WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

சிறப்பு பதிவுகள்

``அனுபவம் பழமையில் புதிது``  12.3.2019 விஜய தொடர்.. 
ஆரம்பம் ..1, 2, 3,4,5,6,7,8,9,10,11

நயினை முதல் றைனைவரை-பாகம்-11
1979 பயங்கரவாதத் தடைச்சட்டமும்,பாகிஸ்தான் காத்திவார் ஓட்டலும்.


இதயம் முழுவதும்,நினைவுகளைச்சுமந்து திரியும் ஒருவர் தன் நண்பரிடமோ, தெரிந்தவர்களிடமோ கூறி நினைவுகளை அசைபோடுவர்.மன ஆறுதல் அடைவர்.சிலர் அவற்றிலுள்ள அனுபவங்களைப் பாடமாக, அல்லது முன்மாதிரியாக இல்லையேல் சுவாரஸ்யத்துக்காகவேனும் கேட்பர்.கருவறை தொடங்கி கல்லறைவரையான வாழ்க்கைப்பயணத்தில் எத்தனையோ நினைவலைகள்,வலிகள்,சோதனைகள்,எல்லாவற்றயும் தாண்டிய சாதனைகள் எல்லா மனிதரிடத்தும் காணப்படுகின்றன. சக மனிதரிடமும் தேங்கிக்கிடக்கின்றன.
கல்லறை மங்கலாகத் தெரிகின்ற காலம்வரையில்...
நாம் பயணித்த பாதைகளின், ஒரு தனிமனிதனின் சுவடுகள் தெரியும்,பட்டறிவுகள் புரியும் ,அவன் சார்ந்த அந்த இனத்தின் சோகங்கள்,பட்ட துன்பங்கள் விரவிக்கிடக்கும்....!
இவற்றினூடாக காலம் சுமந்த சில நினைவுகளை நயினைமுதல் றைனை வரை என்ற நினைவுப்பதிவினூடாக எழுதிவருகின்றேன்...இதைவாசித்து நீங்கள் தரும் ஆரோக்கியமான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகள்...வாருங்கள் பயணிப்போம்....!

1979.இற்றைக்கு சரியாக 40 ஆண்டுகள் பறந்தோடிவிட்டன..அன்று..இலங்கைப் பிரதமராக இருந்த யே.ஆர்,ஜெயவர்தனா அவர்களால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் , பல தமிழ் இளைஞர்களை வேட்டையாடியும்,காணாமல் ஆக்கப்பட்டதும், அல்லது கைதுகளும், மர்மமரணங்களையும் அரங்கேற்றிக்கொண்டிருந்தது.படித்த இளைஞர்கள், குறிவைக்கப்பட்ட காலம்.பண்ணைப் பாலத்தில், இன்பம்,இன்னும் பலர் சித்திரவதைபட்டு இறந்து கிடந்தனர்.
நிலமைஅறிந்த இளைஞர்கள் பெற்றோரின் கதறல்களால் நாட்டைவிட்டுப் புறப்படத்தயாராகினர். யாழ் சமூகம் சிறுகச்சிறுக சேமித்த பணத்தைக்கொண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப முண்டியடித்தது.காணிகள்,வீடுகள்,நகைகள் அறா விலைக்கு விற்கப்பட்டு,முகவர்களின் கல்லாப்பெட்டியை நிரப்பிக்கொண்டிருந்தன.
பயணமுகவர்கள் வேலைவாய்ப்புகள் இருப்பதாக நாடகம் ஆடி, எந்தந்த நாடுகளுக்கு விசா தேவையில்லையோ அங்கெல்லாம்,இளஞர்களை இலகுவாக அனுப்பிக்கொண்டிருந்தனர்.வெளிநாடு எங்காவது போனால் சரி எனப் பறந்துகொண்டிருந்தனர்.மத்தியகிழக்கு நாடுகள்,சில ஐரோப்பிய நாடுகளென ஒவ்வொருவருடைய நிதி நிலமைகளை வைத்து நாடுகள் தெரிவாகின.பயணமுகவர்கள் பணக்கார்களாகினரே தவிர போன இளைஞர்கள் ஒரு சிலரை தவிர தரையிறங்கிய நாடுகளில் பலர் அனாதைகளாகினர்.அப்போதைய காலகட்டத்தில் பாகிஸ்தானுக்கூடாக மத்தியகிழக்கு நாடுகளுக்கு போகும் வாய்ப்புகள் இருந்ததால் பாகிஸ்தானுக்கு பயண்முகவர்கள்...அனுப்ப பாகிஸ்தான் துறைமுகநகரான கராச்சியில் ஒரு மிகப் பழைய சத்திரத்தில் தஞ்சமடைந்தனர் பல இளைஞர்கள்..!கொண்டுவந்த சொற்பப் பணமும் கரைந்துவிட
ஒருவேளை உணவு,கோழிப்பண்ணையில் வேலை ஒருநாளைக்கு 10 ரூபா தான் சம்பளம்...அதற்கும் போட்டி...
கனவுகளோடு வந்த இளஞர்கள்பலர் செய்வதறியாது திகைத்து நின்றனர்...!! அந்த இளஞர்கள் மத்தியில் ஒரு துடிப்பான இளைஞர் ராஜா என்பவர் ஈராக்,ஈரான்,குவைத் என பாகிஸ்தான் எல்லை நாடுகளுக்கு அவ்வப்போது ஒரு சிலரை நாடுகடத்திக்கொண்டிருந்தார்.,.சிலர் போன வேகத்திலேயே, பூனைபோல திரும்பி வந்தனர்.ஏறக்குறைய 100 பேரைத்தாண்டியும் கார்திவார் ஓட்டலுக்கு இளைஞர்கள் வந்து குவிந்தனர். இன்னும் வர இருப்பதாக வந்தவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.

கல்வியைத்தொடரமுடியாமல், வேலைவாய்ப்பின்றி அலைந்த பலரும், அண்ணன் வாழவைப்பான் என வீடுகளில் ஏங்கும் சகோதரிகளின் கனவுகளை,நனவாக்கத்துடித்த இளஞர்கள் எனப் பலரும், பயண்முகவர்கள் விரித்த வலையில் இலகுவாக மாட்டிக்கொண்டு,பல நாடுகளில் அனாதரவாக விடப்பட்டிருந்தார்கள்.

உண்மையும் அதன் நிலையும்
..................................................
அரச உத்தியோகம்,தரும் வருமானம்,எப்படித் தலைகீழாக நின்றாலும் குடும்பச் சுமைகளை தாக்குப்பிடிக்க முடியாது.அதுவும் பல சகோதரிகளின் எதிர்கால வாழ்க்கை, திருமணம் என எண்ணினால் எந்தச் சகோதரனும் வெளிநாடு போய் உழைத்தால்தான்
ஈடுசெய்யமுடியும் என்ற உணர்வும்,உந்தித்தள்ள நானும் அதற்குள் உள்ளிளுக்கப்பட்டு,ஆறுமாத மரதன் ஓட்டத்திற்குப்பின் கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு முகவரின் ஆசைவார்த்தைகள் புடைசூழ அழைத்துவரப்பட்டேன்.10 ஆண்டுகால அரச உத்தியோகத்தையும் விட்டுவிட்டு கனவுகளில் கலந்து குடும்பத்தின் சுமைகளைத்தாங்கி வந்த பலருள் ஒருவனாக நானும்......!

விமானநிலையத்தின் முன்பாக விடைபெறும் நேரம்....சில நட்புகள் கையசைத்து விடைபெற...
வவுனியாவைச்சேர்ந்த பம்பமடுப் பகுதி பயணமுகவர் கைதந்து வழியனுப்ப வந்தார்...
அப்போ உண்மைகளும்,நாட்டு நடப்புகளும் முகவர்கள் ஏமாற்றும் விடயமும் அறிந்த காரணத்தால் ....அவரைப்பார்த்தேன்.அவர் நிலம் பார்த்தார்..
அண்ணே நீங்கள் பல நூறுபேரை அனுப்பிவிட்டதாக கூறினீர்கள் ஆனால் அவர்கள் எவருக்கும் வேலை கிடைக்கவில்லை,பாகிஸ்தானில் கஸ்டப்படுவதாக அறிகிறேன்..என்னையும் இன்னும் மூவரையும் என்னோடு சேர்த்து அங்கு தான் அனுப்புகிறீர்கள்..நானும் வெளிநாடு போகிறேன் என வேலையையும் விட்டு விட்டு இங்கு நிற்கமுடியாத சூழல்... அதனால் போகிறேன்..அடுத்த வாரமோ அடுத்த மாதமோ திரும்பி வரலாம்...அங்குள்ளவர்களின் நிலையை அறிந்து வருவேன்..அதன் பின்னர் சட்டவழிகளைத்தேட வரும்...என்றேன் அவர் நிலத்திலிருந்த பார்வையை விட்டு என்னைப் பார்க்கவேயில்லை..!!புறப்பட்டுவிட்டேன்...!

வானத்தை கிளித்துக்கொண்டு விமானம் பறந்தது.
என்ன ஒரு சுகானுபவம்.அந்தவேளையில் மனிதன் எவனாயினும் வாழ்வில் ஒருதடவையாவது விமானத்தில் பறக்கவேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்துக்கொண்டேன்.
எப்படி கராச்சி போனோம்...
...................................................
பம்பாய் விமானநிலையம் ஊடாகத்தான் பாகிஸ்தான் கராச்சிக்குச் செல்ல வழித்தடம்...
ஆனால் விமானத்துள் ஒரு அறிவித்தல்...

பம்பாய் விமான நிலையத்தில் தீ விபத்து (1979) அதனால் பாகிஸ்தான் போகும் பயணிகள் சிலநாட்கள் நிலமை சீராகும் வரை பம்பாயில் தங்கவேண்டி வரும்..!

முதற்பயணத்திலேயே இடியோசையாக அந்தச்செய்தி...நாம் நால்வரானோம்....
எங்கே..தங்குவது,ஒரு வாரமாவது ஆகும் அடுத்த பயணத்துக்கு..செலவுக்குப்பணம்...?.

அப்போதுதான் அந்த நபர் ........!!

பயணம் தொடரும்....!!
பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள்..!!

நயினை முதல் றைனை வரை பாகம்-10.
.............................................................................
வளம் கொழிக்கும் வன்னி நிலம் அன்றும் எம்மை வரவேற்று அணைத்தது,,,!!!
..........................................................................................
சிந்தனையில் சிறகடிக்கும் நெஞ்சகலா நினைவுகள் சுமந்து ஒரு நெடும்பயண நினைவுத் தூவல்களோடு கடந்த 9 பகுதிவரை நீங்கள் வாசித்து பல இனிமையான, உற்சாகமூட்டும் பின்னுட்டங்களை தந்து உற்சாகப்படுத்தி உள்ளீர்கள்.நன்றிகள்.ஒரு சிறிய இடைவெளிக்குப்பின்னர் மீண்டும் நயினைமுதல் றைனைவரை நெடும் பயணம் தொடர்கிறது....வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம்....!!!

ஆம் 9ம் பாகத்தில் 1971ல் இடம்பெற்ற சேகுவேரா கலவரம் என அழைக்கப்பட்ட சிங்கள ஜேவிபி பற்றியும் அதன் தோற்றம் பற்றியும் பார்த்தோம்...இந்தவேளயில் ....இதை எழுதும் போது இலங்கையில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் அப்பாவிமக்கள் தற்கொலைத்தாக்குதலால் பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடந்தும் இருக்கிறார்கள். இது நீங்கள் அறிந்தசெய்தி, இதில் குறிப்பிடும் படியாக ஒரு செய்தி இருக்கிறது. 1971ல் நடந்த ஜேவிபி கலவரத்தில் நூற்றுக்கு 99.99 வீதம் சிங்கள் இளைஞர்களே ஆயுதமேந்திப் புரட்சி செய்தார்கள்.ராணுவமும் போலீசாரும் சிங்கள் இளைஞர்களையே தேடித்தேடி கைதுசெய்தார்கள்.பலர் கொலையுண்டார்கள்.இந்திய இராணுவத்தின் உதவியுடன் 3 மாதகால மோதல் முடிவுக்கு வந்தது.இலங்கையில் வாழும் மூன்று இனத்து இளைஞர்களும் அரசோடு மோதலில் ஈடுபட்ட வரலாறு இலங்கையில்..... நடந்தேறியிருக்கின்றது,.ஒவ்வொரு மோதலிலும் குறிப்பாக 1971ல் சிங்கள் இளைஞர்கள் மட்டும், 1983 லிருந்து 2009 வரை தமிழ் இளைஞர்களும், தற்போது இஸ்லாமிய இளைஞர்களும் கைதாகியும் கொலையுண்டும் இருக்கின்றார்கள். இந்த மூவின இளைஞர்களினதும் எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள்,கொள்கைகள் வேறுவேறாக இருப்பினும் தீர்வுகளின்றி மாண்டிருக்கின்றார்கள். ...சரி பயணத்துள் வருவோம்....!!

நானும் மைத்துனர் வரதராஜரும்.. எமது கொழும்பு நோக்கிய பயணத்தில் சேகுவேராகலவரத்திலன்று வவுனியாவுக்கு அப்பால் செல்லமுடியவில்லை...இரவு 10,00 மணி தாண்டிவிட்டது...எங்கும் இராணுவ வாகனங்களும்,...போலீசாரின் நடமாட்டம். பேருந்து நிலையத்தில்.. ஒரேயொரு வண்டி. ஒருவர் சொன்னார் தம்பிமார் கலவரம் தொடங்கிவிட்டது...நீங்கள் கொழும்பு போக முடியாது...கடைசி பஸ் பெரியதம்பனை வரை போகிறது...விரும்பினால் வாங்கோ என்றார். எங்களுக்கு பயணம் தடைப்பட்டதில் கவலையாக இருந்தாலும்...பெரியதம்பனை மாமா வீட்டில் தஞ்சம் அடையலாம் என்ற மகிழ்ச்சியில் ஏறிவிட்டோம்...

