ஏலையா க.முருகதாசன்
நவீன உலகில் பெண்ணியம் பேசுபவர்களும், பெண் விடுதலைக்காக எழுதியும் களவேலைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஆண்கள் பெண்கள் என உலகளவில் பெருகிக் கொண்டே வருகின்றனர்.
ஆகக் கூடியது என்று சொன்னால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெண் விடுதலை சார்ந்த பெண்ணியக் கருத்துக்களும் வரத் தொடங்கியுள்ளது எனலாம்.
அதற்கு முன்னரே பார்வதி வரையறுக்க முடியாத் ஆண்டுகளுக்க முன்னரே தனது கணவர் சிவாவுடன் சரிக்குச் சமனாக நின்று வாதாடி கோபத்துடன் தனது உரிமைக்காக போராடியிருக்கிறார். விவாகரத்து வரைக்கும்கூட பார்வதி போயிருக்கிறார்.பலபேர் தலையிட்டு பார்வதியின் முடிவை மாற்றியிருக்கிறார்கள்.
நான் எழுதப் போவதை வாசிப்பவர்களுக்கு இது நகைச்சுவையாகத் தோன்றலாம்.ஆனால் இதை ஒரு தத்தவமாகக்கூடக் கொள்ளலாம்.
அது உங்கள் பார்வையைப் பொறுத்தது.'இந்தாளுக்கு வேறை வேலை இல்லை எதையும் எதையும் கொண்டு வந்து முடிச்சுப் போடுகிறார் பாருங்கள் என்று கோபித்துக் கொள்ளலாம்,என்னைத் தூற்றலாம் அது உங்களுடைய கருத்துச் சுதந்திரம் உரிமையும்கூட'.
இனி பார்வதிக்கும் சிவாவுக்கும் நடந்த பிரச்சினையை கதை வடிவில் சொல்கிறேன்.
வீட்டுக்குள் நுழைந்த சிவாவைக் கண்ட பார்வதி'இவ்வளவு நேரமும் எங்கை போட்டு வாறியள்,இஞ்சை வீட்டிலை ஒரு சாமான் சக்கட்டு இல்லை, என்ன சமைக்கிறதெண்டே தெரியேலை,அது சரி நான் ஒரு கதை கேள்விப்பட்டன் ஊருக்குள்ளை போறவாற இடத்திலையெல்லாம் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறியளாமே.....உண்மையா ' என்று பார்வதி சிவாவிலை எரிஞ்சுவிழ,
„பொறு பொறு கனக்க வசனம் பேசாதை ஒவ்வொண்டாய்க் கேள் பதில் சொல்றன்' என்று சிவா திரிசூலத்தை சாத்தி வைத்துவிட்டு சக்கைப்பணிய இருந்து கொண்டு நான் ஆடினால்தானே உலகமே இயங்கும்' என்று சொன்ன சிவாவை இடைமறித்த பார்வதி' உங்களுக்கு வெட்கமாயில்லையா, சூலம் ஒரு கையிலை இடுப்பிலை புலித்தோல், போதாதற்கு உடம்பு முழுக்க சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு, பாம்புகளை கையிலையும் கழுத்திலையும் சுத்திக் கொண்டு உடுக்கடிச்சு ஆடுறது...வெளியிலை என்னாலை தலைகாட்ட முடியேலை...'
„இடுப்பிலை கட்டிறது அரைகுறை புலித்தோல்.உள்ளுக்குள்ளை கோவணம் கீவணம் கட்டிறேலை இதுக்குள்ளை காலை நல்லாய் தலைக்கு மேலே உயர்த்தி ஆடுறது, பாக்கிறவை வந்து சொல்லுனம் உன்ரை மனுசன் ஆடுறது சரி,உள்ளுக்குள்ளை ஒண்டும் கட்டாமல் ஆடுறார்,
அவற்றை உடுக்குச் சத்தத்தை கேட்கிறதா இல்லாட்டி அந்தச் சத்தத்தைக் கேட்கிறதா என்று எங்களுக்கே தடுமாற்றமாயிருக்குது' என்று பார்வதி கோபத்தின் சூடு தணியாமல் சொல்ல,
„அதுசரி உந்தக் கதை ஆர் சொன்னது' என்று சிவா கேட்க,
„வேறை யார் இலட்சுமியக்காவும் சரஸ்வதியக்காவுந்தான்' என்று பார்வதி சொல்ல
„அவை உனக்கு அக்காக்களே,உனக்குத்தான் வயதுகூட அவை உனக்கு தங்கச்சிமார்...அது சரி சரஸ்வதி சொன்னதை காதிலை விழுத்தாமல் விடலாம்,ஏணெண்டால் மனசுக்க ஆறுதலாய் இடைக்கிடை வீணை வாசித்து எங்களைக் கேட்கச் செய்கிறார்,
இலட்சுமியாலை அங்கை பூமியிலை எவ்வளவு பிரச்சினை தெரியுமோ சாதாரண வட்டிக்கு குடுக்கிறவன், கந்துவட்டிக்கு குடுக்கிறவன், நாள் வட்டிக்கு குடுக்கிறவன் மணித்தியால வட்டிக்கு குடுக்கிறவன்,நிமிச வட்டிக்கு குடுக்கிறவன் எல்லாம் அவாவின்ரை படத்துக்கு முன்னாலை நின்று „தாயே சனங்கள் காசுக்கு வழியில்லாமல் கஸ்டப்பட வேண்டும், என்னட்டை வரவேண்டும் எண்டு கும்பிடுகினம.; அது தெரியாமல் நீயும் அவையின்ரை கதையைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு என்னோடை பாயிறாய்' என்ற சிவா,
பார்வதிக்கு கேட்காது என்று நினைத்துக் கொண்டு' அப்பனைப் போலத்தானே மோளும்' என்று சத்தமில்லாமல் சொல்ல அடுபபடிக்குப் போய்க் கொண்டிருந்த பார்வதிக்கு அது கேட்டுவிட „இப்ப எதுக்கு என்ர அப்பாவின்ரை பெயரை இழுத்தனீங்கள் „ என்று கோபமாக கேட்க
' ஏன் கொப்பன் தக்சன் பெரிய திறமானவரே,ஊர் உலகத்திலை உள்ள எல்லாரையம் கூப்பிட்டு பெரிய யாகம் ஒண்டு செய்தவர், என்னை அதுவும் ஒரேயொரு மருமகனான என்னை, அனைத்து உலகத்துக்கும் அதிபதியான என்னை வரச் சொல்லிக் கேட்கேலை அவர் ஏதோ திறமானவன் என்று கதைக்க வந்திட்டா இவா' என்று சொல்லி முடிக்க முந்தி
' இஞ்சை பாருங்கோ அப்பாவை அவன் இவன் என்று கதைச்சியள் என்றால் விவாகரத்து செய்திடுவன்' என்று சொல்ல,
„போற வாறவன் எல்லாம்,என்ன ஈரேழு உலக அதிபதி என்கிறீர்கள், என்ன கொம்மான் யாகத்துக்கு கூப்பிடாமல் உங்கடை முகத்திலை நல்லாய்க் கரியைப் பூசிப் போட்டார் என்று நக்கலாகச் சிரிக்கினம்'..
„இது போதானெ;று மன்மதன் கரும்பைச் சப்பிச் சப்பி துப்பிக் கொண்டே ஆகா...ஓகோ..என்று சிரிக்கிறான்' என்று சொன்னதும், பார்வதிக்கு கோபம் உச்சந்தலைக்கு ஏற,..
„நான் உங்களுக்க கனதரம் சொல்லியிருக்கிறன் அந்தக் கரும்புக்காரனைக் கண்டால் ஒதுங்கிப் போகச் சொல்லி...ஊராரின் கரும்புத் தோட்டங்களில் கரும்பைப் பிடுங்கிச் சப்புவது, கரும்பைக் கொண்டு திரிந்து அம்பு விடுகிறது,
தனியாப் போற பொம்பிளையளை கரும்பு கடிக்கத் தாறன் என்று தோடட்டத்துக்குள்ளை கூட்டிக் கொண்டு போறது...ஐயையோ என்னவெல்லாமோ நடக்குது ...குமட்டுது... அந்தாளோடை சேராதையுங்கா என்று எத்தனை முறை சொன்னனான்..அந்தாளோடை சேர்ந்துதான் பகீரதி கங்கா என்று எல்லாம் என்னமோ நடக்குது...
இது இப்படியே போனால் விவாகரத்துத்தான்...நீங்கள் உள்ளுக்குள்ளை ஒண்டும் கட்டாமல் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு திரியிறது போலத்தான் முருகனும் கோவணத்தோடை மட்டும் திரியறான்..இந்த இலட்சத்திலை என்ரை அப்பரைப் பற்றிக் கதைக்கிறியள்.. அவன் இவன் என்றியள் என்ரை அப்பரை...'என பார்வதி சொல்ல
„ஏதோ வாய் தடுமாறி வந்திட்டுது,அதுக்கு உடனை விவாகரத்து என்கிறாய் சரி சரி இனி கடைசியிலை வாற „ன்' னன்னா சொல்ல மாட்டன் „ர்' வைத்துச் சொல்றன் என்று பார்வதியை சமானப்படுத்துகிறார் சிவா.
„அது சரி உன்ரை மூத்து மோன் எங்கையென்று கேட்க, „அவன் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டு எலிக்குஞ்சுகளோடை விளையாடிக் கொண்டிருக்கிறான் „ என்கிறார் பார்வதி.
„அவனுக்கு அதுதானே எந்த நேரமும் வேலை' என்று சொல்ல' ஏன் உங்களைப் போல உங்கடை இரண்டாவது மகனைப் போல இருக்கச் சொல்றியளோ'என்று ஏளனமாகப் பார்வதி கேட்க,துணுக்குற்ற சிவா
„ நான் அப்படி என்ன பிழை விட்டிட்டன் என்று துள்ளிக் குதிக்கிறாய் „ என்று பார்வதியைப் பார்த்து சிவா கேட்க, „ஏன் உங்களுக்கே தெரியாதா, பகீரதி யார்,கங்கா யார்' என்ற பார்வதிக்கு „ அது இரண்டும் நதிகளப்பா, ஆரோ உன்னட்டை தப்புத் தப்பாய் என்னைப் பற்றிச் சொல்லியிருக்கினம்' என்று மெதுவாக தான் செய்கிற ஜில்மால்களை மூடிமறைத்தார் சிவா.
ஆனால் பார்வதி விடவில்லை' ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் அந்த இரண்டு சக்களத்தியளையும் கையும் களவுமாக பிடிக்கிறனோ இல்லையோ என்று பாருங்கள் „ என்று பார்வதி சொல்ல, சும்மா வாயை வைச்சுக் கொண்டிருக்காமல்'ஆம்பிளையள் எண்டால் அப்படி இப்படித்தான் இருப்பினம், பெண்சாதிமார் கண்டும் காணாமல் இருக்க வேணும் என்று சிவா சொல்ல
இன்னும் பார்வதியின் கோபத்தைக் கிளற,
' ஓகோ அந்தளவுக்கு வந்திட்டியள், இனிப் பொறுக்க ஏலாது,இனி விவாகரத்துத்தான், பொம்பிளையளை அடிமைமாதிரி வைச்சிருக்கிற உங்களோடை வாழ ஏலாது நான் என்ரை மூத்த பிள்ளை விநாயகனைக் கூட்டிக் கொண்டு போகப் போறன்' என்று சொன்ன பார்வதியிடம்
„ அப்ப அவன் முருகனை என்ன செய்யிறது, நான் உலக இயக்கத்துக்கு நடனம் ஆட வேணும்,உயிர்களுக்கு படியளக்க வேணும், எனக்கு எவ்வளவு வேலை கிடக்குது „ என்று சிவா சூலத்தைத் தூக்கிக் கொண்டு பின்னேர படியளப்பிற்கு வெளிக்கிட
„அவனும் உங்களைப் போலத்தான்,மயிலிலை ஏறி அங்கை இங்கை பறந்து திரியிறான் ஏதாவது கன்னியர்களைக் கண்டால் ஏதாவது இசகுபிசகாய் நடந்திடும் என்று தெய்வானைக்கு கல்யாணம் செய்து வைத்தால், அவன் வேட்டைக்குப் போறன் என்று வில்லையும் அம்பையும் எடுத்தக் கொண்டு தெய்வானைக்கு பொய் சொல்லிப் போட்டு ஆரோ வள்ளியாம் அவளோடை தொடுப்பு வைச்சிருக்கிறான்.
நான் கேள்விப்பட்டன் வள்ளியை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு வரப் போறானாம்,
அண்டைக்கு தெய்வானை இஞ்சை வந்து „மாமி உங்கடை மகன் முருகன் செய்யிற ஜில்மால் வேலை உங்களுக்குத் தெரியுமோ ,ஆரோ வள்ளியாம் அவளிட்டை போட்டு வாறார்,திணைக் கொழுக்கட்டை திணைப் புட்டு எல்லாம் சாப்பிடுறாராம், அங்கைத்தை காட்டுத்தேன் நல்லது என்று அதையும் நக்கிப் போட்டு வாறார்,
மாமாவும் இவரைப் போலத்தான் என்று நாரதர் மாமா கிண்டலும் கேலியுமாக சொல்லுறார்.
„கோபிக்காதையுங்கோ மாமி இனிப் பொறுக்கேலாது அவரை விவாகரத்துத்தான்' என்று சொல்லிப் போட்டுப் போறாள்.
„இதென்ன கரைச்சல் பிடிச்ச கதையாக் கிடக்குது,மாமியும் மருமோளும் ஒரு முடிவிலைதானிருக்கிறியள்' என்று சிவா சொல்ல,'பொம்பிளையள் எண்டால் நாங்கள் என்ன கிள்ளுக் கீரையோ' என்று பார்வதி சொல்ல, சரி நான் பின்னேரப் படியளந்து போட்டு வாறன்' என்று சிவா வெளிக்கிட' ஏதோ நான்தான் உலகத்துக்கே படியளக்கிறன் என்று விலாசமாய்க் கதைக்கிறியள் இன்டைக்கு அதையும் பார்க்கிறன் „ என்று சொல்லிய பார்வதி,சிவா வீட்டைவிட்டு வெளிக்கிட்டுப் போனதும் ஒரு எறும்பைப் பிடித்து சீலைத்தலைப்பில் வைத்து முடிச்சுப் போட்டு வைத்திருந்தார்.
கொஞ்ச நேரம் பொறுத்து சிவா படியளந்து போட்டு வீட்டுக்குள்ளே நுழையும்போதே „ ஈரேழு உலகத்திற்கும் படியளக்கிறதென்றால் சும்மாவா ..போதும் போதுமென்றாகிவிட்டுது...அதுவும் பூமியிலிருக்கிற மனுசற்றை ஆசையை என்னவென்று சொல்லுறுது...'
ஒரு வீட்டுக்குள்ளேயே ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு உணவிலை விருப்பம்,கடவுளாய் இருக்கிறது எவ்வளவு கஸ்டம் என்று மனுசருக்கு புரியேலை..ஒருத்தர் நூடில்ஸ் என்கிறார்,இன்னொருத்தர் பிஸ்ஸா என்கிறார், இன்னொருத்தர் பஸ்மதி அரிசியிலை புரியாணி என்கிறார்...பொன்னியரிசிச் சோறு என்கிறார்....இதிலை சிலர் சீரகச் சம்பாவிலை புரியாணி என்கின்றனர்..குத்தரிசியில் சோறு என்கின்றனர்....இடியப்பம் ..புட்டென்கின்றனர்...றொட்டி பாண் என்கின்றனர்...கொத்து றொட்டி என்கின்றனர்...எல்லாருக்கும் எல்லாத்தையும் குடுத்து முடிச்சிட்டு வரும் வரையும் .கடவுள் என்ற என்
பாடு பெரும் பாடு..இடுப்பிலை கிடக்கிற துண்டு அவிழ்ந்து விழாத குறை மட்டுந்தான்
..எனச் சிவா சலித்துக் கொண்டதைக் கேட்டுக் கொண்டே வந்த பார்வதி...,கட்டிறதே அரை இஞ்சி புலித்தோல் அதுவும் உள்ளுக்குள்ளை ஒண்டும் மறைக்கிறேலை இந்த இலட்சணத்திலை கட்டினது அவிழ்ந்து விழுந்தாலென்ன விழாட்டில் என்ன „என்று நக்கலாகச் சொன்னவர்..'
நான்தான் ஈரேழு உலகத்திற்கும் படியளக்கிறன் என்று கெத்தாப்பு கதை கதைக்கிறியள் இண்டைக்கு ஒரு சோதனை வைச்சிருக்கிறன் அதிலை நீயா நானா என்று பார்ப்பம் „என்றவள்,தரையிலை காலை நீட்டி உட்கார்ந்த சிவாவைப் பார்த்து,' புலித்துண்டை இழுத்து மூடிக் கொண்டு சப்பாணி கட்டிக் கொண்டு இருங்கள் „ என்று சொல்லியவாறு சிவாவுக்கு எதிரே தரையில் காலை மடித்து ஒருக்களித்து உட்கார்ந்து கணவனைப் பார்த்தபடியே ஒருவிதமான கர்வத்துடன் சீலைத் தலைப்பின் முடிச்சை அவிழ்த்தவள், தான் முடிஞ்சு வைத்திருந்த எறும்பு அரிசியொன்றை கவ்விக் கொண்டு இருப்பதைப் பார்த்து திகைத்துவிட்டார்.
அதைக் கவனித்த சிவா தனது பாறு தன்னிடம் தோற்றுவிடக்கூடாது என்பதற்காக எதையுமே கவனிக்காதது போல,' பாறு நீ ஒண்டுக்கும் யோசிக்காதை கவலைப்படாதை „ என்று சொல்லிக் கொண்டே பார்வதியை இழுத்து அணைக்க, வாஞ்சையுடன் சிவாவின் தோளில் தலை சாய்த்தவள் „பகீரதி கங்கா விசயம் இனித் தொடருமென்றால் விவாகரத்துத்தான் „ என்று கோபமாகவும் செல்லமாகவும் சொல்லிக் கண்ணயர.. தெருவில் நாராயணா......நாராயணா என நாரதரின் குரல் கேட்க „
அந்தாள் இஞ்சை வரப் போறாரே ...என்னென்ன பிரச்சினையைக் கிளறப் போறாரே தெரியேலையே „ என்று சிவா மனதில் நினைத்தவாறு, பார்வதியைப் பார்க்க,அந்த நேரம் பார்த்து „ ஓம் நமசிவாய ..ஓம் பார்வதி நம „ என்று சொல்லிக் கொண்டே கதவைத் தட்டும் சத்தம் கேட்கிறது.
கதவைத் திறந்த பார்வதி „ நாரதரண்ணை வாங்க' என்று சொல்லி அவரை உட்காரச் சொல்கிறார்.
பார்வதியின் முகத்தை உற்றுப் பார்த்த நாரதர்,' என்ன சிவா தங்கச்சி முகம் ஒரு மாதிரி இருக்கு...அதுசரி அந்தப் பகீர்...' என்று நாரதர் தொடங்க முந்தி „
அதுதானண்ணை பிரச்சினை, என்னுடைய பெண்ணுரிமையை இவர் மதிக்காவிட்டால்,அந்தப் பகீர் பிரச்சினையாலை விவாகரத்துத்தான் நடக்கும்' என்று சொல்ல „
என்ன தங்கச்சி நீ எதுக்கெடுத்தாலும்,அந்த முடிவை எடுக்கிறாய், உங்களாலைதான் பூமியிலை கல்யாணம் முடிச்ச சின்னஞ்சிறுசுகள்கூட பொறுமை, சகிப்புத்; தன்மை இல்லாமல் சின்னச் சின்னப் பிரச்சினைக்கெல்லாம் விட்டிட்டுப் போறன் என்று அழுங்குப் பிடியாய் நிற்குதுகள்' என்று நாரதர் சொல்லிக் கொண்டிருக்க „
ஒரு மாதிரி தணிஞ்சு கிடந்த பிரச்சினையை ஊதிப் பகீரென்றாக்கிவிட்டுட்டுதே இந்த நாரதர் „ என்று சிவா மனதில் நினைக்க, „
மெய்யே சிவா,தங்கச்சி பார்வதி,மாப்பிளை முருகன் வள்ளியை வீட்டுக்கு கொண்டு வந்திட்டார் என்று ஒரு கதை நடக்குது உண்மையோ,அதாலை தெய்வானை ஏறுவன் கோர்ட்டுப் படியை என்று கோபாவேசத்திலை நிற்கிறாளாமே' என்றவர், சரி வாறன், எனக்கும் கன வேலை இருக்கு சிவா அந்த ப...,சரி சரி அதைப் பிறகு கதைப்பம் என்று சொல்லியபடியே சிவா பார்வதியின் வீட்டைவிட்டுப் போகிறார்.
„அப்பனைப் போல பிள்ளை „என்று பார்வதி பல்லை நெரும,'சரி சரி விடு „ என்றவாறு பார்வதியின் மடியில் சிவா தலைவைத்துப் படுக்கிறார்.
(இது ஒரு கற்பனைக் கதை சிவா என்பது சிவபெருமானையும், பார்வதி என்பது பார்வதியையும் குறிக்கும்)
அடையாளம் 4 (நிறைவுப் பகுதி)
ஏலையா க.முருகதாசன்
சரசுவின் தாய் பதட்டத்துடன் கடுக்காயை சிரடஐடயில் வைச்சு உரசி சரசுவிடம் கொடுத்து „இந்தா இதைக் குடி „ என்று குடுத்தவள் ஒரு யொக் நிறையத் தேத்தண்ணியையும் போட்டுக் குடுக்கிறாள்.
ஒருவர் வீட்டுக் கதையை இன்னொரு வீட்டுக்கு இரசித்து இரசித்து சொல்வதில் பாக்கியலட்சுமி அந்த ஊரில் பிரபலமானவள்.அவளுக்கு றேடியோ என்ற பட்டப்பெயரும் உண்டு.
மகளுக்கு யொக் நிறையத் தேத்தண்ணியைக் குடுத்துக் குடி என்று சொன்ன நேரம் பார்த்து சரசுவின் வீட்டுக்கு வந்த பாக்கியலட்சுமி' என்னக்கா அவளுக்கு இவ்வளவு தேத்தண்ணியைக் குடுக்கிறாய்' என்று கேட்க, எதைச் சொல்லக்கூடாது என்று கவனமாக சரசுவின் தாயிருந்தாளோ அதை, சரசுவுக்கு மாதவிடாய் இன்னும் வரவில்லையே என்ற மனக் கலக்கத்தில் மறந்து „இல்லைப் பாக்கியம் கல்யாணத்துக்கு முந்தி பொம்பிளை மாப்பிளைக்கு பேதி குடுக்கிறது வழக்கந்தானே, வயித்துக்குள்ளை அழுக்கிருந்தாள் வாய் மணக்குமல்லோ, வாய் மணந்தால் ....பொம்பிளை மாப்பிளைக்கு அது இடைஞ்சல்தானே...என்ன பாக்கியம் குடும்பகாரி உனக்குத் தெரியாதோ அந்தச் சங்கதி எதுக்கு புருசன் பெண்சாதி படுக்கப் போகிற போது வெற்றிலை பாக்கு போடுறது என்று தெரியாதோ „என்று சரசு சொல்ல,அதைக் காதிலை வாங்கியும் வாங்காதவளாக பாக்கியலட்சுமி ;,'மெய்யே சரசுக்கு சூதகம் வந்திட்டுதானே' என்று எதையோ அறிவதற்கு தூண்டில் போடுவது போல கேள்வி கேட்க,'ஓமோம்...அது வந்திட்டுது ஐஞ்சு நாளைக்கு முந்தி அது வந்திட்டுது „ என்று சரசுவின் தாய் பொய் சொல்ல, அதை நம்பாத பாக்கியலட்சுமி' உனக்கென்ன விசரே ஐஞ்சு நாளைக்கு முந்தி சூதகம் வந்தவளுக்கு கடுக்காய் உரசி பேதி குடுத்திருக்காய் இது எல்லாத்தையுமல்லோ கழுவிவிடும்....விசர்த்தனமான வேலையைச் செய்திட்டியே' என்று சரசுவுக்காக அனுதாபப்படுவது போல பாக்கசியலட்சுமி கதைக்க' பாக்கியம்' அப்படி ஒன்றும் நடக்காது' என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு சொல்கிறாள் சரசுவின் தாய்.
சரசுவின் தாய் சரசுவை நினைச்சு நினைச்சு கலங்கிக் கொண்டிருக்க, பாக்கியலட்சுமி இன்னும் பயத்தை அதிகரிப்பது போல கதைத்துக் கொண்டிருந்தாள்.
சரசுவுக்கும் தாய்க்கும் இருந்த மனநிலையில் பாக்கியலட்சுமி கெதியிலை வீட்டிலிருந்து போனால் நல்லது என்று தவித்தார்கள்.
கல்யாண நாள் நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் செந்திலும் சரசுவும் உரிமையெடுத்து மனம் பிறழ்ந்ததால் சரசுவுக்கு மாதவிடாய் வராமல் போனதும்;,அதனை ஊரறிந்தால் மானம் மரியாதை போய்விடுமே என்று தவித்தார்கள், நெருப்புக்கு மேல் நிற்பது போல உணர்ந்தார்கள்.
„மெய்யே செந்திலுக்கும் சரசுவுக்கும் மாணிக்காராசாவைக் கண்டாலே கீரியும் பாம்பும் போல அப்பிடியிருக்க அவன் இஞ்சை வந்து போறானே' என்று இழுக்க...'பாக்கியம் அதுக்க நாங்கள் என்ன செய்கிறது...வலிய வந்து கல்யாண வீட்டு வேலைகளுக்கு உதவி செய்கிறன் „ என்கிறான், என்று உடனடியாகவே சரசுவின் தாய் காட்டமாகப் பதில் சொல்ல,' என்னெண்டாலும் கவனமா இரு „ என்று சரசுவின் குடும்பத்தில் அக்கறையுள்ளவள் போல சொல்லிவிட்டுப் போனவள்,வைக்கல் பட்டடையில் நெருப்புக் கொள்ளியை செருகியது போல சரசுவும் செந்திலும் தனியாகச் சந்திச்சதால் சரசுவுக்கு இன்னும் மாதவிடாய் வரவில்லை என்பதை கசிய விட்டது மட்டுமல்ல உவப்பாக ஊறுகாயாக சரசுவின் தாய் சரசுவுக்கு கடுக்காய்ப் பேதி கொடுத்ததையும் பரப்பி விடுகிறாள்.
இரண்டு நாளைக்குள் அந்தச் செய்தி புயலாக ஊருக்குள் அடிக்கத் தொடங்கிவிட்டது.
பலரும் பலவிதமாக தமது கற்பனைக்கு ஏற்றவிதமாக கதைக்கத் தொடங்கினர்.'அமசடக்குக்காரி அமசடக்காக இருந்து கொண்டு என்ன காரியம் பண்ணியிருக்கிறாள்' என்று சிலரும்' இப்படி வயித்திலை வாங்கினாள்தானே, செந்திலை நழுவாமல் கைக்குள்ளை வைச்சுக்கலாம்' என்று இன்னும் சிலரும் கதைக்கத் தொடங்க சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி அந்த ஊருக்குள் கதைச்சுக் கொண்டிருந்த செய்தி மாணிக்கராசாவின் காதிலும் எட்டியது.
நீண்ட நாள் வன்மத்தை பழிதீர்க்கத் தயாரானான் மாணிக்கராசா.இரவோடு இரவாக சீமெந்துத் பைத்தாளில் அந்த வாசகங்களை எழுதி யாருமே தெருவில் நடமாடாத சாமநேரத்தில் சங்கக்கடைக் கதவில் ஒட்டியவன் அமைதியாக நித்திரை கொள்ளப் போய்விட்டான்.
அடுத்த நாள் சங்கக்கடையைத் திறக்கவந்த கிளை முகாமையாளரான நகுலேஸ்வரன் சங்ககக்கடை கதவில் சீமெந்துப் பைத்தாளில் வாசகங்கள் சில எழுதி ஒட்ப்பட்டிருந்ததை வாசித்து திடுக்கிட நேரத்தோடு சாமான்களை வாங்கவென்று வந்தவர்களும் அதை வாசித்தனர்,அவர்களும் குழம்பித் திடுக்கிட்டனர்.
அரைகுறையாக பசைபூசப்பட்டு ஒட்டப்பட்டிருந்த அந்த தாள் கிழிபடாமல் சுலபமாக முழுத்தாளும் உரிபட ஒருவர் மாறி ஒருவர் மனப்பாடம் செய்வது போல அந்த வாசகங்கள வாசித்தனர்.
பாக்கியலட்சுமியால் முதல் தூவிவிட்ட நெருப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்க' சரசுவின் வயிற்றில் மாணிக்கராசாவின் வாரிசு,ஆனால் அவளின் கழுத்தில் தாலிகட்டப் போவது ஏமாளியான செந்தில், அப்படியானால் உண்மையான கணவன் யார்?.காதலித்தவனா?வாரிசைக் குடுத்தவனா' என்று எழுதி அதன் கீழ் ஊரின் நலன்விரும்பியான ஊர்க்குருவி என்று எழுதப்பட்ட வாசகங்கள் இன்னொரு காட்டுத் தீயாகியது.
மாணிக்காராசா எதுவுமே தெரியாதது போல வீட்டில் இருந்தான்.மாணிக்கராசாவின் வீடு, செந்திலின் வீடு சரசுவதியின் வீடு என ஊரில் அனைவருக்கும் என வேலிதாண்டி அனைத்து வளவுகளுக்கும் சமனாக நின்ற வெள்ளம் போல நிரம்பி நின்றது.
அந்த ஊரின் ஒழுங்கைகளிலும் குச்சொழுங்கைகளிலும் அவரவர் வீட்டுப் படலைகளிலும் கூட்டம் கூட்டமாக நின்று கதைக்கத் தொடங்கினர்.
„ #########################################################
எந்த நாயடா இந்த வேலையைச் செய்தது, ஆரெண்டு தெரியட்டும் எழுதினவனை மேடர் செய்து போட்டு மறியலுக்குப் போகவும் தயார்' என்று, அப்பதான் தனக்கு அந்தச் செய்தி தெரியுமென்பது போல அவனுடைய நண்பர்களுக்குச் சொல்வதும், ஆங்காங்கே படலைக்குப் படலை நின்றவர்களின் காதுகளில் விழத்தக்கதாக மாணிக்கராசா சத்தம் போட்டு சைக்களில் திரிந்து திரிந்து சொல்லிக் கொண்டிருந்தான்.மாணிக்கராசாவின் சுயரூபம் தெரிஞ்ச சிலர் „ உந்த கேடுகெட்ட பொறுக்கிதான் எழுதி ஒட்டியிருப்பான் என்றும் சொன்னார்கள்.
செந்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான்.சரசுவோ நெருப்பிலை விழுந்த புழுவாய் துடிச்சுக் கருகிக் கொண்டிருந்தாள்.சரசுவின் தாயும் தகப்பனும் என்ன செய்வது என்று தெரியாமல் ஆளுக்கொரு மூலையாக சுருண்டு கிடந்தனர்.
சங்கக்கடைக் கதவில் எழுதி ஒட்டிய செய்தி முழுப் பொய் என்று செந்திலின தாய் தகப்பனுக்க விளங்கப்படுத்த வேணும் என்று நினைத்த சரசுவின் தாயும் தகப்பனும் இன்னும் சில நல்லவர்களும், சூட்டோடு ‚சூடாகக் கதைக்காமல் ஆறப் போட்டு மனம் ஒரு நிலைக்கு வரட்டும், நாளைக்கு கதைப்பம் என்று முடிவெடுத்திருந்த நேரம், இரவு ஒரு மணி போல செந்திலின் வீட்டிலிருந்து பெரும் ஓலம் கேட்க,பல வீடுகளுக்கும் அந்தச் சத்தம் கேட்க சரசுவின் தாயும் தகப்பனும் சரசுவும் பக்கத்து வீடான செந்திலின் வீட்டுக்குப் பதட்டத்துடன் ஓட, செந்திலின் தாய் „உன்னாலை என்ரை பிள்ளை செத்திட்டானடி,அவமானம் தாங்காமல் செத்திட்டானடி,நீ தேவடியாளடி போய்ப் பாரடி அவன் வேப்ப மரத்திலை தூங்கிறதை „ என கோபத்துடனும் அழுகையுடனும் குமுற, சரசு வேப்பமரத்தடிக்குப் போய்ச்சேர முந்தியே அங்க ஊர் கூடிவிட்டது.
