ஒரு ஆண்டு நிறைவாகிறது!
’’விழுதல் என்பது எழுகையே’’
என்ற பெருந் தொடர்கதை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.
50 வது தொடர் முடிந்ததும் முடிவுப்பகுதிகள் 5 ழுத்தாளர்கள் தனித்தனி 5முடிவாக எழுதி உள்ளார்கள் அவைகள் வெளிவந்ததும் நிறைவுப்பகுதியாக நிர்வாக இணைப்பாளர்,நிர்வாக பொறுப்பாளர்களின் ஒருவருட அனுபவங்கள் நன்றியறிதல்கள் என்பவற்றுடன் இக்கதை நிறைவு பெறுகிறது இக்கதையை ஒரு புத்தகமாக வெளியீட இருக்கின்றோம். எனவே இதுவரை மிக்க ஒத்துழைப்பு நல்கியதுபோல் தொடர்ந்தும் கைகோத்து பயணிப்போம்.
விழுதல் என்பது எழுகையே (அவுஸ்திரேலியா)
Mrs.அருண் விஜயராணி தொடர்ச்சி பகுதி 49
அறிமுகம்
அருண் விஜயராணி
யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1989 முதல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணில்வசிக்கின்றார். அருண். விஜயராணி என்ற பெயரில் எழுதி வருகின்றார்
1972 ஆம் ஆண்டில் இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதியில் இலங்கை வானொலியில் இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது.
இலங்கை வானொலியில் சிறுகதைகள்இ சிந்தனைக்கட்டுரைகள்இ இசையும் கதையும்இ நாடகங்கள்இ தொடர்நாடகங்கள் என்பன இவரது ஆக்கங்களாக ஒலிபரப்பாகியுள்ளன. ”தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன" என்ற இவரது வானொலி நாடகம்இ துணை என்ற பெயரில் ரூபவாஹினிதொலைக்காட்சிக்காக பி.விக்னேஸ்வரன் தொலைக்காட்சி நாடகமாக தயாரித்து ஒளிப்பரப்பினார்.
அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலிஇ இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கிறார்.
அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய முரசு இலக்கிய சிற்றிதழின் ஆசிரியராகவும் அருண். விஜயராணி பணியாற்றியுள்ளார். அத்துடன் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்தும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக. கிருட்ணமூர்த்தி
திரு.ஏலையா முருகதாசன்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
கதை தொடர்கிறது.
„கலோ .......“
„கலோ நான் பத்மநாதன் மாமா கொழும்பிலையிருந்து கதைக்கிறன்..........“
„மாமா நான் சீலன்தான் ......எப்படியிருக்கிறியள்.......“
„சுகமாக இருக்கிறன் என்று சொல்ல முடியாது.......“
„ஏன் மாமா என்ன பிரச்சினை.......சோர்வாகக் கதைக்கிறியள்....“
„வயதும் போய்க் கொண்டிருக்குது....அதோட நீரழிவு நோயும் வந்திட்டுது“
„யாருக்குத்தான் வருத்தம் இல்லை. இப்பு எல்லாருக்கும் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யுது.மருந்தைக் கவனமாக எடுங்கள்“
„சீலன்......“
„சொல்லுங்கோ....“
„அம்மா ஏதாவது சொன்னவாவா“
„ம்....“
„அம்மாவிற்கு சாம்பவியை நல்லாய்ப் பிடிச்சிருக்கு“
„......“
„சீலன் நான் என்ன சொல்ல வருகிறன் என்பது உங்களுக்கு விளங்குத்தானே“
„ஓம்...“
„என்ன முடிவெடுத்திருக்கிறியள்“
சாம்பவியை கல்யாணம் செய்யச் சொல்லி அம்மா தொலைபேசியில் சொல்லியிருந்தார். பத்மகலாவும் தானும் ஒருவரையொருவர் காதலிப்பதும்,கனடாவிலிருக்கும் அவள் ஜேர்மனிக்கு வெகுவிரைவில் வரவிருப்பதையும் பத்மநாதன் மாமாவுக்கு எப்படிச் சொல்வது என்று தடுமாறினான்.
