மையாகவே ஜேர்மனியை விட பிரித்தானியாவில் கொரோனா தொற்று குறைவாகவே உள்ளது. ஆனால், ஜேர்மனியின் நோய்க் கட்டுப்பாட்டு மையமான Robert Koch நிறுவனம், இந்திய வகை கொரோனா வைரஸ் என அழைக்கப்படும் B.1.617.2 வகை திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் அதிகரித்து வருவதால், ஞாயிற்றுக்கிழமை முதல் பிரித்தானியாவும் ஜேர்மனியின் அபாய நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக அறிவித்துள்ளது.

அத்துடன், இந்த வாரம் அறிமுகமாகியுள்ள புதிய விதிகளின்படி, இந்தியா மற்றும் பிரேசில் பொன்ற அதிக அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் தவிர்த்து மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட நிலையில், அவர்கள் ஜேர்மனிக்குள் நுழைவதற்கு கொரோனா பரிசோதனையோ, ஜேர்மனிக்குள் நுழைந்தபின் தனிமைப்படுத்துதலோ தேவையில்லை என ஜேர்மனி அறிவித்துள்ளது.

மேலும், அபாய நாடுகளிலிருந்து வருபவர்கள், கொரோனா பரிசோதனை செய்து, தங்களுக்கு கொரோனா இல்லை என்பதைக் காட்டும் சான்றிதழை சமர்ப்பித்தால் அவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.