சரசுவை வைச்ச ஊஞ்சலாட்டிய கயிற்றை கத்தியால் அறுத்து அதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செந்திலின் உடலைக் கீழே இறக்கி வைச்சிருந்தார்கள்.
இனி இந்த ஊரில் இருக்க மாட்டன்.எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவன் யாரென்று எனக்குத் தெரியும்.அவன் அனாதையாக இங்கேதான் இந்த இடத்தில் துடிக்கத் துடிக்கச் சாவான்' என்று சொல்லி எழுந்தவள் செந்திலின் சொண்டில் முத்தமிட்டவள் தாயையும் தகப்பனையும் கூட்டிக் கொண்டு பலர் தடுத்தும் இரவோடு இரவாக கிளிநொச்சிக்குப் போனாள்.
கிளிநொச்சியில் தோட்டம் செய்வதற்கென தகப்பன் ஏற்கனவே வாங்கி வைச்சிருந்த வெறுந்தரையில் ஒரு கொட்டிலைப் போட்டு சரசுவும் தாயும் தகப்பனுமாக ஒரு இலட்சிய வெறியோடு வாழத் தொடங்கினர்.ஆனால் ஒரு கோழையாக செந்தில் தற்கொலை செய்தது அவளின் மனசை அரித்துக் கொண்டே இருந்தது...ஆனால் என்ன செய்வது விதியின் மேல் பாரத்தைப் போட்டு பெருமூச்சில் அதை மறக்க நினைச்சாள்...ஆனால் அதை மறக்க முடியவில்லை...
அவளின் மனத் திரையில் செந்திலும், ஊஞ்சலும் வேப்பமரமும் வந்து போயக் கொண்டேயிருந்தன எப்பொழுதும்.நாட்கள் செல்லச் செல்ல வெறுந்தரை வாழைமரங்களாலும் தென்னை மரங்களாலும் மாமரங்கள் பலாமரங்கள்; என பெரும் சோலையாவே மாறியது.
சரசு ஒரு தையல்கடையில் தையல் பழகி தனியாக வீட்டில் வைச்சு தைச்சுக் குடுக்கத் தொடங்கினாள்.அவளுக்குப் பெண்குழந்தை பிறந்தது.செந்தில்குமாரி என்ற பெயர் வைச்சாள்.செந்தில்குமாரியை படிக்க வைச்சாள்.பேராதனைப் பல்கலைக் கழகத்தில் செந்தில்குமாரி பட்டதாரியானாள்.
இதற்கிடையில் சரசுவின் தாயும் தகப்பனும் மூப்புக் காரணமாக இறந்துவிடுகிறார்கள்.தான் இருந்த ஊருக்குக்கூட தாய்தகப்பன் இறந்ததை அவள் அறிவிக்கவில்லை.
செந்தில்குமாரி கிளநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரானாள்.தக்க தருணத்தில் தனக்க நேர்ந்த கொடுமையை மகளுக்கு சரசு சொன்னாள்.அமைதியாக தாயின் கதையைக் கேட்ட செந்தில்குமாரி பிரதிபலிப்பாக எதையுமே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள்.
நினைவுகளிருந்து மீண்ட சரசு யாழ்ப்பாணத்திலிருந்து கிளநொச்சி போகும் பஸ்ஸைப் பிடித்து கிளிநொச்சி போய்ச் சேர்ந்தாள்.
ஊரில் , சரசு ஊருக்கு வந்த போது சரசுவைக் கண்டதும் பூட்டிய மாணிக்கராசாவின் தேத்தண்ணிக் கடை இரண்டு நாட்களாக பூட்டியிருப்பதைக் கண்ட ஊரார் கடைக்கு கிட்டப் போய் அசிகை பார்த்த போது பொலிடோலின் மணம் வரவே கடையை உடைத்து பார்த்த போது அங்கே மாணிக்கராசா பொலிடோல் குடித்து தற்கொலை செய்து செத்துக் கிடந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் வடிந்திருந்தது.
மாணிக்கராசாவிற்கு கல்யாணம் நடக்கவேயில்லை.அவன் பிரமச்சாரியாகவே செத்தான்.அவனுக்கு கல்யாணம் பேசி வந்த போது செந்திலுக்கும் சரசுவுக்கும் செய்த சூழ்ச்சியை அறிஞ்ச ஊராரில் சிலர் அவனை வெறுத்து அவனுக்க பெண் குடக்க வருபவர்களிடம் அவனைப் பற்றிச் சொல்லி தடுத்து நிறுத்தினர்.
மாணிக்கராசா பொலிடோல் குடிச்சு தற்கொலை செய்ததை சரசு அறிஞ்ச போது முப்பதிநாலு வருடங்களாக அவளின் நெஞ்சில் முட்டிநின்ற அழுத்தம் இல்லாமல் போய் நிம்மதியானாள்.
#########################################################
அடையாளம் (பகுதி 3)
ஏலையா க.முருகதாசன்
இன்னும் இரண்டு மாதத்திற்குள் கல்யாணம் நடக்கப் போகுததானே, செந்திலுக்குச் சரசுவென்றும் சரசுவுக்கு செந்திலென்றும் முடிஞ்ச முடிவாகிவிட்டுது என்றோ ஒருவர் வீட்டுக்கு ஒருவர் எப்பவும் எந்த நேரத்திலும் வந்து போகலாம் என்ற எதார்த்த நிலை இருந்த போதும் வீட்டிலே யாருமே இல்லாத போது தனிமையில் செந்திலும் சரசுவும் வீட்டில் வைச்சுச் சந்திப்பதால் நேரும் சில கட்டுப்பாட்டு உடைவுகளால் என்ன நடக்கும் என்பதை இரு வீட்டாரின் பெற்றோர் தெளிவாக அறிஞ்சும் வைச்சிருந்தார்கள்.
சும்மா மெல்லுற வாய்க்கு அவல் கிடைச்சது போல,சரஸ்வதியின் வீட்டிலிருந்து பெற்றொர் வெளியே போவதையும் செந்தில் அங்கு போவதையும் கவனிச்சு அதைப்பற்றியே கதைப்பதும் அதை ஊர் முழுக்க ஊதிவிடுவதும் சிலரின் அன்றாட வேலையாகவிருந்தது..
குதையை பரப்பிவிடுவதற்குப் பின்னால் மாணிக்கராசா இருக்கிறான் என்பது செந்திலுக்கோ சரசுவிக்கோ தெரியாது.சரசு தனிமையில் இருந்த போது செந்தில் அவளின் படுக்கையறைவரை வந்து போனதற்குப் பிறகு சரசுவின் அன்றாட நடவடிக்கையில் ஒரு பதட்டமும் பயமும் இருப்பதை தாய் அறிந்து கொணடாள்.
சரசு தாயை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தத்தளித்தாள்.செந்திலும் எதையுமே முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சரசுவின் வீட்டுக்கு வந்து போனாலும் சரசுவின் தாயாரையே தகப்பனையோ பார்க்கத் தயங்குவதை சரசுவின் தாயும் தகப்பனும் புரிஞ்சு கொண்டார்கள்.
கடவுளே நான் நினைக்கிற மாதிரி அவர்களுக்கிடையில் ஏதும் நடக்காமல்; இருந்திருக்க வேண்டும்.அப்படி அவர்களிருவரும் நிலைதடுமாறி அது நடந்திருந்தாலும் சரசவுக்கு மாதவிடாய் வந்துவிட வேணும் என்று பதறிய சரசுவின் தாய் வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டினாள்.
எங்களுக்குள்ளேயே இந்த விசயத்தை வைச்சிருக்க வேணும், வாய்தடுமாறித் தன்னும் யார் காதிலும் விழாமல் இருக்க வேணும் என தனக்குள் தாய் நினைச்சுக் கொண்டாள்.
இந்த விசயத்தை சம்பந்தி வீட்டாருக்கு தெரிவிப்பது நல்லது என்று நினைச்ச சரசுவின் தாய், எப்போதும் போல செந்திலின் வீட்டுக்குப் போய் கல்யாண வேலைகளை அதற்கான ஆயத்தங்கள் பற்றியும் கதைச்சுப் போட்டு தாங்கள் வெளியில் போனதற்குப் பிறகு சரசு தனிமையில் இருந்த போது செந்தில் வந்ததையும் சொல்லி அதற்கு சரசு தன்னை நிமிர்ந்து பார்க்கப் பயப்படுகிறாள் அவை இரண்டு பேருக்கும் இடையில் ஏதேன் நடந்திருக்குமோ என்று பயமாயிருக்கு என்று சரசுவின் தாய் கவலையுடன் சொல்ல' அதற்கேன் பயப்படுறியள், இன்னும் இரண்டு மாசத்துக்குள்ளை அவைக்கு கல்யாணம் நடந்திடுந்தானே, அப்படி ஏதாவது நடந்தாலும் அதுவும் பிரச்சினையில்லை ஊர் அதைக் கதைக்கும் இதைக் கதைக்கும் என்று கவலைப்படாதீர்கள்' என்று செந்திலின் தாய் சொல்ல, „வயித்திலை வாங்கிட்டாள் அதுதான் இரு பகுதியினரும் அவசரம் அவசரமாக கல்யாணத்தைச் செய்து வைச்சிருக்கினம் என்று சொல்ல மாட்டினமோ' என்று சரசுவின் தாய் சொல்ல,'அது எங்கள் இரண்டு குடும்பத்துக்கும் உள்ள விடயம்,அதில் மற்றவர்கள் தலையிட வேண்டிய அவசியம் இல்லையே „ என்று சரசுவின் தாயை ஆறுதல் படுத்தி அனுப்பினாலும்,சரசுவின் தாயால் சமாதனமடைய முடியவில்லை.
அவைக்கென்ன அவை ஆம்பிளைப் பிள்ளையை வைச்சிருக்கிறவை அவை அப்பிடித்தான் சொல்லுவினம், பொம்பிளைப் பிள்ளையை வச்சிருக்கிற நாங்கள்தான் பயப்பட வேண்டியிருக்கு,முள்ளிலை சீலை விழுந்தாலும், சீலையிலை முள் விழுந்தாலும் பாதிப்பு சீலைக்குத்தான் என்பது போல கல்யாணத்துக்கு முந்தி ஏதாவது நடந்தால் வயித்திலை வாங்கி செந்திலை மடக்கிப் போட்டாளவை என்று ஊரிலை சிலர் பல்லுக்க மேலை நாக்கைப் போட்டுக் கதைக்கப் போயினமே என்ற கலக்கத்துடன் வீட்டுக்கு வருகிறாள் சரசுவின் தாய்.
சிலர் யாருக்குமே சொல்லமாட்டம் இரகசியத்தை ஆழப்புதைத்து அதற்கு மேல் கொங்கரீட் போட்டு மூடி வைச்சிருப்போம் என்று சொன்னாலும் அவர்களையறியாமலே யாருக்காவது சாடைமாடையாகச் சொல்லிவிடுவார்கள்.
செந்தில் சரசு காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து அது கல்யாணம்வரை சுமூகமாக வந்து நிற்பது ஊர் அறிஞ்ச விடயந்தான்.
கல்யாண நாள் நெருங்க நெருங்க செந்திலின் வீட்டுக்கும் சரசுவின் வீட்டுக்கும் அவ்வூரிலுள்ள சொந்தக்காரங்கள் அவ்விரு வீட்டுக்கும் புதினம் அறிவதற்கென்றே போய்வரத் தொடங்கினார்கள்.
இரு வீட்டிலும் மிளகாய் இடிச்சு தூளக்கி வைச்சிருப்பதும், கோப்பிக் கொட்டை வறுத்து இடிச்சு தூளாக்கி வைச்சிருப்பதிலிருந்து ஊருக்கு அது புதினமாக்கப்பட்டது போய் வந்தவர்களால்.
போய்வந்தவர்களில் பாக்கியலட்சுமி செந்திலின் தாயிடம் „ என்னக்கா செந்தில் இப்ப ஒவ்வொருநாளும் உனக்கு மருமோளாக வரப்போறவளைத் தேடிப் போறான் போல, மருமோளின்ரை தாய்தகப்பன் இல்லாத நேரமும் பார்த்துப் போய் வருவதாய் என்ரை காதிலை வந்து விழுந்துது எதற்கும் கவனமாய் இரு „ என்று சொந்தக்கார சொல்ல,' அவன் என்ன இன்று நேற்றா போய் வருகிறான் யங்கி போடாத காலத்திலிருந்துதானே போய் வருகிறான், மருமோளுக்கு தாலி கட்டாத குறை மட்டுந்தான் இப்ப செந்திலும் சரசுவும் புருசன் பெண்சாதி மாதிரித்தானே' என்று செந்திலின் தாய் சொல்ல, அதை நல்லாய் மனப்பாடம் செய்து மனசிலை பதிய வைச்ச பாக்கியலட்சுமி, செந்திலின் தாயிடம் போன கையோடை பக்கத்து வீடான சரசுவின் வீட்டுக்குப் போய், இப்பதானக்கா உங்கை பக்கத்து வீட்டுக்குப் போயிட்டு வாறன்,சரசு தனிய இருக்கேக்கை செந்தில் வந்து போறதைப் பற்றிக் கேட்க அதுக்குச் செந்திலின்ரை தாய் இப்பவும் அவை இரண்டு பேரும் புருசன் பெண்சாதி மாதிரித்தானே என்று எடுத்தெறிஞ்சு பேசுறா'... என்று பாக்கியலட்சுமி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரசுவின் தாய்க்கு சுளீர் என்றது,அந்த நேரம் பார்த்து சரசு கோலுக்கு வந்து கதிரையில் உட்கார „மெய்யே அக்கா நான் கேட்கவென்று நினைசு;சு ஒரு விசயத்தை மறந்து போனன்' என்று இழுக்க, என்ன என்பது போல சரசுவின் தாய் பார்க்க „ இல்லை பிள்ளையின்ரை சூதக நாள் பார்த்துத்தானே நாள் குறிச்சனீங்கள்,எப்படியும் கல்யாணப் பொம்பிளைக்கு சூதகம் வந்து எட்டாவது நாள் இருக்கத்தக்கதாகத்தான் நாள் வைக்கிறவை,நீங்கள் நாள் வைச்ச நாளைப் பார்த்தால் பொம்பிளையலுக்கு வருகிற நாள் கணக்கைப் பார்த்தால் சரசுவுக்கு இன்னும் ஐஞ்சாறு நாளைக்குள்ளை வந்தால்தானக்கா வைச்ச நாளுக்குச் சரியாக இருக்கும் „ என்று சொல்ல ஏற்கனவே சரசுவை நினைச்சுப் பயந்து கொண்டிருந்த தாய்க்கு படபடப்பு ஏற்பட கதிரையிலை உட்கார்ந்து பாக்கியலட்சுமி தாயுடன் கதைச்சுக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த சரசு திடுக்கிட்டு தாயாரையும் பாக்கியலட்சமியையும் பார்த்தவள் தனது பதட்டைத் காட்டக்கூடாது என்பதற்காக முகத்தை இயல்பாக வைச்சிருப்பது போல நடிச்சாலும் அவளின் முகம் மாறிப் போனதை பாக்கியலட்சுமி கவனிக்கத் தவறவில்லை.
„சரியக்கா நான் வாறன் „ என்று சரசுவின் வீட்டிலிருந்து வெளிக்கிட்ட பாக்கியலட்சுமி பெரும் புதினத்தை தலையில் சுமந்து செல்வது போலச் சென்றவள் விளம்பரம் அடிச்சு ஒட்டாத குறையாக தன்னொத்த இரண்டொருவருக்குச் சரசுவின் வீட்டிலிருந்து அறிஞ்ச விடயங்களைச் சொல்ல கேட்டவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனுக்கேற்ப அதை உருமாற்றி „கல்யாணத்துக்கு முந்தியே சரசுவுக்குச் சூதகம் வரவில்லையாம் இதென்ன கூத்து,செந்திலும் சரசு தனிய இருக்கேக்கை போய்வாறவனாம், அவனும் என்ன செய்யிறது பயிர் அவன்ரைதானே மேய்ஞ்சிருப்பான் என்று கொச்சைத்தனமாகவும் ஆணியடிச்சாப் போல உண்மையென்று சொல்ல அந்தச் செய்தி மாணிக்கராசாவின் காதுக்கும் எட்டியது.
சிறு வயதிலிருந்தே செந்திலின் மீதும் சரசுவின் மீதும் வன்மத்தை வளர்த்து வந்த மாணிக்கராசா தனது பழிதீர்க்கும் படலமாக இழிவான செயலை ஆரம்பித்தான்.
எதார்த்தமாக கல்யாண வேலைகளுக்கு உதவி செய்யப் போவது போல சரசுவின் வீட்டுக்கு ஒருநாள் போனபோது அவன் தங்களுடைய வீட்டுக்கு வந்ததை விரும்பாத சரசு வேண்டா வெறுப்பாக அவனை வரவேற்று கதிரையில் உட்காரச் சொன்னாள்.
அடுப்படிக்குள் இருந்து வந்த சரசுவின் தாய் மாணிக்கராசாவைக் கண்டதும்,அவன் வீட்டுக்குள் வந்ததில் விருப்பமில்லாவிட்டாலும், „தேத்தண்ணி கொண்டு வாறன்; குடியுங்கோ' என்று சொல்ல „ வேண்டாம் இப்பத்தான் வீட்டிலை குடிச்சிட்டு வாறன்,சரசுவின்ரை கல்யாண நாளும் நெருங்குது ஏதாவது உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கோ, அது கேட்கத்தான் வந்தனான்' என்று சொன்ன மாணிக்கராசா எழுந்து போய்விடுகிறான்.
அதற்குப் பிறகு சரசுவின் குடும்பத்தில் மிகுந்த அக்கறை உள்ளவனாக கிழமைக்கு ஒருமுறையாவது மாணிக்கராசா சரசுவின் வீட்டுக்க வந்து போக,அதை விரும்பாத சரசு „இவன் ஏனம்மா தேவையில்லாமல் இஞ்சை வந்து போகிறான்,எனக்கு இவன் வாறது கொஞ்சமும் பிடிக்கவேயில்லை' என்று சொல்ல „நான் என்ன செய்யிறது வாறவனை வரவேண்டாம் என்று என்னெண்டு முகத்திலை அடிச்சமாதிரிச் சொல்லுறது „என்று சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த தகப்பனும் „விடு பிள்ளை அவனைப் பற்றித் தெரியுந்தானே, நெருப்பென்றால் சுடவா போகுது' என்று சொல்லுகிறார்.
செந்திலிடமும் மாணிக்கராசா வீட்டுக்கு வந்து போவதை தான் விரும்பவில்லை என்று சரசு சொல்ல,' ஒரு வேளை அவன் திருந்திவிட்டானோ தெரியாது, என்னட்டையும் கேட்டவன் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்றால் கேட்கச் சொல்லிச் சொன்னவன் என்று சரசுவைச் சமாதானப்படுத்தினான்.
சரசுவின் தாய்க்கோ மனசில் நிம்மதியில்லாமலிருந்து.கதைபிடுங்க வந்த பாக்கியலட்சுமியிடம் சரசுவுக்கு மாதவிடாய் வர இன்னும் ஐஞ்சாறு நாட்கள் இருப்பதாக சரசுவின் தாய் சொல்லியிருந்தாள்.
ஐஞ்சாறு நாட்கள் பொறுத்து மகளிடம்,'சுகமில்லாமல் வரேலையா' என்று கேட்க,தனது பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,' அம்மா அது வர ஒருநாள் இரண்டு நாள் பிந்தும் முந்தும் „ என்று சொல்லி தன்னையும் தாயையும் சமாதானப்படுத்தினாள்.
ஆனால் ஒரு கிழமையாகி பத்து நாளாகியும் மாதவிடாய் வரவேயில்லை.சரசுவுக்கு பயம் பிடிச்சுக் கொண்டது.சோர்வோடு அறையில் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டவளிடம் „ ஏனடி இப்படிச் செய்து துலைச்சாய் ஆம்பிளையள் ஆவலாதிப்பட்டாலும் நீயெல்லோடி மன அடக்கமாயிருந்திருக்க வேணும், இப்ப என்ன செய்யிறது கொப்பா அறிஞ்சா உன்னைப் பற்றி என்ன நினைப்பார்'என்று சரசுவின் தாயார் மகளிடம் பொரிஞ்சு தள்ளிக் கொண்டிருக்கும் போது,செந்தில் வர, யாரோ வரும் அசிகை தெரிஞ்சு,அறைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த சரசு, கோலில் செந்தில் நிற்பதைக் கண்டதும், கையைப் பிடிச்சு இழுக்காத குறையாக அறைக்குள் வரச் சொன்னவள் „ நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து என்ன காரியம் செய்து வைச்சிருக்கிறியள் இரண்டு பேரும் படிச்சனீங்கள்தானே, உங்கள் இரண்டு பேருக்கும் தெரியேலையா இப்படி அவசரப்பட்டால் என்னென்ன நடக்குமென்று, ஒரு இரண்டு மாசம் பொறுத்துக் கொள்ள முடியாமல் போச்சுதே உங்கள் இரண்டு பேராலும் அவளை விடு நீங்களாவது யோசிச்சு இருக்க வேண்டாமா„ என்று கோபமும் அழுகையுமா சரசுவின் தாய் சொல்ல, எதுவுமே சொல்ல முடியாத நிலையில் தலையைக் குனிஞ்சு கொண்டு கதவோடு சாய்ஞ்சு கொண்டிருந்த செந்தில் முகத்தில் வழிஞ்ச வியர்வையை கைகளால் துடைச்சபடி தரையைக் குனிஞ்சு பார்த்தபடியே நின்றவன்,சரசுவிடம் வாறன் என்று சொல்லியபடி போய்விடுகிறான்.
யாருக்குமே இது தெரியப் போவது இல்லை,அதுக்கிடையில் தனக்கும் சரசுவுக்கும் கல்யாணம் நடந்திடும், அதுக்குப் பிறகு பிறக்கப் போகும் குழந்தை நாள் கணக்கிலோ மாசக் கணக்கிலோ முந்திப் பிறந்தாலும் அதைப் பற்றி யாருமே ஆராயமாட்டார்கள் என்று தனக்குத்தானே நிம்மதியைத் தேடிக் கொண்டாலும் அதை சரசுவின் தாயிடமோ, சரசுவிடமோ அவனால் சொல்ல முடியாது.
என்ன செய்வது என்று தெரியாமல் பதகலிப்பட்ட சரசுவின் தாய் கடுக்காயை வாங்கி அதை சிரட்டையில் வைச்சு உரசி „இந்தா எந்தக் கேள்வியும் கேட்காமல் கண்ணை மூடிக் கொண்டு இதைக் குடி இதுவாவது சரிப்படுத்துமா என்று பார்ப்பம்' என்று சரசுவின் தாய் சொல்ல வாங்கிக் குடிக்கிறாள் சரசு.
ஒரு யொக் நிறையைத் தேத்தண்ணியைப் போட்டுக் குடுத்து முழுசையும் குடி என்று சொல்லிக் குடுக்கிறாள்.
அப்பொழுது பாக்கியலட்சுமி வருகிறாள்......
(தொடரும்)
அடையாளம் ( பகுதி:2)
ஏலையா க.முருகதாசன்
சரசுவை ஊஞ்சலில் இருத்தி செந்தில் ஆட்டும் போது சரசு மகிழ்ச்சியாக இருப்பாள்.அதை வைத்த கண் வாங்காமல் மாணிக்கராசா பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒரு நாள் சரசு ஊஞ்சலில் இருந்து தானாக ஆடிக் கொண்டிருந்த போது அவளுக்குத் தெரியாமல் பின்பக்கமாக வந்த மாணிக்கராசா ஊஞ்சலைப் பிடித்து ஆட்டுவது போல பின்னுக்கு இழுத்து சரசுவை விழுத்துவதற்காகவே முன்னுக்கு ஊஞ்சலை வேகமாக தள்ளிவிட, ஊஞ்சல் இருக்கையிலிருந்து நிலைகுலைந்த சரசு முகம் தரையோடு முட்டிவிழ அவள் அழ அதைக் கண்ட செந்தில் ஓடிவந்து அவளைத் தூக்கிவிட்டு ஏன் விழுந்தனி என்று கேட்க பற்களில் இருந்து இரத்தம் கசியக் கசிய அழுதவாறே'அவன் மாணிக்கந்தான் வேண்டுமென்று ஊஞ்சலைத் தள்ளிவிட்டவன் „ என்று சொன்னதுதான் தாமதம்,செந்தில் அவன் மீது பாய்ந்து அவனை அடிக்க, அவனும் செந்திலை அடிக்க இருவரும் தரையில் உருண்டு பிரண்டு சண்டை பிடிக்க அவர்கள் இருவரையும் விலத்திவிட சிறுவர் சிறுமிகள் எடுத்த முயற்சிகள் தோல்வியடைய வீதியால் போனவர்கள் விலக்குப் பிடித்துவிட வேண்டிய நிலைக்கு அந்தச் சிறு சண்டை பெருஞ்சண்டையாக மாறிவிட்டது.
மேலெழுந்தவாரியாக பார்த்த போது மாணிக்கராசாவிற்கும் செந்திலுக்கும் ஏற்பட்ட சண்டை விலக்குப் பிடித்துவிட்டதோடு முடிந்துவிட்டது என்று தோன்றினாலும் ஒருவரையொருவர் வெறுக்கத் தொடங்கிய அத்திவாரம் போட்ட நிகழ்வாகவே அது வளரத் தொடங்கியது.
அந்த இரு சிறுவர்கள் மத்தியிலும் அவ்வப்போது விளையாட்டு நேரங்களில் ஒற்றுமை ஏற்பட்ட போதும் அது நிரந்தரமானதாக இருக்கவில்லை.சரசு இருக்கும் போதெல்லாம் சிறு சிறு சச்சரவுகள் அவர்களுக்கிடையே வந்து கொண்டுதானிருந்தது.
சிறுவர்கள் பெரியவர்களிடமிருந்தும் சுற்றுச்சூழலிருந்துமே பழக்க வழக்கங்களையும் வார்த்தைகளையும் கற்றுக் கொள்கிறார்கள் என்ற உண்மையை மெய்ப்பிப்பது போல ஒரு நாள் மாணிக்கராசா செந்திலைப் பார்த்து „ ஏண்டா எப்பவும் நீ அவள் சரசுவின்ரை பக்கம் நிற்கிறாய் அவள் உனக்கு என்ன பெண்டாட்டியா „ என்று கேட்க பதிலுக்கு „ஓமடா நான் அவளைத்தான் கட்டுவன் அதுக்கு உனக்கென்னடா' என்று கோபமாகச் சொன்னான் செந்தில்;.
அந்த வேப்பமரத்தடியில் விளையாட வரும் சிறுவர்கள் பெண்டாட்டி என்று சொல்லின் தாற்பரியத்தை முற்றுமுழுசாகத் தெரிஞ்சு கொள்ளாமலே சரசு வேப்பமரத்தடிக்கு விளையாட வரும்போதெல்லாம் „செந்திலின்ரை பெண்டாட்டி வாறா என்று கேலிபண்ணி கெக்கட்டம் போட்டு சிரிப்பதைக் கேட்டு ஆரம்பத்தில் சிணுங்கி அழுத சரசு நாள் செல்லச் செல்ல அதைப் பரவாய் பண்ணாமல் விட்டுவிட்டாள், அந்த வார்த்தை அவளுக்குப் பழக்கமாகிவிட்டது.
வேப்பமரத்தடியில் சிறுவர்கள் செய்யும் அட்டகாசங்கள்,சண்டைசச்சரவுகள் கேலிப் பேச்சுக்கள் யாவும் சிறுவர்கள் மூலமாக அவரவர் பெற்றோருக்குப் போய்ச் சேர்ந்து அது ஊர் முழுவதம் பரவத் தொடங்கியது.
சிறுவர்களின் நடவடிக்கைகளைப் பார்த்த பெரியவர்கள்'முளைச்சு மூன்று இலை விடவில்லை, பொடிப்பிள்ளையளின்ரை கதையைப் பாருங்கோ „ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் .
சிறுவர்கள் மெல்ல மெல்ல வளரத் தொடங்க அவர்களுடன் இருந்த நட்பும் குரோதமும் வளரத் தொடங்கியது.
சரசுவும் கொள்ளை அழகுடன் வளரத் தொடங்கினாள்.அரும்பு மீசையுடன் மாணிக்கராசவும் செந்திலும் இன்னும் சிலரும் வனப்புமிக்கவளாக சரசுவும் சித்திரமேழியில் இருந்த ஆரம்ப பள்ளிக்கூடத்திலிருந்து வகுப்பேற்றம் பெற்று மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் படிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே சரசு பூப்பெய்தி அவள் பள்ளிக்கூடம் வராமல்விட,அவளின் வீட்டில் ஓலிபெருக்கியுடன்; தவில் நாதஸ்வரச் சத்தத்துடன் பூப்புனித நீராட்டுவிழா நடைபெற்றது.
செந்தில் தனது தாய்தகப்பனுடன் அவ்விழாவிற்கு போயிருந்தான்.செந்தில் வருவானா என ஆவலாதிப்பட்ட கண்களின் ஆவலாதி தீர்ந்தது போல அவனைக் கண்டதும் சரசுவின் முகம் பூரித்ததை செந்திலும் கவனித்தான்,பந்தலுக்குள் இருந்த ஒருசிலரும் கவனித்தார்கள்.அவர்களில் ஒருத்தி பக்கத்திலிருந்த பொம்பிளைக்கு தோளால் இடித்து அங்கை பார் „ அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள் நடக்குது கவனிச்சியா „ „ம்..ம் கவனிச்சனான்' என்று இடிவாங்கிய இடிதாங்கிப் பொம்பிளை சொன்னாள்.
மாணிக்கராசா தன்னுடைய பெற்றோருடன் வந்ததைக் கண்ட சரசுவின் முகம் சுருங்கி கறுக்கத் தொடங்கியது.
„ நீ இஞ்சை ஏன் வந்தனி' என்ற வெறுப்புடன் மாணிக்கராசாவைப் பார்த்தவள் அடிக்கடி தலையைக் குனிவதும் செந்திலைப் பார்ப்பதுமாகவே இருந்தாள்.
செந்திலுக்கும் சரசுவுக்குமிடையில் அவர்களையறியாமலே காதல் வளரத் தொடங்கி பல நாட்களாகவிட்டன.அவர்களிருவரும் சிறுவன் சிறுமியாக இருந்த போது அவர்களுக்கிடையிலிருந்த பிரியம் இப்பொழது காதலாகி விருட்சமாகி நின்றது.
சரசு பூப்புனித நீராட்டு விழா முடிஞ்சு மீண்டும் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் அவளைப் புதுமையாகவே சக மாணவர் மாணவிகள் பார்த்தனர்.
பொடியங்கள்'டேய் செந்தில் உன்னுடைய ஆள் சரோஜாதேவியைவிட அழகாயிருக்கிறளடா, நீ குடுத்து வைச்சவன் மெய்கண்டான் சரோஜாதேவியென்றே பெயரை வைச்சுவடுவம்' என்றார்கள்.எல்லாவற்றையும் புரிந்து கொண்ட சக மாணவர்கள் „இனி மச்சான் செந்திலின்ரை காட்டிலை மழைதான்' என ஒருத்தன் சொல்ல, காட்டிலிலா இல்லாட்டி கட்டிலிலா „ என்று இன்னொருத்தன் கிண்டலடித்தான.;
ஒருவிதத்தில் தனது காதலியின் அழகைப் பற்றி தனது நண்பர்கள் பேசுகிற போது செந்திலுக்கு அது பெருமையாக இருந்தாலும் , இன்னொருவிதத்தில் அவளின் அழகைபற்றி எல்லாரும் பேசுவதை அவன் விரும்பவில்லை.