துணிவுடன் முடிவுகளைச் சொல்ல வேண்டும் என்று மனம் தீர்மானித்தாலும் அதற்குரிய சந்தர்ப்பம் வரும் போது மனம் தடுமாறத்தான் செய்கிறது. சில விநாடிகள் சீலன் மௌனமாக இருந்தான். எப்படி ஆரம்பிப்பது எனத் தயங்கினான்.
„சீலன் ஏன் மௌனமாக இருக்கிறியள் எதுவாக இருந்தாலும் சொல்லங்கள்“
„மாமா நான் சொல்லுறன் என்று கோவிக்காதையுங்கோ.......உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறன்“
„.....“
„நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த போது பத்மகலா என்ற பெண்ணும் நானும் ஒருவரையொருவர் விரும்பத் தொடங்கினோம்.அவள் இப்ப கனடாவிலிருக்கிறாள். நாங்களிருவரும் கல்யாணம் செய்யப் போகிறம்.....அதுதான்.........“
„.....“
சில விநாடிகள் பத்மநாதன் எதுவும் பேசவில்லை.. அவர் சீலனிடமிருந்து இப்படி ஒரு பதில் வரும் என எதிர்பார்க்கவில்லையோ தெரியாது அதுதான் காரணமாகவும் இருக்கலாம்.
„மாமா“
அவரிடமிருந்து பெருமூச்சொன்று வெளிவந்தை தொலைபேசி வழியாக சீலனால் கேட்க முடிந்தது.
„மாமா ஏன் மௌனமாக இருக்கிறியள் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்னுடைய நிலமையை மூடிமறைக்காமல் சொன்னதால் கோபமா“
„இல்லை இல்லை நான் அப்படி நினைக்கவில்லை கோபப்படவும் இல்லை. நீங்கள் எடுத்த முடிவு சரியானதுதான். விரும்பியவளோடு சேர்ந்து வாழ்வதே வாழ்க்கை“
„என்னுடைய நிலையைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி மாமா“
„பரவாயில்லை அது சரி அம்மாவிற்கு தெரியுமா“
„யாழ்ப்பாணத்திலை இருந்த போது பத்மகலா எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறா, அம்மாவுக்கு சாடை மாடையாகத் தெரியும்“
„சரி நான் ரெலிபோனை வைக்கிறன். சாம்பவிக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம். உங்களோடு கதைத்ததை அம்மாவிற்குச் சொல்லுறன்“
என்ற சொல்லியபடி பத்மாநாதன் தொடர்பைத் துண்டிக்கிறார். ஒரு பாரத்தை இறக்பகி வைத்தது போல் சீலன் உணர்ந்தேன். ஆனால் அம்மாவிடமிருந்து என்ன மாதிரியான தொலைபேசி வரப்போகிறதோ என அதையும் யோசித்தான்.
நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை, இன்றைக்கு அரைநாள் வேலை. வேலை முடிந்து வந்தவுடன் சத்தியநாதன் மகளின் பிறந்தநாளுக்கு போக வேண்டும் என்று தீர்மானித்தபடி வேலைக்கு கிளம்பினான் சீலன்.
......................
சத்தியநாதன் தனது மகளுக்கு மண்டபம் எடுத்து பிறந்தநாள் விழா செய்து கொண்டிருந்தார். மண்டபத்தின் வாசலில் சீலனைக் கண்டதும் சத்தியநாதனும் மனைவியும் அவனை வரவேற்று கேக் வைத்திருந்த மேசைக்கு முன்னால் இருந்த நாற்காலி வரிசையில் கொண்டு உட்கார வைக்கிறார்கள்.