பெரியதம்பனை வன்னி தந்த வளம் கொழிக்கும் சொர்க்கபூமி .எங்கும் பச்சைபசேலென்ற வயல்வெளிகள், பூத்துக்குலுங்கும் பூஞ்சோலைகள்.துள்ளித்திரியும் புள்ளிமான்கள், தெளிந்த நீரோடைகள்...உணவுப்பஞ்சமென்றால் என்னவென்றேதெரியாத சொர்க்கபூமி...விவசாயத்தை உயிர்மூச்சாகக் கொண்டு வாழும் உழவர் பெருமக்கள்.விவசாயிகள்.

குடியிருப்புத்திட்டத்தின் மூலம் பெரும்பாலும் தீவக மக்களுக்கு 1950-60 களில்...வழங்கப்பட்ட காணிகளை வளம்படுத்தி வளமோடு வாழ்ந்த அந்தக் கிராமத்துக்கு இரவு 12 மணியளவில் நுழைந்தோம்.அங்கு எனது ஐயாமாமி, வரதனின் பெரியம்மா ... அவர்களுக்கு 6 ஆண்பிள்ளைகள்...ஒரு மச்சாள் கூட இல்லை ...2 பேர் அங்கிருந்தார்கள்... எங்களைக்கண்டதும்....கலவரத்தில் பயந்து போயிருந்தவர்கள் எங்களைக் கட்டி்யணைத்து வரவேற்று நீங்கள் எப்படி ..தப்பி வந்தீர்கள்... என வியப்புடன் கேட்டனர். கதையை சொல்லிக்கொண்டிருக்கவே ...பழங்களும், பால் தேனீரும் வந்துவிட்டது..... எமது பயணத்தை யாழிலிருந்து தொடங்கி தம்பனை வரை சொல்லிமுடிக்க இரவு 3 மணியாகிவிட்டது... அயர்ந்து தூங்கிவிட்டோம்...!!

வவுனியாா நகரிலிருந்து மன்னார் வீதியில் 18 மைல் தொலைவில் தான் இந்த பெரிய- தம்பனைக்கிராமம்..
அழகான கிராமம்.விவசாயமே.. உயிர்மூச்ச்சு.மறுநாள்...நாம் வந்ததை அறிந்த ஊரவர்கள் அயலவர்கள் ...கலவர செய்தியறிய வரத்தொடங்கினர்.எமது நெருங்கிய உறவினர்கள் பலர் அங்கு வாழ்ந்தகாலம்...ஐயா அமிர்தலிங்கத்தாரின் தம்பி சீனிவாசகம் ஆசிரியர் எமது உறவினர் பெண்ணை திருமணம் முடித்திருந்தார். அவரும் ஒரு ஆசிரியை..பொழுது போவதே தெரியாமல் ஊர்சுற்றிவந்தோம்.சிலவேளைகளில் ஊரடங்குச்சட்டம்... ஊரே மயான அமைதியாகிவிடும்...

அதிகாலையில் துயிலெழுப்பும் மச்சான் மகேசர் 2 வாளி நிறைய பால்கறந்து.. தலைமாட்டில் வைப்பார்
காச்சும் போது என்ன நறுமணம் கமழும் எவ்வளவு குடிக்கமுடியும்... இதை ஏன் குறிப்பிடுகிறேன் வந்தோரை வாழ வைக்கும் வன்னி நிலம். எங்கள் சொந்த நிலம். இன்றைய நிலை ...நீீங்கள் அறிந்தவைதான்...துயரங்கள் நிலைப்பதில்லைத்தானே....!!

1971 கலவரம் பற்றி இதை வாசிப்பவர்களில் பலர் அப்போது பிறந்திருக்கமாட்டீர்கள்.அல்லது சிறுவர்களாக இருந்திருப்பீர்கள்.இலங்கையின் முதல் சிங்கள் இளைஞர்களின் புரட்சி.3 மாதங்கள்...தொடர்ந்தது...யாழ் முதல் காலிவரை அனைத்துப் போலீஸ் நிலையங்களும் தாக்கப்பட்டன.

3 மாதங்கள் முழு இலங்கையுமே ஸ்தம்பிதமடைந்தது...தொலைத்தொடர்பு, போக்குவரத்து...தபால் சேவை என அனைத்தும் தடைப்பட்ட ....காலம்... கொழும்புக்குப் புறப்பட்ட நானும் மைத்துனர் வரதரும்..எங்கே என எம் பெற்றோருக்கு தெரியாது.. நாங்கள் தம்பனையில் நலமாக இருந்தோம்...அது அவர்களுக்குத் தெரிவிக்க அப்போது வாய்ப்பிருக்கவில்லை...

ஆனால் 2 மாதங்களுக்குப் பிறகு தூதாகச் சென்ற ஒரு அஞ்சல் அட்டை... எமக்கான இறுதிஅஞ்சலியத் தடுத்து நிறுத்தி ..ஊரையே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது... அந்த அஞ்சலட்டைச் செய்தி.....!.

ஆனால்...!!!

பயணம் தொடரும்....!!!!
.

நயினை முதல் றைனை வரை ....9.!
Nayinai To Rheine 

60 ஆண்டுகள் நினைவுகள் சுமந்த நெடும் பயணம்...!
நினைவுகளின் நிழல்கள்.

பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உறவுகளுக்கு நன்றிகள்..!!
தமிழருவி நயினை விஜயன்.

1971 ஏப்ரல் மாதம் 3ம் திகதி... கணேசாவில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான மாணவர்களை நற்பிரசைகளாக உருவாக்க உழைத்த தலைமை ஆசிரியர் திருமிகு.செ.தில்லையம்பலம் அவர்களுக்குப் பிரியாவிடை செய்வதற்கு...பாடசாலைச் சமூகம் இரண்டாகப் பிளவு பட்டு நின்றது...

ஆசிரியர் பரநிருபசிங்கம் அவர்கள் தலைமையில் சில ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பெற்றோரில் ஒரு பிரிவினரும், அதே போல இன்னுமொரு குழுவினரும் .. ஒத்துப்போகாமல் 2 பிரியாவிடை செய்வதென முடிவாயிற்று.

அதே நாளில் இரு பிரிவினரும், ஆயத்தமானார்கள்.ஒரு பிரிவினர் கணேசாவிலும், அடுத்த பிரிவினர் கணாசா விளையாட்டுத்திடலில் மேடையமைத்தும் நடாத்த முற்பட்டனர்.

பிள்ளையார் கோவிலில் பூசை முடித்து, கணேசாவில் முதலாவது பிரியாவிடை நடைபெற்றது. பின்னர் பி.ப.7 மணிபோல் , இளைஞர்கள்் ஆசிரியர் தில்லையம்பலத்தாரை அழைத்து வந்தனர்.மதிப்பளித்தனர்.

அவருக்கு தர்மசங்கடமான நிலை.தான்.

என்னசெய்வது இருபகுதியாரின் மதிப்பளிப்பையும் அவர் ஏற்றுக்கொண்டு விடைபெற்றார்.

அடுத்தநாள்... பிரிவினைக்குக் காரணமாகச் செயற்பட்டார் என ஆசிரியர் பரநிருபசிங்கம் அவர்களை பாடசாலைக்கு வெளியே அனுப்பிவிட்டு கதவைப் பூட்டிவிட்டார்கள்..எனைய ஆசிரியர்களில் சிலர்.

இத்தகவல் பரமசாமி வாத்தியாரின் மகன் மூலம் ஊர்முழுக்கப் பரவ..சில பெற்றோரும் , பெருமளவில் பழைய மாணவர்களும் பாடசாலை முன் குவிந்தனர்..

ஆசிரியர் தவறு செய்திருந்தால் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை எடுக்கலாம், ஆனால் அவரை வெளியில் விட்டு பூட்ட உங்களுக்கு உரிமையில்லை எனவே அவர் கடமையச் செய்ய விடுங்கள் என்பதே அங்கு கூடியோரின் கோரிக்கையாக இருந்தது...

ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை...
நிலமை மோசமடைய ஒரு சில இளைஞர்களை பிடித்து உள்ளுக்குள் கொண்டுபோக முயற்சித்தனர் ஆசிரியர்கள்.. ஆனால் அவர்களால் முடியவில்லை.. பல நேரப் போராட்டத்தின் பின் சீனன் என்றழைக்கப்படும் இரத்தினம் - அவர்களைப் பிடித்துவிட்டார்கள்..

ஆனால் சிறிது நேரத்தில் 4 அடி மதிலால் பாய்ந்து வெளியே வந்துவிட்டார்..இரத்தினம்.!!.
வாத்தியார் ஒடுறான்..... வாத்தியார் ஓடுறான்.....என பிள்ளைகள் கத்தினார்கள்...பாயும் தருணம் குமாரவேலு மாமா ..கொஞ்சம் ...பூசிவிட்டுவந்தவர் அருந்தப்பு...
அவர்தான் அப்பாய்ச்சலை நேரடியாகக் கண்டு நேரஞ்சல் செய்தவர்...பாஞ்சாண்டி சன்னதியான் -(இரத்தினத்தின் தந்தையார் நல்லையர் சன்னதியில்
கடை வைத்திருந்தவர்.)..என்ன பாய்ச்சல் என ஊர் முழுக்கப் பாய்ந்தார்...குமாரவேலர்..

ஊர்காவற்றுறையிலிருந்து பொலிசார் வருவதாக வதந்தி பரவிற்று...ஆனால்
அவர்கள் வரவில்லை..என்ன காரணம்...

ஆனால் சித்தப்பர் தனபாலர் போலீசை விட ஆத்திரத்தோடு எம்மைத் தேடத்தொடங்கி விட்டார்.
என்னையும்,மைத்துனர் வரதனையும் தேடித்தேடி, நயினை சந்தையடியில் கண்டுவிட்டார்..

காற்றோட்டத்துக்காக சட்டையை கழற்றிவிட்டுக் காற்று வாங்கியபடி இருந்த வரதருக்கு, சைக்கிள் பெற்றால் முதுகில் சாத்தல்...அம்மா என்கின்ற ஓலி அகிலமெங்கும் கேட்க...100 மீேற்றரில் முதலாமிடம் பெற்ற வேகத்தோடு ஓடும் எனது காதுகளிளும்
ஓங்கி ஒலிக்க எடுத்தேன் ஓட்டம்...
ஓடினேன் ஓடினேன்...

ஆஸ்பத்திரி முன்னால் வீரகத்தியரின் கடைக்குள் நான் தஞ்சம்..அடையும் வரை ஓடினேன்.....தப்பித்தேன்....!
சித்தப்போ ....

நாம் எந்தத்தப்பும் செய்யவில்லை ஒரேயொரு கேளிவிதான் கேட்டோம்..

ஏன் பரமசாமி வாத்தியரை பிடித்து வெளியில் விட்டீர்கள்...?
நிர்வாக ரீதியாக விசாரிக்கலாமே ...என்பதுதான்.

இருப்பினும், தனபாலர் இரவோடிரவாக தேடுதல் மேற்கொள்ள ...எம்மை கொழும்புக்குப் போகும் படி அம்மா பணிக்க நானும் , வரத மச்சானும் ...அடுத்த நாள் கொழும்பு செல்வதற்காக ... .யாழ் ..பயணமானோம்....

யாழ் பஸ் நிலையம்...இராணுவ வாகனங்களும் போலீஸ் வாகனங்களும்... அல்லோல கல்லோலம்... சிங்கள இளைஞர்களைத் தேடித் தேடிப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் ...எங்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை....! சேகுவேரா கலவரம் என்கிறார்கள்... ஜே.வி.பி கிளர்ச்சிஎன்கிறார்கள்...
ஒன்றும் புரியவில்லை .....

நாங்கள் கொழும்பு செல்வதற்காக வவுனியா பஸ்ஸில் ஏறிவிட்டோம்....பேருந்து போய்கொண்டிருந்தது...ஆனையிறவில் கடும் சோதனை ...

அதுசரி... யார் இந்த சேகுவேரா.? என்ன கிளர்ச்சி...?

சற்றுப்பார்ப்போம் வாருங்கள்.....

1971- ஜே.வி.பி. கிளர்ச்சி….!
................................................

சுதந்திர இலங்கையின் ஆயுதப் புரட்சி ஆரம்பமாகி மனித மற்றும் பொருள் அழிவுக்கு வித்திட்ட தினமாக 1971ம் ஆண்டின் ஏப்ரல் 4ம் திகதி நம் நாட்டு மக்களினால் வேதனையுடன் நினைவு கூரும் ஒரு நாளாக இருக்கின்றது.

இதற்கு முன்னர் இலங்கையில் என்றுமே ஜனநாயக ரீதியில் மக்க ளால் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு எவருமே ஆயுதம் தாங்கி பொலிஸ் நிலையங்களைத் தாக்கி புரட்சி ஒன்றை ஏற்படுத்தவில்லை.

அப்பாவி சிங்கள இளைஞர்களை ஏமாற்றி அவர்களுக்கு இரகசிய மான முறையில் அன்றைய ஜே.வி.பி. இயக்கத்தின் தலைவர் ரொஹன விஜேவீர, கமநாயக்க உட்பட முக்கியத் தலைவர்கள் 5 பாடங்களை கற்பித்து இளைஞர்களின் மனதை மாற்றி ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தி அரசாங்கத்தைக் கவிழ்த்தால் மாத்திரமே சிங்கள இளைஞர்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று கூறி அவர்களை அழிவுப் பாதையில் இட்டுச் சென்றார்கள்.