ஒரு அழகி செந்திலுக்கு கிடைத்திருக்கிறாளே என்ற பெறாமை மாணிக்கராசாவை வாட்டி வதைக்கத் தொடங்கியது.ஆனால் அவனால் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை.
செந்தில் சரசுவின் காதலைப் பற்றி அவர்களின் தாயும் தகப்பனும் தெரிந்து கொண்டிருந்த போதும் அதை அவர்கள் எதிர்க்கவில்லை.
மெய்கண்டான் பள்ளிக்கூடத்தில் எஸ்.எஸ்.சி சோதனையில் சித்தியடைந்த செந்தில் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலையில் ஒரு கிளார்க்காக வேலையில் சேர்ந்தான்.
அவன் சீமெந்துக்கு தேவையான கற்களைத் தோண்டி எடுக்கும் பகுதியான குவாரிக்குப் பொதுவான அலவலகத்தில் அவன் வேலை செய்து கொண்டிருந்தான்.
எஸ்.எஸ்.சி சோதனையை எடுத்ததுடன் பள்ளிக்கூடத்தை விட்டு விலகிய சரசு வீட்டிலிருக்கப் பிடிக்காமல் பண்டத்தரிப்பு பலநோக்கக் கூட்டுறவுச் சங்கம் நடத்திய மின்தறி தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கினாள்.
தான் வேலைக்குப் போவதை செந்தில் ஏற்றுக் கொள்வாரோ ஏற்றுக் கொள்ள மாட்டாரோ என்ற தயக்கத்தினாள் ஒரு நாள் செந்திலிடம்'சும்மாயிருக்க விசராயிருக்கு பண்டத்தரிப்பு வீவீங் சென்றருக்கு பொம்பிளைப் பிள்ளையளை வேலை செய்ய எடுக்கினமாம் போகட்டா, வேறை பிள்ளையளும் போகினமாம்,கனபேர் வேலைக்குப் போனால் யூனியன் வான் வந்து ஏற்றிக் கொண்டு போய் பிறகு கொண்டு வந்துவிடுமாம் பாதுகாப்பாக இருக்கும் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நான் போகேலை'என்று சரசு சொல்ல, „ எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை வேற பிள்ளையளும் வாறதாலை பயமில்லை நீ வேலைக்குப் போ' என்று செந்தில் சொன்னதால் சரசுவுக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
தங்களுடைய பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள், அதனால் கனநாள் வைச்சு அதை இழுத்தடிக்காமல் கல்யாணத்தை செய்து வைக்க வேண்டும் என்று எண்ணம் செந்திலின் தாய்தகப்பன் மனசிலும் சரசுவின் தாய்தகப்பன் மனசிலும் எழுந்த போதிலும் யார் முதலில் இந்தப் பேச்சைத் துவக்குவது என்பதை உடைத்தது சரசுவின் தாயும் தகப்பனுந்தான்.
பக்கத்து வீடு என்பதால் செந்திலின் வீட்டுக்குப் போன சரசுவின் தாயும் தகப்பனும் சரசுவும் செந்திலும் விரும்புவதையும் சொல்லி கல்யாணத்தை செய்து வைப்போமா என்று கேட்க, நாங்களும் அதைத்தான் உங்களிடம் கேட்பம் என்றிருந்தம் ஆனால் எப்படிக் கேட்பது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தம் என்று செந்திலின் தாயும் தகப்பனும் சொல்ல அன்றிலிருந்து கல்யாண வேலைகளை ஆரம்பித்தனர் இரு வீட்டாரும்.
தமக்கு கல்யாணம் செய்து வைக்க ஆயத்தங்கள் செய்கிறார்கள் என்பதை செந்திலும் சரசுவும் அறிந்த போதும் எதுவுமே தெரியாதது போல நடந்து கொண்டார்கள்.ஆனால் சரசுவின் தாயும் செந்திலின் தாயும் இன்னும் இரண்டு மாதங்களில் கல்யாணம் நடக்கப் போவதைச் சொன்னதும் அவர்களிருவருமே தமது காதல் ஏற்றுக் கொள்ளப்பட்டு கல்யாணம் வரையும் போய் நிற்பதை நினைத்துப் பூரித்துப் போனார்கள்.
சரசுவின் வீட்டுக்கு செந்தில் முன்பு போல எதார்த்தமாக போய் வந்து கொண்டிருந்தான் அன்றும் அப்படித்தான் சரசுவின் வீட்டுக்குப் போயிருந்தான்.அப்பொழுது அங்கே சரசுவின் தாய் தகப்பன் யாருமே இருக்கவில்லை.
செந்தில் சரசு வீட்டுக்கு தாய்தகப்பன் இல்லாத போது போனால் அவர்களிருவரும்; அருகருகே உட்கார்ந்து கதைத்துக் கொண்டிருப்பார்கள். ஆக மிஞ்சிப் போனால் சரசு செந்திலின் தோளில் சாய்ஞ்சபடி கதைச்சுக் கொண்டிருப்பாள்.
அன்று வீட்டுக்குள் நுழைந்த செந்தில் சரசு என்று கூப்பிட்டுப் பார்த்திருக்கிறான்.முன்பென்றால் சரசு எங்கை இருந்தாலும் கூடத்துக்கு வேகமாக வந்துவிடுவாள்.
ஆனால் இன்னும் இரண்டு மாதத்திலைதான் கல்யாணம் நடக்கப் போகின்றதே என்று உரிமையில்' நான் இங்கை அறைக்குள்ளை இருக்கிறன் இங்கை வாங்க' என்று சரசு கூப்பிட , சரசு இருந்த அறைக்குள் போன செந்தில் கட்டிலில் பரவிக் கிடந்த பட்டுச்சீலைகளையும், திறந்திருந்த வெல்வெட் பெட்டிக்குள் இருந்த நகைகளையும் பார்த்துக் கொண்டே „சரசு இதெல்லாம் எங்கடை கல்யாண வீட்டுக்கா வாங்கினது „ என்று கேட்டுக் கொண்டே கட்டிலில் உட்காருகிறான்.
„ம் அதுக்குத்தான் „ என்ற சொன்னபடியே அவனருகில் கட்டிலில் உட்காருகிறாள் சரசு.
உட்கார்ந்தவள் அவன் தோள்மீது தலை வைச்சபடி'இந்த இரண்டு மாதம் கெதியிலை போச்சுதென்றால் எவ்வளவு நிம்மதியாக இருக்கும்' என்று சொன்னவளின் முகத்தைப் பார்க்கிறான் செந்தில்.கல்யாணக்களை அவள் முகத்தில் பூரிப்பாகத் தெரிகிறது.அதை இரசித்தபடி தனது முகத்தை அவளின் முகத்தோடு நெருக்கமாக்கிக் கொள்கிறான்.
ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்காதது போல இதுவரை கட்டிக் காத்து வந்த இருவரின் மன அடக்கமும் தடம்புரள இனி என்ன புருசன் பெண்சாதியாகப் போகிறந்தானே என்று தம்மைச் சமாதானப்படுத்திக் கொண்ட செந்திலும் சரசுவும் தம்மை மறந்து உடலால் இணைந்து கொண்டனர்.
ஒரு வேகம்,அச்சூழ்நிலையில் தவிர்க்க முயன்றம் தவிர்க்கு முடியாத காமம் இரண்டும் கலந்து அவர்களை தடுமாற வைச்சாலும் எல்லாம் முடிஞ்ச பிறகு அவர்கள் இரண்டு பேரும் ஏதோ பெருந் தவறு செய்து விட்டதாக குற்ற உணர்வுடன் வெட்கப்பட்டார்கள்.
„பயமாயிருக்குது செந்தில், இரண்டு பேரும் அவசரப்பட்டிட்டமோ அடுத்த மாத விலக்கு வராமல் இருந்தால் என்ன செய்யிறது பயமாயிருக்குது ' என்று சரசு படபடப்புடன் சொல்ல,அவள் பயப்படக்கூடாது என்பதற்காக' பயப்படாதை சரசு நீ தாலிகட்டாத என்னுடைய பெண்சாதி, புதுசா கல்யாணம் முடிச்ச பொம்பிளையளுக்கு அடுத்த மாசமே மாதவிலக்கு வராமல் விட்டிருக்குதா, சில பேருக்கு வயித்திலை உண்டாக பல மாதங்கள் சென்றிருக்குது...அப்படித்தான் இன்றைய விசயத்திலை முடிவு வரும், நீ பயப்பிட்டு காட்டிக் குடுத்திடாதை, என்னிலையும் பிழையிருக்கு இவ்வளவு நாளும் கட்டுப்பாடாய் இருந்தனான் இன்னும் இரண்டு மாசம் பொறுத்திருக்க வேணும் ...சரி சரி இதை யோசித்து முகத்திலை காட்டாதை குழம்பின தலையை இழுத்து முகத்தைக் கழுவிப் போட்டு வா நான் கோலிலை இருக்கிறன்' என்று சொல்லியவாறு செந்தில் கோலில் இருந்த கதிரையில் போய் உட்காருகிறான்.
தலையை இழுத்து முகத்தைக் கழுவிப் பவுடரையும் முகத்தில் பூசிக் கொண்ட சரசு செந்திலுக்கு தேத்தண்ணி கொண்டு வந்து கொடுக்கும் போது வெளியே போன சரசுவின் தாயும் தகப்பனும் வீட்டுக்குள் வருகிறார்கள்.
செந்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டதும்'மருமோன் எப்ப வந்தவர் „ என்று தாய் கேட்க „ அவர் வந்து ஐஞ்சு நிமிசமிருக்கும் „ என்று பதில் சொன்ன சரசு,செந்தில் ஐஞ்சு நிமிசத்துக்கு முந்திததான் வந்தவர் என்பதை அம்மா அப்பா நம்புவார்களா, ஐஞ்சு நிமிசத்துக்குள் அடுப்பு மூட்டி தேத்தண்ணி போட முடியமா என அம்மா யோசிக்கமாட்டாரா என யோசித்தபடியே செந்திலுக்கு தேத்தண்ணியைக் குடுக்கிறாள் தாயை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையைக் குனிஞ்சு கொள்கிறாள்.;
தானும் சரசுவும் அவசரப்பட்டு நடந்து கொண்டதை முகத்தில் காடட்hதிருக்க எவ்வளவோ முயற்சி செய்கிறான் செந்தில்.தகப்பன் கண்டும் காணாத மாதிரி கைகால் கழுவவென கிணத்தடிக்குப் போக செந்திலையும் சரசுவையும் ஊடுருவிப் பார்த்தபடி உள்ளே போகிறாள் சரசுவின் தாய்...
(தொடரும்)
அடையாளம் ( பகுதி:1)
ஏலையா க.முருகதாசன்
எதையோ தேடுவது போல வேப்பமரத்தின் பட்டையை கைகளால் தடவிக் கொண்டே தவிப்புடன் நின்ற சரஸ்வதி வேப்பமரக் கிளையில் தடித்த கயிறுகளால் இரண்டு சுற்றுச் சுற்றி மரக்கிளையின் கீழ்ப்பகுதியில் முடிச்சுப் போட்டு அந்த முடிச்சிலிருந்து இரண்டு கயிறுகள் வந்ததற்கான அடையாளமாக அரை மீற்றர் நீளமான கயிறுகள் கீழ்நோக்கித் தூங்கிக் கொண்டிருப்பதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் பிறகு வெடிப்பு வெடிப்பாக இருந்த வேப்பமரப் பட்டைகளைப் பார்ப்பதுமாக இருந்தாள்.அதைப் பார்த்ததுமே அவளின் கண்களில் கசிவு ஏற்பட்டது.
கட்டப்பட்ட கயிற்றின் சுற்றுக்கள் கிளையின் தடிப்புக்கு ஏற்றவாறு கயிறுகள் இளகி பட்டைகளின் வெடிப்புகளுக்குள் செருகி நின்றன.
சரஸ்வதியின் நினைவுகள் போல சுற்றிய கயிற்றின் வட்டம் சிதிலமடைந்தாலும் மரத்தின் கிளைகளோடு இருந்தன.
இளவாலை என்ற கிராமத்தைவிட்டு அவள் கிளிநொச்சிக்குப் போய் முப்பந்தைந்து வருடங்களாகிவிட்டன.பத்தொன்பது வயதில் இந்த ஊரே வேண்டாம் என்று அழுத கண்ணீருடனும் கருத்தரித்த வயிற்றுடனும் பெற்றோருடன் போனவள் பெற்றோர் இறந்தபின் ஐம்பத்தினாலாவது வயதில் திரும்பி வந்திருக்கிறாள்.
சரஸ்வதி நின்றிருக்கும் இந்த இடம் அவள் இளவாலையை விட்டுப் போகும் போது புழுதி ஒழுங்iயாகவிருந்தது.அப்பொழுது மின்சாரமும் இல்லை.அந்த ஒழுங்கை பண்டத்தரிப்பு வீதியை ஊடறுத்து சேத்தான்குளத்தடி கீரிமலை வீதியைச் சென்றடையும் சித்திரமேழி என்ற பகுதியில் மேற்காக ஆரம்பித்து மாதகல் வீதியை தொடுத்து நிற்கும் ஒழுங்கைதான் அது.
இப்பொழுது அந்த ஒழுங்கை தார்போட்ட வீதியாகி மின்சாரம் பெற்ற ஊராகி முன்னூறு மீற்றர் தூரத்திற்கொன்றாக மின்சாரக் கம்பங்கள் வீதியில் நடப்பட்டு இரவு நேரங்களில் வீதிக்கு வெளிச்சம் கொடுக்கும் இடமாக மாறிவிட்டது.
வீதியின் இருமருங்கிலும் கல்வீடுகள் இப்பொழுது காட்சியளிக்கின்றன.முன்பு ஓலைவீடுகளாகவும் மண்சுவருடன் இருந்த வீடுகள் கல்வீடுகளாக மாறியுமிருக்கின்றன.அந்தப் புழுதி ஒழுங்கையோடு இருந்த பலர் வெளிநாடுகளுக்குப் போனதால் செல்வந்தர்களாகி வெறும் காணிகளை வாங்கி வசதியாக வீடுகள கட்டியுமிருக்கிறார்கள்.
முன்பு ஆங்காங்கே பனங்கூடல்கள்; இருந்தன,அவை இப்பொழுது இல்லை.அவற்றையும் தறித்து வீழ்த்தி காடழித்து வீடுகட்டும் மனிதர்களாக மாறி வெளிநாட்டுப் பணத்துடன் போட்டி போட்டு அங்கேயே பணம் சம்பாரிச்சவர்கள் உப்பரிகையுடன் வீடுகள் கட்டியுமிருக்கிறார்கள்.
சரஸ்வதி நிற்கும் இடத்தில் இப்பொழுது ஒரு பேருந்து நிலையம் வந்துவிட்டது. இப்பொழுது அவ்வீதி வழியாக பேருந்தும் ஓடத் தொடங்கியுள்ளது.மாதகலில் இருந்து யாழ்ப்பாணம் போகும் பேருந்துக்காக காத்திருக்கிறாள் சரஸ்வதி.அவளின் முன்தலைமயிர்கள் ஒருசில நரைத்திருந்தாலும் அவளின் வைராக்கியம் போல தலையின் மற்றைய இடங்களில் தலைமயிர்கள் கறுகறுத்திருந்தன.தலையை வாரி இழுத்து குடும்பி முடிந்திருந்தாள்.பேருந்து நிலையத்திற்கு எதிரே ஒரு தேநீர்க்கடை முளைத்திருந்தது.அவள் ஊரைவிட்டுப் போகும் போது தேநீர்க்கடை இருக்கும் காணிக்குள் நாகதாளியும் எருக்கலம் செடியுமே இருந்தன.
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு மாணிக்கராசா ஒரு இளைஞன், அப்பொழுது அவனுக்கு வயது இருபது.இப்பொழுது ஐம்பந்தைந்து வயது.தகப்பன் நல்லப்பு நடத்திய தேநீர்க்கடையை, அவர் இறக்க மகன் மாணிக்கராசா நடத்துகிறான்.
கடைக்குள் நின்றவாறே மாணிக்கராசா பேருந்துக்காக காத்திருக்கும் சரஸ்வதியைப் பார்த்தவன் எடுத்த எடுப்பில் அவனால் அவளை அடையாளம் காண முடியவில்லை. ஒரு சைக்கிளில் ஒருவர் காண்டிலில் இருக்க இன்னொருவர் ஓட்டிவர வந்த இருவரும் அவனுடைய கடையடியில் இறங்கி உள்ளே போகும் பொது மாணிக்கம் அவர்களிடம் ஏதோ சொல்வது போலத் தெரிகின்றது.அந்த இருவரும் பேருந்து நிலையத்தை திரும்பிப் பார்த்தவாறே கடைக்குள் போகிறார்கள்.
சரஸ்வதி கiடைக்குள் நிற்பவரைப் அடிக்கடி பார்த்துக் கொண்டாலும், அவன் மாணிக்கமாக இருக்குமோ என்று சந்தேகம் ஏற்பட்டாலும்,அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
கடைக்குள் போன இருவருக்கும் தேநீரைக் கொண்டு போய்க் கொடுத்த மாணிக்கம் குனிந்து அவர்களிடம் ஏதோ சொல்லவிட்டு திரும்பி வந்து பட்டடையில் இருந்தவன் பேருந்து நிலையத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.
பத்து நிமிசத்துக்குள் தேநீரைக் குடிச்சு முடிச்ச அந்த இரண்டு இளைஞர்களும் சைக்கிளை உருட்டிக் கொண்டு வீதியைக் கடந்து பேருந்து நிலையத்தடிக்கு வந்தவர்களின் ஒருவன் சரஸ்வதியிடம் தயங்கித் தயங்கி, „அக்கா நீங்கள் சரஸ்வதிதானே' எனக் கேட்க, „ம்' என்று மட்டும் சொன்னவள் „ ஏன் கேட்கிறியள்' என்று அவள் கேட்க'சும்மதான் கேட்டனாங்கள் கோபிக்கதையுங்கோ' என்று சொல்லிவிட்டுச் சைக்கிளில் ஏறப் போனவர்களிடம்' தம்பியவை அந்தத் தேத்தண்ணிக் கடைக்காரன் மாணிக்கந்தானே'என்று சரஸ்வதி கேட்க, „அவர்தானக்கா' என்று ஒரேசேர இரு இளைஞர்களும் பதிலளிக்க' அந்த நாய் இன்னும் உயிரோடைதான் இருக்கிறானோ, அவனும் இந்த வேப்பமரத்திலை தூங்கிச் செத்திருக்கலாந்தானே, குறுக்காலை போவான்' என்று சரஸ்வதி கோபத்துடன் திட்ட, பயந்து போன இளைஞர்கள் சைக்கிளில் ஏறி கடையடியால் போகும் போது மாணிக்கத்தை பார்த்து ஓம் என்பது போல தலையாட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டுப் போனவர்கள் சரஸ்வதியை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டுப் போனார்கள்.
அதற்குப் பிறகு மாணிக்கம் சரஸ்வதியின் பக்கம் திரும்பவே இல்லை.தற்செயலாகத்தானும் திரும்பிப் பார்ப்பதை பிரயத்தனப்பட்டு தவிர்த்த மாணிக்கம் என்ன நினைத்தானோ தெரியாது வேகம் வேகமாக தனது கடையைப் பூட்டிவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு அவசரமாகப் போவது போலப் போனான்.
சரஸ்வதி மெலிதாக ஆனால் ஏளனமாக அருவருப்புக் கலந்து சிரித்தாள்.பேருந்துவர இன்னும் இருபது நிமிடங்கள் இருக்கின்றன.அப்பப்ப வீதியால் நடந்து போவோரையும் சைக்கிளில் போவோரையும் பேருந்து நிலையத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
பேருந்து நிலையத்திலும் அவளைத் தவிர யாருமே இல்லை.பேருந்து நிலையத்தோடு இருந்த வேப்பமரக் கிளையில் சுற்றியிருந்த வட்டமான கயிற்றின் அடையாளத்தைப் பார்ப்பதும், வேப்பமரப் பட்டைகளில் எதையோ தேடுவதுமாக இருந்த சரஸ்வதியின் கண்கள் கனக்கத் தொடங்கியது.
முட்டிநின்ற கண்ணீர் கன்னங்களில் வழிய அழுகையை அடக்க முயற்சித்தும் முடியாமல் போகவே சீலைத்தலைப்பால் கண்களை துடைத்தபடி திரும்பும் போது „பிள்ளை சரசுதானே' என்று சொல்லிளயவாறு அவளருகில் மார்க்கண்டு வந்து நிற்க வலிந்து புன்னகைத்து தலையை மட்டும் ஆட்டினாள் சரசு.'எவ்வளவு காலமாச்சு உன்னைப் பார்த்து, உன்ரை கொப்பா கொம்மா இறந்து போது அவர்களின் காரியம் இங்கை இந்த ஊரிலை நடக்கும் என்று எதிர்பார்த்தம் அதுவும் இஞ்சை நடத்தேலை கிளிநொச்சியிலை செய்திட்டாய்,உனக்கு ஒரு பொம்பிளைப் பிள்ளை பிறந்தது என்று கேள்விப்பட்டம், அதின்ரை சாமத்தியச் சடங்கைத்தன்னும் இஞ்சை உன்ரை இந்தச் சொந்த ஊரிலை செய்வாய் என்று நினைச்சம், அதையும் நீ செய்யேலை பிறகு மகளின்ரை கலியாண வீட்டைத்தன்னும் இஞ்சை செய்வாய் என்று நினைச்சம் அதையும் இஞ்சை செய்யேலை...சரி ஊரைப் பார்க்கவெண்டு இப்பவாவது வந்திருக்கியே...என்று அவர் சொல்லி முடிக்கமுந்தி ...' நான் ஊரைப் பார்க்க வரவில்லை....எங்களோடு ஒட்டியிருந்த ஒன்றை வெட்டிப் போட்டுப் போகத்தான் வந்தனான்' என்று சரசு வேகமாகச் சொன்னதைக் கேட்ட மார்க்கண்டு „ ஒட்டியிருந்ததை வெட்டிப் போட்டு போக வந்ததாகச் சொல்கிறாளே எதுவாக இருக்கும் என்று யோசிப்பதற்கு முன் „என்னுடைய பெயரிலை இருந்த காணியை வித்து அந்தக் காசை தெல்லிப்பழை துர்க்கம்மை கோவில் நடத்துகிற அனாதைச் சிறுவர் மடத்துக்கு குடுக்கத்தான் வந்தனான், வித்து காசையும் குடுத்திட்டன், இந்த ஊர் எனக்குச் செய்த அவமானம் போதும்...' என்று சரசு கொஞ்சம் கோபமாகச் சொல்ல, அமைதியாகவிருந்த மார்க்கண்டு „அந்தச் சண்டாளன் செய்த வேலைக்கு ஊரையேன் பிள்ளை குறை சொல்லுறாய்' என்று பூட்டியிருந்த தேநீர்க்கடையைக் காட்டி மார்க்கண்டு சொல்ல, „ஏன் நீங்களுந்தானே அவன் சொன்னதற்கு தாளம் போட்டனீங்கள்' என்று சரசு சொன்னதும், மார்க்கண்டுவால் எந்தப் பதிலுமே சொல்ல முடியவில்லை,'வாறன் பிள்ளை „ என்று அந்த இடத்தைவிட்டு மெதுவாக நடந்தார்.
மார்க்கண்டு உட்பட அந்த ஊரில் பலர் வாய்க்குவந்தபடி கதைச்சதால்தான் குமுறிய வேதனையுடனும் அவமானத்துடனம் ஒரு உயிரை இந்த வேப்பமரத்திற்கு பலி குடுத்துவிட்டு சரஸ்வதியும் பெற்றோரும் இந்த ஊரைவிட்டே போனார்கள்.
அரை மணித்தியாலத்திற்கு ஒரு தரந்தான் பேருந்து அந்த வீதியால் போவதும் வருவதுமாகும்.சரசு வேப்பமரத்தில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிற்றைப் பார்ப்பதும், வேப்பமரப் பட்டையைப் பார்ப்பதுமாக தவித்தாள்.
அந்த ஊரைவிட்டே கெதியிலை பொய்விட வேண்டும் பேருந்தைக் காணவில்லையே என்ற அவளின் தவிப்புக்கு தூரத்தில் பேருந்து வருவது தெரிந்ததும் மனம் ஆறுதலைடைந்தது.
பேருந்தில் ஏறி அமர்ந்த அவள் ஒருமுறை உள்ளுக்குள் நோட்டம் விட்டாள்.யாருமே தெரிந்தவர்களாக இல்லை.அப்படி யாராவது இருந்தாலும்கூட அவள் இந்த ஊரைவிட்டுப் போய் முப்பத்தைந்து வருடங்களாகவிட்டதால் பலரின் உருவமே மாறியிருக்கும்.அதனால் இவர் இன்னார் என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாதபடி அவர்கள் இருப்பார்கள்.
சரசுவையும் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.ஊரைவிட்டு பேருந்து போகப்போக பழைய நினைவுகள் முண்டியடிக்கத் தொடங்கின.
சரசுவின் வீடும் செந்தில்குமாரின் வீடும் பக்கம் பக்கமாக இருந்த வீடுகள்.இரு குடும்பத்தினரும் உறவினர்கள் அல்ல, ஆனால் நல்ல நண்பர்கள்.உறவு நிலைக்குட்பட்ட எந்த உறவுத் தொடர்பகளும் அவர்களிடம் இருக்கவில்லை.
சரசுவும் செந்திலும் சின்ன வயதிலிருந்தே ஒன்றாகத்தான் திரிவார்கள் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள்.பல நாட்:களில் சரசு செந்திலின் வீட்டில்தான் நேரத்தைப் போக்குவாள்,அங்கேயே சாப்பிடுவாள்.
அதைப் போல செந்திலும் பல நாட்களில் சரசுவின் வீட்டிலேயே அதிக நேரத்தைப் போக்குவான்,அங்கேயே சாப்பிடுவதும் உண்டு.
அயலட்டையில் உள்ளவர்கள் செந்திலும் சரசுவும் ஒன்றாகத் திரிவதைப் பார்க்கும் போதெல்லாம் „புருசனும் பெண்சாதியும் போகினம்' என்றெல்லாம் கிண்டல் கேலி செய்வதுடன் செந்திலிடம் „ நீ சரசுவையா கட்டப் போகிறாய்' என்று கேட்பது போல சரசுவிடம் „நீ செந்திலையா கட்டப் போகிறாய் „ என்று அவர்களை ஒழுங்கையிலும் அவர்கள் அப்பா அம்மாவாக ,மண்ணை சோறென்றும் இலைகுழைகளை கறியென்றம் சமைத்து விளையாடும் வேப்பமரத்தடியில் வைத்தும் ஊரவர்கள் கேட்கும் போதெல்லாம் இருவருமே எந்தத் தயக்கமும் இல்லாம் ஓம் என்று சொல்வார்கள்.
சிறவர் சிறுமிகளென அந்த அயலட்டையில் உள்ள ஏழெட்டுப் பேர் வேப்பமரத்தடியில் ஒன்றாக விiயாடினாலும் எப்பொழுதும் சரசுவும் செந்திலும் ஒன்றாகவே இருப்பார்கள்.மாணிக்கராசாவும் அவர்களுடன் விளையாடினாலும்,சரசு அவனைப் பற்றி அக்கறை கொள்வதே இல்லை.
மாணிக்கராசா பலமுறை தன்னுடன் விளையாட வருமாறு சரசுவைக் கூப்பிட்ட போதும் ஏனோ சரசுவுக்கு அவனைப் பிடிக்காததால் அவள் அவனுடன் விiயாடுவதில்லை,உன்னுடன் விளையாட மாட்டன் என்று சொல்வாள்.
செந்திலின் தகப்பன் சிறுவர்களுக்கு வேப்பமரக் கிளையில் ஒரு ஊஞ்சலைக் கட்டிவிட்டிருந்தார்.ஒரு நாள் செந்தில் ஊஞ்சலாடி விழுந்துவிட அவனின் முழங்கால் பகுதியில் குறுணிக் கற்கள் உரஞ்சி இரத்தம் வழிய ,அதைப் பார்த்த சரசு ஓவென்று அழுததுடன் அங்கிருந்த செடிகளின் இலைகளைப் பிடுங்கி உள்ளங்கையில் வைத்து கசக்கி அந்தக் காயத்துக்கு மேல் வைச்சு தனது பின்னலில் இருந்த றிபனை அவிழ்த்தெடுத்து கட்டிவிட்டவள்,நொண்டி நொண்டி நடந்த செந்திலின் கைகளை எடுத்து தனது தோளில் மேல் போட்டபடி கூட்டிக் கொண்டு போகும் போகும் போது நோவினால் அழுத செந்திலின் கண்ணீரைத் துடைத்தபடி „அழாதை செந்தில் உனக்கு நானிருக்கிறன் „ என்று சொன்னது அந்தச் சிறுமியின் வாயிலிருந்து வந்த எதார்த்தமான வார்த்தைதான்.
ஆனால் அந்த வார்த்தைக்குப் பின்னால்........
(தொடரும்)
நடுகைக்காரி 17
ஏலையா க.முருகதாசன்
மகாஜனாக் கல்லூரியின் கிழக்குப் பக்கத்து எல்லையை ,பாறுவை தனது சைக்கிளில் எற்றிக் கொண்டு வந்த ஞானத்தின் சைக்கிள் கடக்கும் போது ஞானத்தின் காதிலும் பாறுவின் காதிலும் „ எடியே சத்தி கெதியிலை வாடி வந்து இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பாரடி தவசியின்ரை நடுகைக்காரிப் பெட்டையை சுப்பையற்றை கடைசி மதவடிப் பிரபு சைக்கிள் பாரிலை வைச்சு ஏற்றிக் கொண்டு போற கூத்தைப் பாரடி „ என்று சொல்வது கேட்க,ஞானம் திரும்பிப் பார்க்கிறான்.
வடக்குப் பக்கமாக இருந்த ஒரு வீட்டு கேற்றின் முன்னால் மாலினியும் சத்தியும் நிற்பதையும் அங்கிருந்துதான் இந்தக் குரல் வந்திருக்க வேண்டும் என்று கண்டுகொண்ட ஞானம் அவர்களுக்கு வேணுமென்றே கையைக்காட்ட பாறுவும் தலையால் எட்டி அவர்களைப் பார்க்கிறாள்.
„பாரன் தவசியின்ரை மோளுக்கு வந்த காலத்தை.ஆற்றை சைக்கிளிலை ஏறிப் போறாளென்று பாரன்' என்று மாலினி சொல்ல,'அவள் ஆற்றை சைக்கிளிலை ஏறிப் போனால்தான் உனக்கென்ன, உதைக் காட்டவே சுடுது மடியைப் பிடி என்று கூப்பிட்டனி' என்று சொல்லிக் கொண்டே சத்தி வீட்டுக்குள் போறாள்.
„யார் இப்படிக் கதைச்சவை „ என்று பாறு கேட்க,' எனக்குத் தெரிஞ்சவைதான் அதை விடுங்கோ எல்லாற்றை கதைக்கும் காது குடுக்கேலாது, இன்னும் இதைவிட மோசமாகவும் கதைப்பினம், அதையெல்லாம் யோசிச்சுக் கொண்டிருந்தால் நாங்கள் எந்த வேலையும் செய்ய முடியாது' என்று சொன்ன ஞானம் லிங்கம் கபேக்கு மேற்கேயுள்ள மதவடிக்கு வந்ததும்,அதிலை சைக்கிளை நிற்பாட்ட „ ஏன் இப்ப இதிலை சைக்கிளை நிற்பாட்டிறியள்' என்ற பாறு கேட்க,' மத்தியானச் சாப்பாட்டுக்கு லிங்கண்ணையிட்டை சொல்லியிட்டன் என்டாலும் ஒருக்கா ஞாபகபடுத்தினால் நல்லது' என்று ஞானம் சொல்லிக் கொண்டிருக்க' என்னைக் கொண்டு போய் தோட்டத்திற்கு தனம் அக்காவும் பூரணி அக்காவும் வந்ததும் என்னை அவையோடை அங்கை விட்டிட்டு பிறகு இஞ்சை வந்து சொல்லுங்கோ,அங்கையங்கை நிற்பாட்டி பெண்டாட்டியைக் காட்டப் போறியளே போங்கள் „ என்று சொன்னதும் ஞானம், „ கடவுளே இப்பவே இப்படியென்றால் இனி என்னெ;ன நடக்கப் போகுதோ தெரியாது. அம்பனை ஞான வைரவா தெல்லிப்பழை புளியடி வைரவா நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்' என்று அவன் சொல்லிக் கொண்டே நிற்பாட்டினை சைக்கிளை விளக்க பாறு மெதுவாக வாய்விட்டுச் சிரிச்சாள்.