சத்தியநாதனின் மகளின் இருபத்தியோராவது பிறந்து நாள் இது. பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த அவள் இப்பொழுது ஒரு நிறுவனத்தின் அதிகாரி நிலைப் பணியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
மண்டபத்திலிருந்த ஒவ்வொருவரிடமும் சென்று உரையாடி நன்றி சொன்ன அவள் முன வரிசையிலிருந்த சீலனிடம் வந்த போது அவள் இதுவரை சீலனைப் பார்க்கவில்லை.
அதனால் இவர் யாராக இருக்கும் என எண்ணியவாறே அவனுக்கு கைலாகு கொடுக்கிறாள். அந்த நேரம் பார்த்து சத்தியநாதனின் நண்பர் கனகலிங்கம் சீலனுக்கு அருகில் வந்து இவர் ஜேர்மனிக்கு புதியவர் வந்து கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகின்றன. பிஎம்டபுள்யூ கார் கொம்பனியில் பயிற்சி பெறுகிறார் என அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாhர்.
அவள் புன்னகையுடன் அதை கவனித்த அவள் அந்த இடத்தை விட்டு அகலுகிறாள். இரண்டு மீற்றர் போனவள் திரும்பி சீலனைப் பார்க்கிறாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த சீலனும் தன்னை அவள் திரும்பிப் பார்ப்பதைக் கவனிக்கிறாள். மெலிந்த தேகம் அழகான முகம். தலைமயிரை அழகாக சுருட்டி விட்டிருந்தாள். சிவப்பும் வெள்ளையும் கலந்து சாதாரண சேலையைக் கட்டியிருந்தாள்.
கேக் வெட்டி முடிய அவளோடு நின்று எல்லோரும் படம் எடுக்கிறார்கள். சீலனும் சத்தியான் அவர் மனைவி அவரின் மகளுடன் நின்று படம் எடுக்கிறான் .
பிறந்தநாள் விழா விருந்து முடிய அவளிடமும் சத்தியாதன் அவரின் மனைவியிடமும் விடைபெறுகிறான் சீலன்.
„சீலன் கொஞ்சம் நில்லுங்கள், நான் காரிலை கொண்டு போய் விடுகிறன்“ என்று சொல்லியபடி கனகலிங்கம் அவனிடம் வருகிறார்.
தான் பஸ்ஸில் போவதாகச் சீலன் சொல்லியும், அவர் விட்பாடில்லை. தவிர்க்க முடியாமல் சீலன் அவருடன் காரில் போவதற்கு ஒப்புக் கொள்ளுகிறான்.
காரில் ஏறி உட்கார்ந்ததும், கனகலிங்கம் காரை ஸ்டார்ட் செய்யாமலேயே தொண்டையை செருமியபடி“சீலன் உங்களிட்டை ஒரு விசயம் கதைக்க வேணும்“ என்கிறார்.
என்ன என்பது போல் கனகலிங்கத்தை சீலன் பார்க்கிறான்.கனகலிங்கம் தயங்கியபடி“சீலன் இன்றைக்கு பேர்த்டேய் நடந்த பிள்ளைதான் சத்தியநாதனின் மூத்த மகள். அவளுக்கு கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என்று அவரும் மனைவியும் என்னிடம் சொல்லவிட்டு உங்களைப் பற்றியும் கேட்டார்.......
„..................“
„நேரடியாகக் கேட்பதற்கு குறை நினைக்க வேண்டாம். உங்களுடைய அப்பா அம்மா சகோதரங்கள் இங்கையிருந்திருந்தால் அவையிடம் கேட்டிருக்கலாம்.... தன்ரை குடும்பத்திற்கு உங்களை மருமகனாக எடுக்க அவை விரும்புகினம்......அதுதான் உங்களிடம் கேட்டகச் சொன்னவை“ எனத் தயங்கித் தயங்கி கனகலிங்கம் கேட்க, என்ன சொல்வதென்றே தெரியாமல் தயங்கிய சீலன் ஒருவாறு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு காலையில் பத்மநாதன் மாமாவுக்குச் சொன்ன அதே பதிலைச் சொல்லுகிறான். பத்மகலா இங்கு வரப்போவதையும் சொல்கிறான், இறுதியாக கோபிக்காதையங்கோ என சொல்லி முடிக்கிறான்.