வேட்டையாடுவதற்கு பயன்படுத்தும் சாதாரண துப்பாக்கிகளையும், வீடுகளில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுகளையும் வைத்து ஜே.வி.பி தலைவர்கள் 1971ம் ஆண்டின் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித் தார்கள்.
ஏப்ரல் 5ம் திகதி இரவு அனைத்து பொலிஸ் நிலையங்களையும் திடீ ரென்று தாக்குவதென்று ஜே.வி.பி தலைவர்கள் போட்டிருந்த சதித் திட்டத்தில் தெய்வாதீனமாக ஒரு சிறு பிழை ஏற்பட்டதனால், இலங்கையில் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் கவிழ்க்கப்படுவது தவிர்க்கப்பட்டது.

ஜே.வி.பி தலைவர்களின் திட்டப்படி 5ம் திகதி இரவு பொலிஸ் நிலை யங்களை தாக்குவதற்கான இரகசிய ஆயத்தங்கள் தயார் நிலையில் இருந்தது. ஆயினும்

ஜே.வி.பி. யின் ஒரு குழுவினர் தவறுதலாக ஏப்ரல் 4ம்.திகதி இரவு வெல்லவாய பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள்.
இந்த செய்தி வெளிவந்த சில நிமிடங்களில் சகல பொலிஸ் நிலையங்களும் இத்தகைய தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தன.

பொலிஸாருக்கு இந்த இரகசியம் தெரிந்துவிட்ட விஷயத்தை அறியாது இருந்த ஜே.வி.பி. குழுக்கள் நாடெங்கிலும் உள்ள பொலிஸ் நிலையங்களை இரவில் தாக்கியபோது பொலிஸாரின் பதில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்கள் ஓடி மறைந்தார்கள்.

அன்றிரவே பொலிஸாரும், இராணுவத்தினரும் நாடெங்கிலும் சுற்றி வளைத்து தேடுதல்களை நடத்தி நூற்றுக்கணக்கான இளைஞர்களை விசாரணையின்றி சுட்டுக் கொன்றார்கள். அதையடுத்து இடையிடையே மறைந்திருந்த ஜே.வி.பி கிளர்ச்சிக்காரர்களை அழித்துவிடுவதற்கு அன்றைய பிரதம மந்திரியான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் கோரிக்கையை அடுத்து இந்திய விமானப்ப டையின் ஹெலிகொப்டர்கள் பேருதவியாக அமைந்தன.

பிரதம மந்திரி ஸ்ரீமாவோ அம்மையார் தாயுள்ளம் கொண்ட கருணை மிக்கவர் அதனால் அவர் காடுகளிலும், வேறிடங்களிலும் தலை மறைவாகியிருந்த சிங்கள இளைஞர்களை வந்து சரணடையுமாறு அறிவித்தார். பிரதம மந்திரியின் வேண்டுகோளுக்கு அமைய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களிலும் இராணுவ முகாம்களிலும் சரணடைந்தனர்.
பின்னர் ஆயுதப் போராட்டத்தின் முக்கிய தலைவர்களுக்கு எதிராக மாத்திரம் குற்றவியல் நீதி ஆணைக்குழு என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு குற்றம் இழைத்தவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஜே.வி.பியின் முக்கியத் தலைவர்களான ரோஹண விஜேவீர, கமநாயக்க போன்றவர்களுக்கு ஆணைக்குழு சிறைத்தண்டனையை விதித்து மற்றவர்களை புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்புமாறு உத்தர விட்டது. இதற்கமைய ஆயிரக்கணக்கானோர் ஓரிரு ஆண்டுகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

புனர் வாழ்வு முகாம்களில் இருந்த போதே இவர்களுக்கு பல்கலைக்கழக பட்டதாரி பரீட்சைகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் அனு மதி அளித்தது.விடுவிக்கப்பட்டவர்கள் இன்று அரசாங்க சேவையிலும், தனியார் துறை யிலும் உயர் பதவிகளை வகித்து வருகிறார்கள். ஜே.வி.பி தலை வர்களின் சுயநலத்தினால் தங்கள் வாழ்வையே அழித்துக்கொள்ள விருந்த இவர்கள், ஜனநாயக பாரம்பரியம் இலங்கையில் கட்டியெ ழுப்பப்பட்டதனால் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்.
1971ம் ஆண்டின் ஜே.வி.பி தலைவர்கள் மேற்கொண்ட இந்த அராஜகத்தினால் எங்கள் நாட்டின் தலையெழுத்தே ஒருவேளை மாற்றம் அடைந்திருக்கலாம்.
ஜே.வி.பி ஆயுதம் தாங்கி போராட்டம் செய்த கால கட்டத்தில் தமிழ் இளைஞர்கள் தங்கள் கல்வியில் மாத்திரமே கவனம் செலுத்தி வந்தார்கள்.
அவர்களுக்கு ஆயுதப் போராட்டம் என்றால் என்ன என்று கூட தெரியாது இருந்தது. ஆயுத கலாசாரத்தை இலங்கையில் அறிமுகம் செய்த பொறுப்பையும் ஜே.வி.பி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

றோகண விஜயவீரா...
வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் தென் மாகாணத்தில் கோட்டேகொட என்னும் மீன்பிடிக் கிராமத்தில் பிரெஞ்சுப் புரட்சி நினைவு நாள் ஒன்றில் (ஜூலை 14) பிறந்தவர் ரோகண. இவரது தந்தை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில்அங்கத்தவராக இருந்தவர். கலாநிதி
எஸ். ஏ. விக்கிரமசிங்கவுடன்நெருங்கிய தோழராக இருந்தவர். உயர் கல்வி._பத்திரிசு லுமும்பா ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் உயர்கல்வி பெற மொஸ்கோ சென்றார். அங்கு மருத்துவத்துடன் மார்க்சியக்கொள்கைகளைத் தீவிரமாகக் கற்க ஆரம்பித்தார். அத்துடன் சோவியத் ஒன்றியத்தில் அக்காலத்தில் நிலவிய சோசலிசம் உண்மையான பொதுவுடைமைக் கொள்கைகளுக்கு ஏற்பானதாக இல்லை என்பதை உணர ஆரம்பித்தார். இதன் காரணமாக அவர் 1964 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் ஒரு மார்க்சியப் புரட்சியாளர். இலங்கையின் தீவிரவாத இயக்கமாக இருந்த ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியைஅமைத்து அதன் தலைவராக இருந்தவர். பொலிவியாவின்புரட்சியாளரான
சே குவேராவின் வழிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றியவர். இவரது கம்யூனிசக் கொள்கைகள் இலங்கையின் வறிய மக்களிடையேயும் இளைஞர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இவர் தலைமையில் மக்கள் விடுதலை முன்னணி இலங்கையில் இரு முறை (1971 புரட்சி, 1987-1989 புரட்சி) புரட்சிகளில் இறங்கி தோல்வி அடைந்தது] இவர் உலப்பனை என்ற இடத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு அடுத்த நாள் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேருந்து வவுனியா நோக்கிப் போய்க்கொண்டிருந்தது....நள்ளிரவு....
தொடர்ந்து பயணம் செய்ய முடியவில்லை..

அப்போ......திக்குத் தெரியாத காட்டில் நாங்கள்.....!!
என்ன நடந்தது...
பயணம் தொடரும்....

பின்னூட்டமிட்டு உற்சாகமூட்டும் உறவுகளுக்கு நன்றிகள்.

உங்கள் நினைவுகளில் உள்ளவற்றையும் பதிவிடுங்கள்..!!நன்றிகள்.

நயினை முதல் றைனைவரை -8

நெடும்பயணத் தொடர்....
Nayinai To Rheine 
60 ஆண்டுகால ..நினைவுகளின் தூறல்கள்.

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு
நன்றிகள்.

கடந்த 7ஆம் அத்தியாயத்தில் சைவப்பாவின் சில நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்த்திருப்பீர்கள்..இன்னும் பல அவருடையவை உண்டு...பின்னர் .பகிர்வோம்...!

நமதூரில் மட்டுமல்ல , எல்லாக்கிராமங்களிலும் பலருக்கு பட்டப்பெயர் வைப்பதில் ஊரவர்கள் மகாகெட்டிக்காரர்கள்..!

எதிர்காலத்தில் உலகம் பூராகவும் நமது சந்ததிகள் பரவும்.. வெவ்வேறு நாடுகளில் வாழ்வார்கள் ஆளாளுக்கு பழகவும் வாய்ப்பில்லை..அறிமுகம் செய்துவைக்க பின்கோர்ட்
தேவைப்படும் என நினைத்தார்களோ ..அது இப்போது எமக்கு வாய்த்துவிட்டது... நாம் அறிமுகம் செய்யும்போது.. இன்னாரின் பேரன், இன்னாரின் பூட்டன்...என க்கூறும்போது தெரியாமல் விழிப்பாரகள்...

ஆனால் உடனே கோர்ட் வேர்டைச் சொன்னதும் ..உடனே ஓ அவரா என்பார்கள்...
இதை அப்போதே உணர்ந்த நம் முன்னோர்கள்...பட்டங்கள் கிடைக்காவிட்டாலும் பட்டப்பெயர்கள் தமதாக்கினார்கள்....

அதை நகைச்சுவை மன்னர்களான மணியான் மாஸ்டரோ அல்லது...கந்தவனம் சந்திரன் அவர்களோ இவ்வாறு பதிவுசெய்தார்கள்...

எம் .சந்ததியினர் கோவிக்கவேணாம்..மகிழலாம் மக்காள். உங்கள் உறவுகள் எங்கிருந்தாலும் உங்களை அடையாளம் காண்பர்.
அவ்வளவுதான்...!

இதோ அந்தப் பாடல்....

நக்கர் ,நரிப்பொன்னர், நாச்சியார் நல்லதொரு
கொக்கர்,குடிலர், கூவெண்ணார், மிக்கபுகழ்
தாங்கும் சைவத்தார் ,தாவடத்தார் என்பர்
பட்டாங்கில் உள்ளபடி....!!

என அக்காலத்திலேயே பாடிப் பதிவு செய்துள்ளனர்...
அது இப்போது எவ்வளவு உதவுகிறது தெரியுமா..

இவரைத்தெரியுமா...அவரைத்தெரியுமா என பத்துப்பேரிடம் கேட்டாலும் புரியாத பரம்பரையை. பின்கோர்ட்டை பாவித்து உ=ம் நாச்சியாற்ற மகன், அல்லது பேரன், அல்லது நரிப்பொன்னரின் பேரன் எனக் கேட்ட உடனேயே .. கணனியின் வேகத்துக்கு முன் ....ஓ அவரா அவரைத்தெரியுமே என்பார்கள்....!!!

இப்படி எமதூரில் மட்டுமல்ல சகல கிராமங்களிலும் பின்கோர்ட் பாவனை நடைமுறையில் உண்டு மக்காள்...!!! தெரிந்தால் சொல்லுங்கோ...!!

வாசிகசாலைகள்.
...................................
நமது குக்கிராமத்துள், வாழ்ந்த நம்முன்னோர்கள்..வட்டாரத்துக்கு ஒரு கோயிலும்,கிராமப் பிரிவுகளில் வாசிகசாலை என அமைத்து எதிர்காலச் சந்ததிகளுக்கு வாசிப்புப்பழக்கத்தை உண்டாக்கினார்கள்.

அந்தவகையில், தெற்குப்பகுதியில் கணேஷா சனசமூகநிலையம்..., கிழக்கே அண்ணா வாசிகசாலை,மத்திய சனசமூக நிலைலையம்,மேற்கே நாவலர் சனசமூகநிலையம்..
இப்போது பிடாரி அம்மன் சனசமூகநிலையம் என உருவாக்கிப் பாடுபட்டனர்.

தினமும், ஈழநாடு, வீரகேசரி,தினகரன் என பத்திரிகைகள் கிடைக்கும்.சில வாசிகசாலைகளில் புத்தகங்கள் இருக்கும் ஆனால் காட்டமாடார்கள்..கொடுத்தால் திரும்புமா...எனப் பயமாக .இருக்கலாம்...மாற்றம் வேண்டும்...!!

நுண்கலை வளர்ச்சி.
...................................................
முத்தமிழும் கொடிகட்டிப்பறந்த காலம் அது..1960களில், பண்டிதர்கள், பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்.பேச்சாளர்கள்..என ஊர்முழுக்க நிரம்பியிருந்தார்கள்..!!

சித்திரையில் பிள்ளயார் திருவிழவுக்குப் பின்னர் ஊரே களைகட்டும்... கொழும்பிலிருந்து உழைப்பாளர்கள் ஊர் வருவர்...இரு தினங்கள் மணிபல்லவ கலாமன்றம் நடாத்தும், மாபெரும் முத்தமிழ் விழா, சயிக்கிள் ஓட்டம், வண்டில் சவாரி, மரதன் ஓட்டம்.. சிறப்பாக நடக்கும்.முத்தமிழும் கொஞ்சிவிளையாடும்.

கற்பில் சிறந்தவள்..கண்ணகியா .... மாதவியா வழக்காடுமன்றம்...

பண்டிதர்கள் குமாரசாமியார், குகதாசன் ஷன்முகநாதபிள்ளை வாத்தியார் ஆகியோர் வாதாட , டாக்டர் அரசர் நீதிபதியாக ஒரே ரகளைதான்....அயலூரிலிருந்தும் , பல்கலைக்கழகங்களிலிருந்தும் பலர் வருவார்கள்..அயல் கிராமங்களிலிருந்தும் மக்கள் குவிவார்கள்...