தோட்டத்துக்கு போனதும் கிணத்தடி ஆடுகாலோடிருந்த பைக்குள்ளிருந்து ஒரு கைலியை எடுத்து பாறுவிடம் குடுத்து சட்டைக்கு மேலை இடுப்பிலை கட்டச் சொல்கிறான்.
„ஏன் இதைக் கட்டச் சொல்கிறியள்' என்று அவள் கேட்க, „இங்கை நீங்கள் புல்லுப்பிடுங்கத் தேவையில்லை, மற்றவை இரண்டு பேருந்தான் பிடுங்குவினம் நீங்கள் என்னோடை இருந்தால் போதும், பெரிசாக பிடுங்கிற அளவிற்கு வெங்காயத்திற்குள்ளை புல்லுகளும் சடைச்சுக் கிடக்கேலை நீங்கள் கீழை இருக்கேக்கை கட்டியிருக்கிற கைலி சட்டையிலை ஊத்தை பிடிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும் என்னையும் குழப்பாமல் இருக்கும்' என்று ஞானம் சொல்ல,' ஊத்தை பிடிக்காமல் என்று சொன்னது சரி அது என்ன என்னைக் குழப்பாமல் என்று சொன்னது விளங்கவில்லையென்று „அவள் கேட்க அவன் மெதுவாகச் சொன்ன விசயத்தைக் கேட்டு அவள் வெட்கத்துடன் „இராத்திரி கும்மிருட்டிலை நடந்ததே அம்மா பெரிய பிரச்சினையாக நினைக்கிறா அதுக்குள்ளை அவற்றை நினைப்பு' என்று சொல்லிக் கொண்டே அவனைக் கிள்ளினாள்.
ஞானம் மூன்று கற்களை எடுத்து அடுப்பாக்க, பாறு கிணத்திலையிருந்து வாளியாலை தண்ணியை அள்ளி கேத்தலில் ஊற்றி அடுப்பில வைச்சுக் கொண்டிருக்கும் போதே தனமும் பூரணியும் ஞானத்தின் தோட்டத்தை நோக்கி வரம்பால் நடந்து வந்து கொண்டிருப்பதைக் கண்ட ஞானம் தான் கொண்டு வந்த சாக்குளையும அட்டாளையிலிருந்த சாக்குகளையும் எடுத்து அட்டாளையின் கீழ்த்தரையில் விரிச்சவன் „பாறு இதிலை வந்து இருங்கோ,கேத்தில் கொதிக்க முந்தி லிங்கண்ணையிட்டை மத்தியானச் சாப்பாட்டுக்குச் சொல்லிப் போட்டு, சீனியம்மானின்ரை கடையிலை தோசையும் சுண்டலும் வாங்கிக் கொண்டு வாறன், அதோடை சீனியம்மானிட்டை நன்னாரிக் கிழங்கு கேட்டுப் பார்க்கிறன் தந்தால் வாங்கிக் கொண்டு வாறன்,கேத்தலுக்குள்ளை போட்டு அவிச்சால் தேத்தண்ணி வாசமாயும் உருசியாயும் இருக்கும் அவையும் வந்திட்டினம் கதைச்சுக் கொண்டு இருங்கள், இனி இந்த தோட்டத்திற்கு நீங்கள்தானே சொந்தக்காரி...என்று சொல்ல திகைப்புடன் ஞானத்தைப் பார்க்கிறாள் பாறு.
தனமும் பூரணியும் கிட்ட வந்ததும் „மூன்று பேரும் கதைச்சுக் கொண்டிருங்கள், டக்கென்று போயிட்டு டககென்று வாறன், தண்ணி கொதிச்சாலும் தேத்தண்ணி போட வேண்டாம் பாறு, நன்னாரியோடை வாறன் „ என்ற ஞானம் சைக்கிளில் உட்கார்ந்து போகப் போக சொல்லிக் கொண்டே போகிறான்.
வரம்பினில் சைக்கிள் ஓடுவது சுலபம்.ஆனால் தண்ணி போகும் வாய்க்கால் வரம்பில் சைக்கிளில் போவதென்றால் அதுக்கு சரியான பலன்ஸ் வேணும் திரும்பிப் பார்த்துக் கொண்டே சைக்களில் போவதென்றால் அதுக்கு நல்ல பயிற்சி தேவை.இந்த விசயத்தில் ஞானம் விண்ணன்தான்.
ஏனெனன்றால் தண்ணி போகும் வாய்க்கால் வரம்பின் தடிப்புக்கும் சைக்பகிள் ரயரின் தடிப்புக்கும் பெரும் வித்தியாசமிருக்காது.மட்டுமட்டாகத்தானிருக்கும். தனமும் பூரணியும் அட்டாளைக்கு கீழே போட்டிருந்த சாக்குக்கு மேலே உட்காருகிறார்கள்.
தண்ணி போற மெல்லிய வரம்பில் சைக்கிளில் போன ஞானத்தை வியப்புடன் பார்த்த பாறு „ பார்த்தியளே அக்கா என்ரை அவரின்ரை கெட்டித்தனத்தை „ என்று பாறு சொல்ல, தனமும் பூரணியும் திகைப்புடன் பாறுவைப் பார்க்கிறார்கள்.
பாறுவின் முகத்தில் கண்களை நிலை நிறுத்தி பார்த்த தனம்' பாறு நீ அந்தத் தம்பியைச் சந்திச்ச பிறகு அழகு பேர்ந்து போய்க் கிடக்கிறாய் என்ன அப்படி இரகசியம்' என்று கேட்க'அப்படி ஒன்றுமில்லையக்கா,பொறுங்கோ நெருப்பை அணைய விடாமல் விறகை அடுப்புக்குள்ளை தள்ளிப் போட்டு வாறன் அப்பதான் தண்ணி கேத்தலிலை சலசலவென்று கொதிச்சுக் கொண்டிருக்கும் என்று எழுந்து போன பாறுவின் காதிலை கேட்கத்தக்கதாக'ஓமோம் ...அடுப்பு எரிஞ்சால்தான் தண்ணி கொதிக்கும் அது உன்ரை முகத்திலேயே தெரியுதே, விறகைத் தள்ளிப் போட்டு வா உன்னோட கனவிசயம் கதைக்க வேணுமென்கிறாள்' பூரணி.
அட்டாளைக்கு கைக்கெட்டும் தூரத்திலேயே அடுப்பு இருந்ததால் அட்டாளையிலிருந்து எழுந்து அடுப்புக்குள் விறகைத் தள்ளிப் போட்டு அப்படியே குனிஞ்சு அட்டாளைக்குள் உட்கார்ந்தவளின் வாயைக் கிளறத் தொடங்கினர் தனமும் பூரணியும்.
„அது சரி பாறு எப்படிப் போகுது உங்கள் இரண்டு பேற்றை காதல் பயணமும், நீயும் துணிஞ்சு அந்தத் தம்பியின்ரை சைக்கிளிலை ஏறிப் போறாய் வாறாய் நாங்கள் ஆரெண்டும் அவை ஆரெண்டும் தெரியுந்தானே அவை அடுவல் அல்ல தடிச்சவை என்று கதைக்கினம்.என்னன்டடி உனக்கு இவ்வளவு துணிச்சல் வந்தது' என்று தனம் கேட்க,,என்னமோ எனக்கும் தெரியாது,றோட்டாலை போகேக்கை வரேக்கிலை அவர் மதகிலையிருந்து முசுப்பாத்தியாக் கதைச்சதைப் பார்த்திருக்கிறான்'
„ஒரு நாள் இரவு அவரைப் பற்றி யோசிச்சுக் கொண்டிருக்க அவர்மீது தீவிரமான காதல் ஏற்பட்டது.அதுதான் நடக்கிறது நடக்கட்டும், நான் ஆராக இருந்தாலும் பரவாயில்லை என்று கடிதம் ஒன்றை எழுதி அவரின் நெஞ்சைக் குறிபார்த்து எறிஞ்சன், அவரும் என்னைப் போல நினைச்சாரோ தெரியாது காதலுக்கு கண்ணில்லை என்பார்களே அது மாதிரி எங்கள் காதல் இப்படித்தான் ஆரம்பிச்சது. தீவிரமாக மாறும் என்று நானும் நினைக்கேலை அவரும் நினைக்கேலை,இப்ப நான் அவரை என்ரை புருசனாகவே நினைக்கிறன் அவரும் என்னை தன்ரை மனுசியாகவே நினைக்கிறார்......'என்று பார்வதி உட்கார்ந்திருந்த சாக்கில் கைவிரல்களால் ஞானம் என்று எழுதி சக குறியீடு போட்டு பாறு என்று எழுதுவதும் திரும்பத் திரும்ப எழுதுவதுமாக சொல்லிக் கொண்டிருந்தாள்.
„நீ சொல்வது சரிதான் அந்தத் தம்பியை முழுசாய் நம்பிறியா „ என்று கேட்க, „எனக்கு அவரை நான் காதலிக்க வேண்டுமென்ற எண்ணமும் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற துணிச்சலும் எப்படி வந்தது என்று எனக்கே தெரியேலை, அதுதான் இன்னார்க்கு இன்னார் என்ற விதியோ என்று நினைக்கிறன், அவர் சைக்கிளில் ஏறச் சொன்னால் ஏறுகிறன்'.
„ என்னை அவர் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகும் போது றோட்டிலை போவோர் வருவோர் இல்லாட்டில் அவருக்குத் தெரிஞ்சவர்களோ இல்லாட்டி எங்களுக்குத் தெரிஞ்சவர்களோ பார்த்துவிடுவார்களே என்ற பயமும் வருகுது இல்லை, அவர்தான் என்ரை மனுசன் என்ற எண்ணம் மட்டுந்தான் என்ரை மனசிலை இருக்குது.
நான் நினைக்கிறன் புளியடி வைரவர் அந்தத் துணிச்சலைக் குடுக்கிறாரோ தெரியாது „ என்று சொல்லிக் கொண்டிருந்த பாறுவை கூர்ந்து கவனிச்ச பூரணி' எங்களோடு அந்தத் தம்பியின் தாய் தகப்பன் மதிப்புக் குடுத்து எங்களையும் மனுசராகத்தான் நடத்திறார்கள்....மற்றத் தோட்டக்கார்கள் எங்களுக்கு சிரட்டையிலும் போத்தலிலும் தேத்தண்ணி தரேக்கிலை அவை வீட்டிலையிருந்து பித்தளை மூக்குப் பேணி கொண்டு வந்து அதிலை தருகினம்....ஆனால் உன்னை அவை மருமகளாக ஏற்றிக் கொள்வீனம் என்று நம்பிறியே....உன்னை அந்தத் தம்பி விரும்புறது வீட்டிலை தெரியுமாமோ' என்று கேட்க „தெரியேலை அக்கா, என்ரை ஆள் பார்த்தால் முசுப்பாத்திக்காரர்தான் ஆனால் துணிச்சல்காhர்.கட்டாயம் வீட்டிலை எங்கடை விசயத்தைச் சொல்லாமல் விடமாட்டார் „ என்று பாறு சொல்கிறாள்.
பாறு சட்டைக்கு மேலை கைலி உடுத்திருந்தை அப்பதான் அவையிரண்டு பேரும் கவனிச்சிருக்க வேணும் „ என்ன பாறு கைலியை சட்டைக்கு மேலை கட்டியிருக்கிறாய், அவற்றை கைலிதானே, அது சரி ஏன் இப்படிக் கட்டியிருக்கிறாய்' என்று தனம் கேட்க, „அவர்தான் கட்டச் சொன்னவர் சட்டை ஊத்தையாகமல் இருக்க வேண்டுமாம்,அதோடை இன்னொரு விசயத்தையும் சொன்னவர்....' ஏன்று சொல்லி கீழை சாக்கையே பார்த்துக் கொண்டு கீழை இருக்கேக்கை தற்செயலாக முழங்காலுக்கு மேலே சட்டை சிரைஞ்சு துடை தெரிஞ்சால் தன்ரை மனம் குழம்பிப் போமாம்.....இராத்திரி ஒரு விசயம் நடந்துது ஆனந்தா பேக்கறிக்கு அவர் சிங்களம் படிக்க என்று போக அவரோடை போயிட்டு அங்கையிருந்து புளியடி வைரவர் கோவிலடியாலை நடந்து நானும் அவரும் வீட்டை போனம்.அம்மா தேத்தண்ணி போட்டுக் குடுக்க அவர் குடிச்சிட்டு வெளிக்கிட „ என்று ..
„பொறு பொறு ....தேத்தண்ணி குடிச்சவரே „என்று தனம் கேட்க,
„குடிச்சவர்' என்று பாறு சொல்ல' பாறு இஞ்சை வா சுத்தி வளைச்சு கதை சொல்லாமல்' இராத்திரி என்ன நடந்தது என்று உடைச்சுச் சொல்லு'என்று பூரணி ஆவல்பட „அவரைக் கொண்டு போய் படலையடியில் விடேக்கை கும்மிருட்டு...அவர் கட்டிப்பிடிச்சு இங்கை' என்று சொண்டுகளைக் காட்டி எதுவும் சொல்லாமல் கீழை பார்த்தபடி இருந்து கொண்டே ......திரும்பி வீட்டுக்குள்ளை போகேக்கிலை ஏன் சொண்டு இரண்டும் சிவந்திருக்குது என்று அம்மா கேட்டா, நான் பூச்சி கடிச்சது என்று சொன்னதை அம்மா நம்பேலை, இன்டைக்கு காலமையும் புத்திமதி சொல்லித்தான் விட்டவா....அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பூரணி „ சுப்பையற்றை வீட்டை மருமகளாய் போகேக்கிலை அவைக்கு பேரப்பிள்ளையையும் கொண்டுதான் போகப் போறாய் என்று சொல்ல தனம் வாய்விட்டுச் சிரித்தாள்
(தொடரும்)
நடுகைக்காரி 16
ஏலையா க.முருகதாசன்
அறைக்குள் போன தாய் அங்கை கள் வாசனை வரவே,அடுப்படிக்குள் வைச்சுத்தானே கணவர் குடிப்பார், இன்று என்ன அறைக்குள்ளேயே கள்ளு வாசனை வருகுதே அறைக்குள் வைச்சுக் குடிக்கத் தொடங்கிவிட்டாரோ இது என்ன புதுப்பழக்கம் என்று யோசிச்ச ஞானத்தின் தாய் அடுப்படிக்குள் போய் கணவருக்கு கள்ளை வாங்கி வைக்கும் இடத்தில் பார்க்கிறாள், அரைவாசி குடிச்சபடி போத்தலில் கள் இருப்பதைக் கண்டதும் முற்றத்தில் வந்து நின்று வெற்றிலைத் தோட்டத்தை பார்த்த போது கணவர் சரிந்த வெற்றிலைக் கொடிகளை முள்முருக்கையோடு சேர்த்து கட்டுவதைக் கண்டதும் ஒருவேளை அப்படி இருக்குமோ என யோசித்துக் கொண்டிருக்கும் போதே வெற்றிலைத் தோட்டத்திலிருந்து வந்தவர் மனைவி முற்றத்தில் யோசித்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் „ ஏன் இதிலை நின்று யோசிச்சுக் கொண்டு நிக்கிறியள் முகமே சரியில்லையே என்ன விசயம் என்று கேட்க,கள்ளுமணம் வீட்டுக்குள் இருந்து வருவதைச் சந்தேகத்துடன் சொல்ல எதுவுமே பேசாது அறைக்குள் நுழைந்தவர் போன வேகத்திலேயே திரும்பி வந்து „அப்படி ஒன்றும் மணக்கவில்லை' என்று சொல்கிறார்.
இரவுச் சாப்பாடடு வேளை சுப்பையா ஒருமுறை மகனின் கண்களை உற்றுப் பார்க்காத மாதிரி உற்றுப் பார்த்துவிட்டு „ நாளைக்கு எத்தனை பேர் புல்லுப் பிடுங்க வருகினம்' என்று கேட்க, மூன்று பேர் வருவினம்' அவைக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறாய்' என்றவுடன் லிங்கண்ணையின்ரை கடையிலையிருந்து வாங்கிக் கொடுக்கிறன் „ என்றவன், தேத்தண்ணிக்கு கேத்தல் தேயிலை சீனி எல்லாத்தையும் தோட்டத்தடிக்கு கொண்டு போய் அங்கேயே அடுப்பு மூட்டி வைச்சு போட்டுக் கொடுக்கப் போறன், தேத்தண்ணி போட சருவச்சட்டியும் அவை குடிக்க எங்கடை மூக்குப் பேணிகளையும் கொண்டு போகப் போறன், சீனயம்மானின் கடையில் வடை வாங்கிக் குடுக்கலாம் என்றிருக்கிறன் „ என்று சொன்னதும் „ சரி பார்த்துச் செய்' என்று தகப்பன் சொல்கிறார்.
நடுகைக்காரிகளுக்கு சிரட்டையிலை தேத்தண்ணி தண்ணி குடுத்த மிலேச்சத்தனமான காலத்தில் அவர்களுக்கு வீட்டிலிருந்து பித்தளை மூக்குப் பேணிகளைக் கொண்டு போய் அதில் தேத்தண்ணி குடுத்தவர் ஞானத்தின் தாயும் தகப்பனும்.
சுப்பையா குடும்பத்தில் உள்ள அனைவருமே நூல்களை சஞ்சிகைகளை வாசிப்பவர்களே.அந்த வாசிப்பு அவர்களுக்குச் சமூகத்தில் இருக்கும் மனிதர்களை ஏழை பணக்காரன் என்றோ, பிரிவுகள் ரீதியாக வேறுபடுத்திப் பார்த்தல்களையோ நினைக்க வைக்கவில்லை. நூல்களில் காணப்படும் மனிதர்கள் அனைவருமே சமமே என்ற தத்தவம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
அதனால் அவர்களின் தோட்டத்தில் நிலத்தைக் கொத்துவதற்கென்றும் நடுகைக்கென்றும் புல்லுப்பிடுங்கவென்று வருபவர்களை சமனாகப் பார்க்க வைச்சது.அவர்கள் நடுகைக்காரிகளுக்கு தமது வீட்டுப் பேணிகளில் தேத்தண்ணி குடுப்பதை விரும்பிச் செய்தார்கள்.
அவர்களுடைய இந்த அனைவரையும் சமனாகப் பார்க்கும் முற்போக்குச் செய்கையால் அவர்களை ஊருக்குள் விமர்சிக்கத்தான் செய்தார்கள்.பட்டும் படாமல் சிலர் உங்கடை வீட்டிலும் இனி செம்பு தண்ணி எடுக்கேலாது போல இருக்குது என்ற போதெல்லாம்'நாங்கள் இப்படித்தான் நடப்பம், நீங்கள் எங்கடை வீட்டிலை செம்பு தண்ணி எடுக்கிறதும் எடுக்காமல் விடுறதும் உங்கடை விரும்பத்தைப் பொறுத்தது „ என்று சுப்பையா எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்லி விடுவார்.
நித்திரை கொள்ளாமல் ஞானம் புரண்டு புரண்டு படுத்தான்.இராத்திரி சாப்பிடும் போது அப்பா ஏன் எனது முகத்தை கூறு குறிப்பாகப் பார்தார்.ஒரு வேளை சோடாப் போத்தல் விசயத்தைக் கண்டு பிடிச்சுவிட்டாரோ, அப்பாவும் பாவிக்கிறபடியால் அது உடம்பில் என்னவெல்லாம் செய்யும் என்பதை அறிஞ்சு விட்டாரோ என்ற குழப்பத்துடன் படுத்திருந்தவன் விடிய நான்கு மணிக்கே நித்திரையை விட்டு எழுந்துவிட்டான்.
இன்று முழுநாளும் பாறுவுடன் இருக்கப் போகிறன் என்று சந்தோசம் ஒரு புறமும்,அப்பாவுக்கு சோடாப் போத்தல் விசயத்தை ஊகித்திருப்பாரோ என்று நினைச்சவன் குளிப்பதற்காக கிணத்தடிக்கு போய்க் கொண்டிருக்க, „ஞானம் தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கிறன் குடிச்சிட்டுப் போய் குளி என்று தாய் சொல்ல'குளிச்சிட்டு வந்து குடிக்கிறனம்மா' என்று ஞானம் சொல்ல' நீ குளிச்சிட்டு வர அது ஆறிப் போயிடும் இப்ப வாயைக் கொப்பளிச்சுப் போட்டு குடி,பிறகு வெள்ளெனச் சாப்பாட்டோடை மல்லிக் கோப்பி குடிக்கலாம்' என்று சொல்லியவள் ஒரு சிறு பெட்டியை எடுத்துக் கொண்டு முற்றத்து மல்லிகைப் பந்தலை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள்.
காரைநகரில் நடக்கும் கல்யாண வீட்டுக்குப் போக வேணுமென்பதற்காக தாய் நான்கு மணிக்கு முன்பே நித்திரையை விட்டெழும்பி குளிச்சு,தேத்தண்ணி போட்டுக் குடிச்சிட்டு தோசை சுட்டு வைச்சிட்டு வீட்டு முற்றத்து மல்லிபை; பந்தலிலிருந்து மல்லிகைப் பூக்களை கிள்ளி வந்து தலையில் வைப்பதற்காக சரம் கட்டிக் கொண்டிருந்தாள்.
ஞானத்தின் தகப்பன் கிணத்தடிக்குப் போகும் போது ஞானம் குளிச்சுக் கொண்டிருந்தான். குளிச்ச தண்ணீர் மிதியடிப் பானாவால் ஓடி வாய்க்கால் வழி போய் கிணத்தடியோடு நின்ற வாழை மரங்களுக்கு போய் நிரம்ப தகப்பன் மண்வெட்டியால் பாத்தி முடக்கை மறிச்சுக் கட்டி தென்னை மரப் பாத்திகளுக்கு போக வைச்சுக் கொண்டிருந்தார், ஞானம் குளிச்சு முடிச்சு போக எத்தனிக்க, „செல்வம் நில் „ என்றவர்,அவனருகில் வந்து „சில விசயங்களை உனக்குச் சொல்ல வேணடும் என்று கனநாளாய் நினைச்சனான்.ஆனால் அது காலம் கடந்து போய்க் கொண்டிருந்தது.நல்லாயப் படிச்சு எஸ்.எஸ்.சயில் p நல்ல மார்க் வாங்கியும் தொடர்ந்து படிச்சு யூனிவேர்சிற்றிக்கு போவாய் என்று நினைச்சம். நூன் யூனிவேர்சிற்றிக்குப் போகேலை ஏதாவது வேலைக்குப் போறன் என்று சொன்னாய்.கொக்காமாரும் அத்தான்மாரும், கொண்ணை மாரும் உன்ரை அண்ணிமாரும் „செல்வம் ஏன் இப்படி இருக்கிறான், அவன் படிக்கோணும் இல்லாட்டி ஏதாவது வேலைக்குப் போகோணும் நீங்கள் இரண்டு பேரும் சொல்ல மாட்டியளா என்று என்னையும் கொம்மாவையும் குறை சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
„ அதை நாங்கள் காதிலை விழுத்தேலை.முசுப்பாத்தியாய் திரியிறான் நானும் அந்த வயசைக் கடந்துதானே வந்தனான் என்று இருந்தம்.ஆனால் எதற்கும் ஒரு எல்லை உண்டு.நேற்றுப் பின்னேரம் கொம்மா அறைக்குள்ளை வைச்சா பாவிச்சனீங்கள் என்று கேட்க அறைக்குள்ளை போய்ப் பார்க்க புத்தகங்கள் இருந்த பைக்குள்ளை சோடாப் போத்தல் இருந்ததைக் கண்டன்.நான் அதை விலாவாரியாக சொல்ல விரும்பேல'.
„தொடர்ச்சியாக இந்த வயசில் ஒரு பழக்கத்துக்கு அடிமையானால் வாழ்க்கை தடம்மாறிவிடும்.இது கடைசியிலை சாராயம் விஸ்கி விறண்டி என்று போய் நின்றுவிடும்'
„நான் எனது உடல் களைப்பிற்காக மூலிகையான பனஞ்சாறைக் குடிக்கிறன்.அதுவும் யாருக்கும் தெரியாமல் இந்தக் குடும்பத்துக்குள்ளை உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடியதாக பாவிக்கிறன்'
„பாவிக்கிறவர்களும் உடலைக் கெடுத்துக் கொள்ளாமல் ஒழுக்கமாக வாழ முடியும்.பாவிக்கிறவர்கள் தமது உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமலும் ஒழுக்கமாக வாழ்வதையும் அவர்களே தீர்மானிச்சுக் கொள்ள வேண்டும்'
„இதை நீ பழகிப் போடாதை.முதலிலை ஒரு வேலையைத் தேடு.பிறகு குடும்பமாகு.அதற்குப் பிறகு உன் வாழ்க்கையில் உனக்கு வரப் போறவளுடன் யோசிச்சு முடிவெடு'
„நீ தனிக் குடும்பமானதற்கு பிறகு நாங்கள் தலையிடவே மாட்டம்.கொழுந்துத் தோட்ட முன்துண்டு உனக்குத்தான்.அதிலை நீ வீடு கட்டலாம்'
„சரி எல்லாத்தையும் புரிஞ்சு நடந்து கொள்.நீ எத்தனையோ பேருக்கு புத்தமதி சொல்பவன்.நீ சறுக்கி விழாமல் இருக்கப் பார்'
„ஒரு தகப்பனாக சொல்றதைச் சொல்லியிருக்கிறன்.யோசித்து நட' என்று பட்டும் படாமல் தகப்பன் சொல்லி முடிக்க,தகப்பனின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாதவன், வேறுபக்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
„சரி தோட்ட வேலைக்கான ஆயத்தத்தைச் செய்.கேத்தல் சருவச்சட்டி சீனி தேயிலை மூக்குப் பேணிகள் எல்லாத்தையும் மறக்காமல் கொண்டு போ' என்று தகப்பன் சொல்ல,ஓம் என்பது போல தலையை ஆட்டியபடி கிணத்தடியைவிட்டுப் போனான் ஞானம்.
ஞானத்தின் தகப்பன் படிக்கிற காலத்திலேயே தாய்தகப்பனுக்குத் தெரியாமல் கள்ளுக் குடிச்சவர்தான்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கல்லூரிகளிலிருந்து கல்லூரிகளுக்குப் போகாமல் களவாக கீரிமலைக்கு வந்து நீந்திப் போட்டு கூவிலில் கள்ளுக் குடிச்ச மாணவர்களும் இருந்தார்கள்.அத்தகைய மாணவர்கள் பின்னாட்களில் அரசாங்க அதிகாரிகளாகவும் மருத்துவர்களாகவும், பொறியியலாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள், இருந்தும் வருகிறார்கள்.
அத்தகையவர்கள் மாணவ பருவத்தில் தாம் செய்த குழப்படிகளின் இனிய தருணங்களை நினைச்சு மகிழ்வார்கள்.
ஞானம் தான் சொல்வதைக் கேட்டு ஓரளவேனும் நடப்பான் என்று தகப்பன் நினைச்சாலும் ஞானம் எப்படி நடக்கப் போறான் என்பது அவனைப் பொறுத்ததே.
படிக்கிற காலத்தில் மாணவ மாணவிகளும் இளைஞர்களும் யுவதிகளும் அன்றைய அவர்களின் வயதுகளில் அச்சூழ்நிலையைப் பொறுத்து அவர்களின் வாழ்க்கை அமைந்திருந்தன.அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படுத்தாத வெளிப்படுத்த முடியாத,வெளிப்படுத்தினால் வாழ்க்கையே பாதிக்கப்படும் இரகசியங்கள் இருக்கவே செய்கின்றன.
மல்லிகைச் சரத்தை கட்டி முடிச்ச ஞானத்தின் தாய், „ஞானம் நீ கேட்டதென்று இராஜகுலேந்திரன் தெல்லிப்பழைப் பல நோக்கக் கூட்டுறவுச் சங்கத்திலை சங்கக்கடை மனேஜர்,அலுவலகத்திலை கிளார்க் வேலை, காங்கேசன்துறை பெற்றோல் செற்றிலை மனேஜர் வேலைகளின் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பப் படிவங்களைக் கொண்டு வந்து தந்தவன் அலுமாரிக்கு மேலை வைச்சிருக்கிறன்.
முடிவு திகதிக்கு இன்னும் ஒரு கிழமைதானிருக்குதாம்,கெதியிலை நிரப்பிப் போட்டு தன்னட்டைத் தரட்டாம் இல்லாட்டி நேரை கொண்டு போய் கோப்பிறற்றிவ் யூனியன் மனேஜர் நவரத்தினத்திட்டைக் குடுக்கட்டாம் „ என்று தாய் சொல்ல அறைக்குள் போய் விண்ணப்ப படிவங்களைப் பார்த்தவன், திருப்பி அலுமாரிக்கு மேலே வைச்சிட்டு தோட்டத்திற்கு தேவையான சாமான்களை எடுக்கத் தொடங்கினான்.
இரண்டு கைலிகள்,மூன்று சாக்குகள், கேத்தல், சருவச்சட்டிகள் இரண்டு, பித்தளை மூக்குப் பேணிகள் ஐஞ்சு, தேயிலை சீனி எல்லாவற்றையும் எடுத்து இரண்டு பெரிய புல் ஓலைப் பைகளில் வைச்சவன் மூன்று சாக்குகளையும் சைக்கிள் கரியரில் வைச்சுக் கட்டிப் போட்டு வர தாயும் தகப்பனும் கல்யாண வீட்டுக்குப் போக வெளிக்கிட்டு ஆயத்தமாக நிற்கிறார்கள்.
வெளிக்கிட்ட உடுப்போடை அடுப்படிக்கள் இருந்து சாப்பிடுவது கஸ்டம் உடுப்பிலை ஊத்தைபடலாம் என்றபடியால் விறாந்தையில் கிடந்த கதிரையில் இருந்து கொண்டு காலைச் சாப்பாடான தோசையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
„அம்மா தோட்டத்திலை வேலை செய்யேக்கை இடைப்பசி வருமம்மா, அதுக்கு மிச்சத் தோசையளை நான் கட்டிக் கொண்டு போறன் என்று சொன்ன ஞானம் தாயின் பதிலுக்கு காத்திருக்காமல் மிச்சமாயிருந்த பத்துத் தோசைகளையும் வாழையிலை வைச்சு அதற்குத் தேவையான சம்பலையும் வைச்சுக் கட்டி அதைக் கொண்டு போய் சைக்கிள் காண்டிலில் கொழுவியிருந்த பைக்குள் வைச்சவன், தாய் தகப்பனைப் பார்த்து „கெதியிலை போவம் இப்ப வாற பஸ்ஸை விட்டால் பிறகு ஒரு மணித்தியாலம் காவல் இருக்க வேணும் „ என்று தாயையும் தகப்பனையும் துரிதப்படுத்திக் கூட்டிக் கொண்டு வேகமாக நடந்து போய் பண்டத்தரிப்பு வீதியில் காரைநகருக்குப் போகும் பஸ்சுக்காக காத்து நின்றார்கள்.
தாய் தகப்பனுடன் காத்திருக்க காத்திருக்க பாறு வெளிக்கிட்டு வந்து கொண்டிருப்பாளே என்று ஞானத்தின் மனம் தவியாய்த் தவிக்கத் தொடங்கியது.அவன் படபடப்புடன் காத்திருக்க பஸ் வந்து கொண்டிருப்பதைக் கண்ட தகப்பன் அவனுடைய கையில் தாள்அகாசுகளைக் குடுத்து' நடுகைக்காரிகளுக்கு குடு, நீயும் ஏதாவது வாங்கிச் சாப்பிடு லிங்கம் கடைக்கும் சீனியம்மானின்ரை கடையளுக்கும் குடுக்க இதிலை இருக்குது ' என்கிறார். தாயும் தகப்பனும் பஸ்ஸில் ஏறியதும் வேகமாக சைக்கிளில் தோட்டத்திற்குப் போனவன்,வீட்டிலிருந்து கொண்டு வந்த சாமான்களை அட்டாளைக்கு கீழ் வைச்சுவிட்டு பாறுவை கூட்டி வரப் போகிறான்.
பாறுவும் இன்னும் இரண்டு நடுகைக்காரிகளும் சின்னத்துரையின் கடைக்கு கிழக்குப் புறமாக உள்ள அரசமரத்தடியடிக்கு வந்து கொண்டிருக்கும் போது ஞானம் அவர்களைக் கண்டு விடுகிறான்.
ஞானத்தைக் கண்ட பாறு அரசமரத்தடியில் நின்றுவிட , மற்றைய இரண்டு பேரும் நடக்க அவர்களை எதிர்கொண்ட ஞானத்திடம் அவர்களில் ஒருத்தி „உங்கடை ஆள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்' என்று சொல்கிறாள்.
பாறு நின்ற இடத்திற்கு ஞானம் வந்ததும், தானாகவே சைக்கிள் பாரில் ஏறி உட்கார்ந்தவள்.பாறுவை ஏற்றிக் கொண்டு ஞானம் ஓடிக் கொண்டிருக்க தான் கொண்டு வந்த பையைச் சைக்கிள் காண்டிலில் கொழுவிக் கொண்டே „இவ்வளவு தூரம் நான் நடந்து வரும் வரையும் நீங்கள் என்ன செய்தனீங்கள் „ என்று கேட்க' அப்பாவும் அம்மாவும் காரைநகருக்கு சொந்தக்காரற்றை கல்யாண வீட்டுக்கு போகினம் அவையோடை நடந்து வந்து பஸ் ஏத்திப் போட்டு வாறன் அதுதான் பிந்திப் போச்சுது,அது சரி இதென்ன பைக்குள்ளை „ என்று கேட்க உங்களுக்கென்று முழுப் போத்தல் கொண்டு வந்திருக்கிறன், இராத்திரி அம்மா கண்டு பிடிச்சிட்டா,இப்ப காலமையும் அம்மா ஒரே உபதேசம் „ என்று பாறு சொல்ல, „என்னத்தை அம்மா கண்டு பிடிச்சவ „ என்று ஞானம் கேட்க,என்ரை சொண்டு சிவப்பானதைத்தான் அம்மா சந்தேகத்துடன் பார்த்தவ, ஏன் உங்களுக்குத் தெரியாதா ஏன் என்ரை சொண்டு சிவப்பானது „என்று அவள் வெட்கத்தடன் சொல்ல, „ ஓ....அதுவா அதுக்கு இன்டைக்கு கன சந்தர்ப்பம் இருக்கு...என்று அவன் முடிக்குமுந்தி „ கலோ அது சரிவராது அதுவும் பகலிலை ....' ஏன்று பாறு சொன்னாலும், சொற்களின் கடுமையற்ற தன்மை அவளும் அதை விரும்புகிறாள் என ஞானம் கண்டு கொண்டு, காண்டிலைப் பிடிச்சுக் கொண்டிருந்த பாறுவின் கைகளுக்கு மேல் தன் கையை வைச்சு பொத்திப் பிடிக்கிறான்....
அவர்களின் சைக்கிள் மகாஜனா கல்லூரியின் கிழக்குப் பக்க எல்லையைத் தாண்டிய போது....
(தொடரும்)
நடுகைக்காரி 15
ஏலையா க.முருகதாசன்
பாறுவிடம் சோடாப் போத்தலில் கள்ளையும், ஏலக்காய்களையும் வாங்கியவன் கள்ளிருந்த சோடாப் போத்தலை சிங்களப் புத்தகங்கள் இருந்த சாக்குப் பைக்குள் வைச்சு அதைக் காண்டிலில் கொழுவிய போது,'குடிச்சுப் பழக்கமில்லாதனீங்கள், குடிச்சுப் போட்டு வெறியிலை எங்iகையாவது வேலிவிராயிலை விழாமல் கவனமாகப் போங்கள்.விழுந்து போட்டு பெண்சாதி கள்ளைத் தந்து கெடுத்துப் போட்டாள் என்று சொல்லக்கூடாது' என்று சொல்லிவிட்டு வந்த போதுதான் அவளின் சொண்டுகள் இரண்டும் சிவந்திருந்ததைக் கண்டு பாறுவும் ஞானமும் முத்தமிட்டிருப்பார்களோ என்று தாய் சந்தேகப்பட்டாள்.
சோடப் போத்தலில் கள்ளை வாங்கிக் கொண்டு போன ஞானத்தின் மனதில் பொக்குலிப்பானுக்கு தாய் தகப்பன் குளிர்ச்சிக்கென கள்ளு வாங்கிக் கொடுத்து குடிச்சதை நினைச்சுக் கொண்டான்.
தகப்பன் இரவுச் சாப்பாட்டுக்கு முந்தி ஒரு போத்தல் கள்ளுக் குடிப்பது வழக்கம்.ஆனால் குடிச்சதுக்கான எந்த மாற்றத்தையுமே அவரிடம் காண முடியாது.வெறி ஏறி தளம்பியதும் இல்லை.கள்ளுக் குடிச்சதற்கு பிறகு அவர் நாக்குழறிக் கதைச்சதும் இல்லை.குடிக்காத நேரத்தில் எப்படி இருப்பாரோ அதைப் போல குடிச்ச பின்னும் அவரிடம் நிதானம் இருக்கும்.
குடிச்சுப் போட்டு தூசணம் பேசுபவர்களும்;,கடுகாக இருக்கும் கோபத்தை பெரும் மலையாக்கி சமுதாயப் பிரச்சினையாக்கி சண்டை போடுபவர்களும்,வேலிகளை கதியால்களை வெட்டிவிடுபவர்களும்,உன் பரம்பரையைப் பற்றித் தெரியாதா என்று சொல்பவர்களைப் பார்த்து குடிச்சுப் போட்டுக் கதைக்கிறார்கள்,வெறியிலை கதைக்கிறார்கள் என்றுதான் பலர் நினைக்கிறார்கள்.ஆனால் அது உண்மையல்ல.....
தம்மை மற்றவர்கள் மன்னிப்பார்கள் தாம் நினைத்தவாறு நாக்கைப் பயன்படுத்தலாம் என்று நிசை;சுத்தான் அப்படிச் செய்கிறார்கள.மது குடிச்சதால்; இரத்தத்தின் வழியாக உடல் எங்கும் பரவும் பரவச நிலையில் மனம் மகிழ்வதில் தவறில்லை.ஆனால் அது மற்றவர்களுக்கு கோபத்தையோ மனவேதனையையோ கொடுக்காமலிருக்க வேண்டும் என ஞானத்தின் தகப்பன் பலமுறை பலரிடம் சொல்லியிருக்கிறார்.....
ஞானத்திற்கு கணச்சூட்டு உடம்பு அதற்கு ஒரு பனைக் கள்ளு உடன் கள்ளு வாங்கிக் குடுக்கும்படி பரியாரி செல்லத்துரை சொல்லியதால் பள்ளக்கூட விடுதலையின் போது ஒரு மாதம் அவனின் தாய் தகப்பன் உடன் கள்ளு வாங்கிக் கொடுத்ததால் அவன் அதன் உருசியறிந்திருந்தான்.
வாங்கிக் கொடுக்கும் போது தாய் இதை ஒரு பழக்கமாக்கிப் போடாதை இது மருந்து மாதிரிததான் என்று சொல்லியிருந்தாள்.
பாறுவுடனான பழக்கத்தினாள் கள்ளுக் குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஞானத்திடம் தாயின் உதவியால் மனமில்லாவிட்டாலும் சோடாப் போத்தலில் பாறு கள்ளுக் குடுத்தனுப்பியிருக்கிறாள்.
ஞானம் குடிச்சுப் போட்டு வெறியிலை எங்கையாவது விழுந்தெழும்பி பிரச்சினையாகிவிடுமோ என்ற பயம் ஒரு புறமும்,தன்னைத் தாயார் சந்தேகப்படுகிறாரோ இருட்டிலை நடந்ததை ஊகித்துவிட்டாரோ என்று இன்னொரு புறமுமாகப் பயந்து கொண்டிருந்தாள்; பாறு.
பாலத்தைக் கடந்து வீதியை அடைந்த ஞானம் வீதியின் மேற்குப் பக்கமாகத் தன் சைக்கிளைத் திருப்பி எதிர்பட்ட மதவடியில் சைக்கிளை நிற்பாட்டி ஒரு காலை மதகிலும் இன்னொரு காலை நிலத்திலும் வைச்சு நின்றபடி சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டவன் சோடாப் போத்தலை எடுத்து அதற்குள் இருந்த கள்ளை வேகமாக குடிச்சு முடிச்சான்.
தண்ணியைப் போல கள்ளை வேகமாக குடிக்க முடியாது.நொதிக்கும் தன்மையால் ஏற்படும் காற்று தொண்டையை அடைக்கச் செய்யும்.கள்ளுக் குடிப்பவர்கள் விட்டு விட்டு ஆறுதலாகத்தான் குடிப்பார்கள்.
ஆனால் குடிச்சு முடிக்க வேண்டும் என்ற ஆவலாதியில் குடிச்சவன் ஏவறைவிட்டபடி வெறும் போத்தலை மீண்டும் பைக்குள்ளை வைச்சான்.
அவன் மதவோடு இருந்த வெள்ளவாய்க்காலுக்குள் எறிந்திருக்கலாம்.ஆனால் அவன் அதைச் செய்யவில்லை.மதவுக்கு கொஞ்சம் தள்ள்ளி தெற்குப்புற வளவின் வேலியோடு கிளைவிட்டு ஒடிச்சு எடுக்கக்கூடிய உயரத்திலிருந்த மாவிலைகள் நாலைஞ்சை ஒடிச்சு எடுத்தவன் வாயில் போட்டு சப்பு சப்பென்று சப்பித் துப்பிப் போட்டுப் போய்க் கொண்டிருந்தான்.
குடிச்ச கள்ளு தனது வேலையைக் காட்ட ஆரம்பிக்கத் தொடங்கியது.இரத்தத்தில் கலந்த மதுசாரத்தால் அவனின் உடலில் ஏற்பட்ட பரவச நிலையை உணர்ந்தான்.
பாறுவை நினைச்சுக் கொண்டான்.பாறு இயல்பாகவே அழகிதான்.இப்ப அவள் அவனுக்குத் தேவதையாக மனக் கண்ணில் தெரிந்தாள்.தோட்ட வேலையும் வீட்டு வேலையும் செய்து ஊளைச்சதையற்று இறுகிய வாளிப்பன உடல் உடையைச் சேர்த்து அவளை கட்டியணைக்கும் உடையையம் தாண்டி அவனுடைய கைகளும் காதலும் அவனைக் கிறங்கடித்ததை நினைச்சுப் பார்த்தான்.இனிய நினைவுகள் அவளை ஆக்கிரமித்து நின்றன.
மகாஜனக் கல்லூரியைக் கடந்து லிங்கம் கபேயடிக்கு வருகையில், கடை திறந்திருந்ததைக் கண்ட ஞானம், சைக்கிளை லிங்கம் கபே பாலத்தில் நிற்பாட்டியவன் „லிங்கண்ணை வடை இருக்குதா' என்று அவசரமாகக் கேட்க, என்ன இவன் அவசரமாகக் கேட்கிறான் என்று யோசித்தவாறே'இருக்குது உழுந்து வடையா இல்லாட்டி கடலை வடையா' எனக் கேட்ட லிங்கத்திற்கு „மூன்று உழுந்து வடையும் சம்பலும் தாங்கோ என்றவன்' கொஞ்சம் தண்ணி தாங்கோ வருகிற போது, பூச்சியொன்று வாய்க்குள்ளை போட்டுது, அதைத் துப்பிப் போட்டன், ஆனால் அரையண்டமாக இருக்குது வாயைக் கொப்பிளிச்சால்தான் நிம்மதியாயிருக்கும் என்று கள்ளின் மணம் வரக்கூடாது என்பதற்காக மாவிலையைச் சப்பியதால் அது வாய் முழுக்க ஏதோ செய்ய பூச்சி போனது என்று பொய் சொல்லி லிங்கத்திடம் தண்ணியை வாங்கி சாப்பிட்டிட்டு இலை போடும் இடத்திற்குப் போய் வாயைக் கொப்பளிச்சான்.
ஞானம் தெல்லிப்பழைச் சந்தியை நோக்கிப் போகும் போது ஒரு பொம்பிளைப் பிள்ளையை சைக்கிள் பாரிலை ஏற்றி வைச்சுக் கொண்டு போனதை லிங்கத்துடன் சின்னக்கண்டு கண்டதால் ஞானத்திடமிருந்து கதை பிடுங்குவதற்காக ஞானம் பாலத்தில் சைக்கிளை நிப்பாட்டியதும் அயேன் பொக்ஸை நிமிர்த்தி வைச்சிட்டு „ எனக்கும் ஒரு பிளேன்ரி போடுங்கோ' என்று சொல்லிக் கொண்டே, சின்னக்கண்டு ஞானம் இருந்த வாங்கு மூலையில் இருந்தார்.
ஞானம் கிழக்குப் பக்கத்து சுவரோடு சாய்ஞ்சு கொண்டு கால்கள் இரண்டையும் வாங்கின் இரண்டு பக்கத்திலும் வைச்சுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
சின்னக்கண்டுவுக்கு பிளேன்ரியைக் கொண்டு வந்து வைச்ச லிங்கத்திற்கு கண்ணால் சாடை காட்டிவிட்டு „சொந்தக்காரப் பிள்ளையோ அப்போதை ஏற்றிக் கொண்டு போன பிள்ளை' என்று சின்னக்கண்டு கேட்க, பாறுவை யாரென்று அறியிறதுக்காக வேணுமென்றே சின்னக்கண்டு விசாரிக்கிறார் என்பதைத் தெரிஞ்சு கொண்ட ஞானம், வெட்டு ஒன்று துண்டு இணர்டாய் „சொந்தக்காரப் பிள்ளைதான்' என்கிறான்.
ஞானம் இப்படிப் பதில் சொல்வான் என்று எதிர்பார்க்காத சின்னக்கண்டு அமைதியாக „என்ன ஞானம் ஒவ்வொரு நாளும் தெல்லிப்பழைச் சந்திப் பக்கமாக போறியள் யாருக்கேன் ரியூசன் குடுக்கிறியளோ' என்று லிங்கம் கேட்க,உங்களுக்கு அது தேவையில்லாத விசயம் என்று சொல்ல நினைச்ச ஞானம்'நான்தான் சிங்களம் படிக்க ஆனந்தா பேக்கறி முதலாளியிட்டை போறனான்' என்று பதில் சொல்ல,' அங்கை சந்தியிலை இருக்கிற ரியூட்டோரியில் பத்மசேகரம் மாஸ்ரர் சிங்களம் சொல்லிக் குடுக்கிறாராமே....' ஏன்று லிங்கம் முடிக்குமுன், „அது போதாது ஆதுதான் அங்கையும் படிக்கிறன்' என்றவன் சாப்பிட்டு முடிச்ச வாழையிலையைக் கொண்டு போய் கைகழுவுகிற இடத்திலை போட்டிட்டு, வாயைக் கொப்பிளிச்சிட்டு „வாறன் அண்ணை „என்று லிங்கத்திடம் சொல்லிப் போட்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தான்.
„லிங்கம் அவற்றை கதை நடவடிக்கை வித்தியாசமாய் இருந்ததைக் கவனிச்சனீங்களே, கண்ணும் ஒரு மாதிரியாய்த்தான் கிடந்துது, தம்பி ஏதோ பாவிச்சிட்டார் போல, ஆனால் ஆளிலை மணக்கேலை, வழமையாய் கலகலவென்று கதைக்கிற பொடியன் இண்டைக்கு அளந்து அளந்து கதைக்கிறான்....' என்று இழுக்க, „எனக்கும் அந்த ஐமிச்சம் இருக்குது மதகிலை இருக்கிறவன்தானே பாவிச்சாலும் பாவிப்பான்' என்று லிங்கம் நக்கலாகச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தோட்டத்தாலை வந்த கந்தசாமி ஒட்டுக்கட்டை பாலத்திலை ஒரு பக்கமாக வைச்சிட்டு „மெய்யே லிங்கம் பிள்ளையின்ரை ரியூசன் விசயமாக சுப்பையற்றை கடைசிப் பொடியனை கேட்கச் சொன்னனான் கேட்டனீங்களா,உங்கடை கடைக்கு வந்து போற பொடியன்தானே, நல்ல கெட்டிக்காரப் பொடியனாமே இங்கிலீஸ் நல்லாச் சொல்லிக் குடுப்பானாம்....' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே' நான் நினைக்கேலை அவன் ரியூசன் குடுக்க வருவானென்று,யாரோ ஒரு நடுகைக்காரியை சைக்கிளிலை ஏற்றிக் கொண்டு திரியிறான், இப்ப சிங்களமும் படிப்பிக்கிறான் எதுக்கும் அவன்ரை வீட்:டிலை போய் கேட்டுப் பாருங்கோ' என்று கதையை முடிக்கிறார் லிங்கம்.
வீதியைவிட்டு தன்னுடைய வீடு இருக்கும் ஒழுங்கைக்குள் சைக்கிளை இறக்கிய ஞானம் சட்டைப் பைக்குள்ளையிருந்து ஏலக்காய்களைப் எடுத்து வாய்க்குள் போட்டு சப்பத் தொடங்கினான்.
வீட்டுப் படலையையும் கடந்து முற்றத்திலை சைக்கிளை நிற்பாட்டியவன்,புத்தகம் சோடாப் போத்தல் இருந்த பையை எடுத்துக் கொண்டு அறைக்குள் போக அவனை விறாந்தையிலிருந்து நிமிர்ந்து பார்த்த தாய்,'என்ன ஞானம் இரண்டு கண்ணும் சிவந்திருக்கு' என்று கேட்க „பூச்சியொன்று கண்ணிலை பட்டிட்டுது இரண்டு கண்ணையும் கசக்கிப் போட்டன் ஆதுதான் சிவந்திட்டுது போல' என்று அவன் சொன்னதும் அவன் வாயிலையிருந்து ஏலக்காய் வாசம் வர' ஏலக்காய் வாசம் வருதே ஏன் ஏலக்காய் சாப்பிட்டனி, கள்ளுக்;குடிக்கிறவைதான் மணம் வராமலிருக்க ஏலக்காயை வாயிலை போடுவினம்...'என்று தாய் சொல்லி முடிக்க முந்தி' „அம்மா தொண தொண என்று கேள்வி கேட்காதை பூச்சி போய் கண் எரியுது ஒரு பக்கம்.....அம்மா சிங்கள படிக்கப் போன இடத்திலை பேக்கறி முதலாளியின்ரை மனுசி லவேரியா என்ற தேங்காய்ப்பூ கித்துள் பாணி கலந்து இடியப்பத்திற்குள்ளை வைச்சு அவிச்ச சிங்களப் பணியாரம் தந்தவ, நிறைய ஏலக்காய் அதுக்குள்ளை இருந்தது, அதோடை இஞ்சி ஏலக்காய் போட்ட ரீயும் தந்தவா அதுதூன் மணக்குது போல' ...என்று சொல்லிக் கொண்டே எப்படிப் போத்தலை அப்புறப்படுத்துவது என்ற யோசனையில் அலுமாரிக்கு பின்னாலை பையை ஒளிச்சு வைச்சவன், முகம் கைகால் கழுவுவதற்காக கிணத்தடியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்......
ஞானம் கிணத்தடியை நோக்கிப் போக அறைக்குள் போன தாய்.....
(தொடரும்)
ஏலையா க.முருகதாசன்
படலையடியில் கும்மிருட்டில் ஞானத்துடன் கதைச்சுப் போட்டு வந்த பாறுவை விறாந்தையில் நின்று தாய் „இவ்வளவு நேரமும் அப்படி என்ன அந்தத் தம்பியோடை கதைச்சனி' என்றவள் தற்செயலாக அவளைப் பார்க்கையில் அவளுடைய இரண்டு சொண்டுகளும் சிவந்திருந்ததைக் கண்ட பாறுவின் தாய் செல்லாச்சியின் மனதில் குழப்பகரமான எண்ணங்கள் ஓட,' ஏன் சொண்டுகள் இரண்டும் சிவந்திருக்கு' என்று தாய் கேட்டதும் பாறுவுக்கு பகீர் என்றது.
„அது அம்மா இருட்டிலை பூச்சியொன்று பறந்து வந்து சொண்டைக் கடிக்க அதைதட்டிவிட்டு சொண்டைக் கசக்கியதால் சிவந்து போயிட்டுதாக்கும்' என்றவள் தாயைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே அறைக்குள் போனவள் கதவடியில் நின்று படிப்பைப் பற்றியும் ஒழுங்கையைக் கூட்டுவதுபற்றியும் நாளைக்குத் தோட்ட வேலைக்கு வரச் சொல்லியுந்தான் கதைச்சவர், கல்விதான் முக்கியம் என்றவர்'என்று பொய் சொன்னாள் பார்வதி.
பாறுவின் தாய் ஏதோ சொல்ல வாயெடுக்க,பாறுவின் தகப்பனும் தம்பியாரும் வருவதைக் கண்டதும் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிடுகிறாள்.
„அம்மா இந்தாம்மா கோவில் புக்கையும் வடையும்' என்று பாறுவின் தம்பியார் தாய் செல்லாச்சியிடம் அவற்றைக் கொடுக்க, அதை வாங்கிய செல்லாச்சி „நீங்கள் இரண்டு பேரும் கோவிலுக்கா போனனீங்கள்,நீங்கள் கடைக்குத்தானே போறன் என்றுதானே சொல்லிப் போட்டுத்தானே போனனீங்கள்....' என்று செல்லாச்சி சொல்லிக் கொணடிருருக்க' கடைக்குப் போயிட்டு வரேக்கிலை புளியடி வைரவர் கோவிலில் எங்கடை சுப்புத்தம்பியும் பெண்சாதி பிள்ளைகளும் பொங்கிக் கொண்டிருந்தினம், என்னைக் கண்டதும் தவசியண்ணை வாருங்கோ பொங்கிறம், பொங்கி முடிஞ்சதும் வைரவரைக் கும்பிட்டு புக்கையைக் கொண்டு போய் வீட்டிலை குடுங்கள் என்று சொன்னான், அவையின்ரை பிள்ளைக்கு நெருப்புக் காய்ச்சல் வந்ததாம், அதுக்கு நேத்தி வைச்சு பொங்குவதாகச் சொன்னான். அதுதான் நேத்திப் பொங்கல் என்று சொன்னதாலை மறுக்கக்கூடாது என்று அங்கை நின்றிட்டன்' என்று தவசி சொல்ல' இவனைக் காணேலை என்று யோசிச்சுக் கொண்டிருந்தனான்,இவன் எங்கையும் போகமாட்டான் செல்வராசாவின் வீட்டிலைதான் நிற்பான் வந்திடுவான் என்று நினைச்சுக் கொண்டிருக்க இவன் உங்களோடை வாறான் இவனும் கோவிலுக்கு வந்தவனா' என்று செல்லாச்சி கேட்க 'நான் கோவில்லையிருந்து வரேக்கை இவன் செல்வராசா வீட்டிலையிருந்து நடந்து வந்து கொண்டிருந்தான், நான் சைக்கிளிலை ஏற்றிக் கொண்டு வந்தனான் „ என்று சொன்ன தவசி,பாறு கதவடியில் நின்று பேசுவதை கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் பாறுவை தகப்பன் உற்றுக் கவனித்ததைக் கண்டதும் பாறு பதட்டமடைந்தாள்.
தானும் ஞானமும் புளியடி வைரவர் கோவிலடியால் கதைச்சுக் கொண்டு வந்ததை சுப்புத்தம்பி கவனிச்சிருப்பாரோ இல்லாட்டில் அப்பாதான் அங்கு நின்றிருப்பாரோ, தானும் ஞானமும் அருகருகாக கதைச்சுக் கொண்டு வந்ததை அப்பா கண்டிருப்பாரோ அதனால்தானோ அப்பா கூர்ந்து குறிப்பாக பார்க்கிறாராக்கும் என்றெண்ணிப் பயந்தாள்.
காதலனுடனோ காதலியுடனோ இருக்கும் போதோ கதைச்சக் கொண்டு நடக்கும் போதோ அந்த இனிய உணர்வுகளின் சங்கமத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் நிலை காதலர்களுக்கு உண்டு.அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கவனிப்பதுமில்லை கவலைப்படுவதுமில்லை.அது காதலுக்கு உள்ள சக்தி.
இரவுச் சாப்பாடடுக்கு நேரமாகிவிட்டதால் பாறுவின் தாய் எல்லாரும் சாப்பிட வாங்கோ எனக் கூப்பிட தகப்பனும்,பாறுவும், பாறுவின் தம்பியும் பந்தியாக இறக்கியிருந்த அடுப்படிக்குள் நுழைந்தனர்.
பாறு பொதுவாக அடுப்படிக்குள் நுழையும் போதே „ அம்மா என்னம்மா இரவுக்கு சமைச்சனி „ என்று கேட்பாள்.இன்று எதையுமே கேட்காமல் அமைதியாக அடுப்படிக்குள் நுழைந்ததைக் கண்ட தாயும் தகப்பனும் யோசிக்கத் தொடங்கினர்.
கும்மிருட்டில் நின்று ஞானத்துடன் கதைச்சுப் போட்டு வருகையில் பாறுவின் சொண்டுகள் இரண்டும் சிவந்திருந்தும், ஏன் சொண்டுகள் சிவந்திருக்கு என்று தாய் கேட்ட போது பறக்கிற பூச்சி சொண்டிலை கடிச்சதால் நான் சொண்டைக் கசக்க சொண்டு சிவந்து போய்ச்சுதாக்கும் என்று ஞானம் பாறுவை இறுக்கி அணைச்சு சொண்டோடு சொண்டு சேர்த்து முத்தமிட்டதை மூடிமறைச்சுச் சொன்னதை தாய் முழுமையாக நம்பவில்லை.
அடுப்படிக்குள் நுழைஞ்சவர்கள் ஏற்கனவே சப்பாணி கட்டிக் கொண்டிருப்பதற்காக அகலம் குறைஞ்ச நீளமான பாயொன்றை தாய் இழைச்சு வைச்சிருந்ததால்,அதை விரிச்சுப் போட்டு அதில் உட்கார்ந்தார்கள்.அன்று வெள்ளிக்கிழமையாதலால் வாழையிலையிலேயே அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள்.
இரவுச் சாப்பாட்டுக்கு பாறுவின் தாய் இடியப்பமும் அவிச்சு சொதியும் வைச்சிருந்தாள்.மத்தியானம் முருக்கங்காயும் பிலாக்கொட்டையும் போட்டு ஒரு கறியும், பட்டர் போஞ்சியும் கரட்டும் போட்டு ஒரு வெள்ளைக்கறியும் வைச்சிருந்தாள்.
நால்வரும் ஒரே வரிசையில் உட்கார இடியப்பம் சொதி கறியளை எல்லாரும் எடுத்துப் போட்டுச் சாப்பிடக்கூடிய தூரத்தில் தாய் வைச்சிருந்தாள்.
தனக்குப் பக்கத்தில் இருந்த மகளின் சொண்டுகளை பார்க்க,பாறு சொண்டுகள் இரண்டையும் வாய்க்குள் மடிச்சவள் தாயைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு இடியப்பத்தை சொதியுடன் குழைச்சு சொண்டில் இடியப்பத் துகள்கள் படத்தக்கதாக வாய்க்குள் வைச்சதைக் கண்ட தாய் இவள் அழகாக சாப்பாடு சொண்டிலே ஒட்டாத மாதிரிச் சாப்பிடுபவளாச்சே பார்க்க அசிங்கமாகச் சாப்பிடுகிறாளே கும்மிருட்டில் ஏதோ நடந்திருக்கு என்றெண்ணியவள் அமைதியாகச் சாப்பிடத் தொடங்கினாள்.
புளியடி வைரவர் கோவிலிலிருந்து சுப்புத்தம்பி குடுத்துவிட்ட வடை புக்கை எல்லாவற்றையும் தாய் எல்லர்ருக்கும் பகிர்ந்து போட்டாள்.
அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாறுவின் தகப்பன்' பிள்ளை நீ தொடர்ந்து அம்பனைத் தோட்ட வேலைக்குப் போகத்தான் வேணுமா,நாங்கள் போகச் சொல்லேலை,உனக்கு பொழுது போகேலை என்று நீதான் போகிறாய், சும்மா கேட்டனான் „என்கிறார்.அவர் கேட்டதும் பாறுவுக்கு புரைக்கேற, தாய் அவளின் தலையில் தட்டிவிட்டு தண்ணியைக் குடிக்கச் சொல்கிறாள்.
தண்ணியைக் குடிச்சு முடிச்சதும்' வீட்டிலை இருக்க விசராய் இருக்குதப்பா, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் போவன் பிறகு போகமாட்டன் பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி எடுக்கப் போறன் அண்டைக்குச் சொன்னனான்தானே.வீட்டிலை இருந்து படிக்க வேணும், அப்ப சில வேளைதான் தோட்ட வேலைக்குப் போவன், ஞானம் இஞ்சை வந்து ரியூசன் தாறதாகச் சொன்னவர் „ பாறு தயங்கித் தயங்கிச் சொல்ல „ம் கவனமான இருந்தால் சரி' என்று சொன்ன தகப்பன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.
சாப்பிட்டு முடிச்ச பாறுவும் தம்பியாரும் முற்றத்திலை கையைக் கழுவிப் போட்டு பாறு அறைக்குள் போக, தம்பியார் புத்தகங்களை ஒழுங்காக மேசையில் அடுக்கிக் கொண்டிருந்தான்.அடுக்கிக் கொண்டே'அக்கா இங்கிலீஸ் சொல்லித் தாறியா'என்று பாறுவைக் கேட்க, „நாளைக்குச் சனிக்கிழமைதானே நாளைக்குச் சொல்லித் தாறன், எனக்கு ஒரே அலுப்பாக இருக்குது என்றவள் பாயை விரிச்சுப் போட்டு,அதில் உட்கார்ந்து சுவரோடு சாய்ஞ்சு யோசிச்சுக் கொணடிருந்தாள்
வழமையாக இரவுச் சாப்பாடு சாப்பிட முந்தி தவசி ஒரு கிளாஸ் கள்ளுக் குடிப்பவர்.அன்று வெள்ளிக்கிழமையும் கோவிலுக்குப் போய் வந்ததாலும் அவர் கள்ளுக் குடிக்கவில்லை.சாப்பிட்டு முடிஞ்சதும் தகப்பனும் தாயும் வெற்றிலை பாக்குப் போட்டபடி விறாந்தைக் கதிரையிலிருந்து பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருப்பினம். அதுவும் அன்று நடக்கவில்லை.
தவசி சாப்பிட்டு முடிஞ்சதும் முற்றத்திலை கையைக் கழுவியவர் வெற்றிலை பாக்குத் தட்டத்துடன் மீண்டும் அடுப்படிக்குள் நுழைய புருசன் அடுப்படிக்குள் வந்ததைக் கண்ட செல்லாச்சி ஏதோ என்னோடு கதைக்கத்தான் வருகிறார் என எண்ணிக் கொண்டவள் அடுப்படிக்குள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைச்சபடியே கணவனை நிமிர்ந்து பார்க்கிறாள்.
அடுப்படிக்குள் அரைமண்சுவரில் சாய்ந்தபடியே பாக்குத்தட்டத்தை எடுத்து அதிலிருந்து கொட்டைப் பாக்கை பாக்குவெட்டியால் சீவியபடி „பிள்ளை பாறு எத்தனை மணிக்கு வீட்டுக்கு „வந்தவள் என்று கேட்க, „ஒரு ஐஞ்சு மணியிருக்கும் அந்த ஞானம் தம்பிதான் கூட்டிக் கொண்டு வந்து விட்டவர்.எதுவும் பார்க்காமல் கட்டாயப்படுத்தி தேத்தண்ணி வாங்கிக் குடிச்சவர், இந்தக் காலத்திலை இப்படியொரு பிள்ளையைப் பார்க்க முடியாது' என்று சொல்லிக் கொண்டிருக்க' பிள்ளை பாறு சொன்னாளா தோட்ட வேலை முடிஞ்சு நேரை இங்கைதான் வாறனெண்டு' என்று தவசி கேட்க,'ஓம் அப்படித்தான் சொன்னவள்' என்ற செல்லாச்சி, „ஏன் என்ன பிரச்சினை.......' என்று கொஞ்சப் பயத்துடன் செல்லாச்சி புருசனைக் கேட்க, „அந்தத் தம்பியையும் பிள்ளை பாறுவையும் அம்பனை றோட்டிலை இருந்து வந்து தெல்லிப்பழைச் சந்தியிலை வடக்குப் பக்கமாக திரும்பி இருவரும் ஆனந்தா பேக்கறிக்குள் போய்விட்டு கன நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்ததாக கார் டிரைவர் இரத்தினம், கடைக்குப் போன என்னை மறிச்சுச் சொன்னவர்,பிறகு புளியடி வைரவர் கோவிலடியாலை அவை இரண்டு பேரும் நடந்து வந்ததை கோவில் வளவுக்குள் நின்ற சுப்புத்தம்பியும் கண்டவராம் என்று சொல்லி முடிச்சார் புருசன்.
பாறுவின் தாய் செல்லாச்சிக்கு மனதில் பல எண்ணங்கள் ஓடின.பாறு பொய் சொன்னதுடன் ஞானத்தை அனுப்பிவிட்டு வந்த பாறுவின் சொண்டுகள் சிவந்திருந்தமையும் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது.
„எதுக்கும் பாறுவைக் கவனமாக இருக்கச் சொல்லு நாங்கள் யார் என்று அவளுக்குத் தெரியும்.இது விளையாட்டான விசயமல்ல.தம்முடைய உண்மையான குணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இ.ருப்பவர்களின் உண்மையான குணத்தை இறுதியில் காட்டுபவர்களும் உண்டு'.
„ஞானம் எங்களுடன் பழகுவதை வைச்சு அவனை நல்லவனா கெட்டவனா என்று அறிய முடியாது' என்று சொன்னவர் சரி நான் படுக்கப் போகிறன் பாறுவோடை கதை என்றவர், கள்ளை வெளியிலை ஊத்திவிடு என்று புருசன் சொன்னதும் „ அதை நான் சோடாப் போத்தலிலை வார்த்து அந்தத் தம்பியிட்டை குடுக்கச் சொல்லி பாறுவிட்டை குடுத்தனான்' என்று செல்லாச்சி சொல்லி முடிக்க முந்தி உனக்கென்ன விசரே வீட்டுக்கு வந்தவரிடம் யாராவது கள்ளுக் குடிக்கக் குடுப்பினமா„ என்று புருசன் கேட்க,'இல்லை அந்தத் தம்பி ஞானந்தான் கள்ளுக்குடிக்க ஆசையாயிருக்கென்று பாறுவிட்டை சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தனான் „ என்று செல்லாச்சி இழுக்க,'பார் கெதியிலை தன்ரை பிள்ளைக்கு குடியைப் பழக்கினது என்று ஞானத்தின்ரை தாய் தகப்பன் கதைக்கப் போயினம்„ என்று கோபத்துடன் புறுபுறுத்தபடி தவசி எழுந்து போகிறார்.
தவசி போனதன் பின், பாறு படுத்திருந்த அறைக்குள் நுழைந்த தாய் அங்கை பாறு நித்திரை கொள்ளாமல் மேலே பார்த்தபடி இருந்ததைக் கண்டு அவள் பக்கத்தில் உட்காருகிறாள்.
மகளை கூறுகுறிப்பாகப் பார்த்த தாய் „நீ எனக்கு அம்பனை தோட்த்திலையிருந்து நேரை இஞ்சை வீட்டுக்கு வந்தனான் என்றுதான் சொன்னனி, ஆனால் நீயும் ஞானம் தம்பியும் ஆனந்த பேக்கறிக்குள்ளை போனதாக கொப்பாவுக்கு கார்க்கார இரத்தினம் சொல்லியிருக்கிறார், ஏன் பேக்கறிக்கு போனனீங்கள் „ என்று தாய் கேட்டதும், இனி மூடிமறைக்க முடியாதென பாறு' ஞானம் அம்பனைச் சந்தி ரியூட்டோரியில்,அங்கையொரு மாஸ்டரிட்டை சிங்களம் படிக்கிறவர், அது போதாதென்று,ஆனந்தா பேக்கறி முதலாளியிட்டை கேட்டவர் அவரும் சொல்லித்தாறன் என்று வரச் சொன்னவர்'
„இப்ப முதலாளியின்ரை மகள் அவையின்ரை ஊரான பாணந்துறையிலையிருந்து வந்திருக்கிறதால முதலாளியின் மகள் சிங்களம் சொல்லிக் குடுக்கிறன் என்று சொன்னவாவாம், அப்ப ஞானம் சொன்னார் இண்டைக்கு அங்கை போறணென்டு,நான் கேட்டன் நானும் வந்து பார்க்கலாமோவென்று, அதுதானம்மா சிங்களத்தை எப்படி உச்சரிக்கிறதெண்டு பார்க்க ஆசைப்பட்டுப் போனனான், வேறையொன்றுமில்லை'என்று பாறு சொல்லி முடிச்சாள்.
ஆனால்.....
(தொடரும்)
நடுகைக்காரி 13
ஏலையா க.முருகதாசன்
ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகள் பாணந்துறையிலிருந்து வரும் போது கொண்டு வந்த சிங்களமொழி பாடப்புத்தகங்களை ஞானத்திடம் ஏற்கனவே குடுத்திருந்தாள்.
ஞானம் வீட்டுக்குக் கொண்டு போய் கொண்டு வந்த சிங்களப் பாடப்புத்தகங்களை பைக்குள்ளிருந்து எடுத்து பேக்கறி முதலாளியின் மகள் முன்னால் வைச்சான்.
ஒரு அகலமான மேசையில் ஞானமும் பாறுவும் கொஞ்ச இடைவெளியில் அருகருகாக உட்கார்ந்திருக்க ஞானத்துக்கு வலது பக்கத்தில் பேக்கறி முதலாளியின் மகள் கீதாஞ்சலி உட்கார்ந்திருந்தாள்.
சிங்களத்தில் வசனங்களைச் சொல்லிவிட்டு தனித்தனிச் சொல்லாக அவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
ஞானம் சிங்கள உச்சரிப்புக்களைத் தெளிவாக சொல்லிய போதெல்:லாம் வெரிகுட் என்று ஆங்கிலத்திலும் கொந்தாய் என்று சிங்களத்திலும் சொல்லிப் பாராட்டி உற்சாகப்படுத்தினாள்.
அதே வேளை கீதாஞ்சலி பாறுவை அடிக்கடி பார்த்துக் கொணடாள்.பேக்கறி முதலாளியின் மகள் பெயரை இதுவரை ஞானம் கேட்கவில்லை.ஆனால் பாறு அதை அறிய விரும்பினால், பேக்கறி முதலாளியின் மகளிடம் இப் யூ டோண்ட் மைன் யுவர் நேம் பிளீஸ் (If you dont mind your name please)என்று பாறு கேட்டதும் மை நேம் இஸ் கீதாஞ்சலி (My Name is Geethanjali)என்று அவள் சொன்னாள்.தாங்யூ என்று சொன்ன பாறு கீதாஞ்சலி ஞானத்திற்கு பாடம் சொல்லிக் குடுப்பதை அவதானித்துக் கொண்டே இருந்தாள்.
ஒரு உதாரணத்திற்கு ஐ லவ் யூ (I love you) என்பதை சிங்களத்தில் மம ஒயாட்ட ஆதரேய்(මම ඔයාට ආදරෙයි) என்றுசொல்ல வேண்டும்.அது போல என்னை நீ காதலிக்கிறாயா என்பதை ஒய மட்ட ஆதரேய் த (ඔය මට ආදරෙයි ද ?)என்று சொல்ல வேண்டும் என்று கீதாஞ்சலி சொல்லிக் கொடுத்து சில விநாடிகள் சென்ற பின் „பிளீஸ் டோண்ட் மிஸ் அணடர்ஸராண்ட் மி,இஸ் தியர் இஸ் எனி வேர்ட் அதர் தான் திஸ் „ (Please dont misunderstand me,is there is any word other than this?)என்று பாறு கேட்க கீதாஞ்சலிக்கு அவளின் ஆங்கில உச்சரிப்பு மகிழ்ச்சியையும் திகைப்பையும் தர, இற் இஸ் ஒன்லி போர் எக்சாம்பிள், ஆர் யு எபிரைட்( It is only for example ,are you afraid) „ என்று கீதாஞ்சலி கேட்கிறாள்.
No,but..this is my opinion,Ok please continue… என்று சொன்ன பாறு அமைதியாகிறாள்.இவள் என்னில் சந்தேகப்படுகிறாளோ' என நினைத்த கீதாஞ்சலி பாறுவைப் பார்த்து புன்னகைக்கிறாள்.
படிச்சு முடிஞ்சதும் ஞானம்,பாறு,கீதாஞ்சலி மூவரும் வெளியே வருகின்றனர்.பேக்கறி காசுப்பட்டடையில் பேக்கறி முதலாளி நிற்கிறார்.பேக்கறியில் வேலை செய்யும் இருவருடனும் அவர் கதைச்சுக் கொண்டிருந்தார்.
போயிட்டு வாறன் என்பதற்கு கீதாஞ்சலியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஞானம் பேக்கறியைவிட்டு வீதியில் காலடி எடுத்து வைக்கும் போது „கிகில என்னங்' என்று எல்லாரையும் பார்த்து சிங்களத்தில் சொல்ல கீதாஞ்சலி சிரித்துக் கொணடே கையைக் காட்டுகிறாள்.
பாறுவும் கீதாஞ்சலிக்கு குட்பை என்று சொல்லி காங்கேசன்துறை வீதியில் நடக்க,'யார் இந்தப் பிள்ளை தெரியுமா உங்களுக்கு „என்று பேக்கறி முதலாளி அங்கு நின்றவர்களிடம் கேட்க, அவர்களில் ஒருவர் சிங்களத்தில் மேசன் தவசியின்ரை மகள்,அதோடை தவசி கள்ளு இறக்கி ரொடிக் கோப்பிறேசனுக்குக் குடுக்கிறவர்.நான் அளவெட்டிக்கு பாண் கொண்டு போகும் போது வேற நடுகைக்காரிகளோடை இந்தப் பிள்ளையும் தோட்ட வேலைக்குப் போறதைப் பார்த்திருக்கிறன்' என்று சிங்களத்தில் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த கீதாஞ்சலி' உண்மையாகவா தோட்ட வேலைக்குப் போறவளா,சரளமாக ஸ்ரைலாக இங்கிலீஸ் பேசுறாளே „என்று அவள் வியப்புடன் சொல்ல' இங்கைதான் அந்தப் பிள்ளை படிச்சிருக்க வேணடும் „ என்று எதிரே இருக்கும் யூனியன் கல்லூரியைக் காட்டுகிறார்.
ஞானம் சைக்கிளை உருட்டிக் கொண்டு போக அவனருகில் பாறு காங்கேசன்துறை வீதியில் வடக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.கொஞ்ச தூரம் போனதும் சைக்கிளிலை ஏறுங்கள் சைக்கிளிலேயே போவம் „ என்கிறான் ஞானம்.
அதற்கு பாறு' வேண்டாம் இதாலை நெடுக எங்கடை சொந்தக்கார் வந்து போகிறவை ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான்' என்று சொல்ல, சூழ்நிலையைப் பொறுத்துந்தான் நடக்க வேண்டும் என்றெண்ணி அவளுடன் நடந்து கொண்டிருந்தவன் „ நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குப் போவீர்களா' என்று கேட்க,'ம் போவன்' என்று பாறு சொல்ல,' எந்தக் கோவிலுக்கு' என்று ஞானம் கேட்க, „இதோ இந்தக் கோவிலுக்குத்தான்' என்று தெல்லிப்பழை தபால் அலுவலகத்திற்கு கிட்டவாகவும், பெற்றோல் நிலையத்திற்கு அருகாகவும் வீதிக்கு மேற்குப் பக்கத்திலுள்ள புளியடி வைரவர் கோவிலைக் காட்டுகிறாள்.சொல்லிக் கொண்டிருக்கும் போது கோவிலுக்கு முன்பாக அவர்களிருவரும் வந்துவிட்டனர்.
„இங்கேயா' என்று கேட்டுக் கொண்டே கோவிலைத் திரும்பிப் பார்க்க, அங்கே பூசகர் கோவிலுக்குள்ளே உள்ள பகுதியைச் சுத்தம் செய்வதையும், கோவிலுக்கு வடக்குப் பக்கத்து தரையில் சிலர் பொங்குவதற்காக கற்களை எடுத்து வைச்சு ஆயத்தம் செய்வதையும் காண்கிறான்.
„ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொங்குவார்களா' என்று ஞானம் கேட்க,'பெரும்பாலும் நடக்கும் „ என்று அவள் சொல்ல' நீங்கள் இன்றைக்குக் கோவிலுக்குப் போகவில்லையா' என்று ஞானம் கேட்க' இல்லை இனிப் போய்க் குளிச்சிட்டு வரவேணும், நேரம் போயிடும், இன்னொரு நாளைக்குப் போகலாம் என்றவள்,'சைக்கிளை நான் உருட்டவா' என்று ஞானத்திடமிருந்து சைக்கிளை வாங்கி உருட்டிக் கொண்டே ஞானத்துடன் நடந்து வந்தவள் மேற்கு பக்கத்து ஒழுங்கைப் பக்கமாகத் திரும்பியவள் „இதாலும் போகலாம்' என்று சொல்ல' இதாலையும் கனதடவை நானும் போயிருக்கிறன்' என்று ஞானம் சொல்ல' இந்தாங்க என்னை ஏற்றிக் கொண்டு போய், எங்கடை வீட்டுப் படலையடியில் இறக்குங்கள்' என்று பாறு சொல்ல,மறுபேச்சின்றி அவளை பாரில் ஏறச் சொல்லி ஏற்றிக் கொண்டு போக கொஞ்ச நேரத்தில் அவளின் வீடு வர „நிற்பாட்டுங்கள் இதுதான் வீடு' என்கிறாள்.
வீட்டுப் படலையடியில் நிற்பாட்ட, சைக்கிளைவிட்டு இறங்கியவள்'உள்ள வாருங்கள்'என்று கூப்பிட, ஞானம் எவ்வித தயக்கமும் இன்றி அவளுடன் போக,அறைக்குள் இருந்து வெளியே வந்த தாய் „இவ்வளவு நேரமாய் தோட்டத்திலையா' நின்றாய் என்று கேட்டுக் கொண்டே ஞானத்தைப் பார்த்தவள் யாராக இருக்கும் என்று யோசிக்க' அம்மா இவர்தான் ஞானம், என்னை பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி எடுக்கச் சொன்னவர், படிப்பிக்கிறன் என்று சொன்னவரம்மா'என்கிறாள்.
„தோட்ட வேலை முடிய நேரம் போயிட்டதால் தனியாப் போக வேண்டாம் என்று கூட்டிக் கொண்டு வந்தவர்' என்று சொல்வதை கவனித்த ஞானம், தான் சிங்களம் படிக்கப் போகும் போது தன்னுடன் வந்ததைச் சொல்லாமல் பொய் சொல்கிறாள் எனத் திகைக்க அவள் கண்ணைக் காட்டுகிறாள்.
„வாங்க தம்பி இருங்கோ „ என்று விறாந்தையில்இருந்த கதிரையைக் காட்டுகிறாள் தாய்.விறாந்தையில் ஏறி அங்கிருந்த கதிரையில் உட்காருகிறான் ஞானம்.பாறுவின் தாய் அடுப்படிக்குள் போகிறாள்.
வீட்டு வளவுக்குள் வரும் போதே அந்த வளவையும் வீட்டையும் உற்றுக் கவனித்தவன் வளவு மிகத் துப்பரவாக இருப்பதைக் கவனித்து மகிழ்ச்சியடைகிறான்.
இரண்டு அறைகளையும் அரைச் சுவர் கொண்ட விறாந்தையுமாக அந்த வீடும் துப்பரவாக இருப்பதைக் கவனித்த ஞானம் உங்களுடைய வீட்டையும் வளவையும் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது என்று சுவரோடு சாய்ந்து நின்ற பாறுவிடம் சொல்கிறான் ஞானம்.
வீட்டோடு ஒரு பந்தி இறக்கப்பட்டிருந்தது.அங்கிருந்து புகை வந்து கொண்படிருந்ததால் „ அதுதான் அடுப்படியா' என்று கேட்க,'ம்' என்று பதிலளித்த பாறு „இந்த வீட்டை அப்பா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்டினவர்.அவர் மேசன் என்பதால் நாங்கள் எல்லாரும் அப்பாவுடன் சேர்ந்து சல்லி அரித்து, நாங்களே கல்லரிந்து கட்டியதுதான் இந்த வீடு' என்கிறாள்.
„அடுப்படி கட்ட காசு வேணும்.அதைக் கட்ட கொஞ்சநாள் செல்லும்.எங்கடை வளவுக்குள்ளை ஒரு சிறு கல்லையும் பொறுக்க முடியாது.எல்லாக் கல்லையும் சல்லிக் கல்லுக்காக பொறுக்கி எடுத்துவிட்டோம்'
„அப்பா மேசன் வேலையோடு கள்ளு இறக்கி கள்ளுக் கோப்பரேசனுக்கும் குடுக்கிறவர். இந்த சின்ன வளவுக்குள்ளை ஆறு பனைகள் இருக்கின்றன. அதிலையிருந்து கள் இறக்குகிறவர்'.
„அப்பா இரவில் மட்டும் ஒரு கிளாஸ் கள்ளுக் குடிப்பார்.அப்பா சொல்வார் கள்ளு ஒரு மூலிகையாம், அப்பாவும் அம்மாவும் புத்தகங்கள் வாசிக்கிறவைதான்,எங்களிட்டை மூலிகை முன்னூறு என்ற புத்தகம் இருக்கு, அதிலைதான் கள்ளின் பெறுமதி பற்றி' இருக்குது ...என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே'இப்ப வீட்டிலை கள் இருக்குதா' என்று ஞானம் கேட்க „பாறு இ;ஞ்சை வா „என்று தாய் அடுப்படிக்குள் இருந்து கூப்பிடுவது கேட்கவே'இருங்கோ அம்மா கூப்பிடுறா „என்று சொல்லிக் கொண்டு போனவள்' என்னம்மா ஏனம்மா கூப்பிட்டனீங்கள் „என்று பாறு கேட்க,'அந்தத் தம்பி எங்கடை வீட்டிலை; தேத்தண்ணி குடிப்பாரா' என்று தாய் மெதுவாகக் கேட்பதும்,' குடிப்பார், அம்மா அவர் ஒன்றும் பார்ப்பது இல்லை எல்லா இடமும் தேத்தண்ணி கோப்பி குடிப்பார் சாப்பிடுவாரும் கூட' என்று பாறு சொல்வதையும் கேட்ட ஞானம், „அம்மா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், தேத்தண்ணியைக் குடுத்துவிடுங்கோ „ என்று சொல்ல பாறு ஒரு வெள்ளிக் கோப்பையில் தேத்தண்ணியைக் பித்தளைத் தட்டம் ஒன்றில் வைச்சுக் கொண்டு வந்து ஞானத்திடம் குடுக்கிறாள்.
தேத்தண்ணியைக் குடிச்சுப் பார்த்த ஞானம் „அருமையாக இருக்கு இஞ்சியும் ஏலக்காயும் போட்டு ரின்பாலும் விட்டு சுவையாக போட்ட தேத்தண்ணியை இரசித்துக் குடிச்சுக் கொண்டிருந்தவன் „கள்ளுக் கேட்டனான்,குடிச்சுப் பார்க்க வேண்டும் ஆசையாகவிருக்கின்றது,கள்ளு இருந்தால் சோடாப் போத்தலிலை விட்டுத் தந்தா, போகேக்கை சோடா குடிச்ச மாதிரி குடிச்சுக் கொண்டே போகலாம்' என்று அவன் சாதரணமாக யதார்த்தமாகச் சொல்ல,' ஐயோ எனக்குப் பயமா இருக்கு நான் அம்மாட்டை கள்ளுத்தரச் சொல்லி கேட்க மாட்டன்,அம்மா என்ன நினைப்பா,நீங்கள் அந்தப் பழக்கத்தை பழக வேண்டாம்...என்ன இது புதுப் பழக்கம்' என்று சொல்ல,'அப்பா ஒவ்வொரு நாளும் இரவில ஒரு பெரிய கிளாசில கள்ளுக் குடிக்கிறவர், கனவருசமாக குடிக்கிறவர். ஆனால் ஒருநாளும் அவர் குடிச்சதற்கான வெறி அவரிடம் இருந்ததில்லை,அப்பாவும் அது மூலிகை என்றுதான் சொல்கிறவர் எனக்கும் அது தெரியும்'.
„அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது இந்தத் தேத்தண்ணியில போட்டிருக்கிற சீனி மிதமிஞ்சினால்கூட அதுவும் நஞ்சுதான்.
கள்ளை அளவாகக் குடிக்க வேணும்.அளவாக குடிச்சால் அதுவும் உடம்பைப் பாதுகாக்கும்.ஆனால் தமது சந்தோசத்திற்காகக் குடிக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்முடனேயே அந்தச் சந்தோசத்தை வைச்சிருப்பதில்லை, வெறி வந்ததும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள், அதனாலை குடிகாரன் என்று பெயரெடுக்கிறார்கள்........' என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ என்ன நீங்கள் குடிக்கப் போகிறியளா நான் அதற்குச் சம்மதிக்க மாட்டன்...' என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பாறுவின் தாய் தனது மகளுக்கும் ஞானத்திற்குமிடையில் அறிமுகத்திற்கப்பால் ஏதோ இருப்பதாக உணருகிறாள்.
ஆனால் அதனை மகளிடம் கேட்க முடியவில்லை. „பாறு இஞ்சை வா' என்று அடுப்படிக்குள் இருந்து கூப்பிட, „ஏன் அம்மா எப்பவும் அடுப்படிக்குள்ளேயே இருக்கிறா, இஞ்சை வந்து இருக்கச் சொல்லுங்கள்' என்று ஞானம் சொல்ல,' அம்மா அடுப்படியைவிட்டு வரட்டாம், வாருங்கோ „ என்று பாறு கூப்பிட பாறுவின் தாய் செல்லாச்சி அடுப்படியிலிருந்து வந்து விறாந்தையில் ஏறி மகளுக்குப் பக்கத்தில் நிற்க, „ஏன் இரண்டு பேரும் நிற்கிறியள் தயவு செய்து இருங்கோ, அம்மா' என்று சொல்ல பாறுவும் அவளின் தாயும் விறாந்தையிலிருந்த மற்றக் கதிரைகளில் உட்காருகின்றனர்.
„ நான் வரேக்கை பார்த்தன் உங்கடை ஒழுங்கை ஒரே புல்பூண்டுகளும் பேப்பர்த் துண்டுகளும் கஞ்சலுமாக இருக்குது,எல்லாரும் தங்கடை தங்கடை வீட்டையும் முற்றத்தையும், வளவுகளையும் கூட்டித் துப்பரவாக்கினம், ஆனால் நாளாந்தம் பாவிக்கும் ஓழுங்கை துப்பரவாக இருக்க வேண்டும்' என்று நினைப்பது இல்லை.
„எங்கடை ஒழுங்கையும் இப்படித்தான் இருந்தது.யாரையம் எதிர்பார்க்காமல்,யார் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் நான் விளக்குமாற்றைத் தூக்கி ஒழுங்கையைக் கூட்டத் தொடங்கினன்,போவோர் வருவோர் எல்லாம் இதென்னடா கூத்து இவனுக்கு வேற வேலையில்லை என்று கிண்டலடிச்சார்கள், ஆனால் நான் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற எதைப்பற்றியும் யோசிக்கவில்லை.'
„மாதத்தில் ஒருக்கா கூட்டத் தொடங்கினன் படிப்படியாக எல்லாரும் இணையத் தொடங்கச்சினம்;.நல்லதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்யத் தொடங்கினால் நாள் செல்லச் செல்ல எல்லேர்ரும் இணைவார்கள்'.
„வீட்டைக் கூட்டி கழுவிப் போட்டும்,முற்றத்தை வளவைக் கூட்டிப் போட்டுப் பார்த்தால் கண்ணுக்கு அழகாகவும் சுகமாகவும் இருக்கும்.அப்படித்தான் ஒழுங்கையும்,பாறு நீங்கள் விளக்கமாற்றைத் தூக்கிக் கூட்டத் தொடங்குங்கள், எல்லாரும் சேருவினம்...' என்று சொல்லி முடிச்சவன்,சரி நான் வாறன் நாளைக்கு நீங்களும் இன்னும் இரண்டு பேர் வந்தால் போதும்' என்று எழும்பிய ஞானம் முற்றத்தில் நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட பாறுவும் அவனுடன் போக எத்தனிக்கையில் „பாறு இந்தச் சோடாப் போத்தலை தம்பியிட்டைக் குடு „என்று சொல்லிக் குடுக்கிறாள் பாறுவின் தாய்.
பாறுவுக்கு அது என்னவென்று விளங்கிவிட்டது.சோடாப் போத்தலையும் ஏலக்காயையும் தாயிடம் வாங்கிக் கொண்டு படலைவரையம் போகிறாள்.
„இந்தாங்க சோடா, பாதுகாப்புக்கு ஏலக்காய்.நீங்கள் என்னைக் கேட்டது அம்மாவுக்கு கேட்டிட்டுது அதுதான்' என்று சோடாப் போத்தலைக் குடுக்கிறாள்.
படலையடியில் கும்மிருட்டில் இருவரும் கதைச்சுக் கொண்டிருந்தனர்.ஞானம் பாறுவை இறுக்கி அணைச்சுக் கொண்டு.......அதைக் கொடுக்க..„போதும் விடுங்கோ ஆரேன் பார்த்தாலும் பார்ப்பார்கள்' என்று அவள் வெட்கப்பட „சரி நாளைக்குச் சந்திப்பம் „ என்று சோடாப் போத்தலை வாங்கிக் கொண்டும் ஏலக்காயை சட்டைப் பைக்குள் போட்டபடி போகிறான்'
(தொடரும்)
நடுகைக்காரி 12
ஏலையா க.முருகதாசன்
ஞானம் நேற்றும் வந்தவன் இன்றைக்கும் ஏன் வருகிறான் என யோசித்த மார்க்கண்டு' என்ன ஞானம் அடிக்கடி இப்ப என்ரை தோட்டத்திற்கு வாறாய் நீ விசயமில்லாமல் வரமாட்டியே „ என்று மார்க்கண்டு கேட்க ,'இல்ல சும்மாதான் வந்தனான், நாளைக்கு எங்கடை வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்க வேணும் என்று சொன்னதும் „ பாறு வெட்கத்துடன் தலையைக் குனிய மற்றையவர்கள் கிலுக்கென்று சிரிச்சதை ஞானம் ஏன் இவர்கள் சிரிக்கிறார்கள் என்பது தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரி பாவனை செய்து கொண்டே அதுதான் இவையை நாளைக்கு புல்லுப்பிடுங்கப் கூப்பிடுவம் என்று வந்தனான் „ என்று அவன் ஏதோ இப்பத்தான் கேட்பதுபோல நடித்தான்.
பாறுவும் இன்னும் இரண்டு பேர் வந்தால் போதுமென்று காலையிலேயே அவன் அவர்களுக்குச் சொல்லி வைச்சுவிட்டான்.
இப்ப பாறுவும் அவனும் மற்றையவர்களும் நன்றாகவே நடிச்சார்கள். தனலக்சுமி என்ற தனம் „ தம்பி நாளைக்கோ, நாளைக்கு ஒரு இடத்திற்கு போறனெண்டு இருக்கிறன், எதுக்கும் இஞ்சை வேலை முடிஞ்சு போகேக்கிலை முடிவைச் சொல்றன் „ என்று அவள் நடிக்க பாறுவும் ஞானத்தைக் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டே „நாளைக்கு புல்லுப் பிடுங்கிறதுக்கு இண்iடைக்கு சுடுகுது மடியைப் பிடி என்பது போல வந்து சொன்னால் நாங்கள் என்ன செய்யிறது,நானும் வாறது ஐமிச்சம் என்று சொல்ல,ஏற்கனவே பாறுவைப் பற்றியும் ஞானத்தைப் பற்றியும் மார்க்கண்டு காற்றுவாக்கில „என்ன மார்க்கண்டர் சுப்பையற்றை மதவடிப் பிரபு அந்த புது நடுகைக்காரிப் பெட்டை தோட்ட வேலைக்கு வரத்தொடங்கிய பிறகு அடுக்கடி அது எங்கை வேலை செய்யுதோ அந்த தோட்டத்திற்கெல்லாம் போறாராம் அது மட்டுமே சீனியம்மான் கடையிலும் லிங்கத்தின்ரை கடையிலும் வடை வாங்கிக் கொண்டு போய்க கொடுக்கிறார்ராமே,முருக்கை இலையும் சீக்காய்ப பனங்காயும் சீவித் தீத்தின கிடாய்மாதிரி தம்பி திமிறிக் கொண்டு திரியிறார் போல சுப்பையர் தலையிலை இனித் துண்டைப் போடப் போறார் என்று சிலர் சொன்னதை மார்க்கண்டு கேட்டும் கேளாதமாதிரி அதையும் அவதானமாக புதினம் சேர்க்கும் பகுதியில் சேர்த்துத்தான் வைச்சிருந்தார்.
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானம் ஆராய்வதும் இல்லை அதற்காக மெனக்கெடுவதும் இல்லை.ஆனால் தன்னைப் பற்றியும் பாறுவைப் பற்றியும் கதை பரவத்தான் போகிறது என்பதும் அவனுக்குத் தெரியும். அதற்காக தன்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார் இவர் என்ன நினைப்பார் என்பதற்காக அவன் கவலைப்படுவதும் இல்லை.
மார்க்கண்டுவுடன் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே, புல்லுப் பிடுங்கிதலை முடிச்சுக் கொண்ட நடுகைக்காரிகளில் ஒருத்தியான தனம் „ வேலை எல்லாம் முடிஞ்சுது, நாங்கள் போகப் போறம்' என்று சொல்ல மார்க்கண்டு அவளின் கையில் சம்பளத்தைக் குடுத்து பகிர்ந்து எடுங்கள்'என்கிறார்.
ஞானமும் அந்த இடத்தைவிட்டு போகத் தொடங்குகிறான்.போகும் போது அவனின் கண்ணும் அவளின் கண்ணும் பேசிக் கொள்கின்றன.அவள் தலையாட்டுகிறாள்.அவன் கண்களால் வீதியில் காத்திருப்பதாக கண்களாலும் இமையாலும் சொன்னதை அவள் புரிஞ்சு கொள்கிறாள்.
கிணத்து ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த தனது சைக்கிளை எடுக்கப் போன சந்திரன் அங்கை ஐஞ்சு பித்தளை மூக்குப்பேணிகளை கழுவுp சாக்குக்கு மேல் கவிழ்த்து வைச்சிருப்பதைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியும் வியப்பும் கலக்க அவற்றை உற்றுப் பார்க்கிறான்.
நேற்றுப் பாறு தண்ணீர் குடிக்க சிரட்டையை எடுத்த போது அதை பறிச்சு எறிந்துவிட்டு முறிந்த மரமொக்கில் கொழுவியிருந்த பித்தளை மூக்குப் பேணியில் தண்ணீரை வார்த்துக் குடுத்ததை நினைச்சுப் பார்க்கிறான்.
மார்க்கண்டு மாமாவிடம் ஏதோ ஒரு மாற்றம் நடந்திருக்கு என்று யோசித்தவாறு பாறுவைக் கேட்டு தெரிஞ்சு கொள்ளலாம் என்று யோசித்தவன் திரும்பி பாறுவுக்கு கையைக் காட்டிவிட்டு சைக்கிளை வரம்பினில் ஓட்டிக் கொண்டு போகிறான்.
„என்னடி பாறு உன்ரை மகராசன் கையாலை சிக்னல் குடுத்திட்டுப் போறார் இண்டைக்கும் சைக்கிள் சவாரிதானோ' என்று தனம் கிண்டலடிக்கிறாள்.
ஞானம் பாறு வரும் வரைக்கும் வீதியில் சைக்கிளில் ஏறி இருந்தபடி ஒரு காலை நிலத்தில் ஊன்றி வைச்சுக் கொண்டு காத்திருக்கிறான்.வரம்பினில் நடந்து கொண்டே „அவரோடை நான் இப்ப ஆனந்தா பேக்கறிக்குப் போகிறன்' என்று பாறு சொல்ல' என்ன பாண் வாங்கவா'என்று இன்னொரு நடுகைக்காரியான லக்சுமி கேட்க „இல்லை அவர் பேக்கறி முதலாளியின்ரை மகளிட்டை சிங்களம் படிக்கப் போகிறார் அதை நோட்டம்விட நான் போகிறன்' என்று பாறு சொன்னதும்' அவரையாடி நீ சந்தேகப்படுகிறாய் „ என்று லக்சுமி கேட்க, சந்தேகப்படேலை பேக்கறி முதலாளியின்ரை மகள் எப்படியான ஆள் என்று „ பார்க்கப் போகிறன்.'நீ சந்தேகப்படுவது உன்ரை ஆளுக்குத் தெரியுமாடி' என்று தனமும் கேட்க' தெரியும்....ஆனால்' என்று பாறு இழுக்க' ஏன்ரி உனக்கு விசரே அவர் சிங்களப் படிக்கப் போறதைப் பார்க்கப் போறன் எண்டு சொன்னால் அதிலை ஒரு நியாயம் இருக்கு, ஆனால் நோட்டம்விடப் போகிறன் என்றது பிழையடி, நீ யார் என்றதும் அவர் யாரென்றதும் உனக்குத் தெரியுந்தானே அப்படியிருந்தும் ஊர் உலகத்தை அவற்றை ஆட்களைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உன்னை விரும்புறது மட்டுமல்ல, உன்னைத்தான் கல்யாணம் கட்டுவன் என்று உனக்குச் சத்தியமும் செய்து தந்திருக்கிறார்......அவரைப் போய்.... '
„ நீ இப்ப கொஞ்ச நாளாகத்தான் தோட்ட வேலைக்கு வந்தனி ஆனால் நாங்கள் நாலைஞ்சு வருசமாக தோதரை அம்மான் கோவில் எல்லையிலையிருந்து அளவெட்டி வயல்வரை தோட்ட வேலைகளை செய்து வருகிறம்.அம்பனைச் சந்திக்கு வடமேற்கு மூலையில் இருப்பவர்கள் சாதாரண ஆட்களல்ல.எல்லாம் பார்ப்பவர்கள் அங்கையிருந்து வந்தவர்தான் உன்னுடைய ஆள்.அவரைப் போய் சந்தேகிக்கிறியே பொறு அவரிட்டையே சொல்லறன் „ என்று தனம் சொன்னதும்' நல்லாய்ச் சொல்லுங்கோ அவர் என்னிடம் கோபிக்கமாட்டார்' என்று எகத்தாளமாக பாறு தனத்திற்கு பதில் சொல்கிறாள்.
வயலைவிட்டு வெள்ளவாய்க்காலுக்குள் இறங்கி நடந்து மேலே வந்து வீதியில் ஏறவும் அங்கை ஞானம் தனக்காக காத்திருப்பதைக் காண்கிறாள் பாறு.
ஞானத்தைக் கண்ட லக்சுமி' நீங்கள் ஆனந்தா பேக்கறி முதலாளியின்ரை மகளிட்டைச் சிங்களம் படிக்கப் போறதை உங்கடை பாறு நோட்டம்விட வாறாளாமே, உங்களுக்குத் தெரியுமா „என்று கேட்க எனக்குத் தெரியுமக்கா, அவ அப்படி நோட்டம் விடுவது பிழையில்லைத்தானே அது அவாவின்ரை உரிமையக்கா,தன்னுடைய ஆள் தன் பார்வையில் இருக்க வேண்டு என்று நினைப்பது சரிதானே ,என்னுடைய பாறு என்னை நோட்டம் விடுவதையோ சந்தேகப்படுவதையோ நான் விரும்புகிறன் கோபிக்க மாட்டன்' என்று ஞானம் சொன்னதும் நடுகைக்காரிகள் வியப்புடன் மகிழ்ச்சியடைந்தாலும் அதைவிட ஞானம் தங்களை அக்கா என்று வயதுக்கு மதிப்புக் குடுத்து கதைச்சது இன்னும் அதிகப்படியான சந்தோசத்தை அவர்களுக்கு குடுத்தது.
„தம்பி எங்களை எங்களிலும் பார்க்க வயசுக்கு குறைஞ்சவையே பேர் சொல்லியும் நீ வா போ என்று கூப்பிடுறவை ஆனால் நீங்கள் எங்களையும் சக ஆட்களாக மதிச்சு கதைக்கிறது உண்மையிலை சந்தோசமாயிருக்குது“ என்று தனம் சொல்கிறாள்
எல்லாரும் நினைக்கினம் நாங்கள் துப்பரவாய்ப் படிக்காதவை சுத்தமில்லாத ஆட்கள் என்று, பாறு எஸ்.எஸ்.சி வரை படிச்சு சோதனை எடுத்தவள்,மிச்ச ஆட்கள் நாங்கள் மூன்று பேரிலை நான் எஸ்.எஸ்.சி வரை படிச்சனான் ஆனால் சோதனை எடுக்காமலே பள்ளிக்கூடத்தாலை நின்றிட்டன்.நான் யூனியன் கொலிஜ்ஜிலைதான் படிச்சனான் இவையும் அங்கைதான் படிச்சவை ஆனால் எட்டாம் வகுப்புவரையும் படிச்சிட்டு விட்டிட்டினம்......'
„எல்லாரும் நினைக்கினம் எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாதென்று.எங்களுக்கு எல்லாம் தெரியும்.இங்கிலீசில கையெழுத்துப் போடவும் தெரியும்.ஏனென்றால் நாங்கள் படிச்சது யூனியன் கொலிஜ்ஜில.
„நாங்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்க வேண்டுமென்று சிலர் நினைக்கினம்.நாங்கள் நடுகைக்காரிகள் தோட்ட வேலை செய்பவர்கள் என்பதால் அப்படி நினைக்கினம்.எங்களை அமத்தி வைக்க விரும்பினம்....'
„உண்மையிலை மனம் விட்டுச் சொல்றம், நீங்கள் யார் எவர் என்று பார்க்காமல் எல்லாரையும் மதிக்கிறியள், இப்ப எங்கடை பிள்ளையான பாறுவை விரும்பிறியள்.அவள் உங்களிலை சரியான நம்பிக்கை வைச்சிருக்கிறாள்.அவளை எந்த நிலையிலும் கைவிட்டிடாதையுங்கோ....'
„எங்களுக்கு நம்பிக்கையிருக்கு நீங்கள் போரடி வெல்லுவீர்களென்று' தனம் ஞானத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே நடக்க எல்லோருடனும் சேர்ந்து சைக்கிளை உருட்டிக் கொண்டு ஞானம் பாறுவின் அருகாக நடந்து கொண்டிருந்தான்.
தனம் சொல்லி முடிஞ்சதும் தனது கண்களில் ததும்பிய கண்ணீரை சீலைத்தலைப்பால் துடைக்க தன்னுடைய காதல் வெல்ல வைக்க வேண்டுமென்ற விருப்பத்தை நெகிழ்ச்சியுடன் சொன்ன தனத்தின் வார்த்தைகளால் பாறுவும் நெகிழ்ந்து அவளின் கண்களில் கண்ணீர் முட்டி நின்றது.
ஞானம் எவரைப் பற்றியும் கவலைப்படாமல் பாறுவின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.ஞானமும் பாறுவும் தனியாக வரட்டும் என்பதற்காக „நாங்கள் போறம் பாறு, நீங்கள் ஆறதலாக வாருங்கள் நாங்கள் இளியாம்பி கடையிலை சாமான்களும் வாங்க வேணும் அங்கை சம்பளக் காசை மாத்திப் போட்டு நாளைக்குத் தரவா' என்று தனம் கேட்க,'ஓமக்கா அது பிரச்சினை இல்லை,நாளைக்குத் தாங்கோ' என்று பாறு சொல்கிறாள்.
அவர்கள் கொஞ்சத்தூரம் போனதும் பாறுவைச் சைக்கிள் காண்டிலில் ஏற்றிய ஞானம் அவர்களையும் கடந்து சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான்.
ஞானமும் பாறுவும் சைக்கிளில் வருவதைப் பார்ப்பதற்காகவே லோன்றி சின்னக்கண்டுவும் லிங்கம் கபே லிங்கமும் பாலத்திலை நிற்கிறார்கள்.
அவர்கள் நிற்பதைக் கவனித்த ஞானம் அவர்கள் பார்த்தால் என்ன என்பது போல லிங்கத்தையும் சின்னக்கண்டுவையும் நேராகப் பார்த்துவிட்டு வேகமாக பாறுவுடன் சைக்களில் போய்க் கொண்டிருந்தான்.
யூனியன் கொலிஜ் சேர்ச்சடிக்கு வந்ததும் „ இதிலை இறக்கிவிடுங்கள் நான் பேக்கறிக்க நடந்து வாறன், சில நேரம் அப்பா கடையில சாமான்கள் வாங்கவெண்டு சைக்கிளிலை வாறவர், நான் முன்னுக்குப் போறன் நீங்கள் மெதுவாக பின்னாலை வாருங்கள் „ என்று பாறு சொல்ல பாறுவை இறக்கி விட்டிட்டு கொஞ்சம் தாமதிச்சு ஞானம் சைக்கிளில் போகிறான்.
பாறு நடந்து போனதைப் பார்த்த தெல்லிப்பழைச் சந்தியடியில் வாடகைக்கு கார் விடுபவர்களில் ஒருத்தர்' உது யாரென்று தெரியுமே தவசியின்ரை மோள், நான் கேள்விப்பட்டனான் ஆரோ பொடியனோடை சைக்கிளிலை சுத்தித் திரியுதாம் என்று .....ஆ....அங்கை வாறானே அந்தப் பொடியன்தான் பசுவுக்குப் பின்னாலை நாம்பன் வருது „ என்று கிண்டலாகச் சொல்வது பாறுவின் காதில் விழ,அவள் கோபத்துடன் கடைக்கண்ணால் பார்த்து சொன்னது யார் எண்டு கண்டுவிடுகிறாள்.
ஞானமும் பாறுவும் ஆனந்த பேக்கறியடிக்குப் போய்ச் சேர்கையில் பேக்கறி முதலாளியின் மகள் காசுப் பட்டடையில் நிற்பதைக் கண்டதும் ஞானம் „குட் ஈவினிங் „என்று சொல்ல முதலாளியின் மகளும் சொல்லிவிட்டு „பிளீஸ் கம்' என்று ஞானத்தை அழைக்க, „சால் ஐ கம் வித் கிம்' என்று பாறு
ஞானத்தை காட்டிக் கேட்க,பேக்கறி முதலாளியின் மகள் முகத்தை அழகாக திருப்பி „யா, கூ இஸ் சி „ என்று கேட்க,'சி இஸ் மை லவ்வர் „ என்று ஞானம் பதில் சொல்ல வியப்புடன் பாறுவைப் பார்த்த முதலாளியின் மகள் „நோ புரபளம் „...என்றவள், யூ ஆர் வெரி பிரிட்டி கேர்ள்' என்கிறாள்.பாறு புன்முறவலுடன்,...தாங்யூ என்கிறாள். மூவரும் உள்ளே போகிறார்கள்.
(தொடரும்)
நடுகைக்காரி 9
ஏலையா க.முருகதாசன்
ஞானத்தின் பெற்றோருக்கு பிள்ளைகளின் குணாம்சங்கள் நன்றாகவே தெரியும்.அவர்களில் கடைசிப் பிள்ளையான ஞானசெல்வத்தின் குணத்தை யாராலுமே இவன் இதுதான் என்று எடை போட முடியாது.
மதகில் இருந்து அரட்டை அடிக்கும் போது வாய்விட்டுப் பலமாகச் சிரிக்கும் ஞானத்தை சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் தோசையும் சுண்டலும் நன்னாரித் தேத்தண்ணியும் குடிக்கும் போது பார்க்க முடியாது.
நூல்களையும், சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதில் அவன் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் அவனுடைய நண்பர்கள் பலரை வாசகர்களாக மாற்றியிருக்கின்றது.
ஆங்கில மொழியிலேயே முழுப் பாடங்களையும் படித்து, அவனின் தந்தை வயதிலிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கப் பணிகளில் இருப்போரால்கூட அவனைப் போல ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கவே முடியாது.
சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் வலது கையால் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் டெயிலிநியூஸ் பத்திரிகைச் செய்திகளை வாசித்துவிட்டு அதன் விளக்கத்தைச் சீனியம்மானுக்குச் சொல்லுவான்.
அவன் தான் மட்டுமல்ல தனக்கிருக்கும் மூன்று நண்பர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக கிழமைக்கு ஒருநாள் தனது வீட்டில் வைத்து ஆங்கிலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.
அவனோடு அவனுடைய நண்பர்கள் ஒன்றாக இருந்து தேத்தண்ணிக் கடைகளில் தேத்தண்ணி குடிக்கும் போது அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி காரசாரமாக விவதிப்பான்.
நீங்கள் பேசும் ஆங்கிலம் சரியா பிழையா இலக்கணச் சுத்தமாக இருக்கின்றதா இல்லையா என்பதைவிட கூச்சப்படாமலும் பயப்படாமலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமோ தாழ்வு மனப்பான்மையோ இருக்கவே கூடாதென்பான்.அவன் கொடுத்த உற்சாகமான வார்த்தைகளால் அவனுடைய நண்பர்களையும் ஆங்கிலத்தில் பேச வைத்தான்.
நாங்கள் விலாசத்திற்காக ஆங்கிலத்தில் கதைக்கவில்லை.அந்த மொழி எமக்குப் பரிச்சயமாக வேண்டும் என்பதற்காகவே கதைக்கிறோம் என்பான்.
அவனுக்குச் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட போதுதான் அம்பனைச் சந்தியடியில் உள்ள அம்பனை ரியூட்டோரியில் சிங்களம் தெரிந்த பத்மசேகரம் என்பவர் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறார் என்பது தெரிய வர அவரிடம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.
தெல்லிப்பழைக் கிராமசபையில் வேலை செய்கின்ற சிலரும் பத்மசேகரம் அவர்களிடம் சிங்களம் படித்தனர்.பத்மசேகரம் இராணுவத்தில் வேலை செய்து அதிலிருந்து ஓய்வு பெற்று பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விக் கந்தோரில் வேலை செய்து கொண்டிருந்தவர்.இப்பாழுது அம்பனை ரியூட்டோரியலில் சிங்களம் படிப்பித்துக் கொண்டிருந்தார்.
அவரிடந்தான் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.சிங்களத்தைப் பேச வேண்டுமென்ற ஆவலில் பத்மசேகரத்துடன் அவள் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கியமை அவருக்கே ஆச்சரியமாகவிருந்தது.
நாளடைவில் சிங்களத்தைச் சிங்களவர் போல சரளமாக பேசியதை அவனுடைய நண்பர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.
தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து வடக்காகப் போகும் காங்Nஎகசன்துறை வீதியில் யூனியன் கல்லூரிக்கு எதிர்ப்பக்கமான கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஆனந்தா பேக்கறி ஒரு சிங்களவரால் நடத்தப்பட்டு வந்தது.அவர் பாணந்துறையைச் சேர்ந்தவர்.
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது சுத்தமான செந்தமிழைப் பேச வேண்டுமெனில் தமிழின் வசனக் கோர்வைகளில் காணப்படும் எழுத்துக்களை அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தியும் மென்மைத்தன்மையான இடத்தில் மென்மையாகவும் குறில் நெடில் என தமிழ் மொழியைப் பேசும் போதுதான் அது செந்தமிழாக நிலைத்து நிற்கும் என்பதை பலமுறை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்.
தமிழுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் நாப்பழக்கம் மிக முக்கியம் என்பதை உணர்ந்தவன் ஞானம்.மொழிகளின் கம்பீரமே உச்சரிப்பில்தான் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.
ஆனந்தா பேக்கறியின் முதலாளி உட்பட அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்குமே தமிழ் நன்றாகக் கதைக்கத் தெரியும்.அந்த பேக்கறிக்கு கேக் பிஸ்கட் வாங்கவென்று அப்பப்ப போய்வரும் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கியதும், அந்த பேக்கறிக்கு போகும் போதெல்லாம் சிங்களத்தில் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினான்.
ஞானம் சிங்களத்தில் கதைப்பதைப் பார்த்த முதலாளியும் அங்கு வேலை செய்பவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.உச்சரிப்புகளை திருத்திக் கதைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள்.பேக்கறியில் விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களைச் சிங்களத்தில் எப்படிச் சொல்வது என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட ஞானம்,கிழமைக்கு ஒருமுறை மட்டும் சிங்களம் படித்தால் போதாது என்றுணர்ந்தவன் பேக்கறி முதலாளியிடம்' நான் சிங்களத்தைச் சரியாக உச்சரித்து கதைக்க ஆசைப்படுகிறன் கிழமையிலை இரண்டு நாளைக்குச் சொல்லித் தருவீர்களா என்று கேட்ட போது, அவர் மறு பேச்சின்றி நிச்சயமாகச் சொல்லித் தருகிறன் பின்னேரத்திலை வாருங்கள், பேக்கறியின்ரை பின்பக்கத்திலை ஒரு அறைமாதிரி இடம் இருக்கிறது அங்கையிருந்து சொல்லித் தாறன் என்று சொல்லியிருந்தார்.
அத்துடன் அவர் நில்லாது பாணந்துறையிலிருக்கும் மனைவிக்கு தெல்லிப்பழைக்கு வரும்போது சிங்களப் பாடப்புத்தகங்களையும் வாங்கிவருமாறு கடிதம் எழுதி அனுப்பினார்.
பேக்கறி முதலாளியின் மனைவி வருடத்தில் நான்கைந்து முறையாவது கணவனிடம் வந்து போகிறவர்.சிங்களம் படிக்க வேண்டுமென்ற ஆர்வப்படுகிற ஞானத்திற்கு பேக்கறி முதலாளியும்; ஆர்வமாகச் சொல்லிக் கொடுக்கிறார்.
ஞானம் ஆனந்தா பேக்கறி முதலாளியிடம் சிங்களம் படிக்கத் தொடங்கிய அடுத்த கிழமையே அவரின் மனைவி பாணந்துறையிலிருந்து வந்திருந்தார்.வரும் போது சிங்கள மொழிப் பாடப்புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவர அதை ஞானத்திடம் அவர் கொடுத்து பாடசாலையில் படிப்பது போன்று இலக்கணச் சுத்தமாக படிப்பிக்க விரும்பினார்.
ஆனந்தா பேக்கறி முதலாளிக்கு இரண்டு அழகான பொம்பிளைப் பிள்ளைகள் இருந்தார்கள்.தாயுடன் அவர்களும் வந்திருந்தார்கள்.பேக்கறி முதலாளி அவரின் மனைவி அவர்களின் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளுடன் பேக்கறியில் காசு வாங்கும் கவுண்டரின் உள் பக்கத்தில் நின்ற போது ஞானம் சிங்களம் படிக்கவென வர முதலாளி இந்தத் தம்பிதான் சிங்களம் படிக்க வருகிறவர் என்று சிங்களத்தில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்ல மனைவியும் பிள்ளைகளும் புன்னகைக்கிறார்கள்.
பேக்கறி முதலாளி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் இவருக்குச் சிங்களத்தைச் சொல்லிக் கொடுக்கங்கள் என்று சொல்ல ஞானத்தை அழைத்துக் கொண்டு பேக்கறி முதலாளியின் மனைவியும் பிள்ளைகளும் உள்ளே செல்கிறார்கள்.
பேக்கறி முதலாளிக்குத் தமிழ் தெரியும்.அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தமிழ் தெரியாது ஆனால் பேக்கறி முதலாளியின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நன்றாகவே ஆங்கிலத்தில் கதைக்கத் தெரிந்ததால் அது ஞானத்திற்கு சுலபமாகப் போய்விட்டது.
தாயாரும் இரண்டாவது மகளும் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து ஏதோ கதை;துக் கொண்டிருக்க மூத்த மகள் ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அவள் ஞானத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தாள்.
ஞானத்தின் ஆங்கில உச்சரிப்பு அவளை ஆச்சரிப்படுத்தியது.எப்படி உங்களாலை இப்படிக் கதைக்க முடிகிறது என்று அவள் கேட்க, உங்களுக்குச் சிங்கள மொழியின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய நாக்குப் பழகிவிட்டது.அது போலத்தான் எனது நாக்கும் தமிழ்மொழி உச்சரிப்புக்குத் தக்கதாக பழகிவிட்டது.
அதனால் ஆங்கிலம் பேசும் போது உங்களுக்கு உங்கள் மொழி தொனியும் எனக்கு எங்களுடைய மொழி தொனியும் வரப் பார்க்கின்றது.நாங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலேயரிடம் எப்படி உச்சரிப்புத் தொனி வருகின்றதோ அப்படி உச்சரிக்க வேண்டுமென்கிறான்.
பேக்கறி முதலாளியின் மகள் அவன் சொன்ன விளக்கத்தை இரசித்துக் கேட்டவள்,நாங்கள் ஒரு மாதம் வரையும் இங்கைதான் நிற்பம் நீங்கள் பின்னேரத்திலை ஒவ்வொரு நாளும் வரலாம், நான் சொல்லித்தாறன் என்கிறாள்.மொழிகளைப் படிக்க வேண்டுமென்ற அவனிடம் காணப்பட்ட தீராத ஆர்வம், நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகளை வாசித்தல் ஆகியவை அவனை ஒரு தர்க்கவாதியாதகவும் சிந்தனைவாதியாகவும் வளர்த்துவிட்டது.
ஞானத்திடம் காணப்பட்ட புத்திசாலித்தனத்தை அறிந்த அவனின் தாயாரின் மனதின் ஓர் மூலையில் இவன் பார்வதியில் விருப்பப்படுகிறானோ என ஊகிப்பதும், அப்படி இருக்காது அவன் அப்படிச் செய்ய மாட்டான் என்று இரண்டு மனநிலைகளுக்கிடையில் தடுமாறி, அது எப்படிச் சரிவரும் அவனுக்கும் அது தெரியுந்தானே என தன்னைத் தானே திருப்திப் படுத்திக் கொண்டாள் தாய்.
பிரைவேட்டாக எஸ்.எஸ்.சிப் பரீட்சை எடுக்கச் சொல்லி பார்வதிக்குச் சொன்னதும் அவன், படிப்பிக்கிறன் என்று அவளுக்குச் சொன்னதும் அவன்,ஆனால் தகப்பனிடம் பார்வதி பரீட்சை எடுப்பதற்கு தன்னை உதவி கேட்டது போலத்தான் அவன் தகப்பனாருக்கு வியூகம் அமைத்து விளங்கப்படுத்தினான்.
காரைநகர் கல்யாண வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து பார்வதியுடன் முழுநாளையும் கழிக்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய தோட்டத்து வெங்காயப் பயிருக்குள் மீண்டும் புற்கள் முளைத்துவிட்டன, அறுகம்புல்லு படரத் தொடங்கினால் வெங்காயத்தை சுற்றி மூடி படரத் தொடங்கிவிடும் என்று தகப்பனுக்குச் சொல்லி நடுகைக்காரிகளைக் கூட்டிக் கொண்டு வந்து பிடுங்கிக்கிறன் என்று சொன்னான்.அதற்குத் தகப்பனும் ஒப்புக் கொண்டுவிட்டார்.
தான் சிங்களம் படிப்பதையோ தெல்லிப்பழை ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகள் தனக்குச் சிங்களம் சொல்லித் தருவதையோ இதுவரை அவன் பார்வதிக்குச் சொல்லவில்லை.நாளைக்கு சிங்களம் படிக்கும் நாள்.பார்வதி அவனுடன் போவாளா?
ஏன் அவனுடன் பார்வதி போக விரும்பினாள்?
(தொடரும்)
தொடர்கதை.
நடுகைக்காரி 8
ஏலையா க.முருகதாசன்
„தங்களைப் பெரிய சாதிமான்கள் என்று சொல்லிக் கொள்ளும் எங்கடை ஆட்கள் மகாஜனாவில் அனைவரும் படிக்கத் தடையாக இருக்கிறார்கள்,உண்மையில் இது பெரிய கல்வித் துரோகம்'என்று தகப்பன் சொன்னதம் அமைதியாகிறான் ஞானசெல்வம்.
தான் பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை அவன் தாயாரிடம் சொல்லியிருந்தான்.அப்பாவிடம் கதைக்கும்படியம் தாயாரிடம் சொல்லியிருந்தான்.
தாயாரும் தகப்பனிடம் கேட்பார்தான்.ஆனால் தானும் கேட்டால் நல்லதுதான் என்று யோசித்த ஞானசெல்வம் தாயாரிடம் கண்ஜாடையால் கேளம்மா என்பது போல காட்ட தாயாரும் நீ கேள் என கண்ஜாடை காட்ட தான் கதைக்கத் தொடங்க அம்மா எப்படியும் சப்போர்ட் பண்ணுவா என்று எண்ணியவன் „ அப்பா உங்களோடை ஒரு விசயம் கதைக்க வேணும் ,இன்றைக்கு மார்க்கண்டு மாமாவின்ரை தோட்டத்துக்குப் போனனான' என்று அவன் கதையைத் தொடங்க,'நீ ஏன் அங்கை போனனி „ என்று தகப்பன் கேட்க,'சும்மாதான் போனனான்' என்றவன் தகப்பன் எதுவும் கேள்வி கேட்காமலிருப்பதற்காக' அங்கையப்பா நாலு நடுகைக்காரிகள் வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்கிக் கொண்டு நின்றினம்'.
அதிலை ஒரு பிள்ளை பதுசாயிருந்தா, நான் மார்க்கண்டு மாமாவோடை கதைச்சுப் போட்டு ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த சைக்கிளை எடுக்கப் போகேக்கிலை தண்ணி குடிக்க கிணத்தடிக்குப் போன அந்தப் பிள்ளை என்ரை சைக்கிள் காண்டிலை செருகியிருந்த டெயிலி நியூஸ் பேப்பரை எடுத்து வாசித்துக் கொண்டிருந்தா, அவ என்ன வாசிக்கிறா என்று அறிய நான் கிட்டப் போய் கேட்டன் „இங்கிலீஸ் பேப்பர் படிப்பியளா என்றவுடன்,பேப்பரின் முன்பக்கத்தில் இருந்த செய்திகளின் தலையங்கத்தை வாசித்தது மட்டுமல்ல செய்தியை வாசித்துவிட்டு அதை எனக்கு தமிழில் மொழி பெயர்த்தும் சொன்னா'.
„உச்சரிப்பும் தங்குதடையின்றி வாசித்த விதமும் எனக்குச் சொக்டாயிருந்துது.அப்ப நான் கேட்டன் எங்கை படிச்சனீங்கள் என்று, தான் யூனியன் கொலிஜ்ஜிலை படிச்சது என்றும், இங்கிலீசும் இன்னும் இரண்டு பாடங்களும் சேர்த்து மூன்று பாடங்களிலை மட்டுந்தான் எஸ்.எஸ்சிச் சோதனையில் பாஸ் பண்ணினனான் என்று சொன்ன அந்தப் பிள்ளையைக் கேட்டனப்பா, நீங்கள் இங்கிலீசை தமிழ்ப் பேச்சுத் தொனியில்லாமல் இங்கிலீஸ்காரர் மாதிரி அழகாக உச்சரிக்கிறீர்கள் யாரிட்டை இங்கிலீஸ் படிச்சனீங்கள் என்று கேட்க யூனியன் கொலிஜ் பிரின்சிப்பல் ஐ.பி.துரைரத்தினத்திடந்தான் படிச்சனாம் என்று சொன்ன அந்தப் பிள்ளையிட்டை சொன்னன் பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி சோதனையை எடுக்கலாந்தானே என்று கேட்க அந்தப் பிள்ளை சொல்லிச்சுது தனக்கும் விருப்பந்தான்.
ஆனால் கணக்குப் பாடந்தான் தனக்குக் கஸ்டமாம் யாராவது ரியூசன் சொல்லித் தந்தால் நல்லது என்று சொன்ன அந்தப் பிள்ளை என்னிடம் கேட்டுது ரியூசன் சொல்லிக் கொடுக்கிறவை யாரையாவது உங்களுக்கு தெரியுமா என்று ,நானே சொல்லித் தாறன் என்று சொல்லிட்டன்.
அவை முன்னேற வேண்டுமப்பா நான் அந்தப் பிள்ளைக்கு ரியூசன் சொல்லிக் குடுக்கப் போறனப்பா, நீங்கள் ஒண்டும் சொல்ல மாட்டியள் என்று தெரியுமப்பா என்றவன் நிறுத்த, மகனைக் கடைக்கண்ணால் பார்த்த தகப்பன் மனைவியைப் பார்த்து மெலிதாகச் சிரிக்கிறார்.
ஞானசெல்வம் தனக்கும் பார்வதிக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது போலவும் ரியூசன் தரச் சொல்லிக் கேட்கிறாள் அவ்வளவுதான் தான் யாரோ அவள் யாரோ என்பதைப் போல மகன் தகப்பனுக்கு விபரித்த அப்பாவித்தனம் கலந்த குரலை தாய் இரசித்து என்ன நடிப்பு நடிக்கிறான் என்று மெதுவாக சிரிக்கிறாள்.
„நீ அங்கை போய் படிப்பிக்கப் போறியோ இல்லாட்டி அந்தப் பிள்ளை இஞ்சை வருமோ' என்று தகப்பன் கேட்க, „எங்கையெண்டாலும் எனக்குப் பிரச்சினையில்லை, அங்கையெண்டால் நல்லது.ஏனென்டால் இஞ்சை நான் அந்தப் பிள்ளைக்குப் படிப்பிச்சுக் கொண்டிருக்க அயலட்டைச் சனம் அதைப் பார்த்திட்டு, அந்தப் பிள்ளை யாரெண்டு தூண்டில் போட்டு மீன் பிடிக்கிற மாதிரி „நீ எங்கை பிள்ளை இருக்கிறனி என்று கேட்க, அந்தப் பிள்ளையும் வஞ்சகமில்லாமல் யூனியன் கொலிஜ்ஜிற்குக் கிட்டவுள்ள சந்தையடி ஒழுங்கையிலை இருக்கிறனான் என்று சொல்ல, அந்த ஒழுங்கையிலை யாற்றை பிள்ளை என்று கேட்க அந்தப் பிள்ளையும் தயங்கித் தயங்கி அப்பா மேசன் வேலைக்குப் போறவர் அதோடை ....என்று அந்தப் பிள்ளை .......'என்று அவன் இழுக்க „ சரி சரி எனக்கு விளங்குது, நீ அங்கை போயே படிப்பி எதற்கும் நீ கவனமாக இரு....என்று தகப்பன் சொல்ல,' அப்பா இஞ்சை அந்தப் பிள்ளைக்கு நான் பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கேக்கை சில நேரம் மார்க்கண்டு மாமா இஞ்சை வந்து அந்தப் பிள்ளையைக் கண்டிட்டால் இவனென்ன நடுகைக்காரிக்கு பாடம் சொல்லிக் குடுத்துக் கொண்டிருக்கிறான் சுப்பையா வீட்டிலை எல்லாரையும் ஒழுங்குமுறையின்றி கதிரையிலை உட்கார வைச்சிருக்கினம் என்று அவர் கதை பரப்பி விடுவர்'.
„அதுமட்டுமில்லையப்பா அம்பனை வயலிலை தோட்டம் செய்யிறவை அந்தப் பிள்ளை புல்லுப் புடுங்கே;கிலையோ வெங்காயம் நடேக்கிலையோ கண்டிருப்பினம்,அந்தப் பிள்ளை இஞ்சை படிக்கிறதுக்கு வந்து போகேக்கிலை நடுகைக்காரி எங்கடை வீட்டுக்கு ஏன் வந்து போறாவெண்டு அதைப் பார்ப்பதற்கென்றே சும்மா வந்தனான் என்று சொல்லிக் கொண்டு சிலர் வருவினம்'.
„இதைவிட இன்னொரு பெரிய பிரச்சினை இருக்கு.அக்காக்களுக்கும் அண்ணைமாருக்கும் நடுகைக்காரி யார் எவர் என்று தெரிஞ்சால் போதும் நிலத்துக்கும் வானத்துக்கும் குதிப்பினம்.அதாலை அம்மாவுக்கும் உங்களுக்குந்தான் பிரச்சினை.அதாலை அங்கை போய் படிப்பிக்கிறதுதான் எல்லாத்துக்கும் நல்லது „என்று சொல்லி முடிக்கிறான் ஞானசெல்வம்.
ஏற்கனவே பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதற்குச் சரி என்று சொன்ன தகப்பன், அந்தப் பிள்ளைக்கு என்ன பெயர் என்று கேட்க திகைத்தவன், தாயைப் பார்க்கிறான், தாய் நான் சொல்ல மாட்டன் என்பது போல தலையையாட்ட' நான் அதைக் கேட்கேலையப்பா' என்கிறான்.
சாப்பிட்டு முடிஞ்சதும் மூவரும்; விறாந்தைக்குப் போய் தகப்பன் சாக்குத்துணி சாய்மனைக் கதிரையில் உட்கார்ந்திருக்க தாயும் ஞானசெல்வமும் சாய்வான பிரம்புக் கதிரையில் உட்காருகிறார்கள்.
மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகும் இரவுச் சாப்பாட்டுக்குப் பிறகும் தாய்க்கும் தகப்பனுக்கும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உண்டு.
ஞானசெல்வம் பாக்கை எடுத்து பாக்குவெட்டியால் சீவி தட்டத்தில் வைக்கிறான்.தகப்பன் தாயைவிட செல்வம் அழகாக ஒழுங்காக பாக்குச் சீவுவான்.
பாக்கைப் பார்த்தவுடனேயே கயர்ப் பாக்கு எது வெள்ளைப் பாக்கு எதுவென்று தெரிவது மட்டுமல்ல இரவுpல் கயர்ப்பாக்கு சாப்பிடக்கூடாது என்றும் செல்வத்துக்குத் தெரியும்.
வளவுக்குள்ளேயே கமுக மரங்கள் சில இருக்கின்றன.வீட்டு வளவுக்குப் பக்கத்துக் காணியில் ஆயிரம் வெற்றிலைக் கொடிகளும் இருக்கின்றன. பாக்கு வெற்றிலைக்கு அவர்களுக்கு குறைவில்லை.
பாக்கைச் சீவி வெற்றிலைக்கு மேல் வைத்த செல்வம் தகப்பனுக்கும் தாயாருக்கும் கொடுக்கிறான்.
மிக அரிதாக வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் செல்வத்திற்கு இருந்தாலும் தாய் தகப்பனுக்கு முன்னால் போட மாட்டான்.சில வேளைகள் தாய் அதைக் கண்டால் அதை ஒரு பிரச்சினையாக எடுக்கமாட்டாள்.தகப்பனும் கண்டும் காணாமல் இருந்துவிடுவார்.
தாய் தகப்பனுக்க வெற்றிலை பாக்கைச் சீவிக் கொடுத்தவனின் மனம் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
அதைக் காட்டிக் கொள்ளாமல் வெறும் பாக்குச் சீவலை வாயிலை எடுத்துப் போட்டவன்,'அப்பா இன்னொரு விசயம் வாற சனிக்கிழமை நீங்களும் அம்மாவும் காரைநகரிலை நடக்கிற கல்யாண வீட்டுக் போறதாகச் சொன்னனீங்கள் என்னையும் வரச் சொன்னனீங்கள், நான் வரேலை நீங்கள் இரண்டு பேரும் போயிட்டு வாங்கோ என்று செல்வம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ ஏன் நீ வரேலை „ என்று தாய் இடைமறித்துக் கேட்க,' அம்மா நான் அங்கை வந்து என்ன செய்யப் போறன், முழு நாளும் சும்மா ஒரு இடத்திலை உட்கார்ந்திருக்க என்னாலை முடியாது, அந்த நேரத்திலை ஏதாவது புத்தகத்தையாவது வாசிக்கலாம், காலமை வெளிக்கிட்டுப் போனமென்றால் திரும்பி வீட்டுக்கு வந்து சேர இரவாகிவிடும்.எனக்கு விசர் பிடிச்சிடும் நான் வரேலை அப்பா....'
„எங்கடை வெங்காயத் தோட்டத்துக்குள்ளை ஒரு மாதத்துக்கு முந்தி புல்லுப் பிடிங்கிவிச்சனாங்கள், ஆனால் இப்ப திரும்பவும் புல்லு நிறைஞ்சு கிடக்குது அதை அப்படியே விட்டமென்றால் வெங்காயம் சரியாய்ப பெருக்காது, வெங்காயத்துக்குள்ளை கோரையும் பசும்புல்லும் இப்ப அறுகம்புல்லும் படரத் தொடங்கிவிட்டுது'.
„அவற்றை உடனடியாகப் பிடுங்காவிட்டால் வெங்காயப் பயிர் வீணாய்ப போயிடம் நான் நடுகைக்காரிகளைக் கொண்டு சனிக்கிழமை அவற்றைப் பிடுங்கிவிக்கிறன்.நீங்கள் போயிட்டு வாங்கோ' என்றவன் தகப்பனின் முகத்தையும் தாயின் முகத்தையும் கூர்ந்து பார்க்கிறான்.
„ செல்வம் சொல்றதும் சரிதான் அவன் வந்து அங்கை என்ன செய்யப் போறான் நடுகைக்காரிகளைக் கூப்பிட்டு அவன் வெங்காயத்துக்குள்ளை கிடக்கிற புல்லைப் பிடுங்கிவிக்கட்டும், அதோடை கொழுந்துத் தோட்டப் புல்லையும் பிடுங்குவிக்க வேணும் அதற்கும் ஒருக்கா நடுகைக்காரிகளுக்கு சொல்லி வை' என்ற தகப்பன் உன்னிடம் ஒன்றை கனநாளாய் கேட்க வேண்டும் என்று நினைச்சனான், நீ எச்.எஸ்.சி படிக்க மாட்டன் என்று அடம்பிடிக்கிறாய், அதிலை படிச்சுப் பாஸ் பண்ணினால் யூனிவேர்சிற்றிக்குப் போகலாம், ஆனால் நீ அதையும் செய்யிறாய் இல்லை.
„ஏதாவது வேலைக்கு போற யோசனையும் உனக்கு இல்லை.நீ என்ன யோசனையிலை இருக்கிறாய்.வயசு போகப் போக எல்லாமே கஸ்டமாயிடம், கையைவிட்டுப் போயிடும் , ஏதாவது திட்டமிருக்குதா „ என்று தகப்பன் கேட்டதை அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாதலால் என்ன பதிலைச் சொல்லலாம் என அவன் மௌனமாக பதிலைத் தேடிக் கொண்டிருக்கையில் தாயார்' கொண்ணைமாரும் அவையின்ரை பெண்சாதிமாரும் அக்காமாரும் அவையின்ரை மனுசன்மாரும் நல்ல நல்ல உத்தியோகத்திலை இருக்கினம்'.
அவை இஞ்சை வருகிற போதெல்லாம் ஞானத்தை செல்லம் குடுத்துக் கெடுத்து வைச்சிருக்கிறன் என்று என்னைக் கரிச்சுக் கொட்டிப் போட்டுப் போயினம்.
புடிப்பிலை கெட்டிக்காரனை ஊர் அளக்க வைச்சிட்டு இருக்கிறம் என்று குறை சொல்லுகினம், உன்ரை அறிவை வீணாக்காதை, அந்த நடுகைக்காரிக்கு படிப்பிக்கப் போறன் என்று கேட்டாய் அது நல்ல தொண்டு என்பதற்காக யார் எவர் என்று யோசிக்காமல் ஓமெண்டு சொன்னம்.
படிச்ச படிப்பு பிரயோசனப்பட வேண்டும்.நீ சின்னப் பிள்ளை இல்லை யோசிச்சு முடிவெடு என்று தாய் சொன்னதும்' „தெல்லிப்பழை பலநோக்கக் கூட்டுறவுச் சங்கக் கடையளுக்கு மனேஜர் தேவையாம் அதற்கு அப்பிளிகேசன் போடப் போறன், அதிலை எடுபட்டால் அதிலையிருந்து கொண்டு எச்.எஸ்.சி சோதனையை பிரைவேட்டாக எடுக்கலாம் இல்லாட்டி ஏதாவது வேலைக்கு முயற்சி செய்யலாம்' என பதில் சொல்கிறான்.
„ம்' எண்ணென்டாலும் யோசிச்சு செய்ய என்று சொன்ன தகப்பன், செம்பிலையிருந்த தண்ணீரிலை வாயைக் கொப்பிளிச்சுவிட்டு படுக்கப் போய்விடுகிறார். தாயாரும் எழுந்து போய்விடுகிறார்.
மகன் காரைநகருக்கு வ7ராமலிருப்பதற்கு அவனிடம் ஏதோ திட்டம் இருக்குது என்பதை தாய் உணர்ந்தாலும் அதை அவளால் கேட்க முடியவில்லை.பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோர் உணர்ந்தாலும் அவர்களால் கேட்க முடிவதில்லை.
பார்வதிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப் போவதை தகப்பனிடம் அவன் தாமiரை இலைத் தண்ணீர் போல விபரித்த விதம் சில வேளை இரண்டு பேருக்குமிடையில் ஏதாவது .....ச்சே அப்படி ஒன்றுமிருக்காது என்று தன்னைத் திருப்திப் படுத்தினாள்.
காதலில் ஈடுபடுபவர்கள் உண்மையையும் பொய்யையும் கலந்துதான் அதை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்துவார்கள்.
இரண்டு நாள் பழக்கத்திலேயே செல்வமும் பார்வதியும் காதலுக்கும் அப்பால் சென்று கணவன் மனைவியாவது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.சிலருக்கு காதலன் காதலியாவதற்கு வருடக்கணக்காகும்.
சிலருக்கு மணித்தியாலக் கணக்காகும். பார்வதிக்கும் செல்வத்துக்குமிடையில் இரு நாட்களுக்குள் காதல் விஸ்வரூபமாக வளர்ந்து நின்றது.
இனி...?
(தொடரும்)
ஐயோ! ஐயோ!! என்ற அவலக் குரல் இரவு நேரத்தின் அமைதியைக் குலைத்துக் கொண்டதோடு எனது தூக்கததிலும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. மார்கழி மாதப் பனிக்குளிரில் விறைத்துப் போன உடல் போர்வைக்குள் முடங்கிக் கொள் என்று சிணுங்கியது. யாராவது கத்தட்டும் என மறுபக்கம் திரும்பிப் படுக்கிறேன். அடிதடியோடு கலந்த அழுகைக் குரல்கள் காதில் ஒலித்து பயத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்த, என்ன நடந்திருக்கும் என்ற மனதின் விசாரணையோடு படுக்கையை விட்டு எழுந்தேன். வீட்டில் யாருமே இல்லை என்பதைக் குடிகொண்டிருந்த நிசப்தம் கட்டியம் கூறியது. சத்தம் கேட்டு எல்லோரும் படை திரண்டு பாய்ந்திருப்பார்கள். நான் நித்திரை என்பதால் எனது தூக்கத்தைக் கெடுக்கக்கூடாது என நல்லெண்ணத்தோடு என்னை விட்டுவிட்டுப் போயிருக்கிறார்கள் என்ற நேர் சிந்தனையோடு மனதைச்; சமாதானப்படுத்தினேன். மீண்டும் மனக்குரங்கு சத்தம் வந்த திசை நோக்கித் தாவுகிறது.
அந்தச் சிறிய ஊரின் ஐந்தாவது ஒழுங்கையில் இருக்கும் நாற்சந்திப் பக்கமாகத் தான் சத்தம் வருகிறது. நாற்சந்தியில் நாலு நாளைக்கு முதல் செத்த வீடு நடந்தது. ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் மரணத்திற்காக நாலு கண்டங்களில் இருந்து பிள்ளைகள் வந்து இருக்கிறார்கள். செத்த வீட்டில் ஊராக்கள் ஒருமாதம் வரும் வரையும் கூடியிருப்பார்கள். வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறார்கள் என்றால் தூரத்து உறவையும் கிட்டவாக்கிக் கொண்டு விசாரிப்பு, விடுப்பு, எதிர்பார்ப்பு இவற்றுக்குள் அடங்கிய அடங்காத வகைகளுக்குள் பலர் பிரசன்னமாயிருப்பார்கள். அவர்களுக்குள் ஏதாவது பிரச்சினை வந்திருக்குமோ? இல்லாவிட்டால் ஊர்ப்பொடியளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டிருக்குமோ? அல்லது கள்ளர் யாரும் மாட்டுப் பட்டிருப்பினமோ? இவற்றில் எது காரணமாக இருக்கும்; என்று தீர்மானிக்க முடியாத தடுமாற்றத்தோடு பனிக்குளிருக்குப் போர்வையாக இரண்டு கைகளையும் குறுக்காகப் போட்டுத் தோளைப் பிடித்தபடி நடக்கிறேன்,
ஊருக்குப் பெருமை தருபவற்றில் மெய்கண்டான் பாடசாலையும் உள்ளடங்கும். ஒரு காலத்தில் ஊரில் உள்ளவர்கள் தான்; அங்கே செங்கோலோச்சினார்கள். அதிபரான பெரியவாத்தியார் தொடக்கம் பாட ஆசிரியர்கள் அனைவரும் ஊரைச் சேர்ந்தவர்கள். தையல், நெசவு, பன்னவேலை, சங்கீதம் போன்ற பாடங்களைப் பெண் ஆசிரியர்கள் படிப்பித்தார்கள். தையலம்மா, தையலக்கா என்று அவர்களை அழைப்பது வழக்கம்; காலப்போக்கில் தையலக்கா, அக்காவாக மாறியது. தையல் படிப்பித்த பாக்கியம் அக்கா நெசவு படிப்பித்த பொன்னம்மாக்கா, சுகாதாரம் படிப்பித்தவர்கள் கனகம்மாக்கா, நேசம்மாக்கா, சமயம் படிப்பித்த ஆச்சிப்பிள்ளையக்கா இவர்கள் தான் ஊரின் கல்வியையும் ஒழுக்கத்தையும் கட்டிக் காத்த பெண் பிரமாக்கள். சிலவேளைகளில் ரீச்சர்மார் வீட்டிலே மறந்து போய் விட்டுவி;ட்டு வந்த பொருள்களை எடுத்து வருவதற்கோ, அடுப்பில் இருக்கும் கறியை இறக்கி வைப்பதற்கோ என்னைப்போன்ற பலர் ஆபத்பாந்தவர்களாக ஆவலோடு காத்திருந்த காலங்கள் மறக்கமுடியாதவை.
ஆச்சிப்பிள்ளை ரீச்சர் நல்ல மாநிறம், சிரித்த முகம், சமயமும் பண்பாடும் கலந்த கலவையாகக் காட்சி தருவார். எடுத்ததெற்கெல்லாம்,
“அப்பா முருகா விசவத்தனையானே ; வேலவா” என்ற மந்திரத்தை உச்சரிப்பார். அன்பு, அறம், கலை, பண்பாடு அனைத்தும் அவருக்கு அத்துபடி மாணவர்களுக்கு அருகில் வரும்போது இவற்றை அள்ளித் தெளிப்பார். தனது வாழ்க்கைத் துணைவராக நடராசா வாத்தியாரைத் திருமணம் செய்ததன் பயனாக ஆசைக்கு மூன்றும் ஆஸ்திக்கு மூன்றுமாக ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்தவர். குடும்பத்தையும் தொழிலையும் இரு கண்களாக மதித்த பொறுப்புள்ள பெண் என்று அவரைச் சொல்வதும் பொருந்தும். இளம் வயதிலேயே விதவைக் கோலம் அவரை விரும்பிவந்து ஒட்டிக் கொண்டாலும், அந்த வெறுமையை விரட்டுவதற்குப் புன்னகையைத் தனவசமாக்கிக் கொண்டு பாரதியின் புதுமைப் பெண்ணாக வாழ்ந்து காட்டியவர்.
ரீச்சரைப் பற்றிய எண்ண அலைகள் எனக்குள்ளே திரைப்படமாக ஓடியது. கட்டுப்பாடு நிறைந்த சமூகத்திலே கணவனை இழந்த பெண், குழந்தைகளை வளர்த்துத் தொழிலையும் பார்ப்பது சிரமமான காரியம் என்பது எனக்குத் தெரியும். படிப்பிக்கும் வேலை தான் பெண்களுக்கு நல்லதென்று ஆசைப்பட்டு நானும் ஒரு ரீச்சரைக் கல்யாணம் செய்து படும்பாடு போதும். எங்களிடம் இருக்கும் குருபக்தி இப்போது பிள்ளைகளிடம் இல்லை. தொழில் விசுவாசம் ஆசிரியர்களிடமும் இல்லை. நாளுக்கொரு முறைப்பாட்டுடன்தான் அவள் வீட்டுக்கு வருவாள். “பேசாமல் வேலையை விட்டுவிட்டு இரு” என்று கோபத்தில் நான் சொல்ல அவளும் இதே சாட்டாக வேலையை விட்டு நிற்க ஆயத்தமானாள். உண்மையாகவே அவள் வேலையை விட்டு விட்டால் நான் மட்டும் உழைத்துக் குடும்பச் செலவைச் சமாளிக்க முடியாது. ‘மனைவி வேலைக்குப் போகாவிட்டால் நீ என்ன செய்வாய்;?’ இனந்தெரியாத குரல்; எனக்குள் இன்னமும் ஒலித்துப் பயம்காட்டு;கிறது.
ஆச்சிப்பிள்ளை ரீச்சரின் கெட்டித்தனத்தை வியக்காமல் இருக்க முடியாது. சத்தியவான் சாவித்திரி நாடகம் பழக்கிய போது,
“தீபன் ! நீதான் சத்தியவானுக்குப் பொருத்தம்.”
ரீச்சர் என்னைத் தெரிவு செய்தது சந்தோசமாகத் தான் இருந்தது. ஆனால் மாணவர் மன்றத்தில் நாடகம் நடிக்க மேடையில் ஏறிய போது குலப்பன் காய்ச்சல் வந்தவன் போல உதறல் எடுத்து நடுங்கியதை சத்தியமாய் மறககமுடியாது. ரீச்சர் நடிப்பு நுட்பங்களைச் சொல்லித் தந்து நாடகம் பழக்கியபோது. மேடைக்கூச்சம் போவதற்குப் பைத்தியம் மாதிரிக் கதைக்கச் சொன்னார். நானும்; கண்ணாடி முன்னாலும், தனிமையிலும், மரந்தடிகளோடும் பேசிப் பேசி நடிப்புக்காகச் செய்த பிரயத்தனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ரீச்சர் தனது பிள்ளைகளை, வளர்த்து நல்ல நிலைக்கு வரவைத்து அவர்கள் வெளிநாடுகளுக்கு வாழ்க்கையைத் தேடிச் செல்வதற்குப் பக்கத்துணையாக இருந்தவர். பிள்ளைப் பாசத்தையும் பிறந்த மண்ணையும் இருகண்ணாகப் போற்றியதால்; தனது இறுதிக்காலத்தை ஊரோடு இணைத்துக் கொள்ள எண்ணியிருக்க வேண்டும்.
“ஆச்சிப்பிள்ளை ரீச்சர் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கிறா” என்ற செய்தி அறிந்து ரீச்சரைப் பார்க்கப் போனேன்.
சாய்வு நாற்காலியில் படுத்தப்படி உறக்கத்திலிருந்தார். நெஞ்சிலே புத்தகமும் மூக்குக்கண்ணாடியும் கிடந்தது. கட்டிலிலே தலையணைக்குப் பக்கத்தில் அவரோடு கூடப் பயணிக்கும் சோனாப்பையுடன் சில சமயப் புத்தகங்களும் தினசரிப் பத்திரிகைளும் இருந்தன. கட்டிலுக்குக் கீழே தண்ணீர் போத்தல் கிடந்தது. தேவையான பொருட்களைத் தனக்கு வசதியாக வைத்துக் கொண்டு தனிமையை விரட்டுவதற்கு முற்படுகிறார் என்பது தெரிந்தது. ரீச்சரின் தூக்கம் கெட்டுவிடக்கூடாது என்பதால் சற்றுநேரம் மௌனம் காத்தேன். பூச்செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வளவைச் சுத்தப்படுத்தும் பெண் வந்து,
“அம்மாவைக் கூப்பிடுங்கோ எழும்புவா.” என்றாள்.
“ரீச்சர்.”
மெதுவாகக் குரல் கொடுத்தேன். எழும்புவதாகத் தெரியவில்லை. மீண்டும்,
“ரீச்சர் நான் தீபன் வந்திருக்கிறன்.”
“ஓம், ஆரது ?”
கண்களைத் திறக்காமலே கேள்வி மட்டும் வந்தது. “நான் தீபன்.” கண்களைத் திறந்து, நித்திரைத் திகைப்பு நீங்காமல் பார்த்தார்.
“உந்தக் கதிரையில் இரன். ஏன் நிக்கிறாய்?”
“ஓம் நான் இருக்கிறன் ரீச்சர்.”
கதிரை ஒன்றை இழுத்து அவருக்கு முன்னால் போட்டுக் கொண்டு இருந்தேன். தொழில், குடும்பம், பிள்ளைகள் பற்றி ஆரோக்கியமான உரையாடல் இடம்பெற்றது. ரீச்சருடன் கதைக்கும் போது பள்ளிக்காலத்தின் பசுமையான நினைவுகள் மனதில் படர்ந்தன.
“வாறகிழமை முருகனுக்குக் கொடியேற்றம்.”
ரீச்சர் சொல்லவும் கோயில் மணி அடித்தது. முருகன் தன்னுடன்தான் இருக்கிறார் என்பது போன்ற மகிழ்ச்சி பொங்க,
“அப்பா முருகா நீ தான் துணை.” கோயில் இருக்கும் திசையை நோக்கிக் கும்பிட்டார்.
“சரி ரீச்சர் எல்லாம் நல்லாய் நடக்கும், நான் வரப்போறன்.”
நான் விடைபெறப் போவதை விளங்கிக் கொண்ட ரீச்சர்,
“இஞ்ச வா………. கொஞ்சிவிடு.” இரண்டு கைகளையும் என்னை நோக்கி நீட்டியதும் நான் குனிந்து அவவின் முத்த மழையில் நனைந்தேன்.
ஒரு மனிதன் வாழ்ந்த வாழ்க்கையை நிர்ணயிப்பதில் மரணமும் முக்கியமானது என்பார்கள். ரீச்சர் குறையொன்றும் இல்லாமல் எல்லாவற்றையும் அனுபவித்துச், சொந்த மண்ணில் வந்து மரணித்தது அவவின் நிறைவான வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது.
நினைவுகளோடு சம்பவ இடத்தை நெருங்கினேன். கோபம் தீருமட்டும் யாரையோ அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு முன்னால் வந்த சைக்கிளை மறித்து,
“தம்பியவை என்ன நடந்தது ?”
“இடம் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டு வாங்கிக் கட்டுகினம் போய்ப்பாருங்கோ.” பதில் சொல்லியவாறு போனவர்களை எனக்;கு யாரென்று விளங்கவில்லை.
அந்த இடத்தை நான்; நெருங்கிய போது ஒரு பெரும் யுத்தம் நடப்பது போல அமர்க்களமாயிருந்தது. வாகனம் ஒன்று எறிகணையில் சிக்கிச் சிதறி உருக்குலைந்த உடலைப் போல பரிதாபமாகக் கிடந்தது. அதில் வந்த இருவர் தப்பியோடி விட மற்றைய இருவர் அபிஷேகம் ஆராதனையோடு நல்ல சாத்துப்படியில் பொலிவுற்று இருந்ததைப் பார்க்கச் சகிக்கவில்லை. ‘பொலிஸ்’ வாகனம் வந்து அடித்தவர்களையும், அடிபட்டவர்களையும் ஏற்றிக் கொண்டு சென்றது.
“இனி உயிருள்ள வரையும் ஏமாத்துப்பண்ணிக் கொண்டு இந்த ஊர்ப்பக்கம் ஒருவரும் தலை வைத்துப் படுக்கமாட்டினம்.” அங்கு நின்ற பெரியவர் ஊர் ஒற்றுமையைப் பற்றி மார்தட்டிக் கொண்டார்.
“வெளிநாட்டுக்காரர் வந்தால் ஏமாற்றிப் பறிக்கலாம் என்ற நினைப்பு இனி யாருக்கும் வராது” என்றவரை இடைமறித்து,
“வெளிநாட்டுக்காரரும் அறிவு கெட்டதனமாய், மரணஅறிவித்தலுக்குச் சுயவிபரக்கோவை நிரப்பினது மாதிரி எல்லாத் தகவல்களையும் கொடுத்தால் அவங்களுக்கும் வாசிதானே. பிள்ளையளின் பெயர்கள், வாழும் நாடு, தொலைபேசி இலக்கம் எல்லாம் பாத்து விட்டு வருவங்கள் தானே…? இனிமேல் வெளிநாட்டுக்காரரும் இப்படியெல்லாம் போடப் பயப்பிடுவினம் நல்ல பாடம்.” என்றார் இன்னொருவர்.
வாகனத்தில் வந்த நால்வர் தாங்கள் நடத்தும் ஊடகத்தில் ரீச்சரின் மரண அறிவித்தல் போட்டதாகவும் அதற்கான பணம் பதினையாயிரம் ரூபாவைத் தரும்படியும் கேட்டு வந்திருக்கிறார்கள்.
“உங்கள் ஊடகத்திற்கு நாங்கள் அறிவித்தல் தரவில்லை தகவல் தந்தவர் யார் ? குமார் தான் தகவல் கொடுத்தவர். இதோ நிற்கிறார் நீங்கள் இவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா?”
என்ற கேட்டபோது, குமார் இவர்களோடு நான் தொடர்பு கொள்ளவில்லையென ஒரேயடியாக மறுத்துவிட்டான். வந்தவர்கள் மரண அறிவித்தலை ‘மெபை’லில் பதிவுசெய்த ஒலிப்பதிவினை ஒலிக்கவைத்து,
“இதைக் கேளுங்கள். இது யாருடையது? எப்படி எங்களிடம் வந்தது?” என்று கேள்விகளை அடுக்கினார்கள்.
“மரியாதையாகப் போய்விடுங்கள். எப்படி வந்தது என்பதைக் காட்டுவம். தாங்கமாட்டியள் …”
வாக்குவாதம் நீடித்தது. வந்தவர்கள் மதுபோதையில் வந்திருந்ததினால் சொல்லிலும், செயலிலும் நிதானமற்றிருந்தார்கள். கெட்ட வார்த்தைப் பிரயோகங்களுடன். அங்கிருந்த பெண்களுக்குத் தமது கெட்டித்தனத்தைக் காட்டப் போயிருக்கிறார்கள். இதனால், ஊரார் கூடித் தங்களின் கைவரிசையை இவர்களுக்குக் காட்டியிருக்கிறார்கள்.
“வழக்குப்போட்டால் நட்டஈடு இலட்சக் கணக்கில் வரும். இதைவிட அவர்கள் கேட்ட பதினையாயிரம் காசைக் கொடுத்திருக்கலாம்.” கருத்துப்பரிமாறல்;கள் பலவாறாக எழுந்தன.
“எங்கட காலத்திலை இழவு சொல்லித் தானே செத்த வீடு செய்தனாங்கள். இப்பதான் கண்டறியாத அறிவித்தல்கள் வந்து மனுச வாழ்க்கையைத்; தலைகீழாக்கிப் போட்டுது. கையொழுங்கைகள் ஒண்டும் தவறவிடாமல் விடியப்புறத்தில இளவட்டங்கள் ‘காலஞ்சென்றுவிட்டார்’ என்ற இழவு சொல்லும் சத்தங்கேட்டு செத்தது யாரென்று அறிவதற்குத் தூக்கக் கலக்கத்திலும் காதுகொடுத்துக் கேட்டு விட்டுத் துடிச்சுப் பதைச்சுச் செத்தவீட்டுக்குப் போன காலங்கள் பழங்கதையாய்ப் போச்சுது.” கந்தசாமியிடமிருந்து பெருமூச்சு வெளிப்பட்டது.
“மாமா இப்பவும் ஊர்ப் பொடியள் இழவு சொல்லுறவங்கள் தானே. உங்கட காலத்தில கலியாணம் கச்சேரி எல்லாம் ஊரோட மட்டும் இருந்தது. இப்ப ஊர்விட்டு ஊர் போய் கலியாணம செய்யினம். நேற்றுப் பிறந்ததுகளும் வெளிநாட்டு மோகத்தில விழுந்தடிச்சு ஓடுதுகள். அறிவித்தல் இல்லாமல் சாத்தியப்படுமே?”
“கண்டறியாத வெளிநாட்டுப் பயணத்தாலை எல்லாம் பாழாய்ப் போச்சுது அதை விடு.” கந்தசாமி மாமா அடிமடியைத் தடவி புகையிலைச் சுருட்டை எடுத்துக்கொண்டு,
“பிள்ளை நெருப்பெட்டியைத் தா. சுருட்டுப் பத்தப் போறன்.”முன்னால் நின்ற ரீச்சரின் கடைசி மகளிடம் கேட்டார். “இந்தாங்கோ மாமா.” தீப்பெட்டியைக் கொடுத்த தங்கம் குட்டிப் பிரசங்கம் செய்யத்; தொடங்கினாள்,
“பதினையாயிரம் ரூபா கொடுத்திருக்கலாம் தான். அது பெரிய காசில்லை. நாடு நல்லாய்க் கெட்டுப்போச்சு. களவு, பொய், அநியாயம் எல்லாம்; தலைவிரிச்சாடுது. நாமும் பயந்து பயந்து கள்ளனையும் ஏமாத்துக்காரனையும் உருவாக்கத் துணை போகக்கூடாது. ஏமாத்திறவனுக்கு பதினையாயிரம் கொடுத்து ஏமாறுவதை விட ஏமாற்றினால் கிடைக்கும் தண்டனை இது என ஒரு பாடம் படிப்பித்திருக்கிறம். அதற்காக நட்டஈடு கொடுப்பது தப்பில்லை.”
“பிள்ளை ! வாகனத்தை நொருக்கியாச்சு. அடிதடிகாயங்கள் வேறு, வந்தவர்கள் செல்வாக்கானவங்கள போலத் தெரியுது. வழக்கு விசாரணையெனத் தொடங்கினால் எப்படியும் மூன்று இலட்சத்தைத் தாண்டும்.”
“அதுக்கென்ன செய்யிறது மாமா ? இழந்துதான் சிலதைச் சாதிக்க முடியும். தங்கத்தின் குரலில் இழப்பை ஏற்பதற்கான அழுத்தம் தொனித்தது. அதனை உணர்ந்துகொண்டதற்கு அடையாளமாக அவளைப் பார்த்துத்; தலையசைத்துவிட்டு வீடு நோக்கி நடக்கிறேன்.
ராணி சீதரன்-இலங்கை