WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS -8

தமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைக்குச் செல்ல முடியாது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்தி அனுப்புகியுள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசிடம், அமைச்சிடம் கோரிக்கை முன்வைத்தோம். அதற்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

நாளுக்குநாள் நெருக்கடிகள் அதிகரித்தே செல்கின்றன. பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகள் உருவாக ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில் எமது போக்குவரத்திற்கான பொறிமுறை உருவாக்கப்படாவிட்டால் திங்கள் முதல் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாது என்பதனை கல்வி அமைச்சிற்கும் பெற்றோருக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தூர இடங்களுக்குப் பணிக்குச் செல்லும் ஆசிரியர்  

இது தொடர்பில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடியபோது வடமாகாணத்தில் விசேடமாக தூர இடங்களுக்கு பணிக்குச் செல்லும் ஆசிரியர்களின் நிலை குறித்து பேசியபோது, அவர்கள் பாடசாலை அதிபருக்கு முறைப்படி அறிவிக்குமாறும் அதனை ஏற்றுக்கொள்ளாத அதிபர்கள் தொடர்பாக தமக்கு தகவல் தருமாறு கூறியுள்ளார்.

ஆகையால் தூர இடங்களுக்குப் பணிக்குச் செல்வோர் போக்குவரத்து இடர்ப்பாடு தொடர்பாக அதிபருக்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பெற்றோரிடம் கோரிக்கை

ஆசிரியர்களுக்கான போக்குவரத்துகள் சீராகாவிட்டால் பாடசாலைக்குச் சமூகமளிக்க முடியாத சூழ்நிலையை பெற்றோர்கள் புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்பாது வீண் சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் பெற்றோராகிய நீங்களாவது ஒன்று சேர்ந்து ஒரு மார்க்கத்தை உருவாக்குங்கள்.

ஆசிரியர்களுக்கான போக்குவரத்து பொறிமுறை சீராகவில்லையென்றால் திங்கள் முதல் பாசாலைக்குச் செல்லவேண்டாம் என நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு அனைவரையும் ஒத்துழைக்குமாறு வினயத்துடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.


வாள்களுடன் வீடொன்றினுள் நுழைந்த முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.

கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான 2 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த வீட்டில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதிகாலை முகங்களை மறைத்தவாறு,வாளுகளுடன் வீட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல், வீட்டில் இருந்தவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.

அத்தோடு ஏனையவர்களை வாள் முனையில் அச்சுறுத்தி அவர்கள் அணிந்திருந்த 10 பவுண் நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் குரங்கு அம்மை அச்சம்

பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிரெஞ்சு தேசிய பொதுச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்புகொண்ட அனைவரையும் (சுகாதார வல்லுநர்கள் உட்பட) தடுப்பூசி செலுத்துமாறு பிரான்ஸ் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது.

இதில் 22 வயது முதல் 63 வயதுக்குட்பட்ட ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்

இதன் அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தசைவலி, குளிர், சோர்வு மற்றும் கைகள் மற்றும் முகத்தில் ஒரு சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்த நோய் பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குப் பிறகு சரியாகிவிடும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற நோய்த்தொற்றை எதிர்பார்க்கவில்லை என்றும், நாட்டில் போதுமான தடுப்பூசி இருப்பு இருப்பதாகவும் பிரெஞ்சு சுகாதார தரப்பு கூறியுள்ளது. 


டீசலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாளை (29) நாட்டை வந்தடைய உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு வந்துள்ள கச்சா எண்ணெய்யை கப்பலில் இருந்து இறக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்;

17,077 மெட்ரிக் தொன் டீசல், 1,072 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல், 92 பெட்ரோல் – 37,391 மெட்ரிக் தொன், 95 பெட்ரோல் – 6,142 மெட்ரிக் தொன், JET A1 எரிபொருள் – 2,437 மெட்ரிக் தொன் இருப்பதாக கூறினார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் தொடரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது

கனடாவில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக 4 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவின் கிழக்கு மாகாணங்களான ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் நேற்று கடுமையான புயலுடன், இடி மின்னலோடு பலத்த மழையும் பெய்தது.

இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வரிந்து விழுந்தன.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சுமார் 9 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

புயல், மழை காரணமாக 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன. 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல்வாதிகள் மற்றும் விசுவாசிகளான பதின்மூன்று (17) பேருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சி.பி.ரத்நாயக்க, சனத் நிஷாந்த மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன உள்ளிட்டோருக்கு இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை கொழும்பில் அமைதியான அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை BAR சங்கம் (BASL) ஆதரவுடன் சட்டமா அதிபர் சார்பில் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் விளைவாக கோட்டை நீதவான் இந்த பயணத்தடையை பிறப்பித்துள்ளார்.

இலங்கை முழுவதும் பரவலான அமைதியின்மையை ஏற்படுத்தி அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலி முகத்திடலில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது SLPP விசுவாசிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலேயே இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

4,100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும் என அவர் கூறினார்.

சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருப்பதாகவும், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நிறுவனம் நடேசனுக்கு சொந்தமானது என்றும், ROOD இன்டர்நேஷனல் நிறுவனம், கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கை வங்கிக்கு நிதியை மாற்றியதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அந்தக் கணக்கில் வைப்பு செய்யப்பட்ட பணத்தில் மல்வானையில் உள்ள பிரபல சொத்துக்களை கொள்வனவு செய்ததாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளின்போது அவர்களுக்காக குரல் கொடுக்காத போதும் ரம்புக்கனையில் குடிமகன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழர்களும் சிங்கள மக்களுடன் இணைந்திருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்றில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்குகிழக்கில் தமது காணாமல் போன உறவுகளை தேடி, தாய்மார் ஆயிரத்து ஐநூறு நாட்களாக தொடர்ந்தும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

எனினும் அதற்கு ஆதரவு வழங்கவில்லை என்பதால் தற்போதைய போராட்டங்களுக்கு தமிழர்கள் ஆதரவளிக்காமல் இருக்கப்போவதில்லை என்றும் சாணக்கியன் குறிப்பிட்டார்.

இந்த சம்பவங்களி்ன்போது சிங்கள மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தால் தமிழர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

இந்த அரசாங்கம் தமக்கு வாய்ப்பானவர்களுக்கு பொதுமன்னிப்பு மற்றும் விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளது.

எனவே இதுவரை கோட்டாபய ராஜபக்சவுடன் இதற்காக இணைந்திருந்தவர்கள் இனியாவது விலகிச்செல்லவேண்டும் என்றும சாணக்கியன் குறிப்பிட்டார்.

வடக்குகிழக்கில் இன்றும் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உட்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் இன்றும் வடக்குகிழக்கில் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதாக சாணக்கியன் தெரிவித்தார்.

dit text