நாடகப் போட்டி...
..................................
அக்காலத்தில் 1960-70 பதுகளில்...
சொல்லவாவேண்டும். பரமசாமி வாத்தியார்,கணபதிப்பிள்ளை வாத்தியார், காமாட்சி வாத்தியார்,அதிபர் சபாஆனந்தர்,க.இராமனாதன்..ராமையர், அணைந்ததீபம் புகழ் அரசரட்ணம், அடியேன், வேதநாதன் தற்போதைய அறங்காவலர் நாகபூஷணி அம்மன் ஆலயம்.., ரட்ணம்,சீனன், பின்னர் எம்மோடு வெள்ளையத்தேவனாக நடித்ததால் வெள்ளத்தேவன் என்ற ழைக்கப்பட்டார்.விசாகன், ஞானவரோதயன், பரயோகலிங்கம்,ராஜகுலேந்திரன்.மலர், பரமேஸ்வரன், பேரின்பநாயகம்,ஸ்ரீஸ்கந்தராஜா - கங்கை மகன் ஜக்கம்மாவாக சிறப்பாக நடித்திருந்தாள்-ன்.
இன்னும் பலர்..

கனடாஅபிைவிருத்தி ஒன்றிய வெளியீடான
தீபம் 2000 நூலில் சிறப்பாகப் பதிவாக்கப்பட்டுள்ளது.
நாடகத்துறைக்கு அது ஒரு பொற்காலம் எனப் பதிவிட்டுள்ளனர்.

1965 என நினைக்கின்றேன் மணிபல்லவ கலாமன்றம் நடாத்திய நாடகப் போட்டியில் கட்டப்பொம்மனாக நான் நடித்ததைப் பாராட்டி சிறந்த நடிகர் விருது கிடைத்தது.இப்போட்டியில் 10க்கும் மேற்பட்ட நாடகங்கள் இடம்பெற்றிருந்தன.தொடர்ந்து, சங்கிலியன், விடுதலை வீரன், சேரன் செங்குட்டுவன், புறோக்கர் கந்தையா என பல நாடகங்களை-
மேடையேற்றினோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக அன்னை நாகபூஷணியின் தெற்கு வீதியில் அமைந்துள்ள கலையரங்கில்..
எத்தனை எத்தனை கச்சேரிகள்,நடனங்கள்.தவில் மேதை தட்ஷணாமூர்த்தியின் தவில் வாசிப்பை நேரில் கேட்டு மகிழ்ந்தவர்கள் அப்போது வாழ்ந்தவர்கள்..

எங்களுக்கு கலை உணர்வைஊட்டியவள் அன்னை நாகபூஷணி தான்.ஒவ்வொரு திருவிழாவும் கலை விழாத்தான்.

கிருபாமணி அக்காவின் கச்சேரி, பொன்.சுந்தரலிஙகம். மகாஜபுரம் சந்தானம். அம்பலவாணர் மிருதங்கம், நாதஸ்வர மேதைகள் பத்மனாதன், கோவிந்தசாமி, தவில் மேதைகள் தட்ஷணாமூர்த்தி,குமரகுரு, சின்னராசா, கோடையிடி, பழனிவேல்,கானமூர்த்தி பஞ்சமூர்த்தி என 18 மேளக்கூட்டம் அம்மனின் வடக்கு வீதியில் விடிய விடிய சமாதான் போங்கள்..!!!

தெவிட்டாத இன்னிசையை அள்ளித்தந்தார்கள். பிஞ்சு நெஞ்சில் இசைஆர்வத்தை விதைத்தார்கள்..
கோவிந்தசாமியின் நாவுறாளிக்கு பாம்புகள் மயங்கி கோபுரத்திலேறும்..நேரில் பார்த்தோம், நாம் சிறுவர்களும் வீதியிலேயே மயங்கி, ஆம் நித்திரயில் மயங்கி விழ அம்மாவந்து தோளில் அள்ளிப்போட்டுக்கொண்டுபோனவா பலநாட்கள்...

இதானால் ஏற்பட்ட கலைத்தாகத்தால் தானோ என்னவோ ..சங்கீதம் மட்டும் 4 ஆண்டுகள் கற்கமுடிந்தது மட்டுமல்ல , எனது நான்கு பிள்ளைகளும் அம்மன் தந்த ஞானத்தால் ,மிருதங்க வித்துவான்களாகவும், பெண்பிள்ளைகள் , வீணை, பரதம்,வயலின் நடனம் என இப்போ யேர்மனியிலும் ஐரோப்பாவிலும் அறிந்தகலைஞர்களாக ஆசிரியர்களக மிளிர்வது என் அன்னை நாகபூஷணிதந்த வரம் என்றே கருதுகின்றேன்..!!!

சேகுவேரா கலவரம் 1971 ல் நடைபெற்றது...
அதற்கு
முதல் நாள் கணேஷா அதிபராகப் பல ஆண்டுகள் கடமையாற்றி ஓய்வுபெற்ற தில்லையம்பலத்தாரின் பிரியாவிடை வைபவம் இரண்டாக நடைபெற்ற கலவரம்...

ஒன்று பரமசாமி வாத்தியாரும்.பழைய மாணவர்களும், சில பெற்றோரும்...மற்றது ஆசிரியர்களும் சில பெற்றோருமென ஒரே நாளில் கணணேஷாவிலும் , மற்றது விளையாட்டு மைதானத்திலும்... நடைபெற்றது....
அடுத்தநாள் கணேசாஅ முன்றலில் கலவரத்தில் ........
தனபாலர் எமக்கு முதுகில் குறிசுடத் துரத்த ..

5 அடி மதிலுக்கு மேலால.... பிடித்துவைத்திருந்த சீனன் பாய்ந்து வெளியில் வர...பாஞ்சாண்டி சன்னதியான்,
என தண்ணியில் வந்த குமாரவேலர் அருந்தப்புத் தப்பிபோய் மனிஷியோடு .நீயும் பிள்ளைய பெத்துவைத்திருக்கிறியே .....பாஞ்சாண்டி சன்னதியான் ..அட என்ன பாய்ச்சல்....

எனப் பொங்கியெழ

நானும் , கனடா டாக்டர்.வரதராசரும் பெரியதம்பனையில் தஞ்சம்...!!!.

அடுத்து... ஏன் நிக்கிறியள் என்ற மில்லியன் டொலர் கேள்வியோடு தரையிறங்கும்.... கொத்தளா அப்பாவும். முத்தரப்பாவும்...மீன் வாங்கும் படலம்....!!!

தொடரும் பயணம்...

பின்னூடமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள். உங்கள் நினைவுகளையும் பதிவிடுங்கள்.


நயினை முதல் றைனை வரை- 7
நெடும்பயண வரலாற்றுத்தொடர்...
Nayinai To Rheine ( City in Germany)
(Unfogetteble Memories..)

காலங்கள் கடந்தும் நினைவுகளில் நிற்பவை...
.........................................................................................
இத்தொடரை வாசிக்கும் ஊரவர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எனதன்பான நன்றிகள்..உற்சாகமூட்டுகின்றன உங்கள் பதிவுகள்...!

இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன்..
ஒவ்வொரு கிராமத்திலும் நகைச்சுவையாளர்கள் இருப்பார்கள்..
அவர்களின் பணி அளப்பரியது... உலகத்தில் ஒரு மனிதனை சிரிக்க வைப்பது தான் கஷ்டமான காரியம் என்பார்கள்.!

ஊரில்..மகிழ்வான கொண்டாட்டங்களிலும் சரி.. துக்கமான சந்தர்ப்பங்களிலும் சரி இவர்களின் பங்கு அளப்பரியது.!!.
எல்லாமே கடந்துபோகும் வாழ்வில்...மகிழ்வும். துக்கமும் கடந்தே போகும்..மாறி மாறி வாழ்வை நகர்த்திச் செல்லும்.அதற்கு .நகைச்சுவை ஒத்தடம் கொடுக்கும்...

எமது ஊருக்குள் மிகச்சிறந்த விகடகவிகள் வாழ்ந்திருக்கிறார்கள், இன்றும் வாழ்கிறார்கள்.
மைத்துனர் கிருபா இவரும் நகைச்சுவையாளர்.. கேட்டுக்கொண்டதற்கிணங்க,

1971 ல் இடம்பெற்ற றோகண விஜயவீராவின் புரட்சியைப் பார்க்குமுன் ...

ஊருக்குள் நடப்போம்...
வாருங்கள்..சிறிது சிரிப்போம்..!!
ஆம் எமதூரில் நகச்சுவை மன்னர்களாக, சைவத்தார், நயினை மனோரம்மா மீனாட்சி மார்க்கண்டு, அண்மையில் இயற்கை எய்தியவர் எனது சிறிய தாயார், அமரர் இளையதம்பி, மற்றும் மணியான் மாஸ்டர், சந்திரன், தில்லை நடராசா, கந்தையா மாமா.விசாலாட்சியா என் சிறியதாயார்.. .நாகலட்சுமியா..கிருபா, லோகேஸ், அலைக்ஸ் , சுவிஸ் உதயன் ,என நீண்டுகொண்டே போகும்...
இவர்கள் எந்தக் கொண்டாட்டமானாலும் அனைவரையும் சிரிக்க வைத்து மகிழ்வர்...
எல்லோரும் விரும்பி இவர்களை
கொண்டாட்டங்களுக்கு கட்டாயம் அழைப்பர். துக்க வீட்டிலும் துன்ப துயரங்களை மறக்க முயற்சிப்பர்.----

சைவத்தார்.. நாங்கள் கண்ட ஆரம்பநாட்களில், சிறிய குடுமி, வீபூதி பட்டை பார்த்தால் ஒரு புரோகிதர் போலக் காட்சியளிப்பார்...விகடகவி..அதனால் சைவப்பா என எல்லோரும் அன்போடளைப்பர்.

அம்மன் கோவிலடியில் தெற்கே சிறிய தேத்தண்ணிக் கடை..4 வாங்கில்....3 கதிரை..ஒரு கண்ணாடிச் சோக்கேஸ்.. இவ்வளவும் சொத்தாக இருந்தாலும் இவரது நகச்சுவையைப் பருக கடைகுள் நாங்கள் இளைஞர்கள் புகுவோம்...அவரை குழப்பினால்தான் பகிடிகள் பிறக்கும்...

ஒருவன் குடும்பியை பிடித்து அமுக்குவான் ..
ரீ..ரீ எனக் கோர்ன் அடிப்பார்...சிலவேளைகளில் பேசாமல் நிற்பார்...அடிக்கிறதில்லை...

என்ன சைவப்பா இன்று கோண் அடிக்குதில்லை..

பற்றி வீக்கடா தம்பி என்பார்..

திருவிழாக்காலங்களில் மட்டும் தான் அங்கு போலீஸ் நிலையம் இருக்கும்..
அன்று..
யாரோ , சைவத்தார் கறுப்பு.விற்பதாக போட்டுக்கொடுத்துவிட்டார்கள்.... அப்போ சாராயத்துக்கு மறுபெயர்..கறுப்பு...!

ஒரு போலீஸ் உத்தியோகத்தர் வந்து..
ஏங் சைவம் நீங்க கறுப்பு விக்கிறது தானே ..

சைவம்.- கறுப்பு விக்கேலாதைய்யா ..என சட்டிக்கறுப்பைக் காட்டுகிறார்...

போலிசுக்கு கோபம்..
அதிங் நாங் சொல்லுறதிங் சாராயம் விக்கிறாங் தானே .. மாத்தையா வரட்டாங் உடனே வாறது....

சைவம்...-
ஐயா கடையில பலகாரங்கள் எல்லாம் சுட்டுவைத்திருக்கிறன்.. பக்கத்துப் பொடியன் எடுத்துடுவான் எண்ணிவைத்துவிட்டுத் தான் வரவேணும்,...நான் வடை, வாய்ப்பன், தோசை எல்லாத்தையும் டக் டக் என்று எண்ணுகிறேன்
நீங்க சும்மாதானே நிற்கப்போறியள்..
இந்த சுண்டலை எண்ணுங்கோவன்..
என்று சுண்டல் சட்டியக் காட்டினார்...

எப்படியிருக்கும் அவருக்கு..

அதிங் நாங் சுண்டல் கணங்கரண்டத-..பளையாங்..யண்ட

அவனுக்குச் சிரிப்பும், கோவமும்..

அதிங் எல்லாங் நீங்க தான் எண்ணிபோட்டு வாறது...
நாங் போறான்..சிரித்துக்கொண்டே போய்விட்டான்...

நகச்சுவையாளர்களுக்கு துணிவும், நுண்ணறிவும் எதையும்..உடனே பற்றிக்கொள்ளும்..கற்பூரப்புத்தியும் இருந்தால் தான் அவர்களுக்கு மற்றவர்களை உடனே சிரிக்க வைக்கமுடியும்.. அந்த வகையில் சைவத்தார் கைதேர்ந்தவர்..!!.

ஊரவர்கள் அனைவருமே நகைச்சுவையை விரும்புபவர்களாகவும் மற்றவர்களைச் சிரிக்கவைக்கக் கூடியவர்களாகவும் இன்று உலகம் பூராகவும் பலர்.. இருக்கிறார்கள்..

ஒரு நாள்.. சைவத்தார் மிக அழகான.. மிக விலையுயர்ந்த லேஞ்சி என்போமே..கைக்குட்டை ஒன்றை வைத்துக்கொண்டு ..எங்களுக்கு துடைத்துக்காட்டுவதும்,, விரிச்சுக்காட்டு வதுமாக 3 நாட்கள் பெருமையோடு திரிந்தார்...உண்மையில் அக்காலத்தில் அது 200 ரூபாய்கள் பெறும்....!! பெரும் பணக்காரர்கள் தான் வைத்திருப்பர்..
4 ம் நாள்
என்ன சைவப்பா லேஞ்சியைக் காணவில்லை...என்றோம்..