இப்படி நேர்மையாகச் சொன்னதற்காக சீலனை பாராட்டிய கனகலிங்கம் காரை ஸ்டார்ட் செய்து சீலனை அவனின் அறையில் விடுவதற்காக போய்க் கொண்டிருக்கிறார். போகும் போது பிஎம்டபுள்யு நிறுவனத்தில் தொழில் பயிற்சி கிடைத்தது அதிர்ஸ்டம் கவனமாகப் பயிற்சி எடுங்கள் படியுங்கள் பெரிய ஆளாக வரமுடியும் என ஆலோசனை கூறுகிறார்.
சீலனின் வீடு வரவே அவனை இறக்கிவிட்டுச் செல்லுகிறார்.
கதவைத் திறந்து சீலன் உள்ளே போக ரெலிபோனும் அடிக்கிறது. கலாவாகத்தான் இருக்கும் என நினைத்தபடியே ரெலிபோனை எடுக்கிறான். மறுமுனையில் பத்மகலா.
„கலோ“
„பேர்த்டேய் முடிஞ்சு வந்திட்டியளா“
சீலன் திகைத்துப் போய்விட்டான். பத்மகலா கலகலவெனச் சிரித்தாள்.
„நான் பேர்த்டேய்க்குப் போனது உங்களுக்கு எப்படித் தெரியும்“
„உங்கடை நடவடிக்கைகளை கவனிக்க உங்கை ஒரு சிஐடியை வைத்திருக்கிறன்“ மீண்டும் சிரிக்கிறாள் பத்மகலா.
„கலா பகிடிவிடாமல் சொல்லுங்கள் யார் சொன்னதென்று“ சீலன் கேட்க. மட்டக்களப்பில் தங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருந்த பெண் ஒரு குடும்பமாக இப்பொழுது ஜேர்மனியில் நீங்களிருக்கும் நகரத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களும் நீங்கள் போன பேர்த்டேக்கு வந்தவை. அந்தப் பெண்தான் ரெலிபோன் செய்து சொன்னவள்.
„என்னைப் பற்றி என்னென்று அவவுக்கு தெரியும்“
„ஏதோ ஒரு விதத்தில் அறிந்திருக்கிறாள். வேறு என்ன புதினம்“
„ஒன்றுமில்லை“
பத்மநாதன் மாமா கேட்டதையும் கனகலிங்கம் கேட்டதையும் சொல்லி ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான் என அவன் மௌனமாக இருக்கிறான்.
பத்மகலா „ நான் வாற வெள்ளியைவிட்டு அடுத்த வெள்ளி ஜேர்மனி பிராங்பேர்ட் எயர்போட்டுக்கு காலை பத்தரை மணிக்கு வாறன் பிராங்பேர்டிற்கு வாங்கோ“ என அவள் திடுதிப்பென்று அவள் சொல்லியதும் நம்ப முடியாமல் சீலன் திகைத்தாலும் உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி.
„சரி வாறன்“
„நான் ரெலிபோனை வைக்கிறன் „ என்று சொல்லியவாறு பத்மகலா தொடர்பைத் துண்டிக்கிறாள்.
சீலனோ மீண்டும் தானும் பத்மகலாவும் ஒன்று சேரப் போகிறோம் என்ற சந்தோசசத்தில் படுக்கையில் படுத்திருந்தும் நித்திரை வராமல் புரண்டு புரண்டு படுத்தபடி இருக்கிறான்.
தொடரும் பகுதி 50