அதுவா.. கொடுத்திட்டன்...
எவ்வளவுக்குக் கொடுத்தியள்..
சைவம்.- எடுத்த விலைக்கே கொடுத்திட்டன்..
அதேன் உங்களுக்கு..என்றார்...

அப்போதுதான் புரிந்தது.. இவர் கடைக்குவந்த யாரிடமோ சுட்டதை ..இவரிடமிருந்து யாரோ சுட்டுக்கொண்டு போய்விட்டார்கள்...என்று...

அது எடுத்தவிலை தானே-...

யாழ்ப்பாணம் போய் வரும் ஊரவர்கள் ..ஊருக்குள் வந்ததும்..இவரது கடையில் தேனீர் அருந்தி..ஊர்ப்புதினங்களை அறிந்துவிட்டுத்தான்...வீட்டுக்குச் செல்வார்கள்..

கூட்டுப்பிரர்த்தனை முடிய ..அவர்கடைக்குள் புகுந்தோம்..இன்று எப்படி இவரைக் கலாய்ப்பது..?

நண்பன் ஒருவன்.- என்ன சைவப்பா இவ்வளவு பிரபலமான கடைக்குப் பெயர் வைக்கவில்லையா..

சைவம்.- ஏன் இல்லை.. இங்க வாங்கடா,, அண்ணாந்து பாருங்க..
என்ன தெரியுது...
நாங்க.-
வெள்ளி தெரியுது..

சைவம்.- அதுதாண்டா பெயர் வெள்ளிவிலாஸ் புரியுதா போங்கடா நீங்களும் உங்கட கேள்வியளும்..!

நாம் அன்று கேட்ட சைவப்பாவின் பல நகைச்சுவைகளை வடிவேலு கூடப் பல படங்களில்...கூறியிருக்கிறார்...

உ+ம்.

இவர் தோசைக்கு மாக்கரைத்துவைத்துவிட்டு முன்னுக்கு வியாபாரம் செய்யும்போது..ஒரு கேப்ப மாடு ..பின்னால் வந்து ..குடிச்சுக்கொண்டிருந்த சத்தம் கேட்டுப் போய்ப்பார்கிறார் அரைவாசியைக் குடித்துவிட்டது.. வெளியில் தெரிஞ்சா தோசை விக்காது..
உடனே மாட்டின்ர ..வாயைக்கழுவிப்போட்டு இந்தவிசயம் நம்முக்குள இருக்கட்டும்..யாருக்கும் தெரியப்படாது..என்ன.. போ போ எனக் கலைத்துவிட்டு வர
என்ன சைவப்பா உள்ள யாரு..

அது...பக்கத்துவீட்டுப் பொடியன் எனச் சமாளித்தார்.
இதே நகைச்சுவையை நகைச்சுவை நடிகர்..வடிவேலு ஒரு பெண்ணோடு சொல்வார்..

ஆயிரக்கணக்கான நகைச்சுவைத் துணுக்குகள் ஊர்மக்களையும்...அயலவர்களையும் மக்களை மகிழ்வித்தன..என்றால் மிகையில்லை..!!

இன்னுமொன்று..

55 ஆண்டுகளுக்கு முன்..
...........................................
என்ன சைவப்பா ..டீ க்கு 10 சதம் எடுக்குறீங்க
இலையான் .. -ஈ-.. கிடக்கு ...

10 சதத்திற்கு கோழியா போட்டுத்தருவினம் குடித்திட்டுப் போங்கப்பா..
இதே பகிடியை வடிவேலும் ஒரு படத்தில் சொல்வார்...
துணுக்குகள்..நிறைய
உண்டு...தருவேன்...!!

சிரிப்பு என்பதும், நகைச்சுவை உணர்வையும்..
மனிதனுக்கு மட்டுமே இறைவன் தந்திருக்கின்றான்...

எனவே இடுக்கண்வருங்கால்..சிரிப்போம்..சிந்திப்போம்
வாழ்க்கை இனிமையாய் நகரும்...!!!

பயணம்..தொடரும்...!!

அடுத்த பயணத்தில் 1971 ல் சேகுவேரா கலவரம் பற்றிப் பார்ப்போம்..

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு
நன்றிகள்..சந்திப்போம்.

நயினை முதல் றைனை வரை- 6

நெடும் பயண நினைவுத்தொடர்..
வாருங்கள் இணைந்து பயணிப்போம்...!!

1964 ல் தியாகர் திருநாவுக்கரசு எனும் துடிப்பான இளைஞர் நயினை அரச வைத்திய சாலையில் பணிக்காக வருகிறார்.என் தாய் மாமன்.ஆச்சியைப்போல நிறமும் , அழகாகவும் இருப்பார்.

அவர் தான் என்ன பாடுபட்டு வைத்தியனானேன் என கதை கதையாகச் சொல்வார்.ஆங்கிலம்,சிங்களம் என அசத்துவார்.குறுகிய காலத்திலேயே பிரபல மானார்.அரசு டாக்குத்தரிட்ட போய் ஒரு ஊசி போட்டாத்தான் இது மாறும் என மக்கள் பேசிக்கொள்வார்கள்.

அனைவருமே உறவினர்கள் தானே... ஒரு பிள்ளையைப்போல ஊர்மக்களைப் பார்த்தவர். அயல் கிராமங்களில்.... இருந்து கூட மக்கள் படையெடுக்கத்தொடங்கிவிட்டனர். கைராசியான வைத்தியர் என அறியப்பட்டார்.

இவரும், விஞான ஆசிரியர் சண்முகநாதபிள்ளை அவர்களும் இணைந்து மகாவித்தியாலயத்தில் எலியை வெட்டி எங்களுக்கு பல பரிசோதனைகளை பாடங்களை நிகழ்த்தியவர்கள்..!!

பண்டிதர் குமாரசாமி வாத்தியாரின் மகன் சிவகுமார் எனது வகுப்புத்தோழன், ஒரு தடவை பெற்றோமக்ஸ் கொழுத்தும்போது முகம் நெஞ்சு எனத் தீப்பிடித்து படுகாயங்களுக்கு உள்ளானான். அவர்கள் யாழ்.பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுபோக முயற்சித்தார்கள்.டொக்டர்.அரசர் விடவில்லை நான் குணமாக்கிக் காட்டுகிறேன் என சபதம் எடுத்து பூரண குணமாக்கினார்.
சிவகுமாரும் இப்போ அமெரிக்காவில் வைத்தியராக உள்ளார்.

எந்தச் சேவையாக இருந்தாலும் அர்ப்பணிப்போடு செய்வதென்பது...வரம். அக்காலத்தில் அவசர சேவைப் படகொன்றையும் ஒழுங்குசெய்து மக்களுக்கு உதவினார்.இன்று ஒரு சிறந்த சட்டத்தரணியாகவும்,பொதுப்பணியிலும், துணைவியாரை இழந்தபோதும்..ஈடுபட்டுவருகிறார். என்னை மடியில் வைத்து ஆங்கிலம் சொல்லித்தந்தவர்.அது எனக்குப் பிற்காலத்தில் மிகவும் உதவியது.

பிரபலமாக இருப்பவர்களை, நகைச்சுவையாளர்கள் பெயரில் துணுக்குகளை இளையவர்கள் தயாரிப்பர்..
சுவையாக இருக்கும்..
அரசரும் தப்பவில்லை..

அரசர் நோயாளியிடம்..,-.
முட்டை கொண்டுவந்தனியா..

நோயாளி .- இல்லைஐயா ..
அரச்ர் .- ஏன்..
கோழி முட்டை இடவில்லை ..

அரசர்.- கோழி சாகவில்லைதானே கோழியை கொண்டுவந்திருக்காலாமே..

நோயாளி.......??????

கற்பனையாக விகடம் பேசுவதில் பிரபலமானவர்கள் ஊரில் பலர் இருந்தார்கள் இருக்கிறார்கள் அவர்களின் அட்டகாசங்களை பின்னர் பார்ப்போம்...!!

நயினை மகாவித்தியாலயம்...
எம்மை புடம் போட்ட கல்விச்சாலை...
படிப்பு, கலைகள்,விளையாட்டு..என பூத்துக்குலுங்கிய காலங்கள்...!

உதைபந்தாட்டத்துக்கு என ஒரேயொரு பந்து.அதுவும் ஒட்டு ஒட்டு என பந்துமுழுக்க ஒட்டி இருக்கும் அதைக்கூடத் தரமாட்டார்கள்...டெனிஸ்போல்தான் பல ஆண்டுகள்..உதவின..

அமரர்..வடிவேலுவின் புதிய சாதனை..
.......................................................................

1966 என நினைக்கின்றேன் மகாவித்தியாலய மாணவன் நாகமுத்து வடிவேலு யாழ் மாவட்டத்தில் 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைக்கின்றான்... 100 x 4 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் முதலாவதாகா நாங்கள்...
நானும், வடிவேலு, வேதம் ,விசாகன்...அசைக்கமுடியாத அஞ்சலோட்ட வீரர்களாக தீவுப்ப்பகுதி வட்டார விளையாட்டுப் போட்டிகளிலும் யாழ் மாவட்டப் போட்டிகளிலும் கலக்கினோம்.. பாடசாலைக்குப் பெருமை சேர்த்தோம்,.!

இந்நினைவுப்பதிவுகளை எழுதும் போது எமது வயதை ஒத்தவர்களும், 3 அல்லது 4 வயது கூடியவர்களும் குறைந்தவர்களும் எம்மோடு பயணிக்கிறார்கள் எனக் கொள்ளல் வேண்டும்...

அனைவரையும் நினைவில் கொள்ளவில்லை.. வாசிப்பவர்கள் பின்னூட்டத்தில் தாருங்கள்..

இருப்பினும், ஜெகநாதன் பன்முக விளையாட்டுவீரன், உதை பந்தாட்டம், கிரிக்கற்,உயரம் பாய்தல்,சைக்கிள் ஓட்டம்,என கலக்கியவர்.மிக உயரமானவர்.இவரின் உடலமைப்பு,விளையாடும் போது.. மிக ஸ்டையிலாக இருக்கும்...!மற்றும்
சந்திரசேகரம்,பின்னாளில் கிராமசேவையாளர். நாகலிங்கம்,இராசன், ஜெயசிவதாசன், தவகுகதாசலிங்கம்... உதயபாரதலிங்கம்,
ராசகுலேந்திரன். இரத்தினம்..சீனன், தவம்,.குலேந்திரராசா..இன்னும் இன்னும்....
இது நிற்க

பெரியம்மா வீடு வாசிகசாலை எனக் கூறியிருந்தேன் அல்லவா.....ஆம் உண்மைதான். அனைத்து நாவல்களும்,,சஞ்சிகைகள் பத்திரிகைகள் என வாசிக்குமிடமாக திகழ்ந்தது...

அன்றும் வழமைபோல ..அடுப்பில் பிட்டுப்பானை தானாக அவிய கௌரிஅக்காதான் அன்றைய குசினி மேலாளர்..பிட்டு அவியட்டும் என நினைத்து..புத்தக வாசிப்பில் மூழ்கிவிட்டார்... குசினியின் ஒரு மூலையால் தீப்பிடித்தது தெரியாமல் , அதை விட கடல்புறா நாவலில் கவனம் செல்ல வந்தியத் தேவனும் பூங்குழலியும் படும் பாடு கவனத்தில் சென்றதோ ..தெரியவில்லை பக்கத்துவீட்டு நடராசாமாமி ஓடிவந்து குசினி எரியுது என்ன செய்யிறியள் ...எனக் கத்தும் போது தான் ...பார்க்கிறார்கள்...

தீயை கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்..
பிறகென்ன .. தோட்டத்துக்குப் போய்விட்டு
வந்த பெரியம்மாவும், பெரிஐயாவும்...பசியோடு
சன்னதமாட .. அர்ச்சனை , அபிசேகங்கள்
தான் போங்கள்...!!

தம்மை மறந்து வாசிப்பது.. சிறப்பு ஆனால் பிட்டு அவித்ததன் பின்பு வாசிப்பது அதனிலும் சிறப்பு ..

பெரிஐயா கணபதிப்பிள்ளயர் பொறுமையான நாணயமான விவசாயி.றக்குவானையில் கடை..அண்ணர் ஷண்முகரட்ணம் அவர்களூம் கஜு தோட்டத்தில் முகாமையாளர் ..அவரை காண்பதரிது.. எப்போதாவது ஊர்வருவார்...காங்கேசண்ணர் சிறுவனாக இருக்கும் போதே , அரசருடன் சேர்ந்து வைத்தியசாலைக்குப் போவார்..இன்று லண்டனில் பிரபலமான இதய அறுவைச் சிகிச்சை நிபுணர்...!!

நினைப்பது நினைத்தபடியே ஆகும் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்...

அதுசரி சேகுவேரா கலவரத்துக்கும்
எங்களுக்கும் என்ன தொடர்பு....?

கனடா வரதராசாரும், நானும் பெரியதம்பனையில் அடைக்கலமானது ஏன்..?

பயணம் தொடரும்...

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள்..

நயினை முதல் றைனை வரை...5
Nayinai to Rheine (Germany)
Unfogettable Memories
.........................................................................................
ஒரு சாதாரணனின் நெடும் பயணம்...கிராமம், பட்டினம். நகரம்,கண்டங்கள் கடந்த அனுபவத்தொடர்...நீங்களும் என்னோடு ....!!..

நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு- குறள்..

தண்ணீரில் உண்டாகும் குமிழி,வெட்டும் மின்னல், அதி காலை இருட்டு,இவையெல்லாம் சட்டென மறைந்து போக எவ்வளவு நேரமாகும்...மனித வாழ்வும் அத்தகையதே...

நேற்று நன்றாகப் பேசிக்கொண்டிருந்தவர், விளையாடியவர், படித்தவர் இன்று மறைந்துவிட்டார் என்கிறோம்...இது ஒரு வீட்டில், ஒரு தெருவில் ஒரு ஊரில் நடப்பதில்லை உலகெங்குமே இதே தான்...

நமக்கு அறிவு தெரிந்ததிலிருந்து...இன்றுவரை , எவ்வளவு பேரை இழந்திருக்கின்றோம்.. அதுவும் எம்மோடு படித்தவர்கள், அயலவர், பெரியவர்கள் எமக்கு வழிகாட்டிய ஆசிரியப்பெருந்தகைகள்,உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என எத்தனை ஆயிரம் பேரை இழந்திருக்கின்றோம்...

இவர்களில் எத்தனை பேர் நம் இதயங்களில் வாழ்கிறார்கள்..தனக்கென வாழாது இம்மியேனும் இனம், மொழி, கலை, சமுதாயம், ஊர் முன்னேற்றம் இளையோர்பால் அக்கறை ,என வாழ்ந்தவர்கள் தானே நினைவுகளில் நிழலாடுகிறார்கள்.. ஒரு ஊருக்குள் எத்தனை பேர்...?

ஆம் ,எனது கிராமம், மிக அழகானது மட்டுமல்ல, அறிஞர்களையும், புலவர்களையும், பண்டிதர்களையும்,பிரபலமான காவல் துறை அதிகாரிகள்,பேராசிரியர்கள் ...அப்பாடா எழுதி மாளாது.. ஆயிரம் ஆயிரம்...
ஒரு உண்மை ..5 மைல் நீளமும், 2மைல் அகலமும் கொண்ட சிறியதொரு பிரதேசத்தில், 17 வணக்கத்தலங்கள், ஒவ்வொரு வீட்டிலும் ..அரச உத்தியோகத்தர்கள், கல்விமான்கள்...கலைஞர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்றால்...எனது ஊர் என்பது அடியேனின் கருத்து...

சரி ... மகாவித்தியாலயம் வந்தாயிற்று...

அன்று ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள்,எங்கோ புது உலகில் சஞ்சரிப்பதுபோல்...புதிய நண்பர்கள்...ஆசிரியர்கள்..ஆம் நாங்கள் கொடுத்துவைத்தவர்கள்.. எத்தனை பண்டிதர்களிடம் பாடம் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது.பண்டிதர்கள் குமாரசாமி, குகதாசன், கந்தசாமி, மற்றும். ஆசிரியர்கள் கமலாதேவி ,புனிதக்கா இவ்வாரம் லண்டனில் இயற்கை எய்தியவர், மற்றும் பரமேஸ்வரி அக்கா, விந்தா என மாணவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட கப்டன் வானதியின் அப்பா விஞ்ஞான ஆசிரியர் சண்முகநாதபிள்ளை, தர்மலிங்கம் ஆசிரியர்
அன்னக்கா, சோமு வாத்த்தியார், என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.

இவர்கள் ஏன் நினைவுகளில் வலம் வருகிறார்கள்..
இவர்களும் இன்னும் பலரும் உண்மையாக , திறந்தமனதோடு, ஒரு சமுதாயம், உருவாக உழைத்தவர்கள். எங்களால் மாணவர்களால்..வணங்கப்பட்டவர்கள்.அதனால் தான்...

7ம் வகுப்பு என நினைக்கின்றேன்...கணித பாடம்..
எனது அக்கா பெரியம்மாவின் மகள், பயிற்றப்பட்ட கணித ஆசிரியை திலகவதி சதாசிவம்,,வகுப்புக்கு வருகிறார்...வணக்கம் என ஆரம்பித்து..பாடத்தை ஆரம்பிக்கிறார்..

முதலாவது கேள்விக் கணை ஒன்றை விடுகிறார்..
ஒரு முக்கோணத்தின் 3 கோணங்களின் கூட்டுத்தொகை எவ்வளவு..
முக்கோணமா ..முன்பு கேட்டதேயில்லையே
நான் தான் வகுப்பு மாணவத்தலைவன். விஜயன் போய் ஒரு கம்பு முறித்துவா.. கொடுத்தாயிற்று..

பிறகென்ன அனைவருக்கும் பூசை,,தம்பி எனக்கு டபிள்..
ஆனால் அந்த அடியோடு ..நாங்கள் கணிதபாடத்தில் மிகச்சிறந்த பெறுபேறுகளை எடுக்க மிகவும் பாடுபட்டுக் கற்பித்தார்.அன்றைய மாணவர்களில் சிலர்..வேதநாதன் ,தயன், காசி, வடிவேலு, ராஜகோபால், சிவகுமார்,பசுபதி, பூபதி..நாகலட்சுமி, புனிதமலர், வசந்தி, இன்னும் பலர் லோகனாதன்.. இவன் அக்காலத்திலேயே இறந்து போனான்...!!

நினைவுகள் கொஞ்சமா..

நாகமணிப்புலவர் நயினை மான்மியம் தந்த பெரும் புலவர்..எனது பாட்டனார் கவிஞர் தியாகர் -நடுவிலாரின் உடன்பிறந்த சகோதரர்.இவரின் பாடல்கள் அக்காலத்தில் இலக்கியப் பாடத்திற்கு அரசால் இணைத்துக்கொள்ளப்பட்ட பெருமை வாய்ந்தது.

ஊரில் பல வாசிக சாலைகள் இருந்தாலும் எனக்கு பெரியம்மா வீடுதான் மிகச்சிறந்த வாசிகசாலையாகவும் . அறிவூட்டும் சோலையாகவும் இருந்தது..கௌரி அக்கா, சோதிஅக்கா பரமேசன்,காங்கேசன் அண்ணர் திலகவதி அக்கா என
அனைவருமே எப்போ பார்த்தாலும் புத்தகமும் கையும் தான்...எங்களையும் வாசி வாசி என தூண்டுவதும்...பாடஞ்சொல்லித்தருவதுமென..
என்னை அணைத்தார்கள்.கல்விக்கண் திறந்தார்கள்....மறக்கமுடியாத தருணங்கள்

ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள்,குமுதம், மல்லிகை இலங்கை சஞ்சிகைகள்..பத்திரிகைகள் என அனைத்தும் அங்கு கிடைக்கும் வாசிக்கலாம்...

அன்று மதியம் அவர்கள் வீட்டு குசினியில் தீப்பிடித்து எரிய யார் காரணம்...

1964 ல் நயினையைச் சேர்ந்த ஒரு இளைஞன் வைத்தியகலாநிதி பட்டம் பெற்று, இலங்கையின் பல பாகங்களில் சேவையாற்றி, நான் பிறந்த மண்ணுக்குச் சேவையாற்றவேண்டும் எனும் பேராவலில் ஊர் வருகின்றார் ..
யார் அவர்...?
இன்று 160 க்கும் மெற்பட்ட ஊரவர்கள் வைத்தியர்களாகியும் ஒருவர்கூட அங்கு சேவையாற்ற முன்வருவதில்லயாமே...

பாருங்கள் இப்பொதுள்ள வசதிகளையும், அப்போது 55 ஆண்டுகளுக்கு முன்னிருந்த வசதிகளோடு..ஒருவர் ஊர்மக்களுக்குத் தொண்டாற்ற வந்தமை ...வரம்..!!

வருவார்...!!
நினைவுப் பயணம் தொடரும்.....!!!

பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு..நன்றிகள்..என் சம காலத்து நண்பர்களும் நினைவுகளை பகிருங்கள்.

நயினைமுதல் றைனை வரை- 4.
...............................................................
Nayinai to Rheine (Germany)
60 ஆண்டுகளுக்குமுன்னிருந்து நினைவுகளின் நிழல்கள்... தமிழருவி நயினை விஜயன்.
.......................................................................................

பரீட்சை நெருங்கும் காலங்களில் அதிகாலை 4. மணிக்கு எழுந்து படிக்கும் பழக்கம் உண்டு.அப்போதெல்லாம் மண்நெய் விளக்குத் தான்.

படிக்கத்தொடங்கும் போது சைக்கிள் ஒன்று தினமும் போகும்..ஆனால் அதோடு சேர்ந்து இனிமையான பாட்டும் கேட்கும்... யாரப்பா இது...
இன்று கையும் மெய்யுமாய் பிடிக்கவேண்டியது தான்... பாட்டுக்கேட்கிறது பாய்ந்து பிடித்தேன்... அதிகாலைப்பொழுது... கிட்டப் போய் முகத்தைப் பார்க்கின்றேன் ...என்ன மச்சான்...நான் தான் மச்சான்... என்ற குரல்..
அட எங்கள் நவரத்தினத்தார்.. என்ன பாட்டும் பயனுமாய்.. தோட்டத்துக்குப் போறன் மச்சான் தண்ணீர் இறைச்சுப்போட்டு பள்ளிக்கூடம் போகவேண்டுமல்லவா.. சரி சரி நன்றாகப் பாடுகிறீர்கள்.. என்றேன்..

ஒரு மனிதன் தான் என்னவாக வரவேண்டுமென்று தினமும் எண்ணுகின்றானோ, செயற்படுகின்றானோ எதிர்காலத்தில் அப்படியே ஆகின்றான் என்பர். பின்னாளில் இலங்கையில் இசைத்துறைக்கு கணிசமான பங்காற்றிய இசைப்பேராசிரியர் டாக்டர் மு.நவரட்ணம் அவர்கள் தான் அன்று சைக்கிளில் பாடிச்சென்றவர்....பாடசாலையிலும், சரி வழிப்போக்கிலும் சரி ,எங்கும் எப்போதும் பாட்டாகவே அவரது வாய் முணுமுணுக்கும்...ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களில் அவரும் ஒருவர்... அன்று அப்படி அறியப்பட்டார்...

வருடந்தோறும் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் செம்மணத்தம்புலம்..விநாயகர் வீதி..
.........................................................................................
பிள்ளையார் கோவிலடி,பெருங்குளம், கணேசா , 6.7.8.ம் வட்டாரங்களிலுள்ள இந்தப் பிராந்தியமும் சுற்றாடலும் செம்மணத்தம்புலம் என அழைக்கப்பட்டது..செம்மணத்தம்புலம் வீரகத்திப்பிள்ளையார் என்றே அன்றிலிருந்து அவருக்குப் பெயர். அவரைக் குடியமர்த்திய பெருமை எனது முப்பாட்டன் மணியகாரர் கதிரேசரையே சாரும்.இராமேஸ்வரத்துக்கு சிலைகளைக் கொண்டுவரப் போனவர் அக்கோவிலுக்கு ஊரின் மேற்குப்பகுதியிலுள்ள 50 பரப்புக்கு மேற்பட்ட காணியை எழுதிவிட்டுவந்து குத்தகை அனுப்பிக்கொண்டிருந்தாராம்.இன்று அது மாதிவளவு பக்கம்.

இப்போ 12 வயதில் நான்.....என்னோடு இப்போ அவ்வடாரச் சிறுவர்களும் இணைந்துகொள்கிறார்கள்.கருணாநிதி..
சந்திரமெளலி,நாதன், நடசிகாமணி, பஞ்சு, ராசகுலேந்திரன், யோகலிங்கம், சோதிராசா, கங்கை மகன் இன்னும் பலர்....
கருணா இப்ப கனடாவில் .அவரின் துடிப்பான நெறியாள்கையில் விளையாட்டுப்போட்டி...பிள்ளையார் கோவில் வீதி தான் ஓட்ட மைதானம்..

100 மீற்றர், 200 மீற்றர் . இன்னும் தடையோட்டம்..கொடியெடுத்தல் , கிளித்தட்டு என நீண்டுசெல்லும்..இவ்விளையாட்டுப் போட்டியில் நிச்சயமாகப் பங்கேற்பேன், ஏனென்றால் பரிசாகக் கிடைக்கும் கொப்பிகளும்,பென்சில்களும் தான் காரணம்..எனக்கு
இங்கு கிடைத்தால்தான் உண்டு.இல்லையேல் ,அம்மா எனக்காக ஒதுக்கிய சிவப்பியும், கறுப்பியும் கோழிகள்.. முட்டையிட்டால் தானுண்டு..

எல்லோருக்கும் தெரியும், 100, 200 மீற்றர்களில் 1ம் இடம் எனக்குத்தான்.அது தொடர்ந்து யாழ் ஸ்டான்லி கல்லூரியிலும், காவல்துறைப்போட்டிகளில் பின்னாளில் உதவியதென்றால் மிகையில்லை..அதை பிறகு பார்ப்போம்...
எனது 12ஆவது வயதில் 1964 ல் தான் செம்மணத்தம்புலம் வாலிபர் மன்றம் உதித்தது.
தோழர்களோடிணைந்து முதல் கொண்ட்டாட்டம் சிவராத்திரிவிழா.மாதிவளவில்.ஸ்பொன்சர் செல்லையாக்குஞ்சி - கல்யாணி போக்குவரத்து உரிமையாளர் விடிய விடியக் கொண்டாட்டம்..

இன்று நாகபூஷணீஅம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பேராசிரியர் மா.வேதனாதன்,நானும்,நாதன்,நடனசிகாமணி,
ஞானவரோதயன்.கங்கை மகன்,
சகோதரிகள்,இன்னும் பல நண்பர்கள்..நாடகம்,நடனம், சொற்பொழிவுகள், வில்லுப்பாட்டு என விடியும் வரையும், முடியும் வரையும், செல்லையா குஞ்சி மிகப்பெரிய ரசிகராக மாறியது..அடுத்த ஆண்டு பெரியாளவில் பிள்ளையார் கோவில் முன்பாக சிறப்பாக நடாத்த அடிகோலியது..!!

அப்போ ..10 ரூபா போதும் சிறு விழாச் செய்ய.
தோசை,வடை, 5 சதம் தான்.பிளேன் டீ 5 சதம்.
ஒரு பவுண் நகை வெறும் 10 ரூபாதான்.
இப்போ.....

ஒலிம்பிக் போட்டிபோல அக்கால நினைப்பு, வெறுங்கால் தான்..கோவிலைச் சுற்றியிருந்த கற்களையெல்லாம் பிரட்டி எடுத்தவை எம் கால் விரல்கள்தான்..கருணாமச்சான் மற்றும் எம்தோழர்கள்.. , கோவில் வீதியில் தண்ணீர்ப்பந்தல் மட்டுமல்ல விளையாட்டுப்போட்டி, கூட்டுப்பிர்த்தனை சாரணர் இயக்கம், தொண்டர்சபை,என அந்தந்தக் காலத்தில் வயதுக்கேற்ப பயணித்த அருமையான் கிராமத்துக் கதை..எங்களுடையது...இன்று நினைக்கும் போதெல்லாம் அந்தக் கிராமத்துக்கே அழைத்துச் செல்கிறது... மனம். ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கிராமத்து வாழ்க்கையில், வசதிகளில் கிராமத்து இளைஞர்கள் எவ்வாறு தம்மை ஈடுபடுத்தி முன்னேறுகிறார்கள் என்பது நான் கூறவிழையும் நோக்கத்தில் ஒன்று.

சொர்க்கமே யென்றாலும் அது நம்மூரைப் போலவருமா...?

பெருங்குளம், மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே,பரந்து கிடக்கும் இயற்கையின் கொடை
மாரிகாலங்களில்,நீர்தேங்கி அழகாகக் காட்சிதரும்
குமரனின் படங்கள் போல. !!
கோவிலருகே தென்னை மரங்கள்..பாரதியாரின் கற்பனைக் காட்சியை அன்று நாம் கண்டு ரசித்த காலங்கள் அவை..!
மாலைநேரங்களில் அப்பப்பா என்ன அழகு.. மலைப்பொழுது பற்றி கட்டுரை எழுத மாலைவேளைகளில் இங்கும் ,மேகங்களின் வர்ணஞாலங்களைக் காண மேற்குக் கடற்கரையோரமும் செல்வேன்.அக்காட்சிகளை உள்வாங்கியதால் தமிழுக்கு முதல் மார்க் அனேகமாக வாங்கியிருக்கின்றேன்...!

செம்மணத்தம்புலம் வாலிபர் மன்றம்
........................................................................ பிரபலமாகிவிட்டது.உள்ளூர் ஸ்பொன்சர்ஸ் காராளிக்குஞ்சி ஐயா, மதியாபரணம் மாமா, கந்தசாமியர், சின்னத்தம்பி மாமா, இவர்கள் தரும்
100 களோடு, கொழும்பு முதலாளிகளும் சேர...

விழா களைகட்டும்..!
பிறகென்ன சிவராத்திரி விழாவுக்கு ஊரே களைகட்டி உற்சாகப்படுத்தி நிற்கும்...!!

12 வயதில் எமது ..கல்விப்பயணத்தில்...நயினை மகாவித்தியாலயத்துக்கு வருகின்றோம்...கணேசாவில் அப்போது 5ம் வகுப்புவரைதான் வகுப்புகள்..

இதே போல் நாகபூஷணி வித்தியாலயத்தில் கற்ற மாணவர்களும் ஒன்றுசேர...

புதிய நண்பர்கள், புதிய பாடசாலை..புதிய ஆசிரியர்கள்...!

இதை இன்று எழுதும் போது எமக்கு மகாவித்தியாலயத்தில்
ஆசிரியையாக பணியாற்றிய பண்டிதை திருமதி.புனிதவதி பாலசுந்தரம் அவர்கள் லண்டனில் காலமான செய்தி வந்தது.அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.

அக்காலத்தில் கையில் தடிகளின்றி அன்பு ஒன்றையே மூலதனமாக்கி எமக்குப் பாடஞ்சொல்லித்தந்த ஆசிரியத் தெய்வங்கள் பலர் தெய்வமாகிவிட்டனர்.
ஆனால் அவர்கள் எமக்கூட்டிய கல்விச்செல்வம் இன்றுவரை எம்மை வழி நடத்திக்கொண்டிருக்கின்றன என்பதுண்மை..அவர்கள் என்றும் நினைவுகூரப்படுவர்.

பயணம் தொடரும்...!!

பின்னூட்டத்தில் எழுதி உற்சாகமூட்டும் உறவுகளுக்கு
மனமார்ந்த நன்றிகள்..

பண்ணாகம்.கொம் இணையத்தில்

அன்பு உறவுகளே வணக்கம்.

யேர்மனியில் 40


நயினை முதல் றைனை வரை

(நைனாதீவு முதல் யேர்மனி றைனை நகரம் வரை)


``அனுபவம் பழமையில் புதிது``


தமிழருவி நயினை விஜயன் அவர்களின் பாதையில்....புலம்பெயர்ந்த நாட்டில்  பற்பல தமிழ் விற்பன்னர்கள் உள்ளார்கள். அவர்கள் இங்கு தமது சமூகசேவைகளை இடைவிடாது  ஏதோ ஒருவழியில் செய்து வருகிறார்கள். புலம்பெயர்ந்த நாட்டில் அவர்களைப்பற்றி அறிந்த நாங்கள் அவர்களின் தாயகத்தில் ஆரம்பகால சேவைகளை தெரிந்திருக்கவில்லை இதை சம்மந்தப்பட்ட வர்கள் தங்களாக கூறினால்மட்டுமே பல விடயங்களை அறியமுடியும். அப்போதுதான் அவர்களை நாங்கள்முழுமையாக அறியமுடியும் அந்தவகையில் திரு.நயினை விஜயன் அவர்களை பண்ணாகம்.கொம் இணையம் தொடர்பு கொண்டு கேட்டதற்கிணங்க அவர் தனது மனதை திறக்கிறார்.


ஆண்டுகளைக் கடந்திருக்கும் என் வாழ்வுப்பயணத்தில் (1979-2019) 

நயினை முதல் றைனை வரை-- பல சுவாரஷ்யமான,மறக்கமுடியாத, விடயதானங்களை உள்ளடக்கி ,உங்கள் உற்சாகமான ஆதரவோடு 60 ஆண்டுகள் நினைவுகளோடு பயணிக்க இருக்கின்றேன்.வாருங்கள் இணைந்து பயணிப்போம்...!!! உங்கள் நயினை விஜயன்.


இனம்,மொழி,கலை,கலாச்சாரம் ஆன்மீகம்,சமூகம்,அரசியல் என வாழ்வை வழிநடத்திச்செல்லும் தளங்களில்,பட்டறிவையும்,மரபுவழித் தாக்கங்களையும், வாழ்வைப் புடம்போட்ட நிகழ்வுகளும்,மனதை களிப்பூட்டியவையும்,கலங்கவைத்தவையும் என ஓராயிரம் நினைவலைகள்...!!! ஒருமனிதன் தன்வாழ்நாளில் 60 ஆண்டுகள் வரலாற்றைையும், தாய் தந்தையிடமிருந்து பெற்ற அவர்களின் 60 ஆண்டு நினைவுகளையும் இணைத்து ஏறக்குறைய 120 ஆண்டுகால வரலாற்றுப் பதிவுகளை சுமந்துதிரிகின்றான்,அவற்றினூடாகவே சிலர் எழுத்தாளர்களாகவும்,கவிஞர்களாகவும்,கட்டுரையாளர்களாகவும்,வரலாற்று ஆசிரியர்களாகவும் பரிணமிக்கின்றார்கள்.பலர் தம் வாழ்வோடே அரிய பல சிந்தனைகளை,ஆளுமைகளைப் புதைத்து அவை வெளியுலகுக்குத் தெரியாமலேயே மரணித்துப்போகின்றார்கள்.இதனால் சமுதாயம் பல அற்புதமான வரலாற்றுப் பதிவுகளை இழந்துவிடுகிறது.

எனது வாழ்வின் உலகறியும் பருவம் 6 வயதிலிருந்து 60 பதுவரை மூன்று இனக்கலவரங்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்.அச்சம்,இழப்பு,ஆர்ப்பரிப்பு, உதவி, பாதுகாப்பு என அவை நகர்ந்து சென்றிருக்கின்றன.

கண்டம் விட்டு கண்டங்கள் நகர்ந்து இனிய பதிவுகளை இதயம் சுமந்துநிற்கின்றது.பிறந்த மண்ணின் அழியாத நினைவுகளோடு நீண்ட பயணத்தின் நெஞ்சார்ந்த பதிவுகளோடு ,ஒரு சாதாரணனின் வாழ்வில்,புறத்தாக்கங்கள் எவ்வாறு வாழ்வைப்புரட்டிப்போடுகிறது என்பதை எழுத முற்படுகின்றேன்.

.நயினை முதல் றைனை வரை-- பல சுவாரஷ்யமான,மறக்கமுடியாத, விடயதானங்களை உள்ளடக்கி ,உங்கள் உற்சாகமான ஆதரவோடு 60 ஆண்டுகள் நினைவுகளோடு பயணிக்க இருக்கின்றேன்.வாருங்கள் இணைந்து பயணிப்போம்...!!! 


ங்கள் நயினை விஜயன்.

நயினை முதல் றைனை வரை-1

அன்னையின் அருள் எங்கும் பரவிநிற்கும் மணிபல்லவத்தீவு ,ஆர்ப்பரிக்கும் கடல் அலைகள் தினம் தாலாட்ட ,ஊரெங்கும் ஆலய மணியோசை மூன்றுவேளையும் அங்கு வாழும் மக்களுக்கு உத்வேகத்தை தந்துகொண்டிருக்க,காகம் கரைந்து சேவல் கூவ , அன்றும் வழமைபோலவே விடிந்தது.
அன்று பாடசாலை விடுமுறை. மதிய உணவுகளைப் பரிமாற அம்மா ஆயத்தங்கள் செய்ய ஆவலோடு நாங்கள் உண்ணத்தயாராகிக் கொண்டிருக்கின்றோம்....! மதியம் ஒரு மணியிருக்கும், பசி .ஆவலோடு உண்ணத்தொடங்கும் போது....படலயை பிளந்துகொண்டு அப்பாச்சி ... என்ன ஏது என்பதற்கிடையே ..எல்லோரும் ஓடுங்கோ.. வடக்க இருந்து நேவி அடித்துக்கொண்டு வாறாங்களாம்.....! ஓடுங்கோ...எனக் கத்தியபடி அப்பாச்சி...!!
ஆம் ..1958ல் .... 6 வயதில் ஓடிய முதல் பயணம்....!!பனங்கூடலுக்குள் சின்னமாமி வீட்டில் தஞ்சம்...!!
அடுத்த நாள் ... உரே சோகத்தில் ஆழ்ந்த அந்த 
நினைவுகள்......!! 


நயினை முதல் றைனை வரை...2
...............................................................
அவரை விதை போல்
அழகான சிறுதீவு
அன்னை நாகபூஷணி
ஆளும் மணித்தீவு
புத்தனும் அல்லாவும் யேசுவும்
கோவில் கொண்டு
அருளும் மணிபல்லவத் தீவு
கல்வியும் செல்வமும்
குன்றாத வளமும்
தடையில்லாக் கொடையும்
தமிழும் சைவமும்
தழைத்துக் குலுங்கும்
நான் பிறந்த நல் மணித்தீவு...!!!

.....அன்று ஏனோ முன்னர் ஒரு போதும் அறியாத சஞ்சலமும்,அதிர்ச்சியும் ஊர்முழுதும் பரவ சூனியப் பிரதேசமாய்..எங்கும் ஓலம்.

1958 ல் ஏற்பட்ட இனக்கலவரத்தில் கொழும்பிலும் சுற்றுவட்டாரத்திலும் ,தமிழர் வாழ் பிரதேசங்களிலும் தமிழர்கள் தாக்கப்பட்டு உடமைகள்,ஆலயங்கள் சூறையாடப்பட்டு , பலர் கொல்லப்பட்ட செய்திகள் தீயாய்ப்பரவ,ஊரில் இருந்த இளைஞர்கள் புத்தகோவிலைத் தாக்கினார்கள் என்று செய்திபரவ ,ஊர்காவற்றுறையில் இருந்து கடற்படையினர் வரவழைக்கப்பட்டனர்.காவல் நிலையமே இல்லாத அமைதியான் ஊருக்குள் புகுந்த கடற்படையினர்,பெற்றுக்கொண்ட பெயர் பட்டியலில் இருந்த அனைவரையும் தேடிப்பிடித்து தாக்கினார்கள்.இளையவர் முதியவர் எனப் பேதமில்லாது அனைவரும் கவனிக்கப்பட்டனர்.இதில் என்ன விசேசம் என்றால் கந்தசாமி என்றால் ஊரிலுள்ள கந்தசாமிப் பேர்வளி அனைவருக்கும் அடி.அப்போ அடையாள அட்டை படத்தோடு கிடையாது.சண்முகம் என்றால் அதேபோல அத்தனை சண்முகங்களுக்கும் அடி..!! 3 நாட்கள் அல்லோலகல்லோலம் தான்.
அமரர் சண்முகநாதபிள்ளை ஆம் கப்படன் வானதியின் தந்தையார் அப்போ இந்தியாவில் பட்டயக் கல்வியை முடித்து வந்த காலம் .இளைஞர்.அவரும் கவனிக்கப்பட்டதில்,நாரி முறிவும்,அதே பெயரில் வாழ்ந்த தபால்காரர் ஒருவருக்கு வயிற்றில் பாரதூரமான காயம் என பலர் 
அவதிப்பட்டனர்.

3நாட்கள் தொடர்ந்து ..மக்கள் மறைவான இடங்களிலும், ஆலயங்கள், பாடசாலைகளிலும் தஞ்சம். என்ன நடக்குது ஏன் அடிக்கிரார்கள் என பகுத்தறியும் பருவம் அப்போ இல்லை,,ஆனால் ஏன் இந்த வன்முறை என்ற கேள்வி மனதில் ஆழமாகப் படிந்தது...உண்மை..!

8ஆம் வட்டாரத்தில் லெட்சுமாமா பெரிய விவசாயி, புகையிலை,மரக்கறிவகைகள்,மரவள்ளி என பெரியதோட்டம் பிடாரி கோவில் .. பக்கம்.அந்தவட்டார மக்கள் அங்கே தஞ்சம்.மிளகாய்த் தோட்டத்திற்கு வருகை தந்த கிளிக்கூட்டத்துக்கு ஒரே திகில்.என்னடா இன்றுமிளகாய்த்தோட்டத்துக்குள் மனிதத் தலைகள்..!ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன.

என்ன ஆச்சரியம் , தோட்டத்துள் பலகாரங்களும், பாயாசமும்.... குப்புறக் கிடந்தபடியே பரிமாறப்பட்டன.நிமிர்ந்தால் வெளியே தெரிந்துவிடுமாம்..
இது எப்படி இந்த நேரத்தில்..!.. ஆம் அன்று சோமர் மாமாவின் மகளுக்கு சாமத்தியம்.. அரைகுறையில் அனைவரும் தப்பியோடி அங்கு வந்திருக்கிறர்கள் என்றும்,சோமர் மாமாவை தலையில் பாயாசச் சருவத்தோட கண்டனான் என்று எனக்குப் பக்கத்தில் கிடந்த என்நண்பன் ஒருவன் மெதுவாகக் காதுக்குள் மொழிந்தான்.. நல்ல வேளை 2 நாட்கள் அந்தப் பலகாரங்களும்..பாயாசமும், லெட்சுமாமாவின் தேனிரும் உயிரை தக்கவைத்தன..என்றால் மிகையில்லை. அவர் நிச்சயம் சொர்க்கத்திலதான் இருப்பார்...!!
பலர் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறைக்குக் கொண்டுசெல்லப்பட்டுக் கவனிக்கப்பட்டனர்.
சில நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.ஆனால் அவர்களின் உடல் வலி தீர ஆண்டுகளாகின்.அனைவரும் உறவினர்கள்.ஊரே சோகமயமாகன காட்சியானது..!

அந்த நாட்களில்....தான் முதன் முதலில் ஆயுதந்தரித்த படையினரைக் கண்டோம்...! அறியாப் பருவம் ஆனால் ஏன் இவர்கள் அனைவரையும் அடித்தார்கள் என்ற கேள்விக்கு விடை தேடியது இளநெஞ்சம்...உண்மை !!

கோவிலில்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்பது முதுமொழி..ஆனால் ஊரே கோவில்களால் 
நிறைந்த புண்ணிய பூமி தான் நயினை.அம்பாளைமட்டும் தரிசிக்கவரும் அடியவர்களுக்கு ஊருக்குள் எத்தனை கோவில்கள் இருக்கின்றன எனத்தெரியாது.
ஆம் 13 ஆலயங்கள் இருக்கின்றன.நாகபூஷணிஅம்மாள் உட்பட 6 கோவில்களில் தேரோட்டம் இடம்பெறும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன...!

ஊரின் நீளம் 5 மைல்கள். அகலம் 2 மைல்கள்.தான் 13 சைவ ஆலயங்கள்.புத்தர் கோவில்,பள்ளிவாசல்,கிறிஸ்துவ தேவாலயம்,அந்தோனியார் கோவில் எனவும் அருள்பாலிக்கும் தெய்வீகத் தீவு மணிபல்லவ நயினார்தீவு..!!

இது போக....
தமிழ் இளைஞர்களுக்கு...பாகிஸ்தான் கராச்சி நகரத்து கார்திவார் ஹோட்டலில் நடந்தது என்ன..?

பொறுத்திருங்கள் பயணிப்போம்...!

உங்கள் நயினை விஜயன்...

தொடரும்..!!


நயினை முதல் றைனை வரை...
அத்தியாயம் - 3.
.............................................................!

பாகிஸ்தான் போகுமுன் மீண்டும் ஊர் உலா..

நெஞ்சமெல்லாம்
நிறைக்கின்ற
நினைவுகளே நிழலாட
பிறந்த மண்ணில்...எம்மை
உருவாக்கி ஆளாக்கி
நல்லதோர் மனிதனாக்கி
பாடுபட்ட பெற்றோரும்
மற்றோரும் அருளும்
தெய்வங்களும்
புடம் போட்ட கதைகளை
சிறிதெண்ணிச்
சொல்கின்றேன்...!

ஆரம்பக் கல்வி கணேசா கனிஷ்டவித்தியாலயம்.
வீட்டருகே விநாயகர் ஆலயம் பாடசாலைக்கு போகும் வழியில் கடந்துதான் போவது.சாதரணநாட்களில் தினமும் பூக்கள் சமர்ப்பிப்பு பரீட்சைநாட்களில் மட்டும் பிள்ளையருக்கு தேங்காய் ..
வெள்ளிதோறும் மாசிலாமணிவாத்தியாரின் கட்டளைகள்.அனைத்துமாணவர்களும் பிள்ளையார் கோவிலுக்கு வரிசையாய் வந்து பூசை முடிய பாடசாலைக்குப் போய் திருவாசகம்...அதுதான் நமச்சிவாய வாழ்க..
உங்களுக்கும் அனுபவம் இருக்கும்.இறுதியாக...பல்லோரும் ஏத்தப்பணிந்து...என்று சொல்லும் போது தான் உயிர்வரும் ...அப்பாடா என்றிருக்கும் இல்லையா..

ஊருக்குள் ஆசிரியர்கள் அனைவரும் அதிகமாக உறவினர்கள் தான்.கவனித்துக்கொள்வார்கள்...
ஆசிரியப்பெருந்தகைகள் சாந்தலிங்கம் கணபதிப்பிள்ளை,பண்டிதர் கந்தசாமி, குலசேகரம், பரநிருபசிங்கம்,பாலசிங்கம் திருமதி நாகரத்தினம்,என அற்புதமான ஆசிரியர்கள் ஆரம்பக்கல்வியைக் கணேசாவில் கற்றுத்தந்தார்கள்.அற்புதமான நாட்கள்....இன்று அனைவருமே அமரர்களாகிவிட்டார்கள்..நன்றிகளோடு..
அவர்களை நினைவு கூருவது மகிழ்வைத்தருகிறது..

தலைமை ஆசிரியர் தில்லையம்பல வாத்தியார் ..சொல்லுவார் வெள்ளிக்கிழமை மரக்கறிவகைகளைப்பற்றி படிப்பிக்கப்போகிறேன்..எல்லோரும் ஆளாளுக்கு ,
கத்தரி, மிள்காய் பூஷணி
எனக் கொண்டுவரவேண்டும் என்பார் காவிச்செல்வோம்.

மேடையில் ஏறி இதுதான் கத்தரிக்காய் ,இதுதான் பூஷணிக்காய் ,எல்லாவற்றையும் எங்களுக்கு காணாததைக் காட்டுமாப்போல் காட்டிவிட்டு
பையில் போட்டு கொண்டுபோய்விடுவார்.
தனியத்தான் இருந்தவர் பாவம் என்று அதிகமாகவே கொடுப்போம்.

ஆனால் வெள்ளிக்கிழமையின் மகிமை,சைவத்தின் பெருமை,கல்வியின் முக்கியத்துவம்,ஒழுக்கம்,திருக்குறள், பாரதியார் என அன்று பல அறிவுரைகள் கேட்டோம்.
அன்று ஆசிரியர்களும், சமூகமும் ,உறவுகளும் எம்மைப் போற்றி வளர்த்த விதம் இன்று நிலவுகிறதா என்பது...!

பிரபலமான பிடாரியும் வேள்வியும்...!!
100-120 ஆண்டுகளுக்கு முன்னர் நயினை பிடாரிஅம்மன் கோவிலில் நடக்கும் பெரிய வேள்வித்திருவிழாவில் ஆடு, கோழி என்பன பலியிடப்பட்டதாகவும்,பின்னர் அவை நிற்த்தப்பட்டு கோவிலுக்கே நேர்ந்து விடப்பட்டதாகவும்..90 ஆண்டுகளாக பாலாப்பழம் மட்டும் சிறப்பாக வெட்டப்படுகிறது என்று அம்மா சொன்னார்.

நயினையின் தென்மூலையில் உள்ளது பிடாரியம்மன் கோவில்.அங்கு நின்றுபார்த்தால் நெடுந்தீவு துல்லியமாகத்தெரியும். 5 கடல் மைல்
தூரம் தான்.. மேற்கே தமிழகம். இங்கு நடக்கும் வேள்வி பிரசித்தமானது.உரே திரண்டுவந்து பொங்கலிடும்,அப்போது ஊரில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் குடிகள் இருந்தன.அந்த ஆண்டு உறவுகளைஇழந்தவர்களைத்தவிர அனைவரும் பொங்கலிடுவர்.அங்கு சுட்டெரிக்கும் வெய்யிலே போதும் பொங்கி வடிக்க.ஆனாலும் விறகைமூட்டுவர்.கரகம், காவடி பறை ,பிரதிஷ்டை என பக்திமயமாகும் வீதிகள் கண்கொள்ளாக் காட்சிகள்..

எனது பெரியதாயார் வீடு வடக்குவீதியில் தான்,ஒன்றுகூடும் சித்தப்பாமார் சித்திமார் வடக்கேயிருந்து நாகேசர் வண்டில் கட்டி வந்திறங்கும் காட்சி ஜமீன்தார் போலிருக்கும்.
அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் நினைவுகள்...காட்சிகள் வந்து வந்து போகின்றன...!

அங்குள்ள பிடாரியம்மன் சிலை கடலில் ஒரு மரப்பேழையில் மிதந்து வந்ததாகவும்,அந்த இடத்திலிருந்தது, அப்புறபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைய ,அந்த இடத்திலேயே சிலையை வைத்து கோவில் கட்டியதாகவும் கதை.
சிவசம்புத் தாத்தா பரம்பரையினர் இன்றும்..தர்மகர்த்தாக்களாக இருக்கின்றார்கள்.
அக்காலத்தில் நாகராசா பத்மனாதன் தலைமையில் நாமிணைந்து கூட்டுப்பிரார்த்தனை செய்வோம்.

தில்லைவெளியில் திருநடம் புரியும்
எல்லைக்காவல் எங்கள்பிடாரி-வரும்
தொல்லைகள் அகற்றி இன்பமாய் வாழ
நல்லவை தந்திடும் தில்லை நாயகி..!!!!

பிடாரி அம்மன் கோயில், நயினாதீவு 7ஆம் வட்டாரத்தில் தென்மேற்கேயுள்ள தில்லைவெளி என்னும் கடற்கரையோரத்தில் கிழக்க நோக்கியதாக அமைந்துள்ளது. சிறுகோயிலாக விளங்கும் இவ்வாலயக் கருவறைக்குள் கடல் வழியாக மிதந்து வந்த பிடாரி அம்பாளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்துள் அமைந்துள்ள பேச்சி அம்மன் உருவமும் கருவறைக்குள் காணப்படுகிறது. பூவரசு மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டு விளங்கும் இவ்வாலயத்தைப் பேச்சி அம்மன் ஆலயம் எனவும் அழைப்பர். வருடந்தோறும் வைகாசி மாதத்தில் பொங்கல் மற்றும் மடைபரவி வேள்வி நடைபெறும். சுமார் 300 ஆண்டுகள் பழமையுடைய இக்கோயிலில் ஆரம்ப காலத்தில் ஆடு வெட்டிப் பலியிட்டு வேள்வி நடைபெற்றது. 1943 ஆம் ஆண்டின் பின்னர் இத்தகைய பலியிடும் வழக்கம் முற்றாக நிறுத்தப்பட்டு அதற்குப் பதிலாக நீத்துப் பூசணிக்காய், பல்லாக்காய் வெட்டிப் பலியிடும் வழக்கம் இருந்து வருகின்றது. தீராத நோய்களைத் தீர்த்தருளும் தெய்வம் என்ற நம்பிக்கையில் அடியார்கள் தமது நேர்த்திக் கடனுக்காக ஆடுகளையும் சேவற்கோழிகளையும் காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். இவ்வாலய முன் மண்டபத்தூண்களில் அஷ்டகாளி மாதாக்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன. 1988 இல் ஆரம்பிக்கப்பட்ட நயினை ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதானசபை வேள்வித்தினத்தன்று அடியார்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றது. நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் சனசமூக நிலையத்தினர் ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித் தினத்தில் சமய அறிவுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் கலை, நிகழ்ச்சிகளும் கடந்த 21 ஆண்டுகளாய்ச் செய்து வருகின்றனர் என்பது போற்றுதலுக்குரியது.
(குறிப்புகள்-நயினாதீவு-நன்றி)

கோழிகள் முட்டை போட்டால்தான் கொப்பி வாங்கலாம்..என காத்திருந்தபோது தான் அந்தச் சம்பவம் நடந்தது...!! நாம் விழிக்குமுன் மிதிவண்டியொன்று பாடிக்கொண்டு செல்லும்..யார் அது கண்டுபிடிக்க மாதமானது...!!


நயினை முதல் றைனை வரை பயணம் தொடரும்....!
பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் உறவுகளுக்கு நன்றிகள்...சந்திப்போம